DISPASSIONATED DJ

July 24, 2008

அலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்

Filed under: Exile, V.V.Ganeshananthan, Love Marriage, Eelam, வாசிப்பு — டிசே தமிழன் @ 9:37 am

-வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் Love Marriageஐ முன்வைத்து-அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து எந்த ஏற்றமும்/உயர்ச்சியும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது. இவற்றையெல்லாம் விட, தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது ‘இவர்களைவிட அவர்களே பரவாயில்லை’ என்ற மனோநிலையும் வந்துவிடுகின்றது.

போர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் போரையும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைப் பார்ப்பதற்கும், அதனோடு சம்பந்தப்படாத பிறர் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது ப‌ல‌வேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. அவ்வாறான நம்பிக்கையுடன், இதுவரை ஈழத்துப் போர்ச்சூழல்/புலம்பெயர் வாழ்வு குறித்து கவனிக்கப்படாத புள்ளிகளையும் முன்னிறுத்தும் என்ற எண்ணத்தோடே வாசுகி. கணேசானந்தனின் Love Marraige புதினத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

இப்புதின‌ம், நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ள் (arranged marriages) ம‌ற்றும் காத‌ற் திரும‌ண‌ங்க‌ளை அல‌சுவ‌தை மைய‌மாக‌க் கொண்டு சுழ‌ன்றாலும், ஈழ‌த்த‌மிழ்ச் ச‌மூக‌ம் ப‌ற்றிய் ம‌திப்பீடுக‌ளும், போர்ச்சூழ‌ல்க‌ளும் உள்ள‌ட‌க்க‌ப்ப‌ட்ட‌தாய் ந‌க‌ர்கின்ற‌து. ஈழ‌த்திலிருந்து அமெரிக்காவுக்கு வ‌ந்து, காத‌லித்து திரும‌ண‌ஞ்செய்யும் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌ யாழினியால் இக்க‌தை/க‌தைக‌ள் சொல்ல‌ப்ப‌டுவ‌தாய் எழுத‌ப்ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இருப‌துக‌ளின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ளாக‌த்துக்குச் சென்றுகொண்டிருக்கும் யாழினியும் அவ‌ரின் பெற்றோரும், புற்றுநோயின் கார‌ண‌மாய் சிகிச்சைக்காய் க‌னடா வ‌ரும் மாம‌னாரின் (கும‌ர‌ன்) நிமித்த‌ம் க‌னடாவுக்கு குடிபெய‌ர்கின்றார்க‌ள். புற்றுநோய் முற்றி வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்திலிருக்கும் கும‌ர‌ன் விடுத‌லைப்புலிக‌ள் இய‌க்க‌த்தில் நீண்ட‌கால‌மாய் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌வ‌ர். நோயின் தீவிர‌ங்கார‌ண‌மாய் வெளிநாடு செல்ல‌ அவ‌ருக்கு இய‌க்க‌ம் அனும‌தி கொடுப்ப‌தாய்ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ரொறொண்டோவுக்கு த‌ன‌து ப‌தினெட்டு வ‌ய‌தான‌ ம‌க‌ள் ஜ‌ன‌னியின் துணையுட‌ன் கும‌ர‌ன் வ‌ருகின்றார். கும‌ர‌னின் நோயின் நிமித்த‌ம் உல‌கின் ப‌ல்வேறு திசைக‌ளிலிருக்கும் உற‌வின‌ர்க‌ள் ரொறொண்டோவில் கூடுகின்றார்க‌ள். போர் குறித்தோ, உற‌வுக‌ள் குறித்தோ அதிக‌ந்தெரியாது வ‌ள‌ர்ந்த‌ யாழினி, இந்நிக‌ழ்வின் மூல‌ம் த‌ன‌து அடையாள‌ங்க‌ளைத் தேட‌த்தொட‌ங்குகின்றார். யாழினியின் பெற்றோரின் நெருங்கிய‌ உற‌வுக‌ளின் கிளைக்க‌தைக‌ள், ப‌ல‌வேறு பின்ன‌ணிச் சூழ‌ல்க‌ளில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. புதின‌மும் மாறி மாறி க‌னடா, அமெரிக்கா, ஈழமென‌ வெவ்வேறு க‌தாமாந்தர்க‌ளைப் பின்தொட‌ர்ந்து அலைய‌த் தொட‌ங்குகின்ற‌து..

அமெரிக்காவில் பிற‌ந்து த‌மிழ்ச்ச‌மூக‌த்தோடு அவ்வ‌ள‌வு நெருங்கிப்ப‌ழ‌காத‌ யாழினிக்கு, அவ‌ர‌து தாய் முறையிலான‌ மாமாவும், புலம்பெய‌ர்ந்த‌ த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதிக‌மிருக்கும் ரொறொன்டோவும் அவ‌ரை ஒரு வெளியாளாக‌/அந்நிய‌ளாக‌ வித்தியாச‌ப்ப‌டுத்திக் காட்டுகின்ற‌து. த‌மிழ்ப்பெற்றோருக்குப் பிற‌ந்ததால் ம‌ட்டுமே த‌மிழ‌ராக‌ முடியுமா என்று இங்கே வ‌ள‌ரும் இர‌ண்டாந்த‌லைமுறைக்கு எழ‌க்கூடிய‌ கேள்விக‌ள் யாழினிக்குள்ளும் எழுகின்ற‌ன‌. மேலும் த‌மிழ் மொழி/க‌லாசார‌ம்/ப‌ண்பாடுக‌ளோடு வ‌ந்திற‌ங்கும் கும‌ர‌னின் ம‌க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தான் த‌மிழ‌ராய் இருப்ப‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌ங்க‌ளையும் கொண்டிருக்க‌வில்லையென‌ யாழினி இன்னும் குழ‌ம்புகின்றார் (உரையாடும் த‌மிழை ம‌ட்டும் விள‌ங்கிக்கொள்ப‌வ‌ராக‌ யாழினியின் பாத்திர‌ம் இங்கு சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து).

மேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி விரிவாக‌ அறியாத‌ யாழினிக்கு, போரை, விடுத‌லைப்புலிக‌ளை, அதில் முக்கிய‌ உறுப்பின‌ராய் இருந்த‌ த‌ன‌து மாம‌னாரை எப்ப‌டி விள‌ங்கிக்கொள்வ‌து/உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌. 74ம் ஆண்டு உல‌க‌த்த‌மிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஜூலைக் க‌ல‌வ‌ர‌ம், புலிக‌ளின் ச‌கோத‌ர‌ இய‌க்க‌ப் ப‌டுகொலைக‌ள் என்று எல்லாம் சில‌ கதைமாந்த‌ர்க‌ளினூடாக‌/ச‌ம்ப‌வ‌ங்க‌ளினூடாக‌ யாழினிக்குச் சொல்ல‌ப்ப‌ட்டிருந்தாலும் அவ‌ரால் போரின் ஊற்றுக்க‌ளை விரிவாக‌ விள‌ங்கிக்கொள்ள‌முடியாதிருக்கின்ற‌து. மேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌வொடுக்க‌ல் போராட்ட‌த்தை, அத‌ன் உண்மையான‌ கார‌ண‌ங்களை காண‌ ம‌றுத்து, மேலைத்தேய‌ பார்வையினுடாக‌ ‘ஆயுத‌ந்தூக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் கெட்ட‌வ‌ர்க‌ளே’ என்ற‌ எளிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பார்வைதான் யாழினிக்கும் இருக்கின்ற‌தோ என்று அய்ய‌முற‌க்கூடிய‌ அள‌வுக்கு யாழியின் பாத்திர‌ம் தெளிவின்மையாய்ப் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து அதேவேளை புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையில் அநேக‌ருக்கு ஏற்ப‌ட‌க்கூடிய‌ ம‌னோநிலையாக‌வும் இதை எடுத்துக்கொள்ளாலாம்.

தொட‌க்க‌த்தில் யாழினி த‌ன‌து மாம‌ன் கும‌ர‌னோடு அந்நிய‌ப்ப‌ட்டு நின்றாலும், கும‌ர‌னின் இறுதிக்கால‌த்தில் அவ‌ருக்குப் பிரிய‌மான‌ ம‌ரும‌க‌ளாக‌ மாறிவிடுகின்றார். போர்/புலி இன்ன‌பிற‌ நியாய‌த்த‌ராசுக‌ளின் எடைபோட‌ல்க‌ளுக்கு அப்பால் ம‌னிதாபிமான‌ம் யாழினியை கும‌ர‌னோடு நெருக்க‌மாக்கிவிடுகின்ற‌து. கும‌ர‌னின் ம‌ர‌ண‌த்திற்குப் பின், கும‌ர‌னின் ம‌க‌ள் க‌னடாவிலிருக்கும் புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்வ‌தோடு புதின‌ம் முடிவ‌டைகின்ற‌து (இந்ந‌ப‌ர், ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ வ‌ழியில் ஏதோவொரு தொழில் செய்து நிதி சேக‌ரித்து புலிக‌ளுக்கு அனுப்புகின்றார் என்ற‌ குறிப்பு இந்நாவலில் வ‌ருகின்ற‌து).

ஜ‌ன‌னியின் திரும‌ண‌த்தை முன்வைத்து த‌மிழ‌ரின் இந்துக்க‌ளின் ச‌ட‌ங்குமுறைக‌ள் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. நாவ‌ல் முடியும்போது த‌மிழ்ச் ச‌மூக‌த்தில் ந‌ட‌க்கும் திரும‌ண‌ங்க‌ள் அது நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மானால் என்ன‌ அல்ல‌து காத‌ற்திரும‌ண‌மானால் என்ன‌ இர‌ண்டும் ஒன்றோடு ஒன்று தொட‌ர்புப‌ட்ட சிக்க‌லான‌ ஒரு முறைபோல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்ற‌ன. த‌னித்துவ‌மான‌ வித்தியாச‌ங்க‌ளுட‌ன் காத‌ற்திரும‌ண‌மோ அல்ல‌து நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌மோ இல்லையென்ற‌ வாசிப்பையே ப‌டைப்பாளியும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌ர‌ முய‌ற்சிக்கின்றாரென‌த்தான் சொல்ல‌வேண்டியிருக்கின்ற‌து; அதுவே ய‌தார்த்த‌மும் கூட‌.

புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையை முன்னிலைப்ப‌டுத்தி எழுத‌ப்ப‌டும் நாவ‌லென்ற‌ வ‌கையில் மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌னேயே இந்நாவ‌லை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். கால‌ங்கால‌மாய் க‌ட்டிக்காக்க‌ப்ப‌டும் க‌லாசார‌/ப‌ண்பாட்டுத்த‌ள‌ங்க‌ளுக்குள் இருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் ம‌ன‌த்தடைக‌ளோ, போர்ச்சூழ‌லுக்குளிருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் த‌னிப்ப‌ட்ட‌ சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளின் நிமித்த‌ம் வ‌ரும் ச‌ம‌ர‌ச‌ங்க‌ளோ இல்லாது, மிக‌ச்சுத‌ந்திர‌மாய் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் பேச‌ப்ப‌டக்கூடிய‌ வெளியில் விரிய‌க்கூடிய‌ சாத்திய‌ங்க‌ளைக்கொண்ட‌ இப்புதின‌ம், இறுதியில் இந்து ச‌ம‌ய‌ச்ச‌ட‌ங்குக‌ளை முன்னிறுத்தி திரும‌ண‌ங்க‌ளுக்கு அதிக‌ம் விள‌க்க‌ம் கொடுப்ப‌தோடு ம‌ட்டும் நிற்கும்போது த‌ன‌க்கான‌ ச‌ரிவைத்தானே தேடிக்கொள்கின்ற‌து.. போர் குறித்து இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டும் செய்திக‌ள் கூட‌ ஒரு க‌ட்டுரையாக‌ எங்கேயும் எடுக்க‌ப்ப‌ட‌க்கூடிய‌ விட‌யங்க‌ள் என்றள‌வில் அவையும் ஒரு எல்லைக்க‌ப்பால் வாச‌க‌ருக்கு ‘வித்தியாச‌மாய்’ எதையும் த‌ரவில்லை என‌க்குறிப்பிட‌ வேண்டியிருக்கின்ற‌து. மூன்றாம் ந‌ப‌ராய்/அந்நிய‌ராய், ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்தும் அத‌ன்பார‌தூர‌மான‌ விளைவுக‌ள் குறித்தும் ஒரு நேர்மையான‌ பார்வையை ப‌டைப்பாளி, யாழினியினுடாக‌ முன்வைப்பார் என்று எதிர்பார்த்து தொட‌ர்ந்து வாசிக்கும்போது அலுப்பே மிஞ்சுகின்ற‌து. இன்னுஞ் சொல்ல‌ப்போனால், புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறை ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்து என்ன‌வித‌மான‌ பார்வைக‌ளைக் கொண்டிருக்கின்ற‌து என்ற‌றிய‌க்கூடிய‌ வெளி கூட‌ இப்புதின‌த்தில் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டாத‌து முக்கிய‌ ப‌ல‌வீன‌மென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து.

இந்நாவ‌லில் ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ அள‌வுக்கு க‌தாபாத்திர‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌வோ என்று ம‌ய‌க்க‌ம் வ‌ரும‌ள‌வுக்கு நிறைய‌ப் பாத்திர‌ங்க‌ள் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டாலும், எந்த‌வொரு பாத்திர‌மும் வாசிப்ப‌வ‌ரை அதிக‌ம் பாதிப்ப‌தாய்க் காண‌முடிய‌வில்லை. முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்ற‌ பாத்திர‌த்திற்குக் கொடுக்க‌ப்ப‌டும் அடையாள‌த்தினூடாக‌ ஈழ‌த்தில் சில‌ தசாப்த‌கால‌ போர்ச்சூழ‌ல் வெளிக்கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டிருக்க‌லாம் அல்ல‌து போர்ச்சூழ‌லில் இற‌ந்துபோன‌ கும‌ர‌னின் துணைவியை முன்வைத்து ஏன் ம‌க்க‌ள் அப்ப‌டியாக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள் போன்ற‌ புள்ளிக‌ளிலாவ‌து அதிக‌ம் க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆக‌க்குறைந்த‌து, மேற்க‌த்தைய‌ நாடுக‌ள் எப்ப‌டி ஆபிரிக்கா/ஆசிய‌ நாடுக‌ளில் ம‌னித‌வுயிர்க‌ள் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் அழியும்போது, -த‌ம‌க்கு ஏதும் ந‌ன்மை ஏற்ப‌டாத‌வ‌ரை- உள்நுழையாது அமைதியாக‌ பார்த்துக்கொண்டிருப்ப‌த‌ன் ‘அட‌ர்த்தியான மெளன‌ம்’ குறித்தாவ‌து கேள்விக‌ளை ப‌டைப்பாளி எழுப்பியிருக்க‌லாம்.

த‌மிழ்ச்ச‌மூக‌த்தின் திரும‌ண‌ முறைக‌ளைப் ப‌ற்றி விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட‌ முய‌லும் ஒரு புதின‌த்தில் இவ்வாறான‌ பிற‌ அர‌சிய‌ல்/ச‌மூக‌ப்புள்ளிக‌ள் க‌ட்டாய‌ம் பேச‌ப்ப‌ட‌வேண்டுமா என்ற‌ கேள்விக‌ள் ந‌ம‌க்குள் எழ‌க்கூடும். உண்மைதான், ஆனால் திரும‌ண‌ம்/ப‌ராம்ப‌ரிய‌ச் ச‌ட‌ங்குக‌ள்/ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், இய‌க்க‌ம்/ ஈழ‌த்தில் ந‌டைபெறும் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி இந்நாவ‌லில் குறிப்பிட்டிருக்க‌த்தேவையில்லை; முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்கின்ற‌ விடுத‌லைப்புலியின் பாத்திர‌ம் இப்புதின‌த்தில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ அவ‌சிய‌மேயிருந்திருக்காது. ஈழ‌ப்போராட்ட‌ச்சூழ‌ல் விரிவாக‌ பேச‌ப்படாது -தொட்டுக்கொள்ள‌ ஊறுகாய் மாதிரி- த‌மிழ‌ர் போராட்ட‌ம் இப்புதின‌த்தில் பாவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், அது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் போராட்ட‌த்தை முன்வைத்து வியாபார‌ம் செய்ப‌வ‌ர்க‌ளைப் போன்றே, த‌ன‌து புதின‌த்தையும் இப்ப‌டைப்பாளி மேற்க‌த்தைய‌ ச‌மூக‌த்திற்கு விற்க‌ப்பிரிய‌ப்ப‌டுகின்றாரோவென‌ச் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கும். திரும‌ண‌த்தை விள‌க்க‌ப்ப‌டுத்துகின்றேன் என்று ம‌ண‌வ‌றைக்கு முன்னிற்கும் ஐ‌ய‌ர் போட்டிருக்கும் பூணூலிருந்து தாலி இன்னபிற‌ வ‌ரை எல்லாமே விரிவாக‌ எழுதப‌ப‌ட்டிருப்ப‌து வாசிக்கும்போது மிகுந்த‌ அலுப்பைத் த‌ருகின்ற‌து. இங்குகூட‌ இவ்வாறான‌, நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ளில் சாதி என்ப‌து மிக‌ப்பெரும் ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து என்ப‌தைக்கூட‌ ப‌டைப்பாளி ம‌ற‌ந்துவிடுகின்றார். புலம்பெய‌ர்ந்த‌ சூழ‌லில் சாதி ம‌ட்டுமில்லை, சீத‌ன‌ம் இன்ன‌பிற‌வும் எப்ப‌டி இங்கு பிற‌ந்த‌ அடுத்த‌ த‌லைமுறைக்குள்ளும் காவ‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ எந்த‌க்குறிப்பையும் இதில் காண‌க்கிடைக்க‌வில்லை. உற‌வுக‌ளுக்குள் ந‌ட‌க்கும் (நிச்ச‌யிக்க‌ப்ப‌டும்)திரும‌ண‌ங்க‌ள் என்ப‌தே சாதியைக் க‌ட்டிக்காப்ப‌த‌ற்கேயென்ற‌ எளிய‌ அர‌சிய‌ல் ஏன் ம‌றைக்க‌ப்ப‌ட‌வேண்டும்?

நான் அறிந்த‌வ‌கையிலேயே இந்நாவ‌லில் நிறைய‌ த‌க‌வ‌ற்பிழைக‌ள் இருக்கின்ற‌ன‌. உல‌க‌த் த‌மிழாராய்ச்சி மாநாட்டில் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌ட்டுத்தான் இற‌ந்தார்க‌ள் என்ற‌ செய்தி இப்புதின‌த்தில் வ‌ருகின்ற‌து (பொலிசார் கூட்ட‌த்தைக் க‌லைக்க‌ மேலே சுட்ட‌போது மின்சார‌க் க‌ம்பிக‌ள் அறுந்தே பொதுமக்க‌ள் இற‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌தே ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு). யாழ்ப்பாண‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் பொறிய‌ல் பீட‌மிருப்ப‌தாய் அடிக்க‌டி சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌து இன்னொரு த‌க‌வ‌ற்பிழை (கும‌ர‌ன் ஒரு பொறிய‌ல் பீட‌ மாண‌வனாயிருந்து இய‌க்க‌த்தில் சேர்கின்றார்). மேலும், திரும‌ண‌த்தில் கூற‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம், ச‌ம‌ஸ்கிருத‌த்தில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து என்று விப‌ரிக்க‌ப்ப‌டும்போது ச‌மஸ்கிருத‌மான‌து, த‌மிழை விட‌ ஆதியான‌து என்ற‌வ‌கையில் எழுத‌ப்ப‌டுகின்ற‌து. இவ‌ற்றை விட‌ முக்கிய‌மாய் இந்நாவ‌லின் மிக‌க்குழ‌ப்ப‌மாய் இருப்ப‌து, கும‌ர‌ன் இயக்கத்தில் இருக்கின்றார் என்று எல்லோருக்கும் அறிவித்த‌ப‌டியே ரொறொண்டோவுக்கு வ‌ருவ‌து. ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டையில் கும‌ர‌னுக்கு க‌னடா வ‌ர‌ அனும‌தி கொடுக்க‌ப்ப‌டுவ‌தாய் புதின‌த்தில் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌னடாவின் குடிவ‌ர‌வுக் கொள்கைக‌ளின்ப‌டி அப்ப‌டியொருவ‌ர் இப்ப‌டி அறிவித்துக்கொண்டு வ‌ருவ‌த‌ற்கான எந்த‌ச் சாத்திய‌ப்பாடும் இருப்பதாய்த் தெரிய‌வில்லை. ‘க‌னடாவில் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருமே புலிக‌ள்’ என்ற‌ரீதியில் பாராளும‌ன்ற‌த்தில் உள‌றிக்கொட்டிக்கொண்டிருக்கும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள், ஒருவ‌ர் புலியாக‌ இருந்த‌வ‌ர் என்று அறிவித்துக்கொண்டு வ‌ரும்போது,’ க‌னடாவில் தீவிர‌வாதிக‌ள் ஊடுருவிவிட்டார்க‌ள், தேச‌த்திற்கே ஆப‌த்து, நாடாளும‌ன்ற‌த்தையே க‌லை’யென்று அல‌ற‌ப்போகின்றார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்திலேயே கொழும்பில் வைத்து விஸா கொடுக்க‌வே, உரிய‌ அதிகாரிக‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தே யதார்த்த‌மாயிருக்கும்.. அதுவும் கும‌ர‌ன் புலியாக‌வே ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை இருக்கின்றார் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து; ம‌க‌ளும் போராளியாக‌ இருந்திருக்க‌லாம் என்கின்ற‌ மாதிரியான‌ வாசிப்பும் இந்நாவ‌லினூடு வ‌ருகின்ற‌து. கும‌ர‌னும், ஜ‌ன‌னியும் க‌னடா வ‌ருவ‌த‌ற்கு ஏதாவ‌து அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்து (அல்ல‌து உய‌ர்ம‌ட்ட‌த்தில் மிகுந்த‌ செல்வாக்கு இருந்து) விஸா குத்திக் கொடுக்க‌ப்ப‌ட்டிருந்தால‌ன்றி இவ்வாறு ஒரு நிக‌ழ்வு ந‌ட‌த்த‌ல் ய‌தார்த்த‌த்தில் அவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லை (ஈழ‌த்திலிருந்த‌ சில‌ த‌மிழ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க்கே, புலிக‌ளோடு தொட‌ர்பிருக்கின்ற‌தென‌க் கார‌ண‌ங்காட்டி க‌னடாவுக்கு வ‌ர‌ விஸா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ உதார‌ண‌ங்க‌ளையும் நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம்).

இன்று மிக‌ச் சிக்க‌லாக‌வும், ப‌ல‌வீன‌மாக‌வும் போய்க்கொண்டிருக்கும் த‌மிழ‌ரின் போராட்ட‌த்தை, எல்லாத் த‌ர‌ப்புக‌ளும் பிழை செய்கின்ற‌ன‌ என்று எளிதாக‌க் கூறித் த‌ப்பியோட‌ முடியாது. தொட‌க்க‌ கால‌த்தில் த‌மிழ‌ரின் உரிமைக்காய் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்திற்கு எவ்வ‌ள‌வு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளிலிருந்த‌தோ அந்த‌ப் பிர‌ச்சினைக‌ள் இன்ன‌மும் தீர்க்க‌ப்ப‌டாம‌லேயே இருப்ப‌தைச் சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்திற்கோ, உல‌க‌நாடுக‌ளுக்கோ ம‌ட்டுமில்லாது, வெற்றி/தோல்விக‌ளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூக‌லிக்கும் ‘புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கும்’ நினைவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து. இந்நாவ‌லில் த‌மிழ‌ர் த‌ர‌ப்பின் தீர்க்க‌ப்ப‌டாத‌ பிர‌ச்சினைக‌ளின் ஆழ‌ங்க‌ளை அல‌சாம‌ல், பொதுப்ப‌டையாக‌/எளிமையாக‌ அனைவ‌ரும் த‌வ‌று செய்கின்றார்க‌ள் என்று எழுதுவ‌து/பேசுவ‌து, ஈழ‌ப்போராட்ட‌ம் குறித்து அவ்வ‌ள‌வு அறியாத‌வ‌ர்க‌ளுக்கு த‌வ‌றான‌ நிலைப்பாட்டை விதைக்க‌க்கூடியதாக‌விருக்கும். முக்கியமாய் த‌மிழ‌ல்லாத‌, ஆங்கில‌ம் போன்ற‌ பிற‌ மொழிக‌ளில் நேர‌டியாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் இவை குறித்து அதிக‌ க‌வ‌ன‌த்தோடு, க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றை ஆழ‌மாய் அறிந்துகொள்வ‌தினூடே நிதான‌மாய் எழுத‌வேண்டியிருக்கிற‌து.

இப்புதின‌த்தின் தோற்றுவாய் இப்ப‌டைப்பாளி த‌ன‌து முதுமாணிப் ப‌ட்ட‌த்துக்காய் எழுதிய‌தையே நாவ‌லாக்கிய‌தாய் புதின‌த்தின் பின்னட்டை கூறுகின்ற‌து. ஆய்வு என்ப‌தே நிறைந்த‌ த‌ர‌வுக‌ளையும், த‌க‌வ‌ற் திர‌ட்டுக்க‌ளையும், ப‌ன்முக‌ப்பார்வைக‌ளையும் உள்ள‌ட‌க்கி எழுத‌ப்ப‌ட‌வேண்டிய‌து. ஐய‌ர், பூணூல் ம‌ண‌வ‌றை, கூறைப்புடைவை,க‌ன்னிகா தான‌ம் என்ப‌வ‌ற்றுக்கு நிறைந்த‌ ஆய்வுக‌ள் செய்து விப‌ரிக்கும் ப‌டைப்பாளி, போர்/போராளிக‌ள்/போராட்ட‌ம் போன்ற‌வ‌ற்றுக்கு அதிக‌ விள‌க்க‌ம் கொடுத்து விரிவாக‌ எதுவும் அதிக‌ம் எழுத‌த் தேவையில்லை என்று நினைத்தாரோ என்ன‌வோ தெரிய‌வில்லை. இவ்வாறான‌ குறைக‌ளுக்கும் அப்பால், ச‌ம‌கால‌ப் பிர‌ச்சினைக‌ளையும் உள்ளட‌க்கிய‌த‌ற்காய் - ப‌ல‌வீன‌ங்க‌ளுட‌ன் என்றாலும் இய‌ன்ற‌ளவு உண்மைக‌ளை ம‌றைக்காம‌ல் எல்லாத் த‌ர‌ப்புக‌ளினதும் அர‌சிய‌ல் ப‌ல‌வீன‌ங்க‌ளைப் ப‌திவு செய்த‌ முய‌ன்ற‌மைக்காய்- ப‌டைப்பாளியைப் பாராட்ட‌லாம். க‌தையின் ந‌க‌ர்வோட்ட‌த்தை ச‌ட‌ங்குக‌ள் என்ப‌வ‌ற்றுக்கு விள‌க்க‌ம் கொடுப்ப‌து சில‌ இட‌ங்க‌ளில் த‌டைசெய்து வாசிப்பிற்கு அலுப்புத் த‌ந்தாலும், த‌மிழ்ச்சூழ‌லில் ஒரு பெண் முக்கிய‌ பாத்திர‌மாக்க‌ப்ப‌ட்டு ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியவொன்று. ஆனால் இர‌ண்டாந்த‌லைமுறை புல‌ம்பெய‌ர்ந்த‌ ச‌மூக‌த்திட‌மிருந்து, ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌/விவாதிக்க‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைய‌ல்ல‌, வித்தியாச‌மான‌ கோண‌ங்க‌ளில், புதிய‌ உரையாட‌ல் புள்ளிக‌ளை எதிர்பார்த்து வாசிக்க‌த்தொட‌ங்கும் ஒரு வாச‌க‌ருக்கு இப்புதின‌த்திலிருந்து எடுத்துக்கொள்ள‌/நினைவூட்டிக்கொள்ள‌ அதிக‌ம் எதுவுமில்லையென‌த்தான் சொல்ல‌ வேண்டியிருக்கிற‌து.

