பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005

தமிழர் தகவல் மாத இதழ், ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இச் சிறப்பிதழ் வெளிவர பத்மநாப ஜயர் முன்னின்று உழைத்திருக்கின்றார். பெரும்பாலான சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாயிருந்தபோதும், ஈழத்துச் சிறுகதைகளை ஒரேயிடத்தில் பார்க்கும் அரிய வாய்ப்பு இவ்விதழில் இருக்கின்றது. சென்ற தலைமுறைகாலத்தவர்களாகிய, எஸ்.எஸ்.எம்.ராமையா, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம், என்.கே.ரகுநாதன் தொடங்கி இன்றைய தலைமுறைகால எழுத்தாளர்களின் படைப்புக்கள் வரை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சாந்தனின் கிருஷ்ணன் தூது, எஸ்.எல்.எம்.மன்சூரின் சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும், உமா வரதராஜனின் அரசனின் வருகை, எஸ்.எல்.எம்.ஹனிபாவின் மக்கத்து சால்வை, பார்த்திபனின் தீவு மனிதன், ரஞ்சகுமாரின் கோளறு பதிகம், குமார் மூர்த்தியின் மஞ்சள் குருவி போன்றவை எழுதப்பட்ட காலங்களில் பரவலாகப் பேசப்பட்ட ஆக்கங்கள். இங்கே வலைப்பதிவில் எழுதும் பெயரிலியின் திறப்புக்கோர்வையும், பிரதீபா தில்லைநாதனின், இன்றில் பழந்தேவதைகள் தூசிபடிந்த வீணை கொஞ்சம் நினைவுகளும் உள்ளன. பிரதீபா எழுதிவற்றில் எனக்குப் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. காதலையும் அதன் இழப்பையும் மிகவும் இயல்பாய் எனக்கு நெருக்கான மொழியில் சொல்வதால் என்னை அந்தக்கதை பாதித்திருந்தது. அ.ரவி, நிரூபா, பா.ரஞ்சினி, திசேரா போன்றவர்களின் கதைகள், நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றன. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் தமது படைப்புக்களை தொகுப்பாய் வெளியிடுவதில் மிகுந்த சோம்பலாக இருப்பதில் (அதில் என்ன பெருமையோ எனக்கு இன்னும் புரியவில்லை) இவ்வாறான தொகுப்புக்களைத்தான் விரிந்த வாசிப்புகளுக்காய் எதிர்ப்பார்த்திருக்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் இதை சாத்தியமாக்கிய பத்மநாப ஜயரினதும் ஏனையவர்களினது உழைப்பு நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.
காலம் -இதழ் 23

இருபத்து மூன்றாவது இதழாக மார்ச் மாதத்தில், காலம் வெளிவந்திருக்கின்றது. அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் இதில் முக்கிய அம்சம். அ.முத்துலிங்கத்தின் கதைகள் போலவே, நேர்காணலின் அவரது பதில்களும் புன்னகையை வரவைக்கின்றது. அ.முத்துலிங்கம் கூறுவது மாதிரி, ‘ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை: இந்தியா இல்லை: மலேசியா இல்லை: முன்னேறிய நாடுகளில் ஒன்று. Yaan Martel, Michael Ondaatje, Alice Munro போன்ற உலகத்து தலை சிறந்த எழுத்தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக் கூட்டங்களுக்கோ, சந்திப்புக்களுக்கோ, நாமும் போய் எமது இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மையநீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன்படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வுகளுக்கு அரச ஆதரவு கொடுக்கிறது. அவற்றின் முழுப்பயனையும் நாங்கள் பெறவில்லை. அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்’ என்று கூறியதை கனடாவில் என்றில்லாது அனைத்து புலம்பெயர் நாடுகளுள்ள இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளலாம். (Yann Martel பற்றி வாசித்தளவில், அவர் தனது