Calendar
November 2008
S M T W T F S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Categories

வாழ்வின் ம‌டிப்புக்க‌ளும் க‌த‌க‌த‌ப்பாய்த் துயில‌ முய‌லும் ம‌ன‌ங்க‌ளும்

-ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earthஐ முன்வைத்து-

புல‌ம்பெய‌ர்வு என்ப‌து ஆதிகால‌த்திலிருந்தே நிக‌ழ்ந்து வ‌ருகின்ற‌ன‌. ப‌ல‌வேறு காரண‌ங்க‌ளால் புல‌ம்பெய‌ர்வு நிக‌ழ்ந்தாலும், போரும் பொருளாதார‌ நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளும் முக்கிய‌ கார‌ண‌ங்க‌ளாக‌ப் புல‌ம்பெய‌ர்வில் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. மேற்குல‌கில் அந்நிய‌ர்க‌ளாக‌ (outsiders) வாழும் அவ‌ல‌ங்க‌ளை எட்வேர்ட் சைய‌து (Out of Place: A Memoir) போன்ற‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, வி.எஸ். நைபால், ச‌ல்மான் ருஷ்டி, எம்.ஜி.வ‌ஸாஞ்ஜி போன்ற‌வ‌ர்க‌ளின் புதின‌ங்க‌ளும் பேசியிருக்கின்ற‌ன‌. அநேக‌ பொருளாதார‌ அக‌திக‌ளுக்கு, எப்போது திரும்பிப் போனாலும் ஒரு நாடும் ஒரு ஊரும் ஒரு வீடும் இருப்ப‌துபோல‌, போரின் ச‌ம்ப‌ந்த‌மான‌/உயிர் அச்சுறுத்த‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு -அவ்வாறான‌ க‌டைசி ந‌ம்பிக்கை- வாய்ப்ப‌தில்லை. ச‌ல்மான் ருஷ்டி, த‌ஸ்லிமா ந‌ஸ்ரின் போன்ற‌வ‌ர்க‌ள் இர‌ண்டாம் வ‌கையின‌ர். ஜும்பா ல‌கிரி முத‌லாம் வ‌கையைச் சேர்ந்த‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாது, புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ரும் கூட‌. என‌வே ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் புல‌ம்பெய‌ர்ந்த‌ இரண்டாம் த‌லைமுறையின‌ரின் பார்வை அதீத‌மாய் இருப்ப‌தும் இய‌ல்பான‌தே.

அண்மையில் வெளியான‌ ஜும்பா ல‌கிரியின் Unaccustomed Earth சிறு/குறுங்க‌தைக‌ளின் ஒரு தொகுப்பாகும். புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌லாம்/இர‌ண்டாந் த‌லைமுறையின‌ரே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். ஜும்பா ல‌கிரியின் க‌தைக‌ளில் இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு ம‌ட்டுமில்லை முத‌லாந்த‌லைமுறைக்குக் கூட‌, புல‌ம்பெய‌ரும் புதிய‌ சூழ‌ல் -போரால‌ அடித்துத் துர‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைப் போல‌- பெரும் த‌த்த‌ளிப்புக்க‌ளையோ, அல்ல‌ல்க‌ளையோ த‌ருவ‌தில்லை. மிக‌ எளிதாக‌வே புல‌ம்பெய‌ர் அமெரிக்க‌/அய்ரோப்பிய வாழ்வுக்கு, ஜும்பா ல‌கிரியின் க‌தாபாத்திர‌ங்க‌ள‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக் கொண்டுவிடுகின்ற‌ன‌ர். பொருளாதார‌ஞ் சார்ந்த‌ இட‌ம்பெய‌ர்வு என்ப‌தால் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ச‌மூக‌த்தில் ‘ம‌திக்க‌ப்ப‌டும்’ தொழில்க‌ளையே (வைத்திய‌ர்க‌ளாக‌/பொறியிய‌லாள‌ர்க‌ளாக‌/ பேராசிரிய‌ர்க‌ளாக) செய்கின்ற‌ன‌ர். மேலும் இத்தொகுப்பில் இந்தியாவின் உய‌ர்த‌ர‌ அல்ல‌து ம‌த்திய‌ உய‌ர்த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் ம‌ட்டுமே தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதொரு பிர‌ச்சினையில்லை, ஆனால் ஒரே மாதிரியான‌ ம‌னித‌ர்க‌ளும் ஒரே வ‌கையான‌ சூழ‌ல்க‌ளும் தொட‌ர்ச்சியாக‌ ப்ல‌வேறு க‌தைக‌ளில் வ‌ரும்போது வாசிக்கும்போது அலுப்பு வ‌ருவ‌தைத் த‌விர்க்க‌வும் முடிவ‌தில்லை. எல்லாக் க‌தைக‌ளும் ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌, இனி மொழியின் விளையாட்டு இல்லாது புதுவ‌கைப் ப‌டைப்புக்க‌ள் சாத்திய‌மில்லை என்ப‌து உண்மைதானோ என்று எண்ணும்ப‌டி ஜும்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ லினிய‌ர் வ‌கை எழுத்துக்க‌ளை வாசிக்கும்போது அடிக்க‌டி தோன்ற‌த்தான் செய்கின்ற‌து.

