DISPASSIONATED DJ

August 25, 2007

Akonம் அஸினும்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:40 pm

Akonனின் அண்மையில் வெளிவந்த பாடலிது. ஒரு பலவீனமுள்ள மனிதனாய், தான் பிறருக்குத் தீங்கிழைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்கின்றார். ஆரம்ப காலங்களில் கார்களைத் திருடுபவராய் இருந்ததிலிருந்து(அதில் பிடிபட்டு ஜெயிலில் சில வருடங்களாய் இருந்திருக்கின்றார்) சமீபத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கின்றார். முக்கியமாய் அண்மையில் கரீபியன் தீவுகளின் கிளப் ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணோடு தகாத வழியில் ஆடியிருந்தார் என்ற சம்பவம் அனைவரும அறிந்ததே. 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்காத கிள்ப்பிற்கு எப்படி ஒரு பதினெட்டு வயதுக்குட்டபட்ட பெண் வருவார் என்று தான் எதிர்பார்க்கமுடியும் என்று இப்பாடலில் Akon கூறுகின்றபோதும், அந்தச் சம்பவத்திற்காய் வெளிப்படையாக அவர் மன்னிப்புக்கேட்கின்றார். அத்தோடு அந்தச்சம்பவத்தால் மூடப்பட்ட கிளப்பிற்கும், மேலும் இதனால் வெரிஸன் வயர்லஸின் பெரும் விளம்பரத்திலிருந்து தான் நீக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றார். இவ்வாறான சம்பவங்களைச் செய்துவிட்டு அதையொரு வீரதீரச்செயலாய் ராப் பாடல்களில் பாடிக்கொண்டிருப்பவர்கள் போலல்லாது தனது குறைகளை குறைகளாகவும் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவும் செய்கின்ற Akonனின் ஆளுமை, அவரது பாடல்களைப்போல என்னை வசீகரிக்கின்றன.

…I’m sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She’s just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I’m sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn’t anybody want to take blame
Verizon backed out disgracing my name
I’m just a singer trying to entertain
Because I love my fans I’ll take that blame…

அவரது அழகான ‘ஆபிரிக்கா தாய்’ (Mamma Africa) பற்றிக்கூறும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை குறைகள் இருந்தாலும், தாய் நாடு தரும் சுகத்திற்கு இணையேது?


……
நயன்தாரா இரசிகர்களைச் சந்தோசப்படுத்துகின்றேன் என்று வி.ஜெ.சந்திரன் இப்பதிவில் (கடைசிப்பாடலிற்கு முதல்) எங்களின் அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே…

August 24, 2007

வரலாற்றின் தடங்களில் நடத்தல்

-Woolf in Ceylon by Christopher Ondaatje-

காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் ‘சுதேச’ மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் ‘அறிஞர் குழாத்தில்’ கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம். நமது கல்வித்திட்டம் கூட இன்னும் முறைமையாக மாற்றியமைக்கப்படாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (காலனித்துவ) பாடத்திட்டத்தின்படி அண்மைக்காலம் வரை நீட்டிக்கபட்டுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

‘இலங்கையில் வூல்ப்வ்’ (Woolf in Ceylon) என்ற இந்நூல், வூல்ப்வ் அரச அலுவலராக 1904-1911 காலப்பகுதிகளில் ஈழத்தில் பணியாற்றியபோது எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து விரிவான சம்பவங்களுடன் மீண்டும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜினால் எழுதப்பட்டிருக்கின்றது. வரலாற்றின் ஆவணங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் இன்றைய நமது போர்ச்சூழலில் இப்படியான காலனித்துவவாதிகளின் குறிப்புகளினூடாகத்தான் நாம் நமது நாட்டையும் ஊர்களையும் அறிந்துகொள்ள, சார்ந்து நிற்கவேண்டியிருக்கின்றது என்பது அவலமான ஒரு விடயமே. வூல்ப்வ் இலங்கையில் இருந்த காலங்களில் எழுதிய குறிப்புகளையும், இன்னபிற அவரின் படைப்புக்களையும் வாசித்த கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி (எழுத்தாளர் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் சகோதரர்) போர் நடைபெறாத ‘சமாதான காலம்’ எனச்சொல்லப்பட்ட 2003களில் இலங்கைக்குச் சென்று, வூல்ப்வ் பயணித்த இடங்களை வூல்ப்பின் குறிப்புகளை வைத்துக்கொண்டு மீண்டும் பார்ப்பதை/பயணிப்பதை ((revisiting?) இந்நூலில் எழுதியிருக்கின்றார். வூல்பின் 1900 காலகட்டத்தோடு, இன்றைய ஈழத்தை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி விரித்து எழுதிச்செல்வது வெகு சுவாரசியமான வாசிப்பை நமக்குத் தருகின்றது. மேலும், கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவரது அனுபவம் சார்ந்த சொந்தக்குறிப்புகளும் இந்நூலிற்கு இன்னும் வளத்தைச் சேர்க்கின்றது.

வூல்ப்வ் பணியாற்றிய யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, ஹம்பாந்தோட்ட (தமிழில் அம்பாந்த்தோட்டை?) போன்ற அனைத்து இடங்களுக்கும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிக்கின்றார். இலங்கைக்கு வரும்போது ஒரு ஏகாதிபத்தியவாதியாக இருக்கின்ற வூல்ப்வ் பின்னாட்களில் எப்படி தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளாராக மாறுகின்றார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது. கொழும்பில் இரண்டுவாரம் கச்சேரியில் வேலை செய்து விட்டு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு வூல்ப்வ் 1904 ஆண்டளவில் போகின்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வூல்ப் -அப்போதிருந்த தொடர்ச்சியில்லாத புகைவண்டிப்பாதையால்- அனுராதபுரத்திலிருந்து ஆனையிறவு வரை மாட்டுவண்டியில் பயணிக்கின்றார் (ஏறத்தாள முப்பத்தாறு மணித்தியாலங்கள் எடுத்த பயணம் அது). யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் வூல்பவ் மிகத்துல்லியமாய் இறுக்கமான யாழ்ப்பாணச்சமூகத்தை கணித்துமிருக்கின்றார். யாழ்ப்பாணத்தவர்களின் சாதித்திமிர், வேலிச்சண்டை உட்பட கல்வித்திமிர்வரை அனைத்தையும் தனது குறிப்புகளில் வூல்ப்வ் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று யாழ்ப்பாணம், இலங்கையில் ஏனைய பகுதிகள் விரைவில் சுவீகரித்துக்கொண்ட அய்ரோப்பிய கலாசாரத்தை போன்று இருக்காது, தனித்து நின்ற ஒரு பிரதேசமெனவும் குறிப்பிடுகின்றார். முக்கியமாய் அய்ரோப்பியப் பெருநகரங்களுக்கு இருக்கும், ஒரு பெருநகரும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர்ப்பகுதிகள் போன்ற அமைப்பை அமையவிடாது, யாழ்ப்பாணத்தின் எண்ணற்ற பின்னலான தெருக்களும், ஒழுங்கைகளும் தடுத்துவிடுகின்றன என்று தனது அவதானங்களை வூல்ப்வ் முன்வைக்கின்றார். அதேபோன்று கிடுகுவேலிகளுக்குள் அடங்கிவிடுகின்ற ஒரு கொண்டாட்டமற்ற சமூகம் யாழ்ச்சமூகமெனவும் எழுதிச் செல்கின்றார். மேலும் பக்கத்து வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு, தங்களது கிடுகு வேலியை மற்றவனுக்குச் சொந்தமான நிலத்தில் சில அங்குலங்களாவது நகர்த்திப்பார்க்கின்ற சமூகம் என்றும் உண்மையை உள்ளபடியும் எழுதவும் செய்கின்றார் (…these cadjan fences are famous. It is said that the people of Jaffna spend much time of their time waiting for their neighbour to go out, so that they may shift the dividing fence a few inches on to his land). யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் வூல்ப்வ் ‘அரியதான’ தனது கண்ணன் தன்மையை (கன்னித்தன்மைக்கு ஆண்பால்..? நான் கண்டுபிடித்ததுதான்) முதன்முதலாக அங்கிருந்த ஒரு பேர்கர் (Burghar) பெண்ணிடம் இழக்கின்றார்.