Life of Pi ஜ எழுதும்வரை பணத்திற்கு கஷ்டப்பட்டவர். ஒரு நாவல் எழுதுவதற்காய் மும்பாய் போய், திருப்தி வராமல் கொஞ்சம் எழுதிய நாவலொன்றைக் கிழித்தெறிந்துவிட்டு, இருந்த சொற்பபணத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலாப்போனபோது ஒரு பட்டேலின் கதையைக் கேட்டபின் தான், பிரபலமான Life of Piஜ எழுதியிருந்தார். புக்கர் பரிசு இந்த நாவலிற்காய் அவருக்குக் கிடைத்திருந்தது). சிறுகதைச் சிறப்பிதழ் என்று காலத்தின் முன்னட்டையில் குறிப்பிட்டிருந்தாலும், நான் வாசித்த தெளிவத்தை யோசப், மு.பொன்னப்பலம், க.கலாமோகன், மணிவேலுப்பிள்ளை ஆகியோரின் கதைகள் மிகவும் மோசமானவை. என்.கே. மகாலிங்கம் (சினுவா ஆச்சியின் சிதைவுகளை, இவர் மொழிபெயர்த்து காலச்சுவடும் காலமும் இணைந்து வெளியிட்டதென்று நினைக்கின்றேன்), சார்த்தரின் சுவர் என்ற கதையை மொழிபெயர்த்துள்ளார். சற்று நீளமான கதை. செல்வா கனகநாயகம் எழுதியுள்ள இலக்கியத்திறனாய்வும் இலக்கிய வரலாறும் மிகுந்த dry தன்மையுள்ள கட்டுரை. பல்லைக் கடித்துக்கொண்டு முழுதாய் வாசித்துமுடித்தபோதும், என்னால் எதுவுமே அதிலிருந்து கிரகிக்கமுடியவில்லை. தேவகாந்தன், ஷோபாசக்தியின் ‘ம்’ குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார். ஷோபாசக்தியின், ‘ம்’ மற்றும் ‘கொரில்லா’ குறித்து சற்று விரிவாக இன்னொரு பதிவு எழுத விருப்பமுள்ளது (முக்கியமாய் நண்பர்கள் பலருடன் விவாதித்ததை தொகுத்து எழுதும் எண்ணம் ஒன்று எனக்கு உள்ளது). மற்றபடி குறிப்பிட்டுச்சொல்லும்படியாக 23வது காலம் இதழில் இல்லை. ஒரு புலம்பெயர்ந்த சூழலில் கால ஒழுங்கு இல்லாவிட்டாலும் 23வது இதழை காலம் ஆசிரியர் செல்வம் வெளியிடுவதைப் பாராட்டத்தான் வேண்டும்.
அறிதுயில்- இதழ் 2

கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேலை ஆசிரியர்களாகக் கொண்டு அறிதுயில் என்றொரு சஞ்சிகை வெளிவருகின்றது. இது இரண்டாவது இதழ். முதலாவது இதழை பிரமீள் சிறப்பிதழாக வெங்கட்சாமிநாதன் கனடா வந்தசமயத்தில் வெளியிட்டதாய் கற்சுறா கூறுகின்றார். தெரிதாவுடன் ஓர் உரையாடல் என்ற ர·பேலின் ஆங்கிலம் வழி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கின்றது. கருமையம் நடத்திய நாடகஙள் குறித்து வரனும், கெளசல்யாவும் இரண்டு விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். பத்மநாப ஜயரிற்கு இயல்விருது வழங்குவது குறித்த தமது அதிருப்தியை கற்சுறாவும், எம்.ஆர்.ஸ்ராலினும் கட்டுரைகளில் முன்வைக்கின்றனர். பத்மநாப ஜயரிற்கு கொடுக்கப்படும் விருதில் எனக்கு எதிர்நிலை இல்லையெனினும், கற்சுறா வினாவுவதுபோல இயல்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் நானும் நினைக்கின்றேன். ” இந்தத் தெரிவுக்குழு தமது ஒவ்வொருத்தரின் பெயரில் விருது கொடுத்தால் நாம் ஒருபோதும் அதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை…. அதை விடுத்து ரொரண்டோ பல்கலைக்கழகம், கனடாத் தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியம் என்று மொத்தக் குத்தகையில் விருதுக்கு பெயரிட்டு விட்டு இந்த விருதைக் கொடுக்கும்போதுதான் சிக்கல் வருகின்றது’ என்று கற்சுறா கூறுவதில் நியாயம் உள்ளதுபோலத்தான் எனக்கும்படுகின்றது. அறிதுயில் தொடர்ந்து வெளிவரவேண்டும். ஆனால் ஒருவரே பல்வேறு பெயர்களில் எழுதி சஞ்சிகையின் பக்கங்களை நிரப்பாமல், ஏனையவருக்கும் பக்கங்களை பகிர்ந்துகொண்டால் நல்லதுபோலத்தோன்றியது. அறிதுயிலை நீங்கள் இணையத்திலும் வாசிக்கலாம்.
