DISPASSIONATED DJ

January 30, 2006

இயல் விருது - 2005

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 1:00 pm

ஒரு விருதும், என் விசனமும்

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் (உயிர்மையில் என்று நினைக்கின்றேன்) கனடாவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட சிறந்ததுதான்.

கடிதங்கள்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 11:07 am

நினைவுகள்….பிரியங்கள்…..அக்கறைகள்

சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்…..ம்….அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன.

இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக் கடிதங்களை எழுதிய அனேகர் ஆழமான வாசிப்பும் எழுத்துத் திறமையும் கொண்டவர்கள். ஒவ்வொரு மடல்களிலும், இவர்களின் ஆளுமை என்னை வசீகரித்து வியக்கச்செய்ததுண்டு. எனினும் இவர்களில் அனேகர், பொதுத்தளத்தில் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமில்லாது ஒரு தெளிந்த ஆற்றைப்போல வாழ்வில் நகர்ந்துகொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுவதில்லை என்று வினாவுகின்றபோது, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்பவற்றைவிட வாழ்வில் இரசிப்பதற்கான விடயங்கள் அதிகமுண்டு என்று கூறி என்னை மெளனிக்கச்செய்பவர்கள். தனிப்பட்டரீதியில் அது குறித்து அவர்கள் மீது சின்னதாய் கோபமும் உண்டு.

இங்கே பதியப்படும் கடிதங்களுக்கு எவரிடமும் உரிய அனுமதி பெறாமலே -இயன்றளவு தனிப்பட்ட விபரங்களை தவிர்த்து- பதிகின்றேன். இதைக் கூட பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணம், விமர்சிப்பதற்கு ஓடிவரும் என்னைப் போன்றவர்கள், நல்லவிடயங்களை மனந்திறந்து பாராட்டுவதற்கு பின் தங்கி நிற்கின்றோம் என்ற நிலைப்பாட்டை ஒரளவாவது -என்னளவில்- உடைத்துப்பார்க்கவேண்டும் என்பது மட்டுமே.

கடிதங்கள் அழகானவை…. நாமும், நம்மிலும் பிரியம் வைக்கும் மனிதர்களைப் போல!

(1)
எந்த இடமும் எமக்காக உருவாக்கப்படவில்லை. நாம்தான் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். I love Bharathy, அவன் நல்ல கவிஞன் என்பதால். ஆனால் அவன் நல்ல கணவனா, தகப்பனா என்பது கேள்விக்குரியது. கடன் வாங்கிய அரிசியைக் குருவிகளிற்குப் போட்டு ரசித்தது முட்டாள்தனம். வாழ்க்கை யதார்த்தமானது. கவிதைகளை ரசிப்பதோ எழுதுவதோ மட்டுமில்லை அதை வாழ்ந்தும் பார்க்கவேண்டும். தமிழ் தாய்மொழி அதை மறப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைப் போல புகுந்த நாட்டு மொழியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும். பல மொழிகள் தெரிவது அறிவுக்கு ஊக்கம் தரும். பாரதிக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகளிலும் நல்ல தேர்ச்சியிருந்தது. இலக்குகளை நிர்ணயிப்பது நாம்தானே. பின்பு ஏன் அது கடினமாகப்போகிறது. கவனக்கலைப்பான்கள் பலவா? காலம் கடந்தாலும் இலக்குகளை அடைவதில் கவனமாக இரு.

உனக்கு …………. வர நல்ல தகுதியிருக்கிறது. ஆனால், ‘அதிகம் கதைக்காமல் என்னைக் கவர்ந்தவளென்று’ பொய் சொல்கிறாய் தம்பி. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தே சொல்கிறது. புத்தகங்கள் வாசி. கடிதம் எழுது. post பண்ணவேண்டுமென்று கூட அவசியமில்லை. புரிகிறதா? மனதில் இருப்பதை வெளிபடுத்த நல்லவழி கடிதம் எழுதுவதுதான்.

மிக முக்கியமான விடயம். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பம், இங்குள்ள உன் வயதொத்தவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள். முதலில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின்பு நீ எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வாழ்க்கை எப்போதும் அழகானதுதான். சில தேவையற்ற கவிஞர்கள்தான் சோகம் சுகமானது என்று சொல்லி எல்லோரையுஞ் சோம்பறியாக்கிறார்கள். கோபப்படாதே. தியானஞ் செய்யப் பழகு. எழுது எல்லாவற்றையும். Please try to write in English. மொழி கவிதைக்குத் தடையல்ல. Try it.
—————————————–
(2)
நான் சிறுவயதிலிருந்து இன்றுவரையும் எனக்கென்று கடவுளிடம் மன்றாடுவதனால்….
-கடவுளே, நான் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் நினைக்கின்றீரோ அப்படி நான் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும்.
-மற்றவர்களுக்கு help பண்ணவேண்டும். அதற்கு அறிவைத் தாரும். நல்ல வேலையைத் தாரும். அப்பதான் நான் எல்லோருக்கும் help பண்ணமுடியும்.
என்று கடவுளிடம் மன்றாடுவேன்.

நான் மட்டும் அல்ல இப்படித்தான் பலபேர் கடவுளிடம் மன்றாடுவினம் என்று எனக்குத் தெரியும். எப்போதும், நல்ல பிள்ளையாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நான் எப்போதும் முயற்சிசெய்து என்னைப்பற்றி சுய அனுதாபம் கொள்வதை தவிர்த்துக்கொள்வேன். சுய அனுதாபம் கொள்வது எனக்குப் பிடிக்காது. அத்தோடு பிறர்முன் அழுவது அதுவும் பெண்கள் அழுவது எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனெனில் புரியாதவர்கள் கண்ணீர் பெண்களின் பலம், பலவீனம் என்பார்கள்.

எனக்கே என்ன சிரிப்பு என்றால் எனக்கு என்னில் சரியான விருப்பம். நேற்று வேலையில் ஒருவர் சொன்னார். கனடா வந்து 4 வருசம் ஒரு boy friend இல்லையென்றால் பொய் சொல்கின்றேனாம். அத்துடன் நான் style ஆக வேறு வெளிக்கிட்டு வாறேனாம். அப்போது நான் எல்லோருக்கும் முன்னால் சொன்ன்னேன். ‘ஒருத்தி தன்னைத்தானே அழகுபடுத்தி வருகின்றாள் என்றால் அவள் தன்னைத்தானே விரும்புவதுக்காகவும் இருக்கலாம். not only for boyfriend. because தன்னை நேசிக்க முடிபவர்களால்தான் உலகை நேசிக்கமுடியும்’ என்று. அவா இது, ‘விதாண்டாவாதம்’ என்றா. நான் சொன்னேன், ‘அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்’ என்று. அருகில் இருந்தவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். because நான் இவ்வளவும் கதைத்தது எங்கள் supervisorடம்.
——————————————————-
(3)
இன்று சர்வதேச ஆசிரியர் தினம்! இன்றுதான் முதன்முதலில் பள்ளியில் ஆசிரியர் தினம் மதியபோசனத்துடன் கொண்டாடப்பட்டது. நான் இசையமைக்க, அடிகள் கவிதைகள் புனைய பக்க வாத்தியமாக செந்தூரன் மிருதங்கம் இசைக்க பாடல் பாடினோம். இறுதியாக ‘இந்துவின் ஆசிரியர்கள்’ என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை (தாள லயத்தை) நாம் மூவரும் வழங்கினோம். நான், சகிலா ஆசிரியை, அதிபர் மன்மதன், ஹரிகரன் வாத்தி, சண் சேர் போன்றவர்கள் போல நடிக்க, அடிகள், சுசி ஆசிரியை, பிரியா ரீச்சர், வரதராஜன் மிஸ், சச்சிதானந்தன் ஆசிரியை போல நடிக்க செந்தூரன் பின்னணி இசையும் குரலும் கொடுக்க, விசில் சகிதம் பலத்த கைதட்டல் தோஸ்துகளிடமிருந்து கிடைத்தது.

அந்த தாளலயத்திலிருந்து ஒரு சில பாடல்கள் வருமாறு….
‘நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, மின்சாரக் காசை உன் கொப்பரோ கட்டிறது
நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, தம்பிமார் watcher Fees கட்டியாச்சோ….’
-பிரின்ஸி

‘சீதமதி குடைக்குள் செம்மை அறங்கிடப்ப Britainனில்
என் புருஷன்Broadcasting பண்ணப்போகிறார்
பிள்ளைகள் கதைக்க வேண்டாம்-குரல்
எனக்குச் சரியில்லை….’
-ரவி ஆசிரியை

‘குச்சிவாத்தி நானெல்லோ குச்சொழுங்கை தாண்டிவாறன்….
சொகுசாக நான் வரேல்லை…சொய்சாவில் இருந்து வாறன்’
-ஹரிகரன் வாத்தி

இப்படி எல்லா ஆசான்களினதும் வசனங்களை எழுதப்போனால், கடிதம் ‘ஆசான் ஸ்பெஷல்’ ஆகிவிடும்.
———————————————————————–
(4)
உமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தகுதி பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏகலைவன் போலாகிவிட்டீர். ……….. உம்மை நினைக்கும் போதெல்லாம் Exam hallல் நிற்கும்போது புளியின் கீழ் நின்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நான் உம்மை அழைத்துக் கதைக்க எண்ணிவிட்டு நாளை கதைக்கலாம் என்றிருந்தேன். அந்த நாள் எனக்கு வரவேயில்லை. எனவே, ‘நாளை என்று ஒத்திப்போடுவது நடைபெறாமலும் போகலாம்.’ எதையும் ஒத்திவைக்காது அன்றன்று செய்து நற்பிரசையாக பார் போற்ற வாழக் கற்றுக்கொள்ளவும்.
——————————————————
(5)
‘உனக்கான வாழ்வின் பகுதி
எவராலும் அபகரிக்கப்படாதிருக்கின்றதென்பதை
அறிக.’
இவை உங்கள் கவி வரிகள்தான். உங்களுடான சந்திப்பு நிகழ்ந்துபோன இந்த இரண்டு வருடங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத, சந்தோசங்கள், துக்கங்கள், சந்தேகங்கள், அவமானங்கள், வலிகள் என எதுவுமேயில்லை என்னிடம். ஆனாலும் நண்பனே சில சமயங்களில் காதுகளை மட்டுமே என் செய்திகளுக்கு வழங்கிவிட்டு எதுவுமே செய்யாமல் எனை தனித்திருக்கச் செய்து, உன் பிரச்சினையை, உன் வலியை, உன் சந்தோசத்தை நீயே முழுதாய் அனுபவி என நீ விலகும் வேளையில் இமைகளைத் தட்டும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, ‘எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன், உனக்கும் பசித்தால் நீயும் சாப்பிடு. உனக்கேதேனும் சோகமா, சந்தோசமா என்னவொன்றாலும் என்னிடம் சொல்லு எனது செவிகள் உனது வார்த்தைகள் செவிமடுக்க எப்போதும் தயார். ஆனால் அதற்கான solutionsஓ, அன்றேல் எனக்கான இனிய நிமிடங்களையோ அதற்காய் ஒதுக்கலோ சாத்தியமில்லை. உன் சந்தோசத்தை, துக்கத்தை முழுதாய் நீயே பங்கிட்டுக் கொள். எனக்கு எதுவும் வேண்டாம். உனக்காய் நான் பிரார்த்திக்கின்றேன்’ அப்படித்தான் இருக்கமுடியும்.

அது உங்கள் இயல்பு. உங்களை எனக்கு ஏற்றமாதிரி மாறச் சொல்லல் மிக மிகத்தப்பு. என் சுயம் இழக்கச் சொல்கையில் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அப்படித்தானே இருக்கும் உங்களுக்கும். உங்கள் நட்பு எனக்கு தந்த பலத்தை வேறு எதுவும் என் வாழ்க்கையில் தரவேயில்லை. எனக்கென்னவோ நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை எனத்தான் தோன்றுகின்றது. ……… பிரச்சினையோ, அன்றேல் ……… உடனான பிரச்சினையோ உங்களிடம் சொன்ன போதெல்லாம் solution எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தீர்கள் நீங்கள். இது உண்மையான நட்பல்ல.
———————————
(6)
மேலும், தங்கள் கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளான “எல்லாம் மனதிற்கு பிடித்தமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகிறேன்” என்ற தயோகுணத்தில் இருந்தே நாம் சரிவரப் பேசிக்கொள்ள நிறைய விடயமிருக்கிறது.

எனது நம்பிக்கைகளை, கொள்கையை வழிமொழியாத அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒருவரது கொள்கையை நாம் எப்படி முட்டாள்தனமென்று கூறமுடியாதோ, அதேபோலத்தான் நாம் இன்று பெரிதுவக்கும் பல விடயங்களும் காலப்போக்கில் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து எம்மைப்பார்த்து முட்டாள் என்று சிரிக்க வைக்கும். தமிழிலக்கிய, பண்பாட்டுப்பரப்பில் ஞானியின் சிந்தனைகள் போற்றப்பட வேண்டிய தொன்றாக இருப்பினும் அவரது தமிழியம், தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவங்கள் நெருடலாகவே எனக்குத் தோன்றுகின்றது. மாபெரும் மனிதநேயன் தேசியம் என்ற கற்பிதம் உதிர்ந்து போக வேண்டிய தொன்றாகவே கருதுவான். ஆதியில் இருந்து இற்றைவரை தேசியத்திற்கான தேவைகளும். வரையறைகளும் பாரபட்சமானதாகவும், சுயநலம் சார்ந்ததாகவும் இருப்பது கண்கூடு. சேர, சோழ, பாண்டியர் தம் எல்லைப்பரப்பிற்குள் எதற்காக இறுக்கமான இனத் தனித்துவத்தைப் பேணிக் கொண்டனர் என்று சிந்தித்துப் பாருங்கள். வரி, மானியம், கிரீடம் போன்றவைதான் அவர்கட்கு முக்கியமாகப்பட்டிருக்கும். மாறாக இனம்மாறி அவர்கள் பெண் கொண்ட சூழ்நிலைகளும் சுயநலம் சார்ந்த வழுவாகவே புலப்படும்.

நசுக்கப்படும் இனங்களின் விடிவுக்கு தேசியப்போராட்டம் ஒரு தற்காலிகத் தேவையே தவிர, மானிடர் என்பவர் எல்லைகளைக் கடந்த மனிதநேய ஒன்றல்களுக்குள் அணைத்துக் கொள்வதைத்தான் திரு. ஞானி பெரிதும் நம்பும் மார்க்சியமும் சொல்கிறது. சங்ககாலத்திலேயே கணியன்பூங்குன்றன் என்ற கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லைகள், இனக்குழுக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகமக்கள் யாவரும் நமது சுற்றத்தாரே என்று பாடுகிறான்.
——————————–
(7)
சில நண்பர்கள் அவர்களுக்கான என் வீடு விசாலமானது. எப்போதும் வரலாம் எப்போதும் பேசலாம் எந்த வரையறைகளும் இல்லை. நிரம்ப பிரச்சனைகளில் இருந்த நண்பியுடன் விடிய விடிய கதைத்து பாடசாலை போகாத அநுபவங்களும் உண்டு. ஆதலால்,என் தம்பிகள் பற்றிய கவலைகளை விட இப்போது உங்களைப்பற்றி நிறைய யோசனையாய் இருக்கிறது. நீங்கள் காயமின்றி வெளிவரவேண்டும் அதற்கான எந்த உதவியையும் என்னிடம் கேட்கலாம். நானும் நீங்கள் சந்தோசமாக இருப்பதற்கு உதவியாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருந்தால் உதவியிருக்க மாட்டீர்களா என்ன?

எழுதுவதை மட்டும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதை வரவில்லை என்றால் கதைக்குப்போங்கள் அதுவும் வரவில்லை என்றால் கனடா வாழ் அநுபவங்களை எழுதுங்கள். எழுத்து எவ்வளவோ விடயங்களை ஆற்றும் என்று நான் நினைக்கிறேன். …… நீங்கள் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆதிக்கமான ஒரு ஆணாய் இருப்பதை விட மற்றவர்களை புரிந்து வாழ்வது தான் நல்ல மனிதனாய் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
———————————————
(8)
உனது கவிதைகள் பற்றி - ஆகா ஓகோவென்று புளுகி உன்னைப் பப்பாவில் ஏற்றுவதும் சரியல்ல. அதே நேரம், கவிதையைத் தாக்கி உன்னைப் பாதாளத்தில் தள்ளிவிடுவதும் சரியல்ல. நான் சொல்வேன்: உனது பருவத்துக்கு இது சிறப்பான கவிதை. ஆனால் இதுவே முழுமையான கவிதையல்ல. இன்னும் அனுபவத்தைச் சேர்த்து, சொற்களைத் தேர்ந்தெடுத்து, கவிதையை நீ செதுக்கப்பார். உனது அனுபவத்தினூடாக எழுதப்பார். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுத முயல். சேரன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், முதலானோரின் கவிதைகளை, பாரதியார், மகாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பது முக்கியமானது. ‘சரிநிகர்’ பத்திரிக்கையை தொடர்ந்து வாசிப்பது நல்லது. தொடர்ந்து வாசிக்கிறாயா?
————————————————-
(9)
தாய்மையென்பது பெண்மையின் அடையாளம்தான். என்னால் இன்னொரு உயிரை.., இன்னொரு ஜீவனை உருவாக்க முடிகிறதென்பது எத்தனை உன்னதமானதொரு விடயம். எனது உதிரத்தைக் கொண்டு அதற்கு உணவூட்ட முடிகிறதென்பது எத்தனை அற்புதம். உயிர்.. உயிர்.. இன்னுமொரு உயிர் என்னுடலில் தங்கி, ஊட்டம் பெறப்போகிறது. அதற்கு இந்த உலகத்தை நான்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒவ்வொரு உயிரும் எவ்வளவு பெறுமதியானவை. நாளைய உலகமொன்று என்னிலிருந்து உருவாகப் போகின்றது. ஒருகணம் கடவுளாய், இறைவியாய் மாறியதாயொரு உணர்வு. இதை இழக்க நான் தயாரில்லை.

‘விடுதலையை எழுதுதல்’ என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன். மாலதியின் நூலில் இவற்றைப் பார்த்ததும்தான் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்களென விளங்கியது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எனது கர்ப்பப்பை, எனது சொத்து. வேறு எவனும் அதில் உரிமையெடுக்கவோ, தலையிடவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
————————————————-

ஒன்பது வித்தியாசமானவர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த கடிதங்களில் சிறுபகுதிகள்தான் இவை. மேலே எழுதிய கடிதக்காரர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் இன்று எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவர்களது நினைவுகள், எழுத்துக்களாய், சம்பாசணைகளாய் என்றும் எனக்குள் மிதந்துகொண்டேயிருக்கும்.

கடிதங்கள்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 10:07 am

January 27, 2006

ஏலம் போகும் அரசியல்

Filed under: புலம் — டிசே தமிழன் @ 6:12 am

பாலஸ்தீனியத்தில் தேர்தல் நடந்து காமாஸ்(Hamas) பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ளது. யாசீர் அரபாத் கட்டி வளர்த்த Fatah கட்சி 43 ஆசனங்களைப் பெற, காமாஸ் 132 ஆசனங்களில் 76ஐப் பெற்று பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. வழமைபோல ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ரொனி ப்ளேயர், கனடாவின் வருங்கால பிரதமர் Stephen Harper வரை அனைவரும் மூக்கால் அழுதபடி இருக்கின்றார்கள். சனநாயகத் தேர்தல் நடந்தாலும் உள்ளே புகுந்து தமது பொம்மை அரசை நிறுவி குள்ளநரிச் சிரிப்பைச் சிந்துபவர்களுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கடினமாய்த்தான் இருக்கும். இந்த அரசியல் கனவான்கள் தங்கள் பேச்சினிடையில் அதிகம் பாவித்த சொல் ‘பயங்கரவாதிகள்’ என்பதுதான். சரி, சரி காமாஸும் அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களும் பயங்கரவாதிகள் என்று வைத்துக்கொண்டாலும், அப்படியாயின் இஸ்ரேலிய அரசாங்கத்தை என்னவென்று அழைப்பதாம்? நேற்று பிபிசியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, காமாஸ் அங்கே குண்டு வைத்தார்கள், இங்கே குண்டு வைத்தார்கள் என்று பிபிசி நிருபரும் மிகக் கஷ்டப்பட்டு தனது நடுநிலையை நிறுவிக்கொண்டிருந்தார் (பொதுமக்களை பலிக்கடாவாக்கும் தாக்குதல்களுடன் எவருக்குத்தான் உடன்பாடிருக்கும்?). ஆனால் ஒவ்வொரு இஸ்ரேலிய தேர்தல்களின்போது இஸ்ரேலிய அரசாங்கம் அங்கே குண்டுபோட்டார்கள், இந்த அகதிமுகாமை முற்றாக நிர்மூலமாக்கினார்கள் என்று ஏன் செய்திகளில் காட்டுவதில்லை என்பது நமக்கு ஞாபகத்துக்கு வருவதில்லை. வரவும் கூடாது.

கனடாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், கொன்சர்வேர்டிக் கட்சியின் உபதலைவர் Peter Mckay தாங்கள் அரசமைத்தால், விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்யப்போவதாக கூறியிருக்கின்றார் என்று ஆனந்தக் கூத்தாடும் கட்டுரை ஒன்றை வலைப்பதிவில் வாசித்திருந்தேன். சரி புலிகளைத் தடை செய்கின்றார்களோ அல்லது புலிகள் கனடாவுக்கு வந்து ஸொப்பிங் செய்கின்றார்களோ அந்த விடயத்தை இப்போதைக்கு விடுவோம் (எங்களுக்கு மட்டுமா ஷொப்பிங் செய்வதற்கும் கேர்ல்ஸை சைட் அடிப்பதற்கும் ஏகபோக உரிமை இருக்கா என்ன?) அந்தக் கட்டுரையைப் பூதக்கண்ணாடிப் போட்டு பார்த்தாலும் இலங்கை இராணுவம் செய்த ‘நல்ல விடயங்கள்’ ஒன்றையும் பெரிதாகக் காணவில்லை.

ஆனால் நமது மூத்த தோழர் ஷோபாசக்தி என்ன சொல்லியிருக்கின்றார்? ‘நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன் என்றால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்’ என்றல்லவா அவர் உறுதிமொழி எடுத்திருந்தார் (ஆனால் அவருக்கும் இந்தியா ரூடே போன்றவற்றிற்கு கருத்து/நேர்காணல் கூறும்போது, புலிகளை 100% எதிர்க்கின்றேன், இலங்கை அரசாங்கத்தை 0% அமுக்கி வாசிக்கின்றேன் என்றுதான் போர்மிலாவை மாற்றிப்போட்டு அசத்துகின்றார் என்பது வேறுவிடயம்). அப்படி எனில் இலங்கை அரசாங்கத்தை 100% வீதம் தடை செய்தால்தானே, புலிகளை ஆகக்குறைந்து 50% வீதமாவது கனடாவில் தடை செய்ய முடியும் என்றுதானே இந்த அரசியல் சூத்திரம் நிறுவுகின்றது.

என்னவோ போங்கள்? நமது கவிஞர்கள், கதைஞர்கள், நடுநிலைமைவாதிகள் ‘மற்ற விடயங்களில்’தான் வீக் என்று இதுவரை கேள்விப்பட்டனான். இப்போது கணக்கிலும் வீக் என்பதும் புரிகிறது. சிலவேளை கணக்கில் புலி என்றால் பிறகு ‘புலி முத்திரை’ குத்திவிடுவார்களோ என்று பயந்துதான் இப்படி நடிக்கின்றார்களோ தெரியாது.

January 23, 2006

கனடா தேர்தல் (2006) முடிவுகள்

Filed under: புலம் — டிசே தமிழன் @ 8:37 pm

நினைத்ததுமாதிரி, கருத்துக்கணிப்புக்களை புரட்டிப்போடாது, கொன்சர்வேடியினர் வென்றிருக்கின்றனர். எனினும், பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாது, சிறுபான்மை அரசாக கொன்சர்வேடியினர் ஆட்சியமைப்பது ஆறுதலாக இருக்கிறது. இல்லாவிட்டால் தாங்கள் நினைத்ததுமாதிரி, எல்லா வலதுசாரி கொள்கைகளை அனைவருக்குள்ளும் திணித்திருப்பார்கள் (samesex marriage, abortion போன்றவற்றிற்கு எப்படியெனினும் பாராளுமன்றத்துக்கு billsகொண்டுவரத்தான் முயல்வார்கள்)

கொன்சர்வேர்டி - 124
லிபரல் - 104
ப்ளாக் க்யூபெக்- 50
என்.டி.பி- 29
சுயேட்சை- 01

(ஒரு தொகுதி முடிவு, சில தொழில்நுட்பக் காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை)

நான் இருக்கும் தொகுதியில் லிபரல் கட்சியில் போட்டியிட்டவர் வென்றுள்ளார். கொன்சர்வேட்டிக்கட்சியில் தேர்தல் கேட்ட, தமிழர் இரண்டாவதாய் வந்துள்ளார்.

January 19, 2006

Election in Canada - 2006

Filed under: புலம் — டிசே தமிழன் @ 5:40 am

கனடாத் தேர்தலும் சில (தனிப்பட்ட) எண்ணங்களும்

அனேகமாய் கொன்சவேர்ட்டிக் கட்சி இந்தமுறை வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. ஈழம், இந்தியா போன்றல்லாது, இங்கு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களை முற்றாக புரட்டிப் போடுகின்றவிதமாய் வேறுவிதமான் முடிவுகள் தேர்தல் காலத்தில் கனடாவில் (எனக்குத் தெரிந்தளவில்) வரவில்லையாதலால், ரொயினரை(Tories) இருகரம் கூப்பி வரவேற்கவேண்டியதுதான். எனினும் கொன்சர்வேடியின் சில கொள்கைகள்தான் பயமுறுத்துகின்றன. அந்தக்கட்சியில் இயல்பாய் வெளிப்படுகின்ற இனத்துவேசத்தைவிட, ஈராக்கிற்கு கனடீயப்படைகளை அனுப்பவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை, ஒர்பால் திருமண முறையை எதிர்த்தமை, இப்போது Space Missile Projectற்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகின்றோம் என்றது (ஆட்சியில் இருக்கும் லிபரல் பல்வேறு தடைகளுக்குமிடையில் இந்த ப்ரொஜக்டை ஏற்காது இருப்பதும், இதன் நிமிர்த்தத்தில் ஏற்பட்ட சச்சரவில் அமெரிக்கா வெளிவிவகாரச் செயலாளர் Condoleezza Rice கனடாவிற்கான பயணம் இடைநிறுத்தப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை), ஆயிரக்கணக்கில் படைகளைச் சேர்ந்து இராணுவ இயந்திரத்திரத்தை வலுவாக்குவதாய் பிரகடனப்படுத்துவது….. இப்படி கொன்சர்வேடியினர் பலவிதங்களில் பயமுறுத்துகின்றார்கள்.

ஆக இவர்கள் இன்னொரு அமெரிக்காவாய் கனடாவை ஆக்கப்போகின்றார்களோ என்ற அச்சமும், Stepen Harper, ஜோர்ஜ் புஷ் போல இன்னொரு சனாதனவாதியாக இலகுவில் ஆகிவிடவும்கூடிய அடையாளங்கள் துலங்குகின்றன. கொன்சர்வேடிக் கட்சியினரைத் தொடர்ந்து அவதானிக்கும் ஒருவருக்கு, இந்தக்கட்சி கனடாவுக்குரிய தனித்துவங்களை இழக்கச்செய்து, கனடாவை அமெரிக்காவின் அனைத்துக்கொள்கைகளுடனும் கேள்விகள் இல்லாது இணைத்துக்கொள்ள விரும்புகின்ற கட்சி என்பதை இலகுவாய் புரிந்துகொள்ளுவார்கள்.

7% GST வரியை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லாமற்செய்வோம் என்று உற்சாக உறுதிமொழியை கொன்சவேடியினர் அளித்தாலும், பட்ஜெட்டில் இதை நிவர்த்தி செய்ய, Helath Care, Education போன்றவற்றில்தான் கையை வைக்கப்போகின்றார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தொடர்ந்து பன்னிரண்டு வருடமாய் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியினரில் மக்கள் நம்பிக்கை இழக்க, sponsorship scandal, மற்றும் பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படமுன்னர் வெளியே இரகசியமாய்க் கசிந்தமை போன்றவை முக்கிய காரணங்களாகும். தொலைக்காட்சி விவாதங்களில் தமது கட்சியின் கொள்கைகளையும் தம்மையும் நிரூபிக்கவேண்டிய லிபரல் கட்சியினர் அதைத் தவறவிட்டமை லிபரலின் வாக்குகள் கணிசமாய் சரிந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம். விவாதங்களின்போது கொன்சர்வேட்டிக் கட்சித் தலைவர் Stepen Harper, லிபரல் கட்சித் தலைவர் போல் மார்ட்டினைப் போல கோபமும் சலிப்பும் காட்டாது, சிரித்த முகத்துடன் எல்லாக் கேள்விகளை எதிர்கொண்டவிதமும், NDP கட்சியினரின் லிபரல் மீதான கடுமையான விமர்சனமும் லிபரலுக்கு பிரதிகூலங்களாக அமைந்துவிட்டன.

கன்டாவிலுள்ள தமிழ்மக்கள் பெரும்பான்மையாக லிபரல் கட்சியினருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். என்டிபி கட்சியினருக்கு வாக்களிக்க விரும்பியிருந்தாலும், கொன்சர்வேடிக் கட்சி வென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் லிபரல் கட்சியினருக்கு வாக்களித்து இருக்கலாம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, பொதுவாய் இங்குள்ள பல சிறுபான்மை சமூகங்கள் இப்படியான நிலையில்தான் லிபரலுக்கு வாக்களிக்கின்றனர் எனத்தான் ஆய்வுகளும் கூறுகின்றன். இறுதியாய் நடந்த மூன்று தேர்தலிகளிலும், ரொரண்டோ பெரும்பாகத்தை உள்ளக்கிய ஒன்ராறியோ மாகாணத்தில் கொன்சவேடியினர் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்தமுறை சிறுபான்மையின சமூகங்களும் லிபரல் கட்சியினரைக் கைவிட்டதுதான் மிகவும் பரிதாபம். என்டிபினர், அடித்தள, நடுத்தர, சிறுபான்மையின மக்கள் மீது கொண்ட அக்கறையுடன், ஈழத்தில் சமாதானம் நிலவவேண்டும் என்பதற்காய் ஏனைய கட்சிகளை போலல்லாது தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவ்ர்கள். பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளில் என்டிபி கட்சித் தலைவர் பங்குபற்றி உரையாற்றியவர் என்பதைவிட, தொடர்ந்து ஈழமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் போன்றவற்றில் ஏனைய கட்சிகள் பங்குபெறத் தயக்கம் காட்டும்போது, கலந்து கொண்டவர்கள் என்டிபியினர் என்பது கவனதில் கொள்ளப்படக்கூடியது. Child Care, Helath Care, Education, Senior Care போன்றவற்றிற்கு, முன்வைக்கும் என்டிபியின் தேர்தல் வாக்குறுதிகள் அடித்தள, நடுத்தர மக்கள் வாழ்வின் சுட்டெண்பண்பை அதிகரிக்கச் செய்வன.

இந்தத் தேர்தலில் முதன்முதலாய் தமிழர்களின் பங்களிப்பும் இருக்கின்றது என்பது மகிழ்ச்சிதரக்கூடியது. நான் வசிக்கின்ற தொகுதியில் போட்டியிடுபவர்களில் ஒருவரில் தமிழரும் இருக்கின்றார் (தமிழில் உரையாற்றத்தயங்குபவர், ஆங்கிலத்தில் தமிழ்ப் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்குபவர், வாக்குக் கேட்கும்போது ‘நான் தமிழ்ன் எனக்கு வாக்குப் போடுங்கள்’ என்பது ஒருபுறம் உதைப்பது வேறுவிடயம்). ஏற்கனவே கூறியதுமாதிரி, கொன்சர்வேடிக்கட்சியின் கொள்கைகள் பலதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழர் என்ற அடையாளம் பல சமயங்களில் தேவை என்றாலும், தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்கின்றார் என்ற காரணத்துக்காய் கண்ணை மூடிக்கொண்டு அவருக்கு வாக்களிக்கமுடியாது. மேலும் தமிழ்ச் சமுகத்தில் அவரின் பங்களிப்பு என்னவென்ற வினாவும் இருக்கின்றது (ட்சுனாமியில் தன் பங்கு இருப்பதாய் அந்த வேட்பாளர் கூறினாலும், ட்சுனாமி போன்ற பெரும் அழிவில் அனைவரின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பெரிதாக எடுக்கமுடியவில்லை.)

It’s time to change என்று கனடீயர்களுக்கு விளங்கினாலும், அந்த மாற்றம் கனடாவின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நம்பிக்கை தரும், என்டிபியினரை நோக்கி ஆதரவு அலையாக அடிக்காது கொன்சர்வேடியினரை நோக்கி வீசுவதுதான் ஆபத்தானதும், அவலமானதும் ஆகும்.

(கனடாப் பாராளுமன்றத் தேர்தல் வரும் திங்கட்கிழமை (சனவரி 23) நடைபெறவுள்ளது. இந்த வார வைகறையில் வெளிவந்தது, சில திருத்தங்களுடன் இங்கே)

January 9, 2006

புளியமரங்களின் கதை

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 9:37 pm

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

(1)
ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமியின் முதலாவது நாவல். புளியமரமே முக்கிய பாத்திரமாய் நாவலின் மையவோட்டம் எங்கும் தன் வேர்களையும் கிளைகளையும் பரப்பியபடி நாவல் முழுதும் நகர்கின்றது. எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், குதூகலங்களையும், வக்கிரகங்களையும்- காலத்தால் ஒரு ஊரில் ஏற்படும் மாற்றத்தை- பேசாய்ச் சாட்சியாய் பார்த்தபடி இருக்கிறது, புளியமரம். நாவலின் முடிவில் புளியமரம் அழிக்கப்பட்டாலும், தொடர்ந்தும் அந்தச் சந்தி புளியமர ஜங்ஷன் என்றே அழைக்கப்படுவதாய் குறிப்பிடப்படுவது, மனிதனைப்போலல்லாது புளியமரத்துக்கு என்றும் அழிவில்லை என்பதாய்த்தான் வாசிப்பவருக்குத் தோன்றும். அனேக நவீன கதைகளுக்குள் உட்பொதிந்து இருக்கும் - மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்வது- என்ற வினாவைத்தான் கதைமுழுதும் பாத்திரங்களினூடாக சு.ரா கேட்டபடி இருக்கின்றார். ஒரு கதைசொல்லியாக தன்னையும் சு.ரா நாவலில் இணைத்துக்கொண்டாலும், பிற பாத்திரங்களில் தன் ஆளுமையைக்காட்டாது அவர்களை தம் இயல்பிலேயே விடுகின்றார். அனேக பாத்திரங்களை பலங்களுடன் காட்டுவதற்கு முயற்சிப்பதற்குப் பதில் பலவீனங்களுடன் காட்டத்தான் சு.ரா அதிகநேரம் செலவழிக்கின்றார். அதற்கு அவரது எள்ளல் நடை மிகவும் துணைபுரிகின்றது.

PA140010

(2)
சு.ராவின் புளியமரத்தின்கதையைப் போல, ஈழத்தில் எங்கள் ஊரிலும் ஒரு பழமைவாய்ந்த புளியமரம் இருந்தது. நாவலில் உள்ளதுபோல பல சம்பவங்கள் நான் அறிந்தும் அறியாமலும் அதைச்சுற்றியும் நிகழ்ந்திருக்கின்றது. நாவலிலுள்ள சிறுவர்களைப் போல, நாங்களும் கிளித்தட்டு, கிளிப்பொந்து போன்ற விளையாட்டுக்களை புளியமரத்தடியில் விளையாடியிருக்கின்றோம். பேய்கள், பிசாசுகள் எல்லாம் இரவில் நடமாடச்செய்யும் என்று இரவு நேரங்களில் புளியமரத்தடியை பயந்தபடி பலதடவைகள் ஓடிக்கடந்துமிருக்கின்றேன். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் எத்தனையோ ஆண்டுகள் நிரம்பிய புளியமரத்தை வெட்டத்தொடங்கியபோது- ஊரிலிருந்தவர்களின் எதிர்ப்பில்- சில கிளைகள் தறிப்பதுடன் அழிவுவேலை நிறுத்தப்பட்டது. நாவலில் தாமோதர ஆசான் அப்படி ஒரு தடவை புளியமரம் தறிப்பதைக் காப்பாற்றுவதாய் ஒரு சம்பவம் சித்தரிக்கப்படும். எங்களூர்ப் புளியமரத்தடியிலும் (அருகில் வைரவர் கோயில் இருந்தது) கூட்டணியினரின், கொம்யூனிஸ்ட் கட்சியினரின் அரசியற்கூட்டங்களும், கலைப்பெருமனறத்தின் விழாக்களும் களைகட்டியிருக்கின்றன என்றும் சில வருடங்களுக்கு முன் கேள்விப்படவும் செய்திருந்தேன். பிறகொருபொழுதில், அருகிலிருந்த பாடசாலைக் கட்டடங்கள் எலலாம் இராணுவத்தின் குண்டுவீச்சால் சிதைந்துபோனபோதும் புளியமரம் நெஞ்சு நிமிர்த்தி நின்றதைப் பார்த்துச் சிலிர்த்துமிருக்கின்றேன். ஒரு புளியமரத்தின் கதையைப்போல ஒரு விரிவான தளத்தில் கதையை எங்களூர்ப் புளியமரம் தன்னகத்தில் வைத்திருக்காவிட்டாலும், அருகிலிருந்த பாடசாலையின் இரண்டாம் மாடியில் நடக்கும் உயர்தர மாணவர்களின் காதற்கதைகளையாவது தன் கிளைகளால் பார்த்து இரசித்து என்னைப் போன்றவர்களுக்கு பிற்கொருபொழுதில் கூறியிருக்க புளியமரம் விரும்பியிருக்கவும் கூடும். ஆனால் போர் அந்தச் சந்தர்ப்பதை என்னைப் போன்றவர்களுக்கு வழங்கிவிட விரும்பவில்லைப் போலும்.

நாவலின் முடிவில் வரும் பட்டுப்போன புளியமரத்தைப்போல, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004ல்), -ஊருக்குத் தொலைவில், மாடியொன்றில் நின்று பார்த்தபோது- எங்களூர்ப் புளியமரமும் பட்டுப் பாழாகியிருந்தது தெரிந்தது. என் ஊர்ச்சனம் இல்லா ஊரில் நானும் உயிர்த்திருக்க மாட்டேன் என்ற வைராக்கியமோ அல்லது குண்டு ஏதேனும் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொண்டதோ தெரியவில்லை. ஒரு பெரும் விருட்சமாய் நினைவில் தங்கியிருந்த புளியமரம், அகண்ட அடிப்பாகம் மட்டும் உயிர்ப்பிழந்து எஞ்சியிருததை நிஜத்தில் கண்டபோது மனது அந்தப்பொழுதில் கனக்கவும் செய்திருந்தது.

(3)
இந்நாவல் மிக மெதுவாகவே நகர்கின்றது (எழுதப்பட்ட ஆண்டு 1966 என்று கணக்கிலெடுத்து வாசித்தால் வேறுவிதமாய்த் தோன்றவும் கூடும்). ஜே ஜே சில குறிப்புக்கள் வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வின் எந்தத்துளியையும் இந்த நாவல் தராதது என்னளவில் மிகவும் ஏமாற்றமாயிருந்தது. அப்படியான ஒரு நிலைக்கு வருவதற்கு, ஜேஜே சிலகுறிப்புக்கள் வாசித்தபோது, சு.ரா குறித்து எந்த விம்பமும் இல்லாததும், எனது வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததும் ஒரு காரணமாகவும் கூடும். ஒரு புளியமரத்தின் கதை ஒருமுறை வாசிக்கக்கூடிய நாவல் என்று மட்டுமே கூறமுடியும். இந்நாவலை நோபல் பரிசு பெறத்தகுதியான தமிழ் நாவல் என்று யாரோ ஒரு விமர்சகர் கூறியதாய் பின்னட்டையில் எழுதியிருப்பது சற்று அதிகப்படியானதாகும். சு.ராவின் சிறந்த நாவல் என்று நான் நினைப்பது ஜேஜே சில குறிப்புக்களே தவிர இந்த நாவல் அல்ல.

‘திருத்தமாக வேலை செய்யும் சில தோட்டிகளும் இருக்கத்தான் இருக்கிறார்கள்’ (ப 76), ‘தேவதாசி பரம்பரையில் பூப்பெய்திய குட்டிக்குத் தொழில் நுணுக்கங்கள் படிவது மாதிரி …’(ப 66) , ‘ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம்….இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கைளும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு’(..) போன்ற வாக்கிய அமைப்புக்களில் (உற்றுவாசித்தால் நிறையக் கிடைக்கலாம்) சு.ரா இன்னும் சற்றுக் கவனமாய் இருந்திருக்கலாம் போலத்தோன்றுகின்றது; ஆகக்குறைந்தது நான் வாசித்த ஜந்தாவது பதிப்பிலாவது.

புளியமரங்களின் கதை

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 8:37 pm

January 5, 2006

நான் போனபோது….(எமினெம்)

Filed under: இசை — டிசே தமிழன் @ 5:43 am

நான் கேட்கின்ற ராப் பாடல்களில் பாடல்வரிகளால் என்னை அதிகம் கவர்ந்துகொண்டிருப்பவர்கள், Eminemமும், Kanye Westம். ஒவ்வொரு பாடல்களிலும் கதைசொல்லும் முறைமை அவர்களின் அதிக பாடல்களில் இருக்கும், அதுபோல் எள்ளலும்கூடத்தான். எமினெமின் பாடல்கள் குறித்தும் இன்னபிற அவரது விடயங்கள் குறித்தும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப் பாடலை(கீழே பார்க்க) மொழிபெயர்க்கும் ஆசை துளிர்த்தது. அண்மையில் வெளிவந்த எமினெமின், Curtain Calls - The Hits என்ற இசைத்தட்டை வெளிவந்த அடுத்தநாளே வாங்குவதற்கு, இந்தப்பாடல் மட்டுமே முக்கிய காரணமாயிருந்தது. மொழிபெயர்த்து, ஆறப்போட்டு, திருத்தங்கள் செய்தும், இன்னும் இதில் திருப்தி வரவில்லை. இனியும் இதில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவுக்கு வந்தபின்னே இங்கே பதிவிலிடுக்கின்றேன் :-(. நண்பர்கள் அனைவரின் திருத்தங்களும், குட்டுக்களும் வர்வேற்கப்படுகின்றன.

நான் போனபோது….

ஓம்….
இது எனது வாழ்க்கை
நான் நினைக்கின்றேன், எனது சொந்த வார்த்தைகள்

எப்போதாவது நீங்கள் ஆழமாய் நேசித்தவருக்கு உங்கள் கரங்களை நீட்டியிருக்கின்றீர்களா?
பாவனைகளாய் அல்ல, இல்லை.
உண்மையாகவே கரத்தைக்கொடுத்தீர்களா?

உங்கள் இதயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று தெரியும்போது,
உங்களுக்குத் தெரியும்
நீங்கள் அவர்களின் காவலர் என்றும்
அவர்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் அழிப்பீர்கள் என்றும்.

ஆனால் என்ன நடக்கும்?
வினை உங்களுக்கெதிராய்த் திரும்பி கடித்துக் குதறும்போதும்,
எதற்காய் எழுந்து நின்றீர்களோ அவையே உங்களை அவமானப்படுத்தும்போதும்.
என்ன நடக்கும்,
நீங்களே (அவர்களின்) வேதனைகளின் மூலமாய் மாறும்போது…

‘அப்பா, (இங்கே) பாருங்கள், நான் என்ன செய்தேன் என்று.
அப்பா விமானத்தைப் பிடிக்கப் போகவேண்டும்
‘அப்பா, அம்மா எங்கே? என்னால் கண்டுபிடிக்கமுடியாதுள்ளது, எங்கே அவர்?’
எனக்குத் தெரியாது, போய் விளையாடுங்கள் கெயிலி.
குழந்தாய், அப்பா பிஸி.
அப்பா இந்தப்பாடலை எழுதிக்கொண்டிருகின்றார், பாடல் தன்பாட்டில் தன்னை எழுதிக்கொள்ளாது.
நான் ஒருமுறை உங்களை ஆட்டிவிடுகின்றேன், பிறகு நீங்கள் உங்கள்பாட்டில் ஊஞ்சல் ஆடவேண்டும்

பிறகு அதிலிருந்து மீண்டு, எனது பாடலில் கூறுகின்றேன்
அவளை(கெயிலியை) நேசிப்பதாய்,
கெயிலியைச் சிதைத்த அவரின் அம்மாவின் கரங்களைப் பற்றியபடி.

இது ஸிலிம் ஷேடி, ஓம் குழந்தாய், ஸிலிம் ஷேடியின் பைத்தியம்
ஷேடி என்னை உருவாக்கினார், ஆனால் இன்றிரவு ஷேடி பாடப்போகின்றார்

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!

நான் இந்தக்கனவை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றேன்
நான் கெயிலியை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கின்றேன்
அவள் அலறுகிறாள், அவள் நான் பாடுவதை விரும்புவதில்லை.
‘நீங்கள் அம்மாவை அழவைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்? ஏன் அம்மா அழுகின்றார்?’
குழந்தாய் அப்பா இனி உங்களைவிட்டுப்போகமாட்டார். ‘அப்பா நீங்கள் பொய் கூறகின்றீர்கள்’
‘நீங்கள் எப்போதும் இதையே சொல்லுவியள்; போன தடவையும் இதைத்தான் சொன்னனியள்’
‘ஆனால் எங்களை விலத்திப்போகாதீர்கள்; அப்பா நீங்கள் எனக்குரியவர்’.
கடதாசிப் பெட்டிகளை முன்வாசலில் அடுக்கித் தடுக்கிறாள் அவள்
‘அப்பா ப்ஸீஸ், போகவேண்டாம். இல்லை, போவதை நிறுத்துங்கள்.’

தனது பொக்கெட்டிலிருந்து சிறிய நெக்லஸ் லொக்கரை எடுக்கிறாள்
இதில் (எனது)படம் உள்ளது, ‘இது உங்களைப் பாதுகாக்கும். உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்!’

நான் நிமிர்ந்து பார்க்கின்றேன்
கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்க்கின்றேன்
இந்தச் சவச்சுவர்கள் பேசிக்கொண்டுதானிருக்கின்றன. எனெனில் என்னால் அவை பேசுவதைக் கேட்கமுடியும்.
சுவர்கள் கூறுகின்றன, நீ சரியாகச் செய்வதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் மட்டுமே உள்ளது, அது இன்றைய இரவு.
கால தாமதமாவதற்குள், இப்போது வெளியே போய் அவர்களுக்கு உனது நேசத்தைக் காட்டு.
நான் எனது படுக்கையிலிருந்து வெளியே நடக்க
அது ஒரு மேடையாக மாறுகிறது; ‘அவர்கள்’ போய்விட்டார்கள்.
வெளிச்சவிளக்குகள் ஒளிர்கின்றன; நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!

அறுபதினாயிரம் மக்கள், எல்லோரும் தங்கள் இருக்கையிலிருந்து எழும்பிக் குதித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
திரை மூடுகின்றது, அவர்கள் எனது பாதங்களில் ரோசாப்பூக்களை எறிகின்றார்கள்.
நான் அவர்களை வணங்கி, வந்தற்காய் நன்றி கூறுகின்றேன்
அவர்கள் பெருங்குரலில் அலறுகின்றார்கள், நான் இறுதியாய் ஒரு பார்வையைச் சனத்துக்குள் எறிகின்றேன்.
கீழே பார்க்கின்றேன். நான் பார்ப்பதை என்னால் நம்ப்முடியவில்லை.

‘அப்பா, இது நான். அம்மாவுக்கு உதவுங்கள். அவரது கரங்களில் இரத்தம் பெருகுகின்றது.’
ஆனால், குழ்ந்தாய் நாங்கள் ஸ்வீடனில் இருக்கின்றோம்; எப்படி ஸ்வீடன் வந்தீர்கள்?
நான் உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன் அப்பா; நீங்கள் கூறினீர்கள், எங்களை விட்டு விலகிப்போக மாட்டீர்கள் என்று.
நீங்கள் பொய் சொன்னீர்கள் அப்பா; இப்போது அம்மாவைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்’
நான் உங்களுக்காய் இந்த நாணயத்தை வாங்கிவந்தேன்.
அது சொல்கிறது; ‘உலகத்திலேயே சிறந்த அப்பா நீங்கள்தான் என்று’
அதை மட்டுமே நான் விரும்பியது,உங்களுக்கு இந்த நாணயத்தை நான் கொடுக்க விரும்பினேன்.
இப்போது அனைத்தும் விளங்குகிறது. நல்லது. நானும் அம்மாவும் (உங்களை விட்டுப்) போகின்றோம்.
குழ்ந்தாய் சற்றுப் பொறு. ‘காலம் கடந்துவிட்டது அப்பா, நீங்களே உங்கள் முடிவைத் தேர்வு செய்தீர்கள். ‘
இப்போது வெளியே போய் அவர்களுக்குக் காட்டுங்கள், எங்களை விட அவர்களை அதிகம் நேசிக்கின்றீர்கள் என்று.
அதுதான் அவர்களுக்கு வேண்டியது. அவர்களுக்குத் தேவை மார்ஷல்.
அவர்கள் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள் .

இது பெரிய அதிசயமில்லை, என்னால் இனி தூங்கமுடியாது, இன்னொரு குளிசையை எடுக்கவேண்டியதுதான்.
ஓம். நீ நிச்சயம் இப்படித்தான் இருப்பாய். நீ ராப் பாடுவாய். நிஜமான வார்த்தை.

எனக்கு கைதட்டல்கள் கேட்கிறது. ஆனாலதைப் பார்க்கமுடியாதிருக்கிறது.
எப்படி இது சாத்தியம்?? திரை என்னில் விழுந்துகொண்டிருக்கின்றது.
நான் (இயல்புக்கு) திரும்புகின்றேன். நிலத்தில் துவக்கொன்றைக் காண்கின்றேன், லோட் பண்ணுகின்றேன்
எனது மூளையில் அதை குறிவைத்து கத்துகின்றேன்; ‘ஷேடி நீ சா’, பிறகு வெடிக்க வைக்கின்றேன்.

வானம் கருமையாகிறது, எனது வாழ்வு ஒளிர்கிறது.
நான் செல்லவெண்டிய விமானம் விபத்தில் சிக்கி எரிகிறது, சாம்பலாகும்வரை.
(இது நிகழ்ந்து) நான் விழிக்கையில், அலாரம் அலறுகிறது, பறவைகள் பாடுகின்றன.
இது ஒரு இலைதுளிர் காலம். கெயிலி ஊஞ்சல் ஆடுகின்றாள்.
நான் கிம்மிடம் நேரே நடந்து சென்று முத்தமிட்டு அவளை மிஸ் பண்ணினதாக கூறுகின்றேன்.
கெயிலி புன்னகைத்து தனது தங்கையை நோக்கி கண்களைச் சிமிட்டுக்கிறாள்.
Almost as if to say…..

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!

மொழிபெயர்த்த மூலப்பாடல்

January 3, 2006

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 1:10 pm

தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை

எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்

மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்

வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது
எனது செடி

வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியெங்கும்

வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றாய் தவழ்ந்து வந்து
மனதை நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.

விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.

தை 03, 2006

Next Page »

Powered by WordPress