குறிப்பு: இப்புதின‌த்தின் ப‌டைப்பாளியான‌ வாசுகி க‌ணேசான‌ந்த‌ன், 70க‌ளில் அமெரிக்காவுக்கு குடிபெய‌ர்ந்த‌ ஈழ‌த்துப் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர். ப‌ல்வேறு ப‌த்திரிகைக‌ள்/ச‌ஞ்சிகைக‌ளுக்கு க‌ட்டுரைக‌ள்/செய்திக‌ள் எழுதிக் கொடுக்கும் ஒரு ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருக்கும் இவ‌ர் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சிக்கின்றார். (வைக‌றைக்காய் எழுதிய‌து…)
ப‌ட‌ங்க‌ள்: 1 & 2

June 8, 2008

யாமம்

Filed under: வாசிப்பு, Uncategorized — டிசே தமிழன் @ 11:52 am

-எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை முன்வைத்து-

அவிழ்க்க‌ முடியாத‌ புதிர்க‌ளும், சிக்க‌ல்க‌ளும் நிறைந்த‌ ம‌ர்ம‌ங்க‌ள் பெருகும் வெளியாக‌த்தான் ஒவ்வொருவ‌ரின் வாழ்க்கையும் இருக்கின்ற‌து. வாழ்த‌ல்/வாழ்க்கையின் அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருக்குமென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கி முகிழ்ந்த‌ இருத்த‌லிய‌மும், த‌ன‌க்கான‌ புத‌ர் அடுக்குக‌ளில் சிக்கிக்கொண்டு இன்ன‌மும் கேள்வியை ஆழ‌மாக்கிய‌தே த‌விர‌ தெளிவான ப‌தில்களைக்காணாது த‌விர்த்துக்கொண்டுதான் இருக்கின்ற‌து. உல‌கின் ‘எல்லாப் பிர‌ச்சினைக‌ளும் தீர்ந்தாலும்’ என்றுமே இருக்க‌க்கூடிய‌ பிர‌ச்சினையாக‌ இருத்த‌லிய‌ம் குறித்த‌ தேட‌ல்க‌ள் ஊற்றைப்போல‌ பெருகிக் கொண்டிருக்கும்போலத்தான் தோன்றுகின்ற‌து.வெவ்வேறுப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் சில‌ரின் வாழ்வையும் அவ‌ர்க‌ளின் திசை மாறும் விருப்புக்க‌ளையும்/குணாதிச‌யங்க‌ளையும் பின் தொட‌ர்ந்த‌ப‌டி இருக்கின்ற‌து யாம‌ம் நாவ‌ல். யாம‌ம் என்கின்ற‌ அத்த‌ரின் ம‌ண‌மும், இர‌வும் இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்து மாந்த‌ர்க‌ளுக்குள்ளும் க‌சிந்த‌ப‌டியிருக்கின்ற‌ன. சதாசிவ‌ம் ப‌ண்டார‌ம் நாயொன்றின் பின் அலைவ‌து நேர‌டிச் ச‌ம்ப‌வ‌மாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டாலும், உண்மையில் இப்புதின‌த்தில் உள்ள‌ எல்லாப் பாத்திர‌ங்க‌ளும் ஏதோ ஒன்றை உருவ‌கித்து அதைத் தேடி ‍ -நாயின் பின்னால் ப‌ண்டார‌ம் அலைவ‌துபோல‌த்தான்‍- வாழ்வு முழுதும் அலைந்து கொண்டிருக்கின்றார்க‌ள். ச‌தாசிவ‌ம் ப‌ண்டார‌த்தின் ம‌ன‌து அடிக்க‌டி அலை பாய்ந்தாலும், நாயின் பின்னால் ம‌ட்டுமே பின் தொட‌ர்வ‌து என்ப‌தில் தெளிவாக‌ ஒவ்வொருபொழுதிலும் இருப்ப‌துபோல‌, இந்நாவ‌லின் பிற‌ மாந்த‌ர்க‌ளால் முடிவ‌தில்லை. ஆத‌னால் அவ‌ர்க‌ள் எத‌ற்காக‌வோ தொட‌ங்கும் த‌ம் ப‌ய‌ண‌ங்க‌ளைத் திசை திருப்ப‌ வேண்டிய‌தாகிப் போகின்ற‌து; அவ‌ல‌ங்க‌ளுக்குள்ளும், துரோக‌ங்க‌ளுக்குள்ளும், க‌ண்ணீருக்குள்ளும் சிக்கி மீள‌முடியாத‌ புதிர்களின் சுழ‌ல்களுக்குள் அலைக்க‌ழிந்தபடியிருக்கின்றார்கள்.

அப்துல் க‌ரீம் ரோஜாவின் இத‌ழ்களைக் காய்ச்சி வ‌டிக்கும் அத்த‌ருக்கு வெள்ளைக்கார‌ர்க‌ள் முத‌ல் உள்ளூர்வாசிக‌ள்வ‌ரை வாடிக்கையாள‌ராக‌ இருக்கின்றார்க‌ள். த‌லைமுறை த‌லைமுறையாக‌ ஆண் ச‌ந்த‌திக‌ளால் கைமாறிக்கொண்டிருக்கும் அத்த‌ர் செய்யும் தொழில் இர‌க‌சிய‌ம் அப்துல் க‌ரீமிற்கு ஆண் ச‌ந்த‌தி இல்லாத‌தோடு அழிந்தும் போய்விடுகின்ற‌து. அத்த‌ரை உட‌லில் பூசிய‌வுட‌ன் உட‌ல் ஒரு விநோத‌மான‌ நிலையை அடையவும்செய்கின்றது. காம‌த்தின் அரும்புக‌ள் ரோஜாவின் இத‌ழ்க‌ளைப் போல‌ மேனியெங்கும் விரிய‌த்தொட‌ங்கிவிடுகின்ற‌து. அத்த‌ரின் ந‌றும‌ண‌ம் உட‌ல்க‌ளை ஒரு கொண்டாட்ட‌ ம‌னோநிலைக்கு கொண்டு வ‌ந்து ம‌ர்மம் நிறைந்த முடிவுறாத‌ ஆட்ட‌ங்க‌ளை கிளர்ச்சியுடன் ஆடச்செய்கின்றது.மூன்று ம‌னைவிக‌ளிலிருந்தும்…, அத்த‌ரின் துணையிருந்தும் கூட‌…, அப்துல் க‌ரீமால் தன‌க்குப் பிற‌கு ஒரு ஆண் ச‌ந்த‌தியை உருவாக்க‌ முடியாது போகின்ற‌து. அதுவே க‌வ‌லையாக‌வும் அலுப்பாக‌வும் மாற‌ த‌ன‌து ம‌னைவிக‌ளின் மீது க‌விழ‌, வெளியாள் ஒருவ‌ரால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் குதிரைக‌ளை வைத்து ஆடும் சூதாட்ட‌த்தில் த‌ன்னைக் க‌ரைத்துக்கொள்கின்றார். எல்லா எண்ண‌ங்க‌ளுமே ஒரு க‌ட்ட‌த்தில் குதிரைக‌ளாக‌வும், சூதாட்டமாக‌வும் மாறிப்போகையில் க‌ட‌ன் நிறைந்து க‌ரீம், வீட்டில் ஒருவ‌ருக்கும் தெரியாம‌ல் ஒருநாள் காணாம‌ற்போய்விடுகின்றார். அதனால் செல்வ‌ச் செழிப்பிலிருந்த‌ மூன்று பெண்களுக்கும் த‌ம‌க்கான‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளோடு த‌ங்க‌ளைத் தாங்க‌ளே பார்க்க‌ வேண்டியிருக்கின்ற‌து. சாம்பிராணித் தூள் செய்கின்றார்க‌ள், மீன் விற்கின்றார்க‌ள், கொல‌ரா வ‌ந்து க‌ரீமின் மூத்த‌ ம‌னைவி ர‌ஹ்மானியை காவுகொள்ள‌, உப்பு அக‌ழ‌ நெடுந்தொலைவுக்கு உப்ப‌ள‌த்துக்கும் இப்பெண்க‌ள் ப‌ய‌ணிக்க‌வும் செய்கின்றார்க‌ள். க‌ரீம் என்ற‌ ஒருவ‌ரின் வாழ்வுக்காய் ஓரிட‌த்தில் இணையும் இப்பெண்க‌ள் தாங்க‌ள் ப‌க‌ல்வேளைக‌ளில் ஆடுகின்ற‌ சோழியாட்ட‌த்தின் காய்க‌ளைப் போல‌ பின் திசைக்கொன்றாய் சித‌றிப்போகின்றார்க‌ள்.

ம‌ற்றொரு திசையில், ப‌த்ர‌கிரி, திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் என்ற‌ ச‌கோத‌ர‌ர்க‌ளைச் சுற்றிக் க‌தை ந‌க‌ர்கின்ற‌து. த‌ம‌து இளைய‌வ‌ய‌தில் த‌ம் தாயை ப‌றிகொடுத்த‌ இச்ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ங்கைச் சித்தியின் மூல‌ம் வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். ப‌த்ரகிரி, இந்தியாவில் முத‌ன் முத‌லில் நிலஅள‌வை அறிமுக‌ப்ப‌டுத்திய‌ லாம்ட‌ன் குழுவில் சேர்ந்திய‌ங்க‌, க‌ணித‌த்தில் ந‌ன்கு தேர்ச்சி பெற்று விள‌ங்கும் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் இல‌ண‌ட‌னுக்கு மேற்ப‌டிப்புக்காய் ப‌ய‌ணிக்கிறார். அக்கால‌ப் ப‌குதியில் த‌ன‌து ம‌னைவி தைய‌ல்நாய‌கியை அண்ண‌ன் வீட்டில் விட்டுவிட்டு திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் க‌ப்ப‌லேறுகின்றார். தொட‌க்க‌த்தில் மிக‌ அந்நியோன்னிய‌மாக‌ ப‌த்ர‌கிரியின் ம‌னைவி விசாலாட்சியும், தைய‌ல்நாய‌கியும் இருந்தாலும் -ப‌த்ர‌கிரிக்கும், விசாலாட்சிக்கும் இடையில் உட‌லுற‌வு சார்ந்த‌ புது உற‌வு முகிழ்கையில்- வெறுப்பு அவ‌ர்க‌ளுக்கிடையில் ஒரு அழையா விருந்தாளியாக‌ வ‌ந்துவிடுகின்ற‌து. ஒரு குடிகார‌னாக‌, சுக‌போகியாக‌ இல‌ண்ட‌னுக்குப் போகும்வழியில் க‌ப்ப‌லில் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் ச‌ந்திக்கின்ற‌ ச‌ற்குண‌ம் கால‌ப்போக்கில் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளுக்காய் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு, இறுதியில் ஜெயிலுக்குள் அடைப‌டுகின்றான். அதேவேளை இல‌ண‌ட‌ன் த‌ன‌க்குரிய‌ ந‌க‌ர‌ல்ல‌வெனத் தொடக்கத்தில் நினைக்கும் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் பின்னர் இல‌ண்ட‌ன் சீமாட்டி உட்ப‌ட்ட‌ ப‌டித்த‌/செல்வ‌ந்த‌ வ‌ர்க்க‌த்தின‌ரிடையே த‌ன்னையும் அவ‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ மாற்ற‌ முய‌ற்சிக்கின்றான்.

ப‌த்ர‌கிரிக்கும், அவ‌ர‌து த‌ம்பியின் ம‌னைவியான‌ தைய‌ல்நாய‌கிக்கும் இருக்கும் ‘உற‌வு’ தெரிந்து, ப‌த்ர‌கிரியின் ம‌னைவி பதரகிரியைக் கைவிட்டுச் சொந்த‌ ஊருக்குத் திரும்புகின்றார். ப‌த்ரகிரியால் தைய‌ல்நாய‌கிக்குப் பிற‌க்கும் குழ‌ந்தையும் சில‌ மாத‌ங்க‌ளில் இற‌ந்துவிட‌, தைய‌ல்நாய‌கி உள‌ச்சிதைவுக்கும் ஆளாகின்றார். இல‌ண்டனிலிருந்து திரும்பி வ‌ரும் திருச்சிற்ற‌ம்பல‌ம் ந‌ட‌ந்த‌வையெல்லாம் அறிந்து அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த் திகைக்கிறார். இவ்வாறாக‌ அவ‌ர‌வர் நினைத்த‌ற்கு மாறாக‌ வெவ்வேறு திசைகளில் ஒவ்வொருவ‌ரின் வாழ்வும் அமைந்துவிடுகின்ற‌து.இன்னொரு திசையில் கிருஷ்ண‌ப்ப க‌ரையாள‌ரையும், எலிஸ‌பெத் என்ற‌ வெள்ளைக்கார‌ப் பெண்ம‌ணியையும் சுற்றிக் க‌தை ந‌க‌ர்கின்ற‌து. பெருஞ்சொத்திருக்கும் கிருஷ்ண‌ப்ப‌ க‌ரையாள‌ர் த‌ன‌து உற‌வு முறை உள்ள‌ ஒருவ‌ரோடான‌ சொத்துத் த‌க‌றாரொன்றில் அலைவ‌தோடு நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். சிறுவ‌ய‌திலேயே பெற்றோரை இழ‌ந்து த‌விக்கும் எஸிச‌பெத் வேலைக்காக‌ இந்தியா அனுப்ப‌ப்ப‌டுகையில் ப‌தின்ம‌வ‌ய‌திலேயே பாலிய‌ல் வ‌ன்முறைக்குள்ளாகி பின்னாட்க‌ளில் பாலியல் தொழிலாளியாகின்றார். எலிஸ‌பெத்தோடு த‌ன‌க்குச் சொந்த‌மான‌ ம‌லை வீட்டில் நாட்க‌ளைக் க‌ழிக்கும் கிருஸ்ண‌ப்ப‌ர், காட்டின் அழ‌கில் த‌ன்னைத் தொலைத்து இனிசொத்துத் த‌க‌ராறு வேண்டாமென‌ உறவுக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்கின்றார். எலிஸ‌பெத்துக்கும் த‌ன‌க்கு மிச்ச‌மாக‌விருக்கும் ம‌லைவீட்டையும் சூழவிருக்கும் நில‌ப்ப‌ர‌ப்பையும் கிருஸ்ண‌ப்ப‌ர் எழுதிக்கொடுக்கின்றார். அந்த‌ ம‌லைக‌ளில் தேயிலைச் செடியை அறிமுக‌ப்ப‌டுத்தி வெள்ளைக்கார‌ர்க‌ள் காட்டின் இய‌ற்கைச் சூழ‌லைச் சிதைத்து த‌ம‌து செல்வ‌த்தைப் பெருக்க‌த் தொட‌ங்குகின்ற‌தான‌ புள்ளியில் அக்க‌தையின்னும் நீளுகின்ற‌து.

இன்னொரு க‌தையில் சித்த‌ர்க‌ள் மீது ஈர்ப்பு வ‌ந்து ஒரு நாயின் பின் தொட‌ர்ந்து செல்லும் ச‌தாசிவ‌ம் என்ற‌ ப‌ண்டார‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். நாயை மாத‌க்க‌ண‌க்கில் பின் தொட‌ர்ந்து போகின்ற‌ பாதையில் ஒரு பெண்ணோடு உற‌வு முகிழ்ந்து அவ‌ளுக்குப் பிள்ளை பிற‌க்கின்ற‌ ச‌ம‌ய‌த்தில், நாய் வேறு இட‌த்துக்கு ந‌க‌ர, பெண்ணையும் பிற‌க்க‌ப்போகும் குழ‌ந்தையையும் கைவிட்டு ச‌தாசிவ‌ம் ப‌ண்டார‌ம் ந‌ட‌க்க‌த்தொட‌ங்குகின்றார். இறுதியில் ப‌ட்டின‌த்தார் ச‌மாதிய‌டைந்த‌ இட‌த்தில், த‌ன்னையும் இறுக்க‌ப்பூட்டி நீண்ட‌நாட்க‌ளாய் உள்ளேயிருந்து, ஒரு நாளில் ஊர்ச் ச‌ன‌ம் க‌த‌வுடைத்துப் பார்க்கும்போது - எல்லா சித்த‌ர்க‌ளைப் போல‌- அக‌ல் விள‌க்கை ம‌ட்டும் ஒளிர‌விட்டு‍ காணாமற் போய்விடுகின்றார்.

இவ்வாறு நான்கு வெவ்வேறுப‌ட்ட‌ க‌தைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளும் உலாவினாலும் இப்புதின‌த்தின் உள்ளே இழைந்துகொண்டிருப்ப‌து வெள்ளைக்கார‌ர்க‌ள் கீழைத்தேய‌ நாடுக‌ளைக் கைப்ப‌ற்றி காலானித்துவ‌ நாடுக‌ளாக்கிய‌து ப‌ற்றிய‌ சார‌மேயாகும். வாச‌னைத் திர‌விய‌ங்க‌ளுக்காய் இந்தியாவிற்கு வ‌ருவ‌தில் ஆர‌ம்பிக்கும் வெள்ளைக்கார‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் த‌ம‌து கிழ‌க்கிந்திய‌க் கொம்ப‌னிக‌ளை விசாலிப்பதும், காலனித்துவ‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளைச் சுர‌ண்டுவ‌தும்/சூறையாடுவ‌தும் என‌ இக்க‌தைக‌ளின் பின்னால் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றின் அலைக‌ளே அடித்தப‌டியிருக்கின்ற‌ன‌. க‌ட‌லோர‌ மீன்வ‌க்குடும்ப‌ங்க‌ளைத் துர‌த்தி த‌ம‌து துறைமுக‌ங்க‌ளை நிர்மாணிப்ப‌தும், ந‌ன்னீர்க்கிண‌றுக‌ளை த‌ம‌க்கு ம‌ட்டும் உரிய‌தாக்கின்ற‌தும், ம‌லைக‌ளில் ப‌ண‌ங்கொழிக்கும் தேயிலை போன்ற‌வ‌ற்றை அறிமுக‌ப்ப‌டுத்துவ‌துமென‌ பிரிடடிஷ் மேலாதிக்க‌ம் விரிவாக‌ இப்புதின‌த்தில் வித‌ந்துரைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அந்த‌வ‌கையில் இந்த‌ப்புதின‌ம் ஒரு புதுவித‌மான‌ வாசிப்பைக் கோருகின்ற‌து என‌லாம். இன்னுஞ்சொல்ல‌ப்போனால் த‌மிழில் இவ்வாறான‌ காலனித்துவ‌ விளைவுக‌ள் குறித்த நாவ‌ல்க‌ள் மிக‌க்குறைவாக‌வே வ‌ந்திருக்கின்ற‌ன‌ என்கின்ற‌போது ‘சில‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்’ ஆலில்லாத‌ ஊரில் இலுப்பைப் பூச்ச‌ர்க்க‌ரை போல‌ அள‌வுக்கு மீறி வித‌ந்தோத்துவ‌தில் விய‌ப்பும் இலலைத்தான்.

ஆனால் இப்புதின‌ம் த‌ன்னை ஒரு வித்தியாச‌மான‌ நாவ‌லாக‌ த‌மிழ்ச்சூழலில் முன்வைக்க‌ முடியாத‌ள‌வுக்கு ப‌ல ச‌ரிவுப்புள்ளிக‌ளையும் கொண்டிருக்கின்ற‌து. முக்கிய‌மாய் இந்நாவ‌லின் க‌தைக்க‌ளன் இன்னும் விரிவாக‌ கால‌னித்துவ‌த்தின் கூறுக‌ளை பேசுவ‌த‌ற்கான‌ வெளிக‌ளைக் கொண்டிருக்கும்போது த‌னிம‌னித‌ர்கர்க‌ளின் வாழ்வுப்புள்ளியில் ம‌ட்டும் வ‌ந்து சிக்கிச் சிதைந்துபோகின்ற‌து. வெள்ளைக்கார‌ர்க‌ளும் கால‌னித்துவ‌மும் இப்புதின‌த்தில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்போடும்போது ஒருவித‌ எதிர்ம‌னோநிலையில் ‘ம‌ட்டுமே’ அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார்க‌ள். உண்மையில் கால‌னித்துவ‌த்தால் எவ‌ருடைய‌ அதிகார‌ங்க‌ளும், செல்வாக்குக‌ளும் இல்லாது போன‌து என்று யோசித்தால் நாம் காலனித்துவ‌த்தால் எதிர்விளைவுக‌ள் ‘ம‌ட்டுமே’ உண்டான‌தென‌ அறுதியாக‌ச் சொல்ல‌முடியாது. கால‌னித்துவ‌ம் ந‌ம் நாடுக‌ளுக்கு வ‌ர‌முன்ன‌ர் ந‌ம் நாடுக‌ளில் ‘எல்லோருடைய‌ வாழ்வும்’ செழிப்பாக‌வும் ச‌ம‌த்துவ‌மாக‌வும் இருந்த‌துமில்லை. அப்போதும் ஒரு இருண்ட‌ வாழ்வே பலருக்குத் திணிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. எத்த‌னையோ உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ர்க‌ள் கால‌னித்துவ‌த்தால் ம‌த‌ம் மாறியோ இன்ன‌பிற‌வாலோ ‘சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளுக்குரிய‌’ ஒரு சில‌ உரிமைக‌ளையாவ‌து பெற‌ முடிந்திருந்த‌து. ஒரு க‌றுப்ப‌னாய், அடிமைப்ப‌ட்டிருக்கும் நாட்டிலிருந்து இங்கிலாந்து செல்லும் சிற்ற‌ம்ப‌ல‌த்தை ஆங்கிலேய‌ ப‌டித்த‌ உய‌ர்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்வ‌தைப்போல‌, இந்தியாவிலிருந்த‌ பிராம‌ண‌/வேளாள‌ர் உள்ளிட்ட‌ உய‌ர்ச‌மூக‌ங்க‌ள் த‌லித்துக்க‌ளை அவ‌ர்க‌ளின் திற‌மைக்காய் ஏற்றுக்கொண்டிருந்த‌ன‌வா என்றால் ஏமாற்ற‌மான‌ ப‌தில‌க‌ளையே ந‌ம‌து க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு த‌ருகின்ற‌து. கால‌னித்துவ‌த்தால் மிக‌ மோச‌மான‌ விளைவுக‌ளே வ‌ந்த‌து என்று சொல்ல‌பப‌ட்டிருக்கின்ற‌து; தொட‌ர்ந்து க‌ற்பிக்க‌ப்ப‌ட‌வும் செய்கின்ற‌து. ஆனால் இன்றும் பின்-கால‌னித்துவ‌ சூழ்நிலையையே இந்தியா/ஈழ‌ உய‌ர்வ‌ர்க்க‌ங்க‌ள் விரும்பிக்கொண்டிருக்கின்ற‌து ஏன் என்று யோசிக்கும்போது புல‌ப்ப‌டாத‌ ப‌ல‌ ‘அர‌சிய‌ல்க‌ள்’ ந‌ம‌க்கு விளங்க‌க்கூடும். இவ்வாறான‌ ப‌ல‌ புள்ளிக‌ளை நோக்கி வாச‌க‌ர்க‌ளை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய‌ யாம‌த்தின் க‌தைக்க‌ள‌ன் கால‌னித்துவ‌ததை ஒரு தீய‌ ச‌க்தியாக‌ அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தோடு ம‌ட்டும் நின்றுவிடுவ‌தில் வீழ்ச்சியையும் அடைய‌த் தொட‌ங்கிவிடுகின்ற‌து (கால‌னித்துவ‌ கால‌த்தில், பிற‌கு யார் உட‌னேயே கால‌னித்துவ‌வாதிக‌ளோடு குழைந்தும் கும்பிட்டும் ப‌தவிக‌ளை வாங்கிக்கொண்டார்க‌ள் என்ப‌தையும் யோசித்தும் பார்க்க‌லாம்).இப்புதின‌த்தின் இன்னொரு ப‌ல‌வீன‌ம் என்றால், அது காம‌த்தைப்ப‌ற்றி பேச‌வேண்டிய‌ பொழுதுக‌ளிலெல்லாம் பேசாது ஒன்றிர‌ண்டு வார்த்தைக‌ளோடு த‌ப்பியோடுவ‌து. க‌தாமாந்த‌ர்க‌ளிடையே காம‌ம் பிரவாக‌ரிக்கும் எல்லாப்பொழுதுக‌ளிலும் விரிவாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ அவ‌சிய‌மில்லை; ஆனால் அவை ஒருபொழுதில் கூட‌ விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ரை அந்த‌ப்புள்ளிக்குள் இழுத்துச் செல்ல‌வில்லை என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டியிருக்கின்ற‌து. முக்கிய‌மாய் ப‌த்ர‌கிரிக்கும் அவ‌ன‌து தம்பி ம‌னைவுக்குமான‌ உட‌லுற‌வு முகிழ்வ‌தற்குக் கூட‌ ‘குறிப்பிடும்ப‌டியான‌’ கார‌ண‌ங்க‌ள் நாவ‌லில் இல்லை. வாசிப்ப‌வ‌ருக்கு எங்கேனும் ஒருவீட்டில் இப்ப‌டி அண்ண‌ன் ‍- த‌ம்பி ம‌னைவி சேர்ந்து இருந்தால் உட‌ன‌டியாக‌ உட‌லுற‌வு முகிழ்ந்துவிடுமோ என்ற‌ பொதுமைப்ப‌டுத்திப் பார்க்கின்ற‌ அள‌வுக்குத்தான் அந்த‌ உற‌வு விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. கால‌ங்கால‌மாய் த‌ன‌க்கான‌ காம‌த்தை அட‌க்கிவைக்க‌ப்ப‌ட்ட‌ பெண், ப‌த்ர‌கிரி குழ‌ம்பும்போது கூட‌, ‘த‌ம்பி வ‌ரும்வ‌ரைதானே நீ என்னோடு ப‌டுத்து எழும்பு’ என்கின்ற‌ மாதிரியான‌ தெளிந்த‌ குரலில்தான் பேசுகின்றாள் (கால‌னித்துவ‌ கால‌ம் பெண்க‌ளின் காம‌த்தை வெளிப்ப‌டையாக‌ப் பேச‌விட்டிருக்கின்றதென்றால் ச‌ந்தோச‌ந்தான்). இங்கே கூட‌ இந்த‌ உற‌வு குறித்து ப‌த்ரகிரிக்குத்தான் அதிக‌ குழ‌ப்ப‌ம். தைய‌ல்நாய‌கி எவ்வித‌ குழ‌ப்ப‌மில்லாது இருக்கின்றாள். இறுதியில் கூட‌ தைய‌ல்நாய‌கியின் குழ‌ந்தை இற‌ந்துபோவ‌தும், அவ‌ள் உளச்சிதைவுக்கு ஆளாவ‌தும் கூட‌, அவ‌ள் செய்த‌ ‘பாவ‌ங்க‌ளுக்கு’ கிடைக்கும் ப‌ல‌ன்க‌ள்தான் என‌த்தான் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. ப‌த்ர‌கிரி ஆணாக‌விருப்ப‌தால் அனைத்துப் பாவ‌ங்க‌ளிலிருந்தும் விமோச‌ன‌ம் அளிக்க‌ப்ப‌ட்டு சொந்த‌ ஊருக்கு அனுப்பிவைக்க‌ப்ப‌ட்டு காப்பாற்ற‌ப்ப‌ட்டிருக்கின்றான் என‌வும் வாசிப்புச் செய்யும் சாத்திய‌ம் உண்டு. இந்த‌ இட‌த்திலேயே நாவ‌லுக்குள்ளேயே வைத்து இன்னொரு புள்ளியையும் யோசிக்க‌வேண்டியிருக்கின்ற‌து. தைய‌ல்நாய‌கி உள‌ச்சிதைவுக்கு ஆளாகும்போது பைத்திய‌க்காரியாக்க‌ப்ப‌ட்டு, வைத்திய‌சாலைக்கு அனுப்ப்ப‌டவேண்டுமெனச் சொல்லப்படுகின்றது. அவ‌ள் ஒரு தேவைப்ப‌டாத‌ ஒரு பாத்திர‌மாக‌ நாவ‌லின் பின்ப‌குதியில் வாச‌க‌ர்க‌ள் வாசிக்க‌ப்ப‌டுகின்ற‌மாதிரியான‌ ம‌னோநிலை உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஆனால் ஒரு நாயை முன்னே ஓட‌விட்டு அதை ம‌ட்டும் பின் தொட‌ர்ந்து, ‍த‌ன‌து தாயை மற்றும் உட‌லுற‌வு கொண்ட‌ பெண்ணை /அவ‌ளின் ம‌க‌வை‍ விட்டுச் செல்கின்ற‌ ச‌தாசிவ‌ம் ப‌ண்டாரமாகி ஒரு உய‌ர்நிலைப்ப‌ட்ட‌ ‘புனித’ ம‌னித‌ராக‌ச் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார். இங்கேதான் ந‌ம‌து ச‌மூக‌ம் அது கொண்டிருக்கும் சிந்த‌னாமுறைக‌ளைப் ப‌ற்றிச் சிந்திக்க‌வேண்டியிருக்கிற‌து. சதாசிவ‌ம் ப‌ண்டார‌ம் நாயை மட்டும் பின் தொட‌ர்ந்து த‌ன‌க்குப் பிடித்ததைச் செய்ய‌ அனும‌திக்கின்ற‌/ஏற்றுக்கொள்கின்ற‌ சமூக‌ம் ஏன் உள‌ச்சிதைவுக்கு உள்ளான‌வ‌ர்க‌ளை/மூளை வ‌ள‌ர்ச்சி குன்றிய‌வ‌ர்க‌ளை/திருந‌ங்கைக‌ளை அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ளோடு ஏற்றுக்கொள்ள‌ ம‌றுக்கின்ற‌தென‌வும் யோசிக்க‌வேண்டியிருக்கின்ற‌து. இப்புதின‌த்தில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே பாத்திர‌ ம‌னோநிலையிலிருக்கும் சதாசிவ‌ம் ப‌ண்டார‌மும், தைய‌ல்நாய‌கியும் வெவ்வேறு வித‌மாக‌ப்பார்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்றால் ப‌டைப்பாளியாலும் ச‌மூக‌ம் சிந்திக்கும் முறைமையை மீறி சிந்திக்க‌ முடியாதிருக்கின்ற‌தென‌த்தான் எடுக்க‌வேண்டியிருக்கின்ற‌து.