தேவகாந்தனின் ‘கதாகாலம்’

தேவகாந்தனின் கதாகாலம் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தபொழுதில் வெங்கட் விரிவான ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருப்பதால் சில குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு ஓடிவிடுகின்றேன். வரன், மகாபாரதம் பிராமணீயத்திலிருந்து வந்தது என்று கூறினாலும், சிவதாசன் அதை மறுதலித்திருந்தார். அதனால்தான் அவர் யுகாந்தாவின் மகாபாரதத்தை முன்னிலைப்படுத்தினார் என்று நினைக்கின்றேன். எனினும் இதுகுறித்த விரிவான விவாதம் நடைபெறாதது என்னளவில் ஏமாற்றமே. தேவகாந்தனின் கதாவிலாசம் மறுவாசிப்பில்லை என்று வரனும், கற்சுறாவும் மறுதலித்திருந்தனர் (re-reading மட்டுமே, retold அல்ல). நான் இந்த நூலை இன்னும் வாசிக்காதபடியால் விரிவாக எதுவும் கூறமுடியாது எனினும், விமர்சித்தவர்களின் குரல்களைக் கேட்டதை வைத்துப்பார்க்கும்போது மகாபாரதத்தில் விடுபட்ட பகுதிகளைத்தான் தேவகாந்தன் சொல்ல முயன்றிருக்கின்றார் போலத்தோன்றியது. முக்கியமாய் பெண்ணிய வாசிப்பில், இது எந்தவிதத்திலும் அசல் பிரதியைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என்று நிர்மலா கூறியதற்கு, எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்றால் மகாபாரதத்தை மறுவாசிப்பது சாத்தியமில்லை, ஒரு புதுப்பிரதியைத்தான் எழுதவேண்டும் என்று தேவகாந்தன் கூறியிருந்தார்.

யுத்த எதிர்ப்பு அதில் சாராம்சமாய் இருக்கின்றது என்பதற்தாய், கொழுத்த முலைகளும், கங்கை போன்ற புனிதமும் கொண்ட பெண்களைச் சித்தரிக்கும் ஆசிரியனை கேள்விப்படுத்தாமல் இருக்கமுடியாது. ஒரு பெண்ணின் மனோநிலையில், பிற்போக்குத்தனமான ஒரு நாவலாகத்தான் அடையாளங்கொள்வேன் என்று நிர்மலா கூறியசமயத்தில், பின்நவீனத்துவவாதியாக தனது பேச்சின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்திய வரன், படுப்பது போன்ற சில வார்த்தைகளை ஒரு சாதாரண ஆணாதிக்கவாதி நிலையில் நின்று கூறியது வியப்தைத்தான் ஏற்படுத்தியது. அத்தோடு, போரிற்கு ஆண் சென்றால், ஊரில் இருக்கும் பிற ஆண்களுடன் உறவுகொள்வதற்கான சுதந்திரம் பெண்களுக்கு முற்காலத்தில் இருந்ததெனவும் சுட்டிக்காட்டியதுடன், கள்ளஞ்செய்து பிற ஆண்களுடன் பெண் படுப்பதைவிட, இப்படி வெளிப்படையாக உறவுகள் வைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு முற்காலத்தில் இருந்தது என்று சுட்டிக்காட்டினார். பல ஆண்களுடன் ஒரு பெண உறவு கொள்வதால் பெண்ணின் பிற பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது அப்படியிருக்கும் சுதந்திரந்தான் பெண்கள் வேண்டி நிற்கும் உண்மையான சுதந்திரமா? வரன் இப்படி அபத்தமாய் கூறினார் என்றால், அருகிலிருந்த மகாலிங்கம், ஓம் எனக்குத் தெரிய அநுராதபுரத்திலுள்ள ஒரு கிராமத்திலும் இப்படியான வழக்கம் இன்னும் இருக்கின்றது என்று ஒத்துப்பாடினார். பெண்களுக்கு பல ஆண்களுடன் உறவு இருக்கின்ற சமூகம் exist ஆகின்றதா அல்லது இல்லையா என்பதல்ல கேள்வி. இன்றைய நாம் வாழும் சமூகத்தில் பெண்கள் குறித்து நீங்கள் என்ன கருத்தை தேவகாந்தனின் கதாவிலாசத்தை முன்வைத்து கூறுகின்றீர்கள் என்பதுதான் என்னைப்பொறுத்தவரை முக்கியம். யுத்த எதிர்ப்பு இருந்தாலும், பிற்போக்குத்தனமான பெண்ணடிமைப்பிரதியாய், கதாவிலாசம் இருப்பின் (வாசிக்கும்போது தெரிந்தால்) நிச்சயம் நான் இந்தப்பிரதியை நிராகரிக்கவே செய்வேன். வரன், அசல் மகாபாரதத்தில், சாபக்கேடு அல்லது பாவம் என்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றமாதிரி, தேவகாந்தனின் நாவலில் இரண்டு பக்கங்களுக்கொருமுறை காமம் பற்றிய விவரணைகள் இருப்பதாய் கூறியது முக்கிய விடயம். அதுவும் சிலசமயங்களில் ஒரே வார்த்தைகள் திரும்பத்திரும்ப வருவது வாசிக்கையில் அலுப்பைத்தருவதாகவும், இப்படித் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கும் பணி பதிப்பாளருக்குரியது என்று குறிப்பிட்டது முக்கியமான குறிப்பு . ஆனால் பிரதியை வாசித்து விமர்சித்த அனைவரும் தேவகாந்தனின் எழுத்து நடை மிகச்சிறப்பாகவும் கவிதை நடையிற்கருகிலும் இருக்கின்றது என்று பாராட்டியிருந்தனர்.

