DISPASSIONATED DJ

February 27, 2005

ஈழத்திலிருந்து சில கவிதைகள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 4:36 pm

பாம்பு நரம்பு மனிதன்
-சோலைக்கிளி

வலி தாங்கமுடியவில்லை.
எனது கண்களை யாரோ ஒரு கல்லில் வைத்து
இன்னுமொரு கல்லால்
தட்டுகின்றனர்.

என் கண்
ஒவ்வொரு நாளுமே கெடுகிறது.
அது இருந்த இடத்தில்
பாம்புகள் நுழைகின்றன
எனக்குள்.

ஆம், என் நரம்புகளெல்லாம் இப்போது பாம்புகளா!
ஒவ்வொரு நரம்பும்
ஊர்வதைப் போலவும்,
நெஞ்சைக்
கொத்துதல் மாதிரியும்,
உணர்கிறேன்.

ஊரே
நான் பார்க்கும் உலகே
என் கண் தட்டும் மனிதரை
விழுங்கு!
கையிலொரு பூவோடு
பிறர் நெஞ்சை
தடவிச் சுகம் கொடுக்கும் மானிடராய்
மண்ணில் பிறக்க
தவம் செய்!

ஒரு நரம்பு
இப்போது
என் மூளையைக் கொத்துகிறது!
இன்று காலையில்தான் இந்தப் பாம்பு
எனக்குள்ளே வந்தது.
நேற்று முன்தினம்
இரு தரப்பிலும்
சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற
பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,
யாரோ என் கண்ணை
கல்லால் தட்ட
நுழைந்தது.

உயர்ந்து
-சோலைக்கிளி

நான் அள்ளி எறிந்த மொழி நீ
அதுவும் தமிழ்
செத்தாலும் சோர்ந்தாலும் மென்மேலும் துளிர்ப்பது
மழை தேவையில்லை கோடையிலும் பூப்பது
எட்டி
ஒரு றப்பர் கட்டியாய் துள்ளி
என் தோளில் கூத்தாட முனைந்து
தோற்றாய்
நான் உயரம்
பிணம் புதைத்துப் புதைத்து
திடலான பூமியிலே நிற்கின்றவன்

அதனால்-
உன் போன்ற கட்டைகள் றப்பர் கட்டிகள்
புருஷனது தோள் ஏறி பழம் ஆய்ந்து கனி ருசித்து
கொட்டை பிதுங்கி எறிவதற்கு

தடைதான் - அங்கே ஒரு அவிந்த தலை
தலைமுடியில் சாம்பல் பூத்ததைப் போல வெள்ளை

பூமி திடலாகி ஆகாயம் தட்டியதில்
இரவில்
என் பழைய சித்திர ஆசிரியை
செத்துப்போனாலும் என் கலையை விடமாட்டேன்
என்று சொல்லி வந்து
நசிகின்ற அந்த நீலத் தகரத்தில்
பூக் கீறும்போது
கை தடுக்கி மை உதிர்ந்தும் சித்திரத்தை விட்டாவோ
அம்மா

உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
-பா.அகிலன்

எனக்குத் தெரியாது
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்.
பெரிய கூழாமரங்கள் நிற்கிற
செம்மண் தெருக்களை
வசந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.

மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்

காற்றும் துயர்ப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்.
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடுபோலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
குருதிபடர்ந்து மூடியது.
விண்தொட மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் அலைவுற
சதைகள் தொங்கும் நிலையுமாயிற்று.
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்துவிடப்பட்ட நாய்கள் ஊளையிட
‘முந்தையர் ஆயிரம்’ காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது.
நானும், நீயும் இவையறிவோம்.
இறந்துபோன பூக்களை
கைவிடப்பட்ட பாடலடிகளை
நினைவுகூரப்படாத கணங்களைக் கூட
அறிவோம்.

ஆனால்
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்கள் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
அவர்களைப் போல
நீ அறியாது விடின்
இன்றறிக
‘ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்’
ஒர்நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

இராத்திரிப்பூச்சியின் போர்ப்பாட்டு
-கருணாகரன்

இராத்திரிப்பூச்சியே
என்னோடு இரு
உன் பாடலை நிறுத்தி
இரகசியமாக உணர்;
காற்றின் சருமம் நடுங்குவதை,
ஒரு கண்ணிழந்த பறவையென
இந்த இரவு திசைகெட்டுப் பரிதவிப்பதை.

இது உயிரை உசுப்பும் துயரமல்லவா?

இந்தக் கணம்
என்னோடு இரு
எந்தச் சத்தமுமின்றி
காலத்தின் சொல்கேட்டு
மிக அவதானமாக
மிக ஆக்ரோசமாகக் காவலிருப்போம்.
எதிரே, வாழைகள் நெரிபடும்
தோட்டத்தின் பின்னே
வெளியில்; புற்கள் மண்டிய வெளியில்
ஏதோ நாலுபறவைகள்
திடுமெனப் பறந்தெங்கோ சிதைய
பாழடைந்த நிழல்களாய்
பகை மூட்டமசையும்.

ஆட்களற்ற வீடுகளிலிருந்து
பரியலங்கள் உலாவுகின்ற
வாடைபடும் எல்லை இது
அழுக்கு மாலை அணிந்து பிணத்தின்
வாடையுடன்
சூரர்கள் வெறிகொண்டு வருவர்.

வாடையின் குறிப்புணர்ந்து
நீமருள்வாய்
காலம் நசுங்கி முனகுவதை
நானறிவேன்
என் பூச்சியே நீயும் உணர்
காலமும் சூழலும் நெருங்கி வர
மூளும் யுத்தம்
வெற்றி வரும் வரை யுத்தம்.

நெஞ்சுகள் கொதித்துக் கொதித்துக்
குமுறும் வெம்மையில்
நூற்றாண்டுகால அடிமைச் சாசனங்கள்
எரியுண்டுபோக
இராத்திரிப் பூச்சியே
அப்போது பாடு
மருளாமல் ஆக்ரோசமாகப் பாடு
நம் நிலத்தில் முளைத்த போர்ப்பாட்டை.

