DISPASSIONATED DJ

April 25, 2007

வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 8:43 am

- சாருநிவேதிதாவின் ‘கடல்கன்னி’யை முன்வைத்து-மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree
உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ‘கடல்கன்னி’ என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) ‘மரமும்’, ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) ‘மழையும்’ இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்துரே பியேட்ரியின் ‘மழை’ கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.அகஸ்ரோவின் (Augsutro Bastos) ‘கைதி’, ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது ‘வீரர்களுடன்’ புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு ‘தொழில்முறை’ கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் ‘கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்’ என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் ‘கடல்கன்னி’யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் ‘மட்டுந்தான்’ கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் ‘தொலை’வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ ‘நவீனமாதிரிகள்’ மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது ‘கிரணம்’ இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த ‘கன்னித்தீவுக்கதைகளை’ பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

April 17, 2007

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 11:00 pm

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்த பீதி எல்லாவற்றையும் தின்றுவிடுகின்றது.
……….
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூகமாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது.
…….
வாழ்வு குறித்தான் இந்தப் படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முடியாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
……
இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப்பெரிய மாற்றம் வேண்டி விடிவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக் காலத்தில் அநாதைகளாகவோ அல்லது இது தமது மரணகாலம் என்று அறியாமலே சாகடிக்கப்பட்டோரையோ நாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.

அடக்குமுறையாளர்களின் கொடூரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்க்கப்படும் ஒரு எழுத்தாளனது குரலை நாங்கள் இந்தத் தேசம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும் குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைக்கான குரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
….
(நிலம் இதழ் 03, நவம்பர்/2001- தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்…)

Nilam
சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்

என் அன்புக்கினிய தோழர்களே
எனது காதலியிடம் சொல்லுங்கள்
ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த
வனாந்தரத்திலிருந்து
ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது;
கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை
அவளது கண்களில் வழமையாயிருக்கும் ஒளியை நான் காணவில்லை
கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது.
கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ
எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள்
எனது காலத்திலும் எனது காலமாயிருந்த
அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை;
என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.

நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை
அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது
எனவே தோழர்களே,
நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது
மண்டையினுள் குருதிக்கசிவாலோ
இரத்தம் கக்கியோ
சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில்
நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்கள்.

நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை
நான் அவளுக்குப் பரிசளிப்பது
இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லுங்கள்
அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள்
மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணரமுடியவில்லை.

எஸ்போஸ்
-10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் எழுதியது-

……
எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் தனது முப்பத்திரண்டாவது வயதில் துப்பாக்கிகளுக்கு வாழ்வை இரைகொடுத்தவர். துப்பாக்கிகள் ஆளும் காலத்தில் துப்பாக்கிகளால் வேறெதைச் செய்ய ஏலும்? அல்லது நம்மால்தான் ஏது செய்ய இயலும்?எஸ்போஸ், கவிதைகளுக்காய் ‘நிலம்’ என்ற காலாண்டிதழை நடத்தியவர். தெரிந்த கவிஞர்களின் கவிதைகளை மட்டுமில்லாது, கவிதைகளுக்கான விமர்சனங்களையும், புதிய கவிஞர்களை இனங்காட்டவும் ‘நிலம்’ காலாண்டிதழின் ஊடாக எஸ்போஸ் முயன்றிருக்கின்றார். யாழ் இடப்பெயர்வுகளை (?) காலச்சுவட்டில் எழுதியபோது -காலச்சுவட்டின் அசிரத்தையால்- எஸ்போஸின் சொந்தவிபரங்கள் வெளியிடப்பட்டு 2001 ஆண்டில் அரச இயந்திரத்தினால் கைதுசெய்யப்பட்டவர் (மேலே தரப்பட்ட கவிதை அவர் கைதுசெய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்டது). ‘நிலத்தில்’ மட்டுமின்றி பலவேறு இதழ்கள்/சஞ்சிகைகளில் பரவலாக எழுதியவர்.

