DISPASSIONATED DJ

February 23, 2007

லட்சுமி நரசு

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 4:36 pm

லட்சும் நரசு அவர்கள் குறித்து ராஜ்கெளதமனின் ‘அயோத்திதாசர் ஆய்வுகள்’ நூலில்தான் சற்று விரிவாக வாசித்திருக்கின்றேன். இந்தக்கட்டுரை நல்லதொரு அறிமுகத்தை லட்சுமி நரசு குறித்து தருகின்றது. இநதக்கட்டுரையை மொழிபெயர்த்தவரும் வலைப்பதிவுகளில் பூங்குழலி என்று எழுதுபவரும் ஒருவரா?
(~டிசே)
…….

லட்சுமி நரசு: அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடி!
-ஜி. அலாய்சியஸ்

பொக்காலா லட்சுமி நரசு - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் வாழ்ந்த பவுத்த முன்னோடிகளில் முக்கியமானவர். ஆசிய அறிஞர்களால் அக்காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வந்த பவுத்த மரபுகளில் இருந்து காலத்திற்கேற்ற, விடுதலை அளிக்கும் மதத்தை, மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்திய பிற பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், எம். சிங்காரவேலு ஆகியோருடனான தொடர்ந்த கலந்தாய்வுகளோடு, நரசுவின் மத உருவாக்க முயற்சி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைபெற்றது. மதம் என்பதற்கு இன்று அளிக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் மற்றொரு மதத்தை நிறுவுவது, அவர்களின் நோக்கமல்ல. மாறாக, காலத்திற்கேற்ப பகுத்தறிவு சார்ந்த, சுதந்திரமான உலகப் பார்வையும், ஒழுக்க நெறியும் கொண்டு நவீன காலத்திற்குள் நுழையும் ஆண் பெண்களுக்கிடையே சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கவும் வழங்கவுமான ஒரு நெறியை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

நரசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், அவருக்குப் பிறகு தென்னிந்திய பவுத்த சங்கத்தின் சென்னை பெரம்பூர் கிளைக்குப் பொறுப்பேற்றவரான மறைந்த என். ஜீனராஜு என்பவர் சேகரித்தவையே ஆகும். அவற்றில் பரவலாகப் பேசப்பட்டு, அறியப்பட்டு வந்த வாய்மொழித் தகவல்கள் மற்றும் அக்காலத்திய இதழ்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த செய்திகள் ஆகியவையே இருந்தன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலிருந்து தலைநகருக்கு குடி பெயர்ந்து, சென்னை நீதிமன்றங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கிய பொக்காலா செல்லா நாயனம்காரு என்பவரின் மகனாக லட்சுமி நரசு பிறந்தார். அவருக்கு ஆண்டாள் அம்மாள் என்ற சகோதரியும், கிருஷ்ணசாமி, ராமானுஜம் மற்றும் பாஷ்யம் என்று மூன்று சகோதரர்களும் உண்டு.

1911இல் சென்னையில் நடந்த ரயில் தீ விபத்தில் ராமானுஜமும் பாஷ்யமும் மரணமடைந்தனர். லட்சுமி நரசு 1861இல் பிறந்து, அறிவியல் கற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெண்கள் நலச் சங்கத்தின் மூலம் பொது வாழ்வில் செயலாற்றி வந்த ருக்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்குப் பிறந்த 10 குழந்தைகளில் வெங்கட் என்ற மகனும், வீரலட்சுமி என்ற மகளும் மட்டுமே பிழைத்தனர். வெங்கட் பாரிசில் படித்துக் கொண்டிருக்கையில், அகால மரணம் அடைந்தார். அவர் மறைந்த வேதனை தாங்க இயலாமல் ருக்மணி அம்மாளும் வெகு விரைவில் இறந்து விட்டார். 1925 இல் நரசு, ராம ரத்தினம் அம்மாள் என்றொரு ‘விதவை’யை பெரம்பூர் வியாரத்தில் பவுத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

நரசு பொதுவாக, அவரது சகோதரர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்டே வாழ்ந்து வந்தார். சமூக மத மூடப் பழக்க வழக்கங்கள், குறிப்பாக சாதிய அமைப்பு மற்றும் அன்றாட சடங்குகளை எதிர்த்து அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுடன் அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவு ஆகியவற்றை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அனைத்து வகையான சமூக இழிவுகளுக்கும் எதிராகவே தொடர்ந்து செயலாற்றி, சமூகத்திற்கு, குறிப்பாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்த அவர், இதய நோய் காரணமாக 1934, சூலை 14 ஆம் நாள் தமது 73 ஆவது வயதில் மரணமடைந்தார். மயிலாப்பூர் சுடுகாட்டில், எளிமையான பவுத்த முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

‘மெட்ராஸ் மெயில்’ என்ற ஆங்கில நாளேடு, 23 சூலை 1934 பதிப்பில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது:

‘அண்மையில் சென்னையில் மறைந்த பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவுகளைப் போற்றும் வகையிலும் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் சனிக்கிழமையன்று ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் கூட்டம் கூடிய அந்நிகழ்ச்சிக்கு திவான் பகதூர் ஏ. ராமசாமி (முதலியார்) தலைமை வகித்தார். மறைந்த பேராசிரியருடன் இருபது ஆண்டு காலம் பழகியவரான டாக்டர் சுரேந்திர நாத் ஆர்யா, பேராசிரியரின் அறிவுத்திறன், பொதுநலத் தொண்டு குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், அவரது மறைவின் மூலம் பொதுநலத்திற்கு தொண்டாற்றும் ஒரு முக்கிய ஆளுமையை இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். திரு. பி. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பவுத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் கொண்டிருந்த ஆர்வத்தைப் போற்றினார். இந்த மாநிலத்திலேயே தனது சாதியைத் துறந்து, தான் போதித்தவற்றைத் தானே பின்பற்றிய ஒரே மனிதர் பேராசிரியர் நரசுதான் எனவும் அவர் குறிப்பிட்டார். பவுத்த நோக்கத்திற்காக பேராசிரியர் ஆற்றிய பணிகளை, சென்னை பவுத்த சங்கத்தின் செயலாளரான திரு. மோனியர் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியின் தலைவர் தனது இறுதியுரையில், பேராசிரியர் சிறந்த குணங்களை உடைய, உறுதியான சுதந்திர மனோபாவம் உடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டார். லட்சுமி நரசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் போற்ற ஒரு குழு அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

தொழில் ரீதியாக நரசு ஓர் இயற்பியல் அறிஞர். ஆனால், உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகவே அவர் அறிவியலை கண்டார். அவர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு மாணவராக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது பிஷப் ஹீபர் கல்லூரி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி கிறித்துவக் கல்லூரியில் பின்னர் அவர் இளநிலை விரிவுரையாளராக சேர்ந்தார் எனத் தெரிகிறது. 1892 - 94 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆரணி ஜகிர்தார் தங்கப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவராக அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. 1894 ஆம் ஆண்டு அவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் மாணவர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரியின் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்ட அவர், மாணவர் தங்கும் விடுதிகளின் பொறுப்பாளராகத் திகழ்ந்தார்.

‘தி இந்தியன் ரிவ்யூ’ போன்ற இதழ்கள், பெருமை வாய்ந்த கல்லூரி இதழ்கள் போன்றவற்றில் நரசு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். கல்லூரியின் மூத்தப் பேராசிரியரான மறைதிரு. மொபாத் அவர்கள் இல்லாத நேரங்களில் வகுப்புகள் எடுக்கும் பொறுப்பை நரசு ஏற்றபோது, கல்லூரி நிர்வாகிகளால் அவரது நுட்பமான அறிவுத் திறன் அங்கீகரிக்கப்பட்டது. அவருக்கு அவரது துறையில் இருந்த ஆழமான அறிவின் காரணமாக, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை. ஆங்கிலேயரான பேராசிரியர் வில்சன் என்பவருடன் அவர் நடத்திய துறை சார்ந்த விவாதம், அவரது வாழ்நாள் முழுவதும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும் பேசப்பட்டதாக இருந்தது.

பிற்காலத்தில் நரசுவின் நூல் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக, நரசுவின் வாழ்க்கை குறித்த ஆய்வை மேற்கொண்ட அம்பேத்கரின் கவனத்திற்கு இந்த விவாதம் வந்தது. வலிமை மிக்கவர்களின் திமிரை துணிவுடன் சந்தித்த அவரது நேர்மையான உறுதிதான் - நரசுவின் ஆளுமைக்கு சான்றளிப்பதாகவும், அவரது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் பிரதிபலிப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரை நெருக்கமானவராகவும், அதே வேளையில் அவரது சக ஊழியர்கள் மற்றும் ஆதிக்கவாதிகளிடமிருந்து அவரை ஓரளவிற்கு விலக்கி வைப்பதாகவும் இருந்தது.

1909 ஆம் ஆண்டு நரசு, கிறித்துவக் கல்லூரியிலிருந்து விலகி, பச்சையப்பன் கல்லூரியில் முழு நேரப் பேராசிரியராக சேர்ந்தார். 16 ஆண்டுகள் அவர் அக்கல்லூரியில், பல்வேறு விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கேற்றும், கல்லூரியின் பொது நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் சிறப்பாகப் பணிபுரிந்தார். ஒரு சிறந்த ஆசிரியராக, அவரது பணிகள் தேர்வு மேற்பார்வையாளர் மற்றும் உயர்நிலை கல்விக் குழுக்களின் உறுப்பினர் போன்றவற்றிற்கு - சென்னை பல்கலைக்கழகத்தாலும், வேண்டி பயன்படுத்தப்பட்டது. 1925 ஆம் ஆண்டு அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவப்படம் அக்கல்லூரியில் நிறுவப்பட - அவரது சக ஊழியர்களும், மாணவர்களும் எடுத்த முயற்சிக்கு அவர் இசைவு அளித்தாரா என்பது தெரியவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சென்னை மாகாணத்தில் குறிப்பிடத்தக்க பகுத்தறிவு சீர்த்திருத்தவாதியாக நரசு அறியப்பட்டார். ஏற்கனவே பவுத்தத்தின் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு இணைந்து, பரந்த மனப்பான்மை கொண்ட சிறந்த ஆளுமையாக அவரை பரிணமிக்க வைத்தது. மனித நலனுக்குரிய எதையும் தேவையற்றதாகவோ அவரது நேரம், செயல் திறன், ஈடுபாடு ஆகியவற்றை வீணடிக்கக் கூடியதாகவோ அவரால் பார்க்க இயலவில்லை. அக்காலத்தில் உருவெடுத்த பல முற்போக்கான சீர்த்திருத்த அமைப்புகளால் மிகவும் நாடப்பட்ட ஒரு முக்கிய நபராக அவர் திகழ்ந்தார். அனைத்து வகையான சமூக ஒதுக்குதல்களையும் அவர் எதிர்த்தார்.

‘மெட்ராஸ் எக்ஸ்செல்சியார் கிளப்’, இந்து சமூக சீர்த்திருத்த சங்கம், தென்னிந்திய சங்கம், தேசிய நிதியம் மற்றும் தொழிற்சங்கம், சென்னை மகாஜன சபா, யங் மென்ஸ் பிரதர்ஹுட், சென்னை சமூக மாநாடு, தென்னிந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, மெட்ராஸ் டீச்சர்ஸ் கில்ட், ராயபுரம் தர்ம அண்ணா சாலா, நாயுடு சங்கம், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி, குழந்தைகள் பாதுகாப்பிற்கான சென்னை சமூக அமைப்பு, இந்திய தொழிற்சங்க மாநாடு, யங் மென்ஸ் லிட்டரரி அசோசியேசன், ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுச் சங்கம், புரசைவாக்கம் திராவிட சங்கம், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு மாநாடு மற்றும் பல்வேறு பவுத்த சங்கங்கள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

லட்சுமி நரசு இன்றுவரை நினைவுக் கூரப்படுவது - அவரது துறை சார்ந்த பங்களிப்புகளுக்காகவோ, பல்வேறு பொது நலத் தொண்டுகளுக்காகவோ அல்ல. மாறாக, அவரது காலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் இருத்தல் குறித்து எழுந்த கேள்விகளுக்கான பதிலாக புத்தரின் போதனைகளை மீட்டுருவாக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காகவே ஆகும். நவீன காலத்தின் தோற்றத்தால், அனைத்து வகையான சமூக மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ நடக்கும் தொடர்ந்த நியாயமற்ற வேறுபாடுகள் ஆகியவை ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்டு வந்த அதே வேளையில், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தவிர்க்க இயலாததாக ஆகி விட்டன. விரும்பியோ விரும்பாமலோ, ஆங்கிலேய ஆதிக்க அரசு, தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக துணைக் கண்டத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் மிக மோசமான பகுதிகளான பார்ப்பனிய மூடத்தனங்களுக்கு புது தெம்பு அளித்துவிட்டன. அதற்கு இணையாக, வலிமை பெற்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களும், பண்பாடு - மரபு என்ற பெயரில் அவற்றையே தங்கள் அரசியல் கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு அடித்தளமாக ஆக்கிக் கொண்டன.

புத்தரும் அவரது போதனைகளும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் சமூகங்களால், தங்களுக்கு ஓர் உலகளாவிய பார்வை அளிப்பதற்கான மூலாம்பரமாக - மனித சமத்துவம் மற்றும் சமூக விடுதலைக்கான அவர்களது தொடர்ந்த எதிர்வினைக்கான அடித்தளமாகப் பார்க்கப்பட்டது. நிலவும் பழமைவாத சிந்தனைகளோடு போட்டியிடக் கூடிய மற்றொரு பழமைவாத சிந்தனையாக, நிறுவப்பட்ட புனித நூல், மொழி மற்றும் புனித சடங்குகளைக் கொண்டதாக பவுத்தத்தை வெளிப்படுத்தும் பிற முயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, பிரச்சாரம் செய்த லட்சுமி நரசுவை, ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் செய்தியால் உச்சத்தை அடைந்த ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட பவுத்தம்’ என்று அழைக்கப்பட்ட சிந்தனையின் முன்னோடியாகவே காணலாம். பாபாசாகேப் அவர்களே பேராசிரியர் நரசு அவர்களை தனது முன்னோடியாகக் கருதியது தற்செயலானது அல்ல!

சாதி குறித்த நரசுவின் நூலை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள பிக்கு தேவப்பிரியா வலிசின்கா, நரசு இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வெளிப்படையாக பவுத்தத்தைத் தழுவிக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறார். இது குறித்து வேறு எந்த ஆதாரமும் நமக்கு இல்லை. ஆனால், நரசுவிற்கு பவுத்தத்தின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவரது வாழ்க்கையின் தொடக்கக் காலங்களிலேயே இருந்ததை நாம் அறிய முடிகிறது. குறிப்பாக, மகாபோதி சங்கத்தின் சென்னை கிளை தொடங்கப்பட்ட ஆண்டான 1890க்கு முன்பே எனக் கூறலாம். அங்காரிகா தர்மபாலா, சென்னையில் தனது சங்கத்தின் கிளையைத் தொடங்க முடிவு செய்தபோது, ஏற்கனவே புத்தரின் அறிவுரைகளைப் பரப்புவதில் அர்ப்பணிப்போடு செயல்படக்கூடிய மூன்று முக்கியமானவர்கள் நகரில் இருந்தனர். எம். சிங்காரவேலு, பி. லட்சுமி நரசு மற்றும் அயோத்திதாசர் ஆகிய அம்மூவரும் ‘தியாசபிகல் சொசைட்டி’யின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர வேறு சில பரவலாக அறியப்படாதவர்களும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய காலத் தில் காலனிய ஆதிக்க அரசின் துணையோடு பார்ப்பனிய ஆதிக்கம் மிகுந்ததாக உருவாகிக் கொண்டிருந்த இந்து மதத்திற்கு ஒரே மாற்றாக, இவர்கள் அனைவருமே பவுத்தத்தையே கருதினர். இவர்களின் சமூகப் பின்புலம் வெவ்வேறாக இருந்ததன் காரணமாக, பவுத்தத்தின் மீதான அர்ப்பணிப்பில் ஒன்றுபட்டு நின்ற போதிலும், தங்களது இருத்தல் தேவைகளின் அடிப்படையில் பவுத்தத்தை வெவ்வேறான பார்வையிலேயே அணுகினர்.

மேற்கே எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிச மாதிரிகளின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, சிங்காரவேலர் புத்தரை ஒரு நாத்திக பகுத்தறிவுவாதியாக கண்டார். லட்சுமி நரசுவை பொறுத்தவரையில், புத்தர் ஒரு மிகச் சிறந்த மாந்த நேய பகுத்தறிவுவாதி. அயோத்திதாசரை பொறுத்த வரையில், புத்தரும் அவரது அறிவுரைகளும் முக்கியமாக தமிழ் - திராவிட மரபுகளுக்குள் பொருந்தக் கூடியதாக பழமைவாத வேத மற்றும் இந்திய பண்பாடு மற்றும் வரலாற்று மரபுகளுடன் போட்டியிடக் கூடியதாக, அதனால் சமூக பண்பாட்டுப் புரட்சிக்கு முக்கிய உந்து சக்தியாக மறுகட்டமைக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதினார். தர்ம பாலாவின் மகாபோதி சங்கத்தை உருவாக்கும் பணியில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். தங்களுக்கு இடையேயும், தர்மபாலாவுடனும் நிலவிய பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையேயும், அவர்கள் ஒரு காலகட்டம் வரையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு, நகரின் பல்வேறு பகுதிகளில் கருத்துரைகளை ஒழுங்கு செய்வதிலும், மக்களின் மொழியில் துண்டறிக்கைகள் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் வெளியிடுவதிலும், பவுத்த விழாக்களை கொண்டாடுவதற்கு ஒழுங்கு செய்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

அயோத்திதாசருக்கு பிந்தைய காலத்தில் சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்கத்துடன் நரசுக்கு இருந்த ஈடுபாடும், குறிப்பாக அதன் பெரம்பூர் கிளையை அமைப்பதிலும் அதை நிர்வகிப்பதிலும் நரசுவின் பங்களிப்பும் மகா போதி பவுத்தத்தின் இத்தகு நடவடிக்கைகளைவிட பலன் அளிக்கத்தக்கதாக இருந்தன. இச்சங்கம், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிறப்பு வாய்ந்த அயோத்திதாசரின் வழிகாட்டுதலின் கீழ், தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவைப் பெற்று, தலைநகரில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது.

மகா போதி சங்கத்தில் ஒரு காலகட்டம் வரை அயோத்தி தாசருடன் இணைந்து செயல்பட்டதோடு, ராயப்பேட்டையில் இருந்த ஆசிரமத்தில் உருவாகிக் கொண்டிருந்த சாக்கிய திராவிட தென்னிந்திய பவுத்த சங்கத்தை உருவாக்குவதிலும் நரசு அயோத்திதாசருக்கு தனது ஒத்துழைப்பை நல்கினார். அயோத்திதாசர், லட்சுமி நரசு இருவருமே, உறுதியான குண இயல்புடைய, இயற்கையான அறிவுத் திறனுடன் கூடிய உணர்வுப்பூர்வமான மனதும், திட்டமிட்டு கவனமாக வளர்த்தெடுத்த கல்வியறிவும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். அனைத்திற்கும் மேலாக இருவருமே சிறந்த நோக்கமுடையவர்களாக, தற்கால நியாயமற்ற சமூகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு, நியாயமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திசையில் அவற்றை திருப்பும் முயற்சியில் ஓய்வின்றி செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரின் சமூக நிலையும் வெவ்வேறாகவே இருந்தது. நரசு, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த போதிலும், ஓரளவு வளமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தார். அவரது குடும்பத்தினர் அன்றைய காலனிய அரசில் மதிப்புமிக்க பதவிகளை எட்டும் நிலையிலிருந்தனர். அதோடு நவீன ஆங்கிலம் மற்றும் அறிவியல் அறிவும் பெறக்கூடிய சூழல் அவருக்கு இருந்தமையால், அறிவாதிக்க உலகோடு தொடர்பு கொள்ளவும் நகரில் உள்ள அத்தகு மனிதர்களோடு பழகவும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. மற்றொரு புறத்தில் அயோத்திதாசர் நரசுவைப் போன்றே இயற்கையான அறிவுத் திறன் உடையவராகவும் தமிழ் இலக்கியப் புலமை மற்றும் மருத்துவ அறிவு உடையவராக இருந்தபோதும் அன்றைய ஆதிக்க மொழியின் வழியாக வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாதவராக இருந்தார். குறிப்பாக பறையர்கள் என்று ஒதுக்கப்பட்ட, காலனிய அரசால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வந்தவராக அவர் இருந்தார்.

வேறுபாடுகளுக்கு இடையிலும், அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர். நரசு ராயப்பேட்டை ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உரைகள் நிகழ்த்துவார். அயோத்திதாசரின் மறைவிற்குப் பிறகு ‘சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்க’த்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களால் லட்சுமி நரசு, தமிழ் பவுத்த இயக்கத்தின் நண்பராக, வழிகாட்டியாக, தத்துவாசிரியராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தமிழ் பவுத்த இயக்கத்திடம் நரசு கொண்டிருந்த ஈடுபாடும் அதில் அவரது பங்களிப்பும் பன்முகத் திறன் கொண்டவை. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல், சங்கத்தின் பெரம்பூர் கிளை, பெரும்பாலும் கற்றறிந்த இந்தப் பேராசிரியரின் கைத்திறனேயாகும். அமெரிக்க பவுத்த பெருமாட்டி மேரி பாஸ்டர் அவர்களின் தாராள நிதியில் ஒரு பங்கை தனது நண்பர் அங்காரிகா தர்மபாலாவின் மூலம் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு அளப்பரியது.