நீள்வழியில் நிழலாகி
-கருணாகரன்

சாம்பலாய் நிழலுருக் காட்டும்
பனைகளும் சிறுபற்றைகளும் தொலைவில் கரைய
படகேறிப் போகிறதென் பயணம்

வள்ளங்களை அலைக்கும் காற்றில்
என்ஜின்கள் இரைய
ஒரு படகின் பின்னால் - இழுவையில்
பிணையுண்டு இழுபடும் படகுகள்…

மெல்லச் சிறுத்து
தொலைவு கொண்டு போகின்றது
கிளாலிக்கரை

கையசைக்கவும்
முகம் திருப்பவும் முடியவில்லை.

என் சிறுகடலே கேளம்மா
உன்னரும் புதல்வரின்
உதிரத்தில் மூழ்கிய தேவி
நீ வேதனையில் விசும்பும்
ஒலியில் திசையடைத்துக் கிடப்பதறிவேன்
எனினும்
என் மனதையும் மடியிருத்திக் கொள்ளம்மா.

பீதியுண்டு அலையும் விழிகளும்
மருளும் மனமுகமாக
ஒரு வாழ்வை இழந்து
ஒரு வாழ்வு தேடிப்போகுமென் விதி

பகல் நேரப் பொழுதொன்றில்
வலசையாய்
நொய்த மனிதரில் ஒருவனாய்
விம்மி அழுதபடி
விழிநீரை உன்மடியில் சிந்திச் செல்கிறேன்.

கரையில் மோதி
மோதிச் மோதிச் சிதறும் உன் விதிபோல
இன்றென் கதையும் ஆயிற்றென்று
காற்றிடம் சொல்வதா
இந்த கடற்பறவைகளிடம் சொல்வதா.

நன்றி: எரிமலை, உயிர்நிழல், பாம்பு நரம்பு மனிதன்

ஈழத்திலிருந்து சில கவிதைகள்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 3:36 pm

February 23, 2005

Cold Mountain: திரைப்படம்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 9:15 pm
{பார்த்ததும் பிறகு பதிந்ததும்}

“நமக்கான காலம்
போய்விட்டதைப் போலுள்ளது.
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது…”

-நட்சத்திரன் செவ்விந்தியன்
இந்தக் கவிதை சொல்வதைப் போல அமெரிக்காவில் நடந்தாலென்ன ஈழத்தில் நடந்தாலென்ன போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டுத்தான் போகின்றது. யுத்தக்காலத்தை விட யுத்தத்தின் பின்பான காலங்கள்தான் இன்னும் கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. Cold Mountain - இந்த கதையின் பின்னணி அமெரிக்கா உள்நாட்டுப்போரை பின் தளமாகக்கொண்டு போரெழுப்பும் அதிர்வுகளை காட்சிகளினூடாக பார்ப்பவர்களிடையே படியவிடுகின்றது.

நேரடிப்போர் பற்றிய காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே வருவதால், கதாநாயக ஆர்ப்பாட்டங்கள் அதிகமில்லாது படத்தோடு ஒன்ற முடிகிறது. Cold Mountain என்ற ஒரு ஒதுக்குப்புறமான ஊரிலிருந்தே கதை ஆரம்பிக்கிறது. ஒர் ஊரிற்குரிய இயல்போடும் நிம்மதியோடும் அங்கேயிருக்கும் மனிதர்களின் வாழ்வு நகர்கிறது. எனினும் அங்கிருக்கும் ஆண்கள் எப்போது அமெரிக்க உள்நாட்டுப்போரிற்கு தங்களிற்கு அழைப்பு விடப்படும் என்பதைக் கிளர்ச்சியுடன் எதிர்பார்த்தபடி இருக்கின்றார்கள். அதையே அப்படி அழைப்பு வரும்போது ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடிவிட்டு போரிற்கு புறப்படும் காட்சி தெளிவுபடுத்துகிறது. ஆனால் போரின் நிசம் நாம் நினைப்பது போல இல்லைத்தானே. இதற்கிடையில் தனது தந்தையின் உடல்நலம் காரணமாக ஊரில் ஓய்வெடுக்க வரும் பணக்காரப் பெண்ணுக்கு(Ada) அவர்களின் பண்ணையில் வேலை செய்யும் ஆணிடம்(Inman) ஈர்ப்பு வருகிறது. காதலைக் கூட சரியாகச் சொல்லவோ அனுபவிக்கவோ முடியாத வகையில் போரிற்கான அழைப்பு Inmanற்கு வருகிறது. ஊரிலுள்ள ஏனைய ஆண்களைப்போல அவனும் தனது காதலியைப் பிரிந்து போரிற்குச் செல்கின்றான்.

பிறகொருபொழுதில் போரில் காயம்பட்டு, போரின் கொடூரம்கண்டு வெறுத்து, தனது இராணுவத்தை விட்டு தப்பி தனது ஊரிற்கு பயணிக்கின்றான். ஒரு நீண்ட பயணம் என்றாலும் தனக்காய் தனது Ada காத்திருப்பாள் என்ற நினைப்பு அவனை ஊரை நோக்கிச் செல்ல உந்துசக்தியாகிறது. இதற்கிடையில் நாடுமுழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாரடைப்பால் தனது தந்தையுமிறக்க, போரின் நிமிர்த்தத்தால் செல்வச்சீமாட்டியான Ada வறியவளாகிறாள். எவருமேயில்லாத அவளது தனிமையை ஊர்க்காரன் ஒருவன் தனக்குச் சாதகமாக்கப்பார்க்கின்றான். ஒருபொழுதில் உணவெதுமேயில்லாது ஒரு துண்டு பன்றியிறைச்சிக்காய் தனது தந்தையாரின் இறுதி ஞாபகப்பொருளான கடிகாரத்தையே விற்கப்போகின்றாள். எனினும் தன்னோடு சில பொழுதுகள் கழித்தவன் போரிலிருந்து என்றாவது ஒருநாள் தனக்காய் திரும்பிவருவான் என்ற நம்பிக்க்கையுடன் காத்திருக்கிறாள் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டமெல்லாம் பற்றைகளாக மாறுவதைப் பார்த்துக்கொண்டு.