தொகுப்பிலிருக்கும் முத‌லாவ‌து க‌தையான‌ Unaccustomed Earth, அப்பா-ம‌க‌ள் உற‌வு ப‌ற்றி உரையாட‌ முய‌ல்கின்ற‌து. இர‌ண்டாவ‌து பிள்ளை க‌ருவிலிருக்கும் ரூபாவும், ம‌னைவியை இழ‌ந்த‌ த‌ந்தையுமே முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளாகின்ற‌ன‌ர். பென்சில்வேனியாவில் த‌னியே இருக்கும்/அய்ரோப்பா ந‌க‌ரங்க‌ளுக்கும் அடிக்க‌டி சுற்றுலா செல்லும் ரூபாவின் த‌ந்தையார், ரூபாவும் அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் சிய‌ட்டிலில் வாங்கியிருக்கும் புது வீட்டுக்கு வ‌ருகின்றார். தாயாரைப் போல‌ த‌ன் த‌ந்தை பெரிதாக‌ த‌ன‌க்கு உத‌வ‌ப்போவ‌தில்லையென்று தெரிந்திருந்தாலும் த‌ன‌து வ‌சதிக்கும் த‌ந்தையின் ச‌வுக‌ரிய‌த்திற்குமாய் த‌ந்தையைத் த‌ன‌து வீட்டிலேயே ரூபா த‌ங்க‌ வைக்க‌ முய‌ற்சி செய்கின்றார். சிறுவ‌ய‌தில் தானும் த‌ம்பியும் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ உட‌னிருந்து எல்லாவ‌ற்றையும் தாயார் செய்துகொண்டிருக்க‌, த‌ந்தையார் தானும் த‌ன‌து வேலையுமாக‌ த‌ங்க‌ளைவிட்டு வில‌கிப்போன‌து ரூபாவிற்கு இத்த‌ருண‌த்தில் ப‌ய‌முறுத்துகின்ற‌து. முத‌லில் உட‌ன்ப‌டாவிட்டாலும் வ‌ங்காளியான‌ ரூபா, அமெரிக்க‌ வெள்ளையின‌த்த‌வ‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்ய‌ விரும்பும்போது பெற்றோர் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். த‌ன‌து ம‌க‌ள் -குழ‌ந்தைக‌ளின் நிமித்த‌ம்- வேலைக்குப் போகாது வீட்டிலிருப்ப‌தைப் பார்க்கும் ரூபாவின் த‌ந்தை ‘இப்ப‌டியே இருப்ப‌து உன‌து எதிர்கால‌ வாழ்வுக்கு ந‌ல்ல‌த‌ல்ல‌’ என்று எச்ச‌ரிக்கை செய்கின்றார். இப்ப‌டித்தான் த‌‌ன‌து ம‌க‌ள் இருக்க‌ப்போகின்றார் என்றால் அவ‌ர் க‌ல்க‌த்தாவிலேயே யாராவ‌து வ‌ங்காளியைத் திரும‌ண‌ஞ்செய்துவிட்டு இருந்திருக்கலாம் என்று த‌ந்தை நினைக்கின்றார். அப்பாவிற்கும் ம‌க‌ளுக்குமான‌ இடைவெளியை ரூபாவின் முத‌ல் ம‌க‌ன் குறைக்கின்றான். பேர‌ன்மீது ப‌ற்று வைக்கும் த‌ன‌து த‌ந்தையார் இனித் த‌ன்னோடு நிர‌ந்த‌ர‌மாக‌த் த‌ங்கிவிடுவார் என்று நினைக்கும்போது த‌ந்தையார் அப்ப‌டியிருக்க‌ த‌ன‌க்கு விருப்ப‌மில்லையென‌ ரூபாவின் வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுகின்றார். அவ‌ர் அவ்வாறு ம‌க‌ளோடு இருக்க‌ விரும்பாத‌த‌ற்கு த‌ந்தை - ம‌க‌ள் இடைவெளி ம‌ட்டுமில்லை,த‌ன‌து தாய் இற‌ந்த‌பின் த‌ந்தையின் வெளிநாட்டு சுற்றுலாக்க‌ளில் அவ‌ருக்கு முகிழ்ந்த‌ இன்னொரு பெண்ணின் உற‌வும் ஒருகார‌ண‌ம் என்ப‌தை ‍ -ஒரு உரிய‌முறையில் சேர்க்க‌ப்ப‌டாத‌ த்பால‌ட்டையில்- மூல‌ம் ரூபா இறுதியில் க‌ண்டுகொள்கின்றார்.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ Hell - Heaven, அமெரிக்காவில் குடிபெய‌ர்ந்திருக்கும் ஒரு குடும்ப‌த்திற்குள் ந‌ட்பாக‌ நுழையும் ஒரு இளைஞ‌னைப் பின் தொட‌ர்ந்து செல்கின்ற‌து. க‌தை முழுவ‌தும் அக்குடும்ப‌ததில் அவ்விளைஞ‌ன் நுழையும்போது சிறுமியாக‌ இருக்கும் ஒருவ‌ரால் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ஹார்வாட்டுக்குப் ப‌டிக்க‌ வ‌ரும் பிர‌ணாப் -ஓரே ஊர் என்ற‌ப‌டியால்- இக்குடும்ப‌த்தோடு இன்னும் நெருக்க‌மாகின்றான். அப‌ர்ணாவின் குடும்ப‌மும் வேறு எந்த‌ வ‌ங்காளிக்குடும்ப‌மும் அருகில்லாத‌தால் அவ‌னை அர‌வ‌ண‌த்துக் கொள்கின்ற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ அவ‌ன‌து வ‌ய‌திலிருக்கும் திரும‌ண‌மான‌ அப‌ர்ணாவிற்கு ம‌ணமாகி குடும்ப‌ அமைப்பு த‌ருகின்ற‌ அச‌தியில் பிர‌ணாப் மீது ஒரு ஈர்ப்பு உருவாகின்ற‌து; இவ்வாறு ப‌ர‌வ‌ச‌ததை த‌ந்துகொண்டிருக்கும் அவ்விளைஞ‌ன் ஒரு வெள்ளைக்கார‌ப் பெண்ம‌ணியைத்(டெபுரா) திரும‌ண‌ம் செய்ய‌ப்போகின்றான் என்கின்ற‌போது அப‌ர்ணா மிகுந்த‌ அவ‌திக்குள்ளாகின்றார்.. அத்திரும‌ண‌த்தை ம‌ன‌த்த‌ளவில் ஏற்றுக்கொள்ள‌ ம‌றுத்து ஒருமுறை எண்ணெய்யை ஊற்றி த‌ற்கொலை செய்யும் எண்ணத்திற்கு அருகில் சென்று அப‌ர்ணா த‌ப்பியுமிருக்கின்றார் என்ப‌து பின்ன‌ர் தெரிகின்ற‌து. மிகுந்த‌ பொருளாதார‌ வ‌ச‌தியிருக்கும் பிர‌ணாப் த‌ன‌து திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌ சில‌வ‌ருட‌ங்க‌ளில் டெபுராவை விட்டுவிட்டு வேறு ஒரு வ‌ங்காளிப் பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்றார். பிர‌ணாப் டெபுராவை கைவிட்டு இன்னொரு திருமணம் செய்யும்போது, டெபுரா அப‌ர்ணாவோடு நெருக்க‌மாகின்றார். இப்பிரிவின் நிமித்த‌ம் க‌வ‌லைப்ப‌டும் டெபுராவை அப‌ர்ணா ஆறுத‌ற்ப‌டுத்தும்போது, டெபுரா தான் பிர‌ணாப்பை திரும‌ண‌ஞ்செய்த‌போது, த‌ன‌க்கு பிர‌ணாப் அப‌ர்ணாவுட‌ன் நெருக்க‌மாக‌ப் ப‌ழ‌குவ‌து குறித்து பொறாமை இருந்த‌து என்று தெரிவிக்கின்றார். எனினும் அப‌ர்ணா த‌ன‌க்கு பிர‌ணாப்வோடு இருந்த‌ அதீத‌ ஈர்ப்பு ப‌ற்றி டெபுராவிட‌ம் வெளிப்ப‌டையாக‌ ஒப்புக்கொள்ள‌வில்லை. பிர‌ணாப் டெபுராவைத் திரும‌ண‌ஞ்செய்த‌போது த‌ற்கொலை செய்ய‌ முய‌ற்சித்த‌துப‌ற்றிக்கூட‌ எவ‌ருக்குமே சொல்ல‌வில்லையென்கின்றார். இவ்வ‌ள‌வு க‌தையையும், அப‌ர்ணாவின் ம‌க‌ள் த‌ன‌து காத‌ல் வாழ்வு க‌ருகிவிட்ட‌தே என்று ம‌ன‌மொடிந்து வ‌ருத்த‌ப்ப‌டும்போதே அப‌ர்ணா இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றி ம‌க‌ளிட‌ம் ம‌ன‌ந்திற‌ந்து பேச‌த்தொட‌ங்குகின்றார்

மூன்றாவ‌து க‌தையான‌ A choice of Accommodation மிக‌ச்சாதார‌ண‌ ஒரு க‌தை. த‌ம‌து இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை பெற்றோரின் ப‌ராம‌ரிப்பில் விட்டுவிட்டு த‌ம‌க்கான‌ த‌னித்த‌ நேர‌த்தைக் க‌ழிக்க‌வென‌ -ஒரு ப்ழைய‌ க‌ல்லூரித்தோழியின் திரும‌ண‌த்துக்கு- இன்னொரு ந‌க‌ருக்கு ஒரு த‌ம்ப‌தியின‌ர் புற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். திரும‌ண‌த்தின்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து… அவ‌ர்க‌ள் தாம் திட்ட‌மிட்ட‌ த‌னித்த‌ நேர‌த்தைத் த‌ங்க‌ளுக்காய் ‍குற்ற‌வுண‌ர்வில்லாது‍ செல‌விட்டார்க‌ளா என்ப‌து ப‌ற்றி அக்கதை நீளும்.