நரசு தொடக்கத்தில் இருந்தே தன்னைச் சுற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளை உருவாக்கிக் கொண்டார். அவர்களின் துணையோடு ஒரு நிதியம் அமைத்து, வியாரம் ஒன்றும் பள்ளி ஒன்றும் கட்டினார். அப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டனர். தங்கள் அளவில் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவர்களாகவும், சுதந்திர சிந்தனையுடையவர்களாகவும் அர்ப்பணிப்புடைய செயல்வீரர்களாகவும் இருந்த அவருடைய சீடர்களிடம் நடத்திய தொடர் விவாதங்கள் மற்றும் வாராந்திர உரைகள் இவற்றின் வழியாக நரசு உருவாக்கிய ‘நவீன பவுத்தம்’ இங்குதான் வடிவம் பெற்றது. சங்கத்தில் அவரது சக ஊழியர்களான வி.பி.எஸ். மோனியர், பெரம்பை மாணிக்கம் ஆகியோர் பேராசிரியருடன் இணைந்து ‘இந்து மதமும் பவுத்தமும்’, ‘மணிமேகலையில் பவுத்தம்’ என்ற இரு தமிழ் நூல்களைப் பதிப்பித்தனர். பெரம்பூர் கிளை 1917இல் அமைக்கப்பட்டது. பாஸ்டரின் நிதியுதவியோடு எழுப்பப்பட்ட அதன் கட்டடம், 1921இல் திறக்கப்பட்டது. இங்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் பல தனி நபர்களை இந்தப் புதிய மதத்திற்கு அழைத்து வந்தார். அதோடு பார்ப்பன புரோகிதர் இன்றியும் வேத சடங்குகள் இன்றியும் நடத்தப்பட்ட பல சீர்த்திருத்த திருமணங்களுக்குத் தலைமையேற்றார். இந்த திருமண முறை அக்காலகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த சுயமரியாதை திராவிடர் இயக்கத்தில் புகழ் பெறத் தொடங்கியது.

ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்திலும், அதைவிட அதிகமாக 1924 இல் அவர் ஓய்வு பெற்ற பின்னரும், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். மாகாணத்தின் பிற நகரங்களான பெங்களூர், திருப்பத்தூர், கோலார் தங்க வயல் போன்ற இடங்களுக்கு சங்கக் கிளைகள் அமைப்பதற்கும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்ளவும், சிறப்பு உரைகள் நிகழ்த்தவும், திருவிழா கொண்டாட்டங்களை சிறப்பிக்கவும் அவர் பயணம் மேற்கொண்டார். நகரத்தில் புதிய கிளைகள் அமைக்கவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டார். சங்கத்தின் சார்பில் ஒரு பொது மாநாடு நடத்துவது என்பது, அயோத்திதாசரின் நிறைவேறாத கனவாக இருந்தது. அத்தகைய ஒரு மாநாட்டிற்கான ஓர் அறிவிப்பை, அவர் ‘தமிழன்’ இதழில் வெளியிட்டார். அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. ஆனால், முதல் மாநாடு பண்டிதரின் மறைவுக்குப் பிறகு 1917இல் தான் நடத்தப்பட்டது. சென்னை மூர் அரங்க மக்கள் பூங்காவில் நடந்த அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்க பேராசிரியர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது 1920இல் பெங்களூரிலும், மூன்றாவது மீண்டும் சென்னையில் 1928லும், நான்காவது கோலார் தங்கவயலில் 1932லும் நரசுவின் காலத்திலேயே நடத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்திய ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினரால் பவுத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதின் அடிப்படை நோக்கம், அவர்களது முழுமையான நிலையான, விடுதலையை நோக்கியதாக இருந்தது. அன்றைய காலனிய அரசால் சட்டமாக்கப்பட்டு வந்த பல சமூக, அரசியல் சிக்கல்களுக்கு இது தீர்வு காண முயன்றது. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நிதியும் சட்டத்துணையும், போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவமும் ஆகும். காலனிய அரசோடு பேசி தீர்க்க வேண்டிய இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தையை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு லட்சுமி நரசுவிடமே ஒப்படைக்கப்பட்டது. நரசு தொகுத்த புத்தரின் அறிவுரைகள் நிலைத்திருப்பதாகவும் விடுதலை அளிப்பதாகவும் காணப்பட்டன. சங்கத்தின் மதம் குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையாக அவரது ‘பவுத்தத்தின் சாரம்’ ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் ‘தமிழன்’ இதழின் ஆசிரியராக இருந்த ஜி. அப்பாத்துøரயார் இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும்படி பணிக்கப்பட்டார்.

நவீன பவுத்தத்தின் மறு உருவாக்கத்திற்கு லட்சுமி நரசுவின் எழுத்துகளே, உண்மையான நீடித்த பங்களிப்பாக இருக்கிறது. அவரது பரந்த வாசிப்பு, ஆழ்ந்த வெளிப்பாடு மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஆண்கள் பெண்களுடன் அவர் கொண்டிருந்த நீடித்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவே - பல்வேறு தளங்களில் அவர் நிகழ்த்திய பல உரைகளுக்கு அடிப்படை ஆகும். இவை திருத்தப்பட்டு நன்கு எழுதப்பட்ட கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு பல வார, மாத இதழ்களில் வெளிவந்தன. அவற்றிற்கு எழுந்த வரவேற்பின் அடிப்படையில் அக்கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்பட்டு, எளிய, நேரடியான, தெளிவான நூல்களாக வெளியிடப்பட்டன. நரசு மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டார். ‘பவுத்தத்தின் சாரம்’ (1907), ‘பவுத்தம் என்றால் என்ன?’ (1916), ‘சாதி குறித்த ஆய்வு’ (1922), ‘பவுத்தம் சுருக்கமாக’ என்ற மற்றொரு நூலைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆனால், இந்நூல் கிடைக்கவில்லை. நரசு பல்வேறு தலைப்புகளிலும் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவை இன்னமும் சேகரிக்கப்படவில்லை. எனினும் நமக்கு கிடைத்திருப்பவை ‘சதர்மா’ குறித்து அவரது விளக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. அதோடு அவரது பரந்த அறிவுத்திறன், முதிர்ச்சியான சிந்தனை, எளிமையான தெளிவாக்கும் திறன் இவற்றிற்கு மேலாக அவரது சார்பற்ற நேர்மையான முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகின்றன.

1954இல் ரங்கூனில் நடந்த பவுத்த தோழமையின் 3 ஆம் உலக மாநாட்டில் அவரது இளைய சகாக்களான வி.பி.எஸ். மோனியர் மற்றும் ஆர்.பி. தங்கவேலனார் ஆகியோர் நரசுவின் எழுத்துகள் குறித்து கீழ்க்கண்டவாறு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்:

‘தங்கள் மக்கள் பின்பற்றக்கூடிய பவுத்தம் குறித்த பொருத்தமான ஒரு நூலை தேடிக்கொண்டிருந்த ஜப்பானியர்களை நரசுவின் ‘பவுத்தத்தின் சாரம்’ வெகுவாக ஈர்த்தது. இந்நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தனர். அந்நாட்டில் இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்தன. சுருக்கமாக, ஆனால் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட பவுத்தம் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கிய ‘பவுத்தம் என்றால் என்ன?’ எனும் சிறிய நூல், செக்கோஸ்லோவாக்கிய நாட்டின் முதல் அதிபரான ழான் மாரிக்கை பெரிதும் கவர்ந்தது. அவர் அதை தங்கள் மொழியில் மொழிபெயர்த்து, ஆசிரியருக்கு ஒரு பிரதியும் அனுப்பி வைத்தார். பின்னர் ‘இயற்கைத் தத்துவம்’ பற்றிய ஓர் இதழில் இந்நூலின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு வெளிவந்தது. அவரது மூன்றாவது நூல் ‘சாதி குறித்த ஆய்வு’ அவரது சமூக, அரசியல் சிந்தனைகளைக் கொண்டதாகவும் அவர் தனது காலத்தைக் கடந்து சிந்திப்பவராக இருந்ததை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது…”

உள்நாட்டைப் பொருத்தவரையில், ‘பவுத்தத்தின் சாரம்’ நூல் அம்பேத்கரை பெருமளவில் பாதித்தது. இதுவரை பவுத்தம் பற்றி வெளியான நூல்களிலேயே சிறந்தது இதுவென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ‘சதர்மா’ குறித்து அறிந்து கொள்ள விரும்பிய அனைவருக்கும் வேறுபாடின்றி அவர் இந்நூலை பரிந்துரைத்தார். 1948 இல் தனது முன்னுரையுடன் இந்நூலை அவர் மீண்டும் அச்சிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தர் குறித்தும் பவுத்தம் குறித்தும் வெளிவந்த பல்வேறு எழுத்துகளிலிருந்து நரசுவின் எழுத்து தனித்துவம் பெறக் காரணம் என்ன? பொருளாதாரத்தை விவசாயமயமாக்குதல், சமூகத்தைப் பார்ப்பனியமயமாக்குதல் என்ற காலனிய முயற்சியின் பக்க துணையாக அமைந்த புத்தரின் தொடக்கால எழுத்துகளின் கீழ்திசை கண்டுபிடிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுக்கு மாற்றாக, லட்சுமி நரசு விடுதலை தரும் பவுத்தத்தின் அடித்தளத்தை துணைக் கண்டத்தில் நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு அடித்தளமாகவும் அதன் மூலம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் விடுதலை பெற்ற சமூக வாழ்விற்கு இட்டுச் செல்லக் கூடியதாகவுமே அவர் ‘விடுதலை தரும் பவுத்தத்தை’ கட்டமைத்தார். அன்றைய காலத்தில் இருந்த பகுத்தறிவு மற்றும் மாந்த நேய சிந்தனைகளின் துணையை அவர் இதற்கு பெற்றார். ‘பவுத்தத்தின் சாரம்’ நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் இந்த செயல்திட்டம் விளக்கப்பட்டுள்ளது.

‘தனது ஆசானின் போதனைகளை எடுத்துரைக்கும்போது, அந்த போதனைகள் எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறதோ, அந்த அடிப்படைக் கருத்துகளை தவற விடாதிருப்பது சீடரை சார்ந்துள்ளது. புத்தரை பொருத்தவரையில், அவரது குரல் உண்மையை அடித்தளமாகக் கொண்டது. அதனால் உண்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ, அங்கெல்லாம் சீடர்கள் செல்ல வேண்டும். ‘எதுவெல்லாம் சரியான காரணங்களோடு இல்லாதிருக்கிறதோ, எதுவெல்லாம் உண்மையோடு பொருந்தாமல் இருக்கிறதோ, அவை எதுவும் ஆசானின் அறிவுரைகளாக இருக்க இயலாது’ என்பதே பவுத்தத்தை போதிக்கும் பள்ளிகள் அனைத்திலும் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழியாகும். தங்கள் மதத்தை குறித்து விளக்க வந்த அனைத்து முக்கிய பவுத்த எழுத்தாளர்களும், பகுத்தறிவு மற்றும் உளவியலின் துணையை நாடியுள்ளனர். சிந்தனையின் பொதுவான நம்பகத் தன்மை குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறையின் காரண மாக, பொதுவாக தங்களுடைய மதத்தின் அடிப்படையாக கருதப்படும் சூத்திரங்களை, அவர்கள் பெரும்பாலும் ஒதுக்கியுள்ளனர். ஒரு பவுத்தர் என்ற நிலையிலிருந்து மாறாமல், தொடக்கக் காலத்திலிருந்து நிலவி வந்த பவுத்த மரபை பின்பற்றியே நூலாசிரியர், நவீன அறிவுத் தெளிவோடு பவுத்தத்தை தெளிவாக்க முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பவுத்தத்திற்கு ஒரு நவீன தன்மையை அளித்துள்ளார் என்றால், அது நவீன சிந்தனைகளோடு சிறிதளவு பவுத்தத்தை கலந்து தருவதாக அல்லாமல், அனைத்து வகையான பவுத்த மரபுகளின் அடி ஆழம் வரை சென்று, அடிப்படையான உண்மைகளை வெளிக்கொணர்வதின் மூலமேயாகும்.”

அனைத்து வகையான சீர்திருத்த எதிர்ப்புகள், மத மூடத்தனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றாக பவுத்தத்திற்கு அவர் அளித்த பகுத்தறிவும் விடுதலை உணர்வும் மிக்க விளக்கமும், சமூக மூடத்தனத்தின் மிகக் கேடான வடிவமான சாதியை அதன் அத்தனை நுட்பமான, காலத்திற்கேற்ற விளக்கங்களோடு, நரசு தனது எழுத்துகளில் விவரித்த தன்மையும், நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்குதலில் பெரும் பங்காற்றியது. இந்தியாவிற்குள், அவ்வாறு இன்னமும் அங்கீகரிக்கப்படாத போதிலும், அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடியாகவே நரசு நிற்கிறார். அம்பேத்கரின் எழுத்துகளுடன் இணைந்து நோக்கும்போது, துணைக் கண்டத்தில் ஒரு மனிதநேய சமூகத்தை அமைப்பதில் ஒரு சாத்தியமான விரும்பத்தக்க கொள்கை நெறியாளராகவே நரசு திகழ்கிறார்.

தமிழாக்கம்: பூங்குழலி

நன்றி: தலித் முரசு (& கீற்று)

February 21, 2007

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Filed under: பின்-நவீனத்துவம் — டிசே தமிழன் @ 11:25 pm

(அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள ‘முழக்கம்’ பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி ‘கட்டவிழ்ப்பு’ என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், ‘சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்….’ என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் ‘கொடுங்கோலன்’ சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

”அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்’ என்று ‘கறுப்பு’ தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை ‘மறுவாசிப்பு செய்தல்’ என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். ‘எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்’ என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). ‘பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே’ என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த ‘உண்மையை’ கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு ‘உண்மையை’த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் ‘ஒரு பேப்பரில்’ எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு ‘உண்மை’ துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் ‘இந்திய தத்துவங்களின் அரசியல்’ நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

‘…மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.’

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் ‘ஆசிரியர் இற்ந்துவிட்டார்’ என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு ‘பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே’ என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் ‘வைகறை’யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் ‘அவன் அதுவானது’(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்… இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது ‘எதையும் சந்தேகித்தல்’ என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ‘என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது’ என்று சொந்தங்கொண்டாடி ‘பாசிசம்’ நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். ‘பாசிசம்’ இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை ‘விருத்தி’ செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது… ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு ‘தேசிய’ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, ‘நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்’ என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, ‘அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்’ என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது ‘காற்றுவெளிக்கிராமம்’ பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி… வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், ‘சமாதான காலம்’ வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய….. மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ… தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் ‘ஞானக்கண்’ணாலாவது பார்க்குக.

…..ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு ‘தமிழ் ஒரு நீசபாசை’ என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் ‘பெரும்பயத்தை’ முன்வைத்தபோது, ‘எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய’ - என்னுடடைய பல ‘பெருங்கதையாடலகளை’ தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

February 18, 2007

சமாதானம் மிக அழகானது

Filed under: திரைப்படம் — டிசே தமிழன் @ 11:09 pm

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவர்களின் ஒடுக்குவதற்கான ஆதிக்கமும் சிந்தனைகளும் நாடுகளுக்கிடையில் அவ்வளவாய் வித்தியாசப்படுவதுமல்ல. இவ்வழியால் வாருங்கள் என்று ஏ9 நெடுஞ்சாலையை ஊடுருவிச் செல்லும் இப்படத்தில் எல்லா இன மக்களும் வருகின்றார்கள். போரை அவரவர்களின் பார்வைகளால் பார்க்கின்றார்கள். இறுதியில் தாம் நினைத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல சரியான பார்வை; நாம் அறியாத இன்னும் பல விடயங்களும் இருக்கின்றன என்ற புரிதல்களையும் பெற்றுகொள்ளுகின்றார்கள்.

சமாதானம் வந்து, ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. சமாதானம் வந்து ஏ9 திறக்கப்பட்டாலும் தமது உரிமைகள் முற்றுமுழுதாக தரப்படாதபோது இந்நெடுஞ்சாலை திறக்கப்படக்கூடாது என்று -தன் சக போராளிகளின் இழப்புக்களை நினைத்தபடி- கதறும் ஒரு போராளியின் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கின்றது. புத்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற நாகதீபத்தை(நயினாதீவை) பார்க்க ஒரு சிங்களக்குடும்பமும், 90களில் யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு புத்தளத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பமும் ஏ9 பாதையினூடாக பயணிக்கின்றது. சிங்களக் குடும்பம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் செய்திகளைக் கேட்டு தமக்கான அரசியலை வைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் மகள் பlகலைக்கழக இறுதியாண்டு மாணவி, ஜே.வி.பி சார்பு நிலைகொண்டவர். அவரது தம்பியோ சராசரி இளைஞன். அக்காவின் புரட்சிக்கனவுகளை தொடர்ந்து பகிடி செய்துகொண்டேயிருப்பவன். அவனுக்கு கல்பனா என்று பாடுகின்ற ஒரு சிங்களப்பெண்ணின் மீது ஈர்ப்புண்டு. இவர்கள் ஏ9 பாதையின் இடைநடுவில் முஸ்லிம் குடும்பத்தைச் சந்திக்கின்றார்கள். முஸ்லிம் குடும்பம் தாம் தமது பூர்விக நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட துயர்களை பகிர்கின்றார்கள். நதி (வளாக மாணவி) தான் தமிழர்களைப் பற்றி நினைத்தது சரியென்ற இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வருகின்றார்.

இரவில் தங்க இடமில்லாது சிங்களக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் தவிக்கையில், நதியோடு கொழும்பு வளாகத்தில் படித்து சில வருடங்களில் படிப்பை நிறுத்திவிட்டு யாழ் போன தனது (தமிழ்)தோழன் ஒருவரை வீதியில் நதி காண்கின்றார். அந்த இளைஞன் நதியுடன் பேசுகின்றபோதும், அவர் தமிழரென்றபடியால் நதிக்கு -அவரில் நம்பிக்கையில்லாது- அவரின் வீட்டில் போய் தங்கவிரும்பமில்லாது இருக்கின்றார். அந்த இளைஞர் NGO ஒன்றில் வேலை செய்துகொண்டு ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்கியிருக்கின்றார். ஆசிரியரின் மகன் இயக்கத்துப்போய் சமாதானம் வந்ததால் -இயக்கத்திலிருந்து விலகி- வீட்டுக்கு வருகின்றார். போராளியாக இருந்தவருக்கு இப்படி சிங்களக் குடும்பம் தங்கள் வீட்டில் வந்து நிற்பது அவ்வளவு உவப்பானதில்லை. எனவே அவர் தொடர்ந்து வீறாப்பாய் திரிந்துகொண்டிருக்கின்றார்.

அந்த ஆசிரியரின் மகளுக்கு NGO வில் வேலை செய்யும் இளைஞர் மீது ஈர்ப்புண்டு. ஆசிரியரின் மகள் பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமிக்கு நடனம் சொல்லிக்கொடுக்கின்றார். நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கான கனவில் இருக்கும் சிறுமிக்கு, மிதிவெடியில் கால் போகின்றது. அந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கின்ற சிங்களக் குடும்பத்தினருக்கு -முக்கியமாய் ஜேவிபி ஆதரவாய் இருக்கும் நதிக்கு- தனது போர் குறித்த பார்வைகளை மீளாய்வு செய்யவேண்டிய அவதி வருகின்றது. தமிழ் ஆசிரியரும், அந்த சிங்கள குடும்பத்தலைரும் தொடர்ந்து அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த தமிழ் ஆசிரியர் ஒரு முன்னாள் சமசமாஜக் கட்சி உறுப்பினர். எப்படி பண்டாரநாய்க்கா குடும்பம் தமிழர்களின் உரிமைகளைச் சூறையாடுகின்றது என்று விரிவாக உரையாடுகின்றார். எனினும் சிங்களக் குடும்பத்தலைவருக்கோ, எப்படி தமிழர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தினரை தாழ்த்தலாம் என்ற கெளரவப்பிரச்சினை அல்லது இனப்பிரச்சினை(?).

நோயுடன் இருக்கின்ற சிங்களக் குடும்பத்தலைவருக்கு, மிதிவெடியில் அந்தச்சிறுமி கால்களை இழந்ததைப் பார்த்தவுடன் இதய அழுத்தம் கூடி சில நாட்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கவேண்டியதாய்ப் போகின்றது. இதற்கிடையில் நதிக்கு, அந்த NGO இளைஞர் மீது ஈர்ப்பு வருகின்றது, இளைஞருக்கும்தான். எனினும் இறுதியில் இளைஞருடனான ஆசிரியரின் மகளின் காதல் வென்றுபோகின்றது.

மீளவும் குடியேறுகின்ற முஸ்லிம் குடும்பத்தினரை வறுமை விரட்டுகின்றது. தங்கள் வீட்டில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததால் பக்கத்துவீட்டில் தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு இருப்பதற்கு இடமிருக்கின்றதே தவிர, பசிக்கு உணவிருப்பதில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்மணியோ சற்று மனப்பிறழ்வான இளைஞனை பணஞ்சம்பாதிக்கத் துரத்துகின்றார். வேறு வழியில்லாத அவர் ஒரு திருடனாகின்றார். இனியும் பட்டினி தாங்க இயலாது என்கின்ற நிலை வருகின்றபோது பக்கத்துவீட்டு பெண்ணிடம் அகதி முகாமிலிருந்தபோது செய்த பாலியற்தொழிலை தனக்கும் கற்றுத்தாவென்று புத்தளத்திலிருந்து வந்த குடும்பத்தின் மகள் கதறியழுகின்றார். இப்படியாக நமது நிலை போய்விட்டதேயென்று பித்துப்பிடித்தபடி மிதிவெடி அகற்றப்படாத வீட்டிற்குள் அந்த பெண்ணின் தகப்பன் கதறியபடி ஓடுகின்றார்.