போரில் நேரில் ஈடுபவர்களைவிட அவர்களுக்காய் ஊரில் காத்திருப்பவர்கள்தான் இரட்டைத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லி, காத்திருக்கும் Ada போன்ற பெண்களுக்கு அடுத்த அதிர்ச்சி அவர்களின் இராணுவத்தின் கட்டளை ரூபத்தில் வருகிறது, எந்தக்காரணம் கொண்டு இராணுவத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு எவரும் புகலிடம் கொடுக்ககூடாது என்று. எதிர் இராணுவத்தைவிட தங்கள் இராணுவம் மிக மோசமாக இருக்கின்றதே என்று பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிய தாய்மார்கள் திட்டியபடி கலைகின்றனர்.

Cold Mountainற்கு தப்பிவருகின்ற Inmanற்கு பயணம் அவ்வளவு இலகுவாயில்லை. ஒரு ஆற்றைக் கடக்க உதவி செய்வதாய் துடுப்புடன் வருகின்ற பெண்ணுடன் Inmanம் இடையில் சேர்ந்துகொண்ட தோழனும் செல்கின்றனர். ஆற்றின் இடைநடுவில் படகு சென்றுகொண்டிருக்கும்போது அவர்களின் சொந்த இராணுவத்தாலேயே சுடப்படுகின்றார்கள் (தப்பியோடுபவர்கள் ஊர் போகக்கூடாதென்ற கட்டளைக்கேற்ப). உதவி செய்ய வந்த பெண் கொல்லப்பட Inmanம் நண்பனும் தப்புகின்றார்கள். இடையில் பூச்சிகள், காய்ந்த சோளப்பொத்தி என்று கண்டதையெல்லாம் சாப்பிட்டு உயிரைத் தக்கவைத்த்துக்கொண்ட இவர்களை, பசி கொடூரமாய் கொல்கிறது. அதிஷ்டவசமாய், பலநாள்களுக்கு முன் செத்த ஒரு மாட்டை (சாப்பாட்டுக்குப் பஞ்சம்) துண்டாக்குவதற்கு ஒருவனுக்கு உதவி செய்ய அவன் அன்றிரவு தான் உணவு தருவதாகவும் தனக்குத் தெரிந்த வீட்டில் தங்கலாம் என்றும் கூறுகின்றான். அங்கே நாலைந்து பெண்கள் இருக்கின்றனர். நல்ல சாப்பாடும் குடியும் பரிமாறப்படுகிறது. ஆண்கள் எல்லாம் போரிற்குப் போனபின் சாப்பாட்டுப் பஞ்சத்தைப்போலவே பெண்கள் பாலியல் உறவு இல்லாது தவிக்கின்றனர். நான் முந்தி நீ முந்தி என்று Inmanடன் உறவு கொள்ள அழைக்கின்றனர். இப்படி உறவிற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது இவர்களை விருந்திற்கு அழைத்து வந்தவன் Inmanனின் இராணுவத்திற்கு தகவல் சொல்ல Inmanம் அவனது நண்பர்களும் அவர்களின் கைதியாகின்றனர். பிறகு இவர்களைப் போன்ற பலரைச் சங்கிலியில் பிணைத்தபடி போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது எதிரணியினரை(Yankees) சந்திக்கின்றனர். கைதிகளை ஒளித்துவைத்துக்கொண்டு இவர்களது இராணுவம் பதுங்கிக்கொள்ள, இப்படியே போனால் போர்க்களத்தில் எப்படியோ இறக்கத்தான் போகின்றோம், எனவே சத்தம்போட்டு Yankeesன் கவனத்தைக் கலைப்பானாக்கி ambush நடைபெற்று அதிஷ்டவசத்தால் தாங்கள் தப்பக்கூடும் என்று நினைத்து கைதிகள் சங்கிலிப்பிணைப்போடு தப்பியோடத்தொடங்குகின்றனர். இரு தரப்புக்கும் சண்டை தொடங்குகிறது. மாறி மாறி சுடுபட இறுதியில் Yankees வெல்கின்றனர். ஆனால் Inman மட்டும் இறந்த உடல்களில் ஒருவனாய் கிடக்க அனைவரும் இறந்துவிட்டனர் என்று நினைத்து Yankees போகின்றனர். பிறகு ஒரு மூதாட்டியால் காப்பாற்றபட்டு, கழுத்தில் பட்ட காயத்தை ஆற்றி ஓய்வெடுத்துக்கொண்டு, ஊரிற்கான தனது பயணத்தைத் தொடர்கின்றான்.