நான்காவ‌து க‌தையான‌ Only Goodness, அக்கா ‍ த‌ம்பிக்கு இடையிலான‌ உற‌வு ப‌ற்றிப் பேசுகிற‌து. ப‌டிப்பில் மிக‌த்திற‌மையான‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் இருவ‌ரும் பல‌க‌லைக் க‌ழ‌க‌த்திற்குச் செல்லும்போது இர‌ண்டு வித்தியாச‌மான‌ வாழ்வைத் தெரிவு செய்கின்றார்க‌ள். அக்கா ப‌டித்துப்ப‌ட்ட‌ம்பெற‌ த‌ம்பி மிதமிஞ்சிய‌ குடிப்ப‌ழ‌க‌த்தால் வ‌ளாக‌ப் ப‌டிப்பை இடைநிறுத்துகின்றார். .த‌ம்பியின் குடிப்ப‌ழ‌க்க‌ம் த‌ன்னால் ஏற்ப‌ட்ட‌து என்ற் குற்ற‌வுண‌ர்வு த‌ம‌க்கைக்கு ஏற்ப‌டுகின்ற‌து. எனெனில் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது த‌ம்பி ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போதே அக்கா தான் குடிக்கும்போது ஒரு துணையாய்த் த‌ம்பிக்கும் குடிக்க‌ப் ப‌ழ‌க்கியிருந்தார். ஒழுங்கான‌ வேலையில்லாது பெற்றோருட‌ன் த‌ங்கியிருந்த‌ த‌ம்பி, ஒரு கிறிஸ்ம‌ஸ் விடுமுறையின்போது, த‌ன்னைவிட‌ மூத்த‌ -ஒரு குழ‌ந்தையுள்ள‌ விவாக‌ரத்தான‌- அமெரிக்க‌ப்பெண்ணைத் திரும‌ண‌ஞ்செய்ய‌போகின்றேன் என்கின்றார். குடும்ப‌ம் ம‌றுக்கின்ற‌து. இத‌ற்கிடை யில் அக்கா இர‌ண்டாவ‌து ப‌ட்ட‌த்திற்காய் இங்கிலாந்து சென்று ப‌டிக்க‌ப்போகும்போது அங்கே ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தான் -15 வ‌ய‌து வித்தியாச‌முள்ள‌‍- க‌லையில் நாட்ட‌முள்ள‌ ஒருவ‌ரோடு உற‌வு முகிழ்ந்து அவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்ய‌விரும்பும்போது பெற்றோர் அக்க‌லைஞ‌னின் அந்த‌ஸ்துக‌ண்டு திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். திரும‌ண‌ம் அமெரிக்காவில் ந‌டைபெறும்போது த‌ம்பிக்கும்-தக‌ப்ப‌னுக்கும் இடையில் ஏற்ப‌ட்டிருக்கும் விரிச‌ல், த‌ம்பி கூட‌க்குடித்துவிட்டு க‌தைக்கும்போது விருந்துக்கு வ‌ந்திருக்கும் அனைவ‌ருக்குந் தெரிகின்ற‌து. அக்கா த‌ன‌து திரும‌ண‌த்தை வேறு திசைக்கு அழைத்துவிட்டுச் சென்றுவிட்டான் என்று த‌ம்பியோடு கோபிக்கின்றார். த‌ப்பி அத்தோடு வீட்டை விட்டு ஓடிப்போய், எங்கே த‌ங்கியிருக்கின்றார் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றார் என்ற‌ எந்த‌ செய்தியுமில்லாது த‌லைம‌றைவாகிவிடுகின்றார். பெற்றோரும் த‌ம‌க்கையும் நாள‌டைவில் த‌ம்பியை ம‌ற‌க்க‌த் தொட‌ங்கிவிடுகின்ற‌ன‌ர். த‌ம‌க்கை இல‌ண்ட‌னில் நிர‌ந்த‌ர‌மாக‌ த‌ங்கிவிட‌, பெற்றோரும் த‌ம‌து முதிய‌ ப‌ருவ‌த்தின் நிமித்த‌ம் இந்தியாவுக்கு மீள‌வும் செல்கின்ற‌ன‌ர். நீண்ட‌ நெடும் வ‌ருட‌ங்க‌ளுக்கு பின், அக்காவிற்கு ஒரு குழ‌ந்தை பிற‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில், தொலைந்துபோயிருந்த‌ த‌ம்பியிட‌மிருந்து ஒரு க‌டித‌ம் வ‌ருகின்ற‌து. மீண்டும் அக்கா‍ த‌ம்பி உற‌வு புதிப்பிக்க‌ப்ப‌ட்டு, அக்கா த‌ன‌து குழ‌ந்தையைப் பார்க்க‌ இல‌ண்ட‌னுக்கு வ‌ர‌ச்சொல்கின்றார். இங்கிலாந்து வ‌ரும் த‌ம்பி, தான் த‌ற்போது ஏற்க‌ன‌வே ச‌ம்ம‌த‌ம் கேட்ட‌ பெண்ணோடும் அவ‌ர‌து குழ‌ந்தையோடும் சேர்ந்து வாழ்வ‌தாக‌வும், அப்பெண்ணின் உத‌வியால் தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து வெளியே வ‌ந்துவிட்டேன் எனவும் சொல்கின்றார். அக்காவின் குழ‌ந்தை மீது மிகுந்த‌ பிரிய‌த்துட‌ன் த‌ம்பியிருக்கின்றார். இர‌வுண‌வின்போது அக்காவும் க‌ண‌வ‌ரும் வைன் அருந்தும்போது கூட‌ தான் குடிப்ப‌ழ‌க்க‌த்திலிருந்து விடுப‌ட்ட‌தால் எதையும் குடிப்ப‌தில்லையென‌ வைன் குடிப்ப‌தைக்கூட‌ ம‌றுக்கின்றார். த‌ங்கி நிற்கும் இர‌ண்டு வார‌ங்க‌ள் கிட்ட‌த்த‌ட்ட‌ முடிகின்ற‌போது, தான் குழ‌ந்தையை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கின்றேனெனக் கூறி, த‌ம‌க்கையையும், க‌ண‌வ‌ரையும் வெளியே போய் த‌னியே நேர‌ததைச் செல‌விட‌ச் சொல்கின்றார் த‌ம்பி. த‌ம‌க்கையும், அவ‌ர‌து க‌ண‌வ‌ரும் வெளியே போய் தியேட்ட‌ரில் ப‌ட‌மும் பார்த்துவிட்டு உண‌வும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது த‌ங்க‌ள‌து குழ‌ந்தை குளிக்கும் tubல் த‌னித்து விளையாடிக்கொண்டிருப்ப‌தைப் பார்த்துத் திகைக்கின்ற‌ன‌ர் . த‌ம்பி எங்கேயென‌த் தேடும்போது வீட்டிலிருந்த‌ ம‌து முழுவ‌தையும் குடித்துவிட்டு சுய‌நினைவு இல்லாது த‌ம்பி தூங்கிப் போயிருப்ப‌தைக் காண்கின்ற‌ன‌ர். மிக‌வும் கோப‌ங்கொள்ளும் த‌ம‌க்கையும் க‌ண‌வ‌ரும் த‌ம்பியை அடுத்த‌நாளே வீட்டைவிட்டுப் போகச் சொல்கின்ற‌ன‌ர். இறுதியில் இதுவ‌ரைகால‌மும் எவ‌ருக்குஞ் சொல்லாது ம‌றைத்து வைத்திருந்த‌ ‍-த‌ன்னாலேயே மிக‌ இள‌வ‌ய‌திலிருந்து த‌ம்பி குடிக்க‌ப்ப‌ழ‌கினார்- என்ற‌ உண்மையைக் குற்ற‌வுண‌ர்வோடு த‌ம‌க்கை த‌ன‌து க‌ண‌வ‌ருக்குச் சொல்ல‌த் தொட‌ங்குகின்றார்.

‘ஹேமாவும் கெள‌சிக்கும்’ என்ற‌ நெடுங்க‌தை மூன்று ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. முதலாம் ப‌குதி ஹேமாவால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், இர‌ண்டாம் ப‌குதி கெள்சிக்கால் சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌வும், மூன்றாம் ப‌குதி மூன்றாம் ம‌னித‌ரான‌ க‌தை சொல்லியால் கூற‌ப்ப‌டுவ‌தாக‌வும் எழுத‌ப்ப‌ட்டுள்ளது. ஹேமாவின‌தும், கெள்சிக்கின‌தும் குடும்ப‌ங்க‌ள் கேம்பிரிஜிட்டில் அருக‌ருகில் வ‌சிக்கின்ற‌ன‌ர். ஹேமா பிற‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளில் கெள‌சிக்கின‌து குடும்ப‌ம் ப‌ம்பாயிற்கு திரும்பிச் செல்கின்ற‌து. ஹேமா ப‌தின்ம‌வ‌ய‌திலிருக்கும்போது மீண்டும் கெள‌சிக்கின் குடும்ப‌ம் மாஸ‌சூட்டிற்குப் பம்பாயிலிருந்து புல‌ம்பெய‌ர்கின்றன‌ர். ஒழுங்கான‌ ஒரு வீடு வாங்கும்வ‌ரை ஹேமாவின் வீட்டிலேயே கெள‌சிக்கின் குடும்ப‌ம் த‌ங்குகின்ற‌து. ஹேமா இப்போது ப‌தின்ம‌ங்க‌ளில் இருக்கின்றார். கெள‌சிக்கின் மீது ஈர்ப்பிருந்தாலும், கெள‌சிக் ஒதுங்கிப் போகும் மிகுந்த‌ அமைதியான‌ சுபாவ‌மான‌வ‌ராய் இருக்கிறார். கெள‌சிக்கின் பெற்றோரால் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு உண்மை கெள‌சிக்கால் ஹேமாவிற்குச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. கெள‌சிக்கின் தாயார் புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்டு வாழ்வின் க‌டைசிக்க‌ட்ட‌த்தில் இருக்கிறார். வாழ்நாட்க‌ளைத் த‌ள்ளிப்போடும் மேல‌திக‌ சிகிச்சைக்காக‌வே கெள‌சிக்கின் குடும்ப‌ம் அமெரிக்காவிற்கு இட‌ம்பெய‌ர்ந்திருக்கின்ற‌து. கெள‌சிக்கின் குடும்ப‌ம் வேறு இட‌ம் எடுத்துப்போய், அங்கே அவ‌ரின் தாயாரும் இற‌ந்துபோக‌, கெள்சிக் ‍ஹேமாவிற்கு இடையிலான‌ தொட‌ர்புக‌ள் அறுப‌டுகின்ற‌ன‌.

இர‌ண்டாம் ப‌குதியில் கெள‌சிக் க‌தை சொல்கின்றார். கெள்சிக் வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருக்கும்போது க‌ல்க‌த்தா சென்ற‌ த‌க‌ப்ப‌ன், தான் ம‌றும‌ண‌ம் செய்ய‌விருப்ப‌தைத் தெரிவிக்கின்றார். பிற‌கான‌ சில‌ மாத‌ங்க‌ளில், கெள்சிக்கின் த‌ந்தை த‌ன‌து புது ம‌னைவியையும் ‍‍அப்பெண்ணிற்கு முத‌ற் திரும‌ண‌த்தில் பிற‌ந்த‌ இர‌ண்டு ம‌க‌ள்க‌ளையும் அமெரிக்காவிற்குக் கூட்டிவ‌ருகின்றார்.. அச்சிறுமிக‌ளைத் த‌ன‌து த‌ங்கைக‌ளாக‌ ஏற்றுக்கொள்ளும் கெள‌சிக், பிற‌கு த‌ன‌து வீட்டில் த‌ன் வெளி புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளால் அப‌க‌ரிக்க‌ப்ப‌டுவ‌தாய் நினைத்து வீட்டை விட்டு ஓடிவிடுகின்றார் (புற‌ப்ப‌டுகின்றார்). பிற‌கு வ‌ளாக‌ ப‌ட்ட‌ம‌ளிப்பின்போதுதான் த‌ந்தையைச ச‌ந்திக்கின்றார். ப‌ட்ட‌த்தின் பிற‌கு என்ன‌ செய்வ‌து என்று குழ‌ம்பி தென்ன‌ம‌ரிக்காவை ந‌ண்ப‌ரொருவ‌ருட‌ன் சுற்றிப்பார்க்க‌ப்புற‌ப்ப‌டுகின்றார். பிற‌கான‌ நாட்க‌ளில் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌ கெள‌சிக் சுயாதீன‌ப் புகைப்ப‌ட‌க்காராய் வேலை செய்ய‌த்தொட‌ங்கி, போர் ந‌ட‌க்கும் முக்கிய‌ முனைக‌ளுக்குப் போய் ப‌ட‌ங்க‌ளை எடுத்து ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌த்தொட‌ங்குகின்றார்.. இவ்வேலையான‌து ஓரிட‌த்தில் நிர‌ந்த‌ர‌மாயில்லாத‌தால் தென்ன‌ம‌ரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா, ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் என‌ மாறி மாறி இட‌ங்க‌ளை கெள‌சிக்கிற்கு மாற்ற‌வேண்டியிய‌தாயிருக்கின்ற‌து. யாசீர் அர‌பாத்தின் ம‌ர‌ண‌த்தை ப‌ட‌மெடுக்க‌ வ‌ந்து அய்ரோப்பா ந‌க‌ரொன்றில் த‌ங்கிய‌ பிற‌கான‌ கால‌த்தில்தான் கெள‌சிக் ஹேமாவைச் ச‌ந்திக்கின்றார்