பல்வேறு கிளைகளாய் கதை நகரும் இப்படத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டிருப்பது போர் தந்த வலிகளும், அதிலிருந்து எப்போதாவது மீள்வோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களின் அசையமுடியாத நம்பிக்கையும்தான். இனங்களை, மொழிகளை மீறி நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது மனித நேயமே என்று கூறியபடி படம் முடிகின்றது. கடந்தகாலத்தை இனி மாற்றமுடியாது ஆயினும் நமது எதிர்காலத்திலாவது போரில்லாது வாழும் சிந்தனையாவது நாமெல்லோரும் வளர்க்கவேண்டும் என்ற சிறுவிதையை இப்படம் விதைக்கின்றது. சமாதானம் மிக மிக அழகானதுதான். வேறு வழியில்லாது பாலியல் தொழில் செய்தாவது பிழைப்போம் என்று கதறுகின்றபோது அந்த முஸ்லிம் பெண் சொல்வார்…. சமாதானமாம் சமாதானம் மண்ணாங்கட்டி! அதுதான் நம் நிகழகாலமாய்ப் போய்க்கொண்டிருப்பதுதான் மிக அவலமானது.

இப்படத்தின் உரையாடல்கள் மிகக் கூர்மையானவை. உரையாடுகின்றபோது மொழிப்பிரச்சினை வருகின்றபோது நதிக்கு, தமிழ் இளைஞர் கூறுவார், அரசகரும மொழியாக இருக்கும் மொழியையே நீங்கள் கற்றுக்கொள்ள முன்வராதபோது எப்படி எங்களுக்கான உரிமைகளை புரிந்துகொள்ளுவீர்களென்று. அதேபோன்று போரின் அழிவுகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்….? கொழும்பில் குண்டுவெடிக்கும்போதும், கனத்தை மயானத்தில் இராணுவ உடல்கள் எரியூட்டப்படும்போதும் மட்டுமே கொழும்பிலிருப்பவர்களுக்கு போர் நடப்பது தெரிகின்றது. மற்றும்படி போரின் அழிவுகளை உணர்ந்திருக்கின்றீர்களா? என்பது கத்தியாய் இறங்கும் வசனம்.

இன்னொரு காட்சியில் குளித்துவிட்டு நதி குங்குமப்பொட்டை வைத்து அழகுபார்க்கும்போது, அந்த இளைஞன் சலனமடைந்து அவரைத் தொட முயல்வார். அதற்கான காரணமாய் இளைஞன் கூறுவார், உனது குங்குமப்பொட்டு என்னைச் சலனமடையச் செய்துவிட்டது என்று. அதற்கு நதி, எந்தப்பொண் குளித்துவிட்டு வந்தாலும் எந்த ஆணும் ஆசைப்படத்தான் செய்வான்; உன் தமிழ் அடையாளத்தை சாட்டாய் வைத்து அதை நியாயப்படுத்தாதேயென்று கூறுவார். அதுபோல், தமது மகன் இரவில் எங்கையோ போய்விட்டார் என்று சிங்களக்குடும்பம் தெருவில் தேடிக்கொண்டிருக்கின்றபோது, அதைப் பார்த்து ஒரு தமிழ்த்தாய், என்னுடைய மகனும் இப்படித்தான் பாடசாலைக்குப் போகின்றேன் என்று போனான் இன்னும் திரும்பிவரவில்லை, யாராவது கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கதறும்போது (செம்மணியையும் இணைத்துப்பார்க்கலாம்) எல்லாத் தாய்மார்களின் சோகமும் ஒன்றுதான் என்பது புரியும். இன்னொரு காட்சியில் காலிழந்து இருக்கும் சிறுமியை சிங்கள இளைஞன் சந்திக்கும்போது, அந்தச் சிறுமி சொல்வார், ‘அண்ணா கொழும்பு போனாப்பிறகு ஒரு கால் அனுப்புவீங்களா? நான் நடனம் ஆடவேண்டும்.’ இந்த வார்தைகளின் பின்னிருக்கும் பெருஞ்சோகத்தை வேறு எது சொல்லிவிடும்? படத்தில் படிமமாய் ஒரு பெண் சிவப்புச் சேலை கட்டியபடி போய்க்கொண்டிருக்கின்றார். சிலருக்கு மட்டுமே - போராளி இளைஞனுக்கு, சிங்களக் குடும்பத்த் தலைவருக்கு, அவரின் மகனுக்கு- மட்டும் தெரியவதாய்க் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணை பார்க்கும் நாம் சமாதானமாய் உருவகித்துக்கொள்ளலாம். கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்தாலும் ஒவ்வொருமுறையும் நழுவியபடி இருக்கின்றது சமாதானம் என்றவகையிலும் விளங்கிக்கொள்ளலாம்.

இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு, எளிமையான உரையாடல்களால் கூட மிகப்பெரும் அரசியல் புள்ளிகளைக்கொண்டுவரும் நெறியாள்கையாளரின் படைப்புத்திறன் எவ்வளவு நுட்பமானது என்பது புரியும். இதைப் படமாய்ப் பார்த்தாலும், ஒரு தொலைக்காட்சி தொடராய் இது எடுக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். எந்த முறையில் எடுக்கப்ப்ட்டாலும் பார்க்கும்போது அது நம்மை பாதிக்கின்றதா இல்லையா என்ற கேள்விதான் முக்கியமானது. அந்தவகையில் இந்தப்ப்படைப்பு வெற்றி பெறுகின்றது. எல்லா நடிகர்களும் மிக இயல்பாய் நடிக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நடக்கும் காட்சிகளில் வரும் உரையாடல்கள் எல்லாம் அப்படியே ஊரின் பேச்சு வழக்கை நமக்கு நினைவூட்டுகின்றன. புலம்பெயர்ந்த நாட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் கூட செயற்கைத்தனமான உரையாடல்கள் இருக்கும்போது ஒரு சிங்கள இயக்குனரால் இதிலெல்லாம் எப்படி கவனம் எடுக்க முடிந்தது என்ற வியப்பு வராமல் இருக்க்முடியவில்லை என்பது மட்டுமில்லை இப்படி யதார்த்தமாய் சின்ன சின்ன காட்சிகளின் மூலம் போர் தந்துகொண்டிருக்கும் அழிவுகளை நம் எல்லோரையும் பாதிக்கச் செய்வதைப்போல ஏன் எந்தவொரு தமிழ் படைப்பாளியாலும் எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வருகின்றது. இன்னமும் தேசியம் X எதிர்த்தேசியம் என்ற உரையாடலை விட்டு வெளியேறாத ஈழத்தமிழ்ச்சூழ்லிருந்து இதையெல்லாம் எதிர்ப்பார்ப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.படைப்பாளி என்றவகையில் A Lankan Mosaic என்ற தொகுப்பிலிருந்து அசோக ஹந்தகமவின் ஒரு கதையை (Don’t Open the door Parvathi) அண்மையில் வாசித்தேன். அது இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்தால் ஒரு தமிழ்ப்பெண் பாலியல் வன்முறைக்குள்ளாகும் புள்ளியுடன் முடிகின்றது. அதில், இந்திய இராணுவத்தில் நம்பிக்கை கொள்ளும் தமிழ் மக்களை நோக்கி படைப்பாளி ஒரு கேள்வி எழுப்புவார். இத்தனை காலம் சொந்தமண்ணிலேயே இருக்கும் இராணுவமே இத்தகை கொடூரங்களைச் செய்ததைப் பார்த்தபின்னும் எப்படித்தான் இந்தமக்கள் இன்னொரு நாட்டு இராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள் என்று. இதிலிருந்து, நாம் அருகிலிருக்கும் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் புரிந்துகொள்ளாது வேறு நாடுகள் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பதன் அரசியலையும் ஒருமுறை மீளாய்வு செய்யலாம்.

கலைஞர்களுக்கு இனம், மொழி என்ற பாகுபாடு இருப்பதில்லை. மானிட நேசம் என்பதே அவர்களின் விரிந்த எல்லையாக இருக்கும். நாம் நமது நடுநிலை என்ற புள்ளிகளை நிரூபிப்பதற்கு பெரும்பாடு பாடுவதை விடுத்து, உண்மைகளை முன்வைத்து உரையாடல்களை ஆரம்பிப்பதே உன்னதமாயிருக்கும்.

அசோக ஹந்தகமாவின் பிற படங்கள்:
Chanda Kinnari
Me Mage Sandai (This is my Moon)
Thani Thatuwen Piyambanna (Flying with one wing)
Aksharaya (Letter of Fire)

வசீகரிக்கும் படைப்பாளி -ச.இராகவன்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 2:52 pm

அண்மையில் வாசித்த நேர்காணல்களில் வசிகரீத்த நேர்காணலில் இதுவும் ஒன்று. போர்ச்சூழலுக்குள்ளிலிருந்து இவ்வளவு தீவிர வாசிப்பும், தீர்க்கமான எழுத்துச் சிந்தனையும் உள்ள ஒருவரை கண்டு கொண்ட மகிழ்ச்சிதான் வந்தது. இராகவனுடனான நேர்காணலை பா.துவாரகன் செய்திருந்ததார். வைகறை பத்திரிகையிலிருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றேன். (~டிசே)

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது.”

-ச.இராகவன்-

இலக்கிய, சினிமா விமர்சகராகவும் கவிஞராகவும் தீவிர வாசகனாகவும் இயங்குகின்ற ச.இராகவன் தன்னை ஒரு கதைசொல்லியாக அடையாளம் காண்பதன் ஊடாகப் படைப்புலகில் தடம் பதித்து வருவதுடன் ஈழத்தின் புனைகதையாளர்களில் தற்புதுமையானதும், வடிவம் அழிந்ததும், வரையறைக்குள் அமையாததுமான சிறுகதைகளை - அதிகதைகளை இந்தியச் சிற்றிதழ்களில் அறிமுகம் செய்து வருகின்றார். மு.த. கனவு கண்ட மெய்யுளை (இது ஒரு கோட்பாடல்ல) நோக்கி, கடந்து செல்லும் நதியாக இவரது எழுத்துக்கள் நகர்ந்து செல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்து இலக்கிய உலகிலும் (புலத்திலிருந்து செயற்படும் ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்களிலும்) அதிகதைகள் பற்றிய பரிச்சயமின்மையை அவதானிக்க முடிகின்றது. இராகவனது
அண்மைக்காலச் சிறுகதைகள் இவ்வகை அதிகதைகளாக, வாசகன் தானே கதையை உருவாக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான பன்முகத்தில் இவரது கதைகள் அதிகம் பிரசுரமாகியுள்ளன.

“பன்முகம்”-கலை இலக்கிய கோட்பாட்டு இதழ் - ஈழத் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஒரு சிற்றிதளாக இருந்து வருவதும், இராகவனின்சிறுகதைகளை உள்ளூர் , வெளியூர் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் பிரசுரிக்க மறுத்து வருவதும் ஆச்சரியமான ஒன்றல்ல. பன்முகத்தில் பிரசுரமான இராகவனின் ‘சதுரம்” , “எதிர்நோக்கு”, “கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி” ஆகிய மூன்று சிறுகதைகளும்; பாலியலை பற்றியனவாக இருந்த போதும் அவை வாசகனிடம் விட்டுச் செல்லும் , உருவாக்கும் கதைகளும் ஈழத்து இலக்கியச் சூழலிற்கு அந்நியமானவையே.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘தெரிதல்” சிறு சஞ்சிகையில் ‘ஜனரஞ்சகப் போலிகள்” என்ற தொடரை எழுதி ஜனரஞ்சக எழுத்தாளர்களின் போதைêட்டும் எழுத்துக்களை அம்பலப்படுத்தி சர்ச்சைக்குள்ளானவரான இராகவன் கடந்த இரு தசாப்தத்திற்கும் மேலாக ஈழத்திலும், புலத்திலும் நிலவி வரும் இலக்கியச் சூழலையும், படைப்பாளிகள் , படைப்புக்கள் குறித்த தனது அவதானத்தையும், A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள யாழ் நகரில் இருந்து வைகறை வாசகர்களுடன்; பகிர்ந்து கொள்கின்றார்.

• சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம் என்று பல்வேறு துறைகளிலும் ஆழமாகத்தடம் பதித்துவரும் நீங்கள்கலை-இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

உங்களுக்கு ‘இராகவன்” என அறிமுகமாகும் நான் 11-08-1976 காலப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டேன்.(சத்திரசிகிச்சையொன்றின் மூலமாக). பிறப்பிடம் வெள்ளாளர் மிகுந்து வாழும் கரவெட்டி. முதலாம் தரத்திலிருந்து ஏழாந்தரம்வரை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்திலும் எட்டாந்தரத்திலிருந்து பன்னிரண்டாந் தரம் வரை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்று பின்னர் உயர்தரப்பரீட்சையில் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத் துறையில் நான்கு வருடங்கள் பயின்று 2002 காலப்பகுதியில் ஒரு முகாமைத்துவப்பட்டதாரியாக வெளியேறி இப்போது யாழ். பிரதேசசெயலகத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி மகாசங்கத்தில் பதில் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிவருகின்றேன்.

சிறுவயதில் நான் மற்றவர்களால் கீலா இராகவனாக அடையாளங்காணப் பட்டிருந்தேன். அப்போதே அதிகமாகக் கதைக்கத்தொடங்கியிருந்தேன். நான் கதைப்பதைக்கேட்க எதிரே யாராவது இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடன் நானே கதைத்துக்கொண்டிருப்பேன். அப்போது உயர்திணை அஃறிணை எனப் பல்வேறு பாத்திரங்களை நான் வகிக்கவேண்டியிருக்கும். அர்த்தம் அர்த்தமின்மை குறித்த கவனம் எனக்கிருந்ததில்லை அப்போது எனக்குப் பரவசந்தந்த நிகழச்சியென்றால் இவ்வாறாகத் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதுதான். இந்த எல்லையற்ற கதையாடல் மூலமாக நான் சந்திக்கநேரும் மனிதர்களுக்கெல்லாம் ஒவ்வொரு படிமத்தை வழங்கி மகிழக்கூடிய நிலையில் இருந்தேன். அப்போதுதான் ஓர் உண்மை புலனாகியது. ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து அவதானித்தால் அவர்களில் பறவைகள், மிருகங்களின் சாயலைக்காணலாம் என்பதுதான்.

அந்தப்பேருண்மை. இதே போன்று எனது இடைவிடாத அவதானங்களிலிருந்து சேகரித்த தரவுகளைப் பொதுமைப்படுத்தும் போது புதிய தத்துவங்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. புதிய தத்துவம் வெளிப்படுத்தப்படும் வரை பொறுத்திரடா ராசா என்பது என்னிடம் இருந்த தத்துவ வாக்கியங்களில் ஒன்று இவ்வாறாக நாளும்பொழுதும் கதையளந்து கொண்டு திரிந்த எனக்கு அளக்கின்ற கதை எதுவானாலும் எழுத்தில் கொணருவதற்கான எண்ணம் ஒரு புள்ளியாக உருவாகி விரிவாகி மிகத் தொடங்கியது. அதற்கான எத்தனிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் விளைவே நான் கலை இலக்கிய உலகிற்குள் நுழைய நேர்ந்த பின்னணி என்பேன்.

• விமர்சனத் துறையா அல்லது படைப்புத் துறையா உங்களை முதலில் ஈர்த்தது?

புனை கதைதான் எனது இலக்கிய எத்னிப்பின் அடித்தளம். இதனால் நான் அதன் வழியாகத்தானே நுழைந்திருப்பேன்.

• உங்களது முதல் சிறுகதை அல்லது படைப்பு, அது பிரசுரமான ஊடகம்:

சிறுகதை என்று நான் கருதிய வெறுங்கதை “சந்தேகக் கோடு” பிரயோகித்த புனைபெயர் இராகினி ரங்கராஜன் பிரசுரமான ஊடகம் மித்திரன் வாரமலர் அனேகரால் சிறுகதை என அங்கீகரிக்கக் கூடிய படைப்பெனப் பார்த்தால் ‘நாய்கள் குரைக்கின்றன” பிரயோகித்த புனைப் பெயர் சுதா
ரஞ்சன் பிரசுரமான ஊடகம் - சரிநிகர் இதழ் 221.

சிறுகதையின் உருவமைப்பில், கதை சொல்லும் முறையில் புதிய உத் திகளைக் கையாண்டு வருகின்றீர்கள், இந்தப் புதிய கட்டமைப்பு முறையைப் பிரயோகிப்பதற்கான தூண்டுதலை எவ்வாறு பெற்றீர்கள்?

தூண்டுதல் எனப் பார்த்தால் இரு முக்கிய விடயங்களைச் சொல்வேன்.
1. நாளொன்றுக்கு திருவிவிலியத்திலிருந்து நான்கு பக்கங்கள் வீதம் வாசித்துவருகிறேன். அத்தருணங்களில் அற்புதமான உத்திகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும்.
2. தமிழ் நாட்டின் அதிமுக்கிய இலக்கிய கோட்பாட்டாளரான எம்.ஜி.சுரேஷ் காலாண்டுக்கு ஒருமுறை வெளிக்கொணரும் பன்முகம் நவீன இலக்கிய கோட்பாட்டு இதழைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக இதழின் முகம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அதில் யுவன் சந்திரசேகர் எழுதியிருந்த ‘1999இன் சிறந்த கதை” எனும் தலைப்பில் அமைந்த சிறுகதை என்னுள் ஏற்படுத்திய அதிர்வு என்பது அளப்பரியது.(குறிப்பு: 8வது வினாவுக்கும் 4வது வினாவுக்கான விடை முழுமையாகப் பொருந்தும். 8 வது வினா-’எதிர்நோக்கு”- சிறுகதை , அதிகதைகளுக்கான இதழில் வெளிவந்த சிறுகதைகளிற்கு வாசகர்கள் எழுதிய விமர்சனங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழிற்கு இது புதுமையான முயற்சி இக்கதை உருவான பின்னணிச் சூழல்:)

குறியீடுகள், தொன்மங்கள், பகுப்பு என்பவற்றுடன் புதிய வடிவில்; சில ஆண்டுகளிற்கு முன் கணையாழியில் வெளிவந்த ‘சதுரம்” சிறுகதையின் தலைப்பும் கட்டமைப்பும்பற்றி, விக்கிரமாதித்தன் கதையுடன் ஆரம்பமாகும் கதை சொல்லும் முறை:அது சதுரத்திற்கு வெளியே நிலவும் அரசியல் சூழலை பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தொன்மம் வெளிச் சூழல் எவ்வளவுதான் நெருக்கடி மிகுந்ததாக இருப்பினும்அந்த நெருக்கடியை சற்றேனும் உணராதவர்கள் சதுரத்தினுள் இயங்குகிறார்கள்.
இதை நடைமுறையில் சாதாரணமாக காணக்கூடியதாக இருக்கிறது.

சதுரம் - பாலியல் உணர்வு, உறவு,பாலுறுப்புக்கள் பற்றிப் பேசுவதாகவும் இக் கதை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
எவரும் எழுதத் துணியாத விடயங்களை நீங்கள் எழுதியுள்ளதாகக் கருதலாமா?

இந்தக் கதையை வெளியிட்டதால் கணையாளியின்
ஆசிரியர் பீடத்திலுள்ளவர்கள் மாற்றப்பட்டதாக செவிவழிக் கதையொன்று நிலவுகிறது. இது திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கும் அபத்தமான கதை என்றே கருதலாம். இந்தக் கதையினால் வெகுவாகப் பாதிப்புக்குள்ளான ஒருவர் அல்லதுஒரு குழுவே இச் செவிவழிக் கதையை புனைந்திருக்கலாம் என நம்புகிறேன். எவரும் எழுதத் துணியாத விடயங்களை நான் எழுதிவிடவில்லை. எஸ்.பொ.இதைவிட பெரும் எடுப்பில் தீயைப் புனைந்திருக்கிறார்.

• இலங்கைத் தமிழச்; சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதாகக் கருதப்படுகின்றது. உங்களது கதையில் ஆண்பாலுறுப்பில் இருந்து வெளி வரும் நாற்றம் பற்றிய பகுதியில் மன்மதக்குமிழை பெற்றோல் ஊற்றிக்
கழுவவேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனை:

“இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல்பற்றி எழுதுவது தவறாக கருதப்படுகின்றது”, என்ற கூற்றில் ஒரு சிறு திருத்தம் இலங்கைத் தமிழ்ச் சூழலில் பாலியல் பற்றி எழுதுவது தவறானதெனப் பாவனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் அநேகர் தங்களை உத்தமர்களாகக் காட்ட எத்தனிக்கின்றார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து அவதானித்தால் பாலியல் வேட்கைமிகுந்தவர்களாக அவ்வுத்தமர்களை இனங்காணக் கூடியதாகவும் இருக்கும். சதுரம் வெளிப்படுத்த முனைவது சில சமூகப்பிராணிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தான். தவிரவும் இது ஒரு புனைவு. மதன்மதக் குமிழைப் பெற்றோல் ஊற்றிக்கழுவவேண்டும் என்ற மருத்துவரின் கூற்று சரியா? தவறா? என்பது அல்ல முக்கியம் சதுரத்தினுள் இயங்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கிடையிலான அற்பத்தனமான முரண்பாடுகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளனவா? என்பது தான் முக்கியம்.

பன்முகம் கலாண்டு இதழில் (ஜனவரி-மார்ச்2006)வெளிவந்த ‘எதிர்நோக்கு” சிறுகதையில் செண்பகப் பெருமாள் எழுதிய சம்பவங்கள் என்ற குறுங்கதையில் - தமிழ்மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் பகுதியைக் கண்டித்து வாசகர் சுட்டி காட்டி எழுதிய பகுதியை வாசித்தபோது அசோஹா ஹந்தகமவின் திரைப்பட This is my moon நினைவிற்கு வந்தது. நான் இதுவரை This is my moon என்ற திரைப்படத்தைப் பார்க்கவில்லை. போர்ச் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வரும் நிலையில் அநேகரது சிந்தனைகள், படைப்பாக்க முயற்சிகள் ஒரே தளத்தில் வெளிப்பாடடையலாம். செண்பகக் பெருமாளின் சம்பவங்கள் வாசித்த பிறகு நீங்கள் This is my moon ஐ பார்த்திருந்தால் சம்பவங்கள் உடனடியாக நினைவில் மேலோங்குவதை தவிர்க்க முடியாமலிருக்கும்.அதேவேளை இச்சிறுகதையில் சொல்லப்படும் குறுங்கதையான ‘வதைப்பாடு” இல் இலங்கையில் சிறையில் கொடூரமான சித்திரவதைக்குள்ளாகும் தமிழ் இளைஞர்,யுவதிகள் மீது மேற்கொள்ளப்படும் வதைகளை வாசித்தபோது சில காலத்திற்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கோயில் அட்சகர் ஒருவர் நீதிமன்றில் அளித்த சாட்சியம் எதிர் ஒலித்தது.
இதில் விசேடமாக குறிப்பிடக் கூடியஅம்சங்களாக,
1. “எதிர்நோக்கு” என்ற புனைக் கதையால் நீங்கள் அதிர்வுக்குள்ளாகி இருககின்றீர்கள்.
2. “வதைப்பாடு” என்பதன் மெய்மை மீள நிறுவப்படுகிறது என்பவற்றைக் கருலாம்.
இந்த வகையில் ‘எதிர்நோக்கு” தோல்வியைத் தழுவவில்லை.