இடையில் ஒரு நாள் குளிரும் பசியும் தாங்க முடியாது ஒரு விட்டின் கதவைத் தட்டுகின்றான். அங்கே ஒரு பெண் ஒரு குழந்தையுடன் இருகின்றாள். இருந்த உணவைக் கொடுத்து, தனது கணவன் போரில் இறந்துவிட்டான் என்று அந்தப்பெண் கூறுகின்றாள். இரவில் வெளியே படுத்திருக்கும் Inmanஐ அழைத்து தன்னால் தனியே உறங்கமுடியாது தனக்குப் பக்கத்தில் தயவு செய்து படு, ஆனால் அதற்குமேல் ஒன்றையும் கேட்காதே என்கின்றாள். ஒரு ஆணின் நெருக்கம் அருகில் இருக்க அவளுக்கு கணவனின் நினைவு வந்து உடைந்து அழத்தொடங்குகிறாள். ஒன்றுமே செய்யவியலாது தவிர்க்கும் Inmanஐ பார்த்து தன்னோடு தங்கிவிடச் சொல்கிறாள். இல்லை எனக்காய் என் காதலி காத்திருப்பாள், அவளுக்காய் நானெனது ஊர் போகவேண்டும் என்று அவளை அணைத்தபடி உறங்கிப்போய்விடுகிறான் Inman. விடிகாலையில் எதிரணியினர்(Yankees) இவளது வீடு தேடிவருவதைக்கண்டு பதறியபடி அந்தப்பெண் Inmanஐ தப்பியோடச் சொல்கிறாள்.போரினால் பலதினங்களாய் சாப்பாடில்லாது அலையும் அவர்கள் அந்தப்பெண்ணிடம் இருக்கும் எல்லாவற்றையும் பறிப்பதற்காய் அவளது பச்சிளங்குழந்தையை வெளியே குளிரில் கிடத்திவைத்து அவளையும் கயிற்றால் பிணைத்துவிட்டு அவளது உடமைகளைப் பட்டிலிடச்சொல்கின்றனர். அவள் எல்லாவற்றையும் கொடுத்தபின்னும் குழந்தையை குளிரிலேயே விடுகின்றனர். பிறகு அவளையும் வன்புணர்ச்சியிற்காய் வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றான் ஒருத்தன். இதை ஒளித்திருந்து கண்ட Inman வீட்டினுள் பின்புறமாய் சென்று வன்புணர்ச்சியிற்கு வரும் இருவரைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகின்றான். வெளியே கொஞ்சம் வயது குறைந்தவனாய் நிற்கும் எஞ்சியிருந்தவனைக் கண்டு பரிதாபப்பட்டு ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு தப்பியோடு என்று சொல்கின்றான். ஆனால் அவன் தப்பியோடும்போது சடுதியாய் அந்தக்குழந்தையின் தாய் துவக்கெடுத்து அவனைச் சுட்டுவிடுகிறாள். இந்தச் சம்பவத்தை எந்த வார்த்தையுமில்லாது Inman பார்த்துக்கொண்டிருக்கின்றான். இது படத்தின் முக்கிய பகுதியாக பார்க்குபோது எனக்குத் தெரிந்தது. போர் எப்படி எல்லோரையும் வன்முறையாளராக்கி விடுகின்றது என்பதற்கு இதைவிட என்னவொரு காட்சி வேண்டும்?

இதற்கிடையில் Inmanற்காய் காத்திருக்கும் Ada, ஒரு பெண்ணின் உதவியுடன் வீடு தோட்டம் எல்லாம் திருத்தியமைத்து இயல்பு வாழ்க்கையிற்கு வருகின்றாள். கொஞ்சம் சந்தோஷமாய் போய்க்கொண்டிருக்கும் Adaவின் வாழ்வு அயல் வீட்டில் நிகழும் சம்பவத்தோடு பீதியாய் மாறிவிடுகின்றது. போரிற்கு போய் தப்பிவந்த தங்கள் பிள்ளைகளை ஒளித்து வைத்திருக்கும் அந்தக்குடும்பத்து தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் அவர்கள் போராடப்போன இராணுவத்தாலேயே அநியாயமாய் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவர்களின் தாயார் குற்றுயிராய் Adaவினால் காப்பாற்றப்பட்டாலும், பேச்சிழந்து போகின்றார்.

இறுதியில் Adaவும் Inmanம் சந்திக்கின்றனர். பிரிவும் காதலும் பெருகிவழிய உடல்கள் கலக்கின்றன் அந்த இரவில். எனினும் ஊரில் பகல்வேளைகளில் தங்குவது ஆபத்து என்பதால் மலையடிவாரத்திலுள்ள ஒரு குடிசையில் Inmanஐ தங்கச் சொல்லிவிட்டு Adaவும் அவளது தோழியும் ஊரிற்கு கிளம்புகின்றனர். இதற்கிடையில் எங்கையோ தகவல் கேள்விப்பட்டு வருகின்ற Inmanனின் இராணுவத்தினர் Ada வையும் அவளது தோழியையும் சுற்றி வளைக்கின்றனர். Inman தனது ஓளிவிடத்தைவிட்டு வர துப்பாக்கிகள் வெடிக்கின்றன. இறுதியில் எல்லோரும் இறக்கின்றனர் Adaவையும் அவளது தோழியையும் தவிர. சொற்பகாலத்தில் காதல் முகிழ்ந்து அதற்காய் நெடுந்தனிமைப்பயணம் செய்து ஒருநாளையும் விடக்குறைவாக காதலியுடன் இருந்தவன் வாழ்க்கை முடிந்துபோகின்றது. I came back for you என்று Inman சொல்லவும் I love you என்று Ada கதறவும் Inmanனின் உயிர் பிரிகின்றது, முடிவில்.

…..
படத்தின் சின்ன இழையாய் காதல் இருக்கின்றது. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள்தான் Inman, Ada சேர்ந்திருக்கும் காட்சிகள் வரும். மிகுதி முழுவதும் போரே பல்வேறு சம்பவங்களாலும் உரையாடல்களாலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. நேரடியாகப் போரிற்கு எதிரான உரையாடல்கள் இல்லாதபோது காட்சிகள் சொல்லவந்த விடயத்தை நாசூக்காய் சொல்லிவிடுகின்றன. Hollywoodற்கான ஹிரோயிச/ரொமாண்ஸ் அதிகம் கலக்காது ஒரளவு இயல்பாகவும், அதிகம் போரடிக்காமலும் எடுக்கப்பட்டிருந்ததால் படத்தோடு ஒன்ற முடிந்தது.
………
இறுதிக்காட்சியில் Ada, தனது பிள்ளையுடன் இருந்தபடி, முடிந்தகாலம் இனிப்போகட்டும், அதை எவரும் மீளக்கொண்டு வரமுடியாது, ஆனால் எப்படி சமாதானமாய் வாழ்வது என்பதை பழைய வரலாற்றிலிருந்தாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பது உலகத்து அனைத்து நாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும் போலத்தான் தோன்றுகிறது.
………
Stars:
Nicole Kidman (Ada)
Jude Law (Inman)
Renee Zellweger(Ada’s friend)
Director:
Anothony Minghella (director of the English Patient)

Cold Mountain: திரைப்படம்

Filed under: திரைப்படம் — டிசே தமிழன் @ 8:15 pm

February 21, 2005

ரமேஷ்-பிரேம்: சில குறிப்புக்கள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 1:33 am

ரமேஷ்-பிரேமின் படைப்புக்களை சில வருடங்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் எழுத்து நடைக்குள் என்னால் புக முடியாது மூச்சுத்திணறி வெளியில் வந்து விழுந்திருக்கின்றேன். பிறகு அவர்களது கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல் என்று கொஞ்சம் பொறுமையாய் வாசிக்கத்தொடங்கியபோது அவர்களின் பிரதிகளை எப்படி வாசிப்பதென்ற இழை புரிபட வாசித்தல் இலகுவாயிற்று. சிலருக்கு சிலரது எழுத்தைக்கண்டவுடன் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதுபோல் இன்றையபொழுதில் நானும் ரமேஷ்-பிரேமின் படைப்புக்கள் கண்ணில்பட்டால் முதலிடம் கொடுத்து வாசிக்கத்தொடங்கிவிடுவேன்.