மூன்றாம் பகுதியில் கதை ஆரம்பிக்கும்போது ஹேமா கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு செய்கின்றவராய் வளர்நது விடுகின்றார். ஹேமாவின் பெற்றோர் வ‌ங்காள‌ம் போய்விடுகின்ற‌ன‌ர்; ஹேமாவுக்கும் 35 வ‌ய‌தைத் தாண்டிவிடுகின்ற‌து. பெற்றோர் ம‌க‌ள் ப‌டிப்பு ஆய்வு ச‌ம்ப‌ந்த‌மாய் திரும‌ண‌ம் குறித்து யோசிக்க‌வில்லை என‌ நினைக்கின்ற‌ன‌ர். ஆனால் ஹேமாவிற்கு இன்னொரு ம‌ண‌மான‌ வெள்ளைக்கார‌ பேராசிரிய‌ருட‌ன் உற‌விருக்கின்ற‌து. த‌ன‌க்காக‌ அவ‌ர் த‌ன‌து குடும்ப‌த்தை விட்டுவருவார் என்று ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாய் எதிர்பார்க்கும் ஹேமா, யதார்த்தத்தில் அது நிகழாதெனத் தெரிந்து இறுதியில் பெற்றோரின் பேசித் தீர்மானித்த‌ திரும‌ண‌த்துக்குச் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர். ந‌வீன் என்ற‌ பொறியிய‌ல்துறை பேராசிரிய‌ருட‌ன் விரைவில் க‌ல்க‌த்தாவில் திரும‌ண‌ம் ந‌ட‌ந்து ஹேமா நவீனுடன் அமெரிக்காவிற்கு குடிபெய‌ர‌ இருக்கின்றார். ஒரு விடுமுறைக்காய் இத்தாலிக்குப் போகும் ஹேமா, த‌ற்செய‌லாக‌ கெள‌சிக்கைச் ச‌ந்திக்கின்றன‌ர். கெள‌சிக் ஹொங்கொங்கில் ஒரு ச‌ர்வ‌தேச‌ப் ப‌த்திரிகையில் ஆசிரிய‌ர் பொறுப்பை ஏற்ப‌த‌ற்கு அய்ரோப்பாவிலிருந்து த‌ன‌து வ‌சிப்பிட‌த்தைக் காலிசெய்துவிட்டுப் போக‌ கெளசிக் ஆய‌த்த‌மாகின்றார். ஹேமாவுக்கும் கெளசிக்கும் உட‌ல்சார்ந்த‌ உற‌வு முகிழ்கின்ற‌து. இறுதியில் த‌ன்னோடு ஹொங்கொங்கிற்கு வ‌ந்துவிடும்ப‌டி கெள‌சிக் கேட்ப‌தை ஹேமா ம‌றுக்கின்றார். வேலையில் சேர‌முன்ன‌ர் கெள‌சிக் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றார். கிறிஸ்ம‌ஸ் கால‌த்தில் ஹேமாவுக்கும் ந‌வீனுக்கும் திரும‌ண‌ம் ந‌டைபெற‌ கெள்சிக் தாய்லாந்துக் க‌ட‌ற்க‌ரையில் ஹேமா இல்லாத் துய‌ர‌த்தில் பொழுதைக் க‌ழிக்கிறார். கிறிஸ்ம‌ஸ் தின‌த்தில் வ‌ந்த‌ ட்சுனாமியில் கெள்சிக் பரிதாபமாக இற‌ந்துபோகின்றார். திரும‌ண‌ம் முடித்து அமெரிக்க‌ வ‌ரும் ஹேமாவிட‌ம் -கெள்சிக்கையும், ஹேமாவையும்- அறிந்த‌ ந‌ண்ப‌ர் கெள்சிக்கின் ம‌ர‌ண‌ங்குறித்த‌ சிறுசெய்தி நியூயோர்க் ரைமிஸில் வ‌ந்த‌தாக‌க் கூறுகின்றார். எந்த‌ அடையாள‌மின்றி கெள‌சிக் -ஹேமாவின் வாழ்விலிருந்தும்- எல்லோரின‌து வாழ்விலிருந்தும் அடித்துச் செல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார். உள‌மும் உட‌லும் கெள்சிக்கோடு ப‌கிர்ந்து ஹேமா நினைவுக‌ளைத் த‌ன‌க்குள் புதைத்துவிட்டு இன்னொரு வாழ்க்கைக்கு த‌யாராவ‌தோடு க‌தை நிறைவுபெறுகின்ற‌து.

ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் புல‌ம்பெய‌ர்வில் ஒரு ப‌க்க‌த்தை ‍ஒருவ‌கை எல்லைக்குள் நின்று சொல்கின்ற‌ன‌.அதேபோன்று புல‌ம்பெய‌ர்வின் பாதிப்புக்க‌ள்/ப்ய‌ன்க‌ள்/சிதைவுக‌ள்/மீள்எழுத‌ல்க‌ள் குறித்து Edwidge Danticat (Brother, I’m dying, Behind the Mountains), M.G.Vassanji (No New Land, The In-Between World of Vikram Lall) போன்ற‌வ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ள் மிக‌ விரிவாக‌ப் பேசுகின்ற‌ன‌. வித்தியாச‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌லும் அங்கீக‌ரித்த‌லும் என்ற‌வ‌கையில் மேற்கூற‌ப்ப‌ட்ட‌ வித்தியாச‌மான‌ ப‌டைப்புக்க‌ள்/ப‌டைப்பாளிக‌ள் த‌ம‌க்கிடையிலான‌ ஊடாட்ட‌ங்க‌ளையும் இணைவுக‌ளையும் அறிந்துகொண்டு மேலே செல்ல‌ முய‌ற்சிப்பார்க‌ள் என்றே தோன்றுகின்ற‌து. ஜூம்பா ல‌கிரியின் இத்தொகுப்பிலுள்ள‌ அநேக‌ க‌தைக‌ளில் பிரித‌லும், சேர்த‌லும் (அநேக‌மாய் திரும‌ண‌ங்க‌ள்) நிறைய‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. எல்லாக் க‌தைக‌ளிலும் முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளோ அல்ல‌து துணைப்பாத்திரங்க‌ளோ வெள்ளையின‌த்த‌வ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்துகொள்கின்ற‌ன. ஆனால் அதேச‌ம‌ய‌ம் அவ்வாறான‌ க‌ல‌ப்புக் க‌லாசார‌த்தில் எழும் சிக்க‌ல்க‌ள் ப‌ற்றி அதிக‌ம் பேச‌ப்ப‌டாத‌து மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாய் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ளில் இருக்கின்றன‌. முக்கிய‌மாய் தென்கிழ‌க்காசியா ச‌மூக‌த்திலிருந்து வ‌ரும்/வ‌ள‌ரும் த‌லைமுறையின‌ருக்கு எவ்வாறு க‌லாசார‌ம்/ப‌ணபாடுக‌ள் திணிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் ந‌ன‌கு அறிவோம். என‌வே த‌ம்ம‌ளவில் ஒரு பாத்திர‌ம் இன்னொரு க‌லாசார‌த்தில் துணையைத் தேர்நதெடுக்கும்போது மிக‌ப்பெரும் ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்தே ஆக‌வேண்டியிருக்கின்ற‌து. அவ்வாறான‌ ப‌க்க‌ங்கள் இத்தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ளில் த‌வ‌ற‌விட‌ப்பட்டிருக்கின்ற‌ன‌ அல்ல‌து இல‌குவாய் த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. அதேபோன்று இன்னொரு க‌லாசார‌த்திலிருந்து வ‌ரும் துணைக‌ள் தென்னாசியாக‌ க‌லாசார‌ங்க‌ளை எப்ப‌டி எதிர்கொள்கின்ற‌ன‌ர்/ஏற்றுக்கொள்கின்றன‌ர் என்ப‌து குறித்த‌ புள்ளிக‌ளும் ம‌வுன‌மாக்க‌வேப‌ட்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறான‌ கேள்விக‌ள் ஏன் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌து என்றால், ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் அனைத்திலும் (அவ‌ரது ஒரே நாவ‌லான‌ The Namesakeல் கூட‌) வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளை துணையாக‌க் கொண்ட‌ பாத்திர‌ங்க‌ள் அள‌வுக்கு மீறி வ‌ருகின்ற‌ன‌. சில‌வேளைக‌ளில் இந்தியாவிலிருந்த‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாம்/மூன்றாம் த‌லைமுறையைச் சேர்ந்த‌ வ‌ங்காளிக‌ளிடையே இதொரு இய‌ல்பான‌ வ‌ழ‌க்காய் இருக்க‌க்கூடுமோ என்ன‌வோ தெரிய‌வில்லை.