• உங்களது இக்கதையின் முதற்பகுதியில் வெளிவரும் மழைப் பிரம்மனின் முப்பத்தேழாம் பாதம் என்ற அதிகதை பற்றி வாசகர் எழுப்பும் சந்தேகம் - நான் 37 தடவை வாசித்தும்விளங்கவில்லை என்று குறிப்பிட்டு
இதுபோன்ற அதிகதைகளுக்கு அடிகுறிப்பிட்டதை: (இப்பகுதியை 3 தடவைகள் படித்த பின்பே சொல்லவந்ததைப் புரிந்து கொண்டேன்).

அதிகதைகள் தொடர்பாக ஒரு சாதாரண வாசகன் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கருத்தின் வெளிப்பாடுதான் அந்தக் குறிப்பிடல். அதிகதைகளில் ஒருதேர்ந்த வாசகன் கதையை எதிர்பார்க்கக்கூடாது.அவனாகவே தனது சிந்தனை ஆற்றலால் கதையை உருவாக்க வேண்டும். கதையை நிகழ்த்துபவர் வெளிப்படையாக ஒரு கதையைச் சொல்வதன் மூலம் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார். இந்நிலையில் வாசகனின் சிந்தனைச் செயற்பாடு குறுகிப்போகிறது. வாசகன் தானாகவே ஒரு கதையை உருவாக்கிக் கொள்ள நேரும் போது அவன்சிந்தனை எல்லை கடக்கிறது. அவனே ஒரு கதையை நிகழ்த்தி பரவசமடைகிறான். இதிலும் எல்லா வாசகர்களும் ஒரு பொதுவான கதையை உருவாக்குவதில்லை.

வேறு கதைகளை உருவாக்கி பரவசமடைகள் உருவாக அனுமதிக்கின்றது. இந்நிலைப்பாட்டின் ஒரு கூறாகவே மழைப்பிரம்பனின் இயக்கம் குறித்து நீங்கள் ஒரு கதையைஉருவாக்கி இருக்கின்றீர்கள். இன்னொருவர்
வேறொரு கதையை உருவாக்குவார். இதுதவிர்க்க முடியாததாகும். ‘ங” இதழில் வெளிவந்த எட்டு அதி-கதைகளைப் பற்றிய வாசகர்களது கடிதங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இச் சிறுகதையில் மூன்று சிறுகதைகளைப் பற்றியே அறியமுடிகின்றது ஏனயை சிறுகதைகளான வெயில்திரவம், தாவர இளவரசன் மகாசேனன், உத்தரவும் 108 பல்லிகளும், திருவுரு, யாழி, ஆகிய கதைத் தலைப்புக்கள் வாசகனிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தவல்லன.

இதுவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது இயலுமைக் கேற்ப கதைகளை உருவாக்க அனுமதிக்கும் எத்தனிப்பே இங்கே கதைகள் மர்மப் பகுதிகளைக் கொண்டிருப்பதால் வாசகன் அந்த மர்மப் பகுதிகள் மீது நாட்டம் கொள்வான். அதன் விளை உருவாக்கப்பட மர்மப் பகுதிகள் அகலும். இது அவனுக்கு அளப்பெரும் பரவசத்தை நல்கும் என நம்பலாம்.

• உங்களது ஆரம்பகாலக் கதைகளிற்கும் இன்றைய கதை சொல்லும் முறைக்கும் இடையில் காணப்படும்
மாறுதலை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஆரம்பக் காலங்களில் வாசகன் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்லும் உத்தியை அல்லது முறையைப் பிரயோகித்து வந்தேன். தற்போது வாசகனே கதைகளை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கும் விதத்தில் வெளிப்படையாகக் கதை சொல்வதென் பதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறேன்.

• நீங்கள் நாவல் எழுத முயற்சிக்கவில்லையா? (நாவல் எழுதியிருந்தால் அதுபற்றிச் சொல்லவும்)

இதுவரை எத்தனிக்கவில்லை. எழுதும் நோக்கம் இருக்கிறது. எழுத நேர்ந்தால்அத்தருணத்திலும் வாசகனைத்தான் புதினத்தை உருவாக்கிச் செல்லத் தூண்டுவேன்.

• உங்களது கவிதை முயற்சிகள்,எழுதிய கவிதைகள் குறித்து:

அவ்வப்போது நெருக்கடி மிகுந்தபோர்ச் சூழலில் வசித்துவரும் நிலை குறித்த என் அகவெளிப்பாடுகளை கவிதைகளாக எழுதியிருக்கிறேன். அவை நிகரி,கவிப்பிரவாகம், காலச்சுவடு, மன்னுயிர்,தெரிதல், போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இது வரை கவிதைக்கான முழுமையான எத்தனிப்பில் ஈடுபடவில்லை.

• விமர்சகர் என்ற வகையில் ‘ஜனரஞ்சகப் போலிகள்” என்ற பத்தியை தெரிதல் சஞ்சிகையில் தொடராக எழுதி வந்தீர்கள் அதற்கான எதிர் வினை எப்படியிருந்தது?

தெரிதல் இதழுக்காக அதனது ஆசிரியர் அ.யேசுராசாவின் அயராத, இடைவிடாததூண்டுதலினாலேயே இத் தொடரை எழுதினேன். ‘ரமணிச்சந்திரன்” பற்றி முதலாவது இதழில் எழுதிய கட்டுரையை சிலபத்திரிகைகள் மீள் பிரசுரம் செய்துள்ளன. பத்மநாப ஐயரின் முயற்சியால் ‘அப்பால்தமிழ்” என்ற இணையத்தளத்திலும் இக்கட்டுரைத் தொடர் வெளியானது. இத்தொடர் குறித்த எதிர் வினைகளை அவ்வப்போது செவிவழியாகக் கேட்டுவருகிறேன். சுஜாதாவை ஜனரஞ்சகப் போலி எழுத்தாளனாகக் கருதுவதில் சில தீவிர இலக்கிய வாதிககளுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. இதுவும் ஒரு நகைப்பிற்குரிய யதார்த்தமே.

• ஜனரஞ்சகப் போலிகள் வகையில் என்டமூரி வீரேந்திரநாத்ஐயும் இணைத்திருந்திர்கள். அவரது ‘கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்ற விஞ்ஞானப் புனைகதையை (நாவல்) 10 ஆண்டுகளுக்கு முன் படித்திருந்தேன். இது உலகநாடுகள் தமக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஐ.நா.வில்
முறையிட்டு தீர்ப்பது போல (?) கிரகவாசிகள் தமக்கிடையிலான பிரச்சினைகளிற்கு universal committee ஒன்றில் முறையிடச் செல்லல் பற்றியது. சென்றவர்கள்; பூமியில் இருந்து சென்று 100 வருடங்களுக்கு பின்னர் திரும்ப நேரிடுகிறது. வேறு கிரகவாசிகள் உதவியால் பழையகாலத்திற்கு திரும்புகின்றனர். காலத்தைப் பினநோக்கி நகர்த்துகின்றனர். அதாவது இறந்து போனவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திற்கு திரும்புகின்ற அடங்குமா? இத்தகைய எழுத்துக்கள் வாசகனை அவனது உணர்வுகளை பொய்மைக்குள் தள்ளும் என்று கருதுகின்றீர்களா?

வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பு, இருப்பின்மை குறித்து அறிவியல் ரீதியாக எத்தகைய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிராத காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மெய்ப்பிக்க முடியாத முற்கற்பிதங்களே வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுவருவதை அவதானிக்கலாம். அவ்வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். அவ்வாறான முற்கற்பிதங்களை வைத்தே ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள் வேற்றுக்கிரக வாசிகளைக் கொண்ட புனைகதைகளைத் தயாரிக்கின்றனர்;. இது வாசகனை செயற்கையாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனம். இத்தகைய தருணங்களில் வாசகனுக்கு ஒருவிதப் பிரமிப்பு ஏற்படுவது மெய்தான். அவனது இரசனை மோசமாகச் சுரண்டப்படுகிறது. அவன் சிந்தனை ஆற்றல் விரிவடைவதில்லை விஞ்ஞான புனைகதை எனும் வகை முக்கியமாக வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைய எதிர்;பார்க்கப்படுகிறது. மேலும் விஞ்ஞானப் புனைகதையின் நகர்வு தர்க்கரீதியாக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் ‘கண்சிமிட்டும் விண்மீன்கள்” என்பதே நவீனப்புனைகதை என்ற வகையில் பார்த்தால் பலவீனமான தலைப்பு. மற்றது வேற்றுக் கிரகவாசிகள் பற்றியதாக புனைவு அமைவதால் இதன் நகர்வு தர்க்கரீதியாக இருக்காது என்பதால் இது போலியான எழுத்துவகை என்பதில் சந்தேகமில்லை. எனவே இது வாசகனுக்குத்தரும் அதிர்வும், பிரமிப்பும் தற்காலிகமானது. அவனது இரசனையை மிகமோசமாகச் சுரண்டுவதன் மூலம் அவனை வாசிப்பில் பின் தள்ளுகிறது.

• போலி எழுத்துக்களை அடையாளம் நுட்பமாக வசப்படுத்தி வியபாரமாக்கும் தந்திரங்கள் கலையுலகில் நடந்து வரும் சூழலினை உங்களது எழுத்துக்களில் அம்பலப்படுத் தியும் வாசகனைப் போதை ஊட்டிவைத்திருக்கும் மலினமான மர்ம நாவல்களையும் அதை எழுதியோரையும்
உங்களது எழுத்துக்களில் சாடியுமிருந்தீர்கள். ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் தமிழ் சினிமாவை பார்த்து மகிழ்ச்சியடைந்தாலோ அல்லது தனது பொழுதினை வீணே கழித்தாலோ அவரது ரசனனயை பொய்யானது என்று சொல்லி பிரச்சாரப்படுத்துவதும் உயர்வான கலைகளையே
அவன் ரசிக்கவேண்டும் என்று எழுதுவதும் ரசனை குறைந்த சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக் கருதப்பட வாய்புள்ளதல்லவா?

சாதாரண வாசகனின் சுதந்திரத்தை மீறுவதாகக்கருதும் நிலை எப்போது ஏற்படுமென்றால் என்னால் அதிகாரத்தைப் பிரயோகித்து எழுதும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான். அவ்வரிய சந்தர்ப்பம் துரதிஷ்ட வசமாக எனக்கு வாய்க்கவில்லை. ‘இந்த ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்கள்” பற்றி நான் எழுதியிருப்பது எனது கருத்தைத்தான். அதை எவரும் சிரமேற் கொண்டு செயற்பட வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. மாற்றுக்கருத்தைக்கொண்டிருப்பவர்கள் அதைத் தெரிவிக்க உரிமையுடையவர்கள். நான் எழுதியவற்றை வாசி த்தவர்கள் அதன் பிறகு ரமணிச்சந்திரனை,ராஜேஷ்குமாரை, சுஜாதாவை வாசிக்க ஆவலாக உள்ளோம். ஆனால் வாசிக்க முடியவில்லையே என மனம் மிக வெதும்பினால் அவர்களின் சுதந்திரத்தை நான் மீறுவதாக நீங்கள் கருதலாம். ஆனால் அந்த மாதிரியாக நிகழவில்லையே. அண்மையில் யாழ் பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த நூலகக் கண்காட்சிக்கு போனேன். அங்கே ரமணிச்சந்திரன் நாவல்ககளுக்கு தனிப்பிரிவு என்ற முறையில் காட்சிப்படுத்தியிருக்க கண்டேன். விசாரித்தபோது இந்தத் தனிப்பிரிவுகளிலுள்ள புத்தகங்களை வாசிப்பதற்காகவே பலர் அங்கத்தவர்களாக சேர்வார்கள் எனக் கூறப்பட்டது.

இப்போது சொல்லுங்கள் சாதாராண வாசகனின் சுதந்திரத்தை இந்த ‘ஜனரஞ்சகப்போலி எழுத்தாளர்கள்” மூலமாக நான் மீறி
யதாகக் கருதும் வாய்ப்புள்ளதா?

(இன்னும் தொடரும்)

February 17, 2007

ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 2:11 pm

அண்மையில் பாலபாரதி ஒரு பின்-நவீனத்துவக் கட்டுரையை அம்மா இதழிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார். விமர்சனம் என்பது வேறு, ஆனால் அதில் பின் நவீனத்துவம் குறித்த அதீத காழ்ப்பு இருப்பது போலத் தோன்றியது. தத்துவங்களை மட்டும் எப்போதும் கட்டி அழுபவர்களுக்கு நேரும் அவலம் தான் இது. புது விதமான கட்டுடைப்புக்களையோ, புது வகையிலான தத்துவங்களையோ ஏற்றுக்கொள்வது என்பது -இது மட்டுந்ததான் நமக்கான தத்துவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு- கொடூரமாய்த்தான் இருக்கும். இவ்வாறு சமகாலத்தையும், மக்களையும் விட்டுவிலகிப் போய்க்கொண்டிருக்கும் பலரது வீழ்ச்சிகளைய்ப் பார்த்துக்கொண்டுத்தானே இருக்கின்றோம்.

எம்.ஜி.சுரேஷின் நேர்காணலை தீராநதியிலிருந்து நன்றியுடன் கீழே தருகின்றேன். எம்.ஜி.சுரேஷின் எல்லாப்புள்ளிகளோடும் உடன்படுவது என்பதல்ல இதற்கு அர்த்தம். இன்னவின்ன எழுத்துமுறைகளுக்காய் நான் நவீனம் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று எம்.ஜி.சுரேஷின் நாவல்களின் பின்னட்டைகளில் வரும் ‘பயமுறுத்தல்கள்’ எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வாசகர் ஒரு நாவலை வாசித்துவிட்டு இது இன்ன எழுத்து நடையில் எழுதியிருக்கலாம் என்று சிந்திக்கும் வெளியைக் கூட அவை மறுத்து நிற்கின்றன. அத்துடன், கிட்டத்தட்ட ‘நாற்சார் மடம்’ என்ற கதைக்கு நிகராய் ஜெயமோகனைக் கீழ்த்தரமாய்ச் சித்தரித்து எம்.ஜி.சுரேஷ் பன்முகத்தில் எழுதிய கதையிலும் எனக்கு எந்தப்புள்ளியிலும் உடன்பாடில்லை (அதற்கான எதிர்ப்பை எழுத்தில் வைத்தபோதும் -வழமைபோல ஜெயமோகன்- இப்படி தன்னைப் பற்றி எம்.ஜி.சுரேஷ் எழுதியதால் ‘டிசே தமிழனுக்கு புளங்காகிதம்’ என்று கூறியதை மறந்துவிடுவோம் :-) ).
-டிசே

போஸ்ட் மாடர்னிஸம் என்று அழைக்கப்படும் பின்நவீனத்துவத்திற்கு இப்போது வயது முப்பத்தெட்டு. 1966_ம் ஆண்டு ழாக் டெரிடா (Jacques derrida) என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் நிர் _ நிர்மாணம் (Deconstruction) என்ற சொற்பிர யோகத்தை முதன் முதலாக கையாண்டதில்தான் பின்நவீனம் பிறந்தது. அதற்கு, முன்னமே ஐம்பது வருஷங்களுக்கு முன் ஜான் வாட்கின்ஸ் சாப்மேன், ருடோல்ஃப் பான்விட்ஸ் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும் ‘போமோ’ அங்கீகரிக்கப்பட்ட பிறப்பென்பது 1966_ல்தான் தொடங்கியது. இதையட்டிய கோட்பாடுகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களில் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். பின்நவீனக் கோட்பாடுகளை முணுமுணுக்கும் நபர்கள் கூடவே தவிர்க்க முடியாமல் உச்சரிக்கும் பெயரல்ல; ஒரு சொல் எம்.ஜி.சுரேஷ். ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள். ‘இஸங்கள் ஆயிரம்’ ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ ஆகிய இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்கள், என்று பல படைப்புகளை தமிழுக்குத் தந்திருப்பவர். zero degree writing வகைமையைக்கொண்டு இவர் எழுதிய சமீபத்திய நாவல் ‘37’. இவரை தசரதபுரத்திலுள்ள அவரது வீட்டில் தீராநதிக்காகச் சந்தித்தோம். அவரது எழுத்து நடையைப் போலவே பேச்சும் எளிமையாக அமைந்தது.

தீராநதி : கார்க்கி இதழில்தான் உங்களுடைய முதல் கதை பிரசுரம் கண்டிருக்கிறது. அது கம்யூனிஸ தத்துவத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு பத்திரிகை. அதன் ஆசிரியர் இளவேனில் கூட ஒரு கம்யூனிஸ்ட். ஆக, நீங்களும் அப்போது கம்யூனிஸ்ட்டாக இருந்தீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: இல்ல. நான் கம்யூனிஸ்ட்டா இல்ல. முதல்ல நான் ஒரு வாசகரா இருந்தேன். கையில கிடைக்குற எதுவானாலும் படிப்பேன். குமுதம், விகடன், இப்படி எது எது கிடைக்குதோ அதயெல்லாம் படிப்பேன். ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினா சாப்பிட்டு முடிஞ்ச பின்னால அந்த பேப்பரை படிப்பேன். அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த பேப்பர் எங்கிருந்து கிழிக்கப்பட்டதுன்னு தேடிப் போவேன். குமுதம், விகடன்னு தொடர்ந்து படிச்சிக்கிட்டு இருக்குறப்ப இவையெல்லாம் ஒரு கட்டத்துல போதாம போயிடுச்சு. ஏதோ நம்மள ஒரே மாதிரியே ஏமாத்துது இந்தக் கதைகள்லாம்னு தோண ஆரம்பிச்சது. இத கடந்து நாம போகணும்னு, நினைச்சேன். அன்றாட வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். முதல்ல வெறுக்கிறோம். அப்புறம் விரும்புறோம். அடுத்ததா அதைக் கடந்து போறோம். அடுத்த கட்டமா கடந்து போகணும்_ அடுத்த அடுத்த லையனுக்கு கடந்து போகணும். இலக்கியத்துலயும் அதே மாதிரிதான். முதல்ல தேடித் தேடி படிக்க ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சு போகும், சுஜாதான்னா இந்த மாதிரி எழுதுவாரு. இந்த இந்த வார்த்தைகளை இங்க இங்க போடுவாரு. தி. ஜானகிராமன்னா இந்த மாதிரி எழுதுவாரு. ஜெயகாந்தன்னா இப்படித்தான் எழுதுவாரு. இப்படி எல்லாமே பேட்டன் ஆயிடுது இல்லையா? ‘பெரடைம்’ (Paradigm) மாதிரி. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு சட்டகம் இருக்கு. இதைத்தாண்டி வேற ஏதாவது நமக்கான எழுத்து இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் சோவியத் புத்தகங்கள் எனக்குக் கிடைச்சது. ரஷ்யன் ரைட்டர் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், மார்க்ஸிம் கார்க்கி, துர்க்கனீவ், குப்ரின் இதுபோல படிக்க ஆரம்பிச்சப்போ சரி, இதுதான் நமக்கான எழுத்துன்னு நினைச்சு நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்லயும் நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்ல சுஜாதா மாதிரியான எழுத்துக்கள படிச்சிகிட்டு இருந்தப்ப, ஜெயகாந்தன் கதைகள் வித்தியாசமா இருந்தது. அவர் ரைட்டிங் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. அப்போ ஜெயகாந்தன் எழுத்து நமக்கான எழுத்துன்னு நினைச்சு தொடர்ந்து படிக்கிறேன். அந்த காலிபர்ல கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, நகுலன், இந்த மாதிரி வாசிச்சேன். அதே போலதான் பத்திரிகைகள்லயும் கணையாழி, கசடதபற, தீபம்னு இப்படி இலக்கிய பத்திரிகையா வாசிச்சேன். அப்போதான் ‘கார்க்கி’ பத்திரிகையையும் வாசிச்சேன். இளவேனிலோட புரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பைபிள் மாதிரியான நடை. பைபிளையும் நான் படிச்சிருக்கேன். பைபிள் அற்றதைக் கூட பைபிள் நடையில எழுதலாம் போலிருக்கேன்னு தெரிய வருது. அதுக்கப்புறம்தான் இளவேனிலோட நட்பு எனக்குக் கிடைச்சது. அவரோடு நெருங்கிப் பழகினேன். மத்தபடி பொலிடிக்கல் லைன்ல கம்யூனிஸ்ட்டா என்னை நான் அடையாளப்படுத்திக்கல. ஆனா, கம்யூனிஸ்ட் புக்ஸ்செல்லாம் படிச்சிருக்கேன். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ராஸ்கி இதுமாதிரி கம்யூனிஸ்ட் லிட்ரேச்சர் நிறைய படிச்சிருக்கேன். ஆனாலும் அதுல எதனாலயோ என்னால ஒன்ற முடியல. ஏதோ ஷீtலீமீக்ஷீ ஒரு மற்றமையா உணர்ந்தேன். மனிதன் குறையுடையவன், பிரபஞ்சம் குறையுடையது. இப்படி எந்த ஒரு தியரியிலயும் ஒரு குறை இருக்குற மாதிரி ஓர் எண்ணம் எனக்கு. ஒரு விஷயத்துல குறையிருக்குறதாலதான் நாம் வேற ஒண்ணை தேடிப் போறோம். ஒரே விஷயத்துக்குள்ளேயே நாம இருக்குறதில்லையே? ஸயன்ஸ், ஃபிலாஸ`ஃபி, லிட்ரேச்சர், இப்படி நாம எதுலயும் பிடிக்கலையின்னா அடுத்த விஷயத்துக்குப் போயிடுறோம். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்_ விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். ஜாமண்ட்ரி தியரி, யூக்ளிட் இப்படி… யூக்ளிட் சமதளத்துக்கான தியரி. பூமி வந்து உருண்டையானது. ஆனா, பூமிக்கும் யூக்ளிட்டை வெச்சித்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். சின்ன அளவா இருந்தா யூக்ளிட் தியரி சரியா இருக்கும். பெரிய அளவா இருக்கும்போது அது தப்பாயிடும்னு தெரிய வருது இல்லையா? ஒரு தியரி, கொஞ்ச நாட்கள்லேயே செல்லாம போயிடுது. அதே மாதிரிதான் மார்க்ஸியத்துலயும் பிரச்னைகள் இருக்கு.