இரண்டாம் அமர்வில், ஏன் இப்படியான புத்தகத்தை வெளியிட வேண்டிய அவசியம் காலத்திற்கு வந்தது என்று கேட்கப்பட்டபோது, காலம் செல்வம் இது ஒரு யுத்த எதிர்ப்பிற்கான பிரதி, இன்னவும் துரியோதனன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று கூறினார். முதலாம் அமர்வு முடிந்து விடப்பட்ட இடைவெளியில் வழங்கப்பட்ட வடையை தவறுதலாக கீழே விழுத்தி, சரி விற்பனைக்காய் வைக்கப்பட்ட புத்தகஙகளைப் பார்த்துவிட்டு இன்னொரு வடையை ஆறுதலாக எடுக்கலாம் என்று நினைத்து, பிறகு போய்பார்த்தால், வடைப்பிரியர்கள் வடைகளை அடையாளமில்லாது முடித்துவிட்டிருந்தனர். வடை சாப்பிடும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேனென்று கவலையுடன் யோசனையிலிருந்த எனக்கு, காலம் செல்வம், துரியோதனன் இன்னும் இருக்கின்றான் என்று கூறியது ஒரு அசரீரீயாகக் கேட்க, ‘அப்படியெனில் யார் அந்தத் துரியோதனன்’? என்று நான் செல்வத்தைப் பார்த்துக்கேட்க, செல்வமோ, ‘இப்போது கூறமுடியாது’ என்று என்னைத் திரும்பி பார்த்துக் கூறினார். பிறகு மகாலிங்கமும், தேவகாந்தனும் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார், ஆனால் அவர் நெருங்கிப்பழகிய ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் கூட தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்து எதுவும் கூறாது மெளனஞ்சாதிப்பதாய் கூறினார். ஜந்து பாகங்களாய் தேவகாந்தன் எழுதிய பெரிய சைஸ் புத்தகங்களைத் தானும் வாசிக்கவில்லை என்றே மகாலிங்கமும் கூறினார். பெரிய சைஸ் புத்தகங்களை தனது இளமைப்பருவத்திற்கு பிறகு வாசிப்பது என்றால் அலர்ஜி என்று கூறியபோது, அப்படியெனில் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் நீங்கள் வாசிக்கவில்லையா என்று நான் கேட்க நினைத்தேன். அந்த சமயம்பார்த்து காலம் செல்வம் கேக்குகளை பரிமாறத் தொடங்கியிருந்தார் (பார்க்க மேலேயுள்ள படம்). கேள்வி கேட்பதைவிட ஆக்ககுறைந்தது வடையைப்போலல்லாது கேக்கையாவது சுவைபார்த்துவிடு என்று எனது ஆறாவது அறிவு எச்சரிக்கை செய்ய வழமைபோல உணவுக்கு பின் எனது கண்கள் அலைபாயத்தொடங்கிவிட்டன (கேக் மிகவும் ருசியாகவும் இருந்தது).அறையினுள் விவாதமாய் சிலவற்றை காரசாரமாய் உரையாடினாலும், வெளியில் நண்பர்களாய் முகங்களைச் சுழிக்காது, இயல்பாய் அனைவரும் பேசியது மனதிற்கு மிகவும் நிறைவைத்தந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்.
…….
தேவகாந்தனின் கையெழுத்திடும் புகைப்படம் மட்டும்: இங்கிருந்து