அவரது ஏழு வயது மகன் சாட்சியாய் இருக்க நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது மிக அவலமானது. முன்னர் -2001ல்- கைதுசெய்து சித்திரவதைக்கு பின் எஸ்போஸை விடுதலை செய்த ‘மனிதாபிமானம்’ கூட இந்தமுறை துப்பாக்கிகளோடு வந்தவர்களுக்கு இருக்கவில்லை.

மக்கள் இல்லாமற்போய்க்கொண்டிருப்பதை இலக்கங்களில் மட்டுமே கணக்கில்கொள்ளும் ஒரு நிலப்பரப்பில் தனித் தனியாக ஒவ்வொருத்தருக்கும் அஞ்சலியோ சொட்டுக்கண்ணீரோ விடுவதுகூட அருகதையற்றதாகிப் போய்க்கொண்டிருக்கின்றது…..

April 3, 2007

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 12:21 pm

அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism( இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள ‘முழக்கம்’ பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி ‘கட்டவிழ்ப்பு’ என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், ‘சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்….’ என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் ‘கொடுங்கோலன்’ சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

”அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்’ என்று ‘கறுப்பு’ தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை ‘மறுவாசிப்பு செய்தல்’ என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். ‘எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்’ என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). ‘பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே’ என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த ‘உண்மையை’ கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு ‘உண்மையை’த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் ‘ஒரு பேப்பரில்’ எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு ‘உண்மை’ துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் ‘இந்திய தத்துவங்களின் அரசியல்’ நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

‘…மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.’

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் ‘ஆசிரியர் இற்ந்துவிட்டார்’ என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு ‘பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே’ என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் ‘வைகறை’யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் ‘அவன் அதுவானது’(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்… இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது ‘எதையும் சந்தேகித்தல்’ என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ‘என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது’ என்று சொந்தங்கொண்டாடி ‘பாசிசம்’ நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். ‘பாசிசம்’ இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை ‘விருத்தி’ செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது… ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு ‘தேசிய’ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, ‘நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்’ என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, ‘அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்’ என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது ‘காற்றுவெளிக்கிராமம்’ பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி… வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், ‘சமாதான காலம்’ வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய….. மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ… தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் ‘ஞானக்கண்’ணாலாவது பார்க்குக.

…..ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு ‘தமிழ் ஒரு நீசபாசை’ என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் ‘பெரும்பயத்தை’ முன்வைத்தபோது, ‘எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய’ - என்னுடடைய பல ‘பெருங்கதையாடலகளை’ தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

(Feb/07)

எனது பெயரும் அகதி.

Filed under: அனுபவம் — டிசே தமிழன் @ 12:14 pm

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது பூவரசுகளிலும் கள்ளிச்செடிகளிலும் ஒளித்துபிடிக்கும் விளையாடும் வயதிலேயே துப்பாக்கிகளே தமது கடவுள் என்ற வாழ்க்கை திணிக்கப்படுகின்றது. துப்பாக்கிகள் தமது உயிரை எடுக்கின்றபோது, தமக்கான வாழ்வைக் காப்பாற்றுபவையும் துப்பாக்கிகளே என்ற புரிதலோடு துப்பாக்கிச் சிறுவர்களின் சந்ததிகள் முகிழத்தொடங்குகின்றன.

ஆயிரம் கனவுகள் உலாவித்திரிந்த வெளியில் அவனும் ஒரு மழலைக் கனவாயிருந்தான். பதினைந்துவருட தாயக வாழ்வில் தனது ஊரில் -அவனுக்கு நினைவு தெரிந்த நாள்களின் பின் - ஒரு வருடமாவது முழுமையாய்த் தன் வீட்டிலே நிம்மதியாய் இருந்தான் என்பதே நினைவில் மீளக்கொணர்வதே கடினமாயிருக்கின்றது. இரவுகளுக்கு மட்டும் நிறம் கருமையாக இருப்பதில்லை; அலைந்து திரியும் அகதிகளுக்கு பகல்கள் கூட இருட்டானவையே. உயிரின் நிமித்தம் ஊரையும் வீட்டையும் துறந்து ஒவ்வொரு ஊர்களில் தங்கியும், பின் போரின் நிழல் அங்கும் நெருங்கி அருகில் வரவர ‘பாதுகாப்பான’ அடுத்தடுத்த ஊர்களுக்கும் என்று அலைந்துழந்த கதை நெடியது. காலையில் ஆரம்பிப்பதுதான் பாடசாலை என்ற நினைப்பொழிந்து மத்தியானப்பாடசாலைகள் அவனைப்போனற அகதிகளுக்கு ஒரு அடையாளமாயிற்று. பாடசாலைகளுக்குள்ளும் பதுங்குகுழிகள் இருந்தன. போர் அரசர்கள் விமானத்திலும் எறிக்ணைகளிலும் ஏறிவரும்போது எப்படி தப்பிப்பதென்ற முன்னெச்சரிக்கைகளே பாடங்கள் மனதில் படிந்ததைவிட அதிகம் படிந்திருந்தன.

தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணாக்களும் அக்காக்களும் பாடசாலைகளில் இருந்து திடீர் திடீரென மறைந்துபோவதையும், சில மாதங்களின்பின் தெருக்களில் துப்பாக்கிகளுடன் தம்மைப்போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மலரவைப்பதற்காய் வெயிலில் கருகித் திரிவதையும் காண்கின்றான். மிருதங்கமும், ‘எங்களின் பாதைகள் வளையாது’ என்று பாடித்திரிந்து தனக்கும் கலைகளில் விருப்பை வரச்செய்த ஒரு அன்பு அண்ணா போராளியாக மாறியபோது மிருதங்கம் தொடர்ந்து பழகுவதும் அவ்வளவு பிடிக்காமற்போனது. எப்போதும் சிரித்தபடி சதுரங்கத்தின் நுட்பமான ஆட்டங்களை கற்றுத்தந்த இன்னொரு அண்ணா, போராளியாக இல்லாதபோதும் களத்தில் இறந்தவுடல்களை அகற்றப்போனபோது சினைப்பரடியில் இறந்துபோனநாளில், இது உண்மையாருக்கக்கூடாது என்று தேம்பித் தேம்பி ஒரு பின்னேரப்பொழுதில் இவன் அழுதுமிருக்கின்றான். அகதிகளுக்கு சொந்த ஊர்தான் இருப்பதில்லையே தவிர, கண்ணீரும் கனவுகளும் வற்றிப்போவதில்லைத்தானே.

போராட்டத்தின் நியாய/ அநியாயங்களை
-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் ‘மனநிலையை’ வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. தொடர்ந்து எழுத்துக்களில் போராட்டம் குறித்து பேசாதுவிட்டாலோ அல்லது எழுதப்படுவதில் ‘பாஸிசம்’ என்ற சொல்லாடலைப் பாவிக்காதுவிட்டாலோ, தீட்டுப்பட்டவனாய் ஆக்கிக்கொண்டிருக்கின்றன சில ஆகிருதிகள்(அது குறித்து எள்ளளவு கவலையுமில்லை. போரின் இரணங்கள் மழலை வயதில் சுமந்த ஒரு அகதியானவன் அதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகளிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.

இன்று பேசுவதைப்போலவே தானே -இவர்கள்- இவன் ஊரூராய் அகதியாய் அலைந்துகொண்டிருந்திருக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்திருப்பாகள்? இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது? இன்று இதைக்கூட எழுதமுடியாமல் - செய்திகளின் இலக்கங்களில் மட்டுமே வாசிக்கும் ஒரு அநியாய மக்கள் படுகொலையின் -பெருங்கூட்டத்தின் ஒருவனாய்- இவனும் நேற்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இரங்கல் குறிப்பை விட உயிர் விட்டுக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் கணங்கள் எவ்வளவு அற்புதமானது என்பது ‘போர் பிதுக்கித்தள்ள பருவம் வரமுன்னரே வளர்ந்துவிட்ட’ இவனைப்போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒவ்வொரு துயரங்களிலிருந்தும் அவன் தப்பியோடவே முயன்றுகொண்டிருக்கின்றான் என்பதையும், வாசிக்கும் செய்திகளின் அவலத்தில் தனது பழைய வாழ்வின் அத்தியாயங்கள் இன்னொரு சந்ததிக்கும் மீளப்புதுப்பிக்கப்படுகின்றது என்பதை அறிவதாலும்… தான் மூளைநரம்பு வெடித்து பைத்தியக்காரனாய் ஆகிவிடக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு எப்போதும் உண்டு. தப்பித்தல் என்றாலும் தனது நினைவுப்புள்ளிகள் ஊரின் -பழையசம்பவங்களின்- துயரங்களில் மையங்கொள்வதைத் தவிர்ப்பதற்காய் தன்னை இலகுவாக்கும் பொழுதுபோக்கிற்குள் அடிக்கடி புகுந்துகொள்கின்றான். ஆனால் இங்கே அரசியல் பேசும் பலருக்கு போரால் பாதிக்கப்படும் மக்களின் மனவுணர்வுகளைவிட தமக்கான அரசியல் புள்ளிகளை நிரூபித்துவிடும் எத்தனிப்புக்களே இருப்பதென்பதே மிகப் பெருஞ்சோகம். அவர்களின் எந்தப்புள்ளிக்குள்ளும் சிக்கிவிடாதிருத்தலே சாலவும் சிறந்தது.

தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன என்றும் விளங்கிக்கொள்ளமுடியும். ‘எனக்கு நடைபெறும் எதிலும் உடன்பாடில்லை’ என்று பொதுவாய் ஒவ்வொரு குறிப்பின்பின்னும் எழுதி எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது இலகுவெனினும்-அவனுக்கு கிடைத்த தனிமனித அனுபவங்களினூடு- அந்த முடிவுகளுக்கு மிக எளிதாய் வந்துவிடமுடிவதில்லை. தன்னில் அன்பு வைத்த அண்ணாக்கள், அக்காக்கள், ஊர் விட்டு நீங்கி வந்தபோது தொலைந்துபோன தோழர்கள், தோழிகள், உறவுகள் என்று அனைவரையும் எவரேனும் ஒருவர் உயிர்த்தெழச்செய்து தருவார்களெனின் எல்லோருக்கும் பொதுவான போரின் அறத்தையும், தவறுகளே இல்லாத வார்த்தைகளால் மட்டுமே கட்டியமைப்படும் புரட்சிப்போராட்டங்கள் குறித்த கனவுகளையும் பற்றி இவன் விரிவாகப் பேசக்கூடும்.

புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டும் அதன் தேசிய நீரோட்டத்தில் தொபுக்கடீரென வீழ்ந்துவிடாது ‘அகதி’ என தொடர்ந்து அடையாளப்படுத்துவது, கழிவிரக்கத்திற்காய் அல்ல. தனது தேசத்தில் இருப்பில்லாது அடித்துத் துரத்தப்படும் அகதிகளின் சென்ற தலைமுறையின் ஒரு எச்சமாய் இருக்கவே விரும்புகின்றான். தாயகமண்ணை விட அதிக சுதந்திரத்தையும், பொருளாதார வாய்ப்பையும் இந்தப் புலம்பெயர்தேசம் தந்தாலும், ஒரு கனடியப் பிரஜையாக உரிமைகொண்டாடுவதில் அவ்வளவு விருப்பமில்லை. தன் தாய்தேசத்தில் இருக்கும் அகதிகள் மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்கள் திரள்திரளாய் அகதிகளாய் அலைந்து திரியாதபொழுதொன்றின் அற்புதமானகணத்தில் ‘அகதி’ என்ற தனது அடையாளத்தை இவன் தொலைத்துவிடக்கூடும். அதுவரை முன்னாள் அகதியெனவும், மனதின் உணர்வுகளின் அடியாழங்களில் இன்றும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்றும் அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதில் தயக்கங்களேதுமில்லை.

(Jan/07)

மல்கம் எக்ஸ்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:59 am
-ரவிக்குமாரின் ‘மால்கம் எக்ஸ்’ நூலை முன்வைத்து-

‘I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation’
-Malcolm X-

அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கும், மலகம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். மல்கம் எக்சை முதன்மையாக வைத்து இரவிக்குமார் எழுதியுள்ள இந்நூலினுடாக எக்சின் வாழ்க்கையை விரிவாக அறிந்து கொள்ளமுடிகின்றது. மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும்- வாசிக்கும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

mX

மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள். இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். இவற்றைத் தொடர்ந்து வெள்ளை இனத்துவேசவாதிகள் மட்டுமில்லை, அமெரிக்க அரசின் உளவுநிறுவனமும் மல்கமை கண்காணிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பொழுதுகளில் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளை பேசி கருப்பின் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த, மலக்ம் எக்ஸ் அமெரிக்காவின் வடக்குப் பகுதியான நியூயோர்க்கில் கறுப்பின் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார்

இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது. அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் என்ற பெயரை எக்ஸ் ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர். இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது. அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, ‘வினை விதைதவன் வினை அறுப்பான்’ என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கருப்பின் மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.