நாவ‌லில் சாப்பிடுவ‌து ப‌ற்றியும், நாயின் பின்னால் அலைந்துதிரிவ‌து ப‌ற்றியும் அலுப்பு வ‌ரும‌ள‌வுக்குத் திருப்ப‌த் திருப்ப‌ விப‌ரிக்கும் ப‌டைப்பாளி காம‌த்தைக் கொஞ்ச‌ வ‌ரிக‌ளில் க‌ட‌ந்துபோவ‌து இன்னும் விய‌ப்பாக‌த்தானிருக்கிற‌து. காம‌ம் குறித்து தின‌மும் பொழுதும் அலைபாய்ந்த‌ப‌டியிருக்கும் கீழைத்தேய‌ ம‌ன‌து ப‌ற்றியும் அது ஒடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் வ‌ன்முறை ப‌ற்றியும் நிறைய‌வே பேச‌வேணடியிருக்கிற‌து. இங்கேயும் பேச‌வேண்டிய‌தை பேசாம‌ல் போவ‌த‌ன் வீழ்ச்சி தெளிவாக‌த் தெரிகின்ற‌து. ஜெய‌மோக‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் ப‌டைப்புகளில் காம‌ம் -அள‌வுக்க‌திக‌மாய்-‘ம‌த‌ம்பிடித்த‌லையும் யானைப் போல‌ எங்கும் அலைகின்ற‌து’ என்றால், எஸ்.ராம‌கிருஸ்ண‌னின் யாம‌த்தில் காம‌ம், ஒரு வ‌ற‌ண்டுபோயிருக்கும் நில‌த்தில் சிறுமழை பெய்யும்போது உட‌னேயே அடையாள‌மின்றி உலர்ந்துபோகும் நிலையைப்போல‌ காண்ப‌த‌ற்கு அரிதாக‌த்தான் இருக்கின்ற‌து.

தெரிந்த‌/சொல்ல‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைச் சொல்வ‌த‌ல்ல‌ ஒரு சிற‌ந்த‌ ப‌டைப்புக்குரிய‌ அடையாள‌ம். அது தெரியாத‌/அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ வரலாற்றின் ‍இருண்ட‌ ப‌க்க‌ங்க‌ளை நோக்கி த‌ன‌து பார்வைக‌ளைத் திருப்பி வாசிப்ப‌வ‌ரை இன்னுமின்னும் அப்ப‌க்க‌ங்க‌ளை நோக்கி இழுத்துச் செல்வ‌தாக‌ வேண்டும். யாம‌த்தில் கால‌னித்துவ‌ கால‌த்தையும், சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் வெளியே எடுத்துவிட்டால் அது ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ‘க‌தைக‌ளை’த்தான் த‌ன்ன‌க‌த்தே கொண்டிருக்கின்ற‌து. இவ்வாறான‌ ப‌ல‌வீன‌ங்க‌ளைத் தாண்டியும், நாவ‌லை அலுப்பின்றி முடியும்வ‌ரை வாசிக்க‌ முடிவ‌த‌ற்கு எஸ்.ராம‌கிருஷ்ண‌ன் என்ற‌ ப‌டைப்பாளிக்குள் இன்னமும் வ‌ற்றிப்போய்விடாத‌ மொழிந‌டை என‌த்தான் சொல்லவேண்டும். ஆனால் அதேவேளை ஏதோ எழுத‌த்தொட‌ங்கிய‌தை வ‌லிந்து எழுதி முடிக்க‌வேண்டும் என்ற‌ நினைப்பில் எழுதிய‌துமாதிரியாக‌ நினைக்க‌த்தோன்றும் ப‌ல‌ ப‌குதிக‌ள் இப்புதினத்தில் வ‌ர‌ச்செய்கின்ற‌ன‌. ஏற்க‌ன‌வே சொல்லப்பட்ட கதையாக/களனாக இருந்தாலும் கூட அதை மீறி அறியாத‌/மறைக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போதே ஒரு ப‌டைப்பு த‌ன‌க்குரிய‌ இட‌த்தை உருவாக்குகின்ற‌து. பிற‌கு வாச‌க‌ர்க‌ள் அதிலிருந்து த‌ம‌க்கான‌ வாசிப்பை நிகழ்த்தும்போது பிரதி பன்முகமான வாசிப்பைக் கோருகின்றது. ஆனால் எஸ்.ராவின் எழுத்துக்க‌ள் மீது மிகுந்த‌ ந‌ம்பிக்கை கொள்ளும் ஒரு வாச‌க‌ர் யாம‌த்தை அவ்வாறான ஒரு நாவ‌லாக‌ அடையாள‌ங்க‌ண்டு கொள்ள‌ மிக‌வும் த‌ய‌ங்குவார் எனத்தான் தோன்றுகின்றது.

(கூரிற்காய் எழுதியது)

புகைப்படங்கள்: www.sramakrishnan.com/gallery.asp

March 28, 2008

அடையாளங்களைப் புறக்கணித்தல்

Filed under: The Assassin's Song, M.G.Vassanji, Reading, வாசிப்பு — டிசே தமிழன் @ 10:27 am

-M.G.Vassanji யின் The Assassin’s Songஜ முன்வைத்து-

1.
நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித்துவிடுவதாகவே இருக்கின்றது. அதேபோன்று எந்த மதமும் எமக்குச் சம்மதமில்லை என்பவரையோ அல்லது எல்லா மதங்களும் எமக்கு ஒரே மாதிரியானது என்பவரையோ சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்வள்வதுமில்லை. ‘உனக்குரிய தெரிவை, உனக்கான அடையாளத்தை தெளிவாய் முன் வை’ என்றுதான் உலகம் வன்முறையான முறையில் கேட்கின்றது. எமக்கான தெளிவான அடையாளம் என்ற ஒன்றில்லாது எல்லாவற்றோடும் இயைந்தும் முரண்பட்டும் கொண்டிருக்கின்றோம் என்றால் ஏளனப் பார்வையை வீசியபடி மனிதர்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு எந்த மதமும் தமக்குரிய தனித்த அடையாளமில்லையெனவும் (அல்லது எல்லா மதமும் தமக்குச் சம்மதமென) நினைத்து வாழும் சூஃபி மாந்தர்களின் வாழ்வைப் பகிர முனையும் புதினந்தான் எம்.ஜி.வசாஞ்ஜி எழுதிய The Assassin’s Song என்ற புதினம்.

இப்புதினத்தின் கதை, ஹசன் என்ற கதை சொல்லியின் மூலமாகச் சொல்லப்படுகின்றது. குஜராத்தில் ஒரு சிறுகிராமத்தில் வளரும் ஹசனின் வாழ்வோடு, அம்மக்களின் வாழ்வியல், கலாசாரம் போன்றவை விபரிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் சமாந்தரமாய் கி.பி 12ம் நூற்றாண்டில் ஒரு நாடோடியாக அலைந்து திரிந்த நூர் பஸால் (Nur Fazal) என்ற சூஃபியின் கதையும் மாறி மாறி அத்தியாயங்களுக்குள் சொல்லப்படுகின்றது. இவ்வாறாக மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து அலைந்து திரிந்து இந்தியாவில் தங்கியிறந்துபோன நூர் பஸால் சூஃபியின் வழித்தோன்றல்களே ஹசன் போன்றவர்களாவார்கள். இஸ்லாமிய மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ சாராது தமக்குரிய கலாசாரங்களுடன், தனித்த வழிபாட்டு முறைகளுடன் இருக்கும் சூஃபியின் கோயிலுக்கு ஹசனின் தந்தையாரே பொறுப்பாக இருக்கின்றார். பலவேறு இடங்களிலிருந்து மக்கள் தமது நோய, இன்னபிற கஷ்டங்களைத் தீர்க்கும் பொருட்டு ஹசனின் தந்தையாரையும், சூஃபியின் சமாதியையும் நாடி வருகின்றார்கள்.

ஒரு கட்டத்தில் பதின்மவயதிலிருக்கும் ஹசனை, அவரது தந்தையார் தனக்குப்பிறகு கோயிலை வழிநடத்தும் குருவாக (Saheb) அறிவிக்கின்றார். குஜராத்தில் பல்வேறு காலகட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்தபோதும் சூஃபி வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்நகரம் வன்முறையால் பாதிப்படைந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹசனின் மாமனார் ஒருவரான ராஜ்கோபால் பாகிஸ்தானுக்குச் சென்று தனது பெயரை இக்பால் என மாற்றி முஸ்லிமாக வாழத்தொடங்குகின்றார். ஹசனின் வளரிளம்பருவத்தில் இந்து - முஸ்லிம்களுக்கிடையில் அவர்கள் இருந்த ஊரில் கலவரக்கொதிப்பு மனோநிலை வெடித்துக்கிளம்பும்போது (அது விரைவில் அணைந்தும்விடுகின்றது), ஹசன், தனது தந்தையிடம் நாம் முஸ்லிம்களா அல்லது இந்துக்களா? எவரைத் தெரிவு செய்யவேண்டும்? என வினாவுகிறார். தந்தையார், நாம் எந்த மதத்திற்கும் உரியவர்களில்லை (அல்லது நாம் எல்லா மதங்களாகவும் இருக்கின்றோம்) என்று தெளிவுபடுத்துகிறார்.

ஊரில் இந்து முன்னணி அமைப்பு, ஒன்று சீன-இந்தியா எல்லை மோதலிற்குப் பின், ‘இந்தியத் தேசியத்தை’ முன்வைத்து வீரியம் பெறுகின்றது. அந்த இந்து முன்னணியின் தலைவர், தம்மிடம் இந்து கலாசாரம் மற்றும் இந்தியத் தேசியம் குறித்து அறிய, வகுப்புக்களுக்கு ஹசனை அனுப்பக் கேட்கும்போது, ஹசனின் தந்தையாரும் மறுக்காது அனுப்பி வைக்கின்றார். ஆரம்பத்தில் பாடங்களைக் கற்பித்தலாயிருக்கும் இந்து முன்னணியினரின் வகுப்புக்கள், பிறகு தடிகள், கத்திகளுடன் சண்டைப் பயிற்சி வகுப்புக்களாய் மாற்றம் பெறுகின்றன. ஹசனின் நடுப்பெயரில் வரும் முஸ்லிம் பெயரைத் தொடர்து கேலி செய்து வரும் இந்து முன்னணியின் தலைவர், ஒருநாள் பயிற்சி வகுப்பின்போது சண்டையில் ஒரு ‘இந்து’ மாணவனை ஹசன் வென்றது பிடிக்காது ஹசன் மீது காழ்ப்புக் கொள்ளத் தொடங்குகின்றார்.

இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் ஹசன், தான் நம்பிய சூஃபி வழிபாட்டில் சில அபத்தங்களைக் கண்டுகொள்கின்றார். முக்கியமாய் அவர்களின் கோயில், தந்தையார் என்ற எதுவும் ‘பரிசுத்தமானதல்ல’ என்ற புரிதல்களை வந்தடைகின்றார். தனது தந்தையும், முடிசூட்டப்பட்ட தனது எதிர்கால ‘குரு’ பதவியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்கும் ஹசன், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின்பேரில் விண்ணப்பிக்கின்றார். எதிர்பாராத விதமாய் ஹவார்ட் வளாகத்திற்கு ஹசனுக்கு அனுமதியும் கிடைக்கிறது. ஹசன், தகப்பனின் விருப்பையும் மீறி அமெரிக்கா செல்கின்றார்; எனினும் திரும்பி வந்து தானொரு சாகிப்பாய் தனது முன்னோரான சூஃபியின் கோயிலில் பணியாற்றுவேன் என்ற வாக்குறுதியையும் தனது தந்தையிற்கு வழங்குகின்றார்.
அமெரிக்காவின் புதிய சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்துவதற்கு ஹசன் தொடக்ககாலங்களில் மிகவும் கஷடப்படுகின்றார். அதேவேளை எவரது கண்காணிப்புமின்றி தனது இயல்போடு இருக்கவிடும் அமெரிக்கச் சூழல் ஹசனுக்குப் பின்னாட்களில் பிடித்துப்போகின்றது. அவரின் பிற நண்பர்களில் அநேகர் குடியும், பெண் நண்பிகளுமெனத் திரிய, கீழைத்தேச நாடொன்றிலிருந்து வரும் ஹசனுக்கு இவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்ற சிக்கல்கள் வருகின்றன. அதேசமயம், தான் தனது கிராமத்திலிருந்து அந்நியப்பட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கும் அவலமும் ஹசனுக்கு உறைக்கின்றது. இவ்வாறான அல்லாடல்களுக்கிடையில் ஒருநாள், ‘தாயிற்குச் சுகமில்லை அவசரமாக வரவும்’ என்ற தந்தியோடு ஒரு வழிப்பாதை ரிக்கெட்டும் கூடவே ஏற்பாடு செய்து ஹசனின் தந்தையார் அனுப்புகின்றபோது, இது தன்னை இந்தியாவுக்கு அழைத்து அங்கேயே இருத்தவிரும்பும் அப்பாவின் எண்ணமென்ற யோசனையில் ஹசன் இந்தியாவிற்குப் போவதை நிராகரிக்கின்றார். எனினும் தன் மீது மிகவும் பிரியம் வைத்திருக்கும் அம்மாவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்ற சிந்தனை ஹசனைத் தினமும் அலைக்கழித்தபடி இருக்கின்றது. ஒரு கட்டத்தில் எங்கேயும் (அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ) தன்னை முழுமையாக பொருத்த முடியாத அவதியில் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகி மனநோய் வைத்தியரைப் பார்க்கத் தொடங்கின்றார்.

2.
ஹசன் தனது கலாநிதிப் பட்டத்தை முடிக்கின்றகாலகட்டத்தில் இந்திய-ஆங்கிலேய கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த மார்கியைச் (Marge) சந்திக்கின்றார். பிறகு, அந்தப்பெண்ணையே திருமணஞ்செய்து, அப்பெண்ணின் பெற்றோர்களிலிருக்கும் கனடாவின் வினிபெக் நகரில் கல்லூரி பேராசிரியர் வேலையையும் எடுத்துக்கொண்டு ஹசன் தனது குடும்ப வாழ்வைக் கன்டாவிலேயே தொடங்குகின்றார். தனது திருமண விடயத்தை மட்டும் இந்தியாவிலிருக்கும் பெற்றோருக்குத் தெரிவிக்கும் ஹசன், கொஞ்சம் கொஞ்சமாய்த் தனது இந்தியத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கின்றார் (இக்காலகட்டத்தில் ஹசன் என்ற தனது பெயரை கிருஷ்ணா எனவும் மாற்றிக்கொள்கிறார்). ஹசனும் அவரது துணைவியாரும் அவர்களின் ஒரே மகன் மீது அளவற்ற பிரியங்களை வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் உதைபந்தாட்டம் ஆடியபின் சாலையை கடக்கும் சந்தர்ப்பத்தில் காரொன்றினால் அடிக்கப்பட்டு அவர்களின் பிரிய மகன் கொல்லப்படுகின்றான். நாம் இவ்வளவு காலமும் சந்தோசமாய் வாழ்ந்தோம் எனினும் எனது குழந்தை இறந்ததன் பிறகு என்னால் இங்கே வாழமுடியாதென ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு ஹசனின் துணைவியார் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வளவு காலமும் அழகாகவும் மகிழ்வாகவும் இருந்த இல்லற வாழ்வுக்கு தனது மகன் மட்டுமா ஒரே அடித்தளமாய் இருந்தாராவென குடும்ப உறவின் அபத்தம் குறித்து ஹசன் யோசிக்கத் தொடங்குகின்றார். தனது துணைவியார் அவரது -கடந்தகால- பாடசாலை நண்பரொருவனோடு வன்கூவரில் சேர்ந்து வாழ்கின்றார் என பின்னாட்களில் ஹசன் அறிந்துகொண்டாலும், அவர் தொடர்ந்து அதே நகரத்திலே தங்கியபடி, கல்லூரியில் கற்பித்தபடி, தனியாளாக வாழந்துகொண்டிருக்கிறார்.
ஒருநாள் வினிபெக்கில் தற்செயலாக சந்திக்கும் தனது ஊர்க்காரரால் ஹசனுக்கும் அவரது தந்தையிற்குமான உறவு மீண்டும் கடிதம் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றது. தனது தாய் இறந்துவிட்டதை ஹ்சன் அறிகின்றார்; தந்தையும் தனது பேரக்குழந்தை இறந்த துயரைக் ஹசனுடன் பகிர்ந்துகொள்கின்றார். 70களில் இந்தியாவை விட்டு வெளியேறிய ஹசன் 2000 வரை இந்தியாவுக்குத் திரும்பி ஒரு முறைகூட போகாதிருக்கின்றார் என்ற அவலம் அவருக்கு உறைக்கின்றது. ஹசனின் தந்தையாரும் தான் சாக முன்னர் ஒருதடவையாவது ஹசனை மீண்டும் தனக்குப் பார்க்க விருப்பமிருப்பதாய்ச் சொல்கின்றார். இந்த நேரத்திலேயே குஜராத்தில் மீண்டும் -கோத்ரா இரெயினை எரித்ததோடு- கலவரம் மோசமாக நிகழத் தொடங்குகின்றது. அதுகுறித்து இணையம்/தொலைக் காட்சி மூலம் அறிகின்ற ஹசன் இதற்கு முன்னர் வன்முறை தீண்டப்படாத கிராமமாய் இருந்த தனது கிராமம் இந்தமுறையும் தப்பும் என நினைத்துக்கொள்கின்றார். எனினும் நிலைமை தலைகீழாகப் போகின்றது. தமது கோயிலில் அடைக்கலமான மக்களைக் காப்பதன் பொருட்டு உரையாட முன்வரும் ஹசனின் தந்தையை, இந்து வன்முறைக்குழு ஒன்று வெட்டிக்கொல்கின்றது. முஸ்லிமாய் மாறிப்போன ஹசனின் இளைய சகோதரன் மன்சூரை (முஸ்லிமாய் ஆனபின் ஒமர்) கோத்ரா இரெயின் எரிப்பில் ஒரு குற்றவாளியாகப் பொலிஸ் தேடத் தொடங்குகின்றது.இறுதியில் இந்தியாவுக்கு -30 வருடங்களின் பின் - ஹசன் பயணமாகின்றார். உருக்குலைந்து போன தனது கிராமத்தைக்கண்டு மனம் வெதும்புகின்றார். பொலிஸால் தேடப்படும் தனது சகோதரை இரகசியமாகச் சந்திக்கும் ஹசன், பொலிசிடம் அவரைச் சரணடையும்படி வேண்டுகின்றார். கோத்ரா எரிப்புச் சம்பவத்தில் தான் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்கின்ற மன்சூர், பொலிஸில் சரணடைந்தால், தன்னையும் என்கவுண்டர் முறையில் கோத்ராவில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களைப் போல பொலிஸார் கொன்றுவிடுவார்கள் எனப் பயப்பிடுகின்றார். இறுதியாக மன்சூர் தப்பியோடி பாகிஸ்தானுக்குப் போனதாய்ச் செய்தி ஹசனுக்கு வருகின்றது.இதற்கிடையில் இதுவரை மறைக்கப்பட்ட நூர் பஸால் பற்றிய உண்மையை ஹசன் அறிந்துகொள்கின்றார் (சூஃபியின் வரலாற்றை அறியும் ஆதிப்பிரதிகள் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே வாசிக்கமுடிகின்றமாதிரி ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது). இன்று ஒரு ஞானியாக மதிக்கப்படும் நூர் பஸால் ஒரு Assassin என்பதை ஹசன் அறிகின்றார் (Nur Fazal the sufi, I concluded, had been an Assassin. Everything I read in the book in my hand seemed to confirm this (p 302)). ஈரானின் மேற்குப் பகுதியில் இஸ்மாயில்ஸ் (assassin) என்றொரு சமூகம் இருந்தது(?) எனவும், அவர்கள் பிற முஸ்லிம்கள் செய்யும் தொழுகையையும், ஷரியா போன்ற மதச்சடங்குகளையும் நிராகரிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் எனவும் ஹசன் அறிந்துகொள்கின்றார். இவ்வாறு assassin சமூகத்தில் பிறந்த நூர் பஸால் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்து அனுபவங்கள் பெற்று ஒரு ஞானியாகி இந்து அரசன் ஒருவனின் (விஸால் தேவ்) மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். எனினும் இவரொரு Assassin யாய் இருந்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும், மிகுதி அனைவருக்கும் அவர் ஒரு சூஃபி ஞானியே (Pir Bawa).

இனி தனது வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசிக்கின்ற ஹசன், இன்னமும் தன்னையொரு சாகிப்பாய் -சூஃபி ஞானியின் வழித்தோன்றலாய்- நினைத்துக்கொள்கின்ற மக்களுக்காய் தனது ஊரிலேயே தங்கிவிடத் தீர்மானிக்கின்றார். சீரழிக்கப்பட்ட சூஃபியின் கோயிலையும், மக்களின் வாழ்வையும் கட்டியெழுப்பப் போவதனான ஹசனின் நம்பிக்கைப்பார்வையினூடாக இப்புதினம் முடிகின்றது.

3.
எம்.ஜி.வசாஞ்ஜி, இப்புதினத்திற்கு பின்னிணைப்பாய் -நூர் பஸால் என்ற பாத்திரம்- கற்பனையே என்றும் ஆனால் மத்திய காலத்தில் முஸ்லிம் ஞானிகள் இந்தியாவுக்கு வந்தது வரலாற்று உண்மையெனவும் குறிப்புகள் கொடுத்திருக்கின்றார். இந்தக் குறிப்புகளை ஒரு புறமாய் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இப்புதினம் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை நிராகரித்து வேறொரு பார்வையில் நாம் சிந்தித்துப் பார்க்கும் வெளிகளைத் தருகின்றதென்ற புரிதல்கள் எமக்கு வரக்கூடும். எழுதப்பட்ட வரலாற்றையெல்லாம் கலைத்து மாறி மாறி ஆடிப் பார்க்கும் ஆட்டம் என்பதே ஒரு சுவாரசியமான ஆட்டந்தானே. வரலாற்றை மட்டும் பார்த்துத் தேங்கிவிடாது, நிகழ்காலத்திலும் வந்திறங்குவதால் இந்தப் புதினம் இன்னும் அதிக கவனம் பெறுகின்றது. இன்னும், போகின்றபோக்கில் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு ஆசிரியர் போகின்றாரே தவிர, இந்து, முஸ்லிம் மக்களைப் பற்றி அதிகம் காழ்ப்புணர்ச்சியின்றி - சார்புநிலை எடுக்காது- எழுதப்பட்டிருப்பது இதமாயிருக்கிறது. இப்புதினத்தில் பலரது பாத்திரங்கள் மர்மம் நிறைந்த வெளிகளாக விடப்பட்டிருக்கின்றன. கோத்ரா கலவரத்தில் ஹசனின் சகோதரர் சம்பந்தப்படவில்லையென்பதை மன்சூரைக் கொண்டே மறுதலிக்கப்படுகின்றதே தவிர, ஆசிரியர் எந்த ஒரு தெளிவான முடிவையும் வாசகரிற்கு கொடுக்காத இடைவெளியாக விடுகின்றார். அதேபோன்று ஹசனின் தகப்பனை வெட்டிக்கொல்கின்ற இந்து முன்னணிக்குழுவினர், சூஃபியின் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்த -இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடில்லாத- மக்களை என்ன செய்தார்களெனற பகுதியும் பூர்த்திசெய்யப்படாதே இருக்கின்றது. (குஜராத்தில் கலவரம் நடந்தபோது, தாம் இந்துக்கள் என்று சொல்லித் தப்ப முயன்ற முஸ்லிம்களை ஆடைகளை அகற்றி அடையாளம் கண்ட அதிவன்முறையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்). இந்நாவலை வாசித்து முடிக்கும்போது மத அடையாளங்களோடு இருப்பவரை விட, அவ்வாறு எந்த அடையாளங்களுமின்றி இருப்பவருக்கான உலகந்தான் இன்னும் அச்சமூட்டுவதாய்…., பாதுகாப்பில்லாதிருக்கின்றது என்ற உணர்வே மேலோங்குகின்றது.

இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருக்க விரும்பாத (அல்லது இரண்டாகவும் இருக்கவிரும்பும்) சூஃபிகள் சமூகம் பற்றிய இக்கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நினைவலைகள் பால்யங்களை நோக்கி ஓடத்தொடங்கியது. ஈழத்துக் கல்விமுறையில் மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ‘சமயம்’ ஒரு கட்டாய பாடமாக இருக்கின்றது. நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாத பெற்றோராயிருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு சமயம் ஒன்றைத் திணித்து கற்பிக்கச் செய்யத்தான் வேண்டும். அத்தோடு தெரிவு என்பது ஒன்றாகவிருக்கும்போது, வெவ்வேறு சமயங்களில் கலப்புத் திருமணஞ்செய்த பெற்றோர் இரண்டு ‘சமயங்களை’த் தெரிந்தெடுத்து பிள்ளைக்குக் கற்பித்துவிடவும் முடியாது. அதைவிட அபத்தமாய், ‘சமயம்’ என்கின்ற கட்டாயப் பாடத்தில் உங்களுக்குரியதாய் நினைக்கும் ‘மதம்’ குறித்துக் கற்பிப்பார்களே தவிர எல்லா மதங்களையும் அறிந்துகொள்கின்ற கற்கை நெறிகளும் நமது பாடத்திட்டத்தில் இல்லை. சமயத்தோடு இயைந்து வாழும் ஒவ்வொருவரும் தமது நாளாந்த வாழ்வில் தமது சமயம் குறித்து அறிவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆனால் பிறமதங்கள் குறித்து அறிவைப் பரவலாக பெறுவதற்குரிய இடமாக இருக்கும் பாடசாலையோ அந்த வெளியை மறுத்து, ‘உனக்குரியதான மதத்தை மட்டும் கற்க’ என்று கூறுகின்றது. இவ்வாறான சூழலிலிருந்து வெளியேறும் மாணவர்கள் எங்ஙனம் மத நல்லிணக்கத்தோடோ, பிற மதங்கள் குறித்த சகிப்புத்தன்மையோடோ பாடசாலையிலிருந்து வெளியேற முடியுமென எதிர்பார்க்கமுடியும்? இன்னும், பதின்மங்களில் தமது சுய அறிவை வளர்த்துக்கொண்டு சமயத்தை மறுக்கவிரும்பும் மாணவருக்கு எந்த ஒரு தெரிவையும் எமது கல்விச் சமூகம் வழங்குவதேயில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தமானது.

(படங்கள்: chapters.ca)
(வைகறையிற்காய் எழுதப்பட்டது)

February 16, 2008

சில இறகுகளின் பயணம்

Filed under: Divisadero, Michael Ondaatje, வாசிப்பு — டிசே தமிழன் @ 12:19 pm

-மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து-

‘We have art, so that we shall not be destroyed by the truth’
-Nietzsche

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான் தீர்மானிக்கின்றன என்ற புரிதல் இருந்தாலும் நம்மால் வாழ்வின் அபத்தங்களை எளிதாய்த் தாண்டிப்போய்விட முடிகின்றதா என்ன? எனவேதான் தொடர்ந்தும் மனித மனங்களின் சிக்கலான புதிர் நிறைந்த ஆட்டங்களை நாம் சுவாரசியமாகப் பார்த்தபடியும் விவாதித்தபடியும் இருக்கின்றோம். வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் சில பாத்திரங்களின் அசைவுகளை மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நம்முன் விரித்து வைக்கின்றது. ஆட்டமொன்று நடக்கும்போது வெளியிலிருக்கும் நமக்கு இந்த நகர்வு சரியாயிருக்கிறது/தவறாயிருக்கிறது என்று தெரிந்தாலும் நம்மால் குறுக்கிட முடிவதில்லை போல, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் பாத்திரங்களும் அதன் போக்கில் நகரும்போது உறைந்த நிலையிலிருந்து நாம் ஆட்டத்தின் அனைத்து நகர்வுகளையும் அவதானித்தபடி நமக்குள்ளே ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்கின்றோம்.