எனக்குத் தெரிந்த அளவில் ரமேஷ்-பிரேம் புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு என்றொரு சொல் என்ற இரு நாவல்களை எழுதியுள்ளனர் என்று நினைக்கின்றேன். சொல் என்றொரு சொல்லை நான் வாசித்திருக்கின்றேன். வித்தியாசமான கதை சொல்லலில் என்னை ஈர்த்த புத்தகம். ‘பல்வேறு கதைகள் தொகுப்பட்டாலும் தமிழ் என்ற தொன்மத்தைக் கண்டறியும் முயற்சியானது அடியோட்டமாக உள்ளது’ என்று முருகேசபாண்டியன் ஒரு விமர்சனத்தில் சொன்னது சரிபோலத்தான் வாசித்தபின் தோன்றியது. இந்த நாவல் பாண்டிச்சேரி அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் பரிசொன்றுக்கு பிரபஞ்சனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, sex அதிகமாக இருக்கிறது என்று பம்மாத்து காரணம் சொல்லி விருது வழங்கப்படாது தடுக்கப்பட்டதாய் கேள்விப்பட்டிருந்தேன் (எனக்குத் தெரிந்த நண்பர் இதற்குக்காரணம் ரமேஷ்-பிரேமின் சாதியே முக்கிய காரணம் என்று கூறியிருந்தார். தகவல் சரியா தெரியவில்லை). சொல் என்றொரு சொல் நாவல் வாசித்தபின் எனக்குள் நிரம்பியிருந்த பல இடைவெளிகளை பிறகு ந.முருகேசபாண்டியன் பன்முகத்தில் இந்த நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனம் நிரப்பியிருந்தது. எப்படி ஒரு விமர்சனம் நேர்மையாகவும், பிரதியின் தவறவிடப்பட்ட பக்கங்களைக் காட்டவும் வேண்டும் என்பதை முதல் முதலாய் நான் அறிந்துகொண்டதும் ந.முருகேசபாண்டியனின் விமர்சனத்தின் மூலம்தான்.

முன்பு ஒரு காலத்தில் நூற்றெட்டுக்கிளிகள் இருந்தன ரமேஷ்-பிரேமின் சிறுகதைகளுள் ஒன்று. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்தக்கதையும், ஜெயமோகனின் பத்மவியூகமும் பலரால் பாராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தக்கதை போபால் சயனைட் வாயுக்கசிவை பின்புலமாககொண்டு எழுதப்பட்ட அற்புதமான கதை. மனிதர்களில் தூசிபடிவதுபோல மரணமும் படிவதை வாசிக்கும்போது கண்முன்னாலே அந்தப்பிரதி கொண்டுவந்திருந்தது. ரமேஷ்-பிரேமின் எந்தக்கட்டுரைத் தொகுப்பையும் நான் வாசிக்கவில்லை. எனினும் சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின் நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள் முக்கியமான தொகுப்பென்று வாசிந்தவரையில் அறிந்திருக்கின்றேன். இது தவிர இளையராஜா பற்றியும், கி.ராஜநாராயணன் பற்றியும் கட்டுரைத் தொகுப்பு அவர்கள் போட்டிருக்கின்றனர். இன்றையபொழுதில் உயிர்மையில் தொடர்ந்து பத்திகள் எழுதிக்கொண்டு வருவதை ஆர்வத்துடன் வாசித்து வருகின்றேன். அவற்றை வாசிக்கும்போது அவர்களது பரந்த வாசிப்பும், எழுதும் பொருள் பற்றிய ஆழ்ந்த அறிவும் இலகுவில் நம்மால் அடையாளங்காண முடியும். வேதத்தைப்பற்றி கட்டுடைத்து எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைக்கு அவர்கள் காட்டிய பொறுமை என்னைக் கவர்ந்திருந்தது. ‘வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என சம்ஸ்கிருதத்தில் உள்ள நூல்கள் ‘பிரதிகள்’ என்ற அளவில் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் ஆய்வு செய்யவும் உகந்தவை. அவை போதையும் லயிப்பும் கொண்ட மொழிபுகள். இதில் கருத்து மாறுபாடுகள் எஙகளுக்கு இல்லை. ஆனால்…’ என்று நிதானமாய் அந்தப் பிரதியைக் கட்டுடைக்கும் அவர்களின் முறைமை பிடித்திருந்தது.

இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் மற்றும் கறுப்பு வெள்ளைக் கவிதை என்று இரண்டு தொகுப்புக்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். அநேகமான இவர்களது கவிதைகள் நீண்டவை (கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த ஈழத்துக்கவிதைகளை நினைவுபடுபவை). ஆனாலும் வாசித்தபோது எனக்கு அலுப்புத்தட்டாதிருந்தது. கவிதையில் எதையாவது சொல்லித்தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இவர்களது கவிதைகள் எனக்குப் புரிய வைத்திருந்தன. சொல் என்றொரு சொல்லில் இடையிடையே பயன்படுத்தப்பட்ட கவிதைகள் கறுப்பு-வெள்ளைக் கவிதை தொகுப்பிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. உரைநடைக்கு அண்மையாகவும் ஆனால் கவிதைகளுக்குரிய சாயலோடு மொழியில் இவர்கள் செய்யும் புதுமைத்தனங்கள் அனுபவித்து வாசிக்கக்கூடியவை.
……
புலம்பெயர் சூழலில் அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து கெளரவித்து அனுப்பியபடி இருக்கின்றார்கள் (சும்மா இருக்கமுடியாது வாற சனங்களோடு என்னைபோன்றதுகள் கண்டதையும் கேட்டோ எழுதியோ அவர்களைக் ‘கஷ்டப்படுத்துவது’ வேறொரு புறம் இருக்கட்டும்). நானும், எனக்கு ஒரு 6/49யோ அல்லது super 7 விழுந்தால் சில படைப்பாளிகளை இங்கே அழைப்பதாய் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன். சோலைக்கிளி, யூமா வாசுகி, அமரதாஸ் என்ற பட்டியலில் ரமேஷ்-பிரேமையும் எப்போதோ சேர்ந்துவிட்டேன். இதை வாசிக்கும் அனைவரையும் எனக்கு மில்லியனில் lotto விழும்படி பிரார்த்திக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
…….
ரமேஷ்-பிரேமின் கறுப்பு வெள்ளைக் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