வூல்ப்பிற்கு யாழ்ப்பாணம் ஒரு உவப்பான சூழ்நிலையைத் தரவில்லை. இறுக்கமான சூழலால் மட்டுமின்றி, யாழ்ப்பாணத்து உயர்தர மக்களுடன் வரும் எதிர்ப்புணவும், வூல்ப்பால் யாழை, இலங்கையில் தனக்குப் பிடித்தமான ஒரு இடமாக ஏற்றுக்கொள்ள முடியாது செய்கின்றது. இதை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி இன்னும் தெளிவாக தனது வார்த்தைகளில் முன்வைக்கின்றார்…My (Christopher Ondaatjee) own expression, judging from the long chapter on Jaffna in Wolf’s autiobiography, is that the friction was mainly with the best-educated people, not with the majority, the village cultivators and fisher people from the coast. Imperisalism granted on the feelings of the professional men, educated in English, much more than on those of the poor and unlettered– just as it did in imperial India…. This laid down the future aim of the colonial system of education in the sub continent: to create ‘a class of persons Indian in blood and colour, but English in opinions, in morals and in intellect”). யாழ்ச்சூழலில் இருந்த சாதியை மையமாக வைத்து வூல்ப்வ், ‘இரண்டு பிராமணர்கள்’ (The Two Brahmans) என்றொரு கதையை எழுதியிருக்கின்றார் (பிராமணர்கள் என்பதில் அவர் வெள்ளாளர்களையும அடக்குகின்றார் எனத்தான் நினைக்கின்றேன்). சாதியில் உயர்நிலையில் இருக்கும் இரண்டு பிராமணர்களான செல்லையாவும், சிற்றம்பலமும் எப்படி தமது சாதிகளிலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என்பதை இக்கதை சொல்கின்றது. செல்லையாவுக்க்கு மீன்பிடித் தொழிலில் ஆசை வந்து அதை இரகசியமாக ஒரு மீனவரிடம் இருந்து பழகுவது அவர் சார்ந்த சாதிக்குத் தெரியவர அவர் அச்சாதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும், சிற்றம்பலம் தனது வீட்டுக்கிணற்றை வெட்டித்தந்த ஒரு தாழ்த்தபட்டவருக்கு கருணையுடன் கூடக்காசு கொடுத்து அன்பு பாராட்டியதற்காக ஒதுக்கப்படுவதாகவும் இக்கதை விரித்துச்சொல்லுகின்றது. ஆனால் இப்படி தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கப்பட்ட இரு குடும்பத்தினரின் அடுத்த சந்ததியினர் (செல்லையாவின்) மகன் ஒருத்தரும், (சிற்றம்பலத்தின்) மகள் ஒருத்தியும் காதலிக்கும்போது கூட எப்படி அவர்களுக்கிடையில் சாதித்திமிர் மீண்டும் முளைத்தெழுகின்றது என்பதை வெளிப்படையாக வூல்ப்வ் அக்கதையில் குறிப்பிடுகின்றார் (Each family finally accuses the other of polluting the caste. “Fisher! Low-caste dog!” shouted Cittampalam. “Pariah! scaramed Chellaiya). இறுதியில் இச்சாதிய இறுக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற செல்லையாவின் மகன் ஊரைவிட்டே ஒடிப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகின்றது.

யாழில் பணிபுரிகின்ற காலங்களில் தற்காலிகமாய் சில மாதங்கள் மன்னாருக்கும் சென்று வூல்ப்வ் வேலைபார்க்கின்றார். சனநெருக்கடியற்ற மன்னார் வூல்ப்பிற்கு யாழ்ப்பாணத்தைவிட அதிகம் பிடிக்கின்றது. அங்கே முத்துக்குளிக்கின்ற மீனவர் சமூகங்களும், அரேபியர்களும் அவ்வளவு இறுக்கமான சாதிய அடுக்குநிலையில் இயங்கிக்கொண்டிருக்காததையும் வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். பிறகு வேலை இடமாற்றங்காரணமாய் கண்டியிலும், இறுதியாய் ஹம்பாந்தோட்டவிலும் வூல்ப்வ் பணிபுரிகின்றார். ஹம்பாந்தோட்டாவில் உதவி அரசாங்க அதிபராக (Assistant Government Agent) பணிபுரிவதால் அவர் விரும்பிய சில விடயங்களை -முக்கியமாய் புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பது- அவ்வூர் மக்களுக்காய்ச் செய்யமுடிகின்றது. ஒரு தமிழ்ப்பாடசாலையும் ஹம்பாந்தோட்டாவில் வூல்ப்வ் ஆரம்பித்துவைத்தார் என்ற குறிப்பும் வருகின்றது. கண்டியில் பணிபுரிகின்ற காலத்தில் - தூக்குத்தண்டைக்கு எதிரான கருத்துடையவராக வூல்ப்வ் பின்னாட்களில் இருந்தாலும்- வூல்ப்பின் அனுமதியுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஏழெட்டுப்பேர் தூக்கிலிடப்படுகின்றார்கள். அதேபோன்று பிரிட்டிஷகாரர்கள் ஒபியம் (போதை) பயிர்களை ஹம்பந்தோட்டாவில் பயிரிடும்போது எவ்வித எதிர்ப்பும் காட்டாது அதன் மூலம் வரும் வரியைச் சேகரித்து அரசாங்க வேலைகளுக்காய் வூல்பவ் செலவிடுகின்றார். இறுதியில் ஒரு சிங்கள விவசாயின் வீட்டை -ஒரு பிரச்சினையின் நிமித்தம்- தீ மூட்டச்சொல்லும் மேலிடத்தின் பணிப்புக்கு அடிபணியாததால் அவர் -ஒருவருட கட்டாய விடுமுறையில்- திருப்பி இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றார். அதற்கடுத்த வருடத்தில் (1912) வேர்ஜினியாவை வூல்ப்வ் இங்கிலாந்தில் திருமணம் செய்கின்றார். முதலிரண்டு முறைகள் வூல்ப்வ் propose செய்தும் மறுக்கின்ற வேர்ஜினியா, மூன்றாவது முறையாக இந்தச் ‘சதமில்லாத யூதரை’ (penniless Jew) திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றார். ஒரு வித மனப்பிறழ்வு நோயிற்கு அடிக்கடி ஆளாகும் வேர்ஜினியாவுக்கு -அவர் ஆற்றில் தற்கொலை செய்யும்வரை- தான் உண்மையாக இருந்தேன் என வூல்ப்வ் கூறிக்கொண்டாலும், வேர்ஜினியா உயிரோடு இருந்த காலங்களிலேயே வூல்ப்விற்கு, ரெக்கி (Trekkie) என்ற திருமணமான பெண்ணோடு உறவு இருந்திருக்கின்றது. அதேசமயம், சிறுபிராயத்தில் தனது உடன்பிறவாச்சகோதரர்களால் (half brothers) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேர்ஜினியாவுக்கும் ஆணுடான உறவு அவ்வளவு உவப்பானதாய் இருக்காததால், இடைப்பட்ட சில காலங்களில் அவரொரு லெஸ்பியனாகவும் இருந்திருக்கின்றார்.

1960களில், வூல்ப்வ் மீண்டும் இலங்கைக்கு, தனது ‘தோழி’ ரெக்கியோடு பயணிக்கின்றார். முன்பு தான் பணிபுரிந்த யாழ்ப்பாணம் உட்பட அனைத்து இடங்களையும் மீண்டும் பார்க்கின்றார். 1900களில் தான் பார்த்த யாழ்ப்பாணம் இப்போதும் அப்படியே மாறாதுதான் இருக்கின்றது என்று வூல்ப்வ் குறிப்பிடுகின்றார் (In Jaffna he felt the place had not changed much since his time and was told that the people there were very conservative. Even in 1960, Jaffna had a character distrinct from other towns). அதேபோன்று 1900 களிலேயே சிங்கள/தமிழ்/முஸ்லிம்/பேர்கர் மக்களுக்கு சுவிஸிலிருக்கும் ஒரு அரசாங்க அதிகார அமைப்பே சரிவரும் என்று ஒர் தெளிவான பார்வையோடு வூல்ப்வ் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் (அந்தக்காலகட்டத்தில் -1900-களில் எவ்வித தமிழ்- சிங்கள இனக்கலவரமும் தோன்றாததையும் நினைவில் கொள்ளவேண்டும்; ஆனால் கண்டியில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரங்கள நடந்ததை வூல்பவ் குறிப்பிடுகின்றார்). அதேயேதான் 1960 பயணித்தபோது, சிங்கள அரசியல்வாதியொருவரின் மேடைப்பேச்சை கேட்டபோது தனக்கு இப்படித்தோன்றியதாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார்: Woolf mentioned listening to one Sinhalese politician “screaming in a monotonous freenzy which carried me straight back to the days before the war when turned on the wireless and heard Hitler screaming through the microphone at the frenzied Nazis”.