மைக்கல் ஒண்டாஜ்ஜியில் அநேக நாவல்களில் மிகப்பெரும் தனிமையையும், மர்மத்தின் சுழல்களும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதுபோல இந்நாவலிலும் அவற்றுக்கான இடங்கள் இருக்கின்றன. வட கலிபோர்ணியா நகருக்கு ஒதுக்குப்புறமாய் தோட்டக்காணிகளும், நிறையக் குதிரைகளும் இருக்கும் கிராமப்புறமே நாவலின் முற்பகுதியில் பின்னணியாகின்றன. ஆன் (Anne), ஆனின் தந்தையார், கிளேயர் (Claire) மற்றும் கூப் (Coop) என்ற நான்குபேரைச் சுற்றியே கதை ஆரம்பத்தில் சுழல்கின்றது. ஆனின் தாயார், ஆன் பிறக்கின்றபோது பிரசவித்திலேயே இறந்துவிடுகின்றார். அதேசமயத்தில் வைத்தியசாலையில் அநாதையாக இருக்கும் கிளேயரையும் ஆனின் தகப்பன் தத்தெடுத்து ஆனோடு சேர்த்து வளர்க்கத்தொடங்குகின்றார். ஆனும் கிளேயரும் இரட்டைச் சகோதரிகள் போல அக்கிராமத்தில் வளர்கின்றார்கள். இவர்களோடு சேர்ந்து ஐந்து வயது கூப்பும் வளர்கின்றார். கூப்பின் பெற்றோர்கள் வாடகை கொலைக்காரர்களால் எதோ ஒரு காரணத்திற்காய் கொல்லப்பட்ட, அநாதையாக்கப்பட்ட கூப்பும் ஆன், கிளேயரோடு சேர்ந்து வளரத்தொடங்குகின்றார். ஆன் புத்தகம் வாசிப்பில் ஆர்வமுள்ளவராகவும், கிளேயர் குதிரைகளோடு அதிகம் மினக்கெடுபவராகவும், கூப் வீடு/பண்ணையில் மராமத்துத்துப்பணிகள் செய்வதில் ஆர்வமுடியவராகவும் நாவலில் சித்தரிக்கப்படுகின்றார்கள். தாய் ஒருவரின் பாசம் என்பது எப்படிப்பட்டது என்று சிறுவயதிலிருந்தே அறியாது வளரும் இம்மூவருக்கும், ஆனின் தகப்பனே ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கின்றார். சகோதரர்கள் என்ற உணர்வோடு சிறுவயதில் வளர்கின்ற ஆன், கிளேயர், கூப்புக்கு வயது ஏற ஏற கிராமததுச்சூழலும், பருவமும் அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாய்ப் பிரிக்கின்றது. 15 வயது ஆனுக்கு 20வயதிலிருக்கும் கூப் மீது ஈர்ப்பு வர, பின்னாட்களில் உடல்களைப் பகிர்ந்துகொள்கின்ற காதலும் காமமும் கலந்த ஒரு உறவாய் அது மாறிப்போய்விடுகின்றது..

ஒருநாள் இவ்வாறு நெருக்கத்திலிருக்கும் ஆனையும் கூப்பையும் காண்கின்ற ஆனின் தகப்பன் சன்னதமாடி மிக மோசமான முறையில் கூப்பைத் தாக்கத்தொடங்குகின்றார். கூப் எதையும் திருப்பிப் பேசாது ஆனின் தகப்பனின் அனைத்து வன்முறைகளையும் தாங்கிக்கொள்கின்றார். அந்தச் சம்பவத்தோடு ஆன் தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போகின்றார்; அதன்பின் ஒருபோதும் அந்தக்கிராமத்துக்குத் திரும்பி வரவேயில்லை. அவ்வாறே கூப்பும் ஒரு நாடோடியாக நெவேடா பாலைவனங்களில் அலையந்து, பிற்காலத்தில் ஒரு நுட்பமுள்ள சூதாட்டக்காரனாய் மாறுகின்றார். கிளேயர் மட்டும் தனது தகப்பனைக் கவனித்தபடி ஒரு வழக்கறிஞரின் உதவியாளாராக அருகிலுள்ள ஒரு நகரில் வேலை செய்கின்றார். கிட்டத்தட்ட இருபது வருடங்களின் பின் கூப் சூதாட்டத்தின் நிமித்தம் ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கும்போது, கிளேயர் கூப்பை க்ண்டு உதவி செய்யப்போவதுடன் நாவலின் முதற்பகுதி முடிகின்றது.

இரண்டாம் பகுதியில், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமிருக்கின்ற ஆன், பிரான்சிலிருக்கும் ஒரு எழுத்தாளரை (Lucian Segura) பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதும் நோக்கத்தோடு பிரான்சின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் அந்த எழுத்தாளர் வாழ்ந்த வீட்டுக்குப்போகின்றார். அங்கே தங்கியிருக்கும் காலத்தில் ரஃபேல் என்ற ஒரு ஆணோடு நெருக்கம் வந்து அவரோடு சேர்ந்து ஆன் வாழத்தொடங்குகின்றார். ரஃபேலின் சிறுவயது நினைவுகள் அந்த எழுத்தாளரோடு கழிந்திருக்கின்றதென்பது ஆனுக்கு இன்னும் ரஃபேலுடனான உறவு சுவாரசியமூட்டுகின்றது. இரண்டாம் பகுதி முழுதும் லூசியன் என்ற எழுத்தாளரைப் பற்றியும், ரஃபேலின் சிறுவயது நினைவுகள் பற்றியுமே பேசப்படுகின்றது. ஆச்சரியமாக எழுத்தாளார் லூசியனின் வாழ்வு மற்றும் பின்புலம் என்பவை ஆனின் இளவயது வாழ்வுக்கு நெருக்கமாய் இருக்கின்றது. தான் எதை எழுத/எண்ணத் தொடங்கினாலும் அது தனது சகோதரியான கிளேயரின் நினைவுகளோடே தொடங்கும் என்று நினைக்கும் ஆன் தனது கடந்த காலத்துக்கு போவதை ஒருபோதும் விரும்பாதவராக இருக்கின்றார். கிளேயரின் ஆளுமை தனது இருப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றதென்பதையும் ஆன் அறியாதவருமல்ல. ஆனோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ரஃபேலோ அல்லது அதற்குமுன் ஆன் சந்தித்த ஆண்களோ, ஆனின் கடந்த கால வாழ்வு பற்றிக் கேட்கும்போது ஆன் அதைத் தவிர்க்கவே செய்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறான ஆண்களை மூர்க்கமாய் நிராகரித்தே ஆன் செல்கின்றார்.. அநேக பொழுதுகளில் கூப்பை, கிளாரவை நினைத்துகொள்ளும் ஆன திருப்பி அவர்களைச் சந்திக்கவோ தொடர்பில் இருக்கவோ விரும்பவில்லை என்பதோடு, ரஃபேலிடம் தனக்கு சகோதரிகள் எவரும் இல்லையெனத்தான் கூறவும் செய்கின்றார். அத்தோடு தனது கடந்தகாலத்தின் நிழல் தன்னோடு தொடர்ந்து வருவதைத் துண்டிக்கும் நோக்கத்தோடு தனது இளமைக்காலப்பெயரை மாற்றியே ஆன் வாழத்தொடங்குகின்றார்.

பிரான்ஸ் எழுத்தாளர் லூசியனின் வாழ்வும் ஒரு கிராமப்புறச் சூழலில் கழிகின்றது. லூசியனின் பதின்மவயதில் அவர்களின் வீட்டுக்கருகில் புதிதாய்த் திருமணமாகிய மேரியும் (Marie), ரமோனும்(Ramon) குடியேறுகின்றார்கள். ரமோன் சற்று முரட்டுத்தனமானவராக அதிகம் பேசிக்கொள்ளாதவராக இருக்கின்றார். மேரிக்கு, லூசியனின் வயதே (16) இருக்கின்றது. லூசியனின் தாயார் மேரியையும் தனது பிள்ளையாக நினைத்து வாசிக்கவும், நடனங்களைக் கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார். பிற்காலத்தில் லூசியன் திருமணம் செய்து முதலாம் உலகப்போரில் பங்குகொண்டு மீண்டும் தனது கிராமத்துக்கு திரும்பிவருகின்றபோது மேரி நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருப்பதையும், ரமோன் ஒரு குற்றத்தின் நிமித்தம் ஜெயிலில் இருப்பதையும் கண்டுகொள்கின்றார். பிறகு இறக்கும்வரை மேரியைத் தனது பராமரிப்பில் வைத்து லூசியன் காப்பாற்றுகின்றார். நாவலின் இடையில் ஏற்கனவே மேரிக்கும், லூசியனுக்கும் நட்புக்கு மேற்பட்ட ஒரு உறவு முகிழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. பிற்காலத்தில், போர்க்காலத்தில் diphtheria நோயால் பாதிக்கப்பட்டு அதிசயமாகத் தப்பி வருகின்ற லூசியன் அந்நோய் குறித்து விரிவாகக் குறிப்புகளும் எழுதுகின்றார். இறுதியில் அந்நோய் அவரின் கிராமத்தில் பரவும்போது அதன் காரணமாய் இறந்தும்போகின்றார். மேரி-ரமோனின் பிள்ளையான ரஃபேலே லூசியனோடு இறுதிக்காலத்தில் கழித்த ஒரு உயிருள்ள சாட்சியாக நாவலில் காட்டப்படுகின்றார்.

இந்த நாவலின் பல பாத்திரங்கள் -சாதாரண வாசிப்பில் எதிர்ப்பார்க்கின்ற - முழுதான வடிவத்தைத் தந்து முடிவான முடிவுகள் என்று எதையும் தருவதில்லை. வாழ்கை என்பது எப்போதும் ஓடிகொண்டிருக்கும் நதிதான். ஏதோ ஒரு கணத்தில் கால நனைக்கும் நம்மால் கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தைக் கூட முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாது எனபதே யதார்த்தமானது. எனவே ஒவ்வோரு பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தில் நாவலிருந்து நழுவிப்போய்விடுகின்றார்கள். நாவல் முடியும்வரை எப்போதாவது ஓரிடத்தில் திரும்பிவந்து தமது கதையை நிறைவுசெய்வார்கள் என்று நினைத்து வாசித்துமுடிக்கும்போது அவர்கள் மீண்டும் திரும்பியே வருவதில்லையென்கின்றபோது, அட இன்னும் அந்தப் பாத்திரத்தை ஆழமாய் வாசித்திருக்கலாமோ என்று எண்ண முடியாமல் இருக்க முடிவதில்லை. மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தின் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை. அவ்வாறான ஒரு நினைப்புடனேயே இந்நாவல் முழுதும் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றதோ என்று தான் யோசிக்கத்தோன்றுகின்றது.

ஆன், கிளார, கூப் ஒரளவு முக்கிய பாத்திரங்களே தவிர அவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள் என்றில்லை. மையங்களற்ற பாத்திரங்களைக்கொண்டு மையங்களற்ற வகையில்தான் ஒண்டாஜ்ஜி தனது போக்கில் இந்நாவலை எழுதிக்கொண்டே போகின்றார். மூன்றாம் பகுதி முழுதும் ஒவ்வொரு சிறுகதைகளாக தலையங்கமிட்டே எழுதப்பட்டிருக்கும். திடீதிடீரென்று ஒவ்வொரு பாத்திரங்களும் தமது நிலையில் நின்று கதையைச் சொல்லத் தொடங்கும்போது, விளங்கிக்கொள்வதற்கான வாசிப்புக்கான நேரம் நிறையக் கோரப்படுகின்றது. முதலாம் பகுதியில் மகள்களின் பாத்திரங்கள் (ஆன் மற்றும் கிளேயர்) பேச, தந்தை அதிகளவில் மெளனமாகிவிடுகின்றார். அதேபோல இரண்டாம் பகுதியில் மெளனமாக்கப்பட்ட தந்தைகளின் பிரதிநிதியாக நின்று தந்தையாகிய (லூசியன்) அதிகம் பேசத்தொடங்குகின்றார். எல்லாப் பாத்திரங்களும் தமக்கான தனிமையையும் இரகசியங்களையும் கொண்டிருப்பதால், அவற்றை வாசகர் தமக்கு விரும்பிய பாத்திரங்களாக நிரப்பிக்கொள்ளும் வெளியும் வாசகருக்கு இந்நாவலில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக பதினைந்து வயதில் ஓடிப்போகின்ற ஆன், 34 வயதில் ஒரு எழுத்தாளாராக நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தபடுகின்றார். அந்த இடைப்பட்ட காலம் பற்றிய வெளியை வாசகர் தனக்கு உரியதாக வாசித்துக்கொள்ளும் ஒரு சூழலைப்போல நிறைய இடங்கள் நாவலுக்குள் இருக்கின்றன.

கூப்பை ஆபத்திலிருந்து கிளேயர் காப்பாற்றுகின்றபோது கூப் ஒருவித குழப்பநிலையில் இருக்கின்றார். கிளேயரை ஆன் எனவே அழைக்கவும் நினைவுகொள்ளவும் செய்கின்றார். பிறகு கூப்புக்கும் கிளேயருக்கும் என்ன நிகழ்ந்தது என்பதும், கிளேயர் தனத் தந்தையிடம் கூப்பை அறிமுகம் செய்வாரா என்பதும் நாவலில் திறந்தவெளியாக இருக்கின்றது. அதேபோல் அடிக்கடி தனது ச்கோதரி கிளேயரையும், கூப்பையும், தனது தந்தையையும் நினைவுபடுத்திக்கொள்கின்ற ஆன் மீண்டும் அவர்களைச் சந்திப்பாரா அல்லது கடந்தகாலத்தைத் துண்டிக்க தனது பெயரை மாற்றியதுபோல எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்ந்துகொண்டு போவாரா என்பதும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வாழ்க்கையில் தெளிவான பதில்கள் இருப்பதில்லை போல இந்நாவலிலும் பல இடங்களில் எழும் கேள்விகளுக்கு எந்தத் தெளிவான முடிவுகளும் கிடைப்பதில்லை. நாம் சிலவேளைகளில் நமக்கான வாழ்க்கையைத்தான் திருப்பவும் வாசிக்கின்றோமா என்ற மனக்கிளர்ச்சியும் அலுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோவதை இந்நாவலை வாசிக்கும்போது தவிர்க்கவும் முடிவதில்லை.

January 7, 2008

தனி மனிதத்தேர்வுகள்: துரோகங்களும், துயரங்களும்…

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 11:58 am

-உனையே மயல் கொண்டும், பிறவும்…-

குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும் வன்முறையும் அதிகளவு பிரயோகிக்கப்படும்போது, சட்டங்களுக்கு உட்படாத சேர்ந்து-வாழ்தல் போன்றவற்றினூடாக வன்முறை/அதிகார துஷ்பிரயோகம் நிகழ்த்தப்படும்போது சட்டரீதியாக எதையும் அணுகுகின்ற போக்கும் இல்லாதுபோய்விடுகின்றது என்பது கவனத்திற்குரியது. ஆண்-பெண்-அரவாணிகள் இன்னமும் ஒரு சமத்துவமான சூழலில் வாழமுடியாத நிலை இருக்கும்போது ஆகக்குறைந்தது திருமணம் என்ற ‘சட்டம்’ அங்கீகரிக்கின்ற ஒரு அமைப்பை தமது பாதுகாப்பின் நிமித்தம் பலர் நாடுகின்றார்கள். பொருளாதாரரீதியில் தன்னைத்தானே எவரின் துணையின்றியும் இன்றைய சூழலில் பொருந்தி வாழமுடியும் என்று நினைக்கின்ற பெண்கள்/ஆண்கள் திருமணம் என்ற அமைப்பை உடைத்து, சேர்ந்து-வாழ்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர முயல்கின்றனர். எனினும் அமைப்புக்குள்ளோ/ அமைப்பின்றியோ எவர் வாழ்ந்துகொண்டிருந்தாலும், இருப்பின் அர்த்தம் எதுவென்ற கேள்வி எல்லோரையும் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றது.உனையே மயல் கொண்டு என்ற நாவல், குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. கலாநிதிப் பட்டத்திற்காய் ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரனையும், அவர் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களையும் சுற்றிக் கதை நகர்கின்றது. பதினெட்டு வயதில் திருமணமாகி, ஒரு வருடத்திற்குள் குழந்தையொன்றையும் பெற்று, அடிக்கடி மனோநிலை மாறுகின்ற ஷோபனாவின் மீதான ஈடுபாடு காலப்போக்கில் சந்திரனுக்குக் குறைகின்றது. மேலும் அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் ஷோபனாவோடு, குழந்தை பிறந்ததற்குப் பின்பாக ஒரிருமுறைகளே சந்திரனால் உடலுறவில் ஈடுபட முடிகின்றது. அவ்வாறான திருப்தியின்மையில் இருக்கின்ற சந்திரனுக்கு விவாகரத்துப் பெற்ற ஜூலியாவுடன் நெருக்கம் அதிகரிக்கின்றது. சந்திரன் ஏற்கனவே திருமணமானவன் என்றறிந்தும் மனத்தடையில்லாது ஜூலியாவுக்கு சந்திரனோடு இயல்பாய்ப் பழக முடிகின்றது.

இவ்வாறு முக்கோண உறவுகளாய் கதை நகர்ந்துகொண்டிருக்கையில், ஷோபனாவை உளவியல் நிபுணரிடம் கூட்டிச்செல்ல சந்திரன் முயற்சிக்கின்றார். உளவியல் ஆலோசனை பெறுவதே தீண்டத்தகாத விடயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் ஷோபனாவை வைத்தியரிடம் கூட்டிச்செல்லுதல் அவ்வளவு இலகுவான விடயமல்ல. உளவியல் ஆலோசனைகளின்போது ஷோபனாவால் முழுமையாக குடும்ப உறவில் ஈடுபடமுடியாததற்கு, அவர் 83 ஜூலைக் கலவரத்தில் சிங்களக்காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டு வெருட்டப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது (அதன் நீட்சியில் ஷோபனாவிற்கு bipolar disorder இருக்கின்றதென நாவலில் குறிப்பிடப்படுகின்றது). மேலும் கலவரத்தால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரும் ஷோபனாவின் குடும்பத்திலிருந்து அவரது தமையன் இனப்பிரச்சினை எழுச்சிபெற்ற காலங்களில் போராளிக்குழுவில் சேர்ந்து இன்னொரு போராளிக்குழுவால் கொல்லப்பட்ட பாதிப்பின் படிவும் ஷோபனாவில் இருக்கக்கூடும் என்றும் கதையின் ஓட்டத்தில் சொல்லப்படுகின்றது (ரெலோ-புலிகள் மோதல்). இவ்வாறு பல்வேறு உளவியல் அழுத்தங்களோடு இருக்கும் ஷோபனாவிற்கு உடலுறவு உட்பட எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாதிருக்கின்றது. ஷோபனாவின் இந்த உளவியல் பிரச்சினையை(bipolar disorder) அறிந்துகொள்கின்ற சந்திரனுக்கு, தான் ஷோபனாக்குத் தெரியாமல் இன்னொரு உறவில் ஈடுபட்டு வருவது யோசிக்க வைக்கின்றது. என்ன என்றாலும் தன்னை நேசிக்கும்… தன்னிடம் முழுமையாக ஒப்படைத்த ஷோபனாவிற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று சந்திரன் சிந்திக்கத்தொடங்குகின்றார். இதற்கிடையில் சந்திரன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை எழுதுவதில் மும்முரமாய் ஈடுபடுகையில் ஜூலியா இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக்த் தொடங்குவதும் சந்திரனுக்குத் தெரியவருகின்றது. இனித் தான் நல்லதொரு ‘ஆண்பிளையாக’ இருக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றபோது ஷோபனா சந்திரனின் இன்னொரு உறவைக் கண்டுபிடிக்கின்றார். இவ்வாறு பல்வேறு சிக்கல்களில் அகப்படுகின்ற சந்திரன் வேலையின் நிமித்தம் இன்னொரு நகருக்கு மனைவியின் கட்டளையின்படி செல்வதோடு நாவல் முடிகின்றது (நீ மெல்பேண் வருவாய்தானே?…./ எனக்கு தற்போது மன ஆறுதல் ஏற்பட சில காலம் தேவை’ ப 147).நாவல் இருவேறு திசைகளை நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. உளவியல்ரீதியான பிரச்சினை வெளிப்படையாகத் தெரிகின்ற ஷோபனாவிற்கும் சந்திரனுக்கும் இடையில் ஒன்றுமாய்.., இன்னொரு பக்கத்தில் சந்திரனுக்கும் ஜூலிக்குமான நெருக்கங்களுக்கிடையில் கதை விரிகின்றது. நாவலில் ஷோபனாவின் உளவியல் பிரச்சினைக்கு காரணம் தேட டொக்ரர் கந்தசாமியிடம் ஆலோசனைப்பெறப்போகின்ற சந்திரன் -தான் இரண்டு பெண்களுக்கிடையில் தத்தளிக்கும்- தனது உளவியல் பிரச்சினை குறித்து எதையும் பகிர்ந்ததாய்க் காணவில்லை. தமிழ்ச்சமூகம் உளவியல் பிரச்சினைகளை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளுகின்றது என்கின்ற புரிந்துணர்வு இருக்கின்ற சந்திரன், இவ்வாறு தனது மனைவிக்குத் தெரியாது ஈடுபடுகின்ற உறவு, மனைவிக்குத் தெரியவரும்போது தனது துணை இதைவிட இன்னும் ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுவார் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்.

சந்திரனின் தனது பேராதனை வளாகக் காதலை பொருளாதார வசதியின் நிமித்தம் நிராகரிக்கின்றபோது, ‘நீ ஒரு அசலான யாழ்ப்பாணத்தான்’ என்று ஒரு சிங்கள நண்பன் கூறுவதை சந்திரன் தனது புலம்பெயர் -ஆஸ்திரேலியா- வாழ்விலும் மிகவும் கவனத்துடனேயே கடைப்பிடிக்கின்றார். தன்னைவிட வயதுமூத்த ஜூலியா உடலுறவில் தரும் உயரிய இன்பத்தைப் போல, அதற்குப்பின் அரசியல் தத்துவம் இன்னபிறவற்றை தன்னுடன் உரையாடுவது குறித்து மனம் மகிழும் சந்திரன் பதினம்வயதில் நிற்கின்ற ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது இவற்றை அந்த வளரிளம்பெண்ணால் ஈடுகட்டமுடியாது என்று ஆழமாய் யோசிக்கமுடியாது போந்தது எந்தவகையில் என ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும் தான் இன்னொருவருடன் உறவில் ஈடுபடுவதை, தமிழ் நண்பர்களிடையே சந்திரன் பகிரப் பயப்பிடுகின்றார். அவர்கள் ஒரு கொலையைப்போலத்தான் எடுத்துக்கொள்வார்களென தனது இந்திய நண்பனிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கின்றார். இங்கேதான் சந்திரனின் இன்னொரு அசலான யாழ்ப்பாண முகம் வெளிப்படுகின்றது. தனது இருத்தலுக்கு தமிழ் அடையாளத்தை எளிதாய் சுவீகரித்து, கொழும்பிலிருந்து ஒரு இளம்பெண்ணைத் தனது துணையுமாக்குகின்ற சந்திரனுக்கு தனது மனதுக்கு/சமூகத்துக்கு எதிரான விடயமொன்றைச் செய்யும்போது மட்டும் தமிழ் அடையாளம் வெறுப்பூட்டுகின்றது. மேலும் ஜூலியாவை இன்னொரு ஆணுடன் நெருக்கமாய் காண்கின்ற சந்திரன் -வெறுப்பில்- பாலியல் தொழில் செய்யும் விடுதியை நாடிச் செல்கின்றார். அங்கே காத்திருக்கின்ற நேரத்தில் ‘ஞானம்’ பிறந்து -நல்லவேளை எந்தப் பெண்ணும் எனக்குப் பிடிக்காமல் போனது. ஜூலியாவின் மீது ஏற்பட்ட கோபத்தினால் என்னையே கெடுத்திருப்பேன்’ ப -138- என வெளியேறுகின்றார். சந்திரன் பாலியல் விடுதியை விட்டு வெளியேறிவிட்டார்;ஆனால் கதைசொல்லி இன்னும் நகரவில்லை. இதற்கடுத்து மேலைத்தேய பாலியல் விடுதிகள் பற்றி வாசிப்பவர்களுக்கு கதைசொல்லி விரிவுரை செய்யத்தொடங்குகின்றார். தனிப்பட்ட விருப்பின் பேரிலேயும் அரசாங்கத்தின் அனுமதியுடந்தான் இவர்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் எனவும் எழுதச்செய்கின்ற கதைசொல்லி, பாலியல் தொழில்/பாலியல் தொழிலாளி என எழுதாமல் விபச்சாரம்/விபச்சாரி என எழுதுவதிலேயே அவரது நிறத்தை வெளிக்காட்டிவிடுகின்றார். மேலும் ‘தனிப்பட்டமுறையில் விபச்சாரியுடன் உறவு கொள்ள சந்திரன் விரும்பவில்லை’ (ப 139) எனச் சந்திரனை ஒரு புனிதபிம்பமாக ஆக்கவும் கதைசொல்லி மிகவும் கஷ்டப்படுகின்றார்.நாவலின் முக்கிய குறையாக ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்க்கப்படாமல் சிதைக்கப்பட்டதைக் குறிப்பிடவேண்டும். சந்திரனே முக்கியபாத்திரமாகவும், கதை சொல்லி ஒரு ஆணாகவும் இருக்கும்போது ஒரு பெண்ணின் பாத்திரத்தை வளர்ப்பது கடினமானது என்றபோதும், இன்னொரு பக்கத்தில், ஜூலியாவின் பாத்திரத்தின்போது, அவரது மூதாதையர்களின் ஜரிஷ் பின்புலம் குறித்தும் அவரது முன்னைய உறவுகள் குறித்து விரிவாக நாவலில் பேசப்படுவது குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது. இதை இன்னொருவகையாய், ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்த்தெடுக்கும்போது, நாவலில் சந்திரனுக்கான முக்கிய இடம் இல்லாது தானாகவே ஒழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால், ஷோபனா இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் எனவும் ஒரு வாசகர் எடுத்துக்கொளும் வாசிப்புச் சாத்தியமுண்டு. ஓ.எல் பரீட்சையில் சித்தியடையாத ஷோபனாவை, கலாநிதிப்பட்டம் செய்துகொண்டிருக்கின்ற சந்திரன் தனது துணையாக எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொண்டார் எனவும் கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது (கதையில் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இவ்வாறான தேர்வுக்கு யாழ்ப்பாணியர்கள் எதிர்பார்க்கும் கொழுத்த சீதனத்தைத் தவிர வேறெதுவும் இருக்குமுடியாதெனத்தான் வாசிக்கும்போது நினைக்கத்தோன்றுகினறது). எனெனில் ஜூலியாவுடனான உறவிலிருக்கும்போது அரசியல் தத்துவம் இன்னபிற ஈடுபாடுகளை ஜூலியா பேசும்போது சந்திரனின் பாத்திரம் மனமுவகை கொள்கின்றது. தனக்கான அலைவரிசையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காது இருக்கும் சந்திரன் (அல்லது சந்திரனைப் போன்றவர்கள்) ஷோபனா போன்றவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளில் இல்லாது இயல்பாய் இருந்தாலும் இன்னொரு உறவைத் தேடி (இங்கே உடல்தேவைக்குப் பதிலாக, உளத்தேவைக்காய்) போகமாட்டார்கள் என்பதை எங்ஙனம் நம்புவது?

மேலும் சந்திரனின் இன்னொரு அறிவுஜீவி முகம் வேறொரு இடத்தில் வெளிப்படுகின்றது. காய்கறிக்கடையில் சந்திக்கும் வயது முதிர்ந்தவர், ‘தம்பி உங்களைப்போல இளம்பிள்ளையல் படிக்க வரலாம். எங்களைப்போல வயதானவர்கள் மருத்துவ வசதியில்லாமல் சாக வேண்டியதா?’ என்று கூறும்போது சந்திரன் மகாத்மாகிவிடுகின்றார். இப்படிப்பட்ட ‘பொய் பித்தாலாட்டங்கள்’ காட்டி வருகின்றவர்கள் மீது சந்திரனுக்கு (அல்லது கதைசொல்லிக்கு) கோபம் வருகின்றது. இந்தச் சந்திரன் தீவிரமான போர்சூழலுக்குள் வாழ முயன்றிருந்தால், என்ன காரணம் காட்டியாவது ஈழத்தை விட்டு புலம்பெயரும் பிறரின் சோகத்தை விளங்கிக்கொள்ள முயன்றிருப்பார். ஆனால் அவர்தான் அசல் யாழ்ப்பாணத்தவர் ஆயிற்றே. படிப்பை முன்வைத்து பறந்துவந்துவிடுவார். படிப்பை மூலதனமாக்க முடியாதவர்கள் எப்படித் தப்பியோடிவருவது என சந்திரன் இன்னொரு ஆய்வை இன்னொரு கலாநிதிப் பட்டத்திற்காய்ச் செய்யவேண்டுமெனச் சொல்லவேண்டியிருக்கின்றது.