செம்பருத்தித் தீவு

சூழலின் கொலை வெளியில்
மொழியின் பதுங்கு குழிக்குள்
நிகழும் பிரசவம்
செவிக்கெட்டும் திசைகளில்
துப்பாக்கிகளின் தொடரோசையும் மீறி
தன்னுள் சுவாசம் இழைய வீறிடும்
ரத்தம் பிசுபிசுப்போடு கவிதை

ஆயுத முனைகளால் சுற்றி வளைக்கப்பட்டன
வார்த்தைகள்
கொல்வதை நேர்த்திமிக்கதாக்குவதில்
தொழில் நுடபப் பாங்கு
ஒரு கண ஒலித் தொடரில்
சரிந்தன சடலங்கள்

மூலையில் சருகுகள் மீது விரிக்கப்பட்ட துணியில்
நெளியும் பசுஞ்சதைப் படைப்பின்
வாயில் விரல் நுழைத்து
அரசிலைத் துளிரென நாவைக் கிள்ளியெடுத்து
குண்டு துளைக்குச் சிதையாத
தாயின் மறு முலையில்
அலறும் வாய் பொருத்தி மீளும்
வேறினத்து மொழி

0

கடல் நடுவில்
இதுவரை நான் தீண்டியறியாத
எனது உடம்பினோர் உறுப்பெனக்
குருதி வழியும் நீ

எனது கரையொதுங்கும்
உனது வலி
உன்னை நோக்கி விழையும்
எனது உணர்த்தல்களின் பாய்மரங்கள்
நடுக்கடலில் எரிகின்றன

வெட்டி வீசப்படும்
உனது கிளை விழுங்கி
எனது வலையில் சிக்கிய
மீன் வயிற்றில்
உனது மோதிர விரல்

0

பாதாள அறையில்
வாய்கள் தைக்கப்பட்டுச்
சுவரோடு பிணைக்கப்பட்ட
உடல்களின் சங்கிலியோசையை
மேற்பரப்பில் செவிபடிந்து கேட்கும்
குழந்தைகளுக்குப்
பூமி சிரிக்கிறது என்று
இனிச் சொல்ல முடியாது

இந்தத் தண்டனை வெளிக்கு அப்பால்
வேறு நிலத்திலிருந்து
மண் குடைந்து வளர்ந்து வரும் வேர்கள்
பாதாளச் சுவரைப் பொத்து
அறையினுள் படர்கின்றன

சுவரில் படரும் வேர்கள் தீண்டிச்
சிலிர்ப்புறும் உயிருள்ள உடல்களில்
பற்றிப்படர்ந்து
உயிர்ச்சாறு வேர்களின் வழியே
மரங்களை நோக்கிப் பாய்கிறது

வலையாய்ப் படர்ந்த வேர்கள்
புதர்ந்து புடைத்த உடல்களினுள்
சுழலும் கண்களைக் கண்டு
பிணந்தின்னும் எலிகள் மருளும்
பிணக்கிடங்கின்
எல்லை தாண்டிய வேர்களின் மரங்களில்
தையல் பிரிந்து வாய் மலரும் பூக்கள்
எனது வெளியில்
உனது விடுதலையைப் பாடுகிறது
எனது மொழியில்
உனது காதலைப் பாடுகிறது

இழக்கப்படாத
மொழி மட்டுமே
அகதிகளின் நாடு-எனச் சொல்லும்
தமிழ்ப்பூவில் அசைகிறது
உனது புலி நாக்கு

0

விழிப்பற்ற உறக்கத்தின்
கொடுங் கனவிலிருந்து மீண்ட
பெருவிழிப்பாய்
மீட்கப்பட்ட எனது மூதாதையர் நிலத்திற்கு
மீண்டும் வருகிறோம்

அரசமரத்தைச் சாட்சி வைத்துத்
திரும்பி வருவேன் என்று
ஆயுதங்களோடு மறைந்தவனின்
ஆண்டுகள் பலகழிய
அம்மரத்திலென் பெயர் செதுக்கி
நிலம் விட்டு நிலம் மாறி
அகதியாய் முற்றி உருமாறி
மீண்டும் ஊர் மீண்டேன்

நிலமும் வயோதிகத்தில் நோயுற்றிருக்கிறது
இருந்தவை எல்லாம் அழிந்துவிட்ட ஊரில்
இன்னும் உயிருடன் இருக்கிறது அரசமரம்
நெளிந்து நீண்டு வடிவம் சிதைந்த
என் பெயருக்குப் பக்கத்தில்
செதுக்கப்பட்டிருக்கிறது அவனது பெயர்
காலத்தில் என்றோ
என்னைத் தேடி வந்து போனதின் நிரூபணமாய்

கால காலமாய்ப்
பூமிக்குள் புதைந்த
உடம்புகளனைத்தையும் திரட்டிப்
பொம்மை செய்து
மரத்தடியில் வைக்கிறேன்
மழையில் உருவம் கரைவதற்குள்
அவன் வரவேண்டும் என்ற
பிரார்த்தனையோடு

0000000

ரமேஷ்-பிரேம்: சில குறிப்புக்கள்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 12:33 am

February 16, 2005

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 12:53 am

பூவாய் விழும்
பனியில்
குழந்தையாய் நடனமிடும் உன்னையும்
சாம்பர் பூசிய வானத்தையும்
இரசித்தபடி
பலபொழுதுகளில்
நானும் கரைந்திருக்கின்றேன்

கொடுங்காற்று வீச
உறைந்துபோய்
இலையுதிர்த்த மரம்போல
காத்திருக்கின்றேன்
பஸ்சிற்காய்
இன்று

தற்செயலாய்
எதிர்த்தெருவில் நீ.