தீராநதி: இதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு வரும்போது பிடிபடுகிற விஷயங்கள். ஆனால் முதலில் இதை நீங்கள் உணர வாய்ப்புகள் கம்மி இல்லையா? அச்சூழலுக்குள்ளாகப் பொருந்தி இருந்தும் உங்களை கம்யூனிஸ்ட் ஆகவிடாமல் தடுத்தது எதுவாக இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்போ அந்தச் சமயத்துல அந்தப் பிரச்னைகள் எனக்குத் தெரியாது. போஸ்ட் மாடர்னிஸம் புக்ஸ்செல்லாம் படிக்கும்போது, இந்த விஷயங்கள்லாம் பின்னாடி நமக்குத் தெரிய வந்தது. அப்புறம் தியரிட்டிக்கலா மார்க்ஸியம் என்பது சிறந்ததுன்னு வெச்சிக்கோங்க. அதுக்கான ஆல்டர்நேடிவ் கிடையாதுன்னே சொல்லலாம்.

ஒடுக்கப்படும் மக்கள் போர்க்குணம் பெறுவதற்கு, ஒன்றுகூடி போராடுறதுக்கு… இந்த மாதிரி விஷயங்களுக்கு மார்க்ஸியம் தேவையானதுதான். அப்புறம் அது முன் வைக்குற சோஷலிஸ விடுதலைக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சம்பந்தமா வர்றதுக்கெல்லாமே கரெக்ட்தான். ஆனா, அதுக்கப்புறம் இம்பிலிமெண்டேஷன்னு வர்றப்ப சார்த்தர் சொல்வாரு ‘‘எல்லா கோட்பாடுகளும் நடைமுறைப்படுத்தும் போது நிறுவனமயமாகி விடுகிறது. நிறுவனம் ஆகுறப்ப அதனுடைய அடிப்படை தப்பாயிடுது’’ன்னு சொல்வாரு.

தீராநதி: சார்த்தர் corrupt ஆகிவிடுகிறது என்றுதானே சொன்னார்?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். corrupt ஆகிடுதுன்னுதான் சொல்றார்.அஃப்கோர்ஸ் அதுமாதிரியேதானே ஆச்சு. சோவியத் யூனியன்ல மார்க்ஸியம் முதல்ல வந்தப்ப ரொம்ப எழுச்சியோடவே இருந்தாங்க. பின்னாடி அது நீஷீக்ஷீக்ஷீuஜீt ஆயிடுச்சு இல்லையா?. அவங்களும் பிரிவிலெட்ஜ்டு சொஸைட்டியாதானே இருந்தாங்க. பெரிய பெரிய கார்ல போனாங்க. வசதியும், ஆடம்பரமுமா வாழ ஆரம்பிச்சாங்க. இவங்க செஞ்ச மாதிரியேதான் வேற கோணத்துல முசோலினியும், ஹிட்லரும் செஞ்சாங்க. இவங்களும் தன்னை மக்களின் பிரதிநிதியா அறிவிச்சிகிட்டுதான் தீமைகள் செய்ய ஆரம்பிச்சாங்க. மக்களை சர்வாதிகாரம்ங்குற பேர்ல ஒடுக்குனாங்க. ஏதோ தனிப்பட்ட விரோதத்தால இது நடக்கல. மக்களின் நன்மைக்குன்னு சொல்லித்தான் நடத்துனாங்க.

சோவியத் யூனியன்லயும் ‘சோவியத் ஒர்க்கிங் கிளாஸ்’ங்குற பேர்ல சில தீமைகள் நடந்தது. மக்களின் மீதான ஒடுக்குமுறை நடந்தது. அங்க நாஜி வதை முகாம்ல செஞ்ச மாதிரி சைபீரிய வதைமுகாம்ல இவங்க செஞ்சாங்க. கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் தீமைகள் ஒண்ணுபோலதான் இருந்தன. அதனாலதான் என்னை நான் பொலிட்டிக்கலா கம்யூனிஸ்டுன்னு அடையாளப்படுத்திக்கல.

தீராநதி : கேள்வி கம்யூனிஸ நண்பர்களுடன் பழக்கம் இருந்த காலத்திலும் நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்பதுதான். பிற்காலத்தில்தான் ‘போமோ’ எழுத்துக்களைப் படித்துவிட்டு இவற்றையெல்லாம் நிராகரிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் இளவேனிலுடன் தொடர்பு இருந்த நேரத்தில் உங்களிடம் மார்க்ஸியத்தை எதிர்ப்பதற்கும், இது சரியானதல்ல என்று புறம் தள்ளுவதற்கும் தர்க்க ரீதியாகவோ, அல்லது tமீஜ்tடாகவோ உங்களிடம் எந்த மெட்டீரியலும் இல்லை. இருந்தும் இடதுசாரியாக அடையாளப்படத் தயங்கி இருக்கிறீர்கள். அது ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: முதல்ல இடதுசாரிங்குறது வேற, கம்யூனிஸ்ட்டுங்குறது வேற. கம்யூனிஸ்ட் இல்லாதவர்களும் இடதுசாரியாக இருக்கலாம். கியூபாவுல முதல்ல அவங்க புரட்சி பண்ணப்போ அவங்கயெல்லாம் கம்யூனிஸ்ட்டே கிடையாது. சேகுவேரா, காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கிடையாது. ‘சே’வும் அவர் நண்பர்களும் மோட்டார் பைக்கை எடுத்துகிட்டு லத்தின் அமெரிக்கா முழுக்க ஒரு இடம் விடாம சுத்துனாங்க. ஊர் ஊரா, கிராமம் கிராமமா போய் மக்கள் படுகிற அந்த அவலங்களையெல்லாம் நேர்ல பார்த்தாங்க. அதனால கொதித்தெழுந்து புரட்சி செஞ்சாங்க. பின்னாடி அவங்க ஆட்சிக்கு வந்த பிறகுதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சாங்க. அதுமாதிரி பார்த்தா நான் முதல்ல இடதுசாரி சிந்தனையாளனாத்தான் இருந்தேன். இப்பவும் இருக்கேன்.

தீராநதி: சரி, நீங்கள் சொல்வது மாதிரி இடது சாரித்தன்மை கம்யூனிஸ்ட் இரண்டும் வேறு வேறுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் நீங்க ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை?

எம்.ஜி.சுரேஷ்: நான் ஆர்கனைசேஷன் சார்ந்த இடதுசாரியா இல்லையான்னு வர்றப்போ நான் சுத்தமான மார்க்ஸிஸ்ட்டா இல்லை. அதுக்கும்மேல் போய் சொன்னா நான் நூறு சதவீதம் மார்க்ஸிஸ்ட்டா இருக்கல.

தீராநதி: சார்த்தர் சொல்லும் corrupted என்ற வார்த்தையை எந்த விஷயத்திலேயும் நம் சௌகர்யத்திற்கு ஏற்ப போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தத்துவத்தின் மீதும் போட்டுப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு உயரிய லட்சியத்திற்காக இதைச் செய்கிறோம் என்பதை எப்படி நாம் அடைய முடியும்? லட்சியம் என்பதே தேவையில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: போஸ்ட் மாடர்னிஸம் என்ன சொல்லுதுன்னா ஒவ்வொன்னுக்கும் ஒரு சட்டகம் (Paradigm)இருக்குன்னு சொல்லுது. மார்க்ஸிஸம் தொழிலாளி, முதலாளின்னு ரெண்டா நம்மள பிரிக்குது. இரண்டாயிர வருஷ கலை, இலக்கிய வரலாற்றை அனலைஸ் செஞ்சிட்டு அதையே போஸ்ட் மாடர்னிஸம் மையம், விளிம்புன்னு ரெண்டாப் பிரிக்குது. மார்க்ஸிஸ்ட் சொல்ற தொழிலாளி வர்க்கத்தை எடுத்துக்கிட்டாகூட அதுலயும் மையம், விளிம்புன்னு இருக்கு. ஜாதின்னு எடுத்துக்கிட்டாலும் தலித்துக்குள்ளயே கூட மையம், விளிம்புன்னு இருக்கு. அதனால விஷயத்தை இப்படித் துல்லியமா பிரிச்சுக்கச் சொல்லுது போஸ்ட் மாடர்னிஸம். மையத்துக்கும் விளிம்புக்குமான ஒரு யுத்தம் உள்ளுக்குள்ளேயே நடந்துகிட்டே இருக்கு. அப்ப மையம், விளிம்புங்குற விஷயம் கலைக்கப்படணும்னு சொல்லுது. அப்பதான் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்னு சொல்லுது.

தீராநதி: மையத்தையும், விளிம்பையும் கலைப்பதால் மீண்டும் அது ஒரு மையமாகத்தானே ஆகும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்படி ஆகக்கூடாது. அது மாதிரியா கலைக்கப்படணும்.

தீராநதி : சபால்டன் என்ற ஒன்றிருக்கிறது. மையம் என்ற ஒன்றிருக்கிறது. சபால்டன், மையம் கலைக்கப்பட்டால் அது மறுபடியும் ஒரு மையமாக அல்லது சபால்டனாக ஏதோ ஒன்றாகத்தானே ஆக முடியும்?

எம்.ஜி.சுரேஷ்: கலைக்குறதுங்கறது ஒரு அஜெண்டா. ஸோ… உடனடியா கலைக்க முடியாது. முதல்ல வந்து அனைவரும் சமம்ங்குற மாதிரி ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொன்னாங்க. ஆனா, பிராக்டிக்கலா ஒரு பொதுமைப்படுத்துற முயற்சி இது. மார்க்ஸியமோ தொழிலாளி வர்க்கம்னு எல்லா உழைப்பாளர்களையும் ஒரு பொதுமைப்படுத்திடுது. நானும் தொழிலாளி, எனக்குக் கீழாக இருக்குற தலித்தும் ஒரு தொழிலாளின்னா சரியா வராது. ஆக பொதுமைப்படுத்துறங்கறது இங்க பொருந்தி வரல. போஸ்ட் மாடர்னிஸம்; பெண்ணியம், தலித்தியம்ங்கற மாதிரி ஒவ்வொரு விளிம்பு மக்களும் பாதுகாக்கப்படணும்னு சொல்லுது. இது வரைக்கும் நாம நாத்திகம் பேசினோம். இப்ப வந்து சிறு தெய்வ அடையாளங்களை மீட்டெடுக்கணும், நம்மோட தொன்மங்கள் மீட்கப்படணும்னு சொல்றோம். அப்பதான் நாம யாருங்கறது தனியாக காப்பாத்தப்படும். இந்தப் பொதுமை என்ன பண்றதுன்னா புல்டௌசரை போட்டு எல்லா அடையாளத்தையும் இடிச்சிடுது.

தீராநதி: கேள்வி corruptionன்னு சொல்லிக் கொண்டே போனால், உயரிய லட்சியங்களுக்காக செய்வது என்பது இனி சாத்தியமில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: அது வந்து அப்படி கிடையாது. சொல்லப்போனால் போஸ்ட் மாடர்னிஸமே ஒரு லட்சியத்தோடதான் இருக்கு. மையம், விளிம்பு கூடாதுன்னு சொல்றது கூட லட்சியம் தானே. எல்லோருக்கும் சுதந்திரம்னு நாம சொல்றோம். ஆனா, நமக்கு இங்க சுதந்திரம் இருக்கான்னு பார்த்தா உண்மையான சுதந்திரம் இல்ல. நாம சொல்லிக்கிட்டு இருக்குற சுதந்திரமும், நடப்புல இருக்குற சுதந்திரமும் ஆக்சுவலி ஒண்ணு இல்ல. நாம பிறந்து வளர்றப்பவே நம்மோட சுதந்திரம் தடுக்கப்படுகிறது. நான் ஒரு பொயட் ஆகணும்னு விரும்புறேன். ஆனா, சமூகத்துல என்னுடைய அடையாளம் கவிஞன் கிடையாது. கவர்மெண்ட் ஆபீஸ§ல ஒரு வேலையில இருக்கறது, அதான் என்னுடைய அடையாளம். நான் விரும்புற அடையாளம் அது கிடையாது. அப்படிங்கறப்போ சுதந்திரமே இங்க இல்லியே. நீங்க யார்? என்பதை உண்மையான அடையாளத்தோட பார்க்கப்படணும்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது. தனித் தனி அடையாளங்களும் காப்பாத்தப்படணும்னு சொல்றது எவ்வளவு பெரிய லட்சியம்.

தீராநதி : ஏறக்குறைய செக்குரலரிஸம் மாதிரியா இது?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். தனிப்பட்ட உரிமை, மொழி வேணும்னு சொல்லுது. இட்டிஷ் மொழிய எடுத்துக்கோங்க அது வெறும் நூறு இருநூறு பேர் பேசுற மொழிதான். ஆனா சைனீஸ்ஸை எடுத்துக்கிட்டா லட்சம், கோடிக்கணக்குல பேசப்படுற மொழி. அப்ப உலகம் பூராவும் மெஜாரிட்டியான மொழியா இருக்குறதால சீன மொழியே உலக மொழியா இருக்கணும், இன்ட்டிஷ் மொழியெல்லாம் தேவையில்லைன்னு சொல்ல முடியாது. அது இருநூறு பேர் பேசுற மொழியா இருந்தாலும் மரியாதைகள், கௌரவங்கள், அந்த மக்களுக்கு வழங்கப்படணும்னு கேட்குது. அப்படிங்குறப்ப இத வந்து தனித்தனியா பிரிச்சு பார்க்குறதல அர்த்தம் இல்ல. எல்லோருக்கும் இந்த உலகத்துல ஒரு வெளி இருக்கு. இந்த ஸ்பேஸ் காப்பாத்தப்படணும்னு சொல்லுது. இப்ப வெளியான ‘வெயில்’ படத்தை எடுத்துக்கோங்க. பெரும்பாலும் வெற்றி பெறுறவங்களைப் பத்திதான் நாம கவலைப்படுறோம். தோத்துப் போறவனைப் பத்தி நாம கவலைப்படுறதில்ல. தோத்துப் போறவன்தான் மெஜாரிட்டியா இருக்கான். அவனாலயும்தான் இந்த உலகம் இயங்குது. இந்த விஷயத்தை ‘வெயில்’ படம் சொல்லுது. தலித்தியம், பெண்ணியம்னு அவங்க அவங்களுக்கான ஸ்பேஸை உறுதிப்படுத்த வைக்குது. பிரான்ஸில பார்த்தீங்கன்னா, யூதர்களை மதிக்கமாட்டாங்க. ஆப்பிரிக்கர்களை கருப்பர்கள்னு அவமானப்படுத்துவாங்க. இன்னைக்கு அங்க கலவரம் நடக்குது. ஏன்னா அவங்களை மற்றமையா பார்த்தாங்க. டிசுயம், மற்றமைன்னு ரெண்டு விஷயம் இருக்கு. அடிப்படையிலேயே மனிதன் அதிகாரத்தை விரும்புறவனா இருக்கான். நீட்ஷே ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகாரத்திற்கான, ஆற்றலுக்கான விருப்பு இருக்கு’’ன்னு சொல்றார். இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும். விரும்புறதை நான் அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறான். என்னுடைய விருப்பத்துக்கு உங்க விருப்பம் குறுக்கீடா இருக்கு. உங்க விருப்பம் என் விருப்பத்தைத் தடை செய்யுது. அப்ப நான் என்ன பண்ணணும்னா அதிகாரத்தை கைக் கொள்ளணும். அதிகாரம் என் கைக்கு வந்துடுச்சுன்னா நான் நினைச்சதை அடைஞ்சுடலாம். அதிகாரம்ங்குறது ரெண்டு நுனிகளைக் கொண்டது. ஒன்று செலுத்துபவனின் நுனி; இன்னொன்று பெறுபவனின் நுனி. செலுத்துற எடத்துக்கு நான் வந்துட்டேன்னா என்னுடைய விருப்பம் நிறைவேறும். நீங்க உங்க விருப்பத்தை தியாகம் பண்ணணும். என்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு, இப்ப நான் உங்களை கண்ட்ரோல் பண்றேன். என் விருப்பத்தை நிறைவேற்றிக்குறேன். நீங்க வந்து ரெகுலரா என்னை எதிர்த்துப் போராடுறீங்க, எதிர்ப்புத் தெரிவிக்கிறீங்க. அப்ப வந்து ரெவில்யூஷன், புரட்சிக்காரன், காந்தி, பகத்சிங் எல்லாமே நீங்கதான். இதுமாதிரி வரலாறு முழுக்க நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் காலத்துல கூட நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் ஒரு இனத்தையே அழிச்சான். இது மாதிரி ஏன் நடந்திருக்குன்னா அதிகாரம் ஒரு இடத்துல குவிஞ்சு இருந்ததால நடந்திருக்கு. அப்போ அதிகாரம் ஒரே இடத்துல இல்லாம பகிர்ந்தளிக்கப்பட்டா corruption வராதுன்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது.

தீராநதி : அப்போ பின்நவீனத்துவ அரசியலை நடைமுறைப்படுத்தினால் அதிகாரம் யார் கையில் இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அதிகாரம் நிச்சயம் ஒருத்தர் கையில இருக்காது. அதிகாரம் ஒருத்தர் கையில இருந்தா மிருகம் மாதிரி ஆயிடும். அதிகாரம் வெச்சிருப்பவனும் மிருகம் போலவே ஆயிடுவான். பிரித்தளிக்கும்போது இது நடக்காது. இதைத்தான் சோவியத் யூனியன்ல செஞ்சாங்க. அதிகாரம் முழுக்க முதல்ல மாஸ்கோவுல இருந்தது. பின்னால அதிகாரத்தைப் பகிரணும்னு யூனியனில் கூட்டாக இருந்த நாடுகளை அவங்க பிரிச்சுவிட்டாங்க. ஒரு இடத்துல அதிகாரம் மொத்தமா இல்லாத மாதிரி பண்ணாங்க. அது போலதான்.

தீராநதி : இந்தியாவில் கூட மாநிலங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க. முன் வைக்கின்ற மாநில சுயாட்சி மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: தி.மு.க.வுல மாறன் போன்றவங்க கூடி மாநில சுயாட்சின்னு ஒரு கருத்தை முன் வைச்சாங்க. அது இதோட ஒத்துவரக்கூடிய ஒன்றுதான். மாநில சுயாட்சியின் மூலமா அதிகாரத்தை மத்தியில மையமா வைச்சி இருக்காம பிரிச்சளிக்க முடியும். அப்போ அதிகாரம் பரவலாயிடும். ஸோ… corruption க்கு வேல இல்லாம போயிடும்.

தீராநதி : உலக மயமாக்கலுக்குப் பின்பும், புதிய பொருளாதார கொள்கைக்குப் பின்பும் கம்யூனிஸம் தன் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியாமல் திணறி, பின்னடைவு அடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சமீபத்தில் கூட, கொல்கத்தாவில் புத்ததேவ் அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்து 23 நாட்கள் தாண்டி பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னால் சமரசத்திற்கு வந்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாடா போன்ற நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதென்றும், அவற்றை தவிர்க்க முடியாதென்றும் கம்யூனிஸ்ட்டுகளே கொல்கத்தாவில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். பின்நவீனம் குறித்து விவாதிக்கும் இக்காலத்திற்கு கம்யூனிஸத்தின் தேவை இருக்கிறதா?