சந்திரனின் பாத்திரம் ஒரு சராசரி யாழ்ப்பாண அறிவுஜீவியாக வார்க்ப்பட்டதையும், ஆண்மய்ய பார்வையினுடாக நாவல் படைக்கப்பட்டதன் பலவீனங்களையும் மீறி, புலம்பெயர் சூழலை மையமாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதால் கவனத்துக்குரியதாகின்றது. மேலும் நமது சமூகம் எளிதாய்ப் புறக்கணிக்கும் உளவியல் பிரச்சினை என்பது ஏதேனும் ஒருவகையில் குடும்ப வாழ்வைச் சிதைக்கக் காரணமாகக்கூடுமென நாவல் சொல்லவரும் புள்ளி முக்கியமானது. நமது தமிழ்ச்சமூகத்தில் பெற்றோராகும், ஆண்/பெண் பிறகு, தமது தனிப்பட்ட வாழ்வு குறித்து அக்கறை கொள்ளாதுபோகும் திசைகள் நோக்கி நாம் நமது உரையாடலை வளாத்தெடுக்கவேண்டும். உடலுறவு/தங்களுக்கென தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல்/தங்களுக்குப் பிடித்ததைச் செய்யாதிருத்தல் போன்றவற்றோடு குழந்தைகளே தமக்கான அனைத்துமென பெற்றோர்கள் மாறும்போது, -மத்தியவயதுகளில் பெற்றோராக இருப்போருக்கு- தமக்கிடையிலான உறவு மீதான சோர்வும்/சலிப்பும் வருவதைத் தடுப்பற்கான மாற்றுவழிகள் குறித்து நிறைய யோசிக்கவேண்டியிருக்கின்றது.

2.

மிலன் குந்தேராவின் (Milan Kundera) நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமான The Unbearable Lightness of Being மனித வாழ்வின் இருத்தலின் மீதும் குடும்பம் என்ற அமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது. மூளை சத்திரசிகிச்சை நிபுணனாக இருக்கும் நாயகன் தோமஸ், ஒரு பெண் பித்தனாக? (womanizer) இருக்கின்றான். அவனது வாழ்வும் தெரேஸா, சபீனா என்ற இரு பெண்களைச் சுற்றியே நகர்கின்றது. பெண்களோடு உடலுறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் தெளிவான எல்லைகள் இருக்கின்றதென நினைத்து வாழ்வை அதன்பாட்டில் கொண்டாடிக்கொண்டிருப்பவன். அவனது பெண்பித்து நிலைமையைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்கின்ற தெரேஸாவிற்கு திருமணத்தின்பின்னும் தோமஸ் ஒரு பெண் பித்தனாக இருப்பதை அறிந்து உளவியல்ரீதியில் ஒரளவுக்கு சிதைவிற்குள்ளாகின்றார். பின்னாட்களில் ரஷ்யா(சோவியத் ஒன்றியம்) செக்கோசிலாவாக்கியா (பின்னாட்களில் செக்) நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது, சுதந்திரத்தை/உயிரைத் தக்கவைப்பதற்காய் சுவிஸிற்கு தோமஸும், தெரேஸாவும் தப்பியோடுகின்றார்கள் (அமெரிக்காவாயிருந்தாலென்ன, ரஷ்யாவாயிருந்தாலென்ன, இந்தியாவாயிருந்தாலென்ன அயல் நாடுகளில் மீது ஆக்கிரமிப்புச் செய்வதும், அந்நாடுகளில் கலாசாரங்களைச் சிதைப்பதும் அளவுகளில் அவ்வளவு வேறுபடுவதில்லையே. மிலன் குந்தேரா ரஷ்யா மீது தொடர்ந்து கடுமையான விமர்சங்களை வைத்துவருபவர் என்பது கவனிக்கத்தக்கது) செக்கில் இருந்தபோது ஒரு சுயாதீனப்புகைப்படப்பிடிப்பாளராய் இருந்த தெரேஸாவுக்கு, தொழில் தேடி சுவிஸில் அலையும்போது தோட்டம்/நிர்வாணப்படங்களை எடுத்தால் மட்டுமே பிரசுரிப்போம் என்கின்ற சுவிஸ் பத்திரிகைத் தொழில் வெறுக்கின்றது. மேலும் சுவிஸ் வந்தும் தோமஸ் பெண்பித்தனாக அலைவதைப் பார்த்து சோர்வு வந்து, தேரேஸா மீண்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருக்கும் செக்கிற்கு திரும்பிச்செல்கின்றார். ஏன் திரும்பிப்போகின்றாய் எனக் கேட்கப்படும்போது, செக்கில் தோமஸ் ஒரு பெண்பித்தனாக இருந்தபோதும் தான் தனித்தியங்க முடிந்திருந்தது. எனக்கு அவனது அன்பு மட்டுமே அப்போது போதுமானதாயிருந்தது. இப்போது எல்லாவற்றின் நிமித்தமும் தோமஸைச் சார்ந்திருக்கவேண்டியிருக்கிறது. எனக்கு வேண்டியது அவனது அன்பு மட்டுமே, நான் தனித்தியங்கவே விரும்புகின்றேன் என்று தெரேஸா கூறுகின்றார்.

பெண் பித்தனாக தோம்ஸ இருந்தாலும், அவனுக்கு பிற உறவுகள் உடலுறவுக்காய்த் தேவைப்படுகின்றதே தவிர, நேசத்திற்கு எனப்பார்க்கும்போது அவனது தேர்வு தெரேஸாவாக இருக்கின்றது. தெரேஸாவோடான அன்பு அவனளவில் உணமையானது, அதை வேறு எவரும் ஈடுசெய்யவும் முடியாது. தெரேஸா செக்கிற்கு மீண்டும் போனதை அறிந்த தோமஸும் செக்கிற்குள் மீண்டும் நுழைகின்றான். சில அரசியல் காரணங்களால் மீண்டும் வைத்திய நிபுணராய் தொழில் செய்யமுடியாது கட்டடவேலை/வர்ணம் பூசுதல் என்பவற்றைத் தோமஸ் செய்துவருகின்றான். தெரேஸாவாலும் தான் முன்பு பணியாற்றிவந்த பத்திரிகையில் இயங்கமுடியவில்லை. ஆரம்பத்தில் செய்துவந்த மதுபானப் பணியாளர் (bartender) வேலையைத்தான் செய்கின்றார் இதற்கிடையில் தோமஸ் மீண்டும் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடுவதை அறிந்து கோபத்தில் -ரஷ்ய உளவாளி என நம்பப்படுகின்ற- ஒருவரிடம் தன்னைத் தெரேஸா இழக்கின்றார். ஓர் இரவில் தனியே அவ் ஆடவனின் வீட்டிற்குப்போகும் தேரேஸாவை, அந்த நபர் உடலுறவுக்கு அழைக்க தான் அதற்காய் வரவில்லையென மறுக்குகின்ற தெரேஸா, பிறகு தோமஸின் மீதிருக்கும் கோபத்தில் ரஸ்யரோடு இணங்கிப்போகின்றார். எனினும் அந்த உடலுறவு ஒரு பாலியல் வன்முறையைப் போலவே தெரேஸாவுக்குத் தெரிகின்றது. இறுதியில் தான் முழுமையாக நேசம் கொள்ளக்கூடிய ஒருவர் தோமஸே என உணர்ந்து, தோமஸிடம் வந்து மீண்டும் செக்கிலிருந்து வேறு நாட்டுக்குப்போய்விடுவோம் என்கின்றார். எனினும் இவர்களிலிருவரின் கடவுச்சீட்டுக்களும் ரஷ்ய அதிகாரிகளால் பறிக்கப்பட்டதால் அவர்களால் வேறு நாட்டுக்குத் தப்பியோட முடியாது போக, ஒரு கிராமப்புறத்திற்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்து விவசாய வாழ்வு செய்து தமக்கான சந்தோசத்தை கண்டெடுக்கின்ற இவ்விணை, முடிவில் ஒரு ட்ரக் விபத்தில் இறந்துபோவதுடன் நாவல்/படம் முடிவடைந்து விடுகின்றது.மிலன் குந்தராவின் இந்நாவல் இருத்தலியத்தையும், குடுமப அமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்களை இலகுவில் ஈர்த்துவிடக்கூடிய தோமஸ் ஏன் திருமணத்துக்குச் சம்மதித்தான் என்று வாசிப்பவர்கள் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எவ்வாறு ஒருவன்/ஒருத்தியின் இருப்பு இருந்தாலும் (ஃபிரைடாவும் இங்கே நினைவுக்கு வருகின்றார்) அவர்கள் நம்பிக்கைகொள்கின்ற/சரணாகதி கொள்கின்ற ஒரு இடம் இருக்கத்தான் செய்கின்றது. அதேயேதான் தோமஸ் தெரேஸாவிடம் தேடியிருக்கின்றான். தோமஸ் மட்டுமில்லை, கண்ணன்களாய் பிருந்தாவனத்தில் புல்லாங்குழல் வாசித்து இன்புற்றிருந்த பலர் பின்னாட்களில் யாரோ ஒருவரிடம் சரணாகதியடைந்த கதைகள் நமது தமிழ்ச்சூழலிலும் நிறைய இருக்கின்றன.

3.
மெட்ரோ (Metro) என்கின்ற இந்திப்படமும் குடும்பம்/திருமணம் அமைப்புக்களின் அபத்தம் பற்றி ஒரளவு பேசுகின்றது. மூன்று கிளைக்கதைகள் அப்படத்தில் இருந்தாலும், திருமணம் செய்த ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவர், தான் தலைமையதிகாரியாக இருக்கும் வேலைத்தளத்திலிருக்கும் பெண்ணோடு அடிக்கடி உடலுறவில் ஈடுபடுகின்றார். இவ்வாறு தனக்காய் நேரத்தை ஒதுக்க மறுக்கும், தன்னைப் புறக்கணிக்கும் கணவனால் சலிப்பு ஏற்படும் அவரின் மனைவி இன்னொரு ஆணுடன் நட்புடன் பழகத் தொடங்குகின்றார். அந்த ஆணோடு உடலுறவுக்குப் போகும் ஒரு கட்டத்தில் அப்பெண் தனது ‘தவறை’ உணர்ந்து திரும்பிப்போகின்றார் (ஆணென்றால் சாவகாசமாய் உடலுறவில் ஈடுபடுவதும், பெண் என்றால் பிறரோடு எவ்வளவு பழகினாலும் ‘கற்புக்கரசியாகவே’ இருக்க விரும்பும் இந்தியத்திரைப்படங்களின் அரசியலை தற்சமயம் மறந்திருப்போம்). இதே சமயம் கணவனின் திருட்டுத்தனம் தெரியவரும்போது மனைவியும் தனது ஆண் நட்புப்பற்றிப் பேசுகின்றார். எனினும் அங்கே ஆண் தனது தவறைப் பெரிதாக எடுக்காது, ஆடவன் மீதான அப்பெண்ணின் நட்பை மட்டுமே கொச்சைப்படுத்திப் பேசுகின்றான் (என்னோடு பகிர்ந்த கட்டிலிலையா… நீயும் அவனோடு சேர்ந்து பகிர்ந்தாய் என்று இன்னபிற வசனங்கள் அதில் வரும்).

இறுதியில் வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போகும் அந்த ஆடவன், இப்பெண்ணை தன்னோடு சேர்ந்து வாழ அழைக்கின்றான். எனினும் கணவன் எவ்வளவு தவறுச் செய்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தமிழ்/இந்திய கலாசாரப்பெண்ணாய் அப்பெண் இருப்பதால், அந்த ஆடவனோடு சேர்ந்து வாழ்வதை மறுத்து கணவனோடு சேர்ந்து வாழத் தங்கிவிடுவதோடு படம் முடிந்துவிடுகின்றது. கணவன் தன்னை நேசத்தோடு கவனிக்காது போகும்போது, மனைவியும் தனக்குரிய வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டாள் என்ற ஒரு சிறுகல்லையேனும் எடுத்துப்போட்டதற்காய் இப்படத்தைப் பாராட்ட வேண்டும். எனினும் இவ்வாறு தனது கணவன் இன்னொரு பெண்ணோடு உறவில் இருந்த நம்பிக்கைத் துரோகத்தை மறந்து, அந்தப்பெண்ணால் மீண்டும் நிம்மதியாக கணவனோடு சேர்ந்து வாழமுடியும் என்பது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என்பதை நினைவில் இருத்திக்கொள்வோம்.4.
இங்கே உன்னையே மயல் கொண்டு என்ற நாவலோடு, அலன் குந்தராவின் The Unbearable Lightness of Beingஐயும், மெட்ரோ திரைப்படத்தையும் இணைத்துப் பேசவேண்டியதற்கு ஆகக்குறைந்து அவை ஒருவித ஆண்மய்ய/ஆணின் நிலைவழி நகர்ந்திருந்தாலும் பெண் பாத்திரங்களுக்கான வெளி கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதற்கே ஆகும். மேலும் நவீனத்துவ காலம் தாண்டி சிந்திக்கத்தலைப்படுகின்ற படைப்பாளிகள் யதார்த்ததை மட்டுமே அப்படியே கொடுத்துவிட்டு தப்பித்துவிடமுடியாது. மாற்றுக்கள் குறித்த புள்ளிகளை நோக்கியும் நகருகின்றபோதே படைப்புக்கள் இன்னும் வளமையானதாகவும் முன்னோக்கி நகரக்கூடியதாகவும் இருக்கும். அலன் குந்தாரவின் நாவல் மனிதவாழ்வின் இருப்புக்குறித்த கேள்வியையும் தனக்குரிய மாற்றுத்தேடலையும் நம் முன்னே வைக்கின்றது. மெட்ரோ படம் குடும்ப அமைப்பின் போலித்தனம் குறித்து கேள்விகளை எழுப்ப முடிந்திருந்தாலும், இறுதியில் அது மீண்டும் குடும்ப அமைப்புக்குள் -எல்லாம் இயல்பாகிப் போய்விடுமென- அடங்கிவிடுவதால் சரிவைச் சந்திக்கத் தொடங்குகின்றது. உனையே மையல் கொண்டு நாவலின் முடிவு ஒரு திறந்தவெளியாக, வாசகர் தமக்கான முடிவைத் தேடும் சாத்தியத்தைத் தந்திருந்தாலும், அங்கே ஷோபனாவின் பாத்திரம் பிற பாத்திரங்கள் போல வளர்க்கப்படாததால் சந்திரன் என்ற ஆணின் வழியே நின்று சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பற்றியும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும் விரிவும் ஆழமான உரையாடல்கள் நிகழத்தபட்டுக்கொண்டிருக்கையில் படைப்பாளி இதுதான் யதார்த்தமாய் நடக்கின்றதென மட்டும் கூறித்தப்பிவிடமுடியாது. ஷோபனாவை நாவலில் அதிகம் பேசவிடாததால், ஷோபனாவின் மீது ஒருவித பரிதாபம் வருவதைத் தவிர வேறு எதையும் கதைசொல்லி வாசகருக்கு விட்டுச்செல்லவில்லை என்பதே இந்நாவலில் முக்கிய பலவீனமாய் இருக்கின்றது. ஆகக்குறைந்தது ஷோபனா அல்லது ஷோபனாக்களுக்கு நாம் வாழும் சமூகம் எந்தவகையான மாற்றீட்டை முன் வைக்கின்றது/ முன் வைக்க முடியுமெனதெனக் கூறாது, ஷோபனாவின் பாத்திரத்தினூடாக தான் தெளிவாய் இருக்கின்றேன் என முடிவில் சொல்வதோடு கதைசொல்லி தப்பிவிடுகின்றார். (சந்திரன் - ஜூலியாவின் நெருக்கம் தெரிந்து ஷோபனா தற்கொலை முயற்சிசெய்து தப்பியவுடன், தான் இப்போது தெளிவாக இருக்கின்றேன் என நாவலில் கூறுகின்றார். அது வார்த்தைகளில் மட்டுமே சாத்தியம். சாதாரணமாய் தற்கொலை முயற்சிக்குப் போகின்றவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஓரிரு வருடங்களாவது ஆகுமென்று அம்முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எளிதாகப்புரிகின்ற விடயம்.) .

நாவலின் நடை வாசிப்புச் சிக்கலில்லாது நகர்கின்றது. மேலும் உடலுறவுகள் போன்ற சித்தரிப்புக்களில் சிறுபிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவது போல அதிக வெளியை எடுக்காது சுருக்கமாய் அவ்வாறான இடங்களிலிருந்து நகர்ந்துவிடுவது நாவலிற்கு கச்சிதமான வடிவத்தைக் கொடுக்கின்றது. முக்கிய பாத்திரத்திற்கு எதிரான மற்றப்பாத்திரமும்/பாத்திரங்களும் வலுவாய் நிறுத்தப்படும்போதே பிரதி இன்னும் விரிந்த தளத்தில் தனக்கான கதையை எழுதியக்கூடியதாக இருக்கும். நடேசனின் இனிவரும் நாவல்களில் அதற்கும் முக்கியத்துவம் கொடுப்பாரென நம்புவோமாக.

(34/408/4Aற்கு…)

November 15, 2007

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 1:35 am

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-

1.
மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.


நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாஜ்ஜி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், பல்வேறு affairs (தகாத உறவு எனச்சொல்வது அவ்வளவு சரியாக இருக்காதென நினைக்கின்றேன்) குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. அந்த affairsஐ எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாஜ்ஜி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பேர்கர் இனத்தவர்களாக (டச், தமிழ், சிங்களம் என்ற பல்லினக்கலப்பு) இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் தாயினது திருமணம் நடைபெறுகின்றது.
மெர்வின் ஒண்டாஜ்ஜியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென…, குடியோடும்/குடியின்றியும் என்று மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். ‘மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்…’ இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாஜ்ஜி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

oooooooooooo

கொழும்பின் கோடைக்காலங்களில் வெயிலிருந்து தப்புவதற்காய், மலையகப்பகுதியில் வேறு வீடுகள் வைத்து அங்கே தங்கும் வசதியுடையவர்களாய், நுவரெலியாவில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் சூதாடுபவர்களாய், தமது குடும்பங்களிடையே அதிக செல்வாக்குள்ளவராய் இருப்பவர்கள் யாரென்று காட்டுவதற்காய் சொந்தமாய்க் குதிரைகள் வளர்ப்பவர்களாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பத்தினர்/உறவினர்கள் மிகுந்த வசதியுடன் இருக்கின்றார்கள். எனினும் அளவிற்கதிமான குடிப்பழக்கத்தால், ஒண்டாஜ்ஜியின் தகப்பனும் தாயும் விவாகரத்துப் பெறுகின்றார்கள். ஒண்டாஜ்ஜியின் தாயார் எந்த உதவியும் தகப்பனிடம் பெறாமல் இங்கிலாந்து சென்று உழைத்து கஷ்டங்களுடன் பிள்ளைகளை வளர்க்கின்றார் (செல்வாக்கான குடும்பம் குடிப்பழக்கம்/விவாகரத்தோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது). இலங்கையை விட்டு தாய், சகோதரகள் புறப்பட்ட பின்னரும் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது பதினொரு வயது வரை இலங்கையில் இருக்கின்றார். அவரது தகப்பன் மெர்வின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கோழிப்பண்ணையொன்றைச் சொந்தமாய் நடத்துகின்றார். விடுமுறைக்காலங்களில் தகப்பனோடும், உடன்பிறவாச் சகோதரிகளோடும் மைக்கல் ஒண்டாஜ்ஜி பொழுதுகளைக் கழிக்கின்றார்.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் இந்தப்புதினத்தில் ஒண்டாஜ்ஜியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவிபுரிகின்றது (மைக்கல் ஒண்டாஜ்ஜியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை ‘நாசூக்காய்ப்’ பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது. அம்மம்மாவிற்கு மத்தியவயதிலேயே இடது மார்பகம் நோயின் காரணத்தால் நீககப்பட, cushion ஆன ஒருவகை செயற்கை மார்பகத்தையே பாவிக்கின்றார். அது பலமுறை தொலைந்துபோவதும், தொலைந்து போகின்ற கதைகளும் சுவாரசியமானவை. ஒருமுறை அதைக் கழற்றி வைத்திருக்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் வளர்க்கும் நாய் அதை எடுத்துச் சென்று நாசமாக்கி விடுகின்றது. மாமியாருக்கும் மருமகனுக்குமான உறவில் அவ்வளவு சுமுகமில்லையாததால், மெர்வின் ஒண்டாஜ்ஜி திட்டமிட்டே நாயைப் பழகி நுட்பமாய் பழிதீர்த்துக்கொண்டார் என்ற ஒரு கதை அக்குடும்பத்தினருக்கிடையில் இருக்கின்றது. இன்னொருமுறை, பெற்றா (Pettah) பஸ்சிலிருந்து வரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் இடது முலையைத் தடவிக்கொண்டு வருவதையும் அதுகுறித்து பிரக்ஞையின்றி இந்தப்பெண்மணி (லைலா) தன்பாட்டில் இருப்பதையும் கண்டு பஸ்சிலிருப்பவர்கள் திகைக்கின்றார்கள்.

oooooooooooo

மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையைவிட்டு வெளியேறியபின் தனது தகப்பன் -மெர்வின்- குறித்து பிறர் கூறுவதையே இப்புதினத்தின் பிற்பகுதியில் குறிப்பிடுகின்றார். உடன்பிறவாச் சகோதரி சூஸன், மெர்வின் குறித்து மிக நெகிழ்வான பல சம்பவங்களைக் குறிப்பிடுக்கின்றார். தனனில் மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவராய்… தன்னோடு மிகுந்த நெருக்கமாய் தந்தையிருந்தவர் என்கின்றார் சூஸன். தனக்கு சிறுவயதில் தெரிந்த தகப்பன் வேறு, பிறகிருந்த தகப்பன் வேறு என்ற புரிதல் ஒண்டாஜ்ஜியிற்கு வருகின்றது. தன்னையும், தனது சகோதர்களைப் போலவன்றி நிதானமாய், கோபப்படாது மென்மையாப் பேசும் உடன்பிறவாச்சகோதரி சூஸனைப் பார்க்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியிற்கு தனக்குத் தனது தாயின் குணங்கள் கடத்தபட்டிருக்கவேண்டும், சூஸனிற்கு தகப்பனின் பாதிப்பிருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றார். எனினும் குடியை இறுதிவரை விடாதிருந்த மெர்வின் தனது இறப்பிற்கான ஒருவருடத்தின்முன் அனைத்திலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தி மிகுந்த வெறுமையுடன் பொழுதைக் கழித்திருக்கின்றாரென்ற குறிப்பும் இருக்கின்றது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பலகலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.

இச்சுயசரிதைப் புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் ஆனால் வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாய் மைக்கல் ஒண்டாஜ்ஜி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாஜ்ஜி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தை (curioristy?) கூட்டுகின்றனபோலும். மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாஜ்ஜியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாஜ்ஜியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.
இப்புதினத்தின் பலவீனம் என்று பார்க்கும்போது, வேர்களைத் தேடிய பயணத்தில் தகப்பன் மட்டுமே நிறைய இடங்களை ஆக்கிரமித்துவிடுவது வாசிப்பவருக்கு சிலவேளைகளில் அலுப்பைத் தரக்கூடும். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தாய் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே வருகின்றது. சிலவேளைகளில் மெர்வின் ஒண்டாஜ்ஜி போல சுவாரசியம் தரக்கூடிய ஒரு ஆகிருதியாக தாய் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதைவிட முக்கிய பலவீனம் என்னவென்றால், இந்நூல் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கப் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பம் வேர்களை ஆழப்பதித்திருந்தாலும், ஒருவித அந்நியர்களாகவே இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். கறுவாத்தோட்டம் முதல், நுவரெலியா, கண்டி என்று மலையகப்பகுதிகள் வரை சித்தரிப்புக்கள் இருந்தாலும், அந்த மலையகத் தோட்ட மக்களின் இருண்ட வாழ்வு பதிவுசெய்யப்படவேயில்லை. ஜேவிபியின் கிளர்ச்சி பற்றிக்கூட அக்கறை கொள்கின்ற ஒண்டாஜ்ஜி, பல நூற்றாண்டுகளாய் நுகத்தடி மனிதர்களாய் எல்லோராலும் கைவிடப்பட்ட அம்மக்கள் பற்றி தனது பார்வையை அக்கறையுடன் சற்றுக்கூடத் திருப்பினாரில்லை (குதிரைப் பந்தயத்தில் சூதாடுகின்ற பகுதிகளில் மட்டும் இவ் அடித்தள மக்கள் குறித்த சிறு குறிப்புகள் வருகின்றன).

2.
Coming Through Slaughter அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை. நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் Boldenனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.


ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. (Barber shop போன்ற அண்மைய கோலிவுட் படங்களும், பல ராப் பாடல்களும் இதை இன்னும் நுணுக்காய்க் காட்டுகின்றன). ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் (The Cricket) என்று நகரிலுள்ள விலைமாதர்களின் விபரங்க்ளுடன் தகவல் சஞ்சிகை கூட வெளியிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், ‘மாமா’ வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார். தனது கோபத்தை/காமம் இல்லாத பொழுதை, ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே ‘வித்தியாசமாய்ப்’ பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies….Bullets of music delivered onto the bed we were on…(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.
ஏற்கனவே இருந்த போல்டனின் இசைக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருதிசையில் போய்விட்டதறிந்து போல்டனைத் தனிமையும் நண்பர்கள் எவருமற்ற வெறுமையும் இடைவிடாது துரத்துகின்றது. மேலும், போல்டனின் முன்னாள் காதலியான நோரா இப்போது வேறொருவரோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றார். அந்த நபர் போல்டனின் இசைக்குழுவில் இருந்தவரும், நண்பருமென அறிந்து போல்டனின் வேதனை இன்னும் கூடுகின்றது. ஒரு ஊர்வலத்திற்காய் (parade) ஜாஸை வாசிக்க நோராவில் வீட்டில் சில நாட்கள் போல்டன் தங்கியிருக்கின்றார். அப்போது அவரது முன்னாள் காதலியுடனும் பிள்ளைகளிடமும் அன்பும் நெகிழ்வுமாய் பொழுதைக் கழித்து. அந்த ஊர்வலத்தில் அற்புதமான ஜாஸ் இசையை ஒரு குழுவுடன் இணைந்து கொடுக்கின்றார். தொண்டையால் இரத்தம் பீறிட்டெழுகின்றவரை தன்னை மறந்து போல்டன் வழங்கிய அற்புதமான அந்த இசை நிகழ்வை மக்கள் நீண்டநாட்களிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஜாஸோடு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு வாசகரைக்கூட இதை விவரிக்கையில் மைக்கல் ஒண்டாஜ்ஜி அருகில் இருந்து பார்ப்பதுபோல இழுத்துச்சென்றுவிடுகின்றார்.. அதுவும் அந்த ஊர்வலத்தில் காணும் ஒரு பெண்ணை கற்பனையில் நினைத்து உருகி அவளோடு உடலுறவு கொள்கின்ற போல்டனின் ஆசையைப்போல இசையும் அதனோடு நகர்ந்து போகின்ற வர்ணிப்பு மிக அற்புதமானது. போல்டனின் அந்த இசையின் இனிமையும், erotic தன்மையையும் பிரதியிற்குள்ளிலிருந்து அப்படியே நமக்குள்ளும் வந்திறங்கிக்கொள்கின்றது. Fluff and groan in my throat , roll of a bad throat as we begin to slow. Tired. She still covers her my eyes with hers and sees it slow and allows the slowness for me her breasts black under the wet light shirt., sound and pain in my heart as death. All my body moves to my throat and I speed again and she speeds tired again, a river of sweat to her waist her head and hair back bending back to me, all the desire in me is cramp and hard, cocaine on my cock, eternal, for my heart is at my throat hitting slow pure notes inth the shimmy dance of victory… (p 130 & 131).