இவ்வாறான‌ கேள்விக‌ளைத் த‌விர்த்துவிட்டுப்பார்த்தால், ஜும்பா ல‌கிரியின் பாத்திர‌ங்க‌ள் ப‌ல‌ கீழைத்தேய‌ ந‌ம்பிக்கைக‌ளை மிக‌ எளிதாக‌ உடைத்துவிட்டு ந‌க‌ர்ந்துவிடுகின்ற‌ன‌. முக்கிய‌மாய் திரும‌ண‌த்துக்கு முன்பான‌ உட‌ல் சார்ந்து எழும் உற‌வுக‌ள‌ குறித்து எந்த‌ப்பாத்திர‌மும் அள‌வுக்கு மீறிக் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை; இய‌ல்பான‌ போக்கில் அதை ஏற்றுக்கொண்ட‌ப‌டி ந‌க‌ர்ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. மேலும் அநேக‌ பாத்திர‌ங்க‌ள் ப‌தின்ம‌ங்க‌ளைத் தாண்டிய‌வுட‌ன், த‌ம்ம‌ள‌வில் வீழ்ந்தும்/எழுந்தும் த‌ம‌க்கான‌ தனிப்ப‌ண்புக‌ளை ‍ -பெற்றோரின் த‌ய‌வில் அல்லாது- தாங்க‌ளாக‌வே வ‌ள‌ர்த்துவிடுகின்ற‌ன‌. இம்மாற்ற‌மான‌து புல‌ம்பெய‌ர்ந்த‌ முத‌ற்த‌லைமுறைக்கு மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்தாலும், புலம்பெய‌ர்ந்த‌ மேற்குச்சூழ‌ல் இதை எளிதாக‌க் க‌ற்றுக்கொடுத்துவிடுகின்ற‌து என்ப‌தே ய‌தார்த்த‌மாகும். இத்தொகுப்பிலுள்ள‌ பெரும்பாலான‌ க‌தைக‌ள் நியூயோர்க்க‌ரில் வ‌ந்திருந்த‌ன‌ என்றாலும் வாசிக்க‌ ஒர‌ள‌வு சுவார‌சிய‌மாய் இருக்கும் ஜும்பா ல‌கிரியின் ப‌டைப்புக்க‌ள் ஒரேவ‌ட்ட‌த்தில் சுழ‌லாம‌ல் மேலும் த‌ன‌து எல்லைக‌ளை நீட்டிக்கும்போது இன்னும் ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை எட்ட‌க்கூடும்.

(Grace Shureக்கு…)

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah

உல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே ‘உல‌க‌ம்’ என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை ஒரு சுவ‌ரைப் போல‌த் த‌டுத்துவிடுகின்ற‌து. சில‌வேளைக‌ளில் நாம் அறியாத‌/ நாம் வாழ்ந்து பார்க்காத‌, ஒரு உல‌கை இன்னொருவ‌ர் விப‌ரிக்கும்போது அதை எப்ப‌டி முழுமையாக‌ விள‌ங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதேபோன்று நாம் க‌ட‌ந்த‌கால‌த்தில் அனுப‌வித்து, ம‌ற‌ந்துவிட்டு ந‌க‌ர‌ விரும்பும் விட‌ய‌ங்க‌ளை நிக‌ழ்கால‌ம் மீண்டும் ஏதோவொருவ‌கையில் நினைவுப‌டுத்துகையில் எப்ப‌டி அவ‌ற்றை உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ அவ‌திக‌ளும இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. இவ்வாறான‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு வாசிக்க‌த் தொட‌ங்கிய‌ ஒரு நூல்தான் குழ‌ந்தை இராணுவ‌த்தின் க‌தையைச் சொல்லும் A Long way Gone.

த‌ன‌து குழ‌ந்தைமை எவ்வாறு காவு கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்று த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌த்தைச் சொல்லும் இஸ்மெயிலில் நினைவுக‌ள் எங்க‌ளைச் சூறையாடிச் செல்கின்ற‌து. அச்சிறுவ‌னைப் போல‌வே என்ன‌ செய்வ‌தென்று குழ‌ம்பி வாசிக்கும் நாமும் அந்த‌ச் சுழ‌லில் த‌த்த‌ளித்த‌ப‌டி சிறு துரும்பாகி உள்ளிழுக்க‌ப்ப‌டுகின்றோம். எவ‌ர் எவ‌ரின‌தோ ந‌ல்ன்க‌ளுக்காய் எதுவுமே அறியாது உல‌க‌மெங்கும் ப‌லிக்க‌டாக்க‌ளாய் -இன்றும் -ஆக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் சிறார்க‌ளுக்குச் சொல்ல‌/ந‌ம்பிக்கை கொள்ள‌ வைக்க‌ எந்த‌ வார்த்தைக‌ளை நாம் வைத்திருக்கின்றோம் என்று நினைக்கும்போது மிகுந்த‌ சோர்வு வ‌ருகின்ற‌து. ம‌னித‌ம‌ற்று குரூர‌மாய்ப் போய்க்கொண்டிருக்கும் உல‌கைப் பார்க்கும்போது, இனி கருணைக்கும் அகிம்சைக்குமான‌ கால‌ம் க‌ட‌ந்துபோய்விட்ட‌து போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

சிய‌ராலியோனில் கிராமப்புற‌த்தில் வாழும் இஸ்மெயில் த‌ன‌து ப‌ன்னிர‌ண்டாவ‌து வ‌ய‌தில் ராப் பாட‌ல்க‌ளைப் பாடும் நிக‌ழ்வில் ப‌ங்குபெற்றுவ‌த‌ற்காய் அடுத்த‌ ந‌க‌ருக்குப் போகின்றான். அதுவே அவ‌ன் இறுதியாய்த் த‌ன‌து கிராம‌த்தைப் பார்க்கும் நாள். எங்கோ தொலைவில் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ போர் இவ‌ர்க‌ளின் கிராம‌த்தையும் அண்டிக்கொண்டிருப்பதை அறியாது இஸ‌மாயிலும் அவ‌ன‌து மூத்த‌ ச‌கோத‌ர‌ன் ஜூனிய‌ரும் இன்னொரு ந‌ண்ப‌னும் ம‌கிழ்ச்சியுட‌ன் நிக‌ழ்விற்காய்ப் புற‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

ம‌றுநாள் அடுத்த‌ ந‌க‌ரில் இஸ‌மாயில் த‌ங்கியிருக்கும்போது அவ‌ர்க‌ள‌து கிராம‌ம‌ போராளிக் குழுவொன்றால் தாக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ம‌து குடும்ப‌த்திற்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ற‌றிய‌ விரும்பி திரும்ப‌வ‌ரும் இஸமாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளை உள்ளே வ‌ர‌விடாது போராளிக‌ள் தாக்குகின்றார்க‌ள். அதே போன்று, கிராம‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ப்பிப்போனாலும் போராளிக‌ள் சுட்டுக்கொல்கின்றார்க‌ள். கைப்ப‌ற்றும் கிராம‌த்திலுள்ள‌ ம‌க்க‌ளை -இராணுவ‌ம் த‌ங்களைத் தாக்க‌ வ‌ந்தால்- ம‌னித‌க் கேட‌ய‌ங்க‌ளாய்ப் பாவிப்ப‌த‌ற்காய் அவ்வாறான‌ ஒரு எச்ச‌ரிக்கை. இப்ப‌டி த‌ம‌து பெற்றோர்/ஊர‌வ‌ர்க‌ளிலிருந்து பிரிக்க‌ப்ப‌டும் இஸ‌மாயிலும் அவ‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளும் ம‌ற்றொரு ந‌க‌ரில் அக‌திக‌ளாய்த் த‌ங்குகின்றார்க‌ள். அந்த‌ ந‌க‌ரையும் விரைவில் போராளிக் குழு கைப்ப‌ற்றுகின்ற‌து. பாதுகாப்புக்கென‌ கிராம‌த்திலிருக்கும் சொற்ப‌ இராணுவ‌மும் த‌ப்பியோட‌, தெருவில் நிற்ப‌வ‌ர்க‌ள்/ க‌ண்ட‌வ‌ர்க‌ள் என்று பொதும‌க்க‌ளையெல்லாம் (இராணுவ‌ம் ஊடுருவியிருக்கும் என்ற‌ நினைப்பில்) போராளிக்குழு கொல்கின்றது (உண்மையில் இப்ப‌டிக் கிராம‌ங்க‌ளைக் கைப்பற்றி அங்கிருக்கும் முழும‌க்க‌ளையும் கொல்வ‌த‌ற்கான‌ இன்னொரு கார‌ண‌த்தை, இஸ‌மாயில் குழ‌ந்தை இராணுவ‌மான‌ பின்ன‌ர் கூறுகின்றார்). உயிருக்குப் ப‌ய‌ந்து, இஸ்மாயிலும், ச‌கோத‌ருமாய் ஏழு சிறுவ‌ர்க‌ள் அக‌திக‌ளாய் ஓட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். இஸ‌மாயிலுக்கு ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து, ச‌கோத‌ர‌ருக்கு ப‌தினைந்து வ‌ய‌து; மிகுதிச் சிறுவ‌ர்க‌ள் இந்த‌ வ‌ய‌துக‌ளுக்கிடையில் இருக்கின்றார்க‌ள்.