வூல்ப்வ் எழுதிய இன்னொரு சிறுகதையான, ‘நிலவால் சொல்லப்பட்ட கதை’ (A Tale Told by Moonlight) ஐந்து உயர்தர வர்க்க ஆங்கிலேய ஆண்கள் ஒரு மாலைபொழுதில் இங்கிலாந்தில் ஒரு சொகுசான இடத்தில் இருந்துகொண்டு தாம் கீழைத்தேய நாடுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்து உரையாடுவதாய் அந்தக்கதை இருக்கின்றது. அதில் ஒரே ஒருவர் மட்டுமே இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பவர். அவர் அடிக்கடி தமது பேச்சில் தமிழ்-சிங்களச் சொற்றொடர்களைச் சாதாரணமாய் உபயோகித்துவிடுவார். பிறகு மற்ற நண்பர்கள் நீ என்ன சொல்கின்றாய் என்று விளக்கந்தெரியாது வினாவுகின்றபோது அந்தநபர் விரித்துச் சொல்லத்தொடங்கிவிடுவார். அதில் ‘இராமேஸ்வரத்திலிந்து காசி வரை’ என்ற தமிழ்ச்சொற்றொடர் கூட வரும் (இந்தியாவை முழுதும் அறிந்தவர் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்ற பொழிப்புரையும் அந்தக்கதையில் கொடுக்கப்படும்). அதில் ‘வேசி’, ‘ஐயோ’ போன்ற சொற்கள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதையின் ஒரு பகுதியாய், கொழும்பில் சிவப்பு விளக்கு ஏரியாவிலிருக்கும் ஒரு பெண்ணில் மையல் கொள்ளும் ஒரு வெள்ளையர், அந்தப்பெண்ணை அந்தப் பகுதியிலிருந்து விடுவித்து ஆங்கிலமும், மேலைக்கலாச்சாரமும் சொல்லிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்வார். என்ன தான் சொல்லிக்கொடுத்தாலும், தன்னைப்போல ஒரு அறிவுஜீவியாக இருந்து உரையாடும் ‘வரம்’ அந்தப்பெண்ணுக்கு கைவரவில்லை என்ற அலுப்பில் பின்னர் அந்தப்பெண்ணைக் கைவிட்டு இங்கிலாந்திற்கு அந்த வெள்ளையர் போய்விடுகின்றார். அவர் இங்கிலாந்து போன இரண்டாவது நாளில் Celestiinahami ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கின்றார். ஆனால் இறக்கும்போதுகூட அந்தப் பரிதாபமான பெண், ‘பிங்க் கலர் ஸ்கேர்ட்டும், வெள்ளை நிற ஸ்ரொக்கிங்ஸும், சப்பாத்தும்’ அணிந்தபடிதான் (மேற்கத்தைய கலாசார அடையாளங்களுடன்) தற்கொலை செய்திருப்பார். இங்கே, இப்படி வெள்ளையர்கள் தங்கள் (உடல்?)விருப்புக்கு துணைகளாக்கும் பெண்களை, பின்னாட்களில் வெள்ளையர்கள் வாழும் மேற்குச்சமூகம் இப்பெண்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், அதேசமயம் இப்படி வெள்ளையர்களை மணப்பதால் அல்லது அவர்களோடு திரிவதால், மீண்டும் இந்தப்பெண்களை இவர்கள் சார்ந்திருந்த சமூகம் இவர்களை உள்வாங்க மறுக்குகின்ற அவலத்தையும் நாம் நினைவில் இருத்திக்கொள்ளலாம். லியனார்ட் வூல்ப்வ், பாப்லோ நெருடா போன்றவர்களாவது ஒருவித பாவமன்னிப்புப்போல தாங்கள் கீழைத்தேயங்களில் –தமது அதிகாரத்தைப்பாவித்து– சிதைத்த பெண்களைப்பற்றியாவது வெளிப்படையாகக் குறிப்பிடும்போது ‘அட அறுவாங்கள் இதையாவது சொன்னார்களே’ என்று கேட்டுக்கொள்ளமுடிகின்ற அதேசமயம், சத்தமில்லாது எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு ஆனந்தசயனம் கொள்ளும் மற்றக்கனவான்களின் கல்லறைகளைத் தட்டி எழுப்பியா நாம் அவர்களை மறுவிசாரணை செய்யமுடியும்?

இந்நூலில், வூல்ப்வ் இருந்த இடங்கள் பயணித்த பாதைகள் ஊடாக கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிப்பதுடன், இன்றைய ஈழச்சூழ்நிலை குறித்து தனது குறிப்புக்களை எழுதிச்செல்வது ஒரு நூற்றாண்டுக்கு முன்பான பழைய இலங்கையை இன்றைய ஈழத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பை வாசகருக்கு ஒண்டாஜ்ஜி வழங்குகின்றார். யாழ்ப்பாணத்தில் வூல்ப்வ் பணி புரிந்த, தங்கியிருந்த அனேக இடங்கள் போரின் நிமித்தம் இன்று சிதைவுற்ற இட்ங்களாய், அடையாளங்காணமுடியாத பகுதிகளாய், கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான பிரதேசங்களாய் இருப்பதை கிறிஸ்ரோபர் படங்களாலும் குறிப்புகளாலும் இந்நூலில் நமக்கு ஆவணப்படுத்துகின்றார். யாழ், மன்னர் உட்பட நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கும் தான் போனது பற்றி ஒண்டாஜ்ஜி விரிவாக எழுதியதோடு ஏ9 (A9) பாதையினூடாக பயணித்தபோது கண்ட போரின் வடுக்களையும் பதிவு செய்திருக்கின்றார் (ஆனையிறவில் சிதைவுற்றிருக்கும் ராங் பற்றிய (tank) குறிப்புக்கூட வருகின்றது). ஒரளவு அரசாங்கச்சார்புச் செய்திகளைத்தான் அதிக இடங்களில் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் என்றபோதும், தான் பார்த்த சிங்கள, தமிழ் மக்களிடையே அவ்வளவு வித்தியாசமோ, வெறுப்போ தெரியவில்லையெனவும். ஆனால் இலங்கை அரசாங்கமும், சிறிலங்காப் படைகளும், விடுதலைப்புலிகளுந்தான் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்று தான் விளங்கிக்கொண்டதை நூலின் இறுதியில் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார்.

யாழ் கச்சேரியின் சிதைவடைந்த நிலையைப் பற்றிக்கூறும்போது, எனக்கும் சிறுவயதில் அப்பா யாழ் கச்சேரியில் பணிபுரிந்த காலங்களில் அவரோடு சில தடவைகள் கச்சேரிக்குப் போன ஞாபகங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. 95 000 மேற்பட்ட புத்தகங்களும், மீண்டும் பெறவே முடியாத அரிய வரலாற்று ஆவணங்களும் யாழ் நூலகத்தோடு அழிக்கப்பட்ட வரலாற்றையே -இன்றைய உக்கிரமான போர்க்காலம்- மிகச்சின்ன விடயமாக்கிக்கொண்டிருக்கும்போது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகள் கூட ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்ப்பது போன்ற பார்வையை தருவது வியப்பில்லைத்தானே.

ஆரம்பத்தில் தான் ஒரு ஏகாதிபத்தியவாதியாக -தன்னையறிமால் இருந்திருந்தாலும்- பின்னாட்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்ததாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். இங்கிலாந்தில் தான் அமைத்த Bloomsbury group ஊடாக பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்கத்துக்கு எதிராக வூல்ப்வைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். வூல்ப்வ் எழுதிய குறிப்புகளை அவரெழுதிய காலத்தில் வைத்தே பார்க்கவேண்டும் என்றாலும், பல இடங்களில் வூல்பவ் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருப்பதை நாம் மறைத்துக்கொண்டு உரையாடியவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அழிக்கப்பட்ட சிங்களக்கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய வூல்ப்பின் நாவலான, The Village in the Jungle காலனியாதிக்கெதிரான ஒரு புதினமாய் இன்று பல விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது. அநேக காலனியாதிக்கவாதிகள் போல சாதி, தாழ்த்தப்பட்டவர்களின் அவலம் போன்ற விடயங்களை, தங்களுக்கு அவசியமான விடயங்களல்ல எனப்புறந்தள்ளாது இவ்வாறான விடயங்களை கவனத்துடன் எடுத்துக்கொண்ட வூல்ப்வ் ஒதுக்கப்படவேண்டிய ஒரு காலனியாதிக்கவாதியும் அல்ல. முக்கியமாய், ஹம்பாந்தோட்டாவில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணொருவர் ஒரு வழக்கை வூல்ப்வ் முன்னிலையில் கொண்டுவருகின்றார். தாழ்த்தப்பட்ட பெண்கள், மார்பைத் தொடும் ஒரு சின்னத்துணி மட்டுமே அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், இரவிக்கை (blouse) போட தனக்கு அனுமதி தருமாறு அப்பெண் கேட்கின்றார். எனென்றால் அரிசி போன்றவை இடிக்கும்போது இரவிக்கை போடாதிருப்பதன் அசெளகரியங்களை அப்பெண் முன்வைக்கின்றார். வூல்ப்வ் அவ்வ்வூர்களின் ‘கலாசாரம்/மரபுகள்’ மீது தான் இடையீடு செய்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றபோதும், இப்பெண் விரும்பினால் அவர் அவ்வாறு இரவிக்கை போட அனுமதிக்கவேண்டும் என அவ்வூரின் தலைவரொருவருக்கு கட்டளையிடுகின்றார்.