எம்.ஜி.சுரேஷ்: இப்போ பின்நவீனத்துவவாதிகள்னு சிலரைச் சொல்றோம் இல்லையா, அவங்க எல்லாமே மார்க்ஸிஸ்ட்டா இருந்து வந்தவங்கதான். பின்நவீனவாதிகளில் சிலர் நேரடி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்காங்க. அல்லது ஆதரவாளராக இருந்தாங்க. சார்த்தர் கூட ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்தவருதான். நேரு கூட ‘‘முப்பது வயசுக்குள்ள ஒருத்தன் கம்யூனிஸ்டா இல்லையின்னா அவன் முட்டாள். அதுக்கப்புறமும் கம்யூனிஸ்டா இருந்தா அவன் பைத்தியக்காரன்’’னு சொன்னார். அப்படிச் சொன்ன நேருவும் கம்யூனிஸ்டா இருந்தவர்தான். முதல்ல கம்யூனிஸ்டா இருந்தவங்க அதுக்கப்புறம் அதுமேல அதிருப்தி அடைஞ்சு இது சரியாயில்லைனு வெளியேறிடுவாங்க. இது தவறான போக்குன்னு எடுத்துக்கக்கூடாது. அதுக்குப் பேரு கடந்து செல்வதுன்னு சொல்லலாம். அடுத்த கட்ட நகர்வுன்னு எடுத்துக்கலாம். ஒரு விஷயம் தியரி, பிராக்டிக்கல்னு ரெண்டு விதமா இருக்கு. கொள்கை அமலாக்கம்னு வர்றப்ப, வெறும் கொள்கையா இருந்து வந்தது அமலாக்கப்படுத்தும் போது அப்படியே நிகழ்றதில்ல. அதுல சில பிரச்னைகள் வந்துடுறது. இந்த ஆட்டத்துக்கு நான் வர்லப்பான்னு சிலர் போயிடுவாங்க. சிலர் வேற வழி இல்லாம இத விட்டு வேற எங்கயும் போக முடியாம தங்கிடுவாங்க. இதுலயே இன்வால்வ் ஆயிட்டோம், இத்தனை வருஷங்களை ஓட்டிட்டோம்னு இருந்துடுவாங்க. 50 வருஷமா நடிகனா இருந்தவன் பொழைக்க வழி இல்லன்னா கேமிரா மேனாவோ, இல்ல மேக்கப் மேனாவோ எப்படி ஆக முடியாதோ அதே மாதிரி இதுலயும் பிரசினைகள் இருக்கு. இப்படித்தான் மார்க்ஸிஸ்டுகள் அடுத்த கட்டம் நோக்கிப்போக முடியாம வீழ்ச்சி அடைஞ்சுட்டாங்க. அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு ஒண்ணு இருக்கு. ஒரு பேப்பரை எடுத்துக்கிட்டா அது வெறும் தனிப் பொருள் இல்ல. இத மரத்தூள்ல இருந்து பண்ணாங்க. இந்த மரத்தூள் இதுக்கு முன்னால ஒரு நல்ல மரமா இருந்தது. இப்ப அதே பேப்பரை எரிச்சிட்டா கரியாகிடும். பவுத்தம் இப்படித்தான் ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லுது. மார்க்ஸியமும் அப்படித்தான் சொல்லுது. எல்லா பொருளும் இயங்கிக்கிட்டே இருக்கு. ஓடிக்கிட்டே இருக்கு. ‘உலகம் பற்றி எரியும் தீ’ன்னு புத்தர் சொன்னாரு. இந்தத் தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. புதிய புதிய தழல்கள் வந்துகிட்டே இருக்கு. முதல்ல எரிஞ்ச தீ இப்ப அணைஞ்சு போயிடுச்சு. அப்புறம் இன்னொரு தீ… இன்னொரு தீ… அதுமாதிரி எல்லாமே தொடர்ந்து ஒரு இயக்கத்துல இருக்கு. எல்லாமே மாறுது இல்லையா? தொழிலாளி, முதலாளி எல்லாமே மாறுறாங்க.

இன்னைக்கு மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் இல்ல. virtual முதலாளிகள் வந்துட்டாங்க. அவன நேரில பார்க்க முடியாது. BPO வுல வேல செய்யுறவங்க அவங்க முதலாளிய நேர்ல பார்த்திருக்கவே மாட்டாங்க. முதலாளியும் இவங்கள பார்த்திருக்க மாட்டான். எங்கிருந்தோ அவன் அனுப்புறத மெயில் வழியா இங்கிருந்து வேல செஞ்சு அவனுக்கு இவங்க பதில் அனுப்புவாங்க. USல ஒரு டாக்டர் இருக்காருன்னா, அவர் ஒரு நாளைக்கு பத்து பேஷண்ட் பார்க்குறார்ன்னா தன்னோட கேஸ் ஹிஸ்டரி, ரெக்கார்டு எல்லாத்தையும் இங்க அனுப்புவான். அத டோட்டல் ஃபைலா உருவாக்கி இவங்க இங்க பத்திரமா வைச்சிருப்பாங்க. இத வைச்சிதான் அந்த டாக்டரால அங்க பீஸ் வாங்க முடியும். அவன் அப்படி வாங்குற பீஸை வைச்சிதான் அவன் இவங்களுக்குச் சம்பளம் தரமுடியும். இதுபோல பல துறைகள் இன்னைக்கு இயங்கிட்டு இருக்கு. தொழிலாளர் நலன் பத்தி இங்க நாம பேச முடியாது. ஏன்னா இவங்க முதலாளிய பார்க்குறதே இல்ல. இத வெச்சு தொழிற்சங்கம் எல்லாம் கட்டமுடியாது. பொலாரிஸ் மாதிரியான சாஃப்ட்வேர்ல வேலை செய்யறவங்க அமெரிக்காவுல இருக்குற முதலாளிக்காக இங்க சின்ஸியரா உழைக்குறாங்க. இருபது, முப்பது ஆயிரம்னு சம்பளம் கூட அவன் இவங்களுக்கு அதிகமா தர்றான். இவ்வளோ சம்பளம் வாங்குறவன் முதலாளிக்கு எதிரா புரட்சி பண்ணணும்னு நினைக்கக் கூட மாட்டான். இவங்களுக்கே அவன் இவ்வளவு சம்பளம் தர்றான்னா அவன் எவ்வளவு சம்பாதிப்பான்! இது மாபெரும் சுரண்டல் இல்லையா? மார்க்ஸ் காலத்து சுரண்டல விட மிகப்பெரிய சுரண்டல். ஆனா, இவங்களை எல்லாம் திரட்டி போராடவே முடியாது. இது virtual முதலாளி, virtual தொழிலாளி. இதெல்லாம் மார்க்ஸ§க்கு தெரியாது. காரணம், அப்ப இந்த நிலவரம் இல்ல. இதுக்கு. மார்க்ஸியத்துலயும் தீர்வு கிடையாது. மார்க்ஸ் எல்லாத்தையும் பொருள் மதிப்பா பார்த்தாரு. கார்ன்னா யூடிலிட்டி வேல்யூ_ பயன் மதிப்போட பார்த்தாரு. But இன்னைக்கு வந்து என்னா ஆகிப்போச்சு. எல்லாத்தையும் அர்த்தமா பார்க்க வேண்டி இருக்கு. ஒரு பொருளுக்கு போஸ்ட் மாடர்னிஸம் பல மீனிங்ஸ் சொல்லுது. ‘படி’ன்னு சொன்னா ‘படி’க்குறது, அளக்குற‘படி’, ‘படி’க்கட்டு, ‘படிப்படி’யா முன்னேறுவது, தலையை ‘படி’ய வாரினான். இப்படி எவ்வளவோ மீனிங்ஸ் வருது. அதே மாதிரி காருக்கும் மீனிங் இருக்கு. நான் BMW கார் வாங்கி இருக்கேன்னா யாருமே வாங்காத BMW காரை நான் வாங்கி இருக்கேன்னு ஒரு அர்த்தம் வருது. BMWயும் கார்தான், மாருதியும் கார்தான். ஆனா, மாருதி கார் வாங்கினவன் BMW கார் வாங்கினவன பார்த்தா பயப்படுவான். ‘பரவா இல்லப்பா நீங்க கார் வாங்கிட்டீங்க’ன்னா ‘இதெல்லாம் ஒரு காரா சார்’ன்னு சொல்லுவான். ஆக, ஒரு பொருளை வாங்கும்போது அதோட அர்த்தத்தையும் நாம சேர்த்து வாங்குறோம்.

இந்த ஏரியா மார்க்ஸியத்துல இல்ல. இந்த ஏரியாவை மார்க்ஸ் கவனிக்கல. அல்லது அதற்கான தேவை அப்ப இல்ல. அப்ப மார்க்ஸியம் பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைக்கப்படணும். ஒரு செடி எப்படி பேப்பரா மாறுச்சோ மாக்ஸியம்ங்கற செடியும் இந்த பேப்பரா மாறணும். அப்படி மாறுச்சா? மாறல. கம்யூனிஸ்ட் என்ன பண்றாங்கன்னா மறுக்குறாங்க. இல்ல, மறைக்குறாங்க. மார்க்ஸியத்தின் தடுமாற்றங்களை அமெரிக்காவோட பொய் பிரச்சாரம்னு பேசிக்கிட்டே இருக்காங்க. ஈ.எம்.எஸ்.கிட்ட, ‘‘கம்யூனிஸம் போய் மீண்டும் முதலாளித்துவம் வருமா’’ன்னு கேட்டப்போ ‘‘கருவாடு மீனாகாது’’ன்னு பதில் சொன்னார். ஆனா, கருவாடு மீனாயிடுச்சு. ரஷ்யாவில் செங்கொடி இறக்கப்பட்டு வேற கொடி பறந்தது. இத நம்பூதிரி நினைச்சுப் பார்க்கல. ஏன் இப்படி பிரச்னை வருதுன்னா பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸியம் வளர்த்தெடுக்கப்படல. மார்க்ஸியம் தோத்துடுச்சு, மார்க்ஸியம் பொருந்தாது என்பதைவிட, அது வளர்த்தெடுக்கப்படணும். இந்தப் புதிய வாழ்நிலைக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்படணும். ஆனா, இன்னைக்கும் இவங்க பழைய அறிக்கைதானே வாசிக்குறாங்க. கம்யூனிஸ அறிக்கையில இருக்குற பல விஷயங்களை முதலாளித்துவ அரசுகளே செஞ்சுடுச்சு. ரயில்துறை மாதிரியான பெரிய துறைகள் தேசியமயமாக்கப்படணும்னு அதுல இருக்கு. அத இந்திராகாந்தி அரசு; அப்புறம் வந்த பல அரசுகள் செஞ்சுடுச்சு. ஆனா இன்னைக்கும் அதே அறிக்கை வாசிக்குறாங்க.

சிலர் மார்க்ஸிஸம் காலாவதியாகிடுச்சுன்னு சொல்லுவாங்க. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். வளர்தெடுக்கப்படணும்னு சொல்றேன்.

தீராநதி: meta marxismமும் நீங்கள் சொல்லும் Hyper marxismமும் எந்த விதத்தில் வேறுபடுகிறது?

எம்.ஜி.சுரேஷ்: நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்து அதன் செயல்பாடுகள் பிடிக்காம விலகிப்போனவர். அவர் meta marxism என்கிற கருத்தை முன் வைச்சார். இப்போ இம்பிலிமெண்ட்டேஷன்னு வரும்போது என்ன பிரச்னைகள் வருதோ அது வராமலிருக்க நாம் கம்யூனிஸத்தை கடந்து போகணும்னு சொன்னார். metaன்னா கடந்து போவதுன்னு அர்த்தம்.

Hyper-marxism என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தியது, நாளையதினம் ஒரு Hyper marxism வரலாம்னு சொன்னேன். இந்த உலகம் வந்து ‘ஹைப்பர் ரியல்’னா; அதீத உண்மை, நிஜமற்ற நிஜம், நகல் உண்மை, இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கலாம். இன்னைக்கு நாம பிம்பங்களால் ஆன உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். ரஜினிங்கற பிம்பம், இன்னும் ஏதேதோ பிம்பங்கள் நம்மை ஆட்சி செய்யுது. ரஜினிங்கற உண்மையை விட பிம்ப ரஜினிக்கு வால்யூ ஜாஸ்தி. நாளைக்கு ஒரு தேர்தல்னா பிம்ப ரஜினியை பார்த்துத்தான் மக்கள்ஓட்டுப் போடுவாங்க. அப்ப இந்தப் பிம்பம் என்பது நகல் உண்மை. இந்த நகல் உண்மை. அசல் உண்மையைவிட உண்மையாக இருக்கு. வீட்டுல இருக்குற டெலிவிஷனை எடுத்துக்கிட்டா இதே பிம்பங்கள்தான் ஆட்சி செலுத்துது.

மெகா சீரியல பார்த்து நம்ம ஜனங்க நம்பிகிட்டு உட்கார்ந்திருக்காங்க. நாம் வந்து பிம்பங்களின் அடிமை ஆகிறோம். உளவியல் ரீதியாவே மனிதன் பிம்பங்களின் அடிமைதான். மனுஷன் முதல்ல பிம்பத்தின் பின்னாடிதான் போவான். இத ஒரு விஞ்ஞானி பரிசோதனை பண்ணார். ஒரு கோழியை முட்டைகளை அடைகாக்க வச்சார், கோழி அடைகாத்து குஞ்சு வெளிய வந்த பின்னாடி கோழிய தூக்கிட்டு தாய்க் கோழிக்குப் பதிலா தன்னோட ஷ¨வை வைச்சிட்டார். இப்ப குஞ்சுகள் பார்க்குற முதல் பொருள் ஷ¨தான். அந்தப் பிம்பம் அதுங்களுக்கு முதல்ல பதியுது. அப்புறம் ஷ¨வை எடுத்து மாட்டிக்கிட்டு அவர் நடக்க ஆரம்பிச்சார். அந்தக் குஞ்சுகள்லாம் அவர் பின்னாடியே போகுது. பார்வை வந்த உடனே முதல்ல பிம்பம்தான் மனசுல படியுதுன்னு அவர் புரூஃப் பண்ணார். நமக்கு தாய்தான் முதல் பிம்பம். குழந்தை, தாயும் நாமளும் ஒண்ணுன்னே முதல்ல நம்புது. இதோட நீட்சியாதான் நாம நடிகர்கள் பின்னாடி போகுறது. இந்தப் பிம்பங்கள் ஷிஃப்ட்டாகிட்டே இருக்கு. முதல்ல அம்மாங்கற பிம்பம், அப்புறம் தலைவர்ங்கற பிம்பம், சேகுவேரா, காரல்மார்க்ஸ் எல்லாம் ஒரு பிம்பமா இருக்குறாங்க. அதுக்காக சேகுவேராவும் மார்க்ஸ§ம் நடிகனும் சமமானவங்கன்னு நான் சொல்லல. பல்வேறு ‘லெவல்’ல இந்தப் பிம்பங்கள் பின்னாடி நாம போறோம். நகல் உண்மையை நோக்கிப் போவது நல்லதில்லை. அப்ப என்ன செய்யணும். எந்த ஒரு விஷயத்தையும் விசாரணை பண்ணணும். பகுப்பாய்வு பண்ணணும். பின்நவீனத்துவம் அதுதான் பண்ணுது. ஏன் லிட்ரேச்சர்கூட அதைத்தான் செய்யுது. எல்லாக்காலத்திலும் இலக்கியம் தன்னுடைய காலத்துக்கு எதிரா இருந்திருக்கு. தன்னுடைய சமூக அமைப்புக்கு, அதிகாரத்துக்கு எதிரா நின்னு செயல்பட்டிருக்கு. Hyper marxismங்கறது இதுதான் செய்யச் சொல்லுது. Hyper marxismம்னா செழுமை செய்யப்பட்ட, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட marxismம்னு அர்த்தம். இப்போதைய அரசியல் அமைப்புகள் எல்லாமே படிநிலை (hierarchy) தன்மையா இருக்கு. இதுல அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் போகும். Hyper marxism சமூகத்தில் அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கிப் போகும். இன்னைய அமைப்பு செங்குத்தானது. (Vetical) மேல் கீழ் பாகுபாடுகள் கொண்டவை. நமக்குத் தேவை கிடைமட்டமான அமைப்பு (Horizonta) கிடைமத்தில் மேல் கீழ் இல்லை. இவையெல்லாம் Hyper marxismமட்டுமே சாத்தியம்.

தீராநதி: பிம்பங்கள் பற்றி பேசியதால் கேட்கிறேன். தங்களின் வசதிக்கேற்ப பிம்பங்களை அரசியல் சாயலோடு மறு வடிவமைப்பு செய்வதும் நடந்துவருகிறது. உதாரணமாக ஒளவையின் நிஜ பிம்பம் இன்று சொல்லப்படவில்லை. ஏதோ பொய்மையைக் கொண்டு நிரப்பி வேறுவிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பமே ருஸ§ வடிவமாக உள்ளது. இதைப்பற்றி உங்களின் கருத்து?

எம்.ஜி.சுரேஷ்: முன்னாடி நாம பேசினோம் இல்ல. அத மாதிரி பின்நவீனத்துவ அடிப்படையில இத கேள்விகேட்பதாலயும், விசாரணை செய்யறதாலயும் நிஜ பிம்பத்தை நாம அடைய முடியும். அப்ப இந்தப் பிரச்னை வராது.

தீராநதி: ஒரு கேள்வி மறுபடியும் ஒரு கேள்வியைத்தானே உண்டாக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: விசாரணையின் மூலமாதான் நாம உண்மைய அடைய முடியும். நாம சொல்ற உண்மைங்கறது ஒற்றை உண்மையல்ல; ஜெர்மன் விஞ்ஞானி எர்வின் ஷ்ரோடிங்கர் ‘கேட் தியரி’ன்னு ஒரு பரிசோதனை செஞ்சுகாட்டினார். உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். ஒரு டப்பாவுக்குள்ள ரெண்டு தட்டு வெச்சு ஒரு தட்டுல விஷமும் இன்னொரு தட்டுல உணவும் தனித்தனியா வெச்சார். ஒரு பூனையை அதுக்குள்ள போட்டு மூடிட்டார். இப்ப அந்த உணவைச் சாப்பிட்டா பூனைக்கு ஒண்ணும் ஆகாது. விஷத்த சாப்பிட்டா பூனை செத்துடும். இப்ப நாம பொட்டிய திறக்குற வரைக்கும் ரெண்டு உண்மை இருக்கு. ஒண்ணு: பூனை உயிரோட இருக்கு இரண்டு: பூனை செத்துடுச்சு. இத வைச்சு ஒரு உண்மைங்கறது கிடையாதுன்னு நிரூபிச்சார். இப்ப நாம திறந்து பார்க்காத இடத்துல இருக்கோம். திறந்து பார்த்துட்டா ரெண்டு உண்மைக்கு எடம் இல்லியே. நாம மூடப்பட்ட பெட்டியின் முன்னால நிற்குறோம். நம் வாழ்க்கைச் சூழல் பொதுவாக அப்படி இருக்கு. பொதுவா நாம பல உண்மைகளோட இருக்கோம். அதுக்குதான் இந்தக் கேள்வியும், விசாரணையும்.

கேள்விக்கு உள்ளாக்குதல் என்பது ஒரு விஷயத்தை நிராகரிக்குறது அல்ல; அதாவது பின்நவீனத்துவவாதியென்பவன் தன் முன்னோர்களை நிராகரிக்க மாட்டான். அதேசமயத்துல அவர்களைப் பின்பற்ற மாட்டான்.

தீராநதி: நீங்கள் சொல்வது மாதிரி விசாரணைக்கு உட்படுத்துதல், கேள்வி எழுப்புதல் இப்படிச் சகல வசதிகள் இருந்தும் நம் வரலாற்றையே கொட்டிக் கவிழ்த்த மாதிரி தமிழில் ஒரு பிரதி கூட வெளிவரவில்லையே ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: நீங்க சொல்றது உண்மைதான். உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆப் எ ரோஸ்’ டான் பிரவுனின், ‘டாவின்ஸி கோடு’ மாதிரியான ஒரு படைப்பு தமிழ்ல இன்னும் வரல. இத்தனைக்கும் ‘டாவின்ஸி கோடு’ ஜனரஞ்சகமான ஒரு படைப்பு. அதுபோல கூட தமிழ்ல வரல!

இப்ப நான் அந்த முயற்சியிலதான் இருக்கேன். இத சொல்றதால என்னை நான் அவங்களோட அவங்க அளவுக்கு ஒப்பிட்டுக்குறதா நினைச்சுடக்கூடாது. உம்பர்டோ ஈகோ, இடாலோ கால்வினோ எல்லாம் பெரிய ஆளுமைகள்.

‘டாவின்ஸிகோடு’ல யேசு கிறிஸ்துவுக்கு ஒரு மனைவி இருந்தாள், ஒரு மகள் இருந்தாள்னு ஒரு விஷயத்தைச் சொல்றார். அப்ப ரெண்டாயிர வருஷத்து பைபில கொட்டிக் கவிழ்த்துட்டார். யேசுவுக்கு மனைவி இருந்தான்னு சொல்லி அவர கேவலப்படுத்தல. ஆனா, இப்படியும் ஒண்ணு இருந்தது, எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்கன்னு சொல்றார்.

இதேபோல நம்முடைய களப்பிரர் காலத்தை எடுத்துக்கிட்டா கேள்விக்குரிய பிரசினைகள் எவ்வளவோ இருக்கு. பத்தாயிரம் சமணர்களை ஆசனவாயில் கழுவேத்திக் கொன்னாங்க. கழுவுல ஏத்துனா உடனே செத்துடமாட்டான். இதயம், மூளையில பாதிக்கப்பட்டாதான் உடனே ஒருத்தன் சாவான். ஆசனவாயில் ஏற்றப்பட்ட கழுமரம் அங்க குத்தாம வேற எங்காவது குத்துனா மணிக்கணக்கா சாகாம துடிதுடிச்சிகிட்டே கிடப்பான். இது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி செத்த உடல்களை எரிச்சு அந்தச் சாம்பல்ல ஏறி குதிச்சு சந்தோஷமா ஆட்டம் போட்டாங்க. அவங்க உடல் எரிக்கப்பட்ட சாம்பல உடல் முழுக்க பூசிக்கிட்டாங்க. இன்னைக்கு விபூதி பூசுறாங்களே அதோட ஆதாரம் இதுதான். சைவர்கள் மையமாக இருந்தப்ப சமணர்கள் விளிம்பு நிலையாக்கப்பட்டாங்க. சமணர்களும் தமிழன்தான். இந்த வரலாற்றை யாராவது இதுவரைக்கும் எழுதுனாங்களா? இல்ல.

