இறுதியில் நிகழ்ந்தது
நாமெழுப்பும் கண்காணிப்புத்தேசத்தின்
எண்ணற்ற தெருக்களில்
நேசம் பாசியைப்போல பின்னலிடுகிறது
வழுக்கி விழுந்து உதிரமுருகி சாலைதகிப்பினும்
காயங்களை மறைக்கும் புத்திசாலித்தனத்தை
தாபமொரு சுனையாய்க் கசியவிடும்
செயல்களின் தவறுகளை கர்ப்பக்கிரகத்தில் பதுக்கியொளிக்க
துர்நாற்றம் தாங்கமுடியாக்கடவுளர்கள்
நாம் விமர்சித்து
உயிர்த்தெழுவதற்கான சந்தர்ப்பங்களோடு வெளியேறிவிடுகின்றனர்
கதகதப்பான நினைவுகளை வெயிலில் காயும்
ஆடைகளோடு உலரவைத்துவிட்டு
அலுப்பூட்டும் பெருமூச்சுக்களோடு
இந்த் ஆண்கள் இப்படித்தானென நீயும்
இந்தப் பெண்களே இப்படித்தானென நானும்
எதிரெதிர்த்திசைகளிலிருந்து சபிக்கிறோம்
காலப்பெருங்காகமொன்று
தன்கூரிய அலகால் கொத்தத்தொடங்குகையில்
விரல்கள் குழைந்து புனைந்த Totem pole சரிந்து
நேசம் நமக்களித்த ஓவியங்கள குலைகின்றன
ஆதிக்குடியின் வெண்தாடிக்கிழவன்
சூரியன் காணாத்துயரில் தற்கொலைத்த துயரம்
நம்மிலும் கருமையாய்ப்படர
நிச்சயமின்மைகளில் நடக்கத்தொடங்குகிறோம்
இன்னொரு இழப்பு
இன்னொரு பருவமாற்றம்
இன்னொரு இடப்பெயர்வு.
சுழன்றாடும் துருவப்பனிப்புயலிற்கு
நாடோடிக்கும் நின்று தரிப்பவனுக்கும்
வித்தியாசம் தெரிவதேயில்லை
தான் நினைத்த நேரம் பொழிந்துவிட்டு
கலங்காது நகரும் பனியின் வாழ்க்கை
எவருக்கும் வாய்ப்பதுமில்லை.