இப்போது மீண்டும் நாம் காலனியாதிக்கம் என்ற புள்ளிக்கு வருவோம். காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச்சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்.

Photos: From the book ‘Woolf in Ceylon’.

(Thami: 4 ur dream fulfilled…)

August 17, 2007

எனக்கும் அ.முத்துலிங்கத்தைப் பிடிக்கும்தான்….எப்போது என்றால்….?

Filed under: அ.முத்துலிங்கம், ஜெயமோகன் — டிசே தமிழன் @ 11:49 am

நீங்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தீவிர வாசகர்கள் என்றால் நேரடியாக ஜெயமோகனின் குறிப்பை வாசிக்கவும் (தயவு செய்து கொஞ்சம் மவுஸைக் கீழே கொண்டு போகவும்) . மற்றவர்கள் விரும்பினால் இவனென்ன -வழக்கம்போல- அலட்டுகின்றான் என்று பார்க்கவிரும்பின் என்னுடைய குறிப்புக்களையும் வாசித்துவிட்டுச் செல்லவும்.)

ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் தொகுப்பொன்றை முன்வைத்து எழுதிய உரையொன்றை கீழே பதிவிலிடுகின்றேன். ஷோபா சக்தி போன்ற படைப்பாளிகளே, ‘திரு.மூடுலிங்க’ என்று அ.முத்துலிங்கத்தின் ‘பாதிப்பால்’ அலசிப் பிழிந்து கதையெழுதும்போது என்னைப்போன்றவர்கள் அ.முத்துலிங்கத்தை வாசிக்காவிட்டால், தமிழ் கூறும் நல்லுலகம் வாசகர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்காது என்பதும் நன்கு தெரியும்..

‘தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர்.’ என்று ஜெயமோகன் சொல்வதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. நானும், அ.முத்துலிங்கத்தின் கதைகளை/கட்டுரைகளை ‘சுவாரசியத்துடன்’ வாசிப்பதை மறைக்க வேண்டிய அவசியமுமில்லை.

ஜெயமோகன், எழுதிய இந்தப்பதிவு குறித்து சில விடயங்கள் எழுத விருப்பு உண்டு. ஆனால் ஏற்கனவே சில இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக்கேள்வி கேட்டதற்கே, உனக்கென்ன தெரியுமென்று எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்துத் திட்டியவர்கள்தான் இந்தக்கணத்தில் பயமுறுத்துகின்றார்கள் :-). ஆனால் அது கூடப்பரவாயில்லை; ‘நான் நாய்தான் குரைக்கத்தான் செய்வேன்’ என்று அந்தப் பல்லக்குத்தூக்கிகளுக்கு எதிராய் எழுதியதை -நண்பரொருவர் எதிர்ப்பார்க்காமல்/கேட்காமல்- அச்சுப்பிரதியொன்றில் எடுத்துப்போட்டதுதான் இன்னும் கூட வினையாகிவிட்டது.. எழுதப்பட்டது எந்தச்சந்தர்ப்பம் அல்லது அந்தக்கவிதை எதைக் கூறவருகின்றது என்றறியாமல் யாரோவொரு நாய்ச்சித்தர் என்னோடு (?) அச்சுப்பிரதியொன்றில் சொறிந்துகொண்டிருக்கின்றார். அவரை நோக்கி நான் மீண்டு வள்ளெனப் பாய்வதா அல்லது வாலையாட்டியபடி பாதம் பணிந்து அவர் கால் நக்குவதா என்று அவதியில் தற்சமயம் நிற்கின்றேன் (இதைவிட நீண்டகாலமாய் ஏன் அஸினின் படமொன்றும் வரவில்லை என்ற கவலையும் உண்டு) ஆகவே, இப்போது ஜெயமோகனின் பதிவை அலசி ஆராய்ந்து நீண்ட பதிவெழுதும் எண்ணமிலை என்க.

சின்னதாய் சில குறிப்புகள் மட்டும்:
(1) பதிவில் வரும் உரையாடலில் ஜெமோ அறிந்தோ அறியாமலோ ஒரு உண்மையைக் கூறிவிடுகின்றார்…

”படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்… ”என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ”யார் சார் இவரு?” என்றார்.

”இலங்கைக்காரர் சார்”

நண்பரால் நம்ப முடியவில்லை”அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க

ஆக, இங்கே அ.முவை வாசித்த -அ.மு எந்த நாட்டுக்காரர்- என்றறியாத சக பணியாளருக்கு வியப்பு வருகின்றது….அதாவது 25 வருடங்களாய் போர் தீவிரமாய் நடக்கின்றதாய் சொல்லப்படும் நாட்டிலிருந்து வந்தவரின் ஒரு முழுத்தொகுப்பிலிருந்து ஒரு சிறுகுறிப்புக்கூட போரின் வடுவை வாசிப்பவருக்கு ஏற்படுததவில்லை என்றால், அ.மு எவரை அடையாளப்படுத்துகின்றார் என்ற கேள்வி வருகின்றது.
இதுவே முக்கிய புள்ளி. இங்கிருந்து தான் அ.முவின் படைப்புகளின் எழுச்சியும் (பரவலாய் பலரைப் போய்ச் சென்றடைவதும்), வீழ்ச்சியும் ஆரமபிக்கின்றது.

போருக்குள் வாழ்ந்திருக்கவேண்டும் என்றுதானில்லை. புலம்பெயர்ந்து இருக்கும்போதே வானொலி, பத்திரிகை, இணையம் இன்னும் எத்தனையோ ஊடகங்களால் நாம் எம்மண்ணின் நிகழ்வுகளோடு தொடர்புபட்டிருக்கின்றோமே… அவை எதுவும் கூட அ.முவை பாதிக்கவில்லையா? அட, போர் நடக்கும் ஈழத்தில் வாழாத எத்தனையோ தமிழகத்து நண்பர்கள்கூட தமக்கான புரிதல்களுடன் அக்கறையுடன் ஈழ அரசியல் குறித்து எத்த்னை குறிப்புகள் எழுதிக்கொண்டிருக்கின்றனரே? இப்படியொரு தொகுப்பில் போர் நடைபெற்ற நாட்டிலிருந்து நீங்கள் வந்தீர்கள் என்பதை சிறுகுறிப்பில் கூட வாசகருக்கு உணர்த்தாமல் இருப்பது அவமானம் அல்லவா அ.மு?

(2) ஜெயமோகன் இந்தப்பதிவில் அ.முத்துலிஙகம் எந்த சாதி என்பதைக் குறிப்பிட்டுகின்றார். இதற்கு முன், அ.முத்துலிஙகம் தான் இன்ன சாதியென்று எங்கையாவது தனது எழுத்தில்/நேர்காணலில் குறிப்பிட்டிருந்தாரா? இதையேன் அ.முவின் பின்புலம் அறியவிரும்பாதா/ இதுவரை அறியாத ஒரு வாச்கருக்கு வெளிப்படையாக ஜெமோ முன்வைக்கவேண்டும்? ஒரு எளிய கேள்வியாக, ‘இப்படிச் சாதியை வெளிப்படையாகக் கூறுவதில், உயர்சாதியிலிருந்து ஒரு நல்லதொரு படைப்பாளி வந்திருக்கின்றார் என்று பூடகமாய் வெளிப்படுத்தும் அரசியல் தான்’ இது என்று நான் சொன்னால் என்ன எதிர்வினையாக ஜெமோவினது இருக்கும்?

