DISPASSIONATED DJ

June 28, 2007

xx/xx/20xx

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 10:55 am

உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் தொடராமல் இருக்கும் என்பற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. அது ஆடையில் அப்பிக்கொண்ட உருக்கப்பட்ட தாரைப்போல அகற்றமுடியாதிருக்கின்றது. உனக்கான தெரிவுகளைத் தெரிவு செய்த நீ அதற்கான விளைவுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று இருத்தலியம் கூறக்கூடும் உனக்கான முற்பிறப்பின் பாவங்களின் ஊழ்வினையை நீ அனுபவிக்கத்தான் வேண்டுமென மதங்கள் வேறொரு திசையில் நின்று விளம்பவும்கூடும். ஆனால் உன் நிலை பரிதாபமானது, எனெனில் நீயிரண்டிலும் இல்லை. இந்த மற்றதுகள் நீ மூர்க்கமாய் நிராகரித்தவை அல்லது உன்னை அவை நிராகரித்தவை. ஆகவே நீ இவற்றைச் சொந்தம் கொண்டாடி ஒரு மூலையில் இருந்துகொண்டு இவை குறித்து எழுதப்பட்ட பிரதிகளைப் புரட்டி புரட்டி சமாதானமாகிவிடமுடியாது. நீ சாதாரணமானவன், உனக்கான பலங்களை விட பலவீனங்களுடன் இயங்கிக்கொண்டிருப்பவன். இந்த நாளின் இந்தக்கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்றெண்ணியபடி கழிவிரக்கமுள்ள நேற்றிலும் நிச்சயமற்ற நாளையிலும் பொழுதுகளை விரயமாக்கிகொண்டிருப்பவன். செய்யவேண்டிய காரியங்களையோ எதிர்கொள்ளவேண்டிய சவாலகளையோ தட்டிக் கழித்தபடி எனது இயல்புநிலை குலைகின்றதென முணுமுணுத்தபடி நள்ளிரவு ஆந்தைகளோடு கரியவிருளில் உனது வழிகளைத் தொலைப்பவன். நீ மிகவும் இயலாத சந்தர்ப்பங்களில் உன்னை விமர்சிக்கத் தொடங்குகின்றாய். ஆனால் அந்த வாசிப்புகள உனது தவறுகளைத் திருத்தமுடியாமல் அறிவியலிலோ ஆன்மீகத்திலோ காரணங்களை உனது விளைவுகளுக்கு தேடத் தொடங்கும்போது நீ உன்னையல்ல பிறரைத் தான் விமர்சிகின்றேனெனும் புரிதலையடைந்து மீண்டும் அபத்தங்களின் நுண்ணிய வட்டங்களுக்குள் சிக்கிவிடுகின்றாய். யாருக்கும் உயர்ந்தவனுமல்ல தாழ்ந்தவனுமல்ல என்று கூறத்தொடங்கும்போதே நீ யாருகோ உயர்ந்தவனாகவும் யாருக்கோ தாழ்ந்தவனாகவும் இருக்கத் தொடங்கிவிடுகிறாய். மதம், இனம், சாதி, காலசாரம் போன்றவற்றை மிகவும் மட்டந்தட்டியபடி, ஆனால் அப்படிக்கட்டுக்களோடு இருப்பவர்களால் எப்படி இப்படி நிம்மதியாக வாழமுடிகின்றது என்பதை உள்ளுக்குள் பிரமிக்கவும் செய்கின்றாய். உலகமற்ற உலகில் உண்மையற்ற உண்மையில் நீயற்ற நீ சாத்தியம்தானா என்றெல்லாம் யோசித்துப்பார்க்கத் தொடங்குகின்றாய். உண்மையற்ற உண்மை நீயற்ற நீயின் மேலேறி நின்று தொடர்ந்து பேசவிடாது தவிர்க்கச் செய்கிறது. அபத்தஙகளோடு வாழ்வது பல சிக்கலகளுக்கும் புதிர்களுக்கும் அழைத்துச் செல்லும் எனவெண்ணும் நீ உன் காலகளிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதுமிருக்கும் மயிர்களை சிலவேளைகளில் வேதனையோடும், பல சமயங்களில் ஒருவித கிளுகிளுப்பான இன்பத்தோடும் பிடுங்கியெறியத் தொடங்குகின்றாய். அவ்வாறு செய்வதால் உனது அடையாளங்களைத் தொலைத்து உன்னைப் பின் தொடர்ந்து வரும் அபத்தப் பிசாசுகளின் நிழல்களிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றாய். பின் குவிந்துகிடக்கும் மயிர்களை எரியூட்டி உனது பிரதியை அழித்துவிட்டேன் என நீ நடனமாடிக் குதூகலிக்கும்போது எரியூட்டப்பட்டவை தனக்கான பிரதியை எழுதிக்கொள்கிறது. அதில் முழுதும் உன்னைப்பற்றிய விபரங்கள் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது உன்னை மிகவும் அச்சுறுத்துகிறது. உன் கனவுகளுக்குள் இருக்கும் கள்வனையும், காமுகனையும், போதைக்கு அடிமையாகுபவனையும் அது வெளிப்படுத்திக்கொள்ள நீ நிர்வாணமாக்கப்படுவது அறிந்து அதிர்கிறாய். மேலும் நிர்வாணம் என்பது மிகப்பெரும் விடுதலையென்ற எளிய புரிதல் கூட இல்லாது மிகவும் கோபிக்கத் தொடங்கி, இந்தப்பிரதியிற்கு எதிர்ப்பிரதியை உனது தோலைக் கிழித்து உன்னை நியாயமாக்கும் வகையில் எழுதத்தொடங்குகின்றாய். சிலவேளைகளில் உனது பிரதியிலிருந்து எழும் குரல்கள் இவை பொய்கள் என்று உரத்துக்கொடுக்கும்போது அந்தப்பக்கங்களைக் கிழித்து கிழித்து கரப்பான் பூச்சிகளைப்போல காலில் வைத்து தேய்த்தழிக்கிறாய். இவ்வாறான இரண்டு பிரதிகளுக்கு அப்பால் காலம் தன் மூன்றாவது பிரதியை எழுதுகிறது. அங்கே, ‘நீ உனக்கு நேர்மையாக இருந்தாய்’ என்ற கல்லறை வாசகம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதைத்தாங்க முடியாத நீ கடற்கரையை நோக்கி ஓடும்போது குளிர்ப்பருவத்தின் முதல் பனி, மயிரும் தோலுமில்லாத உனது உடலில் ஒரு பெரும் வெடிகுண்டைப் போல விழுந்துவெடிக்கின்றது.. காற்று, இரத்தம் பாய்கின்ற நாடிகளில் நுழைந்து குரூரத்தின் இசையை வாசிக்கிறது. அலைகளை, கடல் துப்பித் துப்பியெறிய நீ எழுதிய இரண்டாவது பிரதி கரையத் தொடங்குகின்றது. அது ஒரு படகைப் போல மெல்ல மெல்ல அசைந்து செல்வதைப் பார்க்கையில் உனது இருத்தலை மீள நிர்மாணிப்பதற்கான கடைசித் துருப்பு என விளங்குகின்றபோதும் வெறித்தபடி நீ வாளாவிருக்கிறாய். பின், உனது மற்றவர்கள்/மற்றதுகள் உன்னையின்னும் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் அச்சத்தில் நீ நண்டுகள் நிறைய நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழியினுள் உன்னைப் புதைத்துக்கொள்கின்றாய். அங்கேயும் குடும்பம், உயர்வு/தாழ்வு, அமைப்புகள், இதுவே சிறந்ததென்கின்ற தத்துவ வியாபாரங்கள் இருப்பதைப் பார்த்து உனது வாழ்வின் அபத்தங்களுக்கு என்றுமே தீர்வில்லையெனத் தெளிவடைகிறாய். ஆனால் அங்கிருந்த நண்டுகளின் இராணி நண்டு உனது மயிர்களும் தோலுமில்லாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை முலைகளைப் போல உறிஞ்சத் தொடங்கும்போது நீ ஆணும்/பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வர நிலையை அடைந்துவிடுகின்றாய். உன் இதயம் உறிஞ்சப்படும் ஒவ்வொரு முறையும் நீ உலகெங்குமுள்ள மனம்பிறழ்ந்தவர்களின் துயர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கின்றாய். துயரங்களுக்கும், பாரிய வன்முறைக்கும் அப்பால் அவர்கள் தமக்கான உலகில் தாங்களாக வாழ்வதைப் பார்த்து அவ்ர்களில் ஒருவனாய் என்றைக்குமாய் இருந்துவிடத் துடிக்கிறாய். எனினும் அதுவாக மாறுதல் அல்ல அதுவாக ஆகுதல் என்பதே உண்மையான உனகான மீட்சி என்று கூறி இதயமுறிஞ்சிய இராணி நண்டு உன்னை குழிக்கு மேலே தூக்கியெறிந்துவிடுகிறது. பனிவிழுந்து ஈரஞ்சிலிர்த்திருக்கும் மணலில் வந்தொதுங்கிய பாசியொன்று உன்னோடு உரையாடத் தொடங்கும்போது உனக்கு மீண்டும் மயிர்களும் தோலும் வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அச்சமடைகிறாய். ஒரு உச்சக்கட்ட புணர்வு தரும் இன்பத்திற்கு நிகரான உற்சாகத்தில் நீ நட்சத்திரமொன்றில் சுருக்குப்போட்டு நிலவு நாற்காலியை உதைத்துதுன் கால்களை விடுவித்து விடுதலையைத் தேடிக்கொள்கின்றாய். உனது இனி உனதல்லாத உடலம் பிரபஞ்சப் பெருவெளியில் அலையத்தொடங்குகிறது நடுநடுங்கியபடி.

2.
தொடர்ந்து துயரம் மழையைப் போல இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது அவன் செய்வதறியாது திகைக்கத் தொடங்குகின்றான். இப்படியெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்குமா என்று நினைத்தபடி தொடர்ந்து சிந்திப்பதே ஒரு வன்முறையாக சூனியத்திற்குள் இழுத்துச்செல்வதைப் பார்க்கச் சகிக்கமுடியாது ஒரு நீண்ட துயிலுக்கு சென்றுவிட விரும்புகின்றான். ஒரு பின்னேரப் பொழுதில் factoryயின் பின்வாசலொன்றில் நின்றபடி தனக்கு மிக நெருக்கானவருடன் ப்கிர்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அவர் அவனைவிட இந்நிகழ்வுகளால் நிலைகுலைந்திருப்பதைப் பார்த்து தான் பகிரவிரும்பியதைப் பகிராது இருட்டாகிக்கொண்டிருக்கும் வானத்தை வெறித்தபடி வார்த்தைகளை எண்ணியெண்ணி உரையாடத் தொடங்குகின்றான். பின்னர் மனது வெடித்துவிடக்கூடுமென்ற பாரத்துடன் மின்னொளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தின் விளிம்பில் நின்றபடி தனக்கு பிரியமானவளுக்கு தொலைபேசுகிறான். வார்த்தைகளில்லாது தடுமாறும் அவள இவ்வாறான பொழுதுகளில் அவனுக்கருகில்லாத துயரத்தை தன் பெருமூச்சுகளால் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள. இதுவரையில்லாத கடவுள் நம்பிக்கை நீ துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவேனும் எனக்கு வந்துவிடக்கூடாதோ எனும் நெகிழ்வுதரும் வார்த்தைகளை அலைவரிசையில் கரைக்கிறாள். அந்த இதமான வார்த்தைகளுடன் அவன் தாண்டவக்கூத்திற்கு ஆயத்தாமாகின்றான். ‘சாவதும் ஒரு கலை’ என்று கூறிய சில்வியா பிளாத் கூட முதல்முயற்சியிலேயே நேர்த்தியாக தனது கலையை நிகழ்த்தினாரில்லை
.

March 12, 2007

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 10:46 am

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if not) நியூசிலாந்து வெல்ல வேண்டும் என்று நேர்ந்துகொள்கின்றேன்).

-விளையாட்டுக்கள் பற்றிய சில குறிப்புக்கள்-
(மீள்பதிவு)

அண்மையில் ஒரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது கதையின் நடுவில் எனக்கு கிறிக்கெட் ஒரளவுக்கு விளையாடத்தெரியும் என்றபோது அவரால் நம்பமுடியவில்லை. யாழில் இருந்தபோது பாடசாலையின் பதினைந்து வயதுட்குட்பட்டவர்களின் கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றேன் என்ற அத்தாட்சிப்பத்திரம் வாசித்தபோதும் அந்த நண்பர் ஒருவித நகைச்சுவையாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, இன்று மிகச் சோம்பேறியாக காலங்கழிக்கும் எனக்கும் இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது வியப்பாய்த்தானிருக்கிறது. -எங்கள் தாத்தாவுக்கு முன்னொருகாலத்தில் யானை இருந்தது - என்று பழம்பெருமை பேசுவதை விட வாழ்வில் உவப்புத்தரக்கூடிய விடயங்கள் வேறேதும் உள்ளனவா என்ன?

யாழில் இருந்தபோது கிறிக்கெட் மட்டுமில்லை, உதைபந்தாட்டம், சதுரங்கம் போன்றவற்றிலும் ஆர்வத்துடன் பங்குபற்றி, பாடசாலை பாடசாலைகளாய் போட்டிகளுக்காய் அலைந்து திரிந்தது என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். அதுவும், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாலும் கிடைக்காத புகழ் -பத்து நிமிடத்தில் பிரபல்யம் ஆகுவதுபோல- இவ்வாறான விளையாட்டுக்களில், தடகளபோட்டிகளில் ஈடுபடுபவர்க்கு பாடசாலையில் வந்துவிடுவது பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கு அருகிலேயே வீடு இருந்ததனால் சிறுவயதிலேயே, அதிகமான பின்னேரப்பொழுதுகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில்தான் கழித்திருக்கின்றேன். மைதானத்தின் நடுவில் கிறிக்கெட் பயிற்சிகள் நடக்கிறதென்றால், மைதானத்தின் இருகரைகளிலும் உதைபந்தாட்டப்பயிற்சிகள் களைகட்டும். இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று மைதானத்தின் ஒருமூலையில் வலைபந்தாட்டப் பயிற்சிகள் (netball) நடக்கும். பயிற்சிகளில் பங்குபெற முடியா சிறுவயதில் இவற்றில் எந்த விளையாட்டை நான் அதிகம் இரசித்துக் கொண்டிருப்பேன் என்று எவருக்கும் கூறத்தேவையில்லை. எனது இந்தப்பழக்கம் -தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்- தொடர்வதை என் சுயபுராணத்தின் சாட்சிகளாய் நீங்கள் அவதானித்துக்கொண்டிருப்பதால், தன்னடக்கம் காரணமாய் அது குறித்து விதந்து பேசுவதை இந்தப்புள்ளியில் நிறுத்திக்கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை நான்குபுறமும் சூழ்ந்து வகுப்பறைகள் இருந்ததனால், கிறிக்கெட்டோ, உதைபந்தாட்டமோ, வலைபந்தாட்டமோ நடைபெறப்போகின்றதென்றால், மத்தியானமளவிலேயே பாடசாலையை மூடிவிடுவார்கள். வீடு அருகில் இருப்பவர்கள் வீடுகளுக்குப் போய்த் திரும்புவதும், தொலைவில் இருப்பவர்கள் அன்றைய விளையாட்டு முடியும்வரை பாடசாலையில் நிற்பதுமாய் அனேகருக்கு அன்றையபொழுது இனிதாய்க் கழியும் (வகுப்புக்குள் இருந்து, புத்தகத்தைத் திறந்து, கொட்டாவி விட்டு, வாத்தி முறைத்துப் பார்க்காத எந்தப்பொழுதும் எனக்கு அருமையானதுதான்). ஒரு காலத்தில் எங்கள் பாடசாலையின் உதைபந்தாட்டப் புகழ் அகில இலங்கைவரை பரவியிருந்தது (’பட்டிக்காடா பட்டணமா?’ என்று போஸ்டர் ஒட்டி ஆட்டங்களை விறுவிறுப்பாக்கும் வரைபோனதாகவும்…) என்று கேள்விப்பட்டிருந்தாலும், நான் படித்த காலங்களில் பெண்கள்தான் வலைப்பந்தாட்டத்தில் மிகப்பிரபல்யமாய் இருந்தனர். அதிலும் வலைபந்தாட்டத்துக்கு என்று ‘என்றுமே புகழ்’ பெற்றிருந்த உடுவில், சுண்டிக்குளி, வேம்படி மகளிர் கல்லூரிகளுக்கே இவர்கள் பயத்தை வரவழைத்துக் கொண்டிருந்த காலமது. வலைப்பந்தாட்டத்துக்கு கூடும் கூட்டத்தைப்பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான விடயங்கள் குறித்தும்- சொல்லாமல் புரிவர் பெரியார்- என்பதற்கிணங்க அதிகம் விபரிக்கத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

பாடசாலை அணிக்காய் வலைப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அக்காமார்களில் சிலர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாய் இருந்ததாலும் அவர்கள் மூலம் வலைபந்தாட்டம் விளையாடும் பிற அக்காமார்களும் எனக்கு நன்கு பழக்கமாயிருந்ததாலும் கொம்புகள் முளைத்த மாதிரியான எண்ணந்தான் அன்றையகாலகட்டத்தில் எனக்குள் பரவியிருந்தது. அதுமட்டுமில்லாமல், இப்படி ‘பெரும் புகழுடன்’ நானிருக்கின்றேன் என்று பல அண்ணாமார்களுக்குத் தெரிந்து, விளையாடும் அக்காக்களுடன் ‘சில உடன்படிக்கைகள்’ செய்யும் நோக்கத்துடன் என்னை இரகசியமாய் அணுக எனது நிலை சிறகுகளில்லாமல் வானில் பறந்த கதையாயிற்று. ஆனால், அது பிறகு ‘வானில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய அவதியாய்’ சில அண்ணாக்களுக்கு நான் உபத்திரமாய் ஆகிப்போனதும் சோகமான விடயந்தான்.

எனக்கு விளையாட்டுக்களின் மீது ஆர்வம் வந்தற்கு, எனது அண்ணாவுக்கு கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றிலிருந்த மோகம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணமும் இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது. அது என்னவென்றால், பெடியங்கள் கிறிக்கெட், உதைபந்தாட்டம் விளையாடும்போது அவர்களை உற்சாகப்படுத்தவரும் பெண் இரசிகர்களின் எண்ணிக்கையையும் உற்சாகத்தையும் கண்டும்தான் எனக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நான் எங்கள் கிறிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும்போது அது ஒரு சோகமான நிலையை அடைந்தது குறித்து பிறகு கூறுகின்றேன். பன்னிரண்டு வயதளவில் பதினைந்து வயதுட்குட்பவர்களின் கிறிக்கெட் அணியில் எடுபடும் வாய்ப்பிருந்தும், கொழும்புக்கு விடுமுறையில் சென்று சில வாரங்கள் கழித்ததில் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனதில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. சரி கிறிக்கெட்தான் கைநழுவிப்போய்விட்டது உதைபந்தாட்டத்திலாவது கவனஞ்செலுத்தலாம் என்று அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பலானேன். விடிகாலையில்தான் உதைபந்தாட்டப் பயிற்சிகள் நடக்கும். பயிற்சி முடிந்தபின் - அன்றையகாலகட்டத்தில் பிரேமதாசா பாடசாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு கப் பாலும், சங்கிலி பணிஸ¤ம் எல்லோருக்கும் வழங்கப்படும். ஒரு மாதிரியாக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது போட்டியில் முதலாவது கோலும் அதிஸ்டவசமாய் நான் போட்டிருக்கின்றேன். எப்படி கோல் போட்டது என்று சொன்னால் கொஞ்சம் அவமானந்தான் ஆனால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. வேறொரு நண்பன் கோலுக்கு அடித்த பந்தை, கோலி தட்டுத்தடுமாறித்தடுக்க அதையெடுத்துத்தான் கோல் போட்டனான். Rose is a rose is a rose என்ற மாதிரி எப்படி என்றாலும் கோல் கோல்தானே என்று என்சார்பாய் நீங்கள் பேசுவதும் நன்றாகவே என் காதுகளில் விழுகிறது என்க.

ஆட்டங்களுக்கு முன் ஒரு சம்பிரதாயமான பழக்கம் -ஆதிகாலத்தில் இருந்தே- எங்கள் பாடசாலையில் இருந்தது. பாடசாலையில் இருந்த கோயிலிலும், பக்கத்த்தில் இருந்த வைரவர் கோயிலிலும் தேங்காய் உடைத்து ‘வெற்றியைத்தாரும்’ என்று பிரார்த்திப்பதுதான் அது. ஆனால் கோயில்களுக்குள் போக முன்னரோ, போனதன் பின்னரோ, அல்லது இடையிலோ பச்சை முட்டைகள் குடிப்பதை மட்டும் மறக்கமாட்டோம். குடிக்கின்ற ஒவ்வொரு பச்சை முட்டைக்கேற்ப போடுகின்ற கோல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது எங்களில் பலருக்குள் ஒரு ‘ஜதீகமாய்’ இருந்தது. நான் விளையாடிய காலத்தில் நாங்களும் இன்னொரு பாடசாலையும் (வசந்தன் படித்த பாடசாலையும்) வலய/கோட்டமட்டத்தில் எடுபட்டு யாழ் மாவட்ட அளவில் விளையாடப் போயிருந்தோம். உதைபந்தாட்டத்தில் கத்தோலிக்க பாடசாலைகளின் திறமைபற்றி கூறவே தேவையில்லை. உலகில் பிரேசில் எப்படி கால்பந்தாட்டத்துக்கு மகுடம் சூட்டுபவர்களோ அப்படித்தான் யாழில் கத்தோலிக்கப் பாடசாலையினர். யாழ் மாவட்ட அளவில் எங்களுடன் முதலில் மோத வந்த அணி நாவாந்துறை சென்மேரிஸ் (பெயர் சரியா?) அணியினர். ஆனால் அன்று நடந்த சோகத்தைக் கேட்டால் என்னவென்று விளம்புவேன்? அவர்கள் அணியில் இருந்த அனைவரும் ரொனால்டோவாயும் ரொனால்டினோவாயும் இருந்தனர். ஒன்றா… இரண்டா… (என்ற ‘ஆசைகள்’ அல்ல, இது அவமானம்) ஏழு கோல்களைப் போட்டு, ஏதோ எங்களோடு பயிற்சி செய்வதைப் போலத்தான் அந்தப்பெடியங்கள் விளையாடினார்கள். கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் இனியும் நின்றால் அவமானம் என்று நினைத்து ஆட்டம் பார்க்க வந்த மாமாவின் சைக்கிளில் ஏறி, நண்பர்களையும் விட்டுவிட்டு உடனேயே வீடு திரும்பியதாயும் நினைவு.

(2)
கிறிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியபோது நான் படித்த பாடசாலை சொந்த இடத்தைவிட்டு பல்வேறு ஊர்களுக்கு எங்களைப்போல அதுவும் அகதியாய் அலையத்தொடங்கியிருந்த காலம். கிறிக்கெட் விளையாடுவதற்கு சொந்தமாக விளையாட்டு மைதானமே இல்லாதபோது, ஒருமாதிரி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை கண்டுபிடித்திருந்தோம். அந்த இடத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இந்திய இராணுவம் முகாம் போட்டுத் தங்கியிருந்தது. மழைவந்தால் நீர் தேங்கக்கூடிய அதிபள்ளமான பகுதியும் கூட. அத்தோடு பக்கத்தில் இருந்த அரிசி ஆலையிலிருந்த உமி, கரி முழுவதையும் இந்த ஒதுக்குப்புறமான காணியில்தான் கொட்டிக்கொண்டுமிருந்தார்கள். அந்தப்பக்கமாய் போனால் உமியும் கரியும் சாம்பலும் காற்றில் பறந்து வந்து கண்ணில், மூக்கில் எல்லாம் உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஒருமாதிரி pitch போட்டு அதற்கு மேல் Matting எல்லாம் ஆணியால் இழுத்து மண்ணோடு இறுக்கி அடித்து கிறிக்கெட் விளையாடுவதற்குத் தயாராக்கியிருந்தோம். ஆனால் இரசிகைகள் அந்தமாதிரி கூடுவார்கள் என்று விளையாட நான் பிரியப்பட்ட கிறிக்கெட்டை எந்த இரசிகையும் இல்லாமல் விளையாடி முடிந்ததுதான் மிகுந்த அவலமான விடயம். ஏனென்றால் எங்கள் பாடாசாலை இயங்கிக்கொண்டிருந்த நகரை விட்டு பக்கத்து நகரில்தான் விளையாட்டு மைதானம் இருந்தது என்றபடியால் கிறிக்கெட்டுக்காய் என்று கூறிவிட்டு பயணம் செய்து வருவது பெண்களுக்கு கடினமாயும் இருந்தது. (ஆனால் வகுப்புக்களிடையில் ‘சென்றுவருக தோழர்களே வென்று வருக’ என்று அனுப்பி வைப்பதை மட்டும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நாங்களும் ஓமோம் ஓமோம் என்று தலையாட்டிவிட்டு… அடுத்த நாள் தோற்றகதையை வந்து சொல்வதும் வழமையான நிகழ்வாய் இருந்தது). யுத்தகாலம் என்றபடியால் வாகன வசதிகளும் அவ்வளவாய் இல்லையென்பதால், வரும் பார்வையாளர்களும், விளையாடும் எதிர் அணியினரும் உட்கார்வதற்கு என்று எங்கள் கைகளிலும் தோள்களிலும் நீண்ட வாங்குகளைக் காவிக்கொண்டு எல்லாம் நெடுந்தூரம் நடந்துபோய் இருக்கின்றோம்.

சென் பற்றிக்ஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி போன்றவற்றோடு விளையாடி, இரண்டு ஆட்டங்களில் வெற்றிதோல்வியின்றியும், மிகுதி இரண்டு ஆட்டங்களில் தோற்றும் இருக்கின்றோம்.

அதுவும் யாழ் இந்துக்கல்லூரியுடன் தோற்றதையும் அங்கு நிகழ்ந்ததையும் பற்றி இப்போது நினைத்தால் கூட நெஞ்சில் ஒரு அக்கினிக்கோளம் உருவாகின்றமாதிரித்தான் தோன்றுகின்றது. ஆட்டம் இந்துக்கல்லூரி மைதானத்தில்தான் நடந்தது. நாங்கள் விக்கெட்டுக்கு முன்னால் வளைந்துநின்றால் வளைந்த உடம்பிற்கு அளவாய்த்தான் விக்கெட்டும் இருக்கும், ஆனால் இந்துக்கல்லூரிப்பெடியங்களில் பலர் விக்கெட்டைப்போல இரண்டு மடங்களவில் பெரிய உருப்படியாக இருந்தாங்கள். என்றாலும் தாவீதை வென்ற கோலியாத்தின் கதை தெரியும் என்பதால் நாங்கள் இதற்கு எல்லாம் அவ்வளவாய்ப் பயப்பிடவில்லை. அன்றைக்கு என்று என்னோடு ஒப்பினிங் போலிங் போடுகின்றவன் வருத்தம் என்று காரணத்தைக் காட்டி விளையாடவும் வரவில்லை. வருத்தம் என்பதைவிட அவனுக்கு தனக்கு அணித்தலைமை பதவி தரவில்லை என்ற கடுப்பு ஏற்கனவே இருந்தது. எனவே தோற்கப்போவதை படுதோல்வியாக்குவதில் தனது பங்கும் இருக்கட்டும் என்று பெரிய ஃபீலா காட்டிக்கொண்டு வராமல் நின்றான். இந்துக்கல்லூரிக்கு அப்போது யோகிதான் பயிற்சியாளராய் இருந்தார். நாங்கள் 50ற்குளேயே சுருண்டு விட்டோம். அவங்கள் அடிகிறாங்கள் அடிக்கிறாங்கள் முடிகிறபாடாய் காணவில்லை. ஓட்டங்கள் இருநூறைத் தாண்டிவிட்டது…இரண்டு பேர் 50ற்கு மேலாய் அடித்தமாதிரியும் நினைவுண்டு. கடைசியில், சரி இவங்கள் பாவங்கள் என்று மனமிரங்கி ஆட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு எங்களை இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாட அழைத்தார்கள். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே என்னைப் பற்றிய பூர்வீகம் ஏற்கனவே தெரிந்து, வெளியாலை இருந்து இந்துக்கல்லுரிப் பெடியங்கள் நக்கலடித்துக்கொண்டிருந்தாங்கள். பூர்வீகம் வேறு ஒன்றுமில்லை.; அதற்கு ஒராண்டு முன்னர்தான் இந்துக்கல்லூரிக்கு படிக்கப்போய் ஒரு மாதம் வரை இருந்துவிட்டு இது நமக்கெல்லாம் ஆகாது என்று பழைய பாடசாலைக்கு மீண்டு(ம்) போயிருந்தேன். அதை தெரிந்து வைத்து அவங்களுக்கு ஒரே நக்கல்…இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. பந்து வீசும்போதுதான் எதையும் செய்ய முடியவில்லை…துடுப்பாட்டம் செய்யும்போதாவது இவங்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று கறுவிக்கொண்டேன். ஆடிக்கொண்டிருந்தபோது நடுமைதானத்துக்குக் கூடக் கேட்கக்கூடியமாதிரி என்னுடைய ‘புகழை’ கலிங்கத்துப்பரணி ரேஞ்சுக்குப் பாடிக்கொண்டிருக்க, எனக்கு வந்த விசருக்கு அப்போது நல்ல லெந்தாய் வந்த பந்துக்கு கண்ணை மூடிக்கொண்டு விசுக்கினேன். ஒன்டு அடிபட்ட பந்து எல்லைக்கோட்டைத்தாண்டி நிற்கின்ற அவங்களின்ரை தலையில் படவேண்டும், இல்லாவிட்டால் விசுக்கின்ற bat ஆவது கைநழுவிப்போய் இரண்டு பேரின்ரை மண்டைகளையாவது உடைக்கவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு -அந்தமாதிரித்தான் batஜ- விசுக்கினனான். ஆனால் பிறகு -ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது- அந்தப் பந்து நடு ஸ்டாம்பை துவம்சம் செய்துகொண்டு போக மாமியார் முன் நாணிப்போகும் மருமகனாய் என் ‘வீரதீரச்செயல்’ முடிவுக்கு வர பவுலியனை நோக்கித் திரும்பவேண்டியதாயிற்று. அதற்கும், ஒழுங்காய் லெந்தான பந்தைக் கூடப்பார்த்து அடிக்கத்தெரியாதவன் ஒரு அணிக்கு தலைமைதாஙக வந்துவிட்டான் என்று வாய்க்கரிசி போட்டு வாழ்த்தாத குறையாக அவங்களின் ‘வாழ்த்து’க் கிடைத்தது. எனினும் இந்துக்கல்லூரி நண்பர்களோடு அருந்திய அருமையான பால் தேத்தண்ணியினதும் வடையினதும் வாய்ப்பனினதும் சுவையும் நட்புக் கலந்த வார்த்தைகளும்தான் இப்போது அதிகம் நினைவில் நிற்கின்றது என்பபதையும் குறித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

கிறிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவற்றில் இருந்த விருப்பைப் போல சதுரங்கத்திலும் மிகப்பெரும் விருப்பு எனக்கு ஈழத்தில் இருந்தபோது இருந்தது. இப்போதும் யாகூவின் சதுரங்கத்தளத்துக்கு வந்தால் நான் ஓடித்திரிந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கவும் கூடும். சிறுவயதிலேயே -ஏழு அல்லது எட்டு வயதளவில் - சதுரங்கம் விளையாடத்தொடங்கியிருந்தேன் என்று நினைக்கின்றேன். சதுரங்கப் பலகையை முதன்முதலில் எனது அண்ணாவும் அக்காவும் வாங்கித்தந்த நாள் கூட நினைவில் நிற்கின்றது. அதை வாங்கியவன்றுதான், அண்ணாவின் நண்பரொருவரின் வீட்டில் பொம்மர் அடித்து அவர்களின் வீடு சிதைந்துபோனதும், அதிஸ்டவசமாய் அந்த அண்ணாவும் அவர்களின் குடும்பமும் தப்பியிருந்தாலும் பொம்மரைக் கண்டு பாதுகாப்புக்கென ஒதுங்கிய ஒருவர் இறந்துபோனதும்…அந்த கசப்பான நாள் நினைவில் இப்போதும் மிதக்கிறது. சதுரங்கப்பலகையை வாங்கிய சாபத்தால்தான் இப்படி நடந்தது என்று நெடுங்காலத்துக்கு எண்ணிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். யாழ் நகரில் சனசமூக நிலையங்கள், YMCA போன்றவை நடத்திய அனேக போட்டிகளில் பங்குபற்றி சிலதில் பரிசுகள் வாங்கியதும் இனிமையான தருணங்கள்தான். அந்தப்பொழுதுகளில் அப்பாவோடு சுமூகமான உறவுகள் இருந்ததும் - முக்கியமாய் எதையும் எதிர்த்துக் கதைக்காத ‘நல்ல பண்பும்’ என்னிடம் இருந்ததை அப்பா கூட இப்போது நனவிடை தோய்ந்து அந்தக்காலத்தை மகிழ்வுடன் அசை போடவும் கூடும். பிறகு பாடசாலைகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் யாழ் மாவட்டவளவில் தொடர்ந்து runners-up யாய் -யாழ் இந்துக்கல்லூரிக்கு- அடுத்ததாய் வந்திருக்கின்றோம். எங்கள் அணியில் பெண்கள் இருப்பதைப் பார்த்து ஒருவித எகத்தாளத்துடன் விளையாடத்தொடங்கியவர்களை எல்லாம், அசர வைத்து வெற்றி வாகை சூடிய நாளகளும்….பதின்மூன்று பதினான்கு வயதுகளிலேயே வயது வித்தியாசமின்றி உயர்தரம் படிக்கின்றவர்களோடு நண்பர்களாகிக் களித்ததும் அருமையான பொழுதுகள்தான்.

(3)
விளையாடும் காலங்களைப்போல விளையாட்டை வெளியிலிருந்து இரசிக்கும் காலங்களும் மிகவும் அருமையானது. உள்ளூரிலிருந்து சர்வதேசம் வரை வெறிபிடித்தலையும் விளையாட்டு இரசிகர்கள் குறித்து பக்கம் பக்கமாய் எழுதலாம். நமது ஊர்களில்தான் மண்டையை உடைக்கின்றவரை இரசிகர்கள் போவார்கள் என்பதை… ஜரோப்பிய நாடுகளில்/ இலத்தீன் அமெரிக்காவில் நடக்கும் இரசிகர்களின் சண்டைகளைப்பார்த்தால் நாங்கள் எல்லாம் அவர்களின் கால்தூசிக்கும் வரமாட்டோம் என்றுதான் எண்ணிக்கொள்ளவேண்டிவரும். இன்றைய பொழுதில் வடஅமெரிக்கத் ‘தேசியத்தில்’ தவண்டும் புரண்டும் நீந்தியும் எழுந்தும் கொண்டிருப்பதால் கிறிக்கெட்ட் போன்றவற்றின் மீது வெறி போய், ஜஸ் கொக்கி, கூடைப்பந்தாட்டம், பேஸ்போல் போன்றவற்றில் பித்துப்பிடித்தலையும் நிலை வந்துவிட்டாலும் கனடாவில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் ஒருவித வெறியுடன் கிறிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

கனடா வந்தசமயத்தில்தான் இலங்கை கிறிக்கெட் அணி உலகக்கோப்பையை சுவீகரித்திருந்தது. நான் இலங்கையணியின் இரசிகனாவே என்றும் இருந்திருக்கின்றேன். இப்போது அல்ல, சிறுவயதிலிருந்தே டிலிப் மெண்டிஸ், அர்ச்சுன இரணதுங்கா போன்ற தொப்பை வண்டிக்காரர்களால் இலங்கை அணி நிரப்பட்டு எல்லா நாடுகளும் வந்து மொங்கு மொங்கு என்று அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் இலங்கையணியின் தீவிர இரசிகன்தான். அதற்கு அடுத்து மேற்கிந்தியத்தீவுகளுக்கு. எனது அண்ணாமார், அப்பா போன்றவர்கள் மேற்கிந்த்தியத்தீவின் தீவிர இரசிகர்கள். கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால் ஈழத்துக்கும் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கும் நிரம்ப ஒற்றுமை இருப்பது புரிபடும். சுமூகமற்ற அரசில் சூழ்நிலைகள், போராட்ட இயக்கங்கள், காலநிலை, அழிவுகள், மீண்டும் உயிர்ப்புடன் எழுதல்… என்று பல புள்ளிகளில் ஒன்றுபடமுடியும். இப்படியான ஒரு ‘தீவிரமான ஆராய்ச்சியின்’ ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு ஸ்பானியப் பெண்கள் மீது ஈர்ப்பு வருவதும் அதிசயமில்லைதானே (அப்பாடா ஒருமாதிரி நான் நெடுங்காலமாய் கூற நினைத்த விடயத்தை காரணகாரியங்களுடன் நிரூபித்துவிட்டேன்).

எனக்குத் தெரிந்து, அண்ணா ஊரில் இருந்தபோது நடத்தி விளையாடிக்கொண்டிருந்த் அணிக்குக் கூட Gary Sobers என்று பெயரிட்டதாய்தான் நினைவில் இருக்கிறது. கிறிக்கெட் வேல்ட் கப் நடந்துகொண்டிருந்தபோது நாங்கள் இங்கே பேப்பர் போட்டுக்கொண்டிருந்தோம். தனியே பேப்பர் போடுவது -அதுவும் வின்ரர் காலங்களில்- கடினமென்பதால் நானும் அவ்வவ்போது அண்ணாக்களுடன் உதவிக்கு என்று போவதுண்டு. ஆனால் இங்கு விடிகாலை நேரத்துக்கே வேல்ட் கப் ஆட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால், பேப்பர் போடப்போகாது தூங்குவது போலக் கள்ளமாய் நடிக்கத்தொடங்கிவிடுவேன். ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை பார்க்காவிட்டால் அது ஒரு ஆட்டம் பார்த்ததுமாதிரி இல்லை என்று வெறிபிடித்த இரசிகனாய் இருந்த காலம் அதுவாம். அண்ணாக்களும் என்ரை கள்ளம் விளங்கியோ அல்லது பாவப்பட்டோ விட்டுவிட்டுப்போக நான் கொஞ்சநேரத்தில் எழும்பி ஆட்டம் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அண்ணாக்களின் நண்பர்களும் வந்து குவிய, இடைக்கிடை ஆட்டம் பற்றிய கதைகள், ஈழத்தில் அவர்களின் நனவிடைதோய்தல்கள் என்று விரிந்துபோக ஆட்டங்களைப் பார்ப்பது சுவாரசியமாகும் (இங்கே சாதாரண ரீவி சானல்களில் கிறிக்கெட்டை ஒளிபரப்பமாட்டார்கள்). நான் இங்குசந்தித்த நண்பர்களில் மட்டுமில்லை, 2004ல் இலங்கைகுச் சென்றபோது சந்தித்த நண்பர்கள் வரை 90% மேற்பட்டவர்கள் தீவிர இந்திய இரசிகர்களாக்வே இருக்கின்றார்கள் எனபதில் இந்தியாவின் பாதிப்பு ஈழத்துமக்களிடையே எவ்வளவுதூரம் என்பது வெள்ளிடை மலை. அதுவும் 2004ல் திருகோணமலையில் நின்றபோது ஏதோ ஒரு கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடியபோது இருந்த சனம் முழுதும் இந்தியாவுக்கு ஆதரவாய் நிற்க - சித்தியின் மகள் மட்டுமில்லை சித்தி கூட - இலஙகை வீரர்களைத் திட்டித்திட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, என்னுடைய மானத்தைக் காக்கவேனும் இலங்கையணி வெல்லவேண்டும் என்று நேர்ந்துகொண்டேன். அவர்கள் இறுதியில் வென்றுகாட்டி, ஒரு இரசிகனுக்குத் தரவேண்டிய மிகப்பெரும் சந்தோசத்தை எனக்கு அன்று அளித்துமிருந்தார்கள்.

ஆனால் 96ல் நடந்த உலகக்கோப்பையை இலங்கையணியின் இரசிகன் என்றவகையில் - என்னால் என்றுமே மறக்கமுடியாது. உலகக்கோப்பையைத் தமதாக்கிக்கொள்ளும்வரை எந்தப்போட்டியிலும் தோற்காமல் அருமையாக அவர்கள் ஆடியிருந்தார்கள். அதிலும் இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டமும், ஆஸ்ரேலியாவுடனான இறுதியாட்டமும் உயர்தர ஆட்டங்கள். கைதராபாத்தில்(?) நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜெயசூரியாவின் பந்துகள் -துடுபடுத்தாடியவர்க்ள் வெளியே போகின்றது என்று விலத்திவிட- பின்னங்கால்களுக்குள் சுழன்றாடி விக்கெட்டுக்களை விழுத்திய காட்சிகளையெல்லாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன? அதேபோல இறுதியாட்டத்தில் அசைக்கமுடியாது என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி 250 தாண்டிவிட்டு பெருமிதமாய் நிற்க, இலஙகையின் அன்றைய ஆரம்பநிலை ஆட்டக்காரர்களான ஜெயசூரியாவும், களுவிதானவும் கொஞ்ச ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்துபோக, அரவிந்த டீ சில்வா- அசங்க் குருசிங்கா, அர்ஜூன இரணதுங்கா, மகாநாமவுடன் very coolயாய் இணை துடுப்பெடுத்தாடி, சதமும் அடித்து அணியை உலகின் உச்சிக்கு கொண்டுபோய கிண்ணத்தை கைப்பற்ற வைத்த ஆட்டம், என்னைப்பொறுத்தவரை ஒரு classicதான். அதுபோல் பிரான்சோடு இறுதி ஆட்டத்தில் 3-0 தோற்று, அதற்கடுத்த உலகக்கோப்பையில் ரொனால்டோ ஒரு படைப்பின் நேர்த்தியுடன் பந்தின் இலயத்தோடு இயைந்து, ஜேர்மனியை மண்கவ்வச் செய்த பிரேசிலின் ஆட்டமும் அவ்வளவு இலகுவில் மனதைவிட்டு அகலாது.

(4)
மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள், ஒரு ப்னீக்ஸ் பறவையைப் போல எழுந்துவரும் நம்பிக்கையைத் தருவதும், இன்று ஆரம்பிக்கின்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் -ஏதாவது பெருந்தவறுகள் விட்டாலன்றி- பிரேசில் வெல்லப்போகின்றது என்ற கட்டியங்களும் மீண்டும் கிறிக்கெட்ட்டிலும், உதைபந்தாட்டதிலும் எனக்கு ஈர்ப்பைக் கொண்டுவரச்செய்கின்றன. அதைவிட ரெக்கேயும், சம்பாவும் ஆடியும் பாடியும் ஆட்டங்களை ஒரு திருவிழாவின் கொண்டாட்டங்கள் போல ஆக்கும் இரசிகைகளைப் பார்க்கும்போது -எனக்குள் இருக்கும் இரசிகன் என்றும் உறைந்துபோய்விடமாட்டான் போலதான் தோன்றுகின்றது. இரசிகைகள் விளையாட்டு வீரர்கள் மீது பித்துப்பிடித்தலைவதும், என்னைப் போன்ற இரசிகன்கள் இரசிகைகள் மீது மையல் கொள்வதும் காலங்காலமாய் நடப்பதுதானே.

January 14, 2007

நீரில் கரையும் சொற்கள்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 10:31 am

-மீள்பதிவு-

dj

xx.xx.20xx
இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றது. ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தால்தான் அந்தப்படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவுக்கு வருகின்றது. உண்மையில் இந்த தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது. விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக்கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவறவிடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்துபோக விரும்புகின்றேன். ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புக்களை வாசித்துவிட்டு அவற்றிற்கு பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளி விட்டுப்போக விரும்புகின்றேன். பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர விரும்புகின்றேன். ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை.
……………………………………………….

xx.xx.20xx
நீ சிலவேளைகளில் குழந்தையாய், பலவேளைகளில் உக்கிரமான காளியாய் விசுவரூபம் எடுக்கிறாய். நீ பேசுகின்ற/உபயோகிக்கின்ற மொழி, பல தடவைகளில் நான் கேள்விப்படாத மொழியாக இருக்கிறது. இந்த உக்கிரமான மொழியைத்தான் எனது அம்மாவும் அக்காவும் பேசவிரும்பி தங்களுக்குள் அடக்கிக்கொண்டிருக்கவும் கூடும். உனது தனித்துவமான இந்த மொழி எந்த நேரமும் இதத்தைத் தருகின்றது என்று பொய் சொல்லமாட்டேன். சிலவேளைகளில் அவையென் மனக்குளத்தில் கல்லெறிந்து அலையலையாய் கேள்விகளை உருவாக்குகின்றன. என்னை, எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற பதட்டத்தை எனக்குள் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.
………………………………………………

xx.xx.20xx
இரத்த ஆறு பெருகிக்கொண்டிருக்கும் நோயுற்ற நாட்டிலிருந்து பிரசவிக்கப்பட்ட நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், புல்வெளிகளையும், பூக்களையும் பேசிக்கொண்டிருத்தல் எவ்வளவு இயல்பானது - இயல்பற்றது என்பதனைவிட இவ்வாறான நெகிழ்வான கனவுகளும் இல்லாவிட்டால் நாமும் எப்போதோ மனப்பிறழ்வானவர்களாய் ஆகியிருக்கவும் கூடும் என்ற அச்சந்தான் என்னில் உறைகிறது.
……………………………………………….

xx.xx.20xx
ஒரு குழந்தையால் எப்படி தனது அழுகைக்கான காரணத்தை வாய்திறந்து சொல்லமுடியாதோ….ஒரு சகமனிதர் தான் உணர்கின்ற வலியை எப்படி வார்த்தைகளால் விபரிக்கமுடியாதோ…அப்படித்தான் பலபொழுதுகளில் ஒருவரை எப்படி ஆழமாய் உள்ளார்த்தமாய் நேசிக்கின்றோம் என்பதையும் அந்த நபருக்கு வெளிப்படுத்துவிடமுடியாது. துரோகங்களையும் பழிவாங்கல்களையும் அப்படியே இன்னொரு சகமனிதருக்கு பிரதிபலித்துக் காட்டுவதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் அறிந்து வைக்கின்ற நாம், உறவுகளை ஆழமாய் பிணைத்து வைத்திருக்கக்கூடிய அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவதுதான் மிகவும் அவலமானது.
……………………………………………….

xx.xx.20xx
சூரியன் இந்த நாளை மிக மிக வேகமாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றது. Patioவில் இருந்து மூன்று பியர்களும், ஒரு 5oz ஷொட்டும் அடித்து முடிக்க மழை பொழியத் தொடங்குகிறது. நாம் சிலிர்த்த, நம்மால் சிலிர்க்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசும்போது மனம் முழுதும் நிரம்பும் விகசிப்பும் நிதானமும் ஏன் நண்பா நாம் அரசியல் பேசும்போது மட்டும் வருவதில்லை? முகமெல்லாம் இருண்டு உலகின் கடைசிக்கணம் மாதிரியல்லவா நாம் குரைக்கத் தொடங்கிவிடுகின்றோம். உனக்கு ஏறிவிடுகின்றது; கெட்ட வார்த்தைகள் கலந்து உனக்கான அரசியலைப் பேசத்தொடங்குகின்றாய். வழமைபோல நானும் ஒமோம் போட்டபடி கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இடைமறித்து உரையாடத் தொடங்குகின்றேன். உனது குரல் உனக்குரிய தார்மீக ஆவேசத்துடன் உயரத்தொடங்குகின்றது. மழையில் அரையும் குறையுமாய் நனைந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் எம்மைப் பார்த்து waitress பெண், Why don’t you guys come inside and talk here? என்கிறார். நண்பா, நமக்குள் இருக்கும் விமர்சனங்கள்/பலவீனங்களை மீறி, நமக்குரிய ஒரே ஆதர்சனம் ‘சே’ என உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல நமக்கான கடைசி நம்பிக்கையாய் இன்னமும் நம்மில் தேக்கிக்கொண்டிருப்பது மார்க்சிசத்தையும், பெரியாரியத்தையும் என்பதையும், இதோ விழுந்துகொண்டிருக்கும் இந்த மழைத்துளிகளும், பச்சை patioவுக்கு கருமை வர்ணம் பூசும் இந்த இரவும் மிக நன்கு அறியும்.
……………………………………………….

xx.xx.20xx
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று இடம் பொருள் ஏவல் அனைத்தையும் துறந்து பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் மனிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்தவளவுக்கு நேசிக்கின்றேனோ அந்தவளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன்.
……………………………………………….

xx.xx.20xx
நள்ளிரவைத் தாண்டி மணித்தியாலங்கள் கடந்திருக்கும் இந்தப்பொழுதில், மனிதர்களும், கொட்டிய பனியும் உறங்கிக்கிடக்கும் இந்தக்கணத்தில், உன்னைப் பற்றிய நினைவுகள் என் அறையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்குகின்றது. உனக்கான என் பிரியத்தைக் கூற எந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் விரும்பும் நெகிழ்வும் உயிர்த்திருத்தலும் இல்லாதிருப்பதைக் கண்டு ஒருவித சலிப்பு வருகின்றது. உன்பொருட்டேனும், இதுவரை கற்றிராத ஏதோவொரு புதுமொழியைக் கற்று, அந்தமொழியின் வனப்புமிகு வார்த்தைகளை ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதற்சொற்களைப்போல உனக்குச் சொல்லவேண்டும் போல ஆசை நிரம்புகின்றது.

January 13, 2007

எனது பெயரும் அகதி.

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 10:07 pm

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது பூவரசுகளிலும் கள்ளிச்செடிகளிலும் ஒளித்துபிடிக்கும் விளையாடும் வயதிலேயே துப்பாக்கிகளே தமது கடவுள் என்ற வாழ்க்கை திணிக்கப்படுகின்றது. துப்பாக்கிகள் தமது உயிரை எடுக்கின்றபோது, தமக்கான வாழ்வைக் காப்பாற்றுபவையும் துப்பாக்கிகளே என்ற புரிதலோடு துப்பாக்கிச் சிறுவர்களின் சந்ததிகள் முகிழத்தொடங்குகின்றன.

ஆயிரம் கனவுகள் உலாவித்திரிந்த வெளியில் அவனும் ஒரு மழலைக் கனவாயிருந்தான். பதினைந்துவருட தாயக வாழ்வில் தனது ஊரில் -அவனுக்கு நினைவு தெரிந்த நாள்களின் பின் - ஒரு வருடமாவது முழுமையாய்த் தன் வீட்டிலே நிம்மதியாய் இருந்தான் என்பதே நினைவில் மீளக்கொணர்வதே கடினமாயிருக்கின்றது. இரவுகளுக்கு மட்டும் நிறம் கருமையாக இருப்பதில்லை; அலைந்து திரியும் அகதிகளுக்கு பகல்கள் கூட இருட்டானவையே. உயிரின் நிமித்தம் ஊரையும் வீட்டையும் துறந்து ஒவ்வொரு ஊர்களில் தங்கியும், பின் போரின் நிழல் அங்கும் நெருங்கி அருகில் வரவர ‘பாதுகாப்பான’ அடுத்தடுத்த ஊர்களுக்கும் என்று அலைந்துழந்த கதை நெடியது. காலையில் ஆரம்பிப்பதுதான் பாடசாலை என்ற நினைப்பொழிந்து மத்தியானப்பாடசாலைகள் அவனைப்போனற அகதிகளுக்கு ஒரு அடையாளமாயிற்று. பாடசாலைகளுக்குள்ளும் பதுங்குகுழிகள் இருந்தன. போர் அரசர்கள் விமானத்திலும் எறிக்ணைகளிலும் ஏறிவரும்போது எப்படி தப்பிப்பதென்ற முன்னெச்சரிக்கைகளே பாடங்கள் மனதில் படிந்ததைவிட அதிகம் படிந்திருந்தன.

தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணாக்களும் அக்காக்களும் பாடசாலைகளில் இருந்து திடீர் திடீரென மறைந்துபோவதையும், சில மாதங்களின்பின் தெருக்களில் துப்பாக்கிகளுடன் தம்மைப்போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மலரவைப்பதற்காய் வெயிலில் கருகித் திரிவதையும் காண்கின்றான். மிருதங்கமும், ‘எங்களின் பாதைகள் வளையாது’ என்று பாடித்திரிந்து தனக்கும் கலைகளில் விருப்பை வரச்செய்த ஒரு அன்பு அண்ணா போராளியாக மாறியபோது மிருதங்கம் தொடர்ந்து பழகுவதும் அவ்வளவு பிடிக்காமற்போனது. எப்போதும் சிரித்தபடி சதுரங்கத்தின் நுட்பமான ஆட்டங்களை கற்றுத்தந்த இன்னொரு அண்ணா, போராளியாக இல்லாதபோதும் களத்தில் இறந்தவுடல்களை அகற்றப்போனபோது சினைப்பரடியில் இறந்துபோனநாளில், இது உண்மையாருக்கக்கூடாது என்று தேம்பித் தேம்பி ஒரு பின்னேரப்பொழுதில் இவன் அழுதுமிருக்கின்றான். அகதிகளுக்கு சொந்த ஊர்தான் இருப்பதில்லையே தவிர, கண்ணீரும் கனவுகளும் வற்றிப்போவதில்லைத்தானே.

போராட்டத்தின் நியாய/ அநியாயங்களை
-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் ‘மனநிலையை’ வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. தொடர்ந்து எழுத்துக்களில் போராட்டம் குறித்து பேசாதுவிட்டாலோ அல்லது எழுதப்படுவதில் ‘பாஸிசம்’ என்ற சொல்லாடலைப் பாவிக்காதுவிட்டாலோ, தீட்டுப்பட்டவனாய் ஆக்கிக்கொண்டிருக்கின்றன சில ஆகிருதிகள்(அது குறித்து எள்ளளவு கவலையுமில்லை. போரின் இரணங்கள் மழலை வயதில் சுமந்த ஒரு அகதியானவன் அதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகளிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.

இன்று பேசுவதைப்போலவே தானே -இவர்கள்- இவன் ஊரூராய் அகதியாய் அலைந்துகொண்டிருந்திருக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்திருப்பாகள்? இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது? இன்று இதைக்கூட எழுதமுடியாமல் - செய்திகளின் இலக்கங்களில் மட்டுமே வாசிக்கும் ஒரு அநியாய மக்கள் படுகொலையின் -பெருங்கூட்டத்தின் ஒருவனாய்- இவனும் நேற்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இரங்கல் குறிப்பை விட உயிர் விட்டுக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் கணங்கள் எவ்வளவு அற்புதமானது என்பது ‘போர் பிதுக்கித்தள்ள பருவம் வரமுன்னரே வளர்ந்துவிட்ட’ இவனைப்போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒவ்வொரு துயரங்களிலிருந்தும் அவன் தப்பியோடவே முயன்றுகொண்டிருக்கின்றான் என்பதையும், வாசிக்கும் செய்திகளின் அவலத்தில் தனது பழைய வாழ்வின் அத்தியாயங்கள் இன்னொரு சந்ததிக்கும் மீளப்புதுப்பிக்கப்படுகின்றது என்பதை அறிவதாலும்… தான் மூளைநரம்பு வெடித்து பைத்தியக்காரனாய் ஆகிவிடக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு எப்போதும் உண்டு. தப்பித்தல் என்றாலும் தனது நினைவுப்புள்ளிகள் ஊரின் -பழையசம்பவங்களின்- துயரங்களில் மையங்கொள்வதைத் தவிர்ப்பதற்காய் தன்னை இலகுவாக்கும் பொழுதுபோக்கிற்குள் அடிக்கடி புகுந்துகொள்கின்றான். ஆனால் இங்கே அரசியல் பேசும் பலருக்கு போரால் பாதிக்கப்படும் மக்களின் மனவுணர்வுகளைவிட தமக்கான அரசியல் புள்ளிகளை நிரூபித்துவிடும் எத்தனிப்புக்களே இருப்பதென்பதே மிகப் பெருஞ்சோகம். அவர்களின் எந்தப்புள்ளிக்குள்ளும் சிக்கிவிடாதிருத்தலே சாலவும் சிறந்தது.

தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன என்றும் விளங்கிக்கொள்ளமுடியும். ‘எனக்கு நடைபெறும் எதிலும் உடன்பாடில்லை’ என்று பொதுவாய் ஒவ்வொரு குறிப்பின்பின்னும் எழுதி எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது இலகுவெனினும்-அவனுக்கு கிடைத்த தனிமனித அனுபவங்களினூடு- அந்த முடிவுகளுக்கு மிக எளிதாய் வந்துவிடமுடிவதில்லை. தன்னில் அன்பு வைத்த அண்ணாக்கள், அக்காக்கள், ஊர் விட்டு நீங்கி வந்தபோது தொலைந்துபோன தோழர்கள், தோழிகள், உறவுகள் என்று அனைவரையும் எவரேனும் ஒருவர் உயிர்த்தெழச்செய்து தருவார்களெனின் எல்லோருக்கும் பொதுவான போரின் அறத்தையும், தவறுகளே இல்லாத வார்த்தைகளால் மட்டுமே கட்டியமைப்படும் புரட்சிப்போராட்டங்கள் குறித்த கனவுகளையும் பற்றி இவன் விரிவாகப் பேசக்கூடும்.

புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டும் அதன் தேசிய நீரோட்டத்தில் தொபுக்கடீரென வீழ்ந்துவிடாது ‘அகதி’ என தொடர்ந்து அடையாளப்படுத்துவது, கழிவிரக்கத்திற்காய் அல்ல. தனது தேசத்தில் இருப்பில்லாது அடித்துத் துரத்தப்படும் அகதிகளின் சென்ற தலைமுறையின் ஒரு எச்சமாய் இருக்கவே விரும்புகின்றான். தாயகமண்ணை விட அதிக சுதந்திரத்தையும், பொருளாதார வாய்ப்பையும் இந்தப் புலம்பெயர்தேசம் தந்தாலும், ஒரு கனடியப் பிரஜையாக உரிமைகொண்டாடுவதில் அவ்வளவு விருப்பமில்லை. தன் தாய்தேசத்தில் இருக்கும் அகதிகள் மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்கள் திரள்திரளாய் அகதிகளாய் அலைந்து திரியாதபொழுதொன்றின் அற்புதமானகணத்தில் ‘அகதி’ என்ற தனது அடையாளத்தை இவன் தொலைத்துவிடக்கூடும். அதுவரை முன்னாள் அகதியெனவும், மனதின் உணர்வுகளின் அடியாழங்களில் இன்றும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்றும் அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதில் தயக்கங்களேதுமில்லை.

.

January 8, 2007

அகதி

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 7:14 pm

பல்வேறு கனவுகள் உலாவித்திரிந்த வெளியில்
நானுமொரு மழலைக்கனவாயிருந்தேன்
கனவுகளுக்கு மொழியோ நிலமோ அடையாளங்களாவதில்லை
ஆதாமும் ஏவாளும் பிணைகையில்
கண்ட முதற்சாட்சியென கோபங்கொண்டான் சாத்தான்
தங்களுக்கான சுருக்குக்கயிறுகள்
மழலைகள் சொந்தம் கொண்டாடவிரும்பாத மொழியிலும் நிலத்திலும்
இரவுபகலின்றி தயாரிக்கப்படுவதாய்
வன்மத்துடன் துப்பாக்கிகளில் புகுந்து துரத்தத்தொடஙகினான் சாத்தான்
இவ்வாறாகத்தான்
என்னைப்போன்ற அகதிகளின் கதை
ஒரு தீவு தேசத்திலிருந்து ஆரம்பித்தது.

………………..

நண்பர்களுக்கு,
திங்கள் காலை எழும்பி அஞ்சல்களை பார்வையிட்டபோது, நட்சத்திர வாழ்த்துக்கள வந்திருந்தன. நானறியாமலேயே நட்சத்திரமாக்கப்பட்டதை அறிந்தது உண்மையில் பேயறைந்தமாதிரியே எனக்கு இருந்தது (விடிகாலை வருகின்ற பிசாசுக்கு என்ன பெயர்?). அச்சமயம் மெஸஞ்சரில் இருந்த தமிழக நண்பரையும் வேறு யாரோ என்று நினைத்து வணக்கம் சொல்லி புதுவருட வாழ்த்துச்சொல்ல, நண்பரும் ‘தலைவா, இன்னும் மப்புக் கலையவில்லையா?’ என்று அன்போடு என் நிலையை கேட்டறிந்துகொண்டார். சடங்கு, சம்பிரதாயம் என்பவற்றில் நம்பிக்கையில்லை என்று அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பதைப் பரீட்சித்துப் பார்க்கத்தான் தமிழமணத்தார் இப்படி முறையான அறிவித்தல் கொடுக்காது தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அவரவர்க்கு ஆயிரம் சோலிகள் இருப்பது புரிந்தாலும் இவ்வாறு செயததது தனிப்பட்டவளவில் எனக்கு அவ்வளவு உவப்பானதில்லை என்று உரியவர்களிடம் குறிப்பிட்டுவிட்டே இதை எழுதுகின்றேன். புலம்பெயர்ந்து ஒரு தேசத்தில் அகதியாக இருப்பதாலே எனக்கான சுயஅறிமுகத்தையும் இல்லாமலே விட்டிருக்கின்றேன் :-). தொடர்ந்து இந்த வாரத்துக்கு தமிழ்மண நட்சத்திரத்துக்கான விதிகளுக்கமைய எழுதமுடியுமா தெரியவில்லை. இயன்றளவு முயற்சிக்கின்றேன்.
வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி நண்பர்களே.

December 25, 2006

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 1:22 am

‘உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும் தான் எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் தன்னை ஒரு நல்ல வாசகனாக ஆக்கிக் கொள்வதற்கான அவசியம் நேர்கிறது. கனவுகளை மீறிய வாழ்க்கை வெளியில் இருக்கிறது.’
(ரமேஷ்:பிரேமின் ‘பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை’)

உறவுகள் குறித்து எவ்வளவு நெருக்கமாயும் வியப்பாயும் பேசமுடியுமோ அதேயளவுக்கு சிக்கல்களும் வலிகளும் குழைந்தும் அவை குறித்து பேச முடியும். ஏதாவது ஒரு பூர்வீக நிலப்பரப்பின் பின்னணியில் பிறக்கின்ற மனிதனுக்கு அவன் விரும்பியோ விரும்பாலோ உறவுகள் என்று பெயரிடப்பட்டு பல இழைகள் பிறந்தவுடனேயே பிணைக்கப்பட்டு விடுகின்றன. அடையாள மறுத்தலைப் போல பிறப்பால் வருகின்ற உறவுகளை வெட்டிச் சிதைத்துக்கொண்டு போகமுடியுமெனினும், புதிதாய் மலரும் உறவுகளுக்கு அவனவன்களும், அவளவள்களும் மட்டுமே பொறுப்பாக முடிகின்றது. அவற்றை வளர்ப்பதும் சிதைப்பதும் அவரவர்களுக்கான உள்ளங்கைகளுக்குள் ஒரு பூவைப்போல பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தினுள் புதைந்துகிடக்கின்றது.

இவ்வாறான ஒரு மார்கழிப்பொழுதில் குளிர் உதைத்து தன்னை வின்ரர் வெளியில் துரத்தப்போகின்றதா, இல்லை ஊர் ஞாபகம் வந்து தன்னைச் சிதைக்கப்போகின்றதா என்று யோசித்தபடி தாரகைகள் இல்லா அடர்கருவானத்தை அவன் பார்த்தபடியிருக்கின்றான். நல்ல நண்பர்கள் என்றைய பொழுதும் தன்னை விட்டு நீங்காதிருப்பார்கள் என்ற நம்பிக்கை இவன் வசத்து நிறையவே உண்டு. நண்பர்கள் என்று கூறிக்கொண்டு பிறகு ஏதோ ஒரு புள்ளியில் முகஞ்சுழித்துப் போகின்றவர்களும் இவனுக்கு வாய்க்காமலில்லை. அவர்களில் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி தொடர்ந்து காயங்களை உண்டாக்கியபடி தம் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள். நீங்கள் என்னை நோக்கி முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் இன்னும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைப்பேன் என்றபடி அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியப்படுத்துவதுதான் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய வழியென்று நினைப்பவன் இவன். மேலும் இவனுக்கு முரண்பாடாய்/அசூசையாய் தெரியும் அவர்களின் புள்ளிகள் அவர்களுக்கான அளவில் நேர்மையாக/ஓர்மமாக இருக்கலாம் என்ற புரிதலும் உண்டு. தம்மோடு ஒத்த புள்ளிகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதற்காய் அவர்களில் கோளாறு என்று முடிவுசெய்தலும் தவறு. உனதும் எனது புள்ளிகள் என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கையில் கைகுலுக்கி அறிமுகங்கள் செய்துகொள்வோம் என்று கூறி கைகுலுக்கி விடைபெறும் நேர்மையான சந்தர்ப்பங்கள் இவனுக்கு இன்னும் வாய்க்கவில்லை என்பதும் சோகமான விடயமே. அவ்வாறு மனம் மலர்ந்து பிரியாவிடை கொடுத்திருப்பின் எவரையும்/எதனையும் நினைத்து காலகாலங்களில் சோகித்திருக்கத் தேவையும் இருக்காதில்லையா?

ஒரு நாள் அவள் அவனின் எழுத்தின் தடங்களைப் பின்பற்றியபடி வந்து சேர்ந்தாள். எப்போதும் தனது எழுத்துக்களினூடாக தன்னை வந்தடையும் பாதைகளை சாமர்த்தியமாய் கலைத்தபடி இருப்பவனுக்கு அவள் அவனது இருப்பிடத்தை வந்தடைந்தது வியப்பாயிருந்தது. அறிமுகபடுத்திக்கொண்டாள். வந்தவளுக்கு தேநீரும் இனிய சொற்களும் கொடுத்து வரவேற்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தையே மறந்து போயிருந்தான் (அல்லது அப்படிக் காட்டிக்கொண்டான்). என்ன வேண்டும் என்ற ஒரு அதிகார மையத்தின் முதற்கேள்வியைப் போல அவன் அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டான். என்னைச் சமதையாக வைத்து உரையாட முடியுமெனில் உரையாடு இல்லையெனில் திரும்பிப் போகின்றேன் என்றாள் அவள். இப்போது அண்மையாக எழுதிய என் எழுத்துக்களினூடாக வந்த நீ, திரும்பிப் போவதற்குள் நீ வந்த பாதையைக் கலைத்துபோட்டு இன்னொரு எழுத்தை எழுதினால் எப்படித் திரும்பிப்போவாய் என்று அவளை வளைத்துவிட்ட பெருமிதத்தோடு கேட்கின்றான் இவன் (அந்தச் சமயத்தில் சுருள் சுருளாய் இவன் புகைபிடித்துக் கொண்டிருக்கவேண்டும்). திரும்பி வந்த இடத்தைப் போய்ச்சேருவது மிக இலகுவானது ஏனெனில் உனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முடிவடையும் புள்ளி ஒரு பெண்ணிடம் அன்பை எதிர்பார்த்து உள்ளுக்குள் மறுகிக்கொண்டிருப்பது…. எனவே நீ புதிதாய் எழுதும் ஒரு படைப்பினூடாகவும் நான் எனது வழியை எளிதாய் கண்டுபிடித்துத் திரும்பிப்போயிவிடுவேன் என்கிறாள் அவள்.

இப்படித்தான்…. சிக்கலான ஒரு தேற்றத்தை பரீட்சைநேரம் முடிவதற்குள் நிறுவிவிட முடியாத பதட்டத்துடன்தான் அவன் ஒவ்வொருமுறையும் அவளுடனான உரையாடல்களில் தோற்றுக்கொண்டேயிருந்தான். தனது வாழ்க்கையை தனது தனிமையாலும், விரும்பிக்கற்றுக்கொண்ட கணித எண்களாலுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தவன் அவன். எல்லோரைப்போல மையநீரோட்டத்தில் வாழ விரும்பம் எனினும் தனது கடந்தகாலப் பயங்களும் எதிர்கால அச்சங்களுமே தன்னை இப்படியான எண்களால் கட்டியமைக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைத்தது என்று பொழுதுபோகாத நேரமொன்றில் பொழிந்துகொண்டிருந்த ஸ்நோவில் நனைந்தபடி கூறிக்கொண்டிருந்தான். வார்த்தைகள் முடிந்த மறுமுனையில் அவள் நின்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். அவன் அவளது பெயரை தன்னையறியாது பனியில் கிறுக்கிக்கொண்டிருந்தபோது தானும் அவனது பெயரை மணலில் எழுதிக்கொண்டிருந்தேன் என்றபடி சிரிததபடி வருகின்றாள் அவள் மீண்டும்.

அவள் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தாள். தனக்கான பயங்களை, தனது தாய்நிலம் சூறையிடப்படும் அவல நிலையை, எதிர்கால இலட்சியங்கள் பற்றி இன்னவும் பிறவுமாய். அவள் நேசித்த ரஷ்ய படைப்பிலக்கியங்களையும், பயணம் செய்யும் விரும்பும் ஆபிரிக்கா வனாந்தரங்களையும் அறிய அறிய, அவன் இப்போதைக்கு உடையாது எனத்திடமாய் நம்பிய அவனது பாதுகாப்பு அரண்கள் உருகத் தொடங்கின. என்றாலும் இவன் சளைத்தானில்லை, வார்த்தைகளை கொண்டு விமர்சனக்கத்திகள் ஆயிரமாயிரம் செய்து போரிடும் சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்பதால் அவளை வலிக்கச் செய்யக்கூடிய இடங்கள் பார்த்து விமர்சனக்கணைகளை எண்ணற்று எய்யத் தொடங்கினான். அவள் பரிவுடன் வருபவளுக்கு கருணை பொங்கும் அன்னை மேரி; போரென்று வந்துவிட்டால் கண்ணீரைப் புதைதோண்டிப் புதைத்துவிட்டு விழிகள் சிவக்கும் உக்கிரமான காளி என்பது அவனுக்கு முன்னரே தெரியாமற்போய்விட்டது. (மணிமேகலையைத்தான் காளியாய் பிற்காலத்தில் ‘இந்து’சமயம் ஆக்கிவிட்டது என்ற ஒரு ஆய்வுக்குறிப்பையும் கூடவே சேர்த்துக்கொள்ளவேண்டும்). இவ்விடத்தில் பிறழ்வாய் இருக்கக்கூடுமெனினும், அவள் ஆடிய உக்கிரமான ஆட்டந்தான் இவனின் அனைத்துக் கர்வங்களையும் துடைத்தெறிந்து அவளிடம் நேசம் வைக்கச் செய்தது என்பதுவும் உணமையுமாகும்.

எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு எப்படிப்பட்டது என்பதை அவளிடமிருந்து அவன் அறிந்துகொண்டான். தனக்கென்று எதையுமே அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ள தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருப்பவள்; எப்போதாவது அன்பளிப்பாய் கொடுக்கும் நாலைந்து புத்தகங்களைத் தவிர பெறுமதியான எதையும் அவள் இற்றைவரையும் ஏற்றுக்கொண்டதுமில்லை. தனக்காய் சிறிது நேரத்தையும் நேசத்தையும் தந்துவிட்டு நீ எதையும் எவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற மிகப்பெரும் சுதந்திரவெளியை வழங்கிக்கொண்டிருப்பவள். இவை அனைத்தையும் விட தன்னைப் புத்தகங்கள் மட்டுமே நேசிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, அவன் மீது தனக்கு பிரியமுள்ளதென்று அவளே தயக்கமேதுமின்றி வந்து முதலில் நேசத்தை வெளிப்படுத்தியதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் தன்னை நேசிக்கின்றாள் என்பது புரியவே இவனுக்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதற்கு இவன் நிறைய தமிழ் சினிமாக்கள் பார்த்திருந்தததைத் தவிர வேறு எதுவும் காரணங்களாகிவிடாது.

நேசம் அரும்பிய ஆரம்பப்பொழுதில் திருமணம், இன்னபிற அடையாளங்களுடன் வாழுதல் தன்னால் சாத்தியமில்லை என்று முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் நீளநீளமாய் அமைத்தபோது, - கூறி முடித்துவிட்டாயா என்று பொறுமையுடன் காத்திருந்துவிட்டு-இப்படித்தான் எல்லா முற்போக்காளர்களும் கூறிக்கொண்டிருப்பார்கள், பிறகு அவர்களின் அனைத்து வண்டவாளங்களும் தெரியும் என்றாள். இதற்குப் பிறகும் இவை குறித்து அவனால் வாய் திறந்து பேசமுடியுமா என்ன? இதைவிட தனது அடையாளங்களை தொடர்ந்து மறுதலித்துக்கொண்டே வருபவள் என்றபடியால், கலாச்சாரம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் திலகமிடுதலிருந்து நகைகள் அணிவது வரை புறக்கணித்துக்கொண்டே இருப்பவள் அவள். பட்டுப்புடவை சரசரக்க கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் மினுங்க ஒரு ‘தமிழ்’ப்பெண்ணை எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பவனின் கனவை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றேனோ என்ற கவலை அவளுக்கு உண்டு போலும். எனினும், ‘ஏனெனில் நானொரு அரசிளங்குமரி/எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை/இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ/அதை மட்டுமே நான் அணிவேன்’ என்று இண்டியா அரி பாடுவதுபோல வாழவும் விரும்பும் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எளிய புரிதல் இவனுக்கும் உண்டு. நீ இன்று வெறுத்தொதுக்கும் ஆபரணங்களை, நாளை நீ அணிய விரும்புகின்றாய் என்றாலும் அதனூடாக நான் உன்னை அணுகப்போவதில்லை. அதற்கும் உனக்கான் என் பிரியங்களுக்கும் எந்தச் சமன்பாடுகளும் காலத்தின் எந்தப்புள்ளியிலும் வரப்போவதில்லை என்று மட்டுமே விளம்பமுடிகிறது இவனால்.

பின்னான காலங்களில் இவன் பலவற்றை அறிந்துகொண்டான். எழுத்துக்களினூடாகவும் வாசிப்பினூடாகவும் ஒருவரை இன்னொருவர் அறிந்துகொள்வது என்பது சுவாரசியமானது. எழுதுபவர்களின் வாசிப்பவர்களின் வாழ்க்கை அப்படி வியந்து சொல்லக்கூடியதாக அல்ல என்று கடந்தகால வரலாறுகள் வெள்ளிடைமலையென காட்டிக்கொண்டிருந்தாலும் அப்படியிருப்பது இருவருக்கும் பிடித்துக்கொண்டது. கணணித் திரையில் ஒரு அஞ்சலை அனுப்பிவிட்டு அது பெறுநரைப் போய்ச்சேரும் நேரத்தைவிட, உறவு ஒன்று சிதைந்துபோவதற்கான கால அவகாசம் குறைவானதே என்ற அச்சமிருந்தாலும்…. அவள் மீதான இந்தக்கணத்து நேசம் என்பது உண்மையானதும் எதிர்ப்பார்ப்புக்களின் அப்பாற்ப்பட்டதும் கூட.

‘நேற்று இல்லாத மாற்றம் என்னது/ காற்று என் காதில் ஏதோ சொன்னது?’ என்று அவள் அவனையறிந்த ஒருவருடத்திற்கும் பின்பான பொழுதொன்றில் பாடுகின்றாள். அதுவரை பாடவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தவள் அன்றைய பொழுதில் இன்னும் பல பாடல்களைக் காற்றில் கரைக்கின்றாள். இராகத்துக்கும் தாளத்திற்கும் பல்லவிக்கும் சரணத்திற்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் முறையிலா உறவிருக்கிறது என்று மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றவனுக்கும் அவள் பாடுவது பிடித்துத்தான் போகின்றது. இதைவிட தனக்கு மிக நெருக்கமாயிருப்பவள் தன்னைவிட தீவிர வாசிப்பும், ஆளுமைமிக்க எழுத்துத்திறனும் கொண்டிருப்பதும் அவனுக்கு மகிழ்வைத் தருகின்றது. தனக்குப் பிடித்த கவிதையொன்றை எழுதும்போது தான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று தீர்க்கமான நம்பிக்கை அவனுக்கு உண்டு. அந்தக் கடைசி கவிதையில் அவள் இருப்பதுதான் அவள் தந்துகொண்டிருக்கும் அற்புதமான தருணங்களுக்கு அவன் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

December 6, 2006

புத்தகங்களுடனான சிநேகம்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 1:45 am

‘ரஷ்ய எழுத்தாளர்கள் என் கனவுகளைக் கவர்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி (மரணவீட்டின் குறிப்புகள்), டோல்ஸ்டோய், மிகயீல் ஷோலகவ் (கன்னி நிலம்), சிங்கிஸ் ஐத்மாத்தவ் (அன்னை வயல்), ஐவன் டெர்கனெவ் (அஸ்யா) ஆகியோர் என்னைப் பயங்கரமாகப் பாதித்தவர்கள். மற்றபடி அந்நியமொழி எழுத்தாளர்களென்றால்… விக்டர் ஹ்யூகோ (அவரது toilers of the sea யின் தாக்கத்திலிருந்து விடுபட பல வாரங்களாயின), ஒஸ்கர் வைல்ட், தோமஸ் போர்கே (இவரது சிறுகதைகள் மட்டும்தான் வாசித்திருக்கிறேன்), ஹெர்மன் ஹெஸ்ஸே (இவரது சித்தார்த்தா பலவிதத்திலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய நாவல்), சினுவா ஆச்சிபி (சிதைவுகள்), சில இந்திய எழுத்தாளர்கள்.. தமிழ்மொழியல்லாதோர்.. (பெயர்கள் நினைவிலில்லை - சம்ஸ்காரா, நிழல்கோடுகள் என நாவல்கள் மட்டும் நினைவிருக்கின்றன). …’
(நண்பரொருவரின் கடிதத்திலிருந்து….)வீட்டில் அவ்வப்போது குடும்பத்தினரால் பொது அறிவு காணாது என்று நற்சான்றிதழ் பாத்திரம் பெற்றுக்கொண்டிருக்கின்றவன் நான். வலைப்பதிவிலாவது இந்தப் பலவீனத்தை மறைத்து கொஞ்சம் ‘அறிவாளி’ மாதிரி உரையாடலாம் என்ற ஆசையை அவ்வப்போது ‘உனக்கெல்லாம் அரசியல் தெரியுமா?’ என்று கேட்டு பலர் -’என்னை வளரவிடாது’ - காலை வாரிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிவு வளரவேண்டும் என்றால் என்ன செய்வது? புத்தகங்களைத் தான் நிரம்ப வாசிக்கவேண்டும். சில மாதங்களுக்கு முன், ஒரு அன்பர் திட்டோ திட்டென்று திட்டி -முடிவுறாத அனுமான் வாலாய்- பதிவொன்றை எழுதியிருந்தார். கூட்டத்தோடு கோவிந்தா பாடுவோம் என்று இன்னொரு நலன்விரும்பி பழைய கறளெல்லாம் சேர்த்து வைத்து வசைக் கவிதையை உடைப்புச்செய்து கூடவே எழுதியிருந்தார். அம்மா வளர்கின்றேன் என்று விளம்பரம் ஒன்றில் காட்டப்படுவதுபோல குட்டு விழுவதில் ‘சந்தோசம்’ என்பதைவிட, ‘உங்களின் வட்டத்திற்குள் நானில்லை’ என்பதே அந்தப்பொழுதுகளில் எனக்கு நிறைவாயிருந்தது.

வசைக் கவிதையில் நலன்விரும்பி எனக்கு இரண்டு தெரிவுகளைத் தந்திருந்தார். ஒன்று அரசியலை ஒழுங்காய்ப் பேசு; இல்லையெனில் அம்மாவுக்கு தோசை சுட உதவி செய் என்று. அன்பர் சொன்னதை சும்மா தட்டிக் கழிக்கமுடியாது. ‘மூலதனத்தை’ எல்லாம் கரைத்துக் குடித்தவர் சொன்னால் ஏதோ பெரும் பின்புலம் இருக்கத்தானே செய்யும்? எனவே இல்லாத என் மூளையைக் கசக்கத் தொடங்கினேன். புலம்பெயர் தேசமொன்றில் நான் உயிர் வாழ்ந்துக்கொண்டிருப்பற்கு எனக்கு அரசியல் பேசுவது அவசியமா? இல்லை தோசைக்கு மா கரைத்து ஊற்றுவது முக்கியமா? உயிர் வாழ்வதற்கு உணவே அவசியம் என்று மூன்றோ நான்காம் வகுப்பில் சுற்றாடல் கல்வியில் கற்பித்த ‘மனிதருக்கு அத்தியாவசியமானது உணவு உடை உறையுள்’ என்பது இன்னமும் எனக்குள் பதிவாயிருந்தது இந்த நேரத்தில் கைகொடுத்தது.

சரி, இப்படி ‘அன்பர்கள்’ பாராட்டு வழங்கும்போது என் மானம் ரோசம் பொங்கியெழுந்தல்லவா இருக்கவேண்டும்? மானம் ரோசம் வீரம் இல்லாது தமிழனாய் இருப்பதில் என்ன பயன்? இது போதாது என்று வைத்த புனைபெயரில் ‘தமிழன்’ என்றும் சேர்த்து வைத்தல்லவா படம் காட்டிக்கொண்டிருக்கின்றேன். திண்ணையிலோ பதிவுகளிலோ எனக்கு பரீட்சயமான ஒரு நண்பர் ‘தம்பி நீர் டிசே தமிழன் என்றால் நாங்கள் என்ன டிசே சிங்களவனா இல்லை டிசே ஆங்கிலேயானா?’ என்று கேட்டார். நான் சும்மா விடுவேனா என்ன? தமிழில் எழுதும்போது நான் டிசே தமிழன், சிங்களத்தில் எழுதும்போது டிசே சிங்களவன், ஆங்கிலத்தில் எழுதும்போது டிசே ஆங்கிலேயன் ஆவேன் என்றேன். அவரும் தான் ஊக்குவித்த பெடியன் நல்லாய்த்தான் ‘வளர்ந்துவிட்டான்’ என்று தலையிடித்துக் கொண்டிருப்பார் என்பது வேறு விடயம்.

இப்படி பதிவுகளில் சிலர் வசைக்கவிதை/பதிவுகள் எழுதிக்கூட ஏன் எனக்கு -பெண்களுக்கு அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போல- ஆண்களுக்குரிய ‘குணங்கள்’ எதுவுமே ஊற்றெடுத்துக் கிளம்பவில்லை என்பதுதான் மிகுந்த கவலையாயிருந்தது. போற வாற இடமெல்லாம் சைட் அடிக்கின்ற ஸ்பானிய பெண்கள்தான் எனது தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்களோ என்ற அச்சமே எனக்குள் எழுந்தது. ஆனால் இந்த மானம் ரோசம் எனக்கிருப்பின் அது வளாகத்தில் இருந்தபோதே பொங்கியிருக்கவேண்டும். பரீட்சைகளின்போது குறைய மார்க்ஸ் கிடைக்கும்போதெல்லாம், என் படிப்பில் பிழையில்லை prof ன் பேனையில்தான் தவறு என்று பெருந்தன்மையாக நினைப்பவன் நான். ஏன் பாடங்களில் சித்திபெறத் தவறினால் கூட…. அந்தப் பாடத்தைப் பழிவாங்கவேண்டும் என்று சிரத்தையாக திருப்பப் படிக்காமல், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றுதான் நகர்ந்து போயிருக்கின்றேன். எனவே என் அடிப்படையில்தான் பிரச்சினை இருக்கின்றததே தவிர, எங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் அல்ல என்று இப்போது புரிகின்றது.

சரி எதற்கும் இருக்கட்டும்; அன்பர்கள் அளவுக்க்குமீறி ‘பாராட்டுப் பத்திரம்’ வாசிக்கும்போது நானும் திருப்ப அவர்களுக்கு பா.பாத்திரம் கொடுப்பதற்கு உசாத்துணையாக இருக்கட்டும் என்று சில புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். புத்தகங்களுக்கு ஓடர்செய்து பல மாதங்களாகியும் என் கைகளில் வந்து சேரவில்லை. கனடீய அரசாங்கம்தான் புத்தகங்களைத் தடை செய்து வைத்திருக்கின்றதோ என்ற ஜயம் வந்தது. கனடாவில் நாற்பதோ, ஜம்பதோ வருடங்களுக்கு முன் சின்னதாய்க் கட்டியமைக்கப்பட்ட கம்யூனிசக் கட்சியை ஆட்சியில் இருந்த அரசாங்கம் தடை செய்தது என்று எங்கையோ வாசித்திருந்தேன். அதுபோல் தமிழ் வாசிக்கத் தெரியாவிட்டாலும் - மார்க்ஸ், மாசேதுங், மல்கம் எக்ஸ், சேகுவேரா, காஸ்ரோ போன்றவர்களின் படங்களைப் பார்த்துவுடன் பதுக்கி வைத்துவிட்டாகளோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுங்கத்திலிருந்த( customs?) யாரோ ஒரு நல்ல மனிதர்தான், எங்கள் கனடீய பிரதம உறங்கிக்கொண்டிருக்க்கும்போது இரவோடு இரவாய் அனுப்பியிருக்கவேண்டும். கைகளில் புத்தகங்கள் கிடைத்துவிட்டன.

இப்படியாக இன்னும் பல கிளைக்கதைகள் உண்டெனினும்-உண்மையான- காரணங்கள் இரண்டே. பெரியாரைப் பாதிக்கின்ற எவரையும் மார்க்ஸும் பாதிக்கவே செய்வார். பெரியாரை விளங்கிக்கொள்கின்ற எவராலும் தலித்தியத்தையும் பின் நவீனத்துவத்தையும் இலகுவாய் அரவணைக்க முடியும். அந்த ஆர்வமே இவ்வாறான புத்தகங்களை வாங்கி வாசிக்கச் செய்தது.

இதைவிட இன்னொரு காரணம் உண்டு. தோழர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, பெரியாரைச் சிலாகித்த அளவுக்கு மார்க்ஸை சிலாகித்துப் பேசாதது அவருக்கு கவலை தந்திருக்கவேண்டும். அவர் இடதுசாரிப் பின்புலத்தில் வந்தவர். நான் பெரியாரை வியந்து கொண்டிருப்பதுபோல அவர் மார்க்ஸை வியந்துகொண்டிருப்பவர். பெரியாரைப் போலத்தான் மார்க்ஸும் சாதாரண மனிதர் என்று தெளிவுபடுத்தவோ என்னவோ மார்க்ஸ் எழுதிய காதற்கவிதைகளை எல்லாம் வாசிக்கத் தந்தார். ‘மார்க்ஸை எங்கோ எட்டாத தொலைவுக்கு துரத்திவிட்டார்கள் நமது மார்க்சிசவாதிகள்…’ என்றதற்கு ‘மார்க்ஸை நேர்மையாக அணுகினால் அவர் நெருக்கமாகிவிடுவார்’ என்றார். ‘நிச்சயமாய் மார்க்ஸ் மீது காழ்ப்புணர்வில்லை; இன்றைய உலக அரசியலின் சிக்கலான சூழ்நிலைக்குள் கடைசி நம்பிக்கையாய் இருப்பது மார்க்ஸியமே தவிர வேறு எதுவுமல்ல; ஆனால் மார்க்ஸை வைத்து கொண்டாடுபவர்களே மார்க்ஸை நெருங்கவிடாது செய்துவிட்டார்கள்’ என்றேன் (வசைக்கவிதை எழுதிய அன்பரும் யாரோ ஒரு எழுத்தாளரின் வாரிசு என்றுதான் பட்டமொன்று இறுதியில் தந்திருந்தவர்; தங்கள் மீதான விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ளாது வேறொருவருடன் சேர்த்து கழுவிலேற்றுபவர்களிடமிருந்து… எப்படி மார்க்ஸை கற்றுக்கொள்வதாம்?) மேலும் இணையத்துக்கு வந்ததன்பின் பெரியாரை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் தங்கமணி, ரோசாவசந்த் போல, மார்க்ஸை தங்கள் சொந்தக் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்க உபயோகிக்காது- மார்க்ஸை மார்க்ஸாக முன்வைத்து உரையாடியவர்களை இணணயத்தில் நான் இன்னும் காணவில்லை. அத்தோடு இவர்களிடமிருந்து மார்க்ஸை கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பிய சிலர் இன்னும் மிகமோசமான முறையில் மார்க்ஸை அணுகியதையும். தங்களுக்குள் இருக்கும் வலதுசாரி/சாதீய முகங்களைக் காட்டியதையும் பார்த்து ‘தள்ளியிரும் பிள்ளாய்’ என்று விலத்தித்தான் வரமுடிந்தது (கோபம் வருமென்றாலும் ‘வறட்சியான மார்க்ஸியர்கள்’ என்றுதான் அவர்களை அழைக்கமுடியும்).

மேலைத்தேய தத்துவாசிரியர்களை/ஆய்வாளர்களை எல்லாம் போகின்றபோக்கில் உதிர்த்துவிட்டு செல்லும் இவர்கள் எத்தகைதூரம் அந்த ஆய்வாளர்கள் கூறியதை உள்வாங்கிக்கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதே. Noam Chomskyயை -சொற்பமாய்- வாசித்தவளவில் அவர் விவாதித்த தேசியவாதம்/தேசிய இனங்களின் பிரச்சினையைக் கூட - ஈழ இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள்- உள்வாங்கி தமிழில் விவாதித்தமாதிரி காணக்கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம். பல்வேறு இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் பல இயக்கங்கள் சோசலிச சமதர்மமே முடிவான தீர்வு என்று ஈழத்தில் கூறிக்கொண்டிருந்தார்களாம். விசுவானந்ததேவனிடம் சேரப்போன சில இளைஞர்கள் கேட்டிருக்கின்றார்கள், எமக்கான அரசு எப்படி இருக்கும் என்று….? இலங்கை போன்ற நாடுகளுக்கு முற்றுமுழுதான கொம்யூனிசம் என்றைக்குமே சாத்தியப்படாது என்றுதான் எடுத்தவுடனேயே கூறியிருக்கின்றார் (அவரோடு இயங்கிய தோழர் ஒருவர்தான் கூறியது). இத்தனைக்கும் விசுவின் பாதிப்பில்தான் எஸ்.வி.ஆரோ அல்லது அ.மார்க்ஸோ அரசியல் எழுத்து இயக்கத்துக்கு வந்தவர்கள் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன். உடனே விசுவானந்ததேவன் இப்படிக்கூறிவிட்டார் எனவே அவர் கம்யூனிச துரோகி என்று அவரது காணாமற்போன உடலை கடலிலிருந்து கண்டுபிடித்து முத்திரை குத்தாதிருப்பார்களாக….!

இவற்றை ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்….? வேறு ஒன்றுமில்லை, மீண்டும் சனி பிடித்துவிட்டது. அவ்வளவுதான்.

இனி இன்னும் இரண்டு பதிவுகள், நான்கு வசைக்கவிதைகள் பறந்து வரும். புன்னகைத்தபடியே, மார்க்ஸை மார்க்ஸின் பார்வையினூடாக மட்டும் பார் என்கின்ற தோழருடன் விவாதித்தபடி, வந்திருக்கும் புத்தகங்களை ஆறவமர வாசிக்கவேண்டியதுதான்.

நியூ புக்லாண்டிலிருந்து வந்து சேர்ந்த புத்தகங்கள்:

 

book2

(1) மார்க்சியத்துக்கு அழிவில்லை - ஞானி
(2) மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை - ஜோர்ஜ் தொம்ஸன் (தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்)
(3) அழகும் உண்மையும்: மார்க்ஸிசப் பார்வை- ஸிட்னி ஃபிங்கெல்ஸ்டெய்ன் (தமிழில்: நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)
(4) அ.அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கெளதமன்
(5) ஆட்சியில் இந்துத்துவம் - அ.மார்க்ஸ்
(6) மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்
(7) தலித்தியமும் உலக முதலாளித்துவமும் - எஸ்.வி.ராஜதுரை
(8) குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா -தமிழாக்கம்: அமரந்தா
(9) இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு - அ.மார்க்ஸ்
(10) இந்தியாவில் சாதிகள் - டாக்டர்.B.R.அம்பேத்கார் (தமிழில்:செங்கோபன்)
(11) ஆகஸ்ட் 15: துக்கநாள் -இன்பநாள் - பெரியார், அண்ணா, கேசரி (தொகுப்பு:எஸ்.வி.ராஜதுரை)
(12) ஆதி சங்கரரின் மக்கள் விரோத கருத்துக்கள் - பகவான்
(13) கற்பிதங்களின் தேசம் - குமரன்தாஸ்
(14) இந்து இந்தியா: அக்ரனியிலிருந்து அத்வானிவரை - எஸ்.வி.ராஜதுரை
(15) மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - ரா.கிருஸ்ணய்யா
(16) இந்தியத் தத்துவங்களின் அரசியல்- ந.முத்துமோகன்
(17) காந்திய அரசியல் - வ.கீதா
(18) பூர்தியாவும் மார்க்சிசமும் - எஸ்.வி.ராஜதுரை
(19) புத்தர் சிரித்தார் - பாமரன்
(20) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

November 9, 2006

சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 11:53 am

I keep on dying again.
Veins collapse, opening like the
Small fists of sleeping
Children.
Memory of old tombs,
Rotting flesh and worms do
Not convince me against
The challenge. The years
And cold defeat live deep in
Lines along my face.
They dull my eyes, yet
I keep on dying,
Because I love to live.
(’Lesson’ by Maya Angelou)

புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்து அநேகமாய் வலிகளே வெளியேறுகின்றன. பிரியும் பக்கங்களிலிருந்து இறங்கும் வலிகளைப் பின்தொடரும் ஒவ்வொருபொழுதிலும் என்னை அவை அவிழ்க்க முடியாத புதிர்களுக்குள் சிக்கவைத்துவிட்டு வெளியேறி விடுகின்றன. நானோ, இது புத்தகத்தின் வாதையா இல்லை என் அனுபவங்களின் வாதையா என்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றேன்.

கனடாவுக்கு வந்து ஒரு வருடம் இருந்திருக்குமா? அதுவரை அனுபவித்திராத காலநிலை; ஆங்கிலமொழிப் பரீட்சயம் அவ்வளவாய் இல்லை என்கின்ற அவதிகளினூடாக விழி பிதுங்கிக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்குணம் மிகுந்தவனாய், கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவனாய் அறிமுகமாயிருந்தான் அவன். புலம்பெயர்ந்த அநேகருக்கு போர் தந்தவலிகளைப் போல, அவனுக்குள்ளும் இரத்தக்கறை படிந்த கடந்தகாலத்தின் பக்கங்கள் உறைந்துபோய்க் கிடந்தன. சிறுவயதில் அவனது தாயார் அவனது கண்முன்னாலேயே இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பிற நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அதை விரிவாகக் கேட்கும் தைரியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. அவனது துயரநதி பெருக்கெடுத்துப் பாய்ந்தால் அதைக்கட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எதன் பொருட்டும் அவனது தாயாரை அவன் திரும்பிப் பெறமுடியாது என்ற வாதையும் சோர்வும்தான் என்னை இதுகுறித்து பேசுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு கணணி என்பதே என்னவென்று அறிமுகமாயிருந்தது. கோடைகாலத்தில் நான் எடுத்த கண்ணி சம்பந்தப்பட்ட பாடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியாக பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னால் தொடர்ந்து இதைக் கற்கமுடியாது என்று சோர்வாய் இருந்தபொழுதில் இந்த நண்பன்தான் ‘எல்லாவற்றின் அறிமுகங்களும் இப்படித்தான் பயமுறுத்தும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் முடிச்சு அவிழ நமக்கு அவை நெருக்கமாகிவிடும்’ என்று பரிவான வார்த்தைகள் பேசி என்னை உற்சாகப்படுத்தியவன். பிறகு கணணியில் இருந்த சுவாரசியத்தை விட -வருடத்தில் குறுகிய காலம் வரும் கோடையில்- வண்ணமயமாய்த் திரியும் காரிகைகளில் ஈர்ப்பு வந்து அப்பாடத்தைத் தொடராது இடைநடுவில் நிறுத்தியிருந்தாலும், இன்றும் புதிதாய் எதையாவது கற்றுக்கொள்ளும்போது அவனது அந்த உற்சாக வார்த்தைகள்தான் உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

பிறகு நண்பன் ஒருநாள் இறந்துபோனான். அவன் தேடிய மரணத்தின் வழி மிகக் கொடூரமானது. தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டான். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் தான் தப்பிவிடக்கூடுமோ என்று யோசித்தோ என்னவோ தன்னுடலை நீண்ட பொலித்தீனால் இறுக்கக்கட்டி பெற்றோலை ஊற்றியிருக்கின்றான். சம்பவம் கேள்விப்பட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தபோது பசும்புல்வெளியில் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தான். கடைசிக்கணத்தில் நண்பன் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பியிருப்பான் என்பதை கருகிய அந்தப்புற்கள் மட்டுமே அறியும்.

ஏனிந்த முடிவை எடுத்தான் தோழன்? அவனைச் சிலிர்க்க வைத்து குழம்பிப்போன காதல் என்றார்கள். அவனது தாயின் மரணத்தை நேரில் கண்ட மனப்பிறழ்வு என்றார்கள். காரணங்களைக் கண்டறிந்து என்ன செய்யப்போகின்றோம்? எங்களுக்காய் திரும்பி அவன் உயிர்த்தெழுந்து வந்து பாடசாலை வாசலில் சிரித்துக்கொணடு நிற்கவா போகின்றான்?

எனினும் அவன் மரணத்தோடு -என்றுமே அழித்துவிடமுடியாததாய்- ஒரு குற்றவுணர்வு எனக்குள் குந்திக்கொண்டது. அவனது மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான் நானும் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தேன். வகுப்புக்களில் அளவுக்குமதிகமான மெளனத்தையும், நூலகங்களில் தனித்திருக்கும் தனிமையும் கண்டு, என்னில் ஒருவித பரிவான உணர்வு அவளுக்குள் தலைத்தூக்கியிருக்கலாம். அதை ‘தெய்வீக’க்காதல் எனக் கற்பிதங்செய்துகொண்டேன் நான். ‘இப்போது பதினாறு வயது, உனக்கு என்னைப் பிடித்திருந்தால் இன்னும் நான்கு வருடங்கள் காத்திரு’ என்று கூறி இன்னுமின்னும் கனக்க சரளமான ஆங்கிலத்தில் சலசலவென்று கதைத்துக்கொண்டே போனாள் அவள். எனக்கு அவளின் உரையாடலில் வந்த காதல் என்ற ஒரு வார்த்தையே போதுமானதாயிருந்தது நிறையக் கனவுகளை வளர்க்க. நான்கு வருடங்கள் காத்திரு என்றவள், நாற்பது நாட்களுக்கும் குறைவான நாட்களில் முகத்தைத் திருப்பி விறைத்துக்கொண்டபோது மனது உடைந்துபோனது.

சங்ககாலத்தில் கைக்கிளைக்காதலால் மடலேறி மாய்த்துக்கொண்ட யாரோ ஒருவன் எனக்கு உறவாயிருந்து அவனது மரபணுக்கள் என்னுள் கடந்தப்பட்டிருக்க வேண்டும் போல. தற்கொலைக்கு முயற்சித்தபோது -அதைக் கச்சிதமாய் நிறைவு செய்வதற்கான துணிவின்மை மற்றும் அம்மாவின் கடைசி நேர நுண்ணுணர்வு- என்னைக் காப்பாற்றி இப்போது இதை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி நான் முயற்சித்தேன் என்றும் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்(?!) என்றும் அந்த நண்பனிடம் அன்று மனம் திறந்து பேசியிருந்தால், அவனும் தன்னம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். தற்கொலை மட்டுமே ஒற்றைவழியல்ல; வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று யோசித்து, தனது மரணத்தை இயற்கை தேர்ந்தெடுக்கட்டும் என்று தோழன் முடிவெடுத்து எங்களில் ஒருவனாய் இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

இந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதில் -ஆகக்குறைந்தது எனக்கு நெருக்கமானவர்களிடம்- கவனமாயிருக்கின்றேன். பிறகொருபொழுதில் தோழியொருத்தி நிறைய தூக்க மாத்திரைகள் எடுத்து அதிஸ்டவசமாய்த் தப்பி, அடுத்த முறை தற்கொலையைத் திருத்தமாய் செய்வேன் என்று என்னிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். வைத்தியசாலையில் இருந்து வந்து அடுத்தநாளே -என்ன எழுதுகின்றேன் என்று தெரியாமல்- பக்கம் பக்கமாய் தற்கொலை குறித்து நிறைய எழுதி அவளிடம் கொடுத்திருக்கின்றேன் (இப்போது அதை நானோ இல்லை தோழியோ வாசித்துப் பார்த்தால் எவ்வளவு குழந்தைத்தனமாய் அது இருக்கும் என்பது வேறுவிடயம்). மஞ்சள்நிற ரோஜாப்பூக்களுடன் அவளைச் சந்தித்து - மனந்திறந்து பேசட்டும் என்று- ஒரு முழுநாளை அவளுடன் வளாகத்தின் study loungeல் கழித்ததும் நினைவிலுண்டு. ‘ஒரு நாளும் பூக்கள் எனக்காய் வாங்கித் தராத நீ, நான் சாகப்போகின்றேன் என்றவுடன் ரோஸஸை வாங்கி தருகின்றாயா?’ என்றார். ‘அப்படியொன்றுமில்லை; பூக்கள் விற்கும் பெண்ணில் ஒரு crush வந்து அவரைச் சைட் அடிப்பதற்கு பூக்களை வாங்கவேண்டியதாய்ப் போய்விட்டது, அதுதான் வாங்கினதை இனி வேஸ்டாக்கக் கூடாது என்றுதான் உங்களிடம் தந்தேன்’ என்று கூற, ‘மவனே…’ என்று ஆரம்பித்து அவர் திட்டத்தொடங்கியபோது, தோழி விரைவில் இயல்புநிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்தது.

(II)

நிறைவேறாத ஆசைகள் கனவுகளாய் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் என்பார்கள். எனக்குள் தற்கொலை குறித்த எண்ணங்கள் கனவுக்கும் நனவுக்கு இடையிலான பாதையில் அடிக்கடி மூடிய பனியாய் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில்தான் சில்வியா பிளாத்தும், சிவரமணியும் எனக்கு நெருக்கமாகி இருக்கின்றார்கள் போலும். சிவரமணி இறந்துவிட்டார் என்று அக்கா யாழ் வளாகத்திலிருந்து ஒரு பின்னேரப்பொழுதில் கலங்கிய முகத்துடன் சொன்னபோதுதான் தற்கொலை குறித்த முதற்குறிப்பு எனக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

சிவரமணி எனக்கு முதலில் கவிஞையாக அறிமுகமானவரல்ல; அக்காவின் தோழியாகத்தான் அறிமுகமானவர். சிறுவயதுகளில் அக்காவின் அல்பங்களில் அவரின் படத்தைப் பார்த்து -கன்னக்குழி விழ அழகாகச் சிரித்துக்கொண்டிருப்பவர்- ஏன் இப்படியான முடிவை தேடினார் என்றுதான் அதிகம் யோசித்திருக்கின்றேன். ‘கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாயிருக்கப் பழகவும்’ என்ற வலி(மை) நிறைந்த வார்த்தையை அக்கா கத்தரித்து வைத்திருந்த சிவரமணியின் படத்திலிருந்துதான் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது. இந்த வார்த்தை பல இடங்களில் அமைதியாக இருக்கச் செய்து தேவையில்லாத மன உளைச்சல்கள் என்னை நெருங்கவிடாது தடுத்திருக்கின்றது. சில்வியா பிளாத் தற்கொலை குறித்து வெளிப்படையாக எழுதியதைப் போன்று சிவரமணி தற்கொலை குறித்த குறிப்புக்களை நமக்காய் விட்டுச்சென்றதில்லை. சில்வியா ‘சாவதும் ஒரு கலை’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, தனது ஒரு நீண்டகவிதையில் எழுதியதுமாதிரியே தன் தற்கொலையின் வழியையும் தேர்ந்தெடுதெடுத்தவர். சில்வியாவின் கவிதைகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகரின் பொருட்டு சில்வியா மீண்டும் தற்கொலை செய்துகொள்கின்றார், அந்த வாசகர் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்ற பதட்டத்துடன்.

இன்றையபொழுதில் எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களை கேள்விப்பட்டும் வாசித்தும் விட்டாயிற்று. பெறுபெறுகள் குறைகின்றது என்ற பயத்தில் -நதிக்குள்-, அம்மா தன்னை அதிகம் திட்டிவிட்டார் என்பதற்காய் -நெடுஞ்சாலையில்-, நீ என்னை நேசிக்கவில்லையென்றால் இறந்துவிடுவேன் என்று கண்ணித்திரையில் எழுத்துக்கள் உறைந்துகிடக்க - அடுக்குமாடிக்கட்டட்டத்தில்- என எத்தனையோ சம்பவங்கள் நினைவின் அலையில் புரள்கின்றன. ஏன் இதை எழுத ஆரம்பித்த சென்ற வாரத்திற்கும், இப்போது எழுதி முடிக்கும் இந்த வாரத்திற்கும் இடையிலான வார இறுதியில்கூட, தமிழர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு - domestic violence பெரும்பங்கு வகித்தது என்றாலும்- தானும் தற்கொலை செய்திருக்கின்றார் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

பனிக்காலம் ஆரம்பிக்கின்றது. வந்து இறங்கிய புலத்தில் வேர்களையும் பதித்து அடுத்த சந்ததிகளின் விழுதுகளும் வளரத்தொடங்கிவிட்டன. ஆனால் பனிப்புலத்தை உழுது -ஈழத்தில் இருப்பதைவிட மோசமாய்- சாதி, சமயம், புரளி, அந்தஸ்து என்று ‘அருமையான’ விளைச்சல்களை அமோகமாய் பெற்றுக்கொண்டிருக்கின்றோமே தவிர சக உயிர்களின் மதிப்பை இன்னும் உணர்ந்தோமில்லை. சாதி, சமயம், கெளரவம் இன்னபிறவற்றால் மன அவசத்தையோ தற்கொலையையோ, வன்முறையையோ தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று எப்போது எமக்கு உறைக்கப்போகின்றது?

இனி, சூரியன் புதைந்துபோன வானப்பின்னணியைப் போல எம் மனங்களையும் எரித்துச் சாம்பராக்க-winter blue- விரைவில் வரப்போகின்றது. வெளியே -நினைத்த நேரத்தில் உலாத்தித்திரிந்து புத்துணர்ச்சி பெறுவதைத் தடுத்து - பனியும் காற்றும் பயங்கரமாய்ச் சுழன்றாட, இழந்துபோன எவற்றையோயெல்லாம் அசைபோட்டு மனது குழம்பிச் சிதறப்போகின்றது.

கொஞ்சம் கனிவு தரும் வார்த்தைகள்; மனந்திறந்து பேச சில நிமிடங்கள் என்று சக மனிதருக்காய் சிறுபொழுதை ஒதுக்கும்போது - உங்களை அறியாமலே- நடக்கவிருக்கும் ஒரு தற்கொலையை நீங்கள் நிறுத்திவிடவும் கூடும். ஆதியில் மடலேறியவனின் மரபணுவை கொண்ட என்னைப் போல, யாரேனும் ஒருவர் -தான் இன்று வாழ்ந்துகொண்டிருப்பதற்கு- நீங்கள்தான் காரணமென்று நாளை நன்றியுடன் ஒரு குறிப்பை அன்பு ததும்ப உங்களுக்காய் எழுதவும் கூடும்.

February 14, 2006

மலர்களும், ‘மலர்களும்’

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 9:55 am

காதலர் தினம் என்றவுடன் எத்தனையோ நினைவுகள் ஞாபக அலைகளில் புரள்கின்றன. காதலர் தினம் என்பது ‘காதலிப்பவர்க்கு’ மட்டுமல்ல அன்பைப் பகிர விரும்பும் எந்த உறவுகளுக்கும் உரியது என்று விரிவான தளத்தில்தான் எடுத்துக்கொள்கின்றேன்.

இப்படித்தான் பலவருடங்களுக்கு முன், படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்ணில் ஈர்ப்பு வந்து, கனக்க ரோசாப்பூக்கள் வாங்கி வைத்தபடி அவருக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். வாங்கி வைத்திருந்த ரோசாப்பூக்கள் அவரது வயதைவிட கூடுதலாக - ஒன்றரை டசினுக்கு- மேலாய் இருந்தது. சரி பிள்ளை ரோசாப்பூக்களில் மயங்கி என்னையும் உச்சிமுகர்ந்து போகப்போகின்றது என்று கனவில் அமிழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளையோ அதை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு காற்றாய் நகர்ந்துவிட்டது. காதல் முகிழவில்லை என்ற வருத்தத்தைவிட எவ்வளவு காசு செலவழித்து வாங்கிய பூக்கள் வீணாய்ப்போய்விட்டதே என்ற கவலைதான் அதிகம் என்னில் எஞ்சியது. அதுவும் அந்தக்காலத்தில் ஒரு டொலருக்கே அம்மாவிடமும் அண்ணாக்களிடமும் சிங்கியடித்துக்கொண்டிருந்த காலம். ரோசாப்பூவைக் கொடுக்கமுன்னர் நான் ரோசாப்பூக்களின், விலைப்பட்டியலை முன்னுக்கே நீட்டியிருந்தால் ஆகக்குறைந்தது ரோசாப்பூவை குப்பைத் தொட்டிக்குள் எறியாது -recycle செய்வதுமாதிரி வேறொருவருக்கு கொடு என்று- அந்தப் பெண் கூறிவிட்டாவது சென்றிருப்பார் என்று பிறகு யோசித்துமிருக்கின்றேன்.

இந்தச் சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது என்று நண்பர்களுடன் அலசி ஆராய்ந்தபோது, ‘டேய் காதல் என்றால், டசின் கணக்கில் பூக்கள் கொடுப்பதில்லை, ஒன்றே ஒன்று என்று ஒரு சிவப்பு ரோஜாவை மட்டும் கொடுக்கவேண்டும்’ என்றார்கள் (அதாவது என்னிடம் இருக்கும் ஒரேயொரு இதயம் உனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சிம்பாலிக்காய் காட்டவேண்டுமாம்). ஆனால் நான் நினைத்தது என்னவோ, ஒரு ரோஜாவைக் கொடுத்தால் இவ்வளவு கஞ்சத்தனமாய்த்தான் பிறகு அன்பையும் காட்டுவான் என்று அவர் நினைக்கககூடும். ஆகவே ஒன்றரை டசினில் ரோசாப்பூக்களை வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு விசாலமான அன்பு தன்னில் இருக்கிறது என்று நினைத்து உடனேயே என் நேசததை பிள்ளை ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன். நாம் நினைப்பவை எல்லாம் நடந்துவிடுகின்றதா என்ன? ரோசாப்பூக்களைக் கொடுத்தவுடனேயே, குப்பைத் தொட்டிக்குள் bastket ballஜ வளையத்தில் எறிகின்றமாதிரி துல்லியமாய்ப் போட்டவருக்கு, எப்படி நான் கண்டுபிடித்த காதற்தத்துவங்களையோ, அதற்கான பொழிப்புரைகளையோ, பொறுமையாகக் கேட்க நேரம் கிடைத்திருக்கும்?

பிறகு, ஒருமுறை நண்பன் ஒருவன் தனது காதலியின் தாயாரை முதன்முதலாய்ச் சந்திக்கப்போகின்றேன், ‘என்னடா அவருக்குக் கொடுக்கலாம்?’ என்றபோது ‘பூக்களை வாங்கிக்கொடு’ என்றேன். ‘நான் அவாவைக் காதலிக்கிறனா அல்லது அவாவின்ரை மகளைக் காதலிக்கின்றேனா என்று நீ நினைக்கின்றாய்?’ எனப் ‘புத்திசாலித்தனமாய்’ அவன் திரும்பிக்கேட்டான். இப்படி விதாண்டவாதம் கதைப்பவனோடு என்னத்தை மேற்கொண்டு கதைப்பதாம்? ‘நீ பூவை வாங்கிக்கொடுத்தால் என்ன, இல்லை விளக்குமாற்றை வாங்கிக்கொடுத்து உன்ரை மாமியின்ரை கையால் அடிவாங்கினால் என்ன, இனிமேல் என்னிடம் மட்டும் அட்வைஸ் கேட்காதே’ என்று கோபத்தில் கூறிவிட்டு அமைதியாகிவிட்டேன்.

Mothers day, பிறந்ததினங்கள் என்றால், நான் அதிகம் பூக்களை வாங்கித்தான் பரிசளிப்பேன். பூக்களில் எப்போதும் ஒருவித அலாதிப் பிரியம் உண்டென்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்ற விடயங்களைப் போலத் தேடி தேடி கடைகளில் அலையாமல் இலகுவாய் தேர்ந்தெடுக்கக்கூடிய பரிசு இது என்பது மற்றொரு காரணமும் ஆகும். இப்படித்தான் எனக்குப் பிரியமானவர்களுக்கு பூக்களைப் பரிசளிப்பதற்காய் ஒரு பூக்கடைக்கு அடிக்கடி போய் அந்தக் கடையில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் ஒருவித ஈர்ப்பு வந்தது. பிறகு பிரியமானவர்களுக்குப் பரிசளிக்க பூ வாங்கப் போகின்றேனா அல்லது அந்தப் பெண்ணைத் தரிசிப்பதற்காய் அடிக்கடி பூவாங்கி பிறருக்கு பரிசளிக்கின்றேனா என்ற சந்தேகம் எனக்குள் நெடுகாலத்துக்கு இருந்தது.

பலவருடங்களாய் மறந்து இருந்த இந்தப்பழக்கம், சென்றவருடம் இயல் விருது பத்மநாப ஐயருக்கு வழங்கியபோது மீண்டும் விழித்துக்கொண்டது. விழாவன்று, மேசை நிறைய ரோசாப்பூகளை அழகுபடுத்துவதற்காய் வைத்திருந்தார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி, இருந்த ரோசாப்பூக்கள் அனைத்தையும் வீட்டுக்கு கொண்டுபோகவேண்டும் என்ற அவசரத்தில் சுருட்டிக்கொண்டிருந்தார். வளர்ந்த மகன் யாராவது என்னைப்போல வீட்டில் சோம்பறியாயிருந்து, யாராவது பெண்ணுக்கு ரோசாப்பூ கொடு என்று மகனுக்கு அன்புக்கட்டளையிடுவதற்காய் பூக்களை அவர் சேகரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

நானும் இடையில் புகுந்து ஒரு ரோசாப்பூவைக் கடினப்பட்டுக் கைப்பற்றினேன். பிறகு அது பத்திரமாய் களவு போய்விடாமல் இருக்க புத்தகத்தின் பக்கங்களின் இடையில் அதை வைத்துக்கொண்டிருந்தபோது, கண்டவர்கள் எல்லாம், ‘என்ன யாரோ உமக்கு ரோஸ் தந்திச்சினமோ?’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ரோசாப்பூவை யாராவது தந்திருந்தால், இந்த நேரம் பச்சைக் கிளியோடு வானத்தில் அல்லவா பறந்துகொண்டிருப்பேன். இப்படி அலுப்பூட்டும் after ceremony இலக்கியக்கூட்டங்களில் ஏன் நான் நிற்கப்போகின்றேன் என்று பிறருக்கு விளங்காது, ரோசாப்பூவுக்கும் மட்டும் கேட்கக்கூடியதாய்க் கூறிக்கொண்டிருந்தேன்.

உயர்கல்லூரியில் காதலர் தினமன்று நல்லதொரு ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ரோசாப்பூ -செருப்படி விழாது safetyயாய்- கொடுக்கவேண்டும் என்றால், ஒரு இடத்தில் போய், ரோசாப்பூ கொடுக்கப்படவேண்டியவரின் வகுப்பையும் பெயரையும் பதிவு செய்துவிட்டால், உங்கள் பெயரோடு அல்லது விருப்பம் இல்லையெனில் anonymousயாய், அந்த நபருக்கு ரோசாபூவைக் கொண்டுபோய் வகுப்பு நேரத்தில் கொடுப்பார்கள். என்னைப் போன்றவர்களின் வேலை அந்தச்சமயங்களில் என்னவென்றால், எந்தப் பெண்ணுக்கு அதிகம் ரோசாப்பூகள் கிடைக்கிறதென்று எண்ணிக்கொள்வது. பின்னே, அதிகம் ரோசாப்பூ கிடைப்பவரைத்தானே அதிகம் பேர் நேசிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். அத்தோடு, அந்த லிஸ்டில் எங்களின் பெயரையும் அடுத்த முறை இணைத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையும் எங்களில் அனேகம் பேருக்கு இருந்து என்பதுவும் உண்மைதான். சரி, சரி உனக்கு எத்தனை ரோசாப்பூக்கள் கிடைத்தன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையைச் சொன்னால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்?

உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரேயொருவருக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்திருக்கலாம், தவறவிட்டுவிட்டேன் என்று இப்போதும் கவலைப்படுவதுண்டு. அவர் என்னோடு படித்த பெண் அல்ல, அவர் எங்களுக்கு programming language கற்பித்த ஒரு பெண் ஆசிரியர். பெண் ஆசிரியர் என்றவுடன், நீங்கள் ஆசிரியர்-மாணவர் crush என்று நினைத்துவிடாதீர்கள். இது அதற்கு எதிர்மாறானது. அன்புக்குப் பதிலாக வெறுப்பைக் காட்டுவது. நல்ல ஆசிரியர்தான். எனக்கும் programmingல் ஆரம்பத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. பிறகு கணணிமொழியை விட பெண்களின் மனமொழியில் அதிக ஆர்வம் வரத்தொடங்க, பாடத்தில் கவனம் சிதறத்தொடங்கியது. வகுப்புக்களுக்கு அடிக்கடி கட் பண்ணினால் வீட்டுவேலை(homework) போன்றவற்றிற்கு ‘group work’தான் செய்யவேண்டும். Group work என்றால் அப்படி இப்படித்தானே இருக்கும். ஆனால் மனுசியோ அவன், இவனைப் பார்த்து கொப்பியடித்திருக்கின்றான். நீ அவனைப் பார்த்து கொப்பி அடித்திருக்கின்றாய் என்று எங்களை வைத்து வெருட்டத்தொடங்கிவிடும். அத்தோடு அவரும் மிக இளையவராய் இருந்ததால் அவருக்கும் இந்த ‘group work’ன் அடியும் நுனியும் நன்கு தெரியும். பிறகு மனுசி சிலவேளைகள் தனித்துச் செய்தாலும், group work செய்யப்பட்டிருக்கின்றதா என்று கண்ணுக்குள்ளை விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு தேடிப்பார்க்கும். அந்தக் கோபத்திலேயே அவரின் வகுப்புக்களையும், அந்தப்பாடத்துக்கான இறுதிப் பரீட்சையையும் தவறவிட்டு boycott செய்திருக்கின்றேன். (அதன் இழப்பு வளாகத்தில் ப்ரோகிராமிங் பாடங்கள் எடுக்கும்போது புரிந்தது, வேறு விடயம்).

இந்த மனுசிக்கு காதலர் தினத்தில் unknown nameல் அல்லது ex-lover என்றோ, இல்லை ஏலியன் என்ற பெயரிலோ, ஒரு ரோசாப்பூ அனுப்பி அவர் முகம் கொஞ்சம் வெளிறுவதைக் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன். பின்னே, அவா எத்தனை முறை என்னைப்போன்றவர்களின் முகத்தை வெளிறச் செய்தவர்? இதை விட வேறு எது சிறந்த குருதட்சிணையாக என்னைப்போன்றவர்கள் அவருக்கு வழங்கிவிடமுடியும்?

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகும் உயிர்ப்பும் நிறைந்தது. அனைவரும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் மற்றும் உங்கள் மீது பிரியம் வைத்திருப்பவர்களுக்கு உங்கள் நேசத்தை இந்தப்பொழுதில் தெரியப்படுத்துங்கள். ப்ளுவாய் (blue) இன்றைய பொழுது துயரமாயும், அலுப்பாயும் கழிகின்றவர்களுக்கு, உங்களுக்கான இனிய பொழுது நாளை விடியக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள், உயிர்ப்புடன் இருங்கள்.

விரைவில் திருமணஞ்செய்து வாழ்வின் ‘இன்பக் கடலில்’ மூழ்கிச் சாகாவரம் காண வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டிருக்கும் தோழர்களும், தோழிகளுக்கும், ‘அச்சச்சோ புன்னகை ஆள்கொல்லும் புன்னகை’ என்று இன்றையபொழுதில் உங்களைப் பார்த்து யாரோ ஒரு இளைஞனோ, யுவதியோ புன்னகைக்க வாழ்த்துகின்றேன்.

January 30, 2006

கடிதங்கள்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 11:07 am

நினைவுகள்….பிரியங்கள்…..அக்கறைகள்

சில நாட்களுக்கு முன்னர் பழைய குப்பைகளைக் குடைந்தபோது பலவரிய மாணிக்கங்கள் கிடைத்தன. கடிதங்கள்…..ம்….அவை எத்தனை பொழுதுகளில் என்னை உற்சாகப்படுத்தி வாழ்வை நேசிக்கச் செய்திருக்கின்றன. இவற்றின் நுட்பமான வரிகள், எவ்வளவோ துயரங்களை சூரிய ஒளியில் சிதறிய பனித்துளிகளாய் கரைத்து மனதைத் தெளிவாக்கியிருக்கின்றன.

இந்தக் கடிதங்களில் அனேகமானவை ஜந்து வருடங்களுக்கும் முன்பானதும், சில பத்து வருடப் பழமையும் உடையன. இந்தக் கடிதங்களை எழுதிய அனேகர் ஆழமான வாசிப்பும் எழுத்துத் திறமையும் கொண்டவர்கள். ஒவ்வொரு மடல்களிலும், இவர்களின் ஆளுமை என்னை வசீகரித்து வியக்கச்செய்ததுண்டு. எனினும் இவர்களில் அனேகர், பொதுத்தளத்தில் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமில்லாது ஒரு தெளிந்த ஆற்றைப்போல வாழ்வில் நகர்ந்துகொண்டிருப்பவர்கள். ஏன் எழுதுவதில்லை என்று வினாவுகின்றபோது, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்பவற்றைவிட வாழ்வில் இரசிப்பதற்கான விடயங்கள் அதிகமுண்டு என்று கூறி என்னை மெளனிக்கச்செய்பவர்கள். தனிப்பட்டரீதியில் அது குறித்து அவர்கள் மீது சின்னதாய் கோபமும் உண்டு.

இங்கே பதியப்படும் கடிதங்களுக்கு எவரிடமும் உரிய அனுமதி பெறாமலே -இயன்றளவு தனிப்பட்ட விபரங்களை தவிர்த்து- பதிகின்றேன். இதைக் கூட பதிவு செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு காரணம், விமர்சிப்பதற்கு ஓடிவரும் என்னைப் போன்றவர்கள், நல்லவிடயங்களை மனந்திறந்து பாராட்டுவதற்கு பின் தங்கி நிற்கின்றோம் என்ற நிலைப்பாட்டை ஒரளவாவது -என்னளவில்- உடைத்துப்பார்க்கவேண்டும் என்பது மட்டுமே.

கடிதங்கள் அழகானவை…. நாமும், நம்மிலும் பிரியம் வைக்கும் மனிதர்களைப் போல!

(1)
எந்த இடமும் எமக்காக உருவாக்கப்படவில்லை. நாம்தான் எமக்கான இடத்தை உருவாக்கவேண்டும். I love Bharathy, அவன் நல்ல கவிஞன் என்பதால். ஆனால் அவன் நல்ல கணவனா, தகப்பனா என்பது கேள்விக்குரியது. கடன் வாங்கிய அரிசியைக் குருவிகளிற்குப் போட்டு ரசித்தது முட்டாள்தனம். வாழ்க்கை யதார்த்தமானது. கவிதைகளை ரசிப்பதோ எழுதுவதோ மட்டுமில்லை அதை வாழ்ந்தும் பார்க்கவேண்டும். தமிழ் தாய்மொழி அதை மறப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைப் போல புகுந்த நாட்டு மொழியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும். பல மொழிகள் தெரிவது அறிவுக்கு ஊக்கம் தரும். பாரதிக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் இன்னும் சில மொழிகளிலும் நல்ல தேர்ச்சியிருந்தது. இலக்குகளை நிர்ணயிப்பது நாம்தானே. பின்பு ஏன் அது கடினமாகப்போகிறது. கவனக்கலைப்பான்கள் பலவா? காலம் கடந்தாலும் இலக்குகளை அடைவதில் கவனமாக இரு.

உனக்கு …………. வர நல்ல தகுதியிருக்கிறது. ஆனால், ‘அதிகம் கதைக்காமல் என்னைக் கவர்ந்தவளென்று’ பொய் சொல்கிறாய் தம்பி. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாய் என்பதை உன் கையெழுத்தே சொல்கிறது. புத்தகங்கள் வாசி. கடிதம் எழுது. post பண்ணவேண்டுமென்று கூட அவசியமில்லை. புரிகிறதா? மனதில் இருப்பதை வெளிபடுத்த நல்லவழி கடிதம் எழுதுவதுதான்.

மிக முக்கியமான விடயம். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பம், இங்குள்ள உன் வயதொத்தவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள். முதலில் உன்னை நிலை நிறுத்திக் கொள். பின்பு நீ எது செய்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

வாழ்க்கை எப்போதும் அழகானதுதான். சில தேவையற்ற கவிஞர்கள்தான் சோகம் சுகமானது என்று சொல்லி எல்லோரையுஞ் சோம்பறியாக்கிறார்கள். கோபப்படாதே. தியானஞ் செய்யப் பழகு. எழுது எல்லாவற்றையும். Please try to write in English. மொழி கவிதைக்குத் தடையல்ல. Try it.
—————————————–
(2)
நான் சிறுவயதிலிருந்து இன்றுவரையும் எனக்கென்று கடவுளிடம் மன்றாடுவதனால்….
-கடவுளே, நான் பெண் எப்படி இருக்கவேண்டும் என்று நீர் நினைக்கின்றீரோ அப்படி நான் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும்.
-மற்றவர்களுக்கு help பண்ணவேண்டும். அதற்கு அறிவைத் தாரும். நல்ல வேலையைத் தாரும். அப்பதான் நான் எல்லோருக்கும் help பண்ணமுடியும்.
என்று கடவுளிடம் மன்றாடுவேன்.

நான் மட்டும் அல்ல இப்படித்தான் பலபேர் கடவுளிடம் மன்றாடுவினம் என்று எனக்குத் தெரியும். எப்போதும், நல்ல பிள்ளையாய் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. நான் எப்போதும் முயற்சிசெய்து என்னைப்பற்றி சுய அனுதாபம் கொள்வதை தவிர்த்துக்கொள்வேன். சுய அனுதாபம் கொள்வது எனக்குப் பிடிக்காது. அத்தோடு பிறர்முன் அழுவது அதுவும் பெண்கள் அழுவது எனக்கு கண்ணில் காட்டக்கூடாது. எனெனில் புரியாதவர்கள் கண்ணீர் பெண்களின் பலம், பலவீனம் என்பார்கள்.

எனக்கே என்ன சிரிப்பு என்றால் எனக்கு என்னில் சரியான விருப்பம். நேற்று வேலையில் ஒருவர் சொன்னார். கனடா வந்து 4 வருசம் ஒரு boy friend இல்லையென்றால் பொய் சொல்கின்றேனாம். அத்துடன் நான் style ஆக வேறு வெளிக்கிட்டு வாறேனாம். அப்போது நான் எல்லோருக்கும் முன்னால் சொன்ன்னேன். ‘ஒருத்தி தன்னைத்தானே அழகுபடுத்தி வருகின்றாள் என்றால் அவள் தன்னைத்தானே விரும்புவதுக்காகவும் இருக்கலாம். not only for boyfriend. because தன்னை நேசிக்க முடிபவர்களால்தான் உலகை நேசிக்கமுடியும்’ என்று. அவா இது, ‘விதாண்டாவாதம்’ என்றா. நான் சொன்னேன், ‘அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்’ என்று. அருகில் இருந்தவர்கள் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். because நான் இவ்வளவும் கதைத்தது எங்கள் supervisorடம்.
——————————————————-
(3)
இன்று சர்வதேச ஆசிரியர் தினம்! இன்றுதான் முதன்முதலில் பள்ளியில் ஆசிரியர் தினம் மதியபோசனத்துடன் கொண்டாடப்பட்டது. நான் இசையமைக்க, அடிகள் கவிதைகள் புனைய பக்க வாத்தியமாக செந்தூரன் மிருதங்கம் இசைக்க பாடல் பாடினோம். இறுதியாக ‘இந்துவின் ஆசிரியர்கள்’ என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகத்தை (தாள லயத்தை) நாம் மூவரும் வழங்கினோம். நான், சகிலா ஆசிரியை, அதிபர் மன்மதன், ஹரிகரன் வாத்தி, சண் சேர் போன்றவர்கள் போல நடிக்க, அடிகள், சுசி ஆசிரியை, பிரியா ரீச்சர், வரதராஜன் மிஸ், சச்சிதானந்தன் ஆசிரியை போல நடிக்க செந்தூரன் பின்னணி இசையும் குரலும் கொடுக்க, விசில் சகிதம் பலத்த கைதட்டல் தோஸ்துகளிடமிருந்து கிடைத்தது.

அந்த தாளலயத்திலிருந்து ஒரு சில பாடல்கள் வருமாறு….
‘நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, மின்சாரக் காசை உன் கொப்பரோ கட்டிறது
நிப்பாட்டு Fanஐ நிப்பாட்டு, தம்பிமார் watcher Fees கட்டியாச்சோ….’
-பிரின்ஸி

‘சீதமதி குடைக்குள் செம்மை அறங்கிடப்ப Britainனில்
என் புருஷன்Broadcasting பண்ணப்போகிறார்
பிள்ளைகள் கதைக்க வேண்டாம்-குரல்
எனக்குச் சரியில்லை….’
-ரவி ஆசிரியை

‘குச்சிவாத்தி நானெல்லோ குச்சொழுங்கை தாண்டிவாறன்….
சொகுசாக நான் வரேல்லை…சொய்சாவில் இருந்து வாறன்’
-ஹரிகரன் வாத்தி

இப்படி எல்லா ஆசான்களினதும் வசனங்களை எழுதப்போனால், கடிதம் ‘ஆசான் ஸ்பெஷல்’ ஆகிவிடும்.
———————————————————————–
(4)
உமது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப தகுதி பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் ஏகலைவன் போலாகிவிட்டீர். ……….. உம்மை நினைக்கும் போதெல்லாம் Exam hallல் நிற்கும்போது புளியின் கீழ் நின்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நான் உம்மை அழைத்துக் கதைக்க எண்ணிவிட்டு நாளை கதைக்கலாம் என்றிருந்தேன். அந்த நாள் எனக்கு வரவேயில்லை. எனவே, ‘நாளை என்று ஒத்திப்போடுவது நடைபெறாமலும் போகலாம்.’ எதையும் ஒத்திவைக்காது அன்றன்று செய்து நற்பிரசையாக பார் போற்ற வாழக் கற்றுக்கொள்ளவும்.
——————————————————
(5)
‘உனக்கான வாழ்வின் பகுதி
எவராலும் அபகரிக்கப்படாதிருக்கின்றதென்பதை
அறிக.’
இவை உங்கள் கவி வரிகள்தான். உங்களுடான சந்திப்பு நிகழ்ந்துபோன இந்த இரண்டு வருடங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத, சந்தோசங்கள், துக்கங்கள், சந்தேகங்கள், அவமானங்கள், வலிகள் என எதுவுமேயில்லை என்னிடம். ஆனாலும் நண்பனே சில சமயங்களில் காதுகளை மட்டுமே என் செய்திகளுக்கு வழங்கிவிட்டு எதுவுமே செய்யாமல் எனை தனித்திருக்கச் செய்து, உன் பிரச்சினையை, உன் வலியை, உன் சந்தோசத்தை நீயே முழுதாய் அனுபவி என நீ விலகும் வேளையில் இமைகளைத் தட்டும் கண்ணீரை அடக்க மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, ‘எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன், உனக்கும் பசித்தால் நீயும் சாப்பிடு. உனக்கேதேனும் சோகமா, சந்தோசமா என்னவொன்றாலும் என்னிடம் சொல்லு எனது செவிகள் உனது வார்த்தைகள் செவிமடுக்க எப்போதும் தயார். ஆனால் அதற்கான solutionsஓ, அன்றேல் எனக்கான இனிய நிமிடங்களையோ அதற்காய் ஒதுக்கலோ சாத்தியமில்லை. உன் சந்தோசத்தை, துக்கத்தை முழுதாய் நீயே பங்கிட்டுக் கொள். எனக்கு எதுவும் வேண்டாம். உனக்காய் நான் பிரார்த்திக்கின்றேன்’ அப்படித்தான் இருக்கமுடியும்.

அது உங்கள் இயல்பு. உங்களை எனக்கு ஏற்றமாதிரி மாறச் சொல்லல் மிக மிகத்தப்பு. என் சுயம் இழக்கச் சொல்கையில் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது. அப்படித்தானே இருக்கும் உங்களுக்கும். உங்கள் நட்பு எனக்கு தந்த பலத்தை வேறு எதுவும் என் வாழ்க்கையில் தரவேயில்லை. எனக்கென்னவோ நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை எனத்தான் தோன்றுகின்றது. ……… பிரச்சினையோ, அன்றேல் ……… உடனான பிரச்சினையோ உங்களிடம் சொன்ன போதெல்லாம் solution எதுவும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தீர்கள் நீங்கள். இது உண்மையான நட்பல்ல.
———————————
(6)
மேலும், தங்கள் கடிதத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளான “எல்லாம் மனதிற்கு பிடித்தமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நம்புகிறேன்” என்ற தயோகுணத்தில் இருந்தே நாம் சரிவரப் பேசிக்கொள்ள நிறைய விடயமிருக்கிறது.

எனது நம்பிக்கைகளை, கொள்கையை வழிமொழியாத அல்லது ஏற்றுக் கொள்ளாத ஒருவரது கொள்கையை நாம் எப்படி முட்டாள்தனமென்று கூறமுடியாதோ, அதேபோலத்தான் நாம் இன்று பெரிதுவக்கும் பல விடயங்களும் காலப்போக்கில் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து எம்மைப்பார்த்து முட்டாள் என்று சிரிக்க வைக்கும். தமிழிலக்கிய, பண்பாட்டுப்பரப்பில் ஞானியின் சிந்தனைகள் போற்றப்பட வேண்டிய தொன்றாக இருப்பினும் அவரது தமிழியம், தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவங்கள் நெருடலாகவே எனக்குத் தோன்றுகின்றது. மாபெரும் மனிதநேயன் தேசியம் என்ற கற்பிதம் உதிர்ந்து போக வேண்டிய தொன்றாகவே கருதுவான். ஆதியில் இருந்து இற்றைவரை தேசியத்திற்கான தேவைகளும். வரையறைகளும் பாரபட்சமானதாகவும், சுயநலம் சார்ந்ததாகவும் இருப்பது கண்கூடு. சேர, சோழ, பாண்டியர் தம் எல்லைப்பரப்பிற்குள் எதற்காக இறுக்கமான இனத் தனித்துவத்தைப் பேணிக் கொண்டனர் என்று சிந்தித்துப் பாருங்கள். வரி, மானியம், கிரீடம் போன்றவைதான் அவர்கட்கு முக்கியமாகப்பட்டிருக்கும். மாறாக இனம்மாறி அவர்கள் பெண் கொண்ட சூழ்நிலைகளும் சுயநலம் சார்ந்த வழுவாகவே புலப்படும்.

நசுக்கப்படும் இனங்களின் விடிவுக்கு தேசியப்போராட்டம் ஒரு தற்காலிகத் தேவையே தவிர, மானிடர் என்பவர் எல்லைகளைக் கடந்த மனிதநேய ஒன்றல்களுக்குள் அணைத்துக் கொள்வதைத்தான் திரு. ஞானி பெரிதும் நம்பும் மார்க்சியமும் சொல்கிறது. சங்ககாலத்திலேயே கணியன்பூங்குன்றன் என்ற கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லைகள், இனக்குழுக்கள் எல்லாவற்றையும் கடந்து உலகமக்கள் யாவரும் நமது சுற்றத்தாரே என்று பாடுகிறான்.
——————————–
(7)
சில நண்பர்கள் அவர்களுக்கான என் வீடு விசாலமானது. எப்போதும் வரலாம் எப்போதும் பேசலாம் எந்த வரையறைகளும் இல்லை. நிரம்ப பிரச்சனைகளில் இருந்த நண்பியுடன் விடிய விடிய கதைத்து பாடசாலை போகாத அநுபவங்களும் உண்டு. ஆதலால்,என் தம்பிகள் பற்றிய கவலைகளை விட இப்போது உங்களைப்பற்றி நிறைய யோசனையாய் இருக்கிறது. நீங்கள் காயமின்றி வெளிவரவேண்டும் அதற்கான எந்த உதவியையும் என்னிடம் கேட்கலாம். நானும் நீங்கள் சந்தோசமாக இருப்பதற்கு உதவியாக இருந்தேன் என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு இப்படியான நிலை ஏற்பட்டிருந்தால் உதவியிருக்க மாட்டீர்களா என்ன?

எழுதுவதை மட்டும் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதை வரவில்லை என்றால் கதைக்குப்போங்கள் அதுவும் வரவில்லை என்றால் கனடா வாழ் அநுபவங்களை எழுதுங்கள். எழுத்து எவ்வளவோ விடயங்களை ஆற்றும் என்று நான் நினைக்கிறேன். …… நீங்கள் மாற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆதிக்கமான ஒரு ஆணாய் இருப்பதை விட மற்றவர்களை புரிந்து வாழ்வது தான் நல்ல மனிதனாய் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
———————————————
(8)
உனது கவிதைகள் பற்றி - ஆகா ஓகோவென்று புளுகி உன்னைப் பப்பாவில் ஏற்றுவதும் சரியல்ல. அதே நேரம், கவிதையைத் தாக்கி உன்னைப் பாதாளத்தில் தள்ளிவிடுவதும் சரியல்ல. நான் சொல்வேன்: உனது பருவத்துக்கு இது சிறப்பான கவிதை. ஆனால் இதுவே முழுமையான கவிதையல்ல. இன்னும் அனுபவத்தைச் சேர்த்து, சொற்களைத் தேர்ந்தெடுத்து, கவிதையை நீ செதுக்கப்பார். உனது அனுபவத்தினூடாக எழுதப்பார். அறிவால் எழுதாமல் உணர்வால் எழுத முயல். சேரன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், முதலானோரின் கவிதைகளை, பாரதியார், மகாகவி, நீலாவாணன், சண்முகம் சிவலிங்கம் முதலானோரின் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பது முக்கியமானது. ‘சரிநிகர்’ பத்திரிக்கையை தொடர்ந்து வாசிப்பது நல்லது. தொடர்ந்து வாசிக்கிறாயா?
————————————————-
(9)
தாய்மையென்பது பெண்மையின் அடையாளம்தான். என்னால் இன்னொரு உயிரை.., இன்னொரு ஜீவனை உருவாக்க முடிகிறதென்பது எத்தனை உன்னதமானதொரு விடயம். எனது உதிரத்தைக் கொண்டு அதற்கு உணவூட்ட முடிகிறதென்பது எத்தனை அற்புதம். உயிர்.. உயிர்.. இன்னுமொரு உயிர் என்னுடலில் தங்கி, ஊட்டம் பெறப்போகிறது. அதற்கு இந்த உலகத்தை நான்தான் அறிமுகப்படுத்தப் போகிறேன். ஒவ்வொரு உயிரும் எவ்வளவு பெறுமதியானவை. நாளைய உலகமொன்று என்னிலிருந்து உருவாகப் போகின்றது. ஒருகணம் கடவுளாய், இறைவியாய் மாறியதாயொரு உணர்வு. இதை இழக்க நான் தயாரில்லை.

‘விடுதலையை எழுதுதல்’ என்ற தனது நூலில் மாலதிமைத்ரி இப்படிச் சொல்லியிருப்பார்.
இந்தவுலகில் பெண் மேலாதிக்கம் நிலவுமானால் யுத்தம், உயிரிழப்பு, அழிவு எதற்குமே இடமிருக்காது. ஏனென்றால் ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒரு உயிரின் பெறுமதி.. அழிப்பது சுலபம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்குவதிலுள்ள சிரமம் பெண்ணுக்குத்தான் தெரியும். இதையேதான் நானும் நினைத்திருந்தேன். மாலதியின் நூலில் இவற்றைப் பார்த்ததும்தான் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்களென விளங்கியது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எனது கர்ப்பப்பை, எனது சொத்து. வேறு எவனும் அதில் உரிமையெடுக்கவோ, தலையிடவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
————————————————-

ஒன்பது வித்தியாசமானவர்களிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த கடிதங்களில் சிறுபகுதிகள்தான் இவை. மேலே எழுதிய கடிதக்காரர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் இன்று எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவர்களது நினைவுகள், எழுத்துக்களாய், சம்பாசணைகளாய் என்றும் எனக்குள் மிதந்துகொண்டேயிருக்கும்.

Next Page »

Powered by WordPress