தனது முப்ப்த்தொரு வயதிற்குப் பிறகு மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ…, திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படவில்லை (ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது). ஜாஸ் இசையின் நுட்பங்களைக்கற்று வளர்ந்துவருகையில் போல்டன் தனது இசை தெரிந்த நண்பர்களை விட்டு விலகி, ஜாஸ் இசையில் விருப்பற்று பாலியல் தொழிலாளர்களை மட்டும் படங்கள் எடுத்துக்கொண்டு திரியும் Bellocq என்பவரோடு அதிக காலங்களைக் கழிப்பதும், பிற நண்பர்கள்போல அல்லாது இசை குறித்து எதுவும் திருப்பிக் கதைக்காத அவரோடு இரவு பகலாய் பொழுதைக் குடித்துக் கரைத்ததாலும் போல்டனுக்கு ஜாஸ் பற்றிய விருப்பு சிதறிப்போயிருகலாம் என்ற ஒரு வாசிப்பு நமக்கு கிடைக்கின்றது. இதையேதான் போல்டன் ஊரையும்விட்டு ஓடிவிட்டு திரும்பிவரும்போது நோராவும் கூறுகின்றார் Look at you. Look at what he(Bellocq) did to you..Look at you. Look at you. Godamit. Look at you (p 127). ஆனால் எல்லோரையும் விட, Bellocqயே, போல்டன் ஊரைவிட்டு ஓடியபோது அதிகம் அதிர்ச்சியடைகின்றார். மேலும், போல்டன் ஊரிற்குத் திரும்பி வரும் இரண்டு வருட இடைவெளிக்குள், Bellocq நெருப்பு மூட்டி தற்கொலையும் செய்துகொள்கின்றார்.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும்விடுகின்றது,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது. எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாஜ்ஜி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden’s Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.

(அ.யேசுராசாவிற்கு…)

August 24, 2007

வரலாற்றின் தடங்களில் நடத்தல்

-Woolf in Ceylon by Christopher Ondaatje-

காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு வடிவங்களில் ஈழம், இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரங்களில் பிரிக்கமுடியாதவளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இன்றும், விரிவான அறிவும் தெளிவும் ‘சுதேச’ மொழிகளில் ஒருவருக்கு இருந்தாலும், அவர் ஆங்கிலத்தையும், அதனூடாக ஆங்கில இலக்கியங்களையும்/தத்துவங்களையும் அறிந்துவைத்திருந்தால் மட்டுமே, அவரது கருத்துக்கள் ‘அறிஞர் குழாத்தில்’ கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படக்கூடிய சூழல் தமிழ்ச்சமூகத்தில் இருக்கின்றது எனபதை நாமனைவரும் அறிவோம். நமது கல்வித்திட்டம் கூட இன்னும் முறைமையாக மாற்றியமைக்கப்படாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் (காலனித்துவ) பாடத்திட்டத்தின்படி அண்மைக்காலம் வரை நீட்டிக்கபட்டுக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

‘இலங்கையில் வூல்ப்வ்’ (Woolf in Ceylon) என்ற இந்நூல், வூல்ப்வ் அரச அலுவலராக 1904-1911 காலப்பகுதிகளில் ஈழத்தில் பணியாற்றியபோது எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து விரிவான சம்பவங்களுடன் மீண்டும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜினால் எழுதப்பட்டிருக்கின்றது. வரலாற்றின் ஆவணங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கள் மிக அரிதாக இருக்கும் இன்றைய நமது போர்ச்சூழலில் இப்படியான காலனித்துவவாதிகளின் குறிப்புகளினூடாகத்தான் நாம் நமது நாட்டையும் ஊர்களையும் அறிந்துகொள்ள, சார்ந்து நிற்கவேண்டியிருக்கின்றது என்பது அவலமான ஒரு விடயமே. வூல்ப்வ் இலங்கையில் இருந்த காலங்களில் எழுதிய குறிப்புகளையும், இன்னபிற அவரின் படைப்புக்களையும் வாசித்த கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி (எழுத்தாளர் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் சகோதரர்) போர் நடைபெறாத ‘சமாதான காலம்’ எனச்சொல்லப்பட்ட 2003களில் இலங்கைக்குச் சென்று, வூல்ப்வ் பயணித்த இடங்களை வூல்ப்பின் குறிப்புகளை வைத்துக்கொண்டு மீண்டும் பார்ப்பதை/பயணிப்பதை ((revisiting?) இந்நூலில் எழுதியிருக்கின்றார். வூல்பின் 1900 காலகட்டத்தோடு, இன்றைய ஈழத்தை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி விரித்து எழுதிச்செல்வது வெகு சுவாரசியமான வாசிப்பை நமக்குத் தருகின்றது. மேலும், கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவரது அனுபவம் சார்ந்த சொந்தக்குறிப்புகளும் இந்நூலிற்கு இன்னும் வளத்தைச் சேர்க்கின்றது.

வூல்ப்வ் பணியாற்றிய யாழ்ப்பாணம், மன்னார், கண்டி, ஹம்பாந்தோட்ட (தமிழில் அம்பாந்த்தோட்டை?) போன்ற அனைத்து இடங்களுக்கும் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிக்கின்றார். இலங்கைக்கு வரும்போது ஒரு ஏகாதிபத்தியவாதியாக இருக்கின்ற வூல்ப்வ் பின்னாட்களில் எப்படி தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளாராக மாறுகின்றார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது. கொழும்பில் இரண்டுவாரம் கச்சேரியில் வேலை செய்து விட்டு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு வூல்ப்வ் 1904 ஆண்டளவில் போகின்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வூல்ப் -அப்போதிருந்த தொடர்ச்சியில்லாத புகைவண்டிப்பாதையால்- அனுராதபுரத்திலிருந்து ஆனையிறவு வரை மாட்டுவண்டியில் பயணிக்கின்றார் (ஏறத்தாள முப்பத்தாறு மணித்தியாலங்கள் எடுத்த பயணம் அது). யாழ்ப்பாணக் கச்சேரியில் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் வூல்பவ் மிகத்துல்லியமாய் இறுக்கமான யாழ்ப்பாணச்சமூகத்தை கணித்துமிருக்கின்றார். யாழ்ப்பாணத்தவர்களின் சாதித்திமிர், வேலிச்சண்டை உட்பட கல்வித்திமிர்வரை அனைத்தையும் தனது குறிப்புகளில் வூல்ப்வ் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று யாழ்ப்பாணம், இலங்கையில் ஏனைய பகுதிகள் விரைவில் சுவீகரித்துக்கொண்ட அய்ரோப்பிய கலாசாரத்தை போன்று இருக்காது, தனித்து நின்ற ஒரு பிரதேசமெனவும் குறிப்பிடுகின்றார். முக்கியமாய் அய்ரோப்பியப் பெருநகரங்களுக்கு இருக்கும், ஒரு பெருநகரும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர்ப்பகுதிகள் போன்ற அமைப்பை அமையவிடாது, யாழ்ப்பாணத்தின் எண்ணற்ற பின்னலான தெருக்களும், ஒழுங்கைகளும் தடுத்துவிடுகின்றன என்று தனது அவதானங்களை வூல்ப்வ் முன்வைக்கின்றார். அதேபோன்று கிடுகுவேலிகளுக்குள் அடங்கிவிடுகின்ற ஒரு கொண்டாட்டமற்ற சமூகம் யாழ்ச்சமூகமெனவும் எழுதிச் செல்கின்றார். மேலும் பக்கத்து வீட்டுக்காரன் எப்போது வெளியே போவான் என்று காத்துக்கொண்டிருந்துவிட்டு, தங்களது கிடுகு வேலியை மற்றவனுக்குச் சொந்தமான நிலத்தில் சில அங்குலங்களாவது நகர்த்திப்பார்க்கின்ற சமூகம் என்றும் உண்மையை உள்ளபடியும் எழுதவும் செய்கின்றார் (…these cadjan fences are famous. It is said that the people of Jaffna spend much time of their time waiting for their neighbour to go out, so that they may shift the dividing fence a few inches on to his land). யாழ்ப்பாணத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதுதான் வூல்ப்வ் ‘அரியதான’ தனது கண்ணன் தன்மையை (கன்னித்தன்மைக்கு ஆண்பால்..? நான் கண்டுபிடித்ததுதான்) முதன்முதலாக அங்கிருந்த ஒரு பேர்கர் (Burghar) பெண்ணிடம் இழக்கின்றார்.

வூல்ப்பிற்கு யாழ்ப்பாணம் ஒரு உவப்பான சூழ்நிலையைத் தரவில்லை. இறுக்கமான சூழலால் மட்டுமின்றி, யாழ்ப்பாணத்து உயர்தர மக்களுடன் வரும் எதிர்ப்புணவும், வூல்ப்பால் யாழை, இலங்கையில் தனக்குப் பிடித்தமான ஒரு இடமாக ஏற்றுக்கொள்ள முடியாது செய்கின்றது. இதை கிறிஸ்டோபர் ஒண்டாஜ்ஜி இன்னும் தெளிவாக தனது வார்த்தைகளில் முன்வைக்கின்றார்…My (Christopher Ondaatjee) own expression, judging from the long chapter on Jaffna in Wolf’s autiobiography, is that the friction was mainly with the best-educated people, not with the majority, the village cultivators and fisher people from the coast. Imperisalism granted on the feelings of the professional men, educated in English, much more than on those of the poor and unlettered– just as it did in imperial India…. This laid down the future aim of the colonial system of education in the sub continent: to create ‘a class of persons Indian in blood and colour, but English in opinions, in morals and in intellect”). யாழ்ச்சூழலில் இருந்த சாதியை மையமாக வைத்து வூல்ப்வ், ‘இரண்டு பிராமணர்கள்’ (The Two Brahmans) என்றொரு கதையை எழுதியிருக்கின்றார் (பிராமணர்கள் என்பதில் அவர் வெள்ளாளர்களையும அடக்குகின்றார் எனத்தான் நினைக்கின்றேன்). சாதியில் உயர்நிலையில் இருக்கும் இரண்டு பிராமணர்களான செல்லையாவும், சிற்றம்பலமும் எப்படி தமது சாதிகளிலிருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என்பதை இக்கதை சொல்கின்றது. செல்லையாவுக்க்கு மீன்பிடித் தொழிலில் ஆசை வந்து அதை இரகசியமாக ஒரு மீனவரிடம் இருந்து பழகுவது அவர் சார்ந்த சாதிக்குத் தெரியவர அவர் அச்சாதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகவும், சிற்றம்பலம் தனது வீட்டுக்கிணற்றை வெட்டித்தந்த ஒரு தாழ்த்தபட்டவருக்கு கருணையுடன் கூடக்காசு கொடுத்து அன்பு பாராட்டியதற்காக ஒதுக்கப்படுவதாகவும் இக்கதை விரித்துச்சொல்லுகின்றது. ஆனால் இப்படி தங்கள் சாதியிலிருந்து ஒதுக்கப்பட்ட இரு குடும்பத்தினரின் அடுத்த சந்ததியினர் (செல்லையாவின்) மகன் ஒருத்தரும், (சிற்றம்பலத்தின்) மகள் ஒருத்தியும் காதலிக்கும்போது கூட எப்படி அவர்களுக்கிடையில் சாதித்திமிர் மீண்டும் முளைத்தெழுகின்றது என்பதை வெளிப்படையாக வூல்ப்வ் அக்கதையில் குறிப்பிடுகின்றார் (Each family finally accuses the other of polluting the caste. “Fisher! Low-caste dog!” shouted Cittampalam. “Pariah! scaramed Chellaiya). இறுதியில் இச்சாதிய இறுக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற செல்லையாவின் மகன் ஊரைவிட்டே ஒடிப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகின்றது.

யாழில் பணிபுரிகின்ற காலங்களில் தற்காலிகமாய் சில மாதங்கள் மன்னாருக்கும் சென்று வூல்ப்வ் வேலைபார்க்கின்றார். சனநெருக்கடியற்ற மன்னார் வூல்ப்பிற்கு யாழ்ப்பாணத்தைவிட அதிகம் பிடிக்கின்றது. அங்கே முத்துக்குளிக்கின்ற மீனவர் சமூகங்களும், அரேபியர்களும் அவ்வளவு இறுக்கமான சாதிய அடுக்குநிலையில் இயங்கிக்கொண்டிருக்காததையும் வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். பிறகு வேலை இடமாற்றங்காரணமாய் கண்டியிலும், இறுதியாய் ஹம்பாந்தோட்டவிலும் வூல்ப்வ் பணிபுரிகின்றார். ஹம்பாந்தோட்டாவில் உதவி அரசாங்க அதிபராக (Assistant Government Agent) பணிபுரிவதால் அவர் விரும்பிய சில விடயங்களை -முக்கியமாய் புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பது- அவ்வூர் மக்களுக்காய்ச் செய்யமுடிகின்றது. ஒரு தமிழ்ப்பாடசாலையும் ஹம்பாந்தோட்டாவில் வூல்ப்வ் ஆரம்பித்துவைத்தார் என்ற குறிப்பும் வருகின்றது. கண்டியில் பணிபுரிகின்ற காலத்தில் - தூக்குத்தண்டைக்கு எதிரான கருத்துடையவராக வூல்ப்வ் பின்னாட்களில் இருந்தாலும்- வூல்ப்பின் அனுமதியுடன் கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஏழெட்டுப்பேர் தூக்கிலிடப்படுகின்றார்கள். அதேபோன்று பிரிட்டிஷகாரர்கள் ஒபியம் (போதை) பயிர்களை ஹம்பந்தோட்டாவில் பயிரிடும்போது எவ்வித எதிர்ப்பும் காட்டாது அதன் மூலம் வரும் வரியைச் சேகரித்து அரசாங்க வேலைகளுக்காய் வூல்பவ் செலவிடுகின்றார். இறுதியில் ஒரு சிங்கள விவசாயின் வீட்டை -ஒரு பிரச்சினையின் நிமித்தம்- தீ மூட்டச்சொல்லும் மேலிடத்தின் பணிப்புக்கு அடிபணியாததால் அவர் -ஒருவருட கட்டாய விடுமுறையில்- திருப்பி இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றார். அதற்கடுத்த வருடத்தில் (1912) வேர்ஜினியாவை வூல்ப்வ் இங்கிலாந்தில் திருமணம் செய்கின்றார். முதலிரண்டு முறைகள் வூல்ப்வ் propose செய்தும் மறுக்கின்ற வேர்ஜினியா, மூன்றாவது முறையாக இந்தச் ‘சதமில்லாத யூதரை’ (penniless Jew) திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கின்றார். ஒரு வித மனப்பிறழ்வு நோயிற்கு அடிக்கடி ஆளாகும் வேர்ஜினியாவுக்கு -அவர் ஆற்றில் தற்கொலை செய்யும்வரை- தான் உண்மையாக இருந்தேன் என வூல்ப்வ் கூறிக்கொண்டாலும், வேர்ஜினியா உயிரோடு இருந்த காலங்களிலேயே வூல்ப்விற்கு, ரெக்கி (Trekkie) என்ற திருமணமான பெண்ணோடு உறவு இருந்திருக்கின்றது. அதேசமயம், சிறுபிராயத்தில் தனது உடன்பிறவாச்சகோதரர்களால் (half brothers) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான வேர்ஜினியாவுக்கும் ஆணுடான உறவு அவ்வளவு உவப்பானதாய் இருக்காததால், இடைப்பட்ட சில காலங்களில் அவரொரு லெஸ்பியனாகவும் இருந்திருக்கின்றார்.

1960களில், வூல்ப்வ் மீண்டும் இலங்கைக்கு, தனது ‘தோழி’ ரெக்கியோடு பயணிக்கின்றார். முன்பு தான் பணிபுரிந்த யாழ்ப்பாணம் உட்பட அனைத்து இடங்களையும் மீண்டும் பார்க்கின்றார். 1900களில் தான் பார்த்த யாழ்ப்பாணம் இப்போதும் அப்படியே மாறாதுதான் இருக்கின்றது என்று வூல்ப்வ் குறிப்பிடுகின்றார் (In Jaffna he felt the place had not changed much since his time and was told that the people there were very conservative. Even in 1960, Jaffna had a character distrinct from other towns). அதேபோன்று 1900 களிலேயே சிங்கள/தமிழ்/முஸ்லிம்/பேர்கர் மக்களுக்கு சுவிஸிலிருக்கும் ஒரு அரசாங்க அதிகார அமைப்பே சரிவரும் என்று ஒர் தெளிவான பார்வையோடு வூல்ப்வ் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் (அந்தக்காலகட்டத்தில் -1900-களில் எவ்வித தமிழ்- சிங்கள இனக்கலவரமும் தோன்றாததையும் நினைவில் கொள்ளவேண்டும்; ஆனால் கண்டியில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரங்கள நடந்ததை வூல்பவ் குறிப்பிடுகின்றார்). அதேயேதான் 1960 பயணித்தபோது, சிங்கள அரசியல்வாதியொருவரின் மேடைப்பேச்சை கேட்டபோது தனக்கு இப்படித்தோன்றியதாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார்: Woolf mentioned listening to one Sinhalese politician “screaming in a monotonous freenzy which carried me straight back to the days before the war when turned on the wireless and heard Hitler screaming through the microphone at the frenzied Nazis”.

வூல்ப்வ் எழுதிய இன்னொரு சிறுகதையான, ‘நிலவால் சொல்லப்பட்ட கதை’ (A Tale Told by Moonlight) ஐந்து உயர்தர வர்க்க ஆங்கிலேய ஆண்கள் ஒரு மாலைபொழுதில் இங்கிலாந்தில் ஒரு சொகுசான இடத்தில் இருந்துகொண்டு தாம் கீழைத்தேய நாடுகளில் பெற்ற அனுபவங்கள் குறித்து உரையாடுவதாய் அந்தக்கதை இருக்கின்றது. அதில் ஒரே ஒருவர் மட்டுமே இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பவர். அவர் அடிக்கடி தமது பேச்சில் தமிழ்-சிங்களச் சொற்றொடர்களைச் சாதாரணமாய் உபயோகித்துவிடுவார். பிறகு மற்ற நண்பர்கள் நீ என்ன சொல்கின்றாய் என்று விளக்கந்தெரியாது வினாவுகின்றபோது அந்தநபர் விரித்துச் சொல்லத்தொடங்கிவிடுவார். அதில் ‘இராமேஸ்வரத்திலிந்து காசி வரை’ என்ற தமிழ்ச்சொற்றொடர் கூட வரும் (இந்தியாவை முழுதும் அறிந்தவர் என்பதுதான் இதற்கு அர்த்தம் என்ற பொழிப்புரையும் அந்தக்கதையில் கொடுக்கப்படும்). அதில் ‘வேசி’, ‘ஐயோ’ போன்ற சொற்கள பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கதையின் ஒரு பகுதியாய், கொழும்பில் சிவப்பு விளக்கு ஏரியாவிலிருக்கும் ஒரு பெண்ணில் மையல் கொள்ளும் ஒரு வெள்ளையர், அந்தப்பெண்ணை அந்தப் பகுதியிலிருந்து விடுவித்து ஆங்கிலமும், மேலைக்கலாச்சாரமும் சொல்லிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்வார். என்ன தான் சொல்லிக்கொடுத்தாலும், தன்னைப்போல ஒரு அறிவுஜீவியாக இருந்து உரையாடும் ‘வரம்’ அந்தப்பெண்ணுக்கு கைவரவில்லை என்ற அலுப்பில் பின்னர் அந்தப்பெண்ணைக் கைவிட்டு இங்கிலாந்திற்கு அந்த வெள்ளையர் போய்விடுகின்றார். அவர் இங்கிலாந்து போன இரண்டாவது நாளில் Celestiinahami ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கின்றார். ஆனால் இறக்கும்போதுகூட அந்தப் பரிதாபமான பெண், ‘பிங்க் கலர் ஸ்கேர்ட்டும், வெள்ளை நிற ஸ்ரொக்கிங்ஸும், சப்பாத்தும்’ அணிந்தபடிதான் (மேற்கத்தைய கலாசார அடையாளங்களுடன்) தற்கொலை செய்திருப்பார். இங்கே, இப்படி வெள்ளையர்கள் தங்கள் (உடல்?)விருப்புக்கு துணைகளாக்கும் பெண்களை, பின்னாட்களில் வெள்ளையர்கள் வாழும் மேற்குச்சமூகம் இப்பெண்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும், அதேசமயம் இப்படி வெள்ளையர்களை மணப்பதால் அல்லது அவர்களோடு திரிவதால், மீண்டும் இந்தப்பெண்களை இவர்கள் சார்ந்திருந்த சமூகம் இவர்களை உள்வாங்க மறுக்குகின்ற அவலத்தையும் நாம் நினைவில் இருத்திக்கொள்ளலாம். லியனார்ட் வூல்ப்வ், பாப்லோ நெருடா போன்றவர்களாவது ஒருவித பாவமன்னிப்புப்போல தாங்கள் கீழைத்தேயங்களில் –தமது அதிகாரத்தைப்பாவித்து– சிதைத்த பெண்களைப்பற்றியாவது வெளிப்படையாகக் குறிப்பிடும்போது ‘அட அறுவாங்கள் இதையாவது சொன்னார்களே’ என்று கேட்டுக்கொள்ளமுடிகின்ற அதேசமயம், சத்தமில்லாது எல்லா அட்டூழியங்களும் செய்துவிட்டு ஆனந்தசயனம் கொள்ளும் மற்றக்கனவான்களின் கல்லறைகளைத் தட்டி எழுப்பியா நாம் அவர்களை மறுவிசாரணை செய்யமுடியும்?

இந்நூலில், வூல்ப்வ் இருந்த இடங்கள் பயணித்த பாதைகள் ஊடாக கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி பயணிப்பதுடன், இன்றைய ஈழச்சூழ்நிலை குறித்து தனது குறிப்புக்களை எழுதிச்செல்வது ஒரு நூற்றாண்டுக்கு முன்பான பழைய இலங்கையை இன்றைய ஈழத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பை வாசகருக்கு ஒண்டாஜ்ஜி வழங்குகின்றார். யாழ்ப்பாணத்தில் வூல்ப்வ் பணி புரிந்த, தங்கியிருந்த அனேக இடங்கள் போரின் நிமித்தம் இன்று சிதைவுற்ற இட்ங்களாய், அடையாளங்காணமுடியாத பகுதிகளாய், கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் அபாயகரமான பிரதேசங்களாய் இருப்பதை கிறிஸ்ரோபர் படங்களாலும் குறிப்புகளாலும் இந்நூலில் நமக்கு ஆவணப்படுத்துகின்றார். யாழ், மன்னர் உட்பட நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளுக்கும் தான் போனது பற்றி ஒண்டாஜ்ஜி விரிவாக எழுதியதோடு ஏ9 (A9) பாதையினூடாக பயணித்தபோது கண்ட போரின் வடுக்களையும் பதிவு செய்திருக்கின்றார் (ஆனையிறவில் சிதைவுற்றிருக்கும் ராங் பற்றிய (tank) குறிப்புக்கூட வருகின்றது). ஒரளவு அரசாங்கச்சார்புச் செய்திகளைத்தான் அதிக இடங்களில் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் என்றபோதும், தான் பார்த்த சிங்கள, தமிழ் மக்களிடையே அவ்வளவு வித்தியாசமோ, வெறுப்போ தெரியவில்லையெனவும். ஆனால் இலங்கை அரசாங்கமும், சிறிலங்காப் படைகளும், விடுதலைப்புலிகளுந்தான் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்று தான் விளங்கிக்கொண்டதை நூலின் இறுதியில் கிறிஸ்ரோபர் ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார்.

யாழ் கச்சேரியின் சிதைவடைந்த நிலையைப் பற்றிக்கூறும்போது, எனக்கும் சிறுவயதில் அப்பா யாழ் கச்சேரியில் பணிபுரிந்த காலங்களில் அவரோடு சில தடவைகள் கச்சேரிக்குப் போன ஞாபகங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. 95 000 மேற்பட்ட புத்தகங்களும், மீண்டும் பெறவே முடியாத அரிய வரலாற்று ஆவணங்களும் யாழ் நூலகத்தோடு அழிக்கப்பட்ட வரலாற்றையே -இன்றைய உக்கிரமான போர்க்காலம்- மிகச்சின்ன விடயமாக்கிக்கொண்டிருக்கும்போது, பதினைந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகள் கூட ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்ப்பது போன்ற பார்வையை தருவது வியப்பில்லைத்தானே.

ஆரம்பத்தில் தான் ஒரு ஏகாதிபத்தியவாதியாக -தன்னையறிமால் இருந்திருந்தாலும்- பின்னாட்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருந்ததாக வூல்ப்வ் குறிப்பிடுகின்றார். இங்கிலாந்தில் தான் அமைத்த Bloomsbury group ஊடாக பிரிட்டிஷ் அரசின் காலனியாதிக்கத்துக்கு எதிராக வூல்ப்வைப் போன்றவர்கள் குரல் கொடுத்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். வூல்ப்வ் எழுதிய குறிப்புகளை அவரெழுதிய காலத்தில் வைத்தே பார்க்கவேண்டும் என்றாலும், பல இடங்களில் வூல்பவ் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருப்பதை நாம் மறைத்துக்கொண்டு உரையாடியவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அழிக்கப்பட்ட சிங்களக்கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதிய வூல்ப்பின் நாவலான, The Village in the Jungle காலனியாதிக்கெதிரான ஒரு புதினமாய் இன்று பல விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது. அநேக காலனியாதிக்கவாதிகள் போல சாதி, தாழ்த்தப்பட்டவர்களின் அவலம் போன்ற விடயங்களை, தங்களுக்கு அவசியமான விடயங்களல்ல எனப்புறந்தள்ளாது இவ்வாறான விடயங்களை கவனத்துடன் எடுத்துக்கொண்ட வூல்ப்வ் ஒதுக்கப்படவேண்டிய ஒரு காலனியாதிக்கவாதியும் அல்ல. முக்கியமாய், ஹம்பாந்தோட்டாவில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட பெண்ணொருவர் ஒரு வழக்கை வூல்ப்வ் முன்னிலையில் கொண்டுவருகின்றார். தாழ்த்தப்பட்ட பெண்கள், மார்பைத் தொடும் ஒரு சின்னத்துணி மட்டுமே அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், இரவிக்கை (blouse) போட தனக்கு அனுமதி தருமாறு அப்பெண் கேட்கின்றார். எனென்றால் அரிசி போன்றவை இடிக்கும்போது இரவிக்கை போடாதிருப்பதன் அசெளகரியங்களை அப்பெண் முன்வைக்கின்றார். வூல்ப்வ் அவ்வ்வூர்களின் ‘கலாசாரம்/மரபுகள்’ மீது தான் இடையீடு செய்வதை விரும்பவில்லை என்று கூறுகின்றபோதும், இப்பெண் விரும்பினால் அவர் அவ்வாறு இரவிக்கை போட அனுமதிக்கவேண்டும் என அவ்வூரின் தலைவரொருவருக்கு கட்டளையிடுகின்றார்.

இப்போது மீண்டும் நாம் காலனியாதிக்கம் என்ற புள்ளிக்கு வருவோம். காலனியாதிக்கம் நமக்கு நல்லதல்லாதவற்றை மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் நல்லதையும் நமக்குத் தந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது. ஆங்கிலம் ஆரம்பத்தில் உயர்சாதி மேல்வர்க்கங்களால் கற்கப்பட்டாலும், பின்னாட்களில் காலனியாதிக்கவாதிகளால் பரப்பப்பட்ட கிறிஸ்தவ மதம், மிஸனரிகள் மூலம் அது ஒரளவேனும் தாழ்த்தப்பட்ட மக்களையும் போய்ச்சேர்ந்து பரவலான கல்வியறிவை அவர்கள் பெற உதவிசெய்திருக்கின்றது. இதன்மூலம் தங்களுக்கு மட்டுமே சொந்தமென உயர்சாதிகள் (முக்கியமாய் யாழ்ச்சமூகத்தில்) கொண்டாடிய அறிவு/கல்வி அனைத்துச் சமூகங்களுக்கும் பகிரப்பட்டிருப்பது நல்லதொரு விடயமே. ஆனால் அதேசமயம் ஆங்கிலத்தைக் கற்பதாலும், ஆங்கில இலக்கிய/தத்துவ உரையாடல்களை அப்படி இறக்குமதி செய்வதாலும் மட்டுமே அறிவிஜீவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நமது தமிழ்ச்சமூகம் குறித்தும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டியிருக்கின்றது. காலனியாதிக்கத்தின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்ற உரையாடல்களை வளர்த்தெடுக்கும்போது, நாம் காலனியாதிக்கத்தின் தேவையற்ற எச்சங்களை உதிர்த்துவிட்டு தேவையான மிச்சங்களோடு நகரக்கூடிய ஒரு சுமுகமான சூழல் சிலவேளைகளில் அமையவும்கூடும்.

Photos: From the book ‘Woolf in Ceylon’.