சரி, அ.மு 30 வருடங்களுக்கு முன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டார், அவரால் ஈழ அரசியல் குறித்து பேசக் கஷ்டந்தான் என்று சும்மா ஒரு சாட்டுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு உயர்சாதி (’Quote noted:’வேளாளராக’) ஈழத்திலிருந்த அ.மு தனது படைப்புக்களில் ஈழத்தில் பஞ்சமர்கள் ஒடுக்கப்பட்டதை எங்கையாவது வெளிப்படையாக எழுதியிருக்கின்றாரா? அந்த ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கை முறை குறித்து எங்கேனும் கரிசனையாக பதிவுசெய்திருக்கின்றாரா? எங்களைப்போன்ற சந்ததிகளுக்குத்தான் போர் வ்ந்து சாதிப்போராட்டங்கள் குறித்து அறியமுடியவில்லை என்றாவது கூறமுடியுமென்றாலும், பஞ்சமருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடைபெற்ற காலங்களில் அ.மு ஊரிலிருந்த போதும் ஏன் அதைத் தனது படைப்புகளில் இன்றுவரை வெளிப்படுத்தாது மவுனஞ்சாதித்துக்கொண்டிருக்கின்றார்? எழுத்தாளருக்கென்று இருக்கவேண்டிய கொஞ்ச நஞ்ச அறத்தையாவது அ.முத்துலிங்கத்திடம் என்னைப்போன்றோர் எதிர்பார்ப்பது தப்பா? அது குறித்துக்கூட ஜெயமோகன், நீங்கள் உங்கள் வாயை சிப் (ஜிப்) போட்டு இழுத்துமூடிவிட்டு ஆகா ஓகோவென்று பாராட்டிக்கொண்டிருப்பது எத்தகைய அரசியல்?

(3) ஜெயமோகன், அ.முத்துலிங்கத்தின் விமர்சனப்பார்வைகள் கூட ‘மிகக்கறாரானவை’ என்கின்றார். என்னைப்பொறுத்தவரை, எல்லோருக்கும் நல்லவராய் இருந்து எல்லா இலக்கிய இதழ்களுக்கும் அ.முத்துலிஙக்ம் படைப்புக்கள் அனுப்புவதுபோலத்தான், அவரது அநேக விமர்சனங்களும் நிறையப் பாராட்டிவிட்டு எளிமையாக நின்றுவிடும். உதாரணத்திற்கு இதைப்பாருங்கள்.

திருவள்ளுவர் எத்தனை நூல்கள் எழுதினார். ஒன்றுதான், அது திருக்குறள். கணியன் பூங்குன்றனார் 1800 வருடங்களுக்கு முன்னர் படைத்த ஒரு கவிதைக்காக இன்றுவரை போற்றப்படுகிறார். ஹார்ப்பர் லீ தன் வாழ்நாளில் எழுதிய புகழ் பெற்ற ஒரேயொரு நாவல் To Kill a Mocking Bird. பிரிட்டிஷ் இளம் பெண் Emily Bronte படைத்த வாழ்நாள் சாதனை இலக்கியம் Wuthering Heights.

இந்த வகையில் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூல் அடங்கும். ஒரு வாழ்வுக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு தேசத்துக்கு ஒரு நூல் போதுமானது. ஒரு வரலாற்றுக்கு ஒரு நூல் போதுமானது. ஓர் இலக்கியத்துக்கு ஒரு நூல் போதுமானது.

பரீட்சைத்தாள்களில் கேள்வி வருவதுபோல, ஜெமோ இந்தக் கட்டுரையிலுள்ள ‘கறாரான விமர்சனம்’ எதுவென்பதை எங்களுக்காய் கட்டுடைப்பாரா?

(4) அ.முத்துலிஙக்ம், இங்குள்ள மற்றமொழி எழுத்தாளர்களோடு சந்தித்ததை காலச்சுவட்டிலோ, உயிர்மையிலோ தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்திருந்தார். நானும் அதை விருப்புடன் வாசித்து, சிலாகித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன் (இங்கிருந்து தோழியொருவர், தனக்கும் தொடர்ந்து செலவுக்கு பணம் வந்து, அ.முத்துலிங்கம் போல நேரங்கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச்செய்வேன், நீயேன் இப்படி வியக்கின்றாய் என்பார்.)

அதுவல்ல விசயம், அ.மு, மேரி ஆன் மோகன்ராஜ் பற்றி எழுதிய குறிப்புத்தான் அ.முத்துலிங்கம் எழுதிய மற்றக்குறிப்புகள் குறித்து என்னை யோசிக்க வைத்தது. . மிக எளிமையாக மேரியின் கதைகளைப் புரிந்துகொண்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். மேரியின் படைப்புக்களின் ஆழங்களுக்குச் செல்வதை விடுத்து, அவரை எப்படி நேர்கண்டேன், என்ன மேரி அப்போது செய்துகொண்டிருந்தார் என்றெழுதுவதில்தான் அதிக அக்கறையைத்தான் அ.மு. அதில் எடுத்திருந்தார்.

அந்த எரிச்சலில்தான், அந்தப்பதிவு ‘பதிவு’களில் வந்தபோது, எற்கனவே வலைப்பதிவுகளில் எழுதியிருந்த மேரியின் படைப்பை நான் ‘பதிவுகள்’ இணையத்தளத்துக்கு அனுப்பியிருந்தேன். ஆக, ‘கறாரான விமர்சனத்தை முத்துலிஙகம் செய்கின்றார்’ என்று பெருமிதமாய் கூறும் ஜெமோ, -நீங்களும், அமுவும் மாறி மாறி முதுகுசொறியும் நட்புக்காகத்தான்- இப்படி பெருந்தன்மையாய்ப் பாராட்டியிருக்கின்றீர்கள் என்று நான் கூறினால் கோபப்படமாட்டீர்கள்தானே?

எப்படி சிறுகதைகள் இருக்கவேண்டும் என்று ‘பதிவு’களில் எங்களுக்கு ஜெயமோகன் வகுப்பு எடுத்ததுமாதிரி, விமர்சனம் எழுதுவது எப்படியென இப்போது வகுப்பு எடுக்க - ‘நான் கடவுளில்’ ஜெ.மோ பிஸியாக இருப்பதால்- அவருக்கு நேரம் இருக்காது என நினைக்கின்றேன். (இதே சமயம் ஆரம்பத்தில் பாவனாவை நடிக்க வைக்க இருந்த பாலாவையும், பாவனாவை படத்தின் இடைநடுவில் விலத்தியபோது அதற்கு- பாவனாவின் தீவிர இரசிகர்கள்- மனம் புண்படும் என்று எதிர்ப்புக்குரல் சிறிதும் கொடுக்காத ஜெ.மோவையும் கண்டிக்கின்றேன்).

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

-ஜெயமோகன்

என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே படிக்க ஆரம்பித்துவிட்டார்.

”சார் படிச்சுட்டு குடுத்திடறேனே” என்றார்.

எனக்கு பயம். நான் அதைப்பற்றி படித்துவிட்டு பேசவேண்டியிருக்கிறது. நண்பருக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது.

ஏற்கனவே ஒருமுறை இந்த நண்பர் என் மேஜைமேல் இருந்த ஒரு நூலை எடுத்துப் பார்த்துவிட்டு ”இது எப்டி சார் வாராவாரம் வருமா?” என்று கேட்டவர்.

”இல்லீங்க, இது ஒண்ணுதான் வரும்” என்றேன், எப்படி விளக்குவது என்று தெரியாமல்.

”மாசாமாசமா சார்?”.

நான் பொறுமை காத்து ”சார் இது இப்டி ஒண்ணுதான் சார் …தொடர்ச்சியா வராது”என்றேன்.

”நிறுத்திட்டானா?”என்றபடி அதைப்புரட்டிப்படித்து ”எண்பது ரூபாயா? அச்சடிச்ச தாளுக்கா? என்னசார் அநியாயமா இருக்கு!” என்றார்.

”ஏன் சார்?” என்று பரிதாபமாகக் கேட்டேன்

‘சார் விகடனேகூட பத்து ரூபாதானே? எம்பது ரூபா போட்டா எவன் வாங்குவான்? அதான் நின்னிருச்சு” என்றார்.

நண்பர் நன்றாக படித்து நல்ல பதவியில் இருப்பவர். ஆனால் அவர் பாடநூல்கள், இதழ்கள் தவிர நூல்கள் என ஒரு விஷயமும் உண்டு என்பதையே அறிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நண்பர் புத்தகத்தை இரவல் கேட்கிறார். ஆனால் அவர் ஒன்றை நினைத்தால் நடத்தாமல் விடமாட்டார். என்னால் எதையும் எவருக்கும் மறுக்கவும் முடியாது. கொண்டுபோய்விட்டார்.