இவ‌ர்க‌ள் ஏழு பேராய் அக‌திக‌ளாய் ஒவ்வொரு ஊரூராய் அலைய‌த் தொட‌ங்குகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளைப் ப‌ராம‌ரித்துக்கொள்ள‌ தெரிந்த‌ எந்த‌க் குடும்ப‌மும் இல்லை. அதைவிட‌ மிகுந்த‌ ப‌ட்டினி. இவையெல்லாவ‌ற்றையும் விட‌க் கொடுமை, இவ‌ர்க‌ள் இப்ப‌டி ஏழுபேராய் அக‌திக‌ளாய் அலையும்போது பிற‌ கிராம‌த்த‌வ‌ர்க‌ள் இவ‌ர்களைப் போராளிக்குழுவென்று (சில‌வேளைக‌ளில் உள‌வு பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று) துர‌த்துகின்றார்க‌ள். சில‌ இட‌ங்க‌ளில் கொல்ல‌க்கூட‌ வ‌ருகின்றார்க‌ள் கெஞ்சி ம‌ன்றாடித் த‌ப்பியோடிய‌ப‌டியிருக்கின்றார்க‌ள். ஒருக‌ட்ட‌த்தில் போராளிக் குழுவினால் பிடிக்க‌ப்ப‌ட்டு இய‌க்க‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். மிக‌ச் சிறுவ‌னாக‌ இருப்ப‌தால் இஸ‌மாயில் த‌ப்பிவிட‌, அவ‌ர‌து ச‌கோத‌ர‌ர் இய‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ந்த‌மாய்ச் சேர்க்க‌ப்ப‌டுகின்றார். திரும்ப‌வும் அக‌தியாய் ஓட்ட‌ம். கூட‌விருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் போரில் இழ‌த்த‌ல். திடீரென்று எங்கையாவ‌து போர் வெடித்து உயிருக்காய்த் த‌ப்பியோடும்போது அருகிலிருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் பிரித‌ல். இப்ப‌டி திசை தெரியாது ஓடியோடி ஒரு க‌ட்ட‌த்தில் ஒரு காட்டிற்குள் இஸமாயில் நுழைந்துவிடுகின்றார். கிட்ட‌த்த‌ட்ட‌ அந்த‌ அட‌ர்ந்த‌ காட்டிற்குள் ஒரு மாத‌ த‌னிமை வாச‌ம். ப‌சியில் கையில் கிடைப்ப‌தையெல்லாம் சாப்பிட்டு உயிர் த‌ப்ப‌ல். குருவி சாப்பிட்டு சாகாம‌ல் இருக்கும் பெய‌ர‌றியாப் ப‌ழ‌ங்க‌ளையெல்லாம் தானும் உண்ட‌ப‌டி எவ‌ரும் கூட‌விருந்து க‌தைக்க‌வியலா மிக‌ப் பெருந்தனிமை. அதிலிருந்து விடுப‌ட்டு ஒருமாதிரியாக‌ வெளியில் வ‌ருகின்றார். தொட‌ரோட்ட‌த்தில் த‌ன‌து பெற்றோர் ச‌கோத‌ர‌ர் இன்னொரு கிராம‌த்தில் த‌ப்பி வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ற‌றிந்து போகின்ற‌போது, அந்த‌க்கிராம‌த்திலுள்ள‌ அனைவ‌ரையும் உயிரோடும்/கொன்றும் எரியூட்டிக் கிராம‌த்தைச் சூறையாடிவிட்டு போராளிக‌ள் போயிருக்கின்றார்க‌ள் என்ப‌து பேரிடியாக‌ விழுகின்ற‌து. இறுதியில் போர் என்றைக்குமாய்த் தீண்டாத‌ ஒரு ந‌க‌ரை நோக்கி -இப்ப‌டி அக‌தியாய் ஓடும்போது வாய்த்த‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு- ப‌ய‌ணிக்கின்றார். அங்கு முகாம் அமைத்திருக்கும் இராணுவ‌ம் இவ‌ர்க‌ளுக்கு அடைக்க‌ல‌ங்கொடுக்கின்ற‌து. இராணுவ‌த்துக்கு கூட‌மாட‌ உத‌விக‌ள் செய‌தப‌டி இவ‌ர்க‌ளைப் போன்ற‌ முப்ப‌துக்கு மேற்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

ஏற்க‌ன‌வே நிக‌ழ்ந்த‌துபோல‌ இவ‌ர்க‌ள் இருந்த‌ கிராம‌த்தையும் போராளிக‌ள் சுற்றி வளைக்கின்றார்க‌ள். தின‌மும் முன்ன‌ணிப் போர‌ர‌ங்கிற்குச் செல்லும் இராணுவ‌ம் இழ‌ப்புக்க‌ளுட‌ன் திரும்பி வருகின்ற‌து. ஒரு க‌ட்ட‌த்தில் போராடுவ‌த‌ற்கு ஆள‌ணி போதாம‌ல் இச்சிறுவ‌ர்க‌ளும் இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒன்று த‌ங்க‌ளோடு போரில் ஈடுப‌ட‌வேண்டும் இல்லாவிட்டால் அந்த‌க் கிராம‌த்தை விட்டு போக‌வேண்டும் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இனி இப்படி இராணுவ‌ப் பாதுகாப்பிலிருந்த‌ த‌ங்க‌ளைப் போராளிகளும் சுட்டுக்கொல்ல‌த்தான் போகின்றார்க‌ள் என்ற ந‌ம்பிக்கைய‌ற்ற‌ எதிர்கால‌த்தால் இராணுவ‌த்தில் இஸ‌மாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ள் சேர்கின்றார்க‌ள். ப‌யிற்சி கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலுக்கு ப‌தின்மூன்று வ‌ய‌து என்றால், அவ‌ரைவிட‌ எட்டு. ப‌தினொரு வ‌ய‌திலிருக்கும் சிறுவ‌ர்க‌ளுக்கும் கூட‌ ப‌யிற்சி/ஆயுத‌ம் வழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏகே 47ஐ நிமிர்த்திவைத்தால் அதைவிட‌க் குள்ள‌மாய்த்தான் அந்த‌ச் சிறுவ‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்று இஸ்மாயில் விப‌ரிக்கின்றார்.

ஒருநாள் போராளிக் குழுவை வ‌ழிம‌றித்துத் தாக்குவ‌த‌ற்காய் இச்சிறுவ‌ர்க‌ள் அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். ச‌ண்டை ஆய‌த்த‌மாவ‌த‌ற்கு முன் இச்சிறுவ‌ர்க‌ளுக்கு வெள்ளைநிற‌ போதைக் குளிசைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ச‌ண்டை ஆர‌ம்பிக்கின்ற‌து. ந‌டுங்கும் தேக‌த்துட‌ன் ம‌னித‌வுட‌ல்க‌ள‌ ச‌ரிந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார்க‌ள். ஒரு ஆர்பிஜி அடியில் அருகிலிருந்த‌ எட்டு வ‌ய‌துச் சிறுவ‌னின் உட‌ல் பிய்த்தெறிய‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலின் இன்னொரு நெருங்கிய‌ ந‌ண்ப‌னும் கொல்ல‌ப்ப‌டுகின்றான். இனி எதுவும் செய்வ‌த‌ற்கு இல்லையென‌ ‘அசைகின்ற‌ எல்லாவ‌ற்றையும்’ க‌ண்மூடித்த‌ன‌மாய் சுட‌த்தொட‌ங்குகின்றார் இஸ்மாயில். ஒன்று இர‌ண்டு என்று இவ‌ர‌து துப்பாக்கி ர‌வைப‌ட்டு ம‌னித‌வுட‌ல்க‌ள் ச‌ரிகின்ற‌ன‌. ஒவ்வொருமுறையும் தோட்டாக்க‌ள் முடிந்து மீள‌ நிர‌ப்பும்போது, இற‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் முக‌ங்க‌ள் த‌ன‌க்குள் வெறியை இன்னுமின்னும் அதிக‌மாய் ஏற்ப‌டுத்திய‌து என்கின்றார்.

எதையும் தொட‌ங்குவ‌துதான் க‌டின‌ம். தொட‌ங்கினால் எதுவுமே போதையாகிவிடும். அதுவும் அச‌ல் போதை ம‌ருந்தும் எடுத்துக்கொண்டு கொல்வ‌து இன்னும் மிகுந்த‌ போதையாக‌ இருக்கின்ற‌து. ப‌தின்மூன்றில் தொட‌ங்கும் இந்த‌ வேட்டை ப‌தினாறு வ‌ய‌து வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ தின‌ம் தொட‌ர்ந்தாய் இஸ்மாயில் குறிப்ப்டுகின்றார். போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌ங்க‌ளைத் தாக்குவ‌து, போராளிக‌ள் ம‌ற்றும் அங்கிருக்கும் ம‌க்க‌ளை முற்றாக‌ கொல்வ‌து (த‌ப்ப‌விடும் ஒவ்வொரு ம‌னித‌னும் த‌ங்க‌ள் உயிரைப் ப‌றித்தெடுத்துவிடுவார்க‌ள் என்று க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌து). ‘உங்க‌ள் பெற்றோரைப் ப‌லியெடுத்த‌ போராளிக‌ளை சும்மா விட‌க்கூடாது’ என்று இவ‌ர்க‌ளின் குழுத்த‌லைவ‌ரால் ஒவ்வொரு தாக்குத‌லுக்கு முன்னாலும் உசுப்பேற்ற‌ப்ப‌டுகின்றார்க‌ள். வெறித்தனமாய் ‘எதிரிக‌ளை’க் கொல்லும் திற‌மைக்காய் இஸ‌மெயிலுக்கு ஜூனிய‌ர் லெப்ரின‌ன்ட் ப‌த‌வி கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் வ‌ய‌தொத்த‌ குழுவிற்குத் த‌லைமை தாங்குப‌வ‌ராக‌வும் ப‌தவி உய‌ர்த்த‌ப்ப‌டுகின்றார். கிராம‌ங்க‌ளைத் தாக்கி அங்கிருக்கும் உண‌வு இன்ன‌பிற‌ பொருட்க‌ளை சூறையாடுவ‌து. போராளிக‌ள் மீண்டும் அக்கிராம‌ங்க‌ளில் த‌ள‌ம் அமைக்காம‌ற் த‌டுக்கும்பொருட்டு கிராம‌ங்க‌ளையே முற்றாக‌ எரிப்ப‌து… இப்ப‌டியாக‌த் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்துவ‌தும், அவையிலலாத‌ பொழுதுக‌ளில் போதை ம‌ருந்து எடுத்துக்கொண்டு Commando, Rambo, First Blood போன்ற‌ ச‌ண்டைப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பொர் வெறியைத் த‌ங்க‌ளுக்குள் உசுபேற்றிக்கொண்டிருப்ப‌து என்று கால‌ம் க‌ழிகிற‌து.