தீராநதி: தைரியம் கொடுக்கும் கோட்பாடு இருந்தும் தமிழில் ஏன் வரவில்லை? சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட வரவில்லையே? தைரியம் போதவில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட தமிழில் வரல. நீங்க சொல்ற தைரியமின்மையை கூட மன்னிச்சுடலாம். ஆனா, இவங்க ஆதாயங்களுக்காக செயல்படுறாங்க. அதனால இவங்கள மன்னிக்கக்கூடாது. ஜெயகாந்தன் முதல்ல ‘ஹர ஹர சங்கரா’ எழுதுனார். ஞானபீடம் கிடைச்சதுக்கு அப்புறம் சங்கராச்சாரியார தூக்கி பிடிச்சு மறுபடியும் எழுதுறார். ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’னு ஒரு நாவல் எழுதுனாரு. விஷ்ணுபுரத்தோட முதல் பதிப்பு அட்டைப் படத்த பார்த்தீங்கன்னா தாமரை படம் போட்டுருக்கும். தாமரை பி.ஜே.பி.யோட சிம்பல். விஷ்ணுபுரத்தோட ‘மெயின் தீம்’ என்னான்னு பார்த்தா, ஆதியில் விஷ்ணுபுரம்னு ஒண்ணு இருந்தது. விஷ்ணு புரண்டுபடுத்தார் _ நம்ம ஐதீகத்துல வருது முதல் முறை விஷ்ணு புரண்டு படுத்தப்ப விஷ்ணுபுரம் இருந்துச்சு. மீண்டும் புரண்டு படுத்தப்ப முகலாயர்கள் வந்துட்டாங்க. அதனால அந்த விஷ்ணுபுரம் அழிந்தது. இப்ப திரும்ப புரண்டு படுத்திருக்காருன்னு வருது. அப்படீன்னா பி.ஜே.பி. ஆட்சி வந்துட்டதுன்னு மறைமுகமா எழுதுறார். அதன் விளைவு, பொள்ளாச்சி மகாலிங்கம் அத நூற்றுக் கணக்குல வாங்கி இலவசமா தர்றாரு. அதனால அது அதிகமாக விற்குது. நியாயமா இவரு என்ன செய்யணும்? உம்பர்டோ ஈகோ, டேன் பிரவுன் மாதிரி நமது இந்திய நாட்டுல என்ன கொடுமைகள் இருந்தது, ‘அன்பே சிவம்’னு சொல்லறாங்க, நிஜமா இருந்திருக்காங்களான்னு கேள்வி எழுப்பி இருக்கணும்.

அதச்சொன்னா அவருக்கு என்ன ஆதாயம். அவருக்கு என்ன பலன் கிடைக்கும். இந்துத்வா கொள்கைகளை எழுதினா நாளைக்கு அவர் ஒரு எம்.பி.யாகூட ஆகலாம். பி.ஜே.பி. கவர்மெண்ட் வர்றப்ப சாகித்ய அகாடமி விருதுகூட கிடைக்கும். இதனால அவர் எழுத்து பல மொழிகள்ல மொழி பெயர்க்கப்படும். பலவாரியான இந்து மக்களுக்கு ஆதர்ஸமா அவர் இருப்பார். அதனால இப்படி எழுதுறாரு. ஆக, தைரியமில்லாம இருப்பதைவிட ஆதாயவாதியாக இருப்பது கொடியது.

தீராநதி: அப்படி ஒரு படைப்பும் வராதபட்சத்தில் இந்தக் கோட்பாடுகள் வீணாக எதற்கு?

எம்.ஜி.சுரேஷ்: நம்மளோட கடமை ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். யாராவது இத செய்வாங்கன்னு நம்பி செஞ்சிட்டு இருக்கோம். இப்ப ‘நாஸா’வுல இருக்குற விஞ்ஞானிகள்லாம் பிரபஞ்ச வெளியில சவுண்டை அனுப்புறாங்க. … பீப்பீப்பீப்பீன்னு சவுண்டை அனுப்புறாங்க. பிரபஞ்ச வெளில வேற எங்காவது உயிரினம் இருக்கலாம் அந்த உயிரினம் பதிலுக்கு என்றைக்காவது எதிர்வினை செய்யாதான்னு நம்பி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நாமலும் அதே மாதிரி செய்யுறோம் அவ்வளவுதான்.

தீராநதி: ஆரம்பகாலங்களில் நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்கள். அதில் கவிதைகளின் அம்சம் குறைவாக இருப்பதால் நிராகரித்துவிட்டதாக சொல்லியிருந்தீர்கள். இன்று கவிதைகளுக்கான அம்சத்தையெல்லாம் உரை நடை கொண்டு போய்விட்டது. அப்படி இருக்க நீங்கள் ஏன் மறுபடியும் அ_ கவிதை எழுதக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பொயட்ரிங்கறது ஏற்கெனவே இருக்குற ஒரு விஷயத்தை மேலும் சிக்கலாக்குறதால பின்நவீனத்துவவாதிகள் பொயட்ரியை நிராகரிக்கிறாங்க. கவிதை வாசிக்குறவன்கிட்ட கவிதைய பத்திய பொதுபுத்தி ஒண்ணு இருக்கு. அவன் உரைநடையைப் படிக்கும்போது அத அப்படியே எடுத்துக்குறான். ஆனா, இதுவே கவிதையின்னு வரும்போது வேற அர்த்தம் தேடுறான். ‘கவிதை என்பது அர்த்தங்களின் சுமைகளாகத் தடுமாறுகிறது’ன்னு ரொலன்பார்த் சொல்றார். கவிதை வந்தது வேற எடத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கு. எப்படி கேமிரா வந்ததும் ஓவியம் தன் வெளிப்பாட்டை மாத்திக்கிடுச்சோ அது மாதிரி கவிதையும் வேற லெவலுக்குப் போய் ஆகணும்.

தீராநதி: அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பண்ணணும்ங்கற எண்ணம் எனக்கிருக்கு. மீ கவிதை (Hyper poem) மாதிரி பண்ண ஒரு திட்டம் வைச்சிருக்கேன்.

தீராநதி: inter-text ஊடிழைப் பிரதி என்று சொல்லப்படுகிறதே அதை விளக்க முடியுமா?

எம்.ஜி.சுரேஷ்: ஒரு கதையைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே போனால் சில தவறுகள் நடந்துடும். அதையே பிரேக் பண்ணி பிரேக் பண்ணி சொன்னா தப்பு வராது. அதுக்குதான் ஊடிழைப் பிரதி தேவைப்படுது.

ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’னு ஒரு சிறுகதை எழுதுனார். அதயே பெருங்கதையாடலாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எழுதுனார். சிறுகதையில ‘கங்கா’ங்கற கேரக்டர் கெட்டுப்போயிடுவா. அப்ப அவள ‘நீ தல குளிச்சுடுடீ.. சீத வந்து அக்னி பிரவேசம் பண்ண பிறகு சுத்தமாயிடுவா. குளிச்சா நீ சுத்தமாயிடுவே’ன்னு சொல்லி இருப்பார். அதுல நம்ம பழைய ஒழுக்கக் கட்டமைப்புகளையெல்லாம் கொட்டிக் கவித்திருப்பார் அதுவே பெருங்கதையாடல்ல எப்படி வரும்னா இந்த ‘கங்கா’ங்கறவ ஏற்கனவே லவ் பண்ணவன பார்ப்பா. அவன் தண்ணி அடிச்சிக்கிட்டு கிடப்பான். முடிவுல அந்தக் கதையில ஒரு விபச்சாரிபோல நடந்து போவா கங்கா. கார் ஒண்ணு போகும். இவள பார்த்த ஒடனே நின்னு பின்னாடி வரும். அதுல இருந்து ஒருத்தன் சிகரெட் பத்த வைச்சிகிட்டு இவள பார்ப்பான். இவ உடனே ‘ஈ’ன்னு சிரிச்சிகிட்டு நிற்பா. இப்படி முடியும் கதை. அப்படின்னா அவள விபச்சாரியாக்கிட்டாரு. அக்னி பிரவேசத்துல சிறப்பா பண்ணவரு, அவள ஒரு விபச்சாரியாக்குறதுக்கு இவ்வளவு பெரிய கதைய எழுதணுமா? Inter text ன்னு எழுதும்போது இந்த விஷயங்களை ஷார்ப்பா கையாளலாம்.

தீராநதி: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை வைத்து ‘37’ என்ற நாவலை எழுதி இருக்கிறீர்கள். பிரைமேலெவி போல மாற்று அறிவியல் நாவலது. தத்துவம், அறிவியல் கோணங்களில் எழுதி வாசகனை பிரமிக்க வைப்பது என்பது அதன் சாராம்சம். எதிர் நபரை தன் அறிவைக்காட்டி பிரமிக்க வைப்பதென்பதும் Intellectual Terrorism மாகாதா?

எம்.ஜி. சுரேஷ்: அறிவைக்காட்டி பிரமிக்க வைக்குறது கூட இல்ல இது. சில நிகழ்வுகளைக் காட்டி பிரமிக்க வைக்கிறது. panaromic Spectacle மாதிரி, உடை, தோற்றம், ஜோடனைகளைக் காட்டி பிரமிக்க வைக்குறது. அவ்வளவுதான். நம்ம மனோகர் நாடகம் மாதிரி. அறிவு ரீதியா பிரமிப்பும் பண்ணலாம். டெரிடா, பூக்கோவோட அறிவாற்றல கண்டுதானே நாம பிரமிக்கிறோம். நான் நிறைய படிச்சிருக்கேன், எனக்கு நிறைய தெரியும்னு மத்தவங்களை அறிவைக்காட்டி பயமுறுத்துறதுதான் Intellectual Terrorism.

தீராநதி: அதுபோல வேலையும் இங்கு நடக்கிறது இல்லையா?

எம்.ஜி. சுரேஷ்: ஆமாம். நடக்குறதுதான். அந்த டெரரிஸத்தை நான் எதிர்க்குறேன்.

தீராநதி: தனக்குக் கிடைக்கும் ஓர் அழகான பேனாவை அல்லது தகவல்களை யாருக்கும் சொல்லாமல் நமக்கானதாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்று. ஆனால் நீங்களோ அதற்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். அறிவு பரவலாக்கல் செய்கிறீர்கள். இந்த அறிவுப் பரவல் மனப்பான்மையை எப்படிப் பெற்றீர்கள்?

எம்.ஜி. சுரேஷ்: நம்ம ராமானுஜர் தனக்குத் தெரிஞ்ச ‘ஓம் நமோ நாராயணா’ங்கற மந்திரத்தை மக்கள் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல… அததான் நான் செய்றேன். ஒரு அறிவுங்கறது பலருக்கும் பகிர்றதா இருக்கணுமே ஒழிய, மிரட்டறதா இருக்கக் கூடாது. அறிவுங்கறது மக்களுடையதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக என்னுடைய எல்லா புத்தகத்துலயும் ‘உரிமை மக்களுக்கு’ன்னு போட விரும்புறேன். மக்கள்தான் என்னை உருவாக்குனது. otherதான் என்னை உருவாக்குனது. அப்படின்னா பலரால் உருவானவன் நான். பலரால் உருவான நான் சமூகத்துக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணும்னு வரப்ப இத செய்யறேன். நான் எழுதின ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ புத்தகம் பல காலேஜ்ல பாடத் திட்டத்துல வைச்சிருக்காங்க. பேராசிரியர்கள்லாம் இந்தப் புத்தகத்த சிபாரிசு செய்யுறாங்க. அத பார்த்துட்டு ஓர் இலக்கிய நண்பர் ‘என்ன நீங்க இவ்வளவு சிம்பிளா பண்ணிட்டீங்க. நாளைக்கு நம்மளைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டாங்க. நீங்க தப்பு பண்ணிட்டீங்க’ன்னு சொன்னாரு. இப்படி நினைக்குறதே ஒரு டெரரிஸம் போலதான்.

தீராநதி: நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். மார்க்குவேஸ், ஜான்அப்டைக் போன்றவர்கள் கூட பெரும் பத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். மார்க்குவேஸை, ஜான் அப்டைக்கை கொண்டாடுகிற நம்மவர்கள் சிறுபத்திரிகை படைப்புகள் மட்டுமே உன்னதமானது என்பதுபோல ஒரு ஃபோபியாவில் மாட்டித் தவிக்கிறார்களே?

எம்.ஜி. சுரேஷ்: தாஸ்தாவெஸ்கியும் ஒரு வெகுஜன எழுத்தாளர்தான். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவது கீழானது. சிறு பத்திரிகையில் எழுதுவது உன்னதமானது அப்படி நினைக்குறதும் ஒரு ஹிப்போகிரஸிதான்.

தீராநதி: இதையட்டியே ஒருகேள்வி. பெரும் பத்திரிகைதான் சிற்றிதழின் எழுத்து நடையையே தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக ஒரு காலத்தில் சிறு பத்திரிகையில இயங்கிய பாலகுமாரன் வெகுஜனத்திற்குப் போனார். அது வெகுஜன நடையானது. பிறகு ஜெயகாந்தன் போனார், அப்போதும் மாறியது. இன்று ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எல்லாம் வெகுஜனத்திற்கு போய்விட்டார்கள். இதுவரை சிறுபத்திரிகை நடையாக இருந்தது வெகுஜனமாக மாறி இருக்கிறது. இப்போது வேறு நடைகள் சிறு பத்திரிகைக்கு தேவையாகிறது. இந்த ‘வேக்கம்’தான் சிறுபத்திரிகையின் நடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன், இது சரியா?

எம்.ஜி. சுரேஷ்: இது ரெண்டு விதமாகவும் Vice Versa இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி அப்படியும் இதைப் பார்க்கலாம்.

தீராநதி: பின்நவீன எழுத்தை அறிமுகம் செய்ய உங்களுக்கு என்று ஓர் இதழ் முன்னால் தேவைப்பட்டது. இன்றோ வெகுஜன இதழ்களே பின்நவீன எழுத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. பிறகு உங்களுக்கென்று ஓர் இதழ் தேவையா?

எம்.ஜி. சுரேஷ்: பின்நவீன எழுத்தை வெளியிடறதுக்கும், அந்தக் கோட்பாடுகளை அறிமுகம் செய்யறதுக்கும், விவாதிக்குறதுக்கும் ஒரு இதழ் தேவைப்பட்டது. அதனால் பன்முகம் இதழைத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி இயங்கிகிட்டு இருந்த நிறப்பிரிகை, கிரகணம் மாதிரியான இதழ்கள் நின்னுபோனதால இந்தத் தேவை உண்டாச்சு. இப்ப நீங்க சொல்ற மாதிரி பெரிய பத்திரிகைகளே போஸ்ட் மாடர்னிஸ எழுத்துக்களைப் பரவலா வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்ப எனக்குன்னு ஒரு பத்திரிகை தேவை இல்ல. இன்னொன்று, ஒரு சிறு பத்திரிகை தொடர்ந்து வரக்கூடாது. வந்தா அது நீர்த்துப் போயிடும். கொஞ்ச நாள் நிறுத்திட்டு அப்புறம் கொண்டு வரலாம். இப்போ பன்முகத்தை போன டிசம்பரோட (2006) நிறுத்திட்டோம்.

தீராநதி: அண்மையில் உலகையே உலுக்கிய சதாம் தூக்கு பற்றி?

எம்.ஜி.சுரேஷ்: அடிப்படையில நான் மரண தண்டனையை எதிர்க்குறேன். சதாம் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அந்தப் பிரச்னையில அமெரிக்கா தலையிட முடியாது. சதாமை அந்த மக்கள்தான் தண்டிக்கணும். அதுகூட தூக்குப் போட்டு தண்டிக்குறது சரி இல்ல. சதாம் தப்பு பண்ணலையான்னு ஒரு கேள்வி வரும். யாருதான் தப்பு செய்யல. வரலாறு என்பதே வன்முறையின் வரலாறுதானே. பல வரலாறுகள் நம்மகிட்ட முன்னுதாரணமா இருக்கு. தமிழர்களுடைய ‘நாலடியார்’ங்குற எட்டாயிரம் பாடல்களை பாண்டிய மன்னன் ஆற்றுல தூக்கிப் போட்டான். அதுல மிஞ்சின நாலாயிரம் பாடல்கள் தானே நாலடியார்? அதுவும் ஒரு வரலாறு. வன்முறைங்கறது காலம் காலமா நிகழ்ந்துகிட்டே இருக்கு. இத சதாம் மட்டுமே செய்யலியே. ஆனாலும் வன்முறைக்குத் தீர்வு வன்முறை இல்ல.

சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : ஆர். சண்முகம்

February 12, 2007

துயரத்தின் மேல் படியும் துயரம்

Filed under: கவிதைகள் — டிசே தமிழன் @ 11:34 am

அஞ்சலி: சு. வில்வரத்தினம் (07.08.1950 - 08.12.2006)

-ரவிக்குமார்-

“வில்வர்” என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட கவிஞர் சு. வில்வரத்தினம் மரணமடைந்துவிட்டார். அவருக்குச் சாகிற வயதில்லை. எல்லா வயதுமே இறக்கிற வயதுதான் என்றாகிவிட்ட ஈழத்தில் ஐம்பத்தாறு வயதில் ஒருவர் இறந்ததில் வியப்பெதுவும் இருக்க முடியாதுதான். ஆனால் வில்வரத்தினத்தின் மரணத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. ஒரு இழப்பின் மதிப்பு அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் தீர்மானிக்கப்படுகிறது. வில்வரத்தினம் ஏற்படுத்திச் சென்றுள்ள வெற்றிடம் ஈழத்தைக் காட்டிலும் பெரியது.

1986-அப்போது எம்.ஏ. நுஃமான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தார். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இலங்கைக்குச் சென்று திரும்பும்போது எனக்கென்று சில நூல்களைக் கொண்டுவந்திருந்தார். மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களோடு வில்வரத்தினத்தின் முதல் கவிதைத் தொகுதியான அகங்களும் முகங்களும் நூலின் ஒரு பிரதியும் இருந்தது. மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் வில்வரத்தினத்தின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது மொழியும் வெளிப்பாடும் புதியனவாக இருந்தன. யார் இவர் என்று அவரைப் பற்றி நுஃமானிடம் கேட்டேன். “இப்போது எழுதிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர்” என்று அவரைப் பற்றி மிகச் சுருக்கமாக நுஃமான் சொன்னார். நுஃமான் கூறியது மிகையானதல்ல என்பதை அவரது கவிதைகள் மூலமாக நான் கண்டுகொண்டேன்.

‘தமிழ் இனி 2000′ மாநாட்டின் குழுவில் நானும் ஒருவனாகப் பங்கெடுத்திருந்த நேரம். இலங்கையிலிருந்து யார் யாரை அழைப்பது என்பது பற்றிப் பேச்சு எழுந்தபோது சேரன் உள்ளிட்ட இலங்கை நண்பர்கள் ஒட்டுமொத்தமாகப் பரிந்துரைத்த பெயர் வில்வரின் பெயர்தான். அவர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கும் இங்கே எழுத்தாளர்கள் பலரோடும் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதற்கும் ‘தமிழ் இனி’ மாநாடுதான் வழிவகுத்தது (காலச்சுவடு இதழை அவதூறு செய்வதன் மூலம் தமக்கொரு அடையாளத்தைத் தேடிக் கொள்ள முற்படும் நபர்கள் ‘தமிழ் இனி’ மாநாட்டின் சாதகமான அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள்). அந்த மாநாட்டில் அதிகமான “ரசிகர்க”ளைப் பெற்றவர் அவர்தான்.

1940களில் தொடங்கியதாகக் கூறப்படும் ஈழத்துப் புதுக்கவிதை மரபில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் வில்வரத்தினம். அந்தத் தலைமுறையில் சேரனும் அவரும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். தமது தனித்துவத்தாலும் ஆளுமையாலும் ஈழத்துக் கவிதை உலகத்தில் மட்டுமின்றி அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியவர்கள். சேரனுக்கு இருந்த பின்புலம் வில்வருக்கு இருக்கவில்லை. ஈழத்துப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்ட மஹாகவியின் மகன் என்ற அனுகூலம் சேரனுக்கு இருந்தது. ஆங்கிலக் கல்வியும் அவருக்குக் கூடுதலான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. இவை எதுவும் வில்வருக்குக் கிடையாது. விவசாயப் பின்புலம் கொண்ட கிராமத்து வாழ்க்கை அவருடையது. ஆனால், அதுவே அவரது பலமாகவும் ஆயிற்று. தேவாரப் பாடலுடன் புலரும் காலைகளைக் கொண்ட அவரது வாழ்க்கையில் இயற்கையாக அமைந்த லயம் அவரது குரலிலும் கவிதையிலும் வெளிப்பாடு கொண்டது.

மு. தளையசிங்கத்தோடு ஏற்பட்ட அறிமுகமும் பின்னர் அது நட்பாக மாறியதும் வில்வரத்தினத்தின் வாழ்வில் முக்கியமானவை. தளையசிங்கத்தின் ஆன்மீகக் கனவுகளை வில்வரத்தினத்தினமும் பகிர்ந்துகொண்டார். சமய நம்பிக்கையாகத் திரிந்துவிடாத ஆன்மீகம் அது. மனிதர்களிடத்தில் அன்பைப் பொழியும் அதன் சாரத்தை வில்வரத்தினத்தின் கவிதைகளில் பார்க்கலாம்.

‘தமிழ் இனி’ மாநாடு முடிந்த பிறகு சில நாட்கள் வில்வரத்தினம் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு மாலை அவரோடு ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். கவிஞர் நீலாவணனின் “ஓ… வண்டிக்காரா…” என்ற கவிதையை அப்போது அவர் பாடிக்காட்டினார். அடுத்தடுத்துப் பல கவிஞர்களின் பல்வேறு கவிதைகளைப் பாடினார். அந்தச் சந்திப்பு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய நான் ஏற்பாடுசெய்திருந்தேன். அந்த வீடியோ கேசட் இப்போது பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் கண்ணனிடம் இருக்கிறது. வில்வரத்தினம் கவிதைகளை முழுமையான ஒரு தொகுப்பாக வெளிக் கொண்டுவரும் திட்டம் அப்போதுதான் உருவானது. அந்தத் திட்டத்தைத் தனது உத்தியோகத்தின் அடிப்படையாக அந்த நண்பர் ஆக்கிக்கொண்டாரென்பது பிறகுதான் எனக்குத தெரிந்தது.

ஈழத்தமிழர்களின் துயரத்தை எடுத்துச் சொல்லித் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வையும் ஆதரவையும் உருவாக்கியதில் ஈழத் தமிழ்க் கவிதைகளுக்கு முக்கியப் பங்குண்டு. வ.ஐ.ச. ஜெயபாலனின் சூரியனோடு பேசுதல், சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் என ஒரு பட்டியலைச் சொல்லலாம். மரணத்துள் வாழ்வோம், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், சொல்லாத சேதிகள் ஆகிய தொகுப்புகளுக்கும் இதில் பெரிய பங்குண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும்விடச் சேரனின் இரண்டாவது சூர்யோதயம் என்ற சிறு நூல் உண்டாக்கிய தாக்கம் அதிகம். எண்பதுகளில் சேரனின் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்நாட்டிலும் பல கவிஞர்களை உருவாக்கியது. “முற்போக்குக்” கவிதைகளின் தொனி மாறுவதற்குச் சேரனின் கவிதைகள் காரணமாக அமைந்தன. அதுபோல, ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு ஈழப் பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மௌனத்தைச் சற்றே நெகிழ்த்திய பெருமை வில்வரத்தினத்தின் கவிதைகளையே சாரும்.