நான்காம் நாள் திருப்பிக் கொண்டுவந்தார். சரிதான், இரும்புக்கடலை கடித்து பல்வீக்கம் என நான் நினைத்தேன்.”படிச்சீகளா சார்?”என்றேன்.

”படிச்சிட்டேன் சார். சூப்பர். சிரிச்சு சிரிச்சு மண்டைக்குள்ள ஒருமாதிரி டிரா·பிக் ஜாம் ஆயிட்டேன் சார்… ”என்றபடி சிரிக்க ஆரம்பித்தார். ”யார் சார் இவரு?” என்றார்.

”இலங்கைக்காரர் சார்”

நண்பரால் நம்ப முடியவில்லை”அப்டியா சார்? அவங்களுக்கு அங்க யுத்தம் வெட்டு குத்துன்னு ஆயிரம் பிரச்சினைகள். எப்டி சார் சிரிப்பா எழுதறாங்க?”.

நான் ”கஷ்டம் இருந்தாத்தானே சார் நல்லா சிரிப்பு வருது?” என்றேன்.

”ஆமா சார். எங்கம்மா சொல்லுவா, எங்கப்பா செத்துப்போய் பிள்ளைகளோட தனியா நின்னப்போ அழுது அழுது தீந்துபோய் ஒருநாள் ராத்திரி சிரிச்சுட்டாளாம். அன்னையோட கஷ்டம் போச்சுடான்னு சொல்வாள்.வாஸ்தவம்”என்றார் ”என்ன சார் வேலபார்த்தார்?”

”இவரு பெரிய அதிகாரியா வேல பார்த்தார் சார்…”

”சும்மாருங்க சார்,வெளையாடாதீங்க…”

”இல்ல சார் நிஜம்மாவே பெரிய அதிகாரிதான்”

”சார் எனக்கு முப்பதுவருச சர்வீஸ். நான் இன்னை தேதிவரை சிரிக்கிற மூஞ்சியோட ஒரு அதிகாரிய பாத்தது இல்ல…நிஜம்மாவே அதிகாரியா, இல்ல அதிகாரி மா….திரியா?”

நான் யோசித்து ”ஐநாவிலே இருந்தார்…” என்றேன்.

”அது சரி, ஐநாவே நம்ம சுப்பிரமணியம் சாமி மாதிரி ஒரு ஜோக்குதான் சார்”. என்றபின் ”சார் நான் இதைப் படிச்சிட்டு குடுக்கறேன்”என்று நான் அதிர்ச்சியில் வாய் திறக்கும் முன் கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகர’த்துடன் நடந்து போனார்

நண்பர் மிக பரபரப்பான ஆள். விவசாயம் உண்டு. ஆகவே இரவு பதினொரு மணிக்குமேல் பன்னிரண்டுமணிவரைத்தான் படிக்க நேரம் கிடைக்கும். அந்நேரத்தில் தூங்காமல் உட்கார்ந்து படித்தேன் என்றார். அதன் பின் என் மனைவியும் அதேபோல நள்ளிரவில் விளக்கைப் போட்டுக்கொண்டு இதைப்படிப்பதைக் கண்டேன். இவ்வளவுக்கும் இது ஒரு கதைத்தொகுப்பு அல்ல. இது கட்டுரைத்தொகுப்பு.

* ஒரு உயர் அதிகாரி. சிறு வயதில் மாணவராக இருந்த போது கைலாசபதியால் தூண்டுதல் அடையப்பெற்று அக்கா என்று ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட்டார். அதன் பெரிய வேலைக்கு போய் விட்டார். ஈழ இனப்பிரச்சினை காரணமாக வெளியேறி சியரா லியோன் சென்றார். அங்கிருந்து ஐநா அதிகாரியாக ஆப்ரிக்கா மேற்காசியா நாடுகளில் வேலைக்குச் சென்றார். அந்நாட்களில் பல வருட உழைப்பின் விளைவாக கணிப்பொறி மென்பொருளை நிர்வாக இயலுக்கு பயன்படுத்துவது பற்றி தடிமனான மூன்று பகுதிகள் கோண்ட ஒரு நூலைஎ ழுதினார். அது புகழ் பெற்ற மேலைநாட்டு பதிப்பகம் ஒன்றால் வெளியிடப்பட்டது. நூல் வெளிவந்த சில மாதங்களில் அந்த மென்பொருளே இல்லாமலாயிற்று

மனம் சோர்ந்திருந்த நாளில் இலங்கை சென்றபோது அங்கெ ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒருவர் அக்கா தொகுதியின் ஒரு கதையைக் குறிப்பிடுவதைக் கேட்டார். முப்பது வருடமாகியும் இலக்கியம் காலாவதியாகவில்லை! நான் கூட அக்கா தொகுதி பற்றி அப்போது எழுதியிருக்கிறேன்.

அதன்பின்னர்தான் * இலக்கியத்துக்கு வந்தார். இனி தன் வாழ்நாள் முழுக்க இலக்கியத்துக்கே என எண்ணும் * இலக்கிய சர்ச்சைகளுக்குக் கூட ஒதுக்க நேரம் இல்லை என்று எண்ணுபவர். இன்று தமிழில் மிக விரும்பி படிக்கப்படும் முக்கியமான எழுத்தாளர். இத்தனை நாள் வரலாற்றில் எந்த ஈழ எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இத்தகைய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றதில்லை

தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர். அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால் அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தவேண்டும். கி.ராஜநாராயணன்,நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தமாக இவர்களை சுவாரஸியமான எழுத்தாளர்கள் என்று சொல்கிறோம். நீண்டநாளாக தமிழ்ச் சிற்றிதழ் உலகில் சுவாரஸியம் என்பது இலக்கியத்துக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் இருந்தது. இலக்கியம் என்றால் சுவாரஸியமே இல்லாமல் வரண்டுதான் இருக்கும் என்ற மனப்பிம்பம். தமிழ் சிற்றிதழ்களுக்கு அழகியல் ரீதியாக இரண்டு முகங்கள்தான் இருந்தன. ஒன்று இயல்புவாதம்[ நாச்சுரலிசம்] இன்னொன்று அதிலிருந்து சற்றே முன்னகர்ந்த நவீனத்துவம்.

அன்று ஓங்கி நம் பண்பாட்டையே நிறைத்திருந்த வணிக இலக்கியத்துக்கு எதிரான ஒரு பண்பாட்டு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் சிற்றிதழ் உலகம் என்பதைக் காணலாம். ஒருபக்கம் அகிலன்,நா.பார்த்த சாரதி, சாண்டில்யன் என பெரும் பட்டியல். லட்சக்கணக்காக விற்கும் இதழ்கள். லட்சக்கணக்கான வாசகர்வட்டம். பணம் புகழ் . அதற்கு எதிராக இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் தமிழ் நவீன இலக்கியம் உருவானது.

அந்த வணிக எழுத்து சுவாரசியத்தையே அடிப்படையாகக் கொண்டது. மிதமிஞ்சிய கற்பனாவாதம் மூலமும் செயற்கையான உத்திகள் மூலமும் சுவாரஸியத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது அது. ஆகவே நவீன இலக்கியம் சுவாரஸியத்துக்கு எதிராக ஆகியது. வாழ்க்கை அப்படி கனவுக்கொந்தளிப்பாகவும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்ததாகவும் இல்லை என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் வலுவாக உருவாயிற்று.

வாழ்க்கை சலிப்பூட்டுவது. சாதாரணமான விஷயங்களால் ஆனது. அதை அப்படியே சொல்ல முயல்வதுதான் இலக்கியம் என்று எண்ணினார்கள். இந்த நோக்கே இயல்புவாதத்தை உருவாக்கியது. நீல பத்மநாபன், ஆ.மாதவன் ஆ.மாதவன் போன்றவர்களை இதற்கு சிறந்த முன்னுதாரணமாகச் சொல்லலாம். இங்கே நவீனத்துவம் உருவானபோது இயல்புவாதத்தின் நீட்சியாக அது இருந்தது. இயல்பான அன்றாடவாழ்க்கையின் தளத்தில் வைத்து வாழ்க்கையின் சாரமின்மையையும் மனிதவாழ்க்கையின் தனிமையையும் அது பேசியது.இப்போக்கின் முன்னுதாரணமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள்.