(Thami: 4 ur dream fulfilled…)

July 30, 2007

‘வடு’ - வீழ்ச்சி’: பகிர்வுக்குறிப்புகள்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 1:51 pm

-இரண்டு புதினங்களை முன்வைத்து-

நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருக்கின்றோம். சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு நம்பிக்கை தந்த புரட்சிகள் கூட இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கங்களால் பொடிப்பொடியாக தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலங்காலமாய் இருந்துவரும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரமோ இன்னும் தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியிருக்கின்றது. நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று எதுவும் அண்மையில் தென்படாதபோதும் தமது வாழ்க்கையை ஒடுக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பதிவுகளில் ஒளித்து வைக்கப்படும் தீக்குச்சியளவு வெடிமருந்திலிருந்து தமது அடுத்த சந்ததி பெரும் ஒளிப்பந்தங்களை ஏந்திக்கொண்டு தமது சந்ததிகளை எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடச்செய்வார்கள் என்ற நம்பிக்கையை தமது எழுத்துக்களில் புதைத்துவைக்கின்றார்கள். அவ்வாறு மேலாதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்படும் ஒரு தலித்தின் சுயசரிதையை கே. ஏ.குணசேகரனின் வடுவும், காலனித்துவத்தால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உட்கட்ட வாழ்வியலை சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சியும் (No Longer at Ease) வாசகர்களுக்கு விரித்து வைக்கின்றது.

2.
கே.ஏ.குணசேகரனின் வடு ஒரு சுயசரிதை நாவல். மராட்டி, கன்னடம் போன்றவற்றில் மிக வீரியமாய் பதிவுசெய்யப்பட்ட தலித் சுயசரிதை நாவல்கள் போன்றல்லாது மிகக்குறைவாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் புதினத்தில் கே.ஏ.குணசேகரனின் பதினம்வயதுவரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவர் இதில், ‘இடதுசாரி இயக்கங்களோடு என்னை ஈடுபடுத்திக்கொண்டு, கலைப்பயணம் மேற்கொண்ட காலம் தொட்டு இன்றுவரை என் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை இதில் இடம்பெறவில்லை’ என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அதையும் பதிவு செய்யும்போது இன்னும் வீரியமான தலித் ஒருவரின் வாழ்வு தொகுக்கப்படும் சாத்தியம் உண்டு. ஒரு சிறுவனாய் -அவர் பகுத்தறிந்து ஆராய முடியாத வயதிலேயே- எப்படி சாதிப்பேய் தனக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெகு நுட்பமாய் குணசேகரன் வடுவில் பதிவு செய்கின்றார். இதிலே குணசேகரனும் அவரது உறவினர்களும் ஆதிக்கசாதியால் அடிவாங்கிய சம்பவங்களையும், நிலத்தில் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்ட நிகழ்வுகளும் எண்ணிக்கையில் நீண்டவை. ஒவ்வொரு சம்பவங்களையும் குணசேகரன் விபரிக்கும்போது, இங்கேயும் அவர் அடிவாங்கிவிடுவாரோ அல்லது இவரது எதிர்ப்புக்காய் ஆதிக்கச்சாதியினரிடம் அவரது தாத்தா காலில் வீழ்ந்து கும்பிடப்போகின்றாரோ என்ற பதட்டம் ஒவ்வொருமுறையும் வாசிப்பவருக்கு வந்துகொண்டேயிருக்கும். தமது கிராமம் முஸ்லிம் சமூகத்தால் அதிகம் சூழப்பட்டதால் அவ்வளவு சாதியின் வீரியம் தெரியாமல் வளர்ந்திருந்தாலும் ஊரைவிட்டுபோகும்போது எப்படி சாதிப்பேய் தங்களை ஆட்டுவித்தது என்பதை குணசேகரன் வேதனையோடு பதிவுசெய்கின்றார். இன்னும் அவரது அண்ணா முறையான ஒருவரை அவரது தகப்பனும் சித்தப்பாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து வைத்தியராக ஆக்கும்போது, அவர் வேலைசெய்யும் நகரில் சிகிச்சை பெறும்போது மட்டும் ஒரளவு மதிப்புக்கொடுத்துவிட்டு ஊருக்கு வரும்போது அவ்வைத்தியரை ஒருமையில் அழைத்து நக்கலடித்து மதிப்புக்கொடுக்காத ஊரின் ஆதிக்கச்சாதியினர் பற்றிக்கூறும்போது, பொருளாதார ஏற்றத்தால்கூட இந்தச் சாதிப்பேய் அழிந்துவிடாது என்பது நமக்கு உறைக்கத்தான் செய்கின்றது. மேலும் தலித்துக்களின் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதைகளைக்கூட் ஆதிக்கச் சாதிகள் எப்படி வழிமறித்து பயணிக்கவிடாது அழிச்சாட்சியம் செய்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒடுக்குபவர்கள் மீது வெறுப்பு வராதிருந்தால் மனிதர்களாய் இருக்கமுடியாது. ஆசிரியப்பணியில் இருக்கும் இருவர் திருமணம் செய்து மாட்டுவண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்துதான் தமது தெருக்களால் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும் ஆதிக்கசாதியின்ரைப் பார்க்கும்போது நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக்கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்கவேண்டியிருக்கின்றது. ஆதிக்கச் சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து நக்கலடிப்பதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

ஒரு சம்பவத்தில், கதைசொல்லியை ஒரு ஆதிக்கச்சாதிப் பையன் வேண்டுமென்று அடித்துவிட்டு ‘பறப்பயலே’ என்று திட்டிவிட்டு ஓடிவிடுகின்றான். வந்த கோபத்தில் திருப்ப அவனைத் துரத்திச்சென்று ஆதிக்கச்சாதி பையனின் வீட்டடியில் வைத்து கதைசொல்லி திருப்பி அடித்துவிடுகின்றான். இப்படியொரு சம்பவம் நடந்தால் ஆதிககச்சாதிப்ப்பேய்கள் சும்மாயிருக்குமா?

‘சாதி தெரியாம வந்து வூட்டுக்குள்ள நொழைச்சிருக்கான்னா அந்தப் பயலுக்கு என்ன திமிரு இருக்கும். எங்க? அவனைக் கையையும் காலையும் கட்டித் தூக்கிட்டுப் போகணும்’ன்னு சத்தம் போட்டாங்க. எனக்கு திக் திக்குன்னு இருந்திச்சு. காலனி ஆளுகளும் வாசல் முன்னாடிக் கூட்டமாக் கூடிட்டாங்க. அப்பாடா ஒருவழியா அமைதியாக திருப்பிப் போனாங்க. அவன் அடிச்சதப் பத்தியாரும் பெரிசாப் பேசல. சாதி தெரியாம தெருவுக்குள்ள பறையன் போனதும் வூடு நொழைஞ்சதையும்தான் எல்லோரும் பெருசாகப் பேசினாக’ (ப 52) என்கின்றார்.

இதேமாதிரி இன்னொரு இடத்தில், கதைசொல்லியின் வீட்டில் இருந்த மரஞ்செடிகளிலிருந்து ‘பூவையும் பிஞ்சையும் இலையோட ஏன் அத்துபோடுற?’ என்று ஆதிக்கச்சாதிப்பையனிடம் திரும்பிக் கேட்கும்போது அவன் கதைசொல்லியை அறைந்துவிட்டு ஓடிப்போய் நாலைஞ்சு பெரிய ஆட்களோடு திரும்பி வருகின்றான். நிலைமை விபரீதமாய்ப் போவதைக் கண்ட கதைசொல்லியின் தாத்தா, ‘அவங்களைக் கும்பிட்டு, ‘அய்யா! அய்யா! டவுன்ல இருந்து வந்த புள்ள, அதுக்கு நம்ம ஊரு வெவரம்லாம் புரியாது, தெரியாதுங்க.மன்னிச்சு விட்டுங்க அய்யா. அய்யா’ன்னு நெடுஞ்சாண்கெடையா விழுந்து கும்பிட்டாரு’(ப 80).

இப்படித்தான் பல சம்பவங்கள் இறுதியில் எதுவுமே செய்யமுடியாது அடிபணிவதோடு போய்விடுகின்றது. சிறுவர்களின் வயதிலே இப்படியான சாதிக்கொடுமைகள் அடையாளப்படுத்தப்படும்போது இப்படி வளர்கின்ற சிறுவர்கள் பின்னாட்களில் என்னவாறு இருப்பார்கள் நாம் கட்டங்கட்டி விபரிக்கத்தேவையில்லை. நகரங்களுக்கு நகர்வதுதான் ஒரளவு சாதியின் கொடுமையைக் குறைக்கும் என்றும் தனது அனுபவத்தினூடு குணசேகரன் குறிப்பிடவும் தவறவில்லை (பெரியாரும் இதை வலியுறுத்துகின்றார்). ஆனால் இவ்வாறான முடிவு தற்காலிக முடிவாய் இருக்குமே தவிர ஒரு நிரந்தரமான தீர்வாய் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். அதேசமயம் நாட்டார் தெய்வங்களை இந்துத்துவத்திற்கு எதிராய் முன்வைக்கும் அவசியம் இருப்பினும், நாட்டார் தெய்வ வழிபாடுகள் கூட இன்னொருவிதத்தில் சாதியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் அபாயம் உள்ளதென்ற நுண்ணரசியலையும் நான் விளங்கிக் கொள்ளவேண்டும். சாதியின் நுண்ணரசியலை வெவ்வேறு தத்துவங்கள்/அரசியல் படிப்புகள் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நம்மிலிருந்து நாம் சாதியின் கூறுகளை விடுபடச்செய்வதென்பது நம் ஒவ்வொருத்தரின் அகத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறுசெயல்களிலிருந்தும் சாதிய நீக்கம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆனால் யதார்த்தமோ (புலம்பெயர்சூழலில்கூட) ஜீன்களிலிருந்து கடத்தப்படுவதைப்போல, பெற்றோர் உறவுகளிடமிருந்து இங்கே பிறக்கும் பிள்ளைகளிடம் கூட சாதி அட்சரம் தவறாது பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலமானது; அபாயகரமானது.

3.
சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சி (No Longer at Ease) நாவல் காலனியத்துவத்தை கேள்விக்குட்ப்படுத்துவதில் ஆரம்பித்து, பின் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தின் உள்கட்டுமானத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதுடன் முடிகின்றது. ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னை ஒடுக்கும் சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்ற அதேவேளை தன்னையும் சுயவிமர்சனம் செய்கின்ற இடத்தையும் எவரும் மறுத்துவிடமுடியாது. நைஜீரியாவின் ஒக்கொங்கோ சமூகத்தைச் சேர்ந்த ஓபியின் பார்வையிலேயே இந்த நாவல் கூறப்படுகின்றது. காலனித்துவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து இங்கிலாந்து சென்று படிப்பதற்காய் ஒபியை அந்தச்சமூக மக்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் சேர்ந்து அனுப்புகின்றார்கள். அங்கே படிப்பை முடித்துவரும் ஒபிக்கு மீண்டும் தனது சொந்தமக்களோடு ஒட்டமுடியாத அவதி மிக நுட்பமாய் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றது (அமெரிக்கப்பூர்வீககுடிகளுக்கு தாங்கள் கல்வியறிவு புகட்டுகின்றோம் என்று வெள்ளையினத்தவர் அழைத்து படிப்பித்து விவிலியத்தையும் கொடுத்து -தமது பூர்வீகதொழிலோடும் மக்களோடும் ஒட்டமுடியாத- பூர்வீககுடிகளின் ஒரு புதிய தலைமுறையினர் தோன்றியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). இங்கிலாந்திலிருந்து திரும்பி வருகின்ற ஒபிக்கு பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. ஊழலும் இலஞ்சமும் நிரம்பியிருக்கும் நைஜீரியா அரச அமைப்போடு ஒத்துப்போகமுடியாத அவதி ஒபிக்கு வருகின்றது. மேலும் ஒபி தனது சமூகத்தை (சாதியை) சேராத ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பதால் ஒபியின் சமூகம் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மேலும் தன்னை புரிந்துகொள்வார்கள் என்று நினைகின்ற அவரது பெற்றோர் கூட ஒபியின் காதலை நிராகரிக்கின்றார்கள்.

இப்படி ஒபியை தாங்கள் கஷ்டப்பட்டு பணஞ்சேகரித்து படிக்கவைத்ததால் தமது சமூகத்திற்கு பலவேறு வழிகளில் ஒபி உதவுவார் என்று அவரது சமூகம் அவரில் வைக்கும் நம்பிக்கையையும், ஒபி தானொரு நேர்மையாளராய் இருக்கும் விருப்புக்கேற்ப (இலஞ்சம் வாங்காத, சிபார்சு செய்யாத குணங்களால்) அதையும் செய்யமுடியாது போகின்றது. இறுதியில் ஒபியின் காதல் நிறைவேறாது, தனது காதலியின் வயிற்றில் வளரும் குழந்தையை -காதலின் முறிவால்- கருச்சிதைவு செய்யவேண்டிய நிலை ஒபிக்கு வருகின்றது. அதன் நீட்சியில், தாம் மிகவும் நேசிக்கும் தாய் இறந்தும்கூட -இன்னொரு நகரில் வேலை செய்யும் ஒபியால்- தாயின் இறுதிச்சடங்கைப் பார்க்க விரும்பதாதவளவுக்கு தனது கிராமத்தின் மீது அதிக வெறுப்பு வளர்கின்றது. தாய், காதலி எல்லோரும் போய்விட்டதால் தன்னைச் சுற்றிய இறுக்கமான் இழைகள் அகற்றபட்டு, தானொரு செட்டை கழட்டி மீண்டும் புத்துயிரான பாம்பு என ஒபி நினைக்கின்றார். ஆனால் இதுவரை இலஞ்சம் வாங்காத, புலமைப்பரிசில் சிபார்சுகடிதத்திற்கு வரும் பெண்களை கட்டிலுக்கு அழைக்காத ஒபி என்ற நேர்மையாளன், காலப்போக்கில் இல்லாமற் சிதைந்து போகின்றார். புலமைப்பரிசிலுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு சிபார்சுக்கடிதம் கொடுப்பதற்காய் அவர்களின் உடல்கள் ஒபிக்க காணிக்கை செய்யப்படுகின்றது. அவ்வாறு காணிக்கை செய்யமுடியாத ஆண்களிடம்/பெண்களிடமும் நிறைய இலஞ்சம் வாங்குகின்றார். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல ஒருநாள் இலஞ்சம் வாங்கும்போது ஒபி கைதாகின்றார். எப்படியிருந்த ஒபி இப்படியாகப் போய்விட்டாரே என்று எல்லோரும் வியக்கும்படியாக் ஒபி ஜெயிலுக்குப் போவதுடன் புதினம் முடிகின்றது.

இந்நாவலை வாசித்து முடியும்போது, இந்தப் படிப்பு, வசதி போன்றவற்றால் என்ன பயன் என்ற வாழ்வின் அபத்தமான் கேள்வி நம்முன் வந்து விழுவதை நாம் தவிர்க்கமுடியாது. இன்றும் காலனித்துவம் முடிந்தபின்னும், காலனித்துவம் எப்படி மூன்றாம் உலக நாடுகளின் தனது கண்காணிப்பை வைத்திருக்கின்றது என்பதை உய்த்துணர அவ்வளவு கஷ்டப்படத்தேவையில்லை. ஒருகாலத்தில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் இப்போது எப்படி உலகமயமாக்கங்கள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வைச் சீரழிக்கின்றார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. (வேண்டும் என்றால் John Perkins எழுதிய Confessions of an Economic Hit Man என்று 2004ல் வந்த நூலைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்). இதனால்தான் நாமின்று NGO என்றும் இன்னபிற பெயர்களிலும் நம் நாடுகளிலும் வந்திறங்கும் ‘கருணைபொங்கும்’ அமைப்புக்கள் மீது சந்தேகப்படவேண்டியிருக்கின்றது. மிக நுட்பமாய் அவர்கள் நமது சமூகத்தில், கலாசாரத்தில் ஊடுருவும் புள்ளிகள் குறித்து அதிக கேள்விகள் எழுப்பவேண்டியுமிருக்கின்றது.

4.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப்போன்ற பலர் அனுபவித்துணரமுடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றது. பதின்மவயதோடு இச்சுயசரிதை முடிவது ஒருவிதத்தில் பலவீனம் என்றும் சொல்லவேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் தலித்துக்கள்/ ஒடுக்கப்பட்ட பெண்கள் போன்றோரை தன்னுடைய சிறகுகளால் அடைக்கலம் கொடுக்கும் இடதுசாரிகளை நாம் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும். ஆனால் அதேசமயம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட குஞ்சுகள் சிறகுகள் வளர்ந்து தமக்கான் சொந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்து பறக்கத் தொடங்கும்போது கையசைத்து விடைகொடுக்கவேண்டுமே தவிர துரோகிகள்/எதிரிகள் என்ற அடையாளப்படுத்துவதை இடதுசாரிகள் தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். இதே சமயத்தில், குணசேகரன் போன்ற ஒரு தலித் ஏன் காலச்சுவடை தனது பதிப்பாளாராகத் தேர்ந்தெடுத்தார் என்று நாம் கேள்வி எழுப்புவதையும் தவிர்க்கமுடியாது. இதுவரை குணசேகரனின் புத்தகங்கள் எதுவுமே காலச்சுவடால் வராதபோது இந்த சுயசரிதையை எழுதிவிட்டு தான் காலச்சுவடுக்கே பிரசுரிக்க முதலில் அனுப்பினேன் என்று ஒருவித ‘பெருமிதத்துடன்’ குணசேகரன் குறிப்பிடுவதன் அரசியல் குறித்தும் நாம் கேள்விகேட்கவேண்டியிருக்கின்றது (தலித்துக்கள்/விளிம்புநிலைமனிதர்கள் மீது அக்கறையெடுத்து புத்தகம் போடும் பிற பதிப்பகங்கள் குணசேகரனின் கண்களில் தென்படாதது பெரும் வியப்புத்தான்).

சினுவா ஆச்சுபேயின் நாவலை தமிழில் கே.மகாலிங்கம் நல்லதொருவிதமாய் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால் தலைப்பை இப்படிச் சுருக்கவேண்டுமா என்ற கேள்வியும் உண்டு. அது மொழிபெயர்ப்பு என்பதாய் அன்றி மொழித்தழுவலாய் போய்விடும் அபாயமுண்டு. ஏற்கனவே மொழிபெயர்த்த ‘சிதைவு’களுக்கும் (Things Fall Apart) இவ்வாறான சர்ச்சை வந்ததை மகாலிங்கம் அறியாதவரல்ல அல்லது அந்த விமர்சனத்துக்காய் ஒரு எதிரொலியாகத்தான் இதையும் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவெனினும் நல்லதொரு மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பதற்காய் இவ்வாறான சின்னச்சின்ன விடயங்கள் குறித்து மறந்துவிடலாம். ஆனால் வழமைபோல இங்கேயும் ஜெயமோகன் முன்னுரையில் அரசியல் செய்வதை நாம் அவ்வளவு இல்குவாய் கடந்துபோக முடியாது….‘சினுவா ஆச்செபியின் நாவல் கிட்டத்தட்ட ஒரு இந்திய-தமிழ் நாவல் மாதிரியே உள்ளது’ (ஏன் ஈழ-தமிழ் நாவலாய் இருக்கமுடியாது?)என்பதில் ஜெயமோகன் எதனைக் கூறவருகின்றார்? ஏன் அவரால் இதையொரு தமிழ் நாவல் என்றோ மூன்றாமுலக நாடுகளின் நாவல் என்றோ பொதுவாய்ச் சொல்லமுடியவில்லை? இந்தியா என்ற அடையாளம் ஏன் இங்கு தேவைப்படுகின்றது? இந்நாவல் இந்தியா, இலங்கை மட்டுமில்லை; காலனியத்துவத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளுக்கும் பொருத்தமானதே. அதைவிட அடுத்த வரியில் ஜெயமோகன் சொல்லவருவதுதான் அவர் எந்தப்புள்ளியில் நிற்கின்றார் என்பது புரியவரும். ‘இங்குள்ள ஊழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சிவப்பு நாடா அனைத்துமே அங்கும் உள்ளன’. இதை இன்னொரு வாசிப்பாய், இந்தியாவில் மட்டுமில்லை நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் கூட சாதி இருக்கின்றது என்று எங்களை நியாயப்படுத்துவது போன்ற வாசிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. எங்கோ ஒரு விவாதத்தில் இந்தியா (ஈழம்) போன்றவற்றில் இருக்கும் சாதியக்கொடுமைகளை விபரித்தபோது படித்த சில அறிவுஜீவிகள் ஆபிரிக்கா நாடுகளிலும் சாதி இருக்கின்றன என்று புலம்பியபடி ஓடிவந்தது நினைவுக்கு வருகின்றது. ஒன்றைப் பற்றிப்பேசும்போது அதைப்பற்றி மட்டும் முதலில் பேசுங்கள், எங்களுக்குள் சாதி இருந்தால் அதை எப்படி அரசியல் நீக்கம் செய்வது என்று பேசுவதைவிட்டுவிட்டு, அங்கேயுமிருக்கின்றது அதனால் நாங்கள் -மட்டும்- அவ்வளவு கெட்டவர்களல்ல என்ற தொனியில் வரும் உரையாடல்கள் அலுப்பையல்ல, கோபத்தை வரச்செய்பவை.

நாம் நவீன உலகில் எல்லா வசதிகளோடும் எல்லோரையும் மதித்தபடி இருக்கின்றோம் என்று நமக்குள் கூறியபடி இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான புதினங்கள் நாம் நினைத்துக்கொள்கின்ற அனைத்தையும் அதிர்வுக்குட்படுத்துகின்றது. மேலும் சாதியைப் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியோ நாம் உரையாடும்போது யார் அதிகம் பதட்டம் அடைகின்றார்களோ அவர்களே இன்னும் இந்த அடையாளங்களில் தங்களை தேக்கிவைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடவும் முடியும். நாம் நம்மிலிருந்து சாதியை இல்லாமற்செய்ய மிகுந்த சகிப்புத்தன்மையும் விசாலமான மனமுமே வேண்டும், மேலும் வர்க்க அழிப்பாலும், படிப்பாலும், பொருளாதார ஏற்றங்களாலும், சாதி முற்றாக அழிந்துவிடும் என்று கூறுபவர்களை நோக்கி நாம் புன்னகையை வீசியபடி எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே நியாயமாகவிருக்கும்; அதுவே நாமின்னும் மனிதத்தன்மையுடன் வாழ்கின்றோம் என்பதைச் சாட்சிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

(ஆபிரிக்காக் கலாசாரத்தின் மீது பெருவிருப்புக்கொண்டவளுக்கு)

April 25, 2007

வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 8:43 am

- சாருநிவேதிதாவின் ‘கடல்கன்னி’யை முன்வைத்து-மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் - அவன் உத்தி பற்றிய விபரங்கள் எல்லாம் தெரியாமல் இருப்பது - அவனையே நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதிப்பதைப் போன்றது - ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் எவ்வளவு சந்தோசமான விடயம்!
-Maria Lusia Bombal on The Tree
உலக வாசக பரப்பில் ஒரு காலத்தில் அதிக கவனம் பெற்றிருந்த சோவியத்து படைப்புகள் பின்னகர்ந்து செல்ல அந்த வெற்றிடத்தை இலத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பின்னாட்களில் நிரப்பத் தொடங்கின. சர்ரியலிஸமும், பின்நவீனத்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்ட சூழலிருந்து புதுவகையிலான கதைசொல்லும் பாங்கு இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் முகிழ்ந்தெழத்தொடங்கின. அங்கிருந்த பல நாடுகளின் சமநிலையற்ற அரசியற் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால், நேரடியாகக் கதைசொல்லும் முறைகளிலிருந்து விலகிய மாய யதார்த்தவாத கதைகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ‘கடல்கன்னி’ என்று சாருநிவேதிதாவால் மொழிபெயர்க்கப்பட்ட இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மிகுதி அனைத்தும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகளாகும். ரஷ்யப்படைப்புக்களைப் போல இலத்தீன் அமெரிக்கா படைப்புகள் பெரும்பான்மையில் மானுடநேசிப்பே அடிநாதமாய் ஓடிக்கொண்டிருக்கின்றது. இயற்கையின் மீதான பாடலும், பூர்வீக மண் மீதான பற்றும் அநேக பிரதிகளின் ஓரங்களில் தொடர்ந்து கசிந்தபடி இருக்கின்றன.

மரியா லூயிஸாவின் (María Luisa Bombal) ‘மரமும்’, ஆர்த்துரே பியேட்ரியின் (Arturo Pietri) ‘மழையும்’ இத்தொகுப்பிலுள்ள அருமையான கதைகள். மரம் கதையில் ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்களுக்குப் பிறகு ஆறாவதாகப் பிறக்கும் பெண்ணே முக்கிய பாத்திரமாகின்றாள். ஐந்தும் பெண்களாக இருக்கின்றார்களே என்ற அலுப்பில் ஆறாவதாய்ப் பிறக்கும் பெண்ணிற்கு வெளி உலகம் பற்றி எதுவும் கற்பிக்காமல் வீட்டிற்குள் வைத்து அவளது பெற்றோர்கள் வளர்க்கின்றார்கள். அந்தப்பெண்ணும் வெகுளியும் அறியாமையுமாய் வாழ்வைக் கழிக்கின்றாள். தனது சகோதரிகள் அனைவரும் இசையிலும் இன்னபிறவற்றிலும் தேர்ச்சி பெற இவள் அது குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி வளர்வதோடு, தனது வயதுக்கு சற்று அதிக வயதில் இருக்கும் லூயிஸையும் மணந்துகொள்கின்றாள். லூயிஸிற்கு வேலை என்பதே வாழ்வின் முக்கிய விடயம் என்பதைத்தவிர தனது இளம் மனைவியோடு சந்தோசமாய் பொழுதைக்கழிப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இவளுக்கோ நண்பிகள் என்று நெருங்கிப்பழகவும் எவருமில்லை. தனியே, வெளியே சடைவிரித்திருக்கும் இறப்பர் மரத்தோடு சிநேகித்தபடி இருக்கின்றாள். தனக்குள் புதைத்து வைத்திருந்த கதைகளை எல்லாம் அந்த மரத்தோடு பகிர்ந்தபடி நாட்களை நகர்த்துகிறாள்.

துணைவனோடு பல்வேறு பிணக்குகள் வந்து போகின்றபோதும் அவனைவிட்டுப் பிரிந்துசெல்ல விரும்பாதவள், இறுதியில் அந்த இறப்பர் மரத்தை -நடக்கும் பாதைக்கு தடங்கலாயிருக்கின்றதென நகர ஊழியர்கள் வெட்டும்போது- இனி தன் துணைவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று வீட்டைவிட்டு வெளிக்கிடத்தொடங்குகின்றாள். இதுநாள்வரை அந்தப்பெண்ணின் திருமணவாழ்வின் எல்லா அபத்தங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளச்செய்தது அந்த இறப்பர் மரமே என்ற நினைப்பை வாசிக்கும் நம்மிடையே பதித்தபடி கதை முடிகின்றது. நாமெல்லோரும் எத்தனையோ வீழ்ச்சிகளையும் சரிவுகளையும் சந்திக்கின்றபோதும் ஏதோ ஒன்றில் நாம் மீளப்போவற்கான நம்பிக்கைகளை குவித்துவைக்கின்றோம். அந்த இறுதி நம்பிக்கையும் தகர்கின்றபோது என்னசெய்வது என்று புரியாமல் திகைப்பதும், சிலவேளைகளில் அது தற்கொலை போன்ற வாழ்வின் இறுதிக்கணங்களைத் தேடிப்போவதாய் இருப்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றாய் இருக்கிறது. இந்தக் கதையை எழுதிய மரியா லூயிஸா கூட தனிப்பட்ட வாழ்வின் திருமணத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தனது கணவரைச் சுட்டுக்கொலைசெய்ய முயன்று, தற்கொலைக்கு முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்துரே பியேட்ரியின் ‘மழை’ கதை மாய யதார்த்தக் கதைக்கு நல்லதொரு உதாரணமாய்க் கொள்ளக்கூடியது. மழை பொய்த்துப்போகின்ற ஒரு வறண்ட கிராமத்தில் வயோதிகத் தம்பதிகள் இருவர் வசிக்கின்றார்கள். என்றேனும் ம்ழை பெய்து பயிர்களின் வறட்சியும், தமது ஏழ்மையும் இல்லாமற்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் இந்தத் தம்பதிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டேயிருப்பவர்கள். இப்படியான ஒரு மனுசனோடு இத்தனை காலம், தான் எப்படி சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்ற வியப்புத்தான் அந்த கிழவிக்கும் அநேக நேரங்களில் வந்துபோய்க்கொண்டிருக்கும். வறட்சிமிகுந்த ஒருநாளில் கிழவன் ஒரு சிறுவனை வழியில் காண்கின்றார். அவனை வீட்டுக்கொண்டு வருகையில் -அவனது வருகையால்- சின்னச் சின்ன விடயங்களில் தமக்கிடையில் இருக்கும் அன்பை, மகிழ்வை, நெகிழ்வை அந்த முதிய தம்பதிகள் கண்டுகொள்கின்றார்கள். இவ்வளவு காலமும் இவ்வரிய தருணங்களைத் தங்களுக்குள் தவறவிட்டிருந்தோமே என்று சிறுவனை நன்றியுடன் நினைவுகூருகின்றனர். ஒருநாள் சிறுவன் காணாமற்போய்விடுகின்றான். கிழவன் அவனைத் தேடிக்கொண்டு மலையில் ஏறத்தொடங்குகின்றார். அவனது குரல் கரைந்துகொண்டிருப்பதாய் பிரமை நீள்கின்றதே தவிர அவனது உருவம அந்தக்கிழவனின் கண்களில் தென்படவேயில்லை. நேரமும் களைப்பும் கூடிச்செல்லச் செல்ல அந்த குரல் கூட இறுதியில் மறந்து/மறைந்து போகின்றது. இனியும் அந்தச் சிறுவனை தேடமுடியாது என்று நினைக்கின்றபோது மழை தூறலாய் நீண்டகாலங்களின் பிறகு பொழியத்தொடங்குகின்றது. பெருமழைபொழிந்து பயிர்கள் எல்லாம் செழித்துவளர்ந்து அந்த முதிய தம்பதிகளின் வறுமை போய்விடக்கூடுமென்ற நம்பிக்கை முகிழவதைப் பிரதியின் அடியில் மறைத்தபடி கதை முடிகிறது. உண்மையில் இந்தக் கதையில் சிறுவன் என்பதே ஒரு படிமம்தான். கதையில் அவன் இருப்பதில்லை. அந்த முதிய தம்பதிகளின் ஒரு நம்பிக்கையாய் அது படிமமாக்கப்படுகின்றது. சிறுவனின் இருப்பு உண்மையானதா அல்லது மாந்திரீகமானதா என்பதில் வரும் மயக்கம் இந்தக் கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.அகஸ்ரோவின் (Augsutro Bastos) ‘கைதி’, ஈழச்சூழலில் வளர்ந்த நம்மைப்போன்றவருக்கு மிகப்பரிட்சயமான கதையாக இருக்கும். சால்டிவோர் என்ற பதின்ம வயதினனின் பார்வையில் கதை விரிகின்றது. பராகுவேயில்(?) நடக்கும் கெரிலாக்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கட்டளையிடுகின்றது. கிளர்ச்சியாளர்களைக் களையெடுக்கும் ஒரு இராணுவப்பகுதியில் சால்டிவோர் வலுக்கட்டாயமாய் பதினெட்டு வயதில் இணைக்கப்படுகின்றான். கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பதுங்குமிடத்தையும் இராணுவம் சுற்றிவளைக்கின்றது. அந்த முகாமைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்கள் பலரைக் கொன்றபின், முக அடையாளம் கூட தெரியாது சிதைக்கப்பட்ட ஒரு கைதிக்கு காவலாய் இருக்கும்படி சால்டிவோரை இராணுவ அதிகாரி பணித்துவிட்டு அடுத்த மனிதவேட்டைக்கு தனது ‘வீரர்களுடன்’ புறப்படுகின்றார். இந்தப் பையன் பயந்தபடியே கைதிக்கு காவலுக்கு இருக்கின்றான். தன்னைப்போலவன்றி கிளர்ச்சியாளர் படையில் விரும்பிச்சேர்ந்த தனது அண்ணாவின் நினைவு அவ்விரவில் அப்பையனுக்கு வருகின்றது. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கவேண்டுமென்ற அண்ணாவின் நெகிழ்வான வார்த்தைகள் அவனது மனவெளியில் அலையத்தொடங்குகின்றன. வெளியே புறப்பட்ட இராணுவ அணி திரும்பி வரும்போது தனது அண்ணாவையும் இந்தமுறை பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என்று சால்டிவோர் கவலைப்படுகின்றான். அ த்தோடு உருக்கலைக்கப்பட்டு அரையுயிரோடு இருக்கும் கைதி தன்னைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்று பயந்து, அந்தக்கைதியை ஒரு குழியினுள் அமிழ்த்தி தலைமட்டும் வெளித்தெரியும்படி ஓரிடத்தில் புதைக்கத் தொடங்குகின்றான். அடுத்த நாள் விடியலில் இராணுவ அணி சில கைதிகளோடு திரும்பிவரும்போது , சால்டிவோர் துப்பாகியை மட்டும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டிருக்கின்றான். இராணுவ அதிகாரி தப்பியோடிய சால்டிவோருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கட்டளை பிறப்பித்து அவனைத் தேட தனது இராணுவத்தை அனுப்புகின்றார். இறுதியில் தற்கொலை செய்த சால்டிவோரின் உடலை இராணுவம் காண்கின்றது. சால்டிவோர் இப்படிப் பயந்து ஓடி தற்கொலை செயததற்கு -கைதியாய் அரைகுறை உயிராய் இருந்து இறுதியில் இறந்துபோனது தனது சகோதரன் என்பதை கண்டு- அதை ஏற்றுக்கொள்ளமுடியாத யதார்தத்தின் கொடூரமே என்ற வாசிப்புக்குறிப்பை நம்மிடையே விட்டபடி கதை முடிகிறது.

இந்தக்கதையை வாசிக்கும்போது Hernando Tellez எழுதிய Lather and Nothing Else நினைவுக்கு வருகின்றது. அதில் ஒரு கிளர்ச்சியாளன் சவரம் செய்கின்ற தொழிலாளியாக இருக்கின்றான். அங்கே சவரம் செய்ய வருகின்ற இராணுவ கப்டன், பல கிளர்ச்சியாளர்களை கொடூரமான முறையில் கொன்றுகுவித்தவன் மட்டுமில்லாது, சவரம் செய்கின்றபோதும் அடுத்து நிகழப்போகும் -கிளர்ச்சியாளர்களைப் போட்டுத்தள்ளும்- நிகழ்வையும் விபரிக்கின்றான். ஒரு கத்தியின் நுனியில் அவனது கழுத்தை துண்டித்துவிடும் சந்தர்ப்பம் வாய்த்தும், அந்தக் கப்டனைக் கொலை செய்யாது கிளர்ச்சியாளன் தப்பவிடுகின்றான். அந்தக்கொடூரனைக் கொலைசெய்ய முடியாது தடுத்தது எதுவென எண்ணும்போது, கப்டனைப் போல தான் ஒரு ‘தொழில்முறை’ கொலைகாரன் இல்லையென்பது என்பது அந்தக்கிளர்ச்சியாளனுக்கு உறைக்கிறது. இல்லாவிடின் அவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிடுவானா என்ன? கப்டனும் ‘கொலை செய்வது அவ்வளவு இலகுவல்ல; எனது வார்த்தைகளை நீ நம்பலாம்’ என்று கூறியபடி நகர அக்கதை முடிவுறும்.

2.
சாருநிவேதிதாவின் ‘கடல்கன்னி’யில் ஆறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்கக் கதாசிரியரான Ronald Sukenickன் கதையைத் தவிர மிகுதி அனைத்துக் கதைகளும் வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றன. Ronald Sukenickன் 98.6 நாவலின் வாசிப்பு, தனது சீரோ டிகிரி நாவலில் ஒரு தெறிப்பாய் இருக்கிறது என்று சாரு எங்கையோ குறிப்பிட்டது நினைவிலுள்ளது. அடிக்கடி சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களை மாற்றிக்கொண்டிருக்கின்ற சாரு ஓரிடத்தில் குறிப்பிட்டது; தமிழில் தானும், ஜெயமோகனும், எஸ்.ராமகிருஸ்ணனும் ‘மட்டுந்தான்’ கதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பது ஞாபக அலைவரிசையிலுள்ளது. தொன்மங்களுக்குள்/செவ்வியல் பிரதிகளுக்குள் ஆழமும் விரிவுமான வாசிப்பைச் செய்யாது நவீனத்தோடு மட்டும் தொங்கி நின்ற படைப்பாளி என்று சுந்தர ராமசாமியை ஜெயமோகன் நிராகரிப்பதை ஒருபுறத்தில் நாம் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் தமிழின் தொன்மங்களுக்குள் நுழைந்து விரிவான வாசிப்பைச் செய்யும் ரமேஷ்-பிரேமின் எழுத்துகள் ஜெயமோகனின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு நாகர்கோயிலும், பாண்டிச்சேரியும் ‘தொலை’வில் இருப்பதைத் தவிர வேறொரு காரணமும் என்னளவில் தெரியவில்லை. அல்லது செவ்வியலில் இருந்து மீள்வாசிப்பை தன்னைப்போன்ற இந்துத்துவ ‘நவீனமாதிரிகள்’ மட்டுந்தான் செய்யமுடியும் என்ற எண்ண்ம் ஜெயமோகனிற்கு இருக்கின்றதோ தெரியவில்லை. ஜெயமோகனை விடுவோம்; தமது ‘கிரணம்’ இதழ்கள் மூலம் தளம் அமைத்துக்கொடுத்து ரமேஷ்-பிரேமை அணைத்து வளர்த்த சாருவிற்கு- உலக இலக்கிய வாசிப்பைத் தன்னைத்தவிர வேறொருவரும் விரிவாகச் செய்யவில்லையென அடிக்கடி குதூகலிக்கும் ஒரு படைப்பாளிக்கு- ரமேஷ்-பிரேமின் படைப்புகள், கண்களைச் சிறிது கூட உறுத்தவில்லையா என்பதுதான் வியப்பாயிருக்கிறது. எஸ்.ராமகிருஸ்ணன் போன்றோர் கூட மாய யதார்த்த கதைகள் எழுதி -இதெல்லாம் நமக்குச் சரிவராதென- மீண்டு/மீண்டும் யதார்த்தவாத கதைசொல்லல் முறைக்குத் திரும்பியிருக்கின்றவேளையில் தொடர்ந்து பலவித பரீட்சார்த்த முயற்சிகளில் கதை சொல்லல் முறைகளையும் கால அடுக்குகளையும் குலைத்துப் போட்டபடி நகர்ந்தபடியிருக்கும் ரமேஷ்-பிரேமின் கதைகளை நம் இலக்கிய விமர்சகர்கள் மிக இலகுவாய் புதைத்துப்போட்டு நகர்ந்துகொண்டிருப்பதில் இலக்கிய அரசியலைத் தவிர வேறெதனைக் காரணமாய்ச் சொல்லமுடியும்?

இத்தொகுப்பில் இருக்கும் சாருவின் உறுத்தாத மொழிபெயர்ப்புகள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. சைபர் ஸ்பேஸிற்கும், சாட்டில் கதைத்த பெண்கள் சென்னை வரும்போது நேரில் தன்னைச் சந்திக்க மறுத்த ‘கன்னித்தீவுக்கதைகளை’ பத்திகளில் எழுதி, வாசிக்கும் நமது தலையைச் சொறியவைக்கும் (பேன்/சொடுவால் அல்ல) சாரு, இவ்வாறான மொழிபெயர்ப்புகளைச் செய்தாலே பல வாசகர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். எனினும் நோநோவை எழுதிய, இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நேர்த்தியாக மொழிபெயர்த்த/வாசிப்புச்செய்த சாருவை வரும்காலத்தில் மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கைகள் மிக அரிதாகத்தான் துலங்குகின்றன என்பதுதான் அவலமானது.

January 11, 2007

சேரன்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 3:56 pm

-’மீண்டும் கடலுக்கு’ தொகுப்பை முன்வைத்து-

சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி, ‘மீண்டும் கடலுக்கு’ சென்ற வருடம் வெளியாகியிருக்கின்றது. அநேக கவிதைகளில் காமமும் குளிரும் தொடர்ந்தபடி கூடவே வருகின்றன. கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வின்ரர் பருவத்து கொடுங்குளிரைத் தாங்குவதற்கு நனவிடை தோய்தல்களும், காமம் சார்ந்த தகிப்புக்களும் பலருக்கு ஆறுதலாகின்றன. இத்தொகுப்பிலுள்ள சேரனின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கில்லாது புலம்பெயர்ந்த தனி மனிதன் ஒருவனின் வாழ்வைப் பேச முயற்சிக்கின்றன.

நெடுங்கவிதையொன்றிலிருந்து வெட்டப்பட்ட சிறு துண்டுகளோ என இதிலுள்ள பல கவிதைகள் ஒருவித தோற்ற மயக்கத்தைத் தருகின்றன. குருதியும், கண்ணீரும், சுக்கிலமும், குளிரும் பெரும்பான்மையான கவிதைகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. தொடர்ந்து சொல்லப்ப்பட்டதை சொல்லப்படுவதிலிருந்து விலத்தி, நல்ல கவிதைகளைத் தேடுவதுதான் இத்தொகுப்பை வாசிப்பவருக்கு முன் இருக்கின்ற முக்கியமான சவால்.

அநேகர் சேரனின் கவிதைகளில் (முக்கியமாய் ‘நீ இப்போது இறங்கும் ஆறு”) காணப்படும் அரசியல் சமூகப் புள்ளிகளை விதந்து எழுதிக்கொண்டிருந்தபோது எனக்கு நெருக்கமாயிருந்தது அவரது அழகியல் கவிதைகள் (romantic poems) தான். அவற்றிலும் ஒரு அறிவுஜீவித்தனமான -உணர்ச்சி சம்பந்தபடாத - பார்வை அதிகம் விஞ்சி நின்றாலும் அவரது காதற் கவிதைகளை இலகுவாய் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. ‘நீ இப்போது இறங்கும் ஆற்றில்’ எளிமையான கவிதை என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட ‘கேள்’ என்ற கவிதையில் குளிரோடு தண்டவாளத்தருகின் ஒற்றைப்பூவுட்ன் காத்திருக்கும் ஒருவனின் தனிமையை/ஏமாற்றத்தை அப்படியே எனக்குள்ளும் அந்தக்கவிதையை படியவிட்டிருந்தது.

இத் தொகுப்பின் பின்னட்டை கூறுகின்ற ‘ எண்பதுகளில் ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கின் மையப்புள்ளியாக இருந்த சேரனின்…’ என்ற குறிப்பு சற்றுப் பிசகானது. எண்பதுகளில் சேரன் மட்டுமே மையப்புள்ளியானார் என்பது குறிப்பினை எழுதிய நபர் சேரனின் கவிதையை மட்டும் வாசிப்பவராய் இருந்திருந்தாலன்றி இப்படி எழுதியிருக்கமுடியாது. சேரனுக்கு முன் எழுத ஆரம்பித்த சிலரும், பலவேறு இயக்கங்கள் தோன்றியபோது அவற்றிலிருந்து முகிழ்ந்த கவிஞர்களும் பலரும் எண்பதுகளின் ஈழத்துக் கவிதைப்போக்கின் மையப்புள்ளிகளாக இருந்தார்கள் என்பதே சரியானது. அந்தப் பலபுள்ளிகளில் சேரனும் ஒருவர். அவ்வளவே. எனினும் அந்தக் குறிப்பில் ஒரு உண்மை இருக்கின்றது. சேரன் எண்பதுகளில் எழுதிய கவிதைகளின் தொனியிலும் மொழியிலும் அவ்வளவு மாற்றமில்லாது -இருபது ஆண்டுகள் கடந்தபின்னரும்-அவரது புதிய கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதை இத்தொகுப்பை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

சேரனின் காமம் குறித்த கவிதைகளை தொடர்ந்து வாசித்தபோது ஒரு அலுப்பு வந்தது. ஆனால் இந்த அலுப்பு, ஏன் காமம் சார்ந்து நிறைய கவிதைகளை தமது தொகுப்புக்களில் எழுதும் ரமேஷ்-பிரேமை வாசிக்கும்போது வருவதில்லை என்று வாசக மனோநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தேன். சேரன் தனது கவிதை மொழியின் நடையில் புதிய பரிட்சார்த்தமான முயற்சிகளையோ, உடல்மொழி குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதே -எனக்கான- காரணங்களாய்த் தென்பட்டது. ஒரு கலைஞன் இறந்த காலத்தோடு உறைந்துப் போகத் தொடங்கும்போது அவனது வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. சேரனின் கவிதைப் பயணத்தின் வீழ்ச்சி இத்தொகுப்பில் துல்லியமாய்ப் புலப்படத் தொடங்குகின்றன என்பதே க்சப்பான உண்மை.

‘அறிவின் சுடரில் / காமம் பிறக்கும் இரவே’ (காதலனும் குழந்தையும்- 1) என்ற கவிதை வரிகளை வாசிக்கும்போது, காமத்திற்கும் அறிவுக்கும் என்ன வகையிலான தொடர்பு இருக்கின்றதென்ற வினா வாசிப்பவருக்கு ஏற்படுகின்றது. இத்தொகுப்பில் மட்டுமில்லை, முன்னைய தொகுப்புக்களிலும் அறிவை அளவுக்கு மீறி விதந்தேத்தும் கவிதைகளை சேரன் எழுதியிருக்கின்றார். அறிவே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்று திணிக்கப்படும் யாழ்ப்பாணியவாத்தின் மிச்சங்களிலிருந்து சேரன் இன்னும் விடுபடவில்லையோ என்ற வகையில் யோசித்துப் பார்ப்பது தவறாக இருக்காது என்றே நினைக்கின்றேன். காமத்தை அறிவுநிலையில் மட்டுந்தான் அணுகவேண்டும் என்றால், பிறகு ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வரும் விருப்பு/சுவாரசியம் என்ற இயற்கை உணர்வுகளைக் கூட குழிதோண்டி புதைக்கவேண்டி வருமோ என்றுதான் சேரனின் சில கவிதைகளை வாசிக்க்கும்போது தோன்றுகின்றது. பதின்ம வயதிலிருக்கும் ஒருவனுக்கு வரும் சந்தேகமெல்லாம் சேரனுக்கு அவரது நாற்பது வயதின்பின் வருகின்றது (கோடையில் கண்ணாடி அணிகின்ற பெண்ணை முத்தமிடுகின்றபோது). கண்ணாடி அணிகின்ற பெண்ணுக்கு முத்தமிடுவதிலுள்ள ‘சிரமங்களை’ ஒரு ஆராய்ச்சியாளர் அளவுக்கு சேரன் அதில் ஆய்வுகள் செய்கின்றார். வாசிக்கும் எனக்கோ, அந்தப்பெண் முத்த்மிடும்போது கண்ணாடியைக் கழற்றிவிட்டு முத்தமிட்டிருந்தால் நாமெல்லாம் இந்த அவ்திகளையெல்லாம் வாசிக்காமல் தப்பியிருக்கலாம் என்றுதான் தோன்றியது. (சேரனின் அடுத்த கவிதைகளுக்காய் என்னாளான உதவி, ‘குளிரில் கொன்ராக் லென்ஸ் அணிந்த பெண்ணை முத்தமிடும்போது or லேஸிக் செய்த பெண்ணை மழைபெய்யும்போது முத்தமிட்டபோது… ) .

காமத்தின் பின்பான பொழுதில் பெண்ணைப் பார்த்து ‘நீ காலத்தின் இடிபாடுகளில் சிக்கிய கூந்தல்கற்றை’ என்று கூறிவிட்டு, நான் அப்படியல்ல… ‘நித்திய ஈரலிப்பிலும்/ சலிக்காத முத்தத்துடன்/ கால்களற்று/ எப்போதும் பறக்கும் பறவை நான்’ என்கின்ற கவிஞர் பல இடங்களில் சறுக்குகின்றார். தான் பறவை என்ற தொடர் பிரக்டனங்களை சேரன் தனது முன்னைய கவிதைத் தொகுதிகளிலும் வெளியிட்டவர். சேரனால் ஏன் தான் எழுதிய கவிதைகள் எதிலும், பெண்கள அப்படி சுதந்திரமாய் ஒரு பறவை போல பறக்கமுடியாது இருப்பதற்கான சமுக பின்புலங்களை விரித்து எழுத முடியவில்லை? பெண்களுக்கும் ‘இடிபாடுகளில் சிக்கிய கூந்தற்கற்றையாக’ அல்ல; தன்னைப் போல ஒரு பறவையாக பறக்க விருப்பம் அவர்களுக்கும் இருக்கும் என்ற மற்றப் பக்கத்தை ஏன் -வேண்டுமென்றே- சேரன் மறைக்கின்றார். நானும் பறவை நீயும் பறவை கட்டுகளை அறுத்து இருவரும் சேர்ந்து பறப்போம் என்று எழுதுவதில் என்ன தயக்கம் இருக்கின்றதென்று யோசிக்கும்போது ‘கவிமனநிலையின்’ சுயநலம்தான் கண்முன்னே விரிகின்றது. மற்றொரு சறுக்கல் என்னவென்றால், பறவையை கவிதைகளில் படிமமாக்கும்போது அநேகமாய் கட்டுக்களை, அடையாளங்களை மீறியதற்கே பாவிக்கப்படுகின்றது. பறவைகள் எதன் பொருட்டும் காத்திருப்பதில்லை என்பதையும் எவருக்காகவும் கண்ணீர் விடுவதில்லை என்பதையும் சேரனால் படிமாக்கப்படுகின்றதென்றால், ஏன் அந்த ‘பறவை மனக் கவிஞன்’ தனது மச்சாளுக்கும், அன்புள்ள அத்தானுக்கும் துயருறு காதைக் கவிதைகளை இத்தொகுப்பில் எழுத வேண்டும்? ஆக, தன்னோடு மனமும் உடலும் பகிரும் பெண்ணைப் பார்த்து நீ இடிபாடுகளிடையே சிக்கிய கூந்த்ல்; உன்னோடு தங்கவோ உனக்காகவோ கண்ணீர் விடவோ அல்லது சிக்கு எடுத்து என்னோடு பறக்க உதவி செய்வேன்… என்றோ கூறமுடியாது; ஆனால் உறவுகள் தனக்குச் செய்த ‘தியாகங்களை’ மட்டும் நினைத்து கண்ணீர் மல்க முடிகின்றது. அதை நாம் அற்புத கவிமனசு என்று நினைத்து விதந்தேந்த வேண்டும்!

‘எரிமலைப் பயணம்’, ‘மாயன் நகரம்’, ‘செம்மணி’ இத்தொகுப்பிலிருப்பதில் எனக்குப் பிடித்தமான கவிதைகள். அதிலும் ‘எரிமலைப் பயண்த்தில்… ‘மலை அடிவாரத்தில்/போர்க்கடவுள்களின் கோபம் மறைந்து கிடக்கிறது’ என்று கூறிவிட்டு இறுதியில் ‘கிழிந்து போன அமெரிக்க கொடி/ தூங்கிக் கிடக்கும் கடவுளின் மீது பறப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றேன்’ என்று முடிவது அமெரிக்காவின் ஆதிக்கக்கரங்கள் மாயன் நாகரீக நாடுகள் எங்கும் பரவியிருக்கின்றது என்பதை சூசகமாய் வாசகருக்குத் தெரிவிக்கின்றது. அமெரிக்கா ஒரு எரிமலைக்கு நிகர்த்தது. எந்த நேரமும் ஒரு எரிமலையைப் போல உறங்காமல் இந்நாடுகளை கண்காணித்துக்கொண்டிருக்கின்றது என்ற விரிவான வாசிப்பிலும் வாசித்துணரலாம். ‘செம்மணி’ கவிதை, கடந்த காலத்துயரை எல்லாம் மறந்துவிட்டு செம்மணியில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் செல்போன விளம்பரப் பலகையினூடு நம் அவலத்தைப் பேசுகின்றது. நமது மண்ணையும் நீரையும் சுரண்ட வரவிருக்கின்ற அந்நியமுதலீடுகள் பற்றிய அச்சத்தையும் கூடவே யோசிக்க வைக்கின்றது.

‘மாயன் நகரம்’ கவிதை மெக்ஸிக்கோவைப் பற்றிப் பாடுகின்றது. பூர்வீக குடிகள் வாழ்ந்த தேசத்தை ‘கடலோடி எரியூட்டினான் ‘(கொலம்பஸின் வருகையையோடு செழிப்பான ஒரு க்லாச்சாரம் மிக விரைவாக அழியத்தொடங்குகின்றது என்பதை நினைவு கொள்ளமுடியும்) என்று ஆரம்பிக்கின்றது. தொடர்கையில், அவ்வாறு வந்த கடலோடிகள் நாட்டிய ஆயிரக்கணக்கான சிலுவைகளில் கோடிக்கணக்கான கறுப்புத்தோல் இயேசுக்கள் அறையப்பட்டார்கள் என்று உவமிக்கின்ற இடம் அருமையானது. ஒரு கவிதையினூடு ஒரு பெரும் வரலாற்றை சிறிய விதையாய்க் கொடுக்க முடியும். அந்த விதையிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பூக்களையும் வளர்த்துப் பார்க்கவேண்டிய பொறுப்பு வாசகருக்குரியது. (ஞாபகம் வரும் வேறொரு தொகுப்பிலிருக்கும் சேரனின் இன்னொரு கவிதை, ஒரு காலடி ஒராயிரம் ஆண்டு வர்லாறு அங்கே இருக்கின்றது என்பது மாதிரி வரும் கவிதை). அந்த வகையில் இந்தக் கவிதை அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது என்று சொல்லவேண்டும்.

எனினும் இந்த அருமையான கவிதை வாசிப்பை அடுத்து வரும் ‘பாணன் சதுக்கத்தில்’ கவிதைசொல்லி தூள் தூளாய் உடைத்துவிடுகின்றார். அங்கே நடக்கும் கொண்டாட்டத்தில் ஒரு மாயன் நகர்ப் பெண்ணைப் புணர்கின்றதை பாடு பொருளாக்குகின்றார். எவரும் எவரையும் புணர்வதில் பிரச்சினையில்லை. தனிமனித சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறதுதானே. ஆனால் மாயன் கலாச்சார நாடுகளுக்கு, பெண்ணுடல்களுக்காய் போகின்றவன் அதை மட்டும் செய்துவிட்டு போய்விடுவான். இங்கேயிருக்கும் கவிதை சொல்லி போல அத்தேசத்தின் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு கண்ணீர் வடித்துக்கொண்டு இத்தகைய செயலைச் செய்வதை ஒரு ‘கொண்ட்டாட்டமாய்’ எழுதுவதில்லை. கடலோடி வந்து எரியூட்டி செழுமை நிறைந்த அத்தேசத்தைக் கொள்ளைகொண்டவர்களும் பெண்களைச் சிதைத்தார்கள். இங்கே காசு கொடுத்தோ அல்லது இல்லாமலோ கவிதைசொல்லி செயவதும் அதற்கு நிகர்த்ததுதான். முன் கவிதையில் வடிந்த கண்ணீர் இப்போது நீலிக்கண்ணீராகி விடுகின்றது.

சேரனின் சில கவிதைகளைப் பார்க்கும்பொது சேரனா திருமாளவளவனா எழுதியது என்ற குழப்பம் ஏற்படுகின்றது. எவரின் பாதிப்பு எவரில் இருக்கின்றது என்பதை வாசிப்பவர்களிடையே விட்டுவிடுகின்றேன். ஈழ/புலம்பெயர்/தமிழக விமர்சகர்களால் முன்னிலைப்படுத்தி விதந்தேந்தப்படும் இவ்விரு கவிஞர்களும் ஒரே நேர்கோட்டில் போய்க்கொண்டிருப்பது ஆபத்தானது. அந்த வகையில் பாவிக்கும் மொழி குறித்தும் படிமங்கள் குறித்தும் அவதானமாயிருப்பது இருவருக்கும் அவசியமாகின்றது.

சேரனின் இத்தொகுப்பை மூன்று முறைக்கும் மேலாய் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். இப்போது இதை எழுதுவதற்காய் இன்னொரு முறையும் வாசித்தாயிற்று. கூறுவதற்கு சற்றுத் தயக்கமிருப்பினும், தொடர்ந்து நிறைய முறை வாசித்தாயினும் ஒரு சில நல்ல கவிதைகளைக் கண்டுபிடிப்பேன் என்பதற்காய் மட்டுமே வாசித்திருக்கின்றேனே தவிர, பிற படைப்புக்கள் போல பிடித்தமான மனோநிலையில் இதை வாசிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ்க் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டைக் கடந்து வேக வேகமாய் தனக்கான குறைகளோடும் நிறைகளோடும் நகர்ந்துகொண்டிருக்கும்போது, சேரன் இன்னும் 80களின் மொழிநடையோடும், நித்திய காதலன் கன்வுகளோடும் இருப்பதுதான் -சேரனின் கவிதைகளுக்கான் இருப்பு- இன்றைய ஈழ/புலம்பெயர் பரப்பில் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதற்கான காரணமோ- என்று எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.

Next Page »

Powered by WordPress