த‌ப்பியோட‌முடியாது பிடிப‌டும் போராளிக‌ளுக்கு இவ‌ர்க‌ள் செய்யும் அநியாய‌ம் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. ஒரு முறை பிடிப‌ட்ட‌ போராளிக‌ளை, கைக‌ளை பின்ப‌க்க‌மாய் க‌ட்டிவைத்து, இச்சிறுவ‌ர்க‌ளில் யார் குறைந்த‌ நேர‌த்தில் முத‌லில் துப்பாக்கிக்க‌த்தியால் க‌ழுத்தைச் சீவிக்கொல்வ‌து கொல்வ‌து என்ற‌ போட்டி ந‌ட‌க்கின்ற‌து. இன்னொரு முறை க‌டும் இழ‌ப்புக‌ளுட‌ன் கைப்ப‌ற்றும் கிராம‌த்தில் பிடிப‌ட்ட‌ போராளிக‌ளைக் கொண்டே குழிதோண்ட‌வைத்து, அப்ப‌டியே அவ‌ர்க‌ளை அத‌ற்குள் உயிரோடு புதைக்கின்றார்க‌ள் இப்ப‌டி எந்த‌வொரு ம‌னித‌த்த‌ன்மையுமில்லாது போர் இவ‌ர்க‌ளை ஆக்கிவிடுகின்ற‌து. கொல்ல‌ப்ப‌டும் ந‌ணப‌ர்க‌ளை நினைத்து க‌வ‌லைப்ப‌ட‌ முடியாத‌வ‌ள‌வுக்கு போர் வெறி ச‌ன்ன‌த‌மாடுகின்ற‌து. ஓரிட‌த்தில் போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌த்தைத் தாக்க‌ப்போகும்போது இஸ‌மாயிலின் ந‌ண்ப‌னுக்கு ஒரு ஆசை வ‌ருகின்ற‌து. தாங்க‌ள் பார்த்த‌ ர‌ம்போ ப‌ட‌த்தில் வ‌ரும் ராம்போ மாதிரி போரை நிக‌ழ்த்த‌வேண்டும்ன்று, ராம்போ மாதிரியே உள்ளே ஊடுருவி ம‌திய‌க் க‌ளைப்பில் கிட‌க்கும் ஜ‌ந்தாறு பேரை துப்பாகிக் க‌த்தியால் பின்புற‌மாய் போய் க‌ழுத்தைச் சீவிக்கொலை செய்கின்றான். அதிலும் கொடுமை என்ன‌வென்றால், ராம்போ ப‌ட‌த்தில் செய்வ‌த‌ற்கும் இத‌ற்கும் ஒரேயொரு வித்தியாச‌ம் என்ன‌வென்றால், ராம்போ கொன்ற‌ உட‌ல்க‌ளை ம‌றைத்த‌துபோல‌ ந‌ண்ப‌ன் ம‌றைக்க‌வில்லை அதனால் இன்னும் ப‌ல‌ரை இப்ப‌டிச் ச‌த்த‌மில்லாது கொல்லும் ச‌ம்ப‌வ‌ம் இடைந‌டுவில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌‌ட்டுவிட்ட‌து என்கின்ற‌ இஸ்மாயிலின் குறிப்புக‌ள். பிம‌ப‌ங்க‌ள் க‌ட்டிய‌மைக்கும் உல‌கு எப்ப‌டி நிஜ‌மாய் ஆகின்ற‌து என்கின்ற‌ குரூர‌ உண்மையை நாம் விள‌ங்கிக்கொள்ள‌வேண்டும். ம‌னித‌ர்க‌ளை எப்ப‌டிப் போர் மாற்றியிருக்கின்ற‌து என்ப‌த‌ற்கு இந்நூலில் குறிப்பிட‌ப்ப‌டும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளைவிட‌ வேறு என்ன‌தான் வேண்டும்?

அதிஸ்ட‌மோ என்ன‌மோ தெரியாது, இஸ்மாயில் ப‌தினாறு வ‌ய‌தில் UNICEFவால், அவ‌ர்க‌ளின் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்துக்காய்(?) (rehabilitation centre) சிய‌ராலியோனின் த‌லைந‌க‌ருக்கு அனுப்ப‌டுகின்றார்க‌ள்.அங்கேயும் இவ‌ர்க‌ள் செய்யும் அட்ட‌காச‌ங்க‌ள் சொல்லி மாளாது. சென்ற‌ முத‌ல் நாள‌ன்றே, இவ‌ர்க‌ள் போராளிக‌ள் ப‌க்க‌த்திலிருந்து வ‌ரும் குழ‌ந்தைப் போராளிக‌ளைச் ச‌ந்திக்கின்றார்க‌ள். எவ‌ரையும் கொன்று ப‌ழ‌கிய‌ இவ‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளைப் பார்க்க‌ச் ச‌கிக்க‌வில்லை. இவ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்கு என்றிருக்கும் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் துவ‌க்குக‌ளைப் ப‌றித்து இருத‌ர‌ப்பும் சுட்டுக்கொல்கின்ற‌து. முத‌ல் நாளே ஆறுபேர் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்தில் இற‌ந்துபோகின்றார்க‌ள். மிகுந்த‌ மூர்க்க‌த்த‌ன‌மாய் இவ‌ர்க‌ள் அங்கே வேலை செய்யும் ஆண்க‌ளையும்/பெண்க‌ளையும் துர‌த்திய‌டிக்கின்றார்க‌ள், பொருட்க‌ளை வீசியெறிகின்றார்க‌ள். இன்னும் தின‌மும் போதை ம‌ருந்து எடுத்த‌தால் அதுவில்லாது இவ‌ர்க‌ளால் இருக்க‌வும் முடிய‌வில்லை. த‌ம‌து கையை, த‌லையை சுவ‌ரில் நில‌த்தில் அடிக்கின்றார்க‌ள். இர‌த்த‌ம் பொங்கி த‌ன‌து கையெலும்பு வெளியில் தெரியும்வ‌ரை சீமெந்து நில‌த்தில் ப‌ல‌முறை அடித்த‌தாய் இஸ்மெயில் குறிப்பிடுகின்றார்.. இர‌வுக‌ளில் தூங‌க‌முடியாது தான் கொன்ற‌வ‌ர்க‌ளில் நினைவுக‌ள் வ‌ந்து, இர‌விர‌வாய் மைதான‌த்தைச் சுறறியோடிய‌தாய், வ‌ராண்டாவில் ந‌ட‌ந்து திரிந்த‌தாய் -மிகுந்த‌ உள‌விய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள் ஆளான‌தாய்- இஸ்மாயில் எழுதுகின்றார்.

தான் எவ்வ‌ள‌வோ முயன்று குழ‌ந்தை இராணுவ‌மாய் ஆவ‌த‌ற்கு முன்பான‌ ந‌ல்ல‌ நினைவுக‌ளை திருப்ப‌க்கொண்டுவ‌ர‌ முய‌ற்சித்தாலும், தொட‌ர்ந்தும் போர்க்காட்சிக‌ளே த‌ன‌து நினைவிலும் க‌ன‌விலும் தொட‌ர்ந்துகொன்டிருந்த‌து என்றார். இவ்வாறு ப‌ல‌வேறு உள்/உட‌ல் சிக்க‌ல்க‌ளில் உழ‌ன்ற‌போதும் அந்த‌ ம‌றுசீர்வாழவு நிலைய‌த்திலிருந்த‌ வாஞ்சை மிக்க‌ ம‌னித‌ர்க‌ளின் அன்பாலும் ப‌ராம‌ரிப்பாலும் திரும்ப‌வும் த‌ன‌து போரில்லாத‌ உல‌கிற்குத் திரும்பியிருக்கின்றேன் என்கின்றார். அவ‌ருக்கான‌ சிகிச்சை முடிந்த‌பின் த‌ன‌க்கு ஒருவ‌ரும் இல்லையென்று நினைக்கும் இஸ்மாயிலுக்கு அவ‌ர‌து மாமா ஒருவ‌ர் திரும்ப‌க்கிடைக்கின்றார். அவ‌ர்க‌ளோடு த‌லைந‌க‌ரில் வாழ‌த்தொட‌ங்கும்போது, ஜ‌நாவின் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு மாநாட்டில் நியூயோர்க்கில் க‌ல‌ந்துகொள்ள‌ வாய்ப்புக் கிடைக்கின்ற‌து. ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ள் நேர்முக‌த்திற்காய் காத்திருக்கும்போது தானொரு குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னாய் இருந்த‌தால், த‌ன்னால்தான் சியராலிய‌னோனில் எப்ப‌டிக் குழ‌ந்தைக‌ளின் வாழ்வு சூறையாட‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைச் சொல்வ‌த‌ற்கு அதிக‌ உரிமையுண்டு என்று கூறிய‌தால் ஜ‌நா க‌ருத்த‌ர‌ங்கிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்றார். அங்கே லோறின் என்ற‌ வெள்ளைப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். ஜ‌நாவிற்கு நியூயோர்கிற்குப் போகும்போது ப‌னிக்கால‌மாகையால் குளிர்கால‌த்தில் இஸ்மெயில் ப‌டுகின்ற‌ அவ‌திக‌ள் இன்னொரு வித‌மான‌வை.