நவீனத்துவம் பின்னகர்ந்த காலகட்டத்தில் இலக்கியம் தன்னை உருமாற்றிக் கொண்டபோது மீண்டும் கற்பனைவீச்சுக்கும், வாசிப்புச் சுவாரஸியத்துக்கும் முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இறுக்கமான வடிவமுள்ள படைப்புக்குப் பதிலாக நெகிழ்வான ஆனால் சிக்கலான அமைப்புள்ள படைப்புகள் வெளிவந்தன. அ.முத்துலிங்கம் அந்த மாற்றத்தை முன்னெடுத்த படைப்பாளி.

ஓர் எழுத்தின் ஆழம் என்பது அதன் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், கருத்துச் சரடு ஆகியவற்றில் உருவாகும் நுட்பமான மோதலின் விளைவாக உருவாவது. ஆழம் என்பது எப்போதும் ஒரு முரணியக்கமாகவே உள்ளது. ஆழத்தை நிராகரிக்கும் இலக்கியப் படைப்பு இருக்க முடியாது. ஆழம் என்று ஏதுமில்லை, மேல்தளம் மட்டுமே உள்ளது என்று வாதிடும் பின்நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் இது பொருந்தும். ஒரு எழுத்தை இலக்கியமாக்குவது அதன் ஆழமேயாகும்.

ஆனால் இன்றைய ‘நவீனத்துவத்துக்கு பிறகான எழுத்து’ என்பது எப்படியோ சுவாரஸியத்தை கட்டாயமாக்குகிறது. பிடிவாதமாக அதற்கு எதிரான நிலை எடுக்கும் சில படைப்புகள் உண்டு. அவை தங்களை காவியமாகவோ ஆய்வாகவோ ஆவணத்தொகையாகவோ உருவகம்செய்துகொள்ளும் படைப்புகள். ஆனால் இன்றைய சூழல் என்பது சுவாரஸியம் தேவை என்று வலியுறுத்துகிறது.

முதல் காரணம் இன்றைய எழுத்துப்பெருக்கம். நவீனத்துவம் ஆண்ட காலத்தில் தமிழில் வருடத்துக்கு நாநூறு நூல்கள் வெளிவந்தன. இப்போது பன்னிரண்டாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. இதைத்தவிர இணையத்தில் வெளியாகும் ஆயிரக்கணக்கான பக்கங்கள். இந்த பெரும்பரப்பில் வாசகனை தன்னிடம் அழைக்கும் பொறுப்பு எழுத்துக்கு வந்துவிடுகிறது. தன்னை கவனிக்கச் செய்யவும் வாசிக்க வைக்கவும் அது முயல்கிறது. ஆகவே சுவாரஸியமான மேல்தளம் தேவையாகிறது. ஆய்வுக்கட்டுரைகள் செய்திக்கட்டுரைகள் எல்லாமே சுவாரஸியமாக எழுதப்பட்டாக வேண்டுமென்ற நிலை படிப்படியாக உலகமெங்கும் உருவாகி வருகிறது.

இந்த இயல்பை இன்றைய எழுத்துக்களில் நாம் சாதாரணமாகக் காணலாம்.லெஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களின் எழுத்து இந்த சுவாரஸிய அம்சத்துக்கு முக்கியத்துவமளிப்பதைக் காணலாம்.

சுவாரஸியம் என்பது என்ன? எப்படி உருவாகிறது அது? எதற்காக நாம் சிரிக்கிறோம்?திரைப்பட நண்பர் ஒருவர் சொன்னார், நமது கதாநாயக நடிகர்களை தெலுங்கிலும் கன்னடத்திலும் கொண்டு செல்ல முடியும். நகைச்சுவை நடிகர்களை தமிழை விட்டு வெளியே எடுக்க முடியாது. காரணம் அவர்கள் மண்ணுடன் கலந்தவர்கள் என.

சுவாரஸியம் என்பது ஒரு பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. ஒரு பண்பாட்டின் உணர்ச்சிகரமான ஈடுபாடுகள், வெறுப்புகள், இடக்கரடக்கல்கள் ஆகியவற்றை அறிந்த ஒருவரால்தான் அப்பண்பாட்டின் நகைச்சுவையை ரசிக்க முடியும். நகைச்சுவை என்பது இப்படிப்பட்ட ‘பண்பாட்டு ஒழுங்குமுறைகள்’ மூலம் அன்றாட வாழ்க்கையில் உருவாகும் அபத்தத்தை சுட்டிக்காட்டுவதன் மூலமே நம்மைச் சிரிக்க வைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணமாக இந்நூலில் உள்ள அக்காவின் சங்கீத சி¨க்ஷ என்ற கட்டுரையைச் சுட்டிக்காட்டலாம். கட்டுப்பெட்டியான யாழ்ப்பாணத்து வேளாளச் சூழலை நம் மனத்தில் உருவகித்துக் கொள்ளும்போதே ”தெருவில் வாரானோ என்னை திரும்பிப்பாரானோ” என்று ஒரு கன்னிப்பெண் பாடி இசைபயிலும்போது ஏற்படும் அபத்தம் உறைக்கிறது.

கல்கி ஒரு குட்டிக்கதையை ஒரு இடத்தில் சொல்கிறார். நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?”

சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ”மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்”

இந்த நகைச்சுவையில் நாம் சிரிப்பது அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீயில் உள்ள நீண்டகால பண்பாடு ஒன்றின் உள்ளீடற்ற படோடோபத்தைப் பார்த்துதான். நகைச்சுவை என்பது எப்போதும் நுண்ணிய பண்பாட்டு விமரிசனமாகவே அமைகிறது. தன் எழுத்தின் முதல்தளத்தில் மென்மையாக இந்த விமரிசனத்தைப் படரவிட்டிருப்பதனாலேயே அ.முத்துலிங்கத்தின் எல்லா எழுத்தும் நம்மால் சிறு புன்முறுவலுடன் படிக்கப்படுகிறது. அக்காவும் அவரும் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தவர்கள். ‘அக்கா மு.வரதராசனார், நா.பார்த்த சாரதி என்று படிப்படியாக முன்னேறி இப்போது ரமணி சந்திரனை எட்டியிருக்கிறாள்’ என்ற வரி மூலம் அ.முத்துலிங்கம் முன்வைப்பது மிக ஆழமான ஒரு பண்பாட்டு விமரிசனத்தை.

ஆனால் அ.முத்துலிங்கம் ஒருபோதும் நக்கல் செய்வதோ மட்டம் தட்டுவதோ இல்லை. பண்பாட்டின் பலதளங்கள் பல முகங்களைப்பற்றிய புரிதல் கொண்ட ஒருவரின் சமநிலை எப்போதும் அவரிடம் உள்ளது. ஒவ்வாத விஷயங்களை நோக்கி ஒரு சிறு புன்னகையே அவரது எதிர்வினையாக இருக்கிறது.

சுவாரஸியத்தை உருவாக்கும் இரண்டாவது அம்சம் நடையழகு. நடை என்று நாம் சொல்லும்போது எப்போதும் மொழியையே உத்தேசிக்கிறோம். ஆனால் மொழித்தேர்ச்சிக்கும் நடைக்கும் தொடர்பே இல்லை. நல்லநடை என்பது முழுக்க முழுக்க கவனிப்புத்திறன் சார்ந்தது. வெளியுலகையும் அக உலகையும் கூர்ந்து பார்ப்பதும் அவற்றை துல்லியமாகச் சொல்லி விட முயல்வதுமே நல்ல நடையாக ஆகிறது. நல்ல நடை என்று சொல்லப்படும் படைப்புகளை கூர்ந்து ஆராயுங்கள் அவற்றில் மொழியாலான சித்திரங்கள் நிறைந்திருக்கும்.

அ.முத்துலிங்கம் ஒரு கதையில் கனகி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்கிறார். அவள் வாய் மூடியிருக்கும்போதும் வட்டமாக இருக்கும். அத்துடன் ஓர் உவமை. மீனின் திறந்த வாய் போல.

இத்தகைய வர்ணனை என்பது குழந்தைத்தனம் மிக்க ஒரு கவனிப்பினூடாக உருவாகக் கூடியது என்பதை கவனிக்கலாம். உலகத்தின் சிறந்த இலக்கிய நடை எல்லாமே உள்ளே ஒரு குழந்தைப்பார்வையை கொண்டிருக்கிறது. உலகம் நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தொடர்ந்து பழகி வருகிறது. அதன் புதுமையால் நாம் உலகை அடையாளப்படுத்துவதில்லை அதன் பழகிய தன்மையால் அடையாளப்படுத்துகிறோம். குழந்தைகள் உலகை எப்போதும் புதிதாகப் பார்க்கின்றன. வேறுபாடுகளால் அடையாளப்படுத்துகின்றன. இலக்கியமும் அதையே செய்கிறது.

