DISPASSIONATED DJ

April 3, 2007

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 12:21 pm

அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.

தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism( இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும், அதனூடாக மூடப்பட்ட இருண்ட பக்கங்களின் தாழ்ப்பாள்கள் திறக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. பின்நவீனத்துவத்தை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டும், இன்னொருசாரார் அது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபடியும் தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர்.இக்கட்டுரை(?) தகவல்களின் அடிப்படையில் எழுதப்படப்போவதில்லை. ழாக் டெரிடாவையும், ஸர்த்தரையும், நீட்சேயையும் தேடிக்கொண்டு போகப்போவதுமில்லை(உண்மையைச் சொல்வதனால் இவர்கள் எழுதிய எந்த மூலநூலையும் நான் வாசித்ததுமில்லை). என்னுடைய வாசிப்பு மற்றும் அனுபவங்களினூடாக நான் புரிந்துகொள்பவற்றை இயன்றளவு எளிமையாக பகிர்ந்துகொள்கின்றேன். தவறுகள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளப்படும்; திருத்தங்கள் வரவேற்கப்படும்.

2000 ஆண்டளவில் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எனக்கு பரீட்சயமாயிருக்கவில்லை. வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அல்லது அப்படி பாசாங்கு செய்துகொண்டிருந்த நேரம். சக்கரவர்த்தியின் நேர்காணலொன்று இங்குள்ள ‘முழக்கம்’ பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதற்கான எதிர்வினையில்தான் முதன்முதலில் பின்நவீனத்துவம் குறித்து எனது சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். நேர்காணலில் சக்கரவர்த்தி ‘கட்டவிழ்ப்பு’ என்ற சொல்லை முன்வைத்து சில்வற்றை உரையாடியதாய் நினைவு. அந்தக் கடிதத்தில் நான் கூறியது இதுதான், ‘சமூகக் கட்டமைப்பை (structure of society) உடைப்பதற்கு முன் மீள நிர்மாணிப்பதற்கான காரணிகள் தென்படவேண்டும். இல்லாவிடின் அதைவிட ஆபத்தான சீரழிவுகளைத்தான் சமூகம் சந்திக்கவேண்டியிருக்கும்….’ என்றவாறு எனது அக்கடிதம் நீளும். அன்றையபொழுதுகளில் பின்நவீனத்துவம் குறித்த எதுவுமே எனக்குத் தெரியாது. இது ஒரு சாதாரண வாசக மனநிலையில் சிந்தித்த விடயம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது பெரும்பானமையான மக்கள் ‘கொடுங்கோலன்’ சதாம் ஹுசைனிலிருந்து விடுதலை என்று கொண்டாடியிருந்தனர். அதே மக்கள்தான், நாங்கள் சதாமின் ஆட்சியில் இவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருக்கவில்லை என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆக, சதாமைவிட இன்னொரு நல்லவர் வரப்போகின்றார் என்று தீர்க்கமாய் தெரியாதவிடத்தில், அகற்றுவது ஆபத்தாய் அல்லவா இருக்குமென சிந்தனை அப்படியொரு திசையில் விரிந்திருந்தது. ஆனால் இந்தச்சிந்தனையை ஒரு பின்நவீனத்துவவாதி(?) இலகுவாய் நிராகரிப்பார். எனெனில் கட்டவிழ்ப்பு என்ற சொல் இவ்வாறான அர்த்தத்தைக் கொள்வதல்ல.

”அரசியல் என்பது வெறும் காத்திருப்பு அல்ல. கட்டவிழ்ப்பு என்பது எதோ ஒருவகையில் இடதுசாரி அரசியலுக்குப் பயன்படவேண்டும் என்கிறார் டெரிடா. தனது கட்டவிழ்ப்பு மார்க்சியப் பராம்பரியத்திற்குப் புறநடை அல்ல எனவும் அவர் கருதுகிறார். மேற்குறித்த புரிதல்களின் அடிப்படையில் நீதிக்காகவும், சனநாயகத்துக்காகவும் எடுக்கப்பட்ட முடிவே நமது அரசியலை ஆற்றுப்படுத்த வேண்டும். இங்கு நீதியில்லை, சனநாயகம் இல்லை என்கிற புரிதலே, புரிதலின் அடிப்படையிலான நமது இருப்பே, செயல்களே நீதி, சன்நாயகம் ஆகியவற்றிற்கான காத்திருப்பு ஆகும். பழைய மொழியின் கட்டமைப்பில் சிக்கி அரசியல் இழந்து நிற்கும் நமது இடதுசாரி அரசியலை மறு அரசியலாக்கம் செய்வதே கட்டவிழ்ப்பின் இன்றைய பணியாகும். அதுவே இன்றைய அரசியலைச் செயலுக்கு உந்தும். எனவே சனநாயகம்/நீதி குறித்த இன்றைய மொழியை நாம் அழிக்க வேண்டும். எல்லா அரசியலையும் மீள் அரசியலாக்கம் செய்ய வேண்டும். எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீக்குள்ளாக்க வேண்டும்’ என்று ‘கறுப்பு’ தொகுப்பின் கட்டுரையொன்றில் அ.மார்க்ஸ் கூறுகின்றார்.

பின்நவீனத்துவம் ஒரு கருதுகோள்(?) (condition). இன்னும் எளிமையாக்கினால் மார்க்ஸிசத்தின் போதாமைகளை/இடைவெளிகளை நிரப்புவதற்காய் தோன்றியது என்றும் கூறுலாம் (எல்லா இடங்களிலும் பிரயோகிக்கமுடியாது). பின்நவீனத்துவம் மார்க்ஸிசம் போல தீர்க்கமான வரைபுகளை முன்வைப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. எனெனில் அது தன்னளவில் சிதைவுகளை ஏற்றுக்கொள்வதோடு, சட்டகங்களை நிராகரிக்கின்றது. உதாரணத்திற்கு விக்கிபீடியாவை எடுத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயம் எழுதும்போது, பிறகு வரும் பலர் அதில் பல திருத்தங்களை செய்து கொண்டிருக்க்கின்றார்கள். எனவே முதலாவதை அடிப்படையாக வைத்து -அவற்றைச் சிதைத்தபடி- திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பின்நவீனத்துவம் இதை ‘மறுவாசிப்பு செய்தல்’ என்கின்றது (please note that the above example is not a good example of this word, i just simplified it). அதே சமயம் இப்படி பலர் ஒரு பிரதியை வாசிக்கும்போது பலவேறு வாசிப்புக்கள் வரச்செய்கின்றன. எனவே எது உண்மை என்ற குழப்பம் வருகின்றது. பின்நவீனத்துவம் முடிந்த உண்மை என்ற ஒன்றே இல்லையென்று நிராகரிப்பதோடு பல உண்மைகள் (பேருண்மைகள்?) என்ற கதையாடலை முன்வைக்கின்றது.

(2)
பின்நவீனத்துவம் என்றால் என்னவென ஆறேழு வருடத்துக்கு முன் -என் வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருந்த- நண்பரொருவரிடம் கேட்டிருந்தேன். ‘எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும்’ என்று பின்நவீனத்துவம் கூறுகின்றது என்றார். பிறகு வேறொரு நண்பருடன் மின்னஞ்சல் வழியே நிகழ்ந்த -பெரியார், திராவிடம், etc- விவாதத்தின்போது, நண்பர் ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற சொல்லை பாவித்தார் (நீட்சே தான் கடவுள் இறந்துவிட்டார் என்ற வாதத்தை முதன்முதலில் முன்வைத்தவர்). ‘பிரதியைப் பார்; பிரதி எழுதியவரைப் பார்க்காதே’ என்பதுதான் இதன் அர்த்தம். ஒரு நல்ல பெண்ணியப்பிரதியைக்கூட தனது மனைவியை வதைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் எழுதக்கூடும் என்ற கருத்தாக்கத்தை நண்பர் முன்வைத்து உரையாடியபோது, நான் அறம் சம்பந்தமான திசையில் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒருவன் தன் மனைவியைச் சிதைத்துக்கொண்டுதான் இப்படியொரு நல்லபிரதியை எழுதியிருக்கின்றான் என்றால் எனது பார்வைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்; அந்தப்பின்புலத்தில்தான் என்னால் பிரதியை அணுகமுடியும் என்ற வகையில் நான் உரையாடிக்கொண்டிருந்தேன். நணபர் அப்படியில்லை -ஆசிரியர் இறந்துவிட்டார்- என்று வகையில் பாரென்று மற்றொரு திசையில் விவாதிப்படியிருந்தார். இன்றும் என்னால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத ஒரு முக்கியபுள்ளி இது.

பின்நவீனத்துவம் உண்மை என்பது ஒன்றே ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதேயில்லை. உண்மைகள் பல என்கின்றது. உதாரணத்திற்கு, சி.புஸ்பராஜா எழுதிய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலை எடுத்துக்கொள்வோம். சி.புஸ்பராஜா தனக்குத் தெரிந்த ‘உண்மையை’ கூறுகின்றார். சி.புஸ்பராஜாவை வாசித்த ஒரு வாசகருக்கு தமிழரசன் சத்தியக்கடதாசியில் எழுதுகின்ற எதிர்வினை வேறொரு ‘உண்மையை’த் தருகின்றது. அதேபோன்று சாத்திரி என்பவர் ‘ஒரு பேப்பரில்’ எழுதுகின்ற தொடரை வாசிக்கும்போது வேறொரு ‘உண்மை’ துலங்குகின்றது. இதை எழுதுகின்ற மூவரும் தாங்கள் உண்மையைத்தான் எழுதுகின்றோம் என்கின்றார்கள். ஆனால் இவற்றை வாசிப்பவருக்கு ஒரு சம்பவத்திற்கே பலவிதமான கோணங்களில் உண்மைகள் இருப்பது புரிகின்றது. எனவே இதைத்தான் பின்நவீனத்துவம் பல உண்மைகள் இருக்கின்றன என்று கூறுகின்றது; ஒரேயொரு உண்மை என்பதை நிராகரிகின்றது.

பெருங்கதையாடல்கள், சிறுகதையாடல்கள் என்பது பின்நவீனத்தில் அதிகம் புழங்கும் வார்த்தைகள். பெருங்கதையாடல்கள் கட்டமைத்ததற்கு ஒரு உதாரணமாய், எனக்கு சிறுவயதில் ஆறுமுகநாவலர் சைவத்தை கட்டமைக்க வந்த ஒரு தேவதூதராக கற்பிக்கப்பட்டது. யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்க்கு இப்பவும் அப்படித்தான் அவர் கட்டியமைக்கப்படுகின்றார் (படித்த சொற்பகாலத்தில் அதைக் கண்டிருக்கின்றேன்). இப்பெருங்கதையாடல்களை -ஆறுமுகநாவலர் சாதித்திமிர் பிடித்தவர்- என்ற சிறுகதையாடல்கள் அதை கட்டவிழ்ப்பு செய்கின்றன. ஆறுமுகநாவலர் பற்றி இதுவரை சொல்லப்பட்ட கருத்துக்களை மீள் அரசியலாக்கும்செய்யும்படி இச்சிறுகதையாடல்கள் கோரி நிற்கின்றன. இதற்கு இன்னொரு அருமையான உதாரணமாய் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்ற ந.முத்துமோகனின் ‘இந்திய தத்துவங்களின் அரசியல்’ நூலிருந்து சிறு பகுதியைத் தரலாம்.

‘…மேற்குறித்த பகுப்பில் ஆரியர் வருகைக்கு முந்திய சிந்துவெளி நாகரீகம் குறித்த தகவல்களெல்லாம் அடையாளமின்றி முழுவதும் அழித்தொழிக்கப்படுகின்றன. வேதங்களிலிருந்துதான் எல்லாமே தொடங்கின என்பது போன்ற மாயச் சித்திரம் உருவாக்கப்படுகின்றது. சிந்துவெளி நாகரீகத்தில் முறைப்படுத்தப்பட்ட தத்துவங்கள் தோன்றவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பண்பாடு எங்கே போய்த்தொலைந்தது? தத்துவம் என்பதைவிட பண்பாடு என்பது அதிக அடிப்படையான யதார்த்தம் அல்லவா? சிந்து வெளி நதிக்கரையிலும் இன்றைய ஆப்கானிஸ்தானிலிருந்து உத்திரப்பிரதேசத்தின் மேற்குக் கரையோரம் வரை பரவிக்கிடந்த அந்த நாகரீகத்திற்கு என்ன ஆயிற்று? இத்தனை அகலமாகப் பரவிக்கிடந்த ஒரு பண்பாடு எந்தத் தடயமும் இன்றி செத்து ஒழிந்து போய்விடுமா? சமணர்கள் 24 தீர்த்தங்கரர்கள் என ஒரு வரலாற்றைக் கூறுகின்றார்களே, அதனை முழுவதும் புறக்கணிப்பது எப்படி? வைதீகம்/ அவைதீகம் என்ற பகுப்பு இக்கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் தராது.’

ஆக, வேதங்கள்/ஆகமங்கள் என்று கூறப்பட்ட பெருங்கதையாடல் மீது ஆரியர்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்தவர்களின் பண்பாட்டுக்கு என்ன நடந்தது என்ற சிறுகதையாடல் மூலம் ந.முத்துமோகன் குறுக்கீடு செய்கின்றார்.

இனி பின் நவீனத்துவம் பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றிற்கு எப்படி உறுதுணை புரிகின்றது என்று பார்க்கலாம். தலித்துக்களை ஒடுக்கிய ஆதிக்கச்சாதிக்காரகள் அனைவரும் பெருங்கதையாடல்களின் மூலம் தமது இருப்பை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். தலித்துக்கள் தமது சிறுகதையாடல்கள் மூலம் -கேள்விகள் எழுப்புவதன் மூலம்- பெருங்கதையாடல்களை சிதைக்கின்றார்கள். ஆதிக்கசக்திகளின் அரசியலை மீள் வாசிப்புச் செய்து தமக்கான அரசியலை தலித்துக்கள் உருவாக்கிக் கொள்கின்றார்கள். பெருங்கதையாடல் எது என்பதற்கு உலகமயமாதல் நல்லதொரு உதாரணம். அது பல்வேறு இனங்களின் மொழியை கலாச்சாரத்தை, பண்பாட்டுக்கோலங்களை தனக்குள் விழுங்கிக்கொள்கின்றது. ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே ஜனாதிபதி எதிர்காலத்தில் பூமி முழுவதுக்குமாய் இருக்கும் சாத்தியங்களை ஒற்றைத்தன்மையை) இந்த உலகமயமாதல் உருவாக்குகின்றது (உலகமயமாதலால் எல்லாவற்றிலும் பாதகமே என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை). பின்நவீனத்துவம் பன்மைத் தன்மையை வரவேற்கின்றது. ஒவ்வொரு மனிதரும் தனது பண்பாட்டுடன், தனக்கான மொழியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே உலகமயமாதல் நோக்கி கடும் விமர்சனங்களை -மார்க்சிசம் போல- பின்நவீனத்துவம் முன்வைக்கின்றது.

பெண்ணியநோக்கில் பார்க்கும்போது, பின் நவீனத்துவம் கூறும் ‘ஆசிரியர் இற்ந்துவிட்டார்’ என்ற கருத்தாக்கம் மிகப்பெரும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுக்கின்றது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெண்கள் எதை எழுதினாலும் அது அவர்களின் சொந்தக்கதை என்று வைத்து கிழிகிழியென்று கிழித்தும், கிசுகிசுக்களை உருவாக்கும் நம் சமூகத்தில் பெண் படைப்பாளிகளுக்கு ‘பிரதியை மட்டும் பார்; அதற்குப்பின்னாலுள்ள எங்களைப் பார்க்காதே’ என்று தீர்க்கமான மொழியில் பேசும் வெளியை பின்நவீனத்துவம் வழங்குகின்றது. அதே போன்று தலித்துக்களுக்கு வழங்குவதைப் போல இதுவரை சொல்லப்பட்ட ஆணாதிக்கப்பெருங்கதையாடல்களை தகர்க்கின்ற இன்னொரு வெளியையும் பின்நவீனத்துவம் பெண்ணியத்துக்கு தருகின்றது.

அண்மையில் ‘வைகறை’யில் சுமதி ரூபன்(கறுப்பி), சா.கந்தசாமி பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தார். சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோது அவரது வைகறை நேர்காணலையும், இலக்கியக்கூட்டத்தில் பேசிய பேச்சையும் கேட்டு அவரைப் பற்றி கடும் விமர்சனம் இருந்தது என்கின்றார். ஆனால் பின் சா.கந்தசாமியின் ‘அவன் அதுவானது’(?) என்ற நாவலை வாசித்தபோது அவரா இதை எழுதியது என்ற வியப்பு வருகின்றது என்கின்றார் சுமதி ரூபன். அதேபோன்று உயிர்மையில், அ.முத்துலிங்கம் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரின் படைப்புக்களை வாசித்து அவரில் பெருமதிப்பு வைத்திருந்ததாய் கூறுகின்றார். எனினும் அவரை நேரில் சந்தித்தபோது படைப்புகளில் இருந்ததற்கு எதிர்மாறான விம்பம் தனக்கு கிடைத்தது என்றும்… இனி அந்த எழுத்தாளரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்த்திசையில் பயணிப்பேன் எனவும், ஆனால் அவரின் படைப்புக்களை வாசிப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றார். சுமதி ரூபனும், அ.முத்துலிங்கமும் இதற்கு என்ன அர்த்தத்தில் கருத்துக் கூறுவார்களோ தெரியாது, ஆனால் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்கின்ற ஒருவர் இதை - ஆசிரியர் இறந்துவிட்டார் - என்பதைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள் என்று இலகுவாய் கூறிவிட்டு நகர்வார்.

(3)
கட்டவிழ்ப்பு அல்லது ஒப்பாரி

பின் நவீனத்துவத்துவத்தின் மிகவும் சுருங்கிய வடிவம் என்பது ‘எதையும் சந்தேகித்தல்’ என்பதற்கிணங்க, இன்று சத்தியக்கடதாசியில் ஏற்றப்பட்ட தமிழரசனின் அனுமான் வாலாய் நீளும் (கவனிக்க: பின்நவீனத்துவம் எள்ளல்/பகிடி செய்வதை மிகவும் வரவேற்கின்றது) கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். அது இன்னொரு மார்க்சியருக்காய் எழுதப்பட்டதுபோன்ற தோற்றத்தைத் தருகின்றது. இருவரும் தாங்கள்தான் மார்க்சிசத்தை கரைத்துக்குடித்தவர்கள் என்றவகையில் ஒருவர் இன்னொருவருக்கென மாறிமாறி பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ‘என்னுடையது மட்டுமே மார்க்சிசம் வேறொருவரும் பேசக்கூடாது’ என்று சொந்தங்கொண்டாடி ‘பாசிசம்’ நோக்கி இவர்கள் இருவரும் நகராத வரை எதையும் பேசிக்கொள்ளட்டும். ‘பாசிசம்’ இது வித்தியாசங்களை மறுக்கின்றது. ஒரு வகையிலான மொழியையும், ஒரு குறிப்பிட்ட வகையிலான சிந்தனை முறையையும் மட்டுமே நிறுவனப்படுத்துவதில் அது வெற்றி கண்டுவருகின்றது என்கின்றார் அ.மார்க்ஸ் (கறுப்புத் தொகுதி). எனது கேள்வி என்னவென்றால், மார்க்சிசம் மட்டுமே ஒரேயொருவழியென்று தமிழ்ச்சூழலில் அடம்பிடிப்பவர்கள் ஒருகாலத்தில் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் பாசிசவாதிகளாய் ஆகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? (கடந்த காலம் உதாரணம் ஸ்ராலின்?) .

சரி கேள்விக்கு வருவோம். தமிழரசன் இதுவரை உலகில் எந்தத் தேசியப்போராட்டங்களும் வெற்றி பெற்றதில்லை என்கின்றார். நான் என்னுடைய மூளையை ‘விருத்தி’ செய்யும் நோக்கில் இறக்கியிருந்த மார்க்சிசம் சம்பந்தமான நூல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது… ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலில் (ப 78) வியட்நாமில் நடந்த மக்களின் போராட்டம் ஒரு தேசியப்போராட்டம் என்று கூறுகின்றார் ஜோர்ஜ் தொம்ஸன்(மொழிபெயர்ப்பு: எஸ்.வி.ஆர்). அது மட்டுமில்லாது மா சேதுங் அமெரிக்காவில் நடந்த கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை அது ஒரு தேசியப்போராட்டமும் வர்க்கப்போராட்டமும் என்கின்றார். அத்துடன் மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் கறுப்பு தேசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள் என்று வாசித்திருக்கின்றேன். ஏதோ ஒருவகையில் கறுப்பின மக்களை உயர்த்தியதில் கறுப்புத் தேசியம் மிகப்பெரும் பங்களித்ததுள்ளது என்று கடந்தகால வரலாறு கூறுகின்றது.

எனவே எமக்கேற்றவாறு ‘தேசிய’ப்பெருங்கதையாடல்களை திரித்தல் நியாயமா என்று எல்லாம் தமிழரசனைக் கேட்கமாட்டேன். எனெனில் முன்பு விருப்புடன் தமிழரசனை (சி.புஸ்பராஜாவிவின் நூலிற்கான எதிர்வினைவரை) வாசித்து வந்த என்னை, ‘நாங்கள் (தமிழர்கள்) எல்லோரும் சிறிலங்கா அரசின் பக்கம் சேரவேண்டும்’ என்று ஒரு கட்டுரையில் மிகப்பெரும் குத்துக்கரணத்தை நிலவைத் தொட்டுவிட்டு நிலத்தில் தமிழரசன் அடித்தபோது, ‘அய்யா நீங்கள் தான் எங்களை இரட்சிக்கவந்த கடவுள்’ என்று மெய்சிலிர்க்க விழுந்துவிட்டேன். நான் ஒரு பின்நவீனத்துவவாதி(?) இல்லையென்றபடியால் கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்சேயை யாரும் சாட்சிக்கு அழைக்கவும் முடியாது.

இன்னும் எந்த இசமும் கலக்காத ஒரு கேள்வி உண்டு. அருமைத்தோழர் ஏன் தேசியவாதிகள் கொழும்பில் தமிழர்கள் குடியேறுவதை விமர்சிப்பதில்லை என்று வினாவுகின்றார் (சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை என்று தமிழரசுக்கட்சியினரை நோக்கி கேள்விகேட்கின்றார்). தமிழரசு கட்சிகளை விடுவோம். நானொரு தேசியவாதியும் அல்ல; அதற்காய் தேசியவாதத்தை எல்லாப்பொழுதிலும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் போல நிராகரிப்பவனுமலல்ல. நீ தமிழன் என்று சிங்களப்பெருங்கதையாடல் என் இருப்பின் மீது வன்முறையைத் திணிக்கும்போது நான் தமிழன்தான் நீ என்ன செய்வாய் என்று எதிர்ப்பைக்காட்ட எனக்குத் தேசியம் தேவைப்படுகின்றது. மற்றும்படி சாதியை மறுப்பவன், இனத்தையும் மொழியையும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கமுடியாது. அவற்றையும் மறுதலிக்கத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

என்னுடைய எளியகேள்வி என்ன என்றால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு 90களின் ஆரம்பத்திலேயே -முஸ்லிம்களை துரத்தியடித்த சொற்பகாலத்திலேயே- அகதிகளாய் அலையத்தொடங்கிவிட்டோம். சிங்களக்குடியேற்றங்களை செய்த அரசு என்ன செயதது? சனத்துக்கு காணியும், வீடும் இலவசமாய்க் கொடுத்ததுதானே (அதற்காய் அந்த ஏழ்மையான சனங்களை கீழிறக்குவது என்று அர்த்தமல்ல). அப்படியெனில் கொழும்பில் இருக்கும் தமிழ் சனத்துக்கு எல்லாம் வாங்கோ வாங்கோ என்று அழைத்து அரசாங்கம் வீடும் காணியும் சும்மாவோ கொடுத்தது? தீவுச்சனம் பலவந்தமாய் எழுப்பப்பட்டபோது ‘காற்றுவெளிக்கிராமம்’ பாட சு.வி என்றொரு கவிஞராவது இருந்தார். எங்களுக்கு அந்தக்கொடுப்பினை கூட இல்லையே தலைவா? எப்போதோ பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட எங்களுக்கு அலரி மாளிகையில் எல்லாம் வேண்டாம்; காலி முகத்திடலில் ஒரு குடிசை போடவாவது ஒரு துண்டு நிலம் சிங்களப் பேரின்வாத அரசிடம் வாங்கித்தாருங்கள். பிறகு மகிந்த மாத்தையாவுக்கு நானும் கால் கழுவி… வேண்டுமெனில் நக்கிக்கொண்டிருக்கின்றேன் (பார்க்க: எனது நாய் பற்றிய கிறுக்கல்; நாயானால் நக்கத்தானே வேண்டும்).

முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதற்கு நாங்கள் நேர்மையான விவாதங்களை உருவாக்கவேண்டியதுபோல, அமபாறையிலிருந்தும், கிழக்கின் எல்லைக்கிராமங்களிலிருந்தும் அப்புறத்தப்பட்ட தமிழ்மக்களுக்கும், ‘சமாதான காலம்’ வந்தும்கூட ஊரைப் பார்க்கமுடியாது உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடக்கப்பட்ட -எங்களைப்போன்றவர்களின் குலைக்கப்பட்ட வாழ்வு குறித்தும்- நேர்மையாகப் பேசப்படவேண்டும் ஆனால் தேசியர்கள் ஒருபக்கத்தை மறைத்து உரையாடுவதைப்போல எதிர்த்தேசியர் (அல்லது நவீன தேவதூதர்கள்) இன்னொரு பக்கத்தை லாகவமாய் மறைத்தபடி உரையாடுவது கண்கூடு. ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பேசுவது நியாயமாகாது. இப்படிப்பேசினால்தான் தமிழ்நாட்டுப்பத்திரிகைகள் நேர்காணல் கண்டு படமும் போட்டும் வரவேற்பார்களா என்ற என் நெடுநாள் -சிறுகதையாடலை- இங்கே முன்வைக்கின்றேன்.

புலிகளின் இன்றைய இருப்பு - இவ்வளவு கடுமையான வீழ்ச்சிகள், விமர்சனங்களுடன் - புலிகள் இன்னும் தாக்குப்பிடிப்பதற்கு சிங்களப்பேரினவாதம் மட்டுமே காரணம் என்பது புரியவில்லையா தோழரே? உங்களின் வார்த்தைகளில் கூறுவதால் புலிகளின் பாசிஸத்தை உடைத்து அவர்களின் இருப்பை இல்லாமற்செய்ய….. மிக எளிதான ஒரு வழி இருக்கின்றது. அது சிங்களப்பேரினவாதத்தை தமிழர்களையும் தனது மக்களாய் ஏற்றுக்கொள்ளச்செய்வது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை சிங்கள அரசு வழங்கும்போது மக்களே புலிகளை இல்லாமற்செய்து சிங்கள அரசோடு இணைந்துவிடுவார்கள். இந்த எளிய புரிதல் கூட இல்லாமல் தோழரே உங்களைப்போன்றவர்கள் வர்க்கப்புரட்சிக்கனவுகள் பேசிக்கொண்டிருப்பததால் என்ன பயன்? புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தமிழரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு இயக்கம் உருவாகும். அது வரலாற்று நியதி.

பேரினவாதம் தமிழருக்கு எல்லா இடத்திலையும் அடிக்கும்போது ஏன் இன்னும் கொழும்பில் கைவைக்கவில்லை என்பதற்கும் உந்தப் பெருங்கதையாடலில் வரும் உலகமயமாதல்தான் காரணம். கொழும்பில் தமிழருக்கு கைவைத்தால், வெளிநாட்டு தூதரங்களுக்குத் தெரிந்துவிடும் வெளிநாட்டு பத்திரிகைகள் பெரிதாக்கிவிடும் எல்லோ. பிறகு கடனுதவி என்று சிங்கள அரசுக்கு -weapons வாங்கக்கொடுக்கின்ற பிச்சைக்காசை- எங்கடை பிக் பிரதர்ஸ் எல்லோரும் கொடுக்கமாட்டினம் எல்லோ… தலைவா தலைவா! சித்தாந்தப் பெருங்கதையாடல்களை நிறுவமுன்னர் யதார்த்தச் சூழ்நிலைகளையும் ‘ஞானக்கண்’ணாலாவது பார்க்குக.

…..ஆக இவ்வாறாக பின்நவீனத்துவம் -ஒரு பிரதியை- கட்டவிழ்ப்பும் சிறுகதையாடலும் நக்கலும் நையாண்டியுமாய் விரும்பிய எதையும் செய்யும் சுதந்திரத்தை தருகின்றது என்க.

(4)
பின்நவீனத்துவம் பன்மைத்தன்மையை முக்கியமாய் வலியுறுத்துகின்றது. எல்லோருடைய தனித்துவங்களும் இருப்பும், இயல்பாய் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாசிக்கும் உங்களுக்கு இன்னும் குழப்பம் கூடலாம் அல்லது இது தனியொருவனின் புலம்பல் என்று கூடத்தோன்றலாம். ஆனால் பின்நவீனத்துவம் அந்த தனியொருவனி/ளின் புலம்பலைக்கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றது. பிறகு அதை மறுவாசிப்பு செய்யச் சொல்கின்றது. அதிகாரத்தின் குறிப்புகள் இருந்தால் அரசியல் நீக்கம் செய்து மீள் அரசியலை கட்டியமைக்கக்கோருகின்றது.

நான் வாசித்தவளவில் பெரியாரை தமிழ்ச்சூழலின் மிகச்சிறந்த பின் நவீனத்துவவாதியாகச் சொல்லமுடியும் (அதாவது தத்துவம் என்றரீதியில் பின்நவீனத்துவத்தை அணுகி அதனால் பின்நவீனத்துவவாதி என்று கூறவரவில்லை, அப்படியெதுவும் பின்நவீனத்துவத்தில் இல்லை). பெரியார் எல்லாவற்றை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார். பலவற்றை மறுவாசிப்பு செய்வதற்கான புள்ளிகளைத் தமிழ்ச்சூழலில் ஆரம்பித்துவைத்தவரும் அவரே. உதாரணத்திற்கு ‘தமிழ் ஒரு நீசபாசை’ என்று பெரியார் கூறியதற்கு பெரியாரிய எதிரிகள பலவித வியாக்கியானங்களை செய்வதை (வலைப்பதிவிலும்தான்) காண்கின்றோம். பெரியார் நீசபாசை என்று கூறியது தமிழ்மொழி தன்னளவில் புராணங்களையும், இதிகாசங்களையும், வேதங்களையும் போற்றிக்கொண்டிருப்பதோடு, அதனூடாக தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை இன்னும் ஒடுக்கிக்கொண்டிருக்கின்றது என்ற நோக்கிலேதான். ஆகவே தமிழ்மொழியில் உள்ளவற்றை மறுவாசிப்பு செய்து மீள் அரசியலாக்கம் செய்யத்தான் பெரியார் இதன்மூலம் கூறவிரும்பினார் என்று
பின்நவீனத்தினூடு வாசிப்புச் செய்யலாம்.

இறுதியாய் ஒரு எளிய பின்நவீனத்துவ (?) உதாரணத்தைக் கூறி முடிக்கின்றேன். கனடா குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் இது ஒரு பல்கலாசார நாடு (multicultural country) என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு சமூகமும் தனது மொழி, கலாசாரம் போன்றவற்றோடு இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. சிலவேளைகளில் இவற்றைப்பேணக்கூட நிதி உதவி செய்கின்றது. அந்தவகையில் பன்மைத்தன்மையை வரவேற்கின்றது என்று வரவேற்கலாம். ஆனால் அதேசமயம் இங்கிருந்த பூர்வீகக்குடிகளுக்கு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற சிறுகதையாடலின் மூலம் அரசின் இன்னொருமுகத்தையும் நாம் கட்டவிழ்க்கலாம். இவ்வாறான சிறுகதையாடல்களின் மூலம் விவாதத்தை உருவாக்கி கனடிய அரசின் கொள்கைகளை மீள் அரசியலாக்கம் செய்யும் நிர்ப்பந்தத்தை கனடிய மக்கள் கொடுக்கலாம்.

(பின்-நவீனத்துவம் குறித்து எனது அரைகுறையான புரிதல்களோடு எழுதப்போகின்றேன் - என்னை உடைபதற்கு பெரும் ஆளுமைகள் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற என் ‘பெரும்பயத்தை’ முன்வைத்தபோது, ‘எதையென்றாலும் உனக்குச்சரியென்றுபடுவதை எழுது என்று உற்சாகப்படுத்திய’ - என்னுடடைய பல ‘பெருங்கதையாடலகளை’ தனது சிறுகதையாடல்களால் கட்டவிழ்க்கும்- பிரிய தோழிக்கு)

(Feb/07)

December 29, 2006

பெருந்தலைகள் உருட்டும் ஆட்டத்தில்….

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 11:55 am

‘”இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாரா?” என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள். அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பக்ஷம் என்னதாக இருக்கும்.’
(வெ. சாவின் இக்கட்டுரையை விரிவாக வாசிக்க….)

வெங்கட் சாமிநாதனின் முன்னுரையை வாசித்தபோது ‘அடியேனையும்’ இந்த முன்னுரையில் குறிப்பிடுகின்றாரோ என்ற ஐயம்வர ப்ளாஷ்பாக்கை சுழலவிட்டேன் (எனது கட்டுரையைக் கீழே தந்திருக்கின்றேன்). 2004ல் இயல்விருதுக்காய் வெ. சா ரொரண்டோ வந்தசமயம், இதுவரை ஈழத்தமிழ் படைப்புக்கள் குறித்து எதையும் எழுதவில்லை என்ற கேள்வியை நான் நேரடியாக கேட்டதாய் நினைவினில்லை. ‘அணங்கு’ நிகழ்வு பற்றித்தான் ஒரேயொரு கேள்வியை அவரிடம் நேரடியாக கேட்டிருக்கின்றேன். மேலும் தளம்பாத நிறைகுடம் என்று வெ.சாவினால் விபரிக்கப்பட்ட நண்பர்தான், ‘நீர் கேட்ட கேள்வி நியாயந்தான் இன்னும் விரிவாக கேட்கவேண்டும்’ என்று கேள்விகளின் பின்பான நேரத்தில் -இன்னும் கேளும் என்று- உசுப்பிவிட முயன்றவர். எனினும் உந்த உசுப்பலுக்கு எல்லாம் நான் மயங்கமாட்டேன் என்று வாங்கவேண்டிய புத்தகங்களைத் தேடியெடுக்கப் போய்விட்டேன் என்பது வேறுவிடயம்.

அந்தக் கூட்டத்திற்கு போனபோது வெ.சா, பா.அகிலன், சனாதனன், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் படைப்புக்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றார் என்ற புரிதலோடே சென்றிருந்தேன். எனது ஆதங்கம், அவருக்குப் பரீட்சயமான ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து அந்தக்கூட்டத்தில் பேசவில்லை என்பதாக இருந்தது என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்.

‘நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு, புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் ‘கருஞ்சுழி’ எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனுன், மு.ராமசாமியைப் பற்றி உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).’

என்று வேறொரு வாசிப்பை முன்வைத்துக் கூறியதை இதுதான் சந்தர்ப்பம் என்று -வெ.சாவின் ‘சாதிப்பின்புலமும் காரணமாயிருக்கலாம்’ என்ற ஒற்றை வசனத்தை வைத்து- ஜெயமோகனும் என்னை வெருட்டும் ஆட்டத்தில் களமிறங்கியிருந்தார் (பிறகு விவாதம் வேறு திசையில் சென்றததால் அந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு நான் மன்னிப்பு கேட்டு நீக்கவும் செய்திருந்ததாயும் நினைவு). ஆனால் இற்றளவும் வெ.சாமிநாதன் தனது சாதி அடையாளங்களை மறந்து/மறுத்து வந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன். இங்கே வரும் ‘விளம்பரம்’ என்ற சஞ்சிகையில் வெ.சா அவ்வப்போது பத்திகள் எழுதி வருகின்றவர். சில மாதங்களுக்கு முன் தலித் இயக்கங்கள், திருமாவளவன், கிருஸ்ணசாமி போன்றோரை ‘வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ தனது உயர்சாதி விமர்சனப்பார்வையால் நுட்பமாய் கீழ்நிலைக்கு தள்ளியிருந்தவர். மேலே தரப்பட்ட கட்டுரையில் கூட ஈழம் போன பெரியாரைப் பற்றிய வெ.சாவின் குறிப்புக்களிருந்து அந்த ஆதிக்கப்பார்வையை அறிந்துகொள்ளலாம். இன்னவும் பெரியார் விவாதித்த பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற வித்தியாசத்தைக் கூட பிரித்துபார்க்கமுடியாமல் ஏதோ எல்லா பார்ப்பனர்களையும் பெரியார் நிராகரித்தார் என்று குழந்தை போல கூறிக்கொண்டிருப்பது வெ.சா நெருங்கி நிற்கும் அரசியல் புள்ளியை அறிந்துகொள்ள இன்னும் உதவும். ஈழத்திலிருந்து வரும் எவரும் பெரியாரின் பார்ப்பான்/பார்ப்பனியம் என்ற உரையாடலை வெள்ளாளன்/ வெள்ளாள ஆதிக்கம் என்ற புள்ளிகளில் இணைத்து பார்க்க முடியும், ஒரு அமெரிக்க கறுப்பினத்தவனின் வாழ்க்கையை தலித் தன் வாழ்க்கையோடு ஒத்திசையச் செய்வது மாதிரி. மேலும் புலம்பெயர்ந்தவர்கள் பாஸிசக் கரங்களுக்கு எதிராக எழுதுகின்றார்கள் என்று கூறுகின்ற வெ.சாவிற்கு தமிழ்நாட்டின் தலித் எழுத்துக்கள் என்னவாய் தெரிகின்றதாம்? அவரது கண்களுக்கு சினிமா வெறி கவிதைகள் மட்டுமே தெரிகின்றது. அதிகார மையங்கள் சாதி ஒடுக்குமுறையாளர்கள் போன்ற பாஸிசக்கரங்களுக்கு எதிராய் தமிழகத்து தலித்துக்கள், இடதுசாரிகள் நிறையவே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெ.சாவிற்கு யாராவது நினைவுபடுத்தினால் நல்லது. ஆகக்குறைந்து இதைப் பிரசுரித்த ‘முன்னாள் இடதுசாரிகளான’ திண்ணை ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்தவர்களாவது வெ.சாவின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கலாம்.

வெ.சாமிநாதனுக்கு குறிப்பு என்று எழுதியதுபோல அண்மையில் சா.கந்தசாமி ரொரண்டோ வந்தபோதும் அதுகுறித்து சிலவற்றை எழுத விரும்பியிருந்தேன். எனினும் ஏற்கனவே எதையோ எழுதப்போய் அது பெரும் விவாதமாய் நீட்சியடைந்து என் தலையெல்லாம் பெருந்தலைகளால் உருட்டப்பட்டதுபோல இதற்கும் நேர்ந்தால், எனது அஸின், பாவனா கனவுகளுக்கு என்னவாவது என்ற கவலையில் அமைதியாகிவிட்டேன் என்பதை ஒரு முக்கியமில்லாத குறிப்பாய் பதிவுசெய்துவிடுகின்றேன்.

வெ.சாவை முன்வைத்து நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிய இந்தப்ப்க்கத்திற்குச் சென்று வாசிக்கலாம்.

வெங்கட்சாமிநாதனுடன் ஒரு (வெற்று) மாலைப்பொழுது!
~ டிசே தமிழன்
-

எப்போதுமே இலக்கியக்கூட்டங்கள் வறட்சியாக இருக்கின்றபோதும், நேரங்கிடைக்கும்போதெல்லாம் இப்படியான கூட்டங்களிற்கு போகாமல் இருக்க மனம்விடுவதில்லை. இப்படியான ஒரு மனநிலையுடந்தான் வெங்கட்சாமிநாதனுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். போனதற்கு இன்னொரு காரணம், நிரம்ப புதுப்புத்தகங்கள் வாங்கலாமென்பது கூடத்தான்(எல்லாப்புத்தங்களையும் வாங்கிடவேண்டும் என்ற ஆசை ஏன் ஓர்போதும் நிறைவேறுவதில்லை? ) ஒவ்வொரு முறையும் தமிழகத்திலிருந்து இப்படியானவர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி என்ன மதிப்பீட்டை வைத்திருப்பார்கள் என்ற curiosity எப்போதும் என் மனதில் அலைபாய்ந்தபடியிருக்கும். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை வாசிக்க வசதிகள், resources (வளங்கள்?) இல்லாதபோதும், இப்படி ஒரு புலம்பெயர்பயணம் வரும்போது, அங்கேயிருப்பவர்கள் ஏதாவது இவைபற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம் home work செய்துவிட்டு விமானம் ஏறுவார்கள் என்னும் நம்பிக்கையை எவரும் இதுவரை பூர்த்திசெய்ததில்லை. அதற்கு விதிவிலக்குமல்ல வெ.சாமியும்.

ஒர் அறிமுகமும், அவரது பொழிப்புரையும் முடிய, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடுவோம் என்று அழைப்பு விடுத்தாலும், வெ.சாமியிற்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு கேள்வியிற்கும் பதில்களை கொஞ்சம் நக்கலும் நளினமாயும் வெட்டிப்பேசியபடி இருந்தார். அவரில் இரசித்த இரண்டு விடயங்கள், தனது கருத்தை மற்றவர்கள் ஓமோம் என்று சொல்லி தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை மற்றது நாடகங்கள் பற்றிய அவரது ஆழந்த அனுபவங்கள்/அறிவு. புரிசை தம்பிரான் மீது அவருக்கு இருக்கும் மதிப்பு அவரது பேச்சிடையே தெளிவாய்த்தெரிந்தது. ஆனால் ‘கருஞ்சுழி’ எழுதிய ஆறுமுகத்தையோ, ந.முத்துச்சாமியையோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று தமிழ்நாட்டில் அநேகர் foundations மூலம் fund எடுத்து எல்லாக்கலைகளையும் அழித்தபடியிருக்கிறாகள் என்று அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது போலத்தான் இருக்கிறது (கிட்டத்தட்ட இதேகருத்தைத்தான், முருகேசபாண்டியனும், மு.ராமசாமியைப் பற்றி ‘உயிர்மையில் எழுதும்போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு). வெ.சாமியின் ஒரு கருத்து சற்று நெருடலாயிருந்தது. கூத்தின் ஆழமான மரபிலிருந்து வரும் ஒருவர் இன்னொரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது (அதிகம் படிக்காத, கூத்துக்கலையின் பின்னணியிலிருந்து வருபவர் நவீன நாடகங்களிற்கு செல்வதை -அவர் விரும்பித்தான் போகிறார் என்றால்- ஏற்றுக்கொள்ளாததில் வெ.சாமியின் சாதியபின்புலம் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்).

தன்னைப் பாதித்ததைப் பற்றி மட்டும்தான் எழுதுவேன். சரியான விதத்தில் எழுதப்பட்டிருந்தால் மற்றையோரைப் போய்ச்சேரட்டும், இல்லாவிட்டால் காற்றில் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை என்று வெ.சாமி சொன்னதில் ஒரு படைப்பாளியின் கம்பீரத்தைப்பார்க்கமுடிந்தது. ஈழத்தமிழ் இலக்கியங்கள் ஏன் அதிகம் தமிழகத்தில் பேசப்படவில்லை என்பதற்கு, வெ.சாமி அது arrogance என்று சொல்லப்போக இன்னொருவர் roughயாய் இருக்கிறது ignorance என்று மாற்றிச்சொல்லுங்கள் என்று மன்றாட இறுதியில் எந்த வார்த்தையில் சமரசம் செய்தார்கள் என்பதை யானறியேன் பராபரமே. ஆனால், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுப்பிய நுட்பமான கேள்வியை, ‘நீங்கள் கூட ஈழத்தமிழர் இலக்கியம் பற்றி அந்தக்காலத்தில் கூட எழுதவில