1995இல் வெளியான காற்றுவழிக் கிராமம் என்ற சிறு நூல் வில்வரத்தினத்தின் நீள் கவிதையைத் தாங்கி வந்தது. ஈழப் போராட்டத்தின் துயரத்தை அந்த நூலின் அளவுக்கு எடுத்துச் சொன்ன நூல் வேறெதுவும் இருக்க முடியாது. நான் அப்போது எனது பணி நிமித்தமாகக் கோயம்புத்துணரில் தங்கியிருந்தேன். விடியல் பதிப்பக உரிமையாளர் சிவஞானம் அப்போது என் தோழராயிருந்தார். அவர்தான் அந்த நூலின் பிரதியொன்றை எனக்குத் தந்தார் (அந்தக் கவிதைகளை மறுபிரசுரம் செய்வதற்கென்றே புதுவையில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து ஒரே இதழோடு அது முடிந்துபோனது தனிக் கதை). அதன் பிறகு வில்வரத்தினத்தின் நெற்றிமண் என்ற தொகுப்பு வந்தது.

வில்வரத்தினம் விடுதலைப் புலிகளின் அன்புக்கு உரியவராயிருந்தார். அவர் மறைவுக்கு விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பிரிவுக்குப் பொறுப்பான புதுவை இரத்தினதுரை இரங்கல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததை இணையத்தில் பார்த்தேன். புலிகளின் போராட்ட வலிமைமீது வில்வரத்தினமும் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருந்தார். அதே சமயம் ஈழத்தில் நடக்கும் சகோதரக் கொலைகள் பற்றிய விமர்சனமும் அவருக்கிருந்தது. ஈழத்தில் பஞ்சமர்கள் என அறியப்படும் தலித் மக்களின் உரிமைகள் குறித்த புரிதல் அவருக்கிருந்தது. ஈழத்தில் எழுந்த முதல் ஆயுதப் போராட்டம் சாதி ஒழிப்புப் போராட் டம்தான். அந்த வரலாற்றை டானியலின் பஞ்சமர் நாவலில் நாம் தெரிந்துகொள்ளலாம். சண்முகதாசனின் செல்வாக் கால் உருப்பெற்ற, இடதுசாரித் தன்மை கொண்ட ‘சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி’க்கு அப்பால் தளையசிங்கத்தின் தலைமையிலும் சில போராட்டங்கள் நடந்துள்ளன. ‘நீர் அள்ளச் செய்தல்’ என அந்தப் போராட்டங்கள் நடந்தன. புங்குடுதீவு பகுதியில் நடந்த நீர் அள்ளும் போராட்டத்தில் தளையசிங்கத்தோடு கலந்துகொண்டு போலீஸால் தாக்கப்பட்டுத் தனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதாக வில்வரத்தினம் என்னிடம் தெரிவித்தார்.

வில்வரத்தினம் நேரடியாக யுத்தத்தில் குண்டடிபட்டுச் சாகவில்லையெனினும் அவரது சாவுக்கு ஈழத்தில் நடக்கும் போரே காரணம். ஓர் இடத்தில் தங்கியிருக்க முடியாமல் அங்குமிங்கும் அவர் விரட்டப்பட்டார். இந்திய அமைதிப் படையால் அவரது வீடு எரிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்த சீறுநீரகக் கோளாறை உரிய காலத்தில் கண்டறிந்து சொல்லக்கூடிய மருத்துவர்களோ அதைக் குணமாக்கும் மருத்துவ வசதியோ இன்று ஈழத்தில் இல்லை. கால்களில் ஏற்பட்ட வீக்கம் சீறுநீரகக் கோளாறின் அறிகுறி என்பது தெரியாமல் கால் வீக்கத்துக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தவர் தனது நோயைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள முயன்றபோது காலம் கடந்துவிட்டது. 8.12.2006 மாலை கொழும்பு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எம்.ஏ. நுஃமான் மூலமாக மின்னஞ்சலில் வந்தது. அவருக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தவே விரும்பினேன். அவரது கவிதைகள் மூலமாக ஏற்பட்ட நெருக்கமான உறவே என்னை அப்படி எண்ணவைத்திருக்கும். கவிஞர் இந்திரனோடு சேர்ந்து சென்னையிலும் (13.12.06) புதுவை இளவேனிலோடு இணைந்து புதுச்சேரியிலும் (15.12.06) இரண்டு அஞ்சலி நிகழ்ச்சிகளை மட்டும்தான் ஏற்பாடுசெய்ய முடிந்தது.

வில்வரத்தினத்தின் மரணச் செய்தி கேட்டு ஒரு வாரத்துக்குள்ளாகவே ஆன்டன் பாலசிங்கம் மறைந்த செய்தி வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் நடத்தும் வலையகங்களில் ஒரு மரணத்தை இன்னொரு மரணம் சிறியதாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு துயரத்தின்மேல் படிகிறது இன்னொரு துயரம். பாலசிங்கத்துக்குத் ‘தேசத்தின் குரல்’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரபாகரன். ஒரு கவிஞனைப் பூகோள எல்லைக்குள் வரையறுக்க முடியாது. பிரபாகரனைப் பின்பற்றி வில்வரத்தினத்தைத் ‘தமிழின் குரல்’ என்று அழைக்கலாமெனத் தோன்றுகிறது. தமிழ் உள்ளளவும் ஒலிக்கும் அந்தக் கவிதைக் குரல்.

நன்றி: காலச்சுவடு

February 5, 2007

?

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 1:52 am

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது
பகிர முடியாத நம் வலிகள்
கொடுங்காற்று வீச
தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்
தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட
போரை
கெட்டவார்த்தையால் திட்டுகிறான்

உன்னை
காரின் பின்சீட்டில்
புணர்ந்துகொண்டிருக்கையில்
யோனியில்
கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள்
குறுக்காய் கடந்துபோகின்றாள்.

…………………..

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
……………………….

கடிகாரத்தின்
இருமுட்களுக்குமிடையில் சிக்கிய
பல்லி நான்

முன்னே நகரும் முள் நீ
பின்தொடரும் முள் கடந்தகாலம்

கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.

(Feb 04, 2007)

February 3, 2007

Pariah என்ற சொல்லின் அரசியல்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:07 am

கீழே தரப்பட்டுள்ள கடிதம், தோழியொருவரால் அனுப்பப்பட்டது. இவ்விடயம் குறித்து அக்கறையுள்ளவர்கள் எதேனும் செய்யக்கூடும் என்பதால் மட்டும் இங்கு நன்றியுடன் பிரசுரிக்கப்படுகின்றது. பறையர் என்ற சொல்லின் அரசியல் குறித்து நிறைய எழுதலாம். சென்றவருடம் ரொரண்டோவில் தமிழியல் மாநாடு நடந்தபோதும், ஒரு பேராசிரியர் கூத்துக்கலையை (சரியாய் நினைவிலில்லை) விளக்குவதற்காய் படங்களில் அரசர்களுடன் ‘பறையர்களை’யும் உலாவவிட்டிருந்தார். அதுகுறித்த அரசியலை, அந்த வார்த்தையின் பயன்பாட்டு தடைசெய்யப்படவேண்டும் என்றும் அரங்கில் இருந்த பலர் கேள்விகள் கேட்டதாய் நினைவு. நிறங்களில் கூட பறையர்களை பிறரிலிருந்து வேறுபடுத்திக்காட்ட அதில் முயற்சித்திருந்தார்கள்.

Please feel like a pariah

India’s leading weekly Outlook has published a cover story in its February 5, 2007 issue about smoking. That story was filed by one Mr.Raghu Karnad. The magazine publicized it in its cover with the following title: “Smokers the New Outcasts- Growing middleclass intolerance makes smokers feel like pariahs”. I have no objection over their stand on smoking though I have a different outlook about it. My concern is about their use of the word ‘Pariah’. In that story ‘advertising guru’ Alyque Padamsee has used that expression. “Nobody really wants smokers in a room-they’ve become the new pariahs” he said. Feeling like pariahs is not an easy thing. Facing discrimination and contempt in each and every walk of life is the fate of the Dalits in India. If anybody wants to feel like a pariah, he must live like one first.

“The caste system of India placed pariahs, also known as Untouchables, very low in society. The word pariah, which we have extended in meaning, came into English from Tamil pa raiyar, the plural of pa raiyan, the caste name, which literally means “(hereditary) drummer” and comes from the word pa rai, the name of a drum used at certain festivals. The word is first recorded in English in 1613. Its use in English and its extension in meaning probably owe much to the long period of British rule in India” thus defines the website called ‘The freedictionary.com ‘.

Calling a person who belongs to the Scheduled Caste by his caste name is an offence under the Prevention of Atrocities Act 1989 .Tamilnadu government once booked a case against former central minister and Janatha Party president Subramaniam swamy under P.C.R Act when he called the L.T.T.E chief Pirabhakaran as “International Pariah”.

Though our Acts prohibits the derogatory usage of the words such as ‘pariah’, the people in media still continues to use it in a casual manner. They must learn some lessons from countries like America where the Blacks were called once as ‘nigger’. Now they use ‘Afro Americans’ to identify Black people.

This kind of insensitivity should not be tolerated. I request
everybody to share my pain and come forward to feel like a ‘pariah’. Please write protest mails to Outlook. On our side we have decided to sue the magazine if it fails to apologize for its mistake.

E mail id: editor@outlookindia.com, letters@outlookindia.com

D.Ravikumar
MLA,Viduthalai Chiruthaikal Katchi(D.P.I)
Tamilnadu

RAVIKUMAR
B1B MLA Hostel
Chepauk,Chennai 600 005
Mobile:93454 19266

February 1, 2007

ஈழப்படுகொலைக்கு எதிர்ப்பு

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 3:02 pm

-கவிதாசரண்

எல்லாருக்கும் வணக்கம்.

ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள்; வரைமுறையற்றுச் சீரழிக்கப்படுகிறார்கள்; பல்லாயிரக்கணக்கில் தங்கள் மண்ணிலிருந்து அகதிகளாகப் பிடுங்கியெறியப் படுகிறார்கள். சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மேல் அறிவிக்கப்படாத போரைத் துவக்கி, சர்வதேச நெறிமுறைகளையெல்லாம் மீறி நடத்திக்கொண்டிருக்கும் ஈனத்தாக்குதல்களைக் கண்டிக்கவே இங்கே நாம் கூடியிருக்கிறோம்.

கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச்சமூகம் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில், ஒற்றைக்குரலில் வெகுண்டு எழுந்ததென்றால் அது ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகத்தான். இடையிலே சில ஆண்டுகள் இந்தியத் தமிழர்கள் தலைகுனிந்து குரல் இழந்து வெக்கையில் புதைந்திருந்தோம். இன்றைக்கு செஞ்சோலையில் கொன்று குவிக்கப்பட்ட செல்வங்கள் 61 பேரின் ஆற்றவொண்ணாப் பேரிழப்பு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அணைகடந்த வெள்ளமாய்த் திரட்டித் தந்திருக்கிறது. இந்த நல்லுறவுச் சங்கமத்திற்காக ஈழம் கொடுத்த விலை ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்பதுதான் தேற்றிக்கொள்ள முடியாத வரலாற்றுச் சோகம்.

போரில் கல்விக் கூடங்கள், வழிபாட்டிடங்கள், மருத்துவமனைகள், தொல்பொருள் சேகரிப்பு மையங்கள் போன்றவை தாக்கப்படக் கூடாது என்று வீதி செய்திருக்கிறார்கள். ‘அவை நாகரிகம் பேணுகிறவர்களுக்குத்தான் - எங்களுக்கல்ல’ என்று அறிவிப்புச் செய்து கொண்டவர்களைப் போல சிங்கள வல்லாதிக்கவாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னஞ்சிறுமிகளைக் கொன்றது மட்டுமல்லாமல் ‘அதற்காக வருத்தப்படுவது எங்கள் வேலையல்ல’ என்றும் சொல்வது அவர்களது ஆகக் கீழ்மையான ஆணவத்தின் வெளிப்பாடு.

லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் நடத்தும் கோரத்தாண்டவத்தை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை வல்லாதிக்கம் ஈழத்தமிழர்களின்மேல் தன் கொலைவெறித் தாக்குதலை நடத்திவருகிறது. லெபனானின் ஹிஸ்புல்லாவும் இலங்கையில் LTTE யும் பயங்கரவாத இயக்கங்களாம். ‘பயங்கரவாதம்’ என்பது இன்று ஒரு சர்வதேசக் குறியீட்டுச் சொல்லாகியிருக்கிறது. நாமும் அதை அப்படியே பயன்படுத்தலாம் - தப்பில்லை. அது ஒருவகையில் புத்திசாகத்தனம்கூட. குறிப்பாக LTTE ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே பேசலாம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது நமது தேசபக்தி ஜெகஜோதியாய்ப் பிரகாசிக்கும், நம் தலையைச் சுற்றி ஒளிவட்டம் சுழலும் என்பதை மறந்துவிடக்கூடாது. நமது தேசம் அப்படித்தான் நமக்கு வழிகாட்டுகிறது. கலைஞர் முதல் எல்லா தலைவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். ‘இந்து’ ராம் இதை ஒரு வேள்வியாகவே செய்து கொண்டிருக்கிறார். ‘பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்புள்ள வைகோவால் என் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லி தயாநிதி மாறனும்கூட அப்படித்தான் வலியுறுத்துகிறார். அவர்களெல்லாம் நல்ல தேசபக்தர்கள். நம் தேசபக்தி அதை விட ஏன் குறைந்ததாக இருக்க வேண்டும்?

கூடவே நாம் இன்னொன்றையும் கவனப்படுத்தலாம். ஹிஸ்புல்லா இயக்கம் இரண்டு இஸ்ரேலிய படைவீரர்களைக் கடத்திச் சென்றுவிட்டது. அது ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால் உடனே அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மிகுந்த பாதுகாப்போடும் மரியாதையோடும் பராமரித்தார்கள். அவர்கள் கடத்தப்பட்டதைக் காரணமாகக் கொண்டு, இஸ்ரேல் பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. இரண்டு நகரங்களை ஏறக்குறைய தரைமட்டமாக்கிவிட்டது. அது தன் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் வரை ஐ.நா. அவை போர் நிறுத்தத் தீர்மானம் போடாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது. அடுத்து தீர்மானம் வந்த பிறகும் கூட இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்தவில்லை. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் ஹிஸ்புல்லா ஒரு பயங்கரவாத அமைப்பு.

இஸ்ரேல் ஒரு பொறுப்புள்ள, சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டுள்ள இறையாண்மையுள்ள அரசு. இலங்கையிலும் அதே கதைதான். LTTE பயங்கரவாதிகள் மாவிலாறு அணையை மூடிவிட்டார்கள். பயங்கரவாதிகள் என்ன செய்திருக்க வேண்டும்? அணையை உடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பாதுகாத்தார்கள். அதன் பிறகு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கேட்புக்கிணங்க அணையைத் திறந்துவிட்டார்கள். இதையே காரணமாக வைத்து - அதாவது அணையை மூடியதற்கும், பின்னர் தங்கள் பொறியாளர்களால் அல்லாமல் அவர்களாகவே திறந்ததற்கும்தான் - ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கிறார்கள். பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் மீதெல்லாம் குண்டு மாரி பொழிந்து, தமிழர்களைத் தேடித்தேடி கொல்கிறார்கள்.

யாழ் நகரைக் கைப்பற்ற முன்னேறும் LTTE ஐத் தடுத்து நிறத்தவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். சொந்த மக்களைக் கொல்லாதிருக்க LTTE என்னும் அந்தப் பயங்கரவாத அமைப்பு பாரிய இழப்புகளைத் தாங்கிக்கொள்வதாகப் பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். LTTE பல நாடுகளால் தடை செய்யப்பட்ட இயக்கம். இலங்கை அரசோ சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதன் இறையாண்மையைக் காப்பதில் இந்தியா ஆற்றும் பங்கு அற்பசொற்பமல்ல. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அதன் வல்லாதிக்கப் போரில் இந்தியா தன் ஆலோசனைகளாக, ஆயுதங்களாக, படைப்பயிற்சியாக, படைவீரர்களாக, ராஜதந்திர நிர்பந்தமாக, கப்பல்படை ரோந்துப் பணியாக, பற்பல வழிகளிலும் கைகொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் LTTE பயங்கரவாதிகள் தனி ஈழம் அமைத்திருப்பார்கள். அதைத் தடுத்துக் காத்த பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. 100 கோடி மக்களில் ஒருவனான எனக்கும் அதில் பங்கு தரப்படும்.

வெற்றுப் பயங்கரவாதம் எப்போதும் ஓர் இயக்கமாக இருக்க முடியாது. இருக்க முடியும் எனில் அவை அரசுகளாகத்தான் இருக்க முடியும். அரசுக்கு இருக்கிற கட்டமைப்பு, ஆள்பல, பொருள்பல வாய்ப்பு வசதிகள், மனிதம் மரத்துப்போன நியதிகள், எந்திரத்தனமான அதன் அதிகாரப் பாய்ச்சல் ஆகிய அனைத்தும் அதற்குத் துணை புரியும். அப்படிப்பட்ட அரச பயங்கரங்களை எதிர்க்கிறவர்களும் எதிர் கொள்கிறவர்களும் தீவிரவாதிகளாக வேண்டுமானால் இயக்கம் கட்டலாம். தன் உயிரையும் தன் உயிருக்கு அறைகூவலாக வரும் பிற உயிரையும் துச்சமாக மதிக்கும் தீவிரவாத இயக்கம். பாமரக் கண்களுக்கு அது தன் குறிக்கோள் மீது வெறி கொண்டியங்கும் வெறும் கொலை பாதகக் கும்பலாகத்தான் சித்தரிக்கப்படும். அரசுகள் அப்படியொரு சித்திரத்தைத்தான் கட்டியெழுப்பித் தங்களைக் காத்துக் கொள்கின்றன. இந்திய அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கையில் எப்பொழுதெல்லாம் போர் வெடித்து, ராணுவம் தமிழர்களைக் கொல்கிறதோ, அப்பொழுதெல்லாம் இலங்கையிலிருந்து ஒரு அரசு பொறுப்பாளரோ, ராணுவப் பொறுப்பாளரோ, இந்தியாவுக்கு வருவார். பிரதமர் வரை பார்த்துப் பேசிவிட்டுச் செல்வார். அதன் பின் ஏதேனும் மாற்றம் நிகழுமா எனில் ஒன்றும் இருக்காது. அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் நியாயத்தைச் சொல்லி இந்திய அரசின் ஒப்புதலை பெற்றுச் செல்வதாகத்தான் அதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கே வருகிறவர்கள் தங்களுக்கு ஆதரவாய்ச் செயல்படும் - அதாவது தமிழர்களுக்குப் பாதகமாய்க் கொம்பு சீவிவிடும் துறைச் செயலர்கள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையாளர்கள், அறிவுஜீவிகள், செய்தியாளர்கள் என்று ஒரு தீவிர வட்டத்தைச் சந்தித்து அவர்கள் வழிகாட்டுதலோடு மேலிடத் தலைவர்களை நம்பவைத்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதாகப் பத்திரிகையாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. ‘இந்து’ ராம் போன்றவர்களுக்கு இதன் சூட்சுமங்கள் நன்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்திய ஆட்சியாளர்கள் சாதகமான பதிலைச் சொல்லும்போது, வெளிஉறவுத்துறை செயலர் சியாம் சரண், இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் போன்றவர்கள் இலங்கை அரசைத் தட்டிக்கொடுப்பது எவ்வாறு சாத்தியப்படும்?

இப்போது நமக்கு அல்லது வேறெவருக்கும் வேறுவழி இல்லை என்பதால், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதிலிருந்து மீளவும் இந்திய அரசைத்தான் தலையிடக் கோரவேண்டியிருக்கிறது. கூடவே இந்தியாவில் வந்திறங்கும் அகதிகளை மனிதர்களாக நடத்தவும், லஞ்சம் கொடுக்க முடியாத இளைஞர்களை LTTE என்று முத்திரை குத்தி அகதிச் சிறையில் தள்ளாதிருக்கவும், சர்வதேச விதிமுறைகளின்படி அகதிகள் நடத்தப்படவும் அகதிகளை மணந்துகொள்ளும் தமிழ்நாட்டவருக்கு உரிம அங்கீகாரம் கிடைக்கச் செய்யவும் உதவும்படி நாம் வேண்டுகோள் விடுவோம். இவற்றை கவனிக்காத பட்சத்தில் இந்தியாவும் இலங்கையைப் போலத்தான் பழிபாவத்துக்கு அஞ்சாத அரசு என்று பழி வந்துசேரும். அந்த அவமானத்திலிருந்தாவது இந்திய அரசு நம்மைக் காக்க வேண்டும்.

குறிப்பு : 21.8.2006 திங்கள் மாலை 6.30 மணிக்கு தேவநேயப் பாவாணர் அரங்கில் சிற்றிதழ்கள் (கலை, கவிதாசரண், முகம், யாதும் ஊரே, மெய்யரிவு, கல்வெட்டு பேசுகிறது) நடத்திய ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டத்தில் பேசிய பேச்சு.

நன்றி: கவிதாசரண்

பனி விழுங்கும் இரவுகள்

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 12:15 pm

thamu2

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
உறைந்தபனிக்குள் பத்திரப்படுத்த
மாயன்காலத்தவர்கள் போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன
காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்து போனவர்களின் நினைப்பொழிந்து
போர்துரத்தும் பயங்களைக் கலைக்கலாமென
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகிறான்
தோழன்.

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்குறிப்புக்கள் கலைத்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.

(Jan 30, 2007)
Photo: Thamilini

-திருத்தியெழுதியது-

Powered by WordPress