திருமணம் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாத மல்கம் பிறகு பெற்றியை (Betty) திருமணம் செய்கின்றார். எனினும் மல்கம் பெண்கள் மீதான முற்போக்கான கருத்துகள் எதையும் கொண்டிராது -ஒரு அடிப்படை மதவாதியைப் போல இருந்தது- மல்கமின் ஆளுமையில் முக்கிய குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். எனினும் கறுப்பின் மக்களின் தலைமைக்கான தகுதியை மல்கம் கொண்டிருந்தார் என்பதை -இதைவைத்து- மறுக்கவும் முடியாது.

நேசன் ஒஃப்வ் இஸ்லாமை பிரிந்த பின்னும் மல்கமின் வளர்ச்சியை எலிஜாவினால் தடுக்கமுடியாது போகின்றது. அதேசமயத்தில் சட்டத்தின் அப்பாற்பட்ட தனது முறையற்ற மனைவியர் பற்றிய செய்தியை மூடிமறைப்பதற்கான ஒத்துழைப்பை எலிஜா கேட்டபோதும் மல்கம் மறுத்துவிடுகின்றார் என்பது இன்னும் எலிஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. 1965ம் ஆண்டு ஒரு அரங்கில் மல்கம் பேசிக்கொண்டிருக்கும்போது எலிஜாவின் ஆதரவாளர்களால் மல்கம் கொல்லப்படுகின்றார். எலிஜாவின் ஆதரவாளர்களால் இக்கொலை செய்யப்படாலும் இதன் பின்னணியில் அமெரிக்கா உளவுநிறுவனங்களின் ‘சுத்தமான’ கைகளும் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. மல்கமை உளவு பார்த்துப் பார்த்தே ஏழாயிரம் பக்கங்களுக்கு மேலான பக்கங்கள் உளவுத் துறையில் சேகரிக்கப்படது கவனத்தில் கொள்ளக்கூடியது.

மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மலகம் தப்பியுமிருக்கின்றார். கலகக்காரனாய் இருந்த மலமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.

மல்கம் எக்ஸ் (1965), மார்ட்டின் லூதர் கிங் (1968) இரண்டு முக்கிய கறுப்பின் தலைவர்களையும் அடுத்தடுத்து மூன்றாண்டுகளுக்குள் கறுப்பின் மக்கள் இழக்கின்றனர். இவர்கள் இருவரின் மிக்ப்பெரும் எழுச்சியானது, இனி மனிதவுரிமைகள் பேசும் எந்தத் தலைவரையும் பிரமாண்டமாய் வளர்ந்துவிடச்செய்யக்கூடாது என்பதில் இற்றைவரை அமெரிக்க அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருக்கின்றது. அதனாலேயே இற்றைய மிகு நெருக்கடி காலத்திலும் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போலவோ, மல்கம் எக்ஸ் போலவே ஒருவர் உருவாக முடியாது உள்ளது. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு (கறுப்பின, ஸ்பானிய, பூர்வீககுடிகளுக்கு, 9/11 ற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு) தங்கள் உரிமைகளுக்காய் போராட வேண்டியபயணமோ மிகவும் நீண்டதாய் இருக்கின்றது.

அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டபோது தயவு தாட்சண்யமில்லாது அதிகார்த்தை நோக்கி கேள்விகள் எழுப்பி விமர்சித்தவர்கள்தான் மார்ட்டி லூதர் கிங்கும் மலக்ம் எக்சும். இன்றைய ஈராக், ஆப்பானிஸ்தான் யுத்தங்களை விமர்சிக்கத்தேவையுள்ள வலிமையுள்ள கறுப்பினக் குரல்கள் தொலைந்திருப்பதுதான் அவலமானது. அதைவிட அதிகாரத்தின் குரலாய் இருந்து -கருப்பினத் தலைவர்களாய் ஊடகங்களால் ஆக்கப்பட்டிருக்கும்- Condoleezza Riceம், Colin Powellம் போருக்கு ஆதரவாய் அதிகாரத்தின் குரலில் பேசிக்கொண்டிருப்பதுதான் இன்னும் ஆபத்தானது.

மலகம் எக்ஸ் பற்றிய நூலை மிக கட்டிறுக்கமான மொழியில் தேவையான விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ரவிக்குமார் எழுதியிருக்கின்றார். -வாசித்து முடிக்காமல் கையிலிருந்து எடுக்கக்கூடாது- என்பது மாதிரியான நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை ரவிக்குமாரின் எழுத்து நடை தருகின்றது. ரவிக்குமாரின் தலித்திய அனுபவங்களோடு மல்கமின் அனுபவங்களும் ஒத்துவருவதால் (ரவிக்குமாரும் இதை முன்னுரையில் குறிப்பிடுகின்றார்) இந்நூலை எளிதாக ரவிக்குமாரால் எழுதிக்கொண்டு போக முடிகின்றது . முன்னுரையில் ரவிக்குமார் குறிப்பிடமாதிரி, இஸ்ஸாமால் மட்டும் அல்ல, எந்த நிறுவனமயப்பட்ட மதத்தில் சேருவதாலும் தலித்துக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை வந்துவிடமுடியாது என்பது என்னளவான நம்பிக்கையும் கூட. மலகம் அவரது மரணத்தின் பின், கலகத்தின் குறியீடாகிவிட்டார். எனினும் இன்றும் அமெரிக்கா நகரமெங்கும் மார்ட்டின் லூதர் கிங் பெயரில் பாடசாலைகளும் தெருக்களும் பெயரிடப்படும்போது மல்கம் எக்ஸ் அதிக இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றார் என்பதை மல்கமின் கலகக்குரலிற்கு இன்னும் அதிகார மையங்கள் அஞ்சுகின்றன என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அதிகார மையங்களுக்கு மார்ட்டின் லூதர் முன்வைத்து போராடிய கிறிஸ்தவத்தை இலகுவாய் ஏற்றுக்கொள்ளவும், மல்கம் முன்வைத்த இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தயக்கங்கள் இருக்கின்றன என்ற இன்னொரு அர்த்தத்திலும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

மலகத்தினதும், மார்ட்டின் லூதர் கிங்கினதும் கள முன்னெடுப்புக்கள், அரசியல் புள்ளிகள் என்பவை இருவேறு துருவங்கள் என்றாலும் இருவருக்கும் தமது மக்கள் மீட்சி பெறவேண்டும் என்பதே முதல்நோக்கமாய் இருந்தது. அதனால்தான் அவர்கள் மதங்களைச் சார்ந்திருந்தாலும், அம்மதங்களின் மரபான பல நம்பிக்கைகளை புறக்கணித்த்தோடு, பிரார்த்தனைகளால் மட்டும் கடவுள் எல்லாவற்றையும் தந்துவிடுவார் என்று நம்பிக்கை கொள்ளாது மக்களுக்காய் களத்தில் இறங்கிப் போராடியவர்கள். பெரியார் நமக்கு இன்னும் தேவையாக இருப்பதுபோல, அமெரிக்கா தன் ஏகாதிபத்தியப்பாதங்களை -முன்னைவிட இன்னும் வேகமாய்- உள்நாட்டிலும், வெளி உலகிலும் ஆழப்பதிக்கும்போது மல்கமினதும், மார்டின் லூதர் கிங்கினதும் மறுவாசிப்புக்கள் நமக்கு இன்னும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.

(குறிப்பு: ரவிக்குமாரின் நூலின் மார்ட்டின் லூதர் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே வருகின்றன. ஒரு ஒப்பீட்டுகாய் கிங்கின் செயற்பாடுகளையும் இங்கே சேர்த்துள்ளேன்.)

(Jan/2006)

 

Powered by WordPress