அப்படி அவதானிப்பைச் சொல்லும் போது எழுத்தாளனின் மன இயல்பும் வந்து கலந்துகொள்கையிலேயே நடை முழுமைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் கல்விமான்களும் சாதாரணர்களும் ஒன்றாக ஒரே ரொட்டியை பிய்த்து தின்பார்கள். கல்விமான்கள் ஏழாம் வாய்ப்பாடு தெரிந்தவர்கள். மற்றவர்கள் தெரியாதவர்கள் என்று ஒரு வரி வருகிறது. நட்பார்த்த ஒரு கிண்டல். ஒரு புன்முறுவல். இவை இரண்டும் கலந்ததே அ.முத்துலிங்கத்தின் நடை.

இந்த நூலின் முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு, இதுவரை சொன்னவற்றின் நீட்சியாகவே அதைக் கொள்ளவேண்டும். இந்த நூல் அ.முத்துலிங்கத்தின் பிரமிக்கத்தக்க பலதுறை அலைதலுக்கான சான்று. இதில் திரைப்பட விமரிசனங்கள்,உலக நவீன இலக்கிய நிகழ்வுகள், நூல் விமரிசனங்கள், மனிதர்களைப்பற்றிய குணச்சித்திரங்கள், நினைவோட்டங்கள், பல்வேறு அன்றாடவாழ்க்கைக் குறிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. ஒரு சமகால எழுத்தாளனின் அக்கறைகள் எந்த அளவுக்கு விரிய வேண்டுமென்பதற்கான சான்றுகளாக உள்ளன இக்கட்டுரைகள். கணிப்பொறி முதல் சமையல் வரை இவற்றின் கைகள் நீண்டு தொடுகின்றன.

இந்நூலுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு நூல் சுஜாதா எழுதி கணையாழியின் கடைசிப்பக்கமாக வெளிவந்துள்ள ‘கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’. சுஜாதாவின் அக்கறைகளும் ஆண்டாள் முதல் அணுகுண்டு வரை நீள்கின்றன. ஓயாது தன் சமகாலத்தை எதிர்கொண்டபடியே இருப்பதன் பதிவுகள் இவை. அந்த கனத்த நூலையும் நாம் மிகச் சுவாரஸியமாக புன்னகையுடன் வாசித்துச் செல்ல முடியும்.

ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். தீபா மேத்தாவின் வாட்டர் படத்தையோ அல்லது கிரண் தேசாயின் நாவலையோ அவர் மதிப்பிடும்போது வெளிப்படும் கறார்தன்மை தமிழின் மிக ஆக்ரோஷமான விமரிசகர்களுக்கு நிகரானது, ஆனால் மென்மையான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது, தீபா மேத்தாவின் காலைத்தொட்டு சீமா பிஸ்வாஸ் கும்பிடும்போது ”என்ன தொலைத்தார்கள்?”என்று கேட்கும் கனடாக்கிழவியின் சித்திரம் ‘தண்ணீரின் ஓட்டம் பலவந்தமாக திசைதிருப்பப்பட்டிருக்கிறது, தண்ணீரை தண்ணீராகவே ஓடவிட்டிருக்கவேண்டும்’ என்ற கடும் விமரிசனத்துடன் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ஒரு சமகால கலை இலக்கியப் பயணத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வெளிநாடுகளில் மிகுந்த பயிற்சியுடன் நகைச்சுவையும் தகவல் திறனும் கலந்து பேசி கொண்டுசெல்லும் வழிகாட்டிகளைக் கண்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தேர்ச்சிமிக்க வழிகாட்டியாக அ.முத்துலிங்கத்தின் குரல் நம்முடன் வருகிறது.

[11-08-07 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடான அ.முத்துலிங்கத்தின் ‘பூமியின் பாதி வயது’ என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]

நன்றி: திண்ணை

August 15, 2007

மாயா அருள்பிரகாசம் (M.I.A)

Filed under: M.I.A — டிசே தமிழன் @ 10:13 am

எம்.ஐ.ஏ யின் (M.I.A), இரண்டாவது இறுவட்டான ‘கலா’ வருகின்ற வாரம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் வெளியாகின்றது (ஜப்பானில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது). தனது தந்தையின் இயக்கப்பெயரை முதல் இறுவட்டுக்கு வைத்ததுபோன்று (அருளர்), இப்போது தனது தாயாரின் பெயரை (கலா) இரண்டாவது இறுவட்டிற்கு வைத்துள்ளார்.

ஏற்கனவே முதல் இறுவட்டு வந்தபோது -வெளியிடப்பட்ட நாளன்றே- கடை திறந்த காலையிலேயே வாங்கியது மாதிரி (இவ்விறுவட்டில் வரும் அநேக பாடல்களை ஏற்கனவே கேட்டுவிட்டேன் என்றாலும்) இதையும் வாங்காமல் விடுவேனா என்ன?

Jimmy

Boys: இந்தப்பாடல் ஏற்கனவே வந்த Bird-flu beatஐ நினைவுபடுத்துகின்றது.

‘கலா’வில் வரும் மேலேயுள்ள இந்த இரண்டு வீடியோ அல்பங்களோடு ‘அருளரில்’ வந்த இந்தப்பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாயாவின் Innocent face போய்விட்டதுபோலத்தோன்றியது. ஒரு கலகக்காரிக்கு அதுவும் நல்லதுதான்.

SunShowers

அரசியல் பாடலென மிகவும் விவாதிக்கப்பட்ட இப்பாடலில், செக் ஷேர்ட்டுக்களோடு, ரிபன்களால் இழுத்துக்கட்டப்பட்ட பின்னல்களுள்ள பெண்கள் எவரைக் குறிப்பிடுகின்றதெனச் சொல்லத்தேவையில்லை. மாயா அமெரிக்கா வருவதற்கான் விஸா பத்து மாதங்களாய்த் தடுக்கப்பட்டதற்கும், இன்னும் அவரது பெயர் சிவப்பு நாடாவில் இருப்பதற்கும் இந்தப்பாடலே முக்கியகாரணம் எனச்சொல்லப்படுகின்றது.

August 3, 2007

வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன்

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 9:57 am

*யசோதராவிற்காய்
வீடு திரும்பிய புத்தர்
நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்
பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீ
தொடர்ந்து பின்தொடர்வதற்கு
தன்னிடம் சிலிக்கனால் உருப்பெருப்பிக்கப்பட்ட
முலைகள் எதுவும் இல்லையென்றார் சினத்துடன்.
**வைன்கோப்பை-நீலோற்பலமொட்டு-விளாங்காய்
கவிதைகள் நிரம்ப வாசிக்க
புத்தர் எப்போது தமிழ்படித்தாரென
அகழ்வாராய ***கந்தரோடைக்குப் பயணித்திருந்தேன் இருளில்.
ஒருநாள்;
கிழக்கில் தமிழரின் அடையாளமழித்து
சாந்தத்தை வெற்றியின் சின்னமாக்கும் வாளேந்திய சிங்கங்களுக்கெதிராய்
புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து
எனதல்லாத எனது ஊரில் பிணங்கள்தின்றபடியலையும்
மரநாய்களுக்கு காணிக்கையாக்கினேன்
பின்
த்மிழனெனும் தூயவாதம் பேசி
முஸ்லிம்களைத் துரத்திய பெருந்துயரொழிக்க
வண்ணத்துப்பூச்சியொன்றை
வெறியுடன் புணரத்தொடங்கினேன்
எவர்க்கும் சொந்தமில்லாது எவனாகவோ ஆகுமென்னை
யசோதரா
புத்தரையும் வண்ணத்துப்பூச்சியையும் சிதைத்தற்காய்
ஒரு குற்றவாளியென தூக்குக்கயிரை மாட்டிவிடுகின்றாள்.

இப்படித்தான்
எங்கள் நாட்டில் சமாதானம் வருவதற்காய்
ஒரு சுன்னத்துச்செய்யப்பட்ட தமிழ்ப்பவுத்தன்…
பைத்தியமாகி அலைந்தானெனும் குறிப்பு
அம்பனையின் பதுங்குகுழியிலிருந்த மண்டையோடென்றில் பதியப்பட்டிருந்தது.

* தொடர்புடைய முன்பு எழுதப்பட்ட கவிதை
** சேரன், திருமாவளவன், செழியன் கவிதைகளில் இச்சொற்கள் முலைகளுக்கு உவமிக்கப்படுகின்றன
*** தொல்பொருள் அகழ்வராய்வுகள் நடைபெற்ற இடம். தமிழர்கள் பவுத்தர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


(அய்யனாருக்கு…)

Powered by WordPress