புன்னகைப்பதா? வேண்டாமா?

இந்தமுறையும்
வானம் சாம்பராய்த்தானிருக்கிறது.

மார்கழி/04

February 14, 2005

காதல் கவிதைகள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 10:42 pm

முடிந்துபோன மாலைப்பொழுது
-பா.அகிலன்

பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது…
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மெளனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில்
வீழ்ந்தணைகிறது சூரியன்.

{பதுங்குகுழி நாட்கள்}

நினைவுள் மீளதல்
-தானா.விஷ்ணு

எப்போதுமே வந்து கொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய கனவு
யாருமே வந்து போகாத பெருவெளி
ஒன்றில் இருந்து

தூறல் நின்று போன
மழை இடைவெளி நேரம் ஒன்றில்
மீந்து வந்து கொண்டிருக்கும்
பாடல் ஓசையில்
எப்போதும் இல்லாதது போல்
உந்தன் நினைவு வரிகள்

நானும், நீயும் அடிக்கடி சந்தித்துப் பேசிய
புளிய மரத்தடி வேர்களைப் பற்றியபடி
தொடர்ந்தும் என் இருத்தலை
நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றேன்
என்னில் இருந்து மரணித்துப் போன
காலங்களை அசை போட்டுக் கொண்டு
எதில் இருந்துமே பிரிக்க முடியாத
ஒரு பூச்சிய வளைவுள் அமிழ்ந்து போகின்றேன்.

காரணங்கள் மறந்து போன இந்த காயங்களுக்கு
குறைந்த பட்சம் ஒரு காரணத்தினையேனும்
நினைவுபடுத்தும் முயற்சியோடு

{நினைவுள் மீள்தல்}

துயர்க்காலம்
-அமரதாஸ்

அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைந்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.

விண்ணில் இறைந்து கிடக்கும்
வெள்ளித்துகள்களில் ஒன்றாய்
எட்டாத் தொலைவில் நீ…

காற்றிடையே
அலைந்து கரையும் தீச்சுவாலையாய்
இனம்புரியாத்துயர் மனசோடு…

என் மனசு
கல்லாகிப் போனதாய் உணராதே
பிரிவுத்துயர்க்கடலில்
அமுங்கி அமுங்கி நிமிருகிறேன்.

காலமிதன் கோலமிது.

வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து.

{இயல்பினை அவாவுதல்}

அலைகளற்றிருக்கும் உனது கடலும் மூழ்கி தெறிக்கும் எனது அலைகளும்
-சித்தாந்தன்

அலைகளற்றிருக்கும் உனது கடல்.

காடும் நதியும் இல்லாத
அகன்ற வெறும் இரவில்
அலைகளால் வதைபடுகின்றேன் நான்.

ஆயிரம் யுகங்களையும்
தாண்டிவிரியும் நம் காதலை
பிரளயத்தின் தத்தளிப்பில்
கடாசி வீசிவிட்டிருக்கிறது காலம்.

யுகமலையின் முகடுகளில்
மோதித்தெறித்த நம் பாடலை
ஏதேதோ பறவைகளெல்லாம்
தம் மொழியாக்கியதை
எம்மையன்றி யார் அறியக்கூடும்.

நீ போய்விட்டாய்
மலைகள் எரிந்து சாம்பலாகிய
அதிசயம் கண்டு
கண்டவர்கள் மலைத்தார்கள்
உருகியுறைந்த பனியில்
நான் விறைத்துக்கிடந்தேன்

என் மிகப்பெரிய சுவாசவீச்சு
வானில் படர்ந்து கரைந்ததாய்
எல்லோரும் புலம்பினார்கள்
என் அலைகள் சூனியவேரில்
பிணையுண்டு அழிந்துபோனதாய்
எல்லோரும் அழுதார்கள்

அலைகளற்று இருக்கிறதா
உனது கடல்?

இரவுப்பட்சி விழித்துப்பாடும் கணங்களில்
தகர்ந்து பொடியாயினவா உனது மவுனம்

குரல் எழுப்பி அழுதுவிடாதே
உனது குரலில் தீப்பற்றி
எரிந்து சாம்பலாகக்கூடும் பிரபஞ்சம்.

{மூன்றாம் மனிதன் இதழ்-10}
………………..
இந்த நான்கு கவிஞர்களும் ஈழத்தில் இன்றும் போரின் நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். பா.அகிலன் ‘பதுங்குகுழி நாட்கள்’ என்ற தொகுப்பையும், சித்தாந்தன் ‘காலத்தின் புன்னகை’ என்ற தொகுப்பையும், தானா.விஷ்ணு ‘நினைவுள் மீள்தல்’ என்ற தொகுப்பையும், அமரதாஸ் ‘இயல்பினை அவாவுதல்’ என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈழத்திலிருந்து முகிழ்ந்த புதிய தலைமுறைப் படைப்பாளிகள். இவர்களது கவிதைகளைத் தொகுப்பாய் வாசிக்கும்போது, போர் சூழ்ந்த, அனைத்து வளங்களும் தடைப்பட்ட இருண்ட வாழ்க்கையிலிருந்தும் பல நல்ல கவிதைகளை (அவனை வெட்டடா இவனைக் கொத்தடா என்று எவரையும் உசுப்பேத்தாமல்) தமக்கான மொழிகளிலும் தனித்துவங்களுடன் புனைந்துள்ளார்கள் என்பது வியப்புத் தரக்கூடியது.