மீண்டும் சிய‌ராலிய‌ரோனிற்குத் திரும்பிவ‌ந்த‌ சொற்ப‌ மாத‌ங்க‌ளில் இதுவ‌ரை போர் தீண்டாத‌ த‌லைந‌க‌ரையும் போர் தீண்டுகின்ற‌து. தேர்த‌லால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌னாதிப‌தியை (96) க‌விழ்த்துவிட்டு இராணுவ‌த்த‌ள்ப‌தியும் போராளிக்குழுவும் நாட்டைக் கைப்ப‌ற்றுகின்ற‌து. மீண்டும் போர், ப‌ட்டினி, கொலை, கொள்ளைக‌ள், பாலிய‌ல் ப‌லாத்கார‌ங்க‌ள். தான் எங்கை போனாலும் போர் த‌ன்னைத் துர‌த்தாது விடாதுபோல‌ என‌ இஸ்மெயில் அந்த‌ரிக்கின்றார்.. இதுவ‌ரைகால‌மும் இவ‌ரை அர‌வ‌ணைத்து அன்பு காட்டிய‌ மாம‌னும், போர்க்கால‌த்தில் நோயின் நிமித்த‌ம் ம‌ருத்துவ‌ வ‌சதியில்லாது இற‌ந்துபோகின்றார். ஏன் இப்ப‌டி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பிரிய‌ங்காட்டிய‌ எல்லோரும் இற‌ந்துபோகும்போது தான் ம‌ட்டும் உயிரோடு இருக்கின்றேன் என‌ மிகுந்த‌ துய‌ர‌ங்கொள்ளும் இஸ்மாயில் இனி இந்த‌ நாட்டில் தான் தொட‌ர்ந்திருந்தால் கொல்ல‌ப்ப‌டுவேன் அல்ல‌து மீண்டும் இராணுவ‌த்தில் சேர்ந்து ம‌னித‌ர்க‌ளைக் கொல்ல‌வேண்டிய‌ நிலைவ‌ருமென்று நாட்டைவிட்டு த‌ப்பியோடுகின்றார். நியூயோர்க்கிலிருக்கும் லோறினைத் தொட‌ர்புகொண்டு தான் நியூயோர்க் வ‌ந்தால் த‌னக்கு அடைக்க‌ல்ந்த‌ருவாரா என‌க்கேட்கிறார். சிய‌ராலிய‌னோனை விட்டு Guinea விற்குத த‌ப்பியோடுவ‌தோடு இந்நூல் நிறைவுபெறுகின்ற‌து.(எப்ப‌டித் த‌ப்பியோடிய‌து என்ப‌து இன்னொரு அவ‌தியான‌ கிளைக்க‌தை).

1980ம் ஆண்டு பிற‌ந்த‌ இஸ்மாயில் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சித்து வ‌ருகின்றார். குழ‌ந்தைக‌ள் போரில் ஈடுப‌டுவ‌த‌ற்கு எதிரான‌ ஜ‌நாவின் திட்ட‌ங்க‌ளில் ப‌ங்குபெற்றி உரையாற்றியும் வ‌ருகின்றார். த‌ன‌து பெய‌ரிலேயே ஒரு அமைப்பு நிறுவி போரில் ஈடுப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளின் ம‌றுவாழ்வுக்காய் வேலைத் திட்ட‌ங்க‌ளையும் செய்துவ‌ருகின்றார். இது ஒரு இஸ்மாயிலின் க‌தை, இவ்வாறு இன்னுமின்னும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இஸ்மாயில்க‌ளின் க‌தைக‌ள் புதையுண்டு கிட‌க்கின்ற‌ன‌. மீண்டும் போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில், அடைக்க‌ல‌ம் கொடுக்க‌ இஸ்மாயிலுக்கு ஒரு மாமாவ‌து இருந்தார். அவ்வாறு இல்லாத‌ ப‌ல‌ர், மீண்டும் சீர்திருத்த‌ நிலைய‌த்திலிருந்து இராணுவ‌ம்/போராளிக்குழுக்க‌ளில் இணைந்து போர்முனைக்குச் சென்ற‌தாக‌ இஸ்மாயில் குறிப்பிடுகின்றார். இஸ்மாயிலுக்கு போரைத்தாண்டிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த‌துபோல‌ எல்லாச்சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை என்ப‌தையும் க‌வ‌னிக்க‌வேண்டும். இன்று நியூயோர்க்கில் வ‌சித்துக்கொண்டிருக்கும் தான் மூன்று வித‌மான‌ உல‌கிற்குள் இன்ன‌மும் சிக்கிக்கொண்டிருப்ப‌தாய் இஸ்மெயில் கூறுகின்றார். குழ‌ந்தை இராணுவ‌மாய்ச் சேருவ‌த‌ற்கு முன்பிருந்த‌ ஒரு வாழ்வு, குழ‌ந்தை இராணுவ‌மாய் இருந்த‌ ஒர் உல‌கு, இத‌ற்கு முன‌ ப‌ரீட்ச‌ய‌ப்ப‌டாத‌ புல‌ம்பெய‌ர் வாழ்வு என‌ மூன்று வ‌கையான‌ உல‌குக‌ள் த‌ன்னை அடிக்க‌டி இடைவெட்டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்..

ஊரில் தான் சிறுவ‌ராயிருந்த‌போது, த‌ம‌து கிராம‌த்து முதிய‌வ‌ர் கூறிய‌வொரு க‌தையை இஸ்மாயில் ஓரிட‌த்தில் நினைவுப‌டுத்துவார். வேட்டைக்குப் போகும் ஒருவ‌ன் குர‌ங்கைச் சுடுவ‌த‌ற்காய்த் துப்பாக்கியைக் குறிபார்ப்பான். அப்போது அந்த‌க்குர‌ங்கு கூறும், நீ என்னைச் சுட்டால் உன‌து தாயார் ம‌ர‌ணிப்பார், என்னைச் சுடாம‌ல் விட்டாலும் உன‌து உன‌து த‌ந்தை ம‌ர‌ணிப்பார். அவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் எது உங்க‌ள‌து தேர்வாக‌ இருக்குமென‌ அந்த‌ முதிய‌வ‌ர் கேட்டிருப்பார். இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்று மிக‌வும் குழ‌ப்பி, இறுதியில் க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ரிட‌ம், குர‌ங்கை விட்டுவிட்டு மான் போன்ற‌வ‌ற்றை வேட்டையாடி இதிலிருந்து த‌ப்பிவிடுவோம் என்று சொன்ன‌தாய் -சிறுவ‌ர்க‌ளாய் இருந்த‌போது- சொல்லியிருந்தோம் என்று இஸ்மாயில் குறிப்பிட்டிருப்பார். இது ச‌ரியான‌ ப‌திலில்லை எனெனில் துப்பாக்கியைக் குறிப்பார்க்க‌த் தூக்கிவிட்டாய் ஆக‌வே உன‌க்கிருக்கும் தேர்வு இர‌ண்டேதான் (குர‌ங்கைச் சுடுவ‌து அல்ல‌து சுடாது விடுவ‌து) என்று அந்த‌ முதிய‌வ‌ர் கூறியிருப்பார். இப்போது வ‌ள‌ர்ந்த‌பின் அக்க‌தையை மீள‌ நினைக்கும்போது, த‌ன‌க்கு அவ்வாறான‌ இர‌ண்டு தேர்வுக‌ள் ம‌ட்டுமே இருப்பின் குர‌ங்கையே தான் சுட்டிருப்பேன் என்கின்றார் இஸ்மாயில். எனெனில் குர‌ங்கைச் சுடாது விட்டால் அது த‌ன‌க்குப் பின் வ‌ருப‌வ்ர்களுக்கும் இவ்வாறான‌ கேள்வியைக் கேட்டு அவ‌ர்க‌ளுக்குப் பிரிய‌மான‌ ஒருவ‌ரைப் ப‌லிகொடுக்க‌ப்போகின்ற‌து ஆக‌வே கிடைக்கும் விளைவுக‌ளை தான் ம‌ட்டும் அனுப‌வித்துவிட்டு பின் வ‌ரும் ச‌ந்த‌திக‌ளுக்கு இவ்வாறான் இர‌ண்டு கொடும் தேர்வுக‌ளைக் கொடுக்க‌வேண்டியிருக்காதுதானே என்கின்றார். குர‌ங்கையொரு போராய் அல்ல‌து குழ‌ந்தை இராணுவ‌மாய்/போராளியாய் உருவ்கித்துப் பார்த்தால் ந‌ம‌க்கும் நிறைய‌ விடய‌ங்க‌ள் விள‌ங்க‌க்கூடும்

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)
கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது

-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கியவிருதுக்காய் தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15 தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரிமாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார். ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

‘கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.உதிரத்தின் நிணத்துடனும்,வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது என்றார். அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையையாகவும் கவிதை உருமாறும் என்றார்”

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனிராஜாசிங்,தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது.தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர்.சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதிவிருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர்.போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம