சென்ற சனிக்கிழமை அந்தி மாலை மயக்கத்தில் ரொரண்ரோவில் வலைப்பதிவர்கள் சந்திந்துக்கொண்டார்கள். இதுநாள் வரை காய்க்காத ஆப்பிள் மரங்களில் ஆப்பிள்கள் காய்க்கவும், புற்களிடேயே இருந்து அழகான ரோசாப்பூக்கள் முகிழ்ந்ததுமான அதிசயம், நாம் அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தசமயம் நிகழ்ந்தது. மதி கந்தசாமி, சுந்தரவடிவேல், பாலாஜி-பாரி,வெங்கட், கறுப்பி, நற்கீரன், கிஸோக்கண்ணன், பிரதீபா, தான்யா, சக்தி, மற்றும் எதற்குமே இலாயக்கில்லாத டிசே என்று வலைப்பதிபவர்களும், தமக்கென்று சொந்தக் குடில் இல்லாவிட்டாலும், தொடர்ந்த வலைப்பதிவுகள் வாசிப்புப் பழக்கமுள்ள வசந்தி ராஜா, ரூபன், சத்தியா, ஜானகி மற்றும் மாசிலன் போன்றவர்களும் கலந்துகொண்டு அன்றைய மாலையை பொன்மாலைப் பொழுதாக்கினர்.

மதியை ஒரு பாடல் பாடும்போது நாம் வேண்டிக் கேட்டபோது, அவர் ‘கத்தரி தோட்டத்து வெருளியை’ (சமர்ப்பணம் செர்ரிப்பூவுக்கென்று கூறி) ஒரு மேசையின் மீது ஏறிநின்று பாடத்தொடங்கியதும், அதைச் சகிக்காது அமைதியாக உருவாக வந்திருந்த சக்தி வீட்டிற்கு போகப்போவதாக கோபத்துடன் கூறிப் புறப்பட்டுவிட்டார். இது போதாதென்று பாலாஜி-பாரியை தன்னைப்பற்றி அறிமுகஞ்செய்யக் கூறிய சமயத்தில், சூரியனைக் கண்டுவிட்டு, ஆக்கிமீடிஸ் யுரேகா யுரேகா என்று அலறித்திரிந்தமாதிரி தன்னை அறிமுகஞ்செய்யாமல் சூரியனின் பின் ஓடித்திரிந்தது பொறுக்காமல் வெங்கட்டும் சிலமணித்துளிகளில் புத்தகவெளியீட்டு விழா உரைக்காக கிளம்பிவிட்டார். எனதும் கிஸோவினதும், ‘ஆக்களைத் துரத்தும்’ திட்டத்தை, மதியும், பாலாஜியும் களவெடுத்துவிட்டதை வன்மையாக நானும் கிஸோவும் கண்டிக்கையில், தங்கள்பாட்டில் பறந்துகொண்டிருத சில நாரைகள் மயக்கமுற்றுத் தரையில் விழுந்த அசம்பாவிதம் நடந்தது.

வந்திருந்த வலைப்பதிவு வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த/தாங்கள் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சத்தியாவுக்கு ரோசாவசந்தினது பதிவுகளும், பெயரிலி எடுத்துப்போடும் படங்களும் பிடித்திருந்ததாகவும், ரூபன் தான் கறுப்பி, பொடிச்சி போன்றவர்களின் பதிவுகளை விரும்பிவாசிப்பதாயும் கூறியிருந்தார்கள். வலைப்பதியும் நண்பர்கள் தாம் எப்படி வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தது என்பது குறித்தும், தமக்குப் பிடித்த வலைப்பதிவுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். சுந்தரவடிவேல் அநியாயத்திற்கு மிக ‘அமைதியாக’ இருந்தது எங்கள் அனைவருக்கும் மிகவும் வியப்பாயிருந்தது. ஒரு வார்த்தை வாய்திறந்து பேசக்கூட மிகவும் யோசித்துத்தான் பேசினார். உதாரணமாய் ‘ஆம்’ என்று பதில் சொல்வதைக் கூட, தனியே ‘ம்’ என்றுதான் கூறி முடித்தார். இது ஏன் என்று நான் வினாவியபோது, ஆம் என்று பதில் சொல்லும்போது வாய் பெரிதாகவதாவும், ம் என்னும்போது உதடுகளைத் திறக்கவே தேவையில்லை என்று மிக நுட்பமாக பதிலிறுத்தார். மேலும் ‘ம்’ மைவிட இன்னொரு சிறு சொல் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபடப்போவதாயும் இதனால் வலைப்பதிவுகளில் ‘கடி’க்கும் மற்றும் ‘கொறி’க்கும் நேரம் குறையப்போவதாயும் மிகவும் கவலைப்பட்டுக்கூறினார்.

வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகந்தான் மிகவும் வியப்பான செய்தியாக இருந்தது. இதற்கு பாலாஜி, பெயரிலியின் டி.என்.ஏயுக்கும், திருமூலரின் டி.என்.ஏயுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று அண்மையில் போகத்தொடங்கிய பிரெஞ்சு வகுப்பில் ஆராயப்போவதாகவும் கூறியிருந்தார். நானும் எனது பங்குக்கு, கிஸோ செய்யும் காட்டுத்தீயை எப்படி விரைவாக அணைப்பது என்ற ஆராய்ச்சியைப் போல, பெயரிலி பின்னூட்டங்கள் எழுதும்போது அவரது கரங்களா, மூளையா விரைவில் தூண்டல்/துலங்கல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது என்றதொரு thesis செய்வதாக முடிவெடுத்துள்ளேன்.

சுந்தரவடிவேல், கறுப்பி, மதி போன்றவர்கள் சந்திப்பு முடிவில் பாரிற்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டபோது நான் இந்த மாதம் முழுதும், செவ்வாய் தோசத்தைப் போக்குவதன் நிமிர்த்தம் மாமிசம், மது தொடமுடியாது என்பதை ஆழ்ந்த சென்டிமென்டுடன் சொன்னபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாக்கொட்டியது என்று சொல்லவும் வேண்டுமா? ஒரு மனிதனுக்கு நல்ல ‘வாழ்வு’ கிடைக்கும் நிமிர்த்தம், அனைவரும் பிறகு தமிழ் உணவகத்துச் சென்று இரண்டு நாற்காலிகளை நமது hotஆவி மற்றும் ‘கூழ்’ஆவிக்கு ஒதுக்கி உணவருந்தினோம். hotஆவியின் உணவை மதியும், ‘கூழ்’ஆவியின் உணவை நானும் இரசித்துச் சுவைத்தோம்.

இந்தச் சந்திப்பில் நாயகனாகத் திகழ்ந்தவர் ‘ஓ வண்டிகார’ புகழ் மாசிலன். அவர் அந்தப் பூங்காத்திடலையை கலகலப்பாக்கியபடி, எம் அனைவருடனும் இலகுவில் இணைந்துகொண்டார். அப்பாக்களுக்கு ஆப்பு வைக்க என்று மாசிலன், நித்திலன் போன்றோர் இப்போதிருந்தே துடிப்பாக இருப்பது என்னைப் பொறுத்தவரையில் மிகுந்த சந்தோசமான விடயமே. அடுத்த நாள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு குற்றாலத்தைப் போல் குளிக்கச்சென்ற சுந்தரவடிவேலும், பாலாஜியும் ஏன் தண்ணீர் இப்படிச் சுடுகின்றது என்று என்னிடம் வினாவியபோது,இது கார்த்திக்கின் சதிவேலை என்றும் அவர்தான் hotஆவியாக நயாகராவில் இரண்டறக்கலந்து உங்களைக் குளிக்கவிடாது தடுக்கின்றார் என்றும் கூறினேன்.

அட இதனால் இவர்கள் இருவரும் வருத்தமுறுவார்கள் என்று பார்த்தால், பத்துவருடங்களாக குளிக்காதிருந்த தம்மை மேலும் பத்து வருடங்கள் குளிக்காமற்செய்த கார்த்திக்கு நன்றி கூறியபடி வழமைபோல ஒரு பெரிய போத்தல் cologneஐ விசிறியடித்தபோது ரொரண்ரோ மக்கள் அனைவரும் மயக்கமடைந்து தூக்கத்திற்குப் போயிருந்தனர்.
ரொரண்ரோவில் நடந்த சந்திப்பில் நடந்த நல்ல விடயங்களைப் பற்றி மட்டுமே என்னால் கூறமுடிந்தது. இதன் எதிர்மறையான விடயங்களையும், நான் விட்டுச்சென்ற இடைவெளிகளையும் மற்ற நண்பர்கள் இனிவரும் நாள்களில் நிரப்பிக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.