காதல் கவிதைகள்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 9:42 pm

February 13, 2005

FEBRUARY 14

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 9:33 pm

*கல்யாண்ஜியின் கவிதை

குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை
இவளுக்கும் இருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகின்ற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.

-கல்யாண்ஜி
{அந்நியமற்ற நதி}

*இந்தக் கவிதைக்கு தலைப்பில்லையெனினும் ஒரு குறிப்புக்காய் பெயரிட்டிருக்கின்றேன் (~டிசே)

நீங்குதலின்றி

இன்றிரவையும் தொலைவிலிருந்தபடி
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றாய்
வியர்வை ஊறும் உடலில்
மீந்திருக்குமுன் ஸ்பரிசங்களின்
தடயங்களை
நினைவுகளால் சுரண்டியபடி
சந்திப்பின் ஞாபகங்களைத்
தடவிக் கரைகிறேன்

பிசுபிசுக்கின்ற இரவை
உலர்த்தி மடிக்கிறது சுவாசம்
பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்
பிறகது
ஒரு புகைச்சித்திரமாய்
இருளின் வர்ணங்களில்
கூடிநிரம்புகிறது

பிறகு நிலவின் ஒளியில்
எரிமலைக் குழம்பாகி வழிந்தோடி
தெருவின் நிசப்பத்திற்குள் ஊடுருவிப்
படர்ந்து அதன் விதிகளை எரிகிறது
நிலவொளி
நனைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு பெய்த மழையையும்
எனது காதலையும்

-சல்மா
{பச்சை தேவதை}

மெளனப்பாதை

முதல் ரயில் பயணம்
வற்றாத அனுபவம் நிறைந்து
உன்னுடனான முதல் பயணமும்கூட
சக்கரம் வேகம் தூரம் காலம் பிரமிப்பு
என் முகம் ஜன்னலில் வெட்டும் காட்சிகளினூடாக
பால்ய காலத்தைப் பற்றிப் பேசிகொண்டுவருகின்றேன்
நாம் இறங்கும் இடம் வந்தவுடன்
என் மீது கோபமா
பயணம் முழுவதும் என்னிடம் பேசவில்லையே என்கிறாய்
உன்னுடன் தானே பேசிக்கொண்டிருந்தேன்
இதழ் பிரியாத சிரிப்புடன் கனவிலா என்கிறாய்
நீ அருகில் இல்லாச் சமயங்களிலும்
உன்னுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

காலம் வெளி அற்ற நம் உறவுகள்
சக்கரத்தின் ஓயாத உராய்வுகளோடு கிடக்கும்
நமது உடல்கள்

-மாலதி மைத்ரி
{சங்கராபரணி}

மரப்பாச்சிகள்

இரண்டாம் பருவத்தில்
காதலிக்கும் பெண்
கணவனைச் சுமந்தபடி காதலித்துக்கொண்டிருக்கின்றாள்.
இதுவே காதலிக்க ஏற்ற பருவம்
என்பது வெளிப்படையானது
விடலைப்பருவக் காதலில்
காதலுமில்லை
காமத்தின் ருசியுமில்லை
என்பது தெளிவாயிற்று.

காதலிக்கும் பருவத்தின்
புள்ளிகளை இணைத்து
குழந்தைகள் வரையும் கோலங்கள்
தளர்ந்தாட்டங்களில் சுருக்கங்களை
ஏற்படுத்திவிட்டன.
குழந்தைகளின் பாதியளவுக்கு மண்ணில் புதையுண்ட மரப்பாச்சிகள்
மழை முடிந்த தனிமையில்
உயிர்கொண்டு எழுகின்றன
உடலுக்குள்ளிருந்து முளைப்பது போல

கணவனின், சைக்கிள் பின்னிருக்கையில்
அல்லது இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
அமர்ந்து வெளியடித்துச் செல்கையில்
இரண்டாம் பருவத்தில் கதவுகளைத்
திறந்துவைக்கிறாள்.

முதல் பருவத்து காதலுக்கான
தடைகள் விவாதிக்கப்படுபவை
வெளிப்படையானவை
தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்
ஒத்துக்கொள்பவை.

இரண்டாம் பருவத்துக் காதலில்
காதலன் காத்திருப்பதில்லை
கடிதம் தருவதில்லை
காற்றில் புழுதிபோல - அவன்
பறந்து கொண்டிருக்கின்றான்.

நிமிர்ந்து முகம்பார்க்க இயலாத
காதலன் யாரென்றும் தெரியவில்லை.

-லக்ஷ்மி மணிவண்ணன்
{வீரலெட்சுமி}

காதல் விதை

சப்தங்களுக்குள் என் மெளனம்
அமுங்கிக் கிடந்தது
சப்தம் அடங்க என் மெளனம்
துருத்திக் கொண்டு நின்றது
நடமாடும் சலங்கைத் தாரை
என் மனவெளியின் அந்தரத்திலிருந்து கொட்டியது
நனைந்து கொண்டிருந்த நான்
முழ்கிக் கொண்டிருக்கின்றேன்
அடுத்த கணம்
எனக்கும் அப்பாலான வெற்றிடத்தில்
சப்தம் மட்டும் சுழித்துக் கொண்டோடும்
கரையில்
கறுப்பாய் படிந்திருக்கும் என் நிழலில்
புதைந்திருக்கும்
முளைப்பதற்கான உக்கிரத்துடன்
உன் முகம்

-ரமேஷ்-பிரேம்
{கறுப்பு-வெள்ளைக் கவிதை}

சின்னக்குறிப்பு:மனுஷ்ய புத்திரனின் கட்டுரைரையும் அவர் பதிந்துவருகின்ற கவிதைகளையும் வாசித்த பாதிப்பில் இவற்றை பதிகின்றேன். வாசிப்பவர்களுக்கு அவரவர்களின் முன்னாள், இன்னாள் ஞாபகங்கள் நினைவில் வரக்கூடும். அப்படிவரும்பட்சத்தில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு (நல்லதுXநல்லது அல்லாதது) நான் பொறுப்பற்றவன் என்பதையும் (என்னையும் சேர்த்து) இத்தால் குறித்துக்கொள்கின்றேன்.

Next Page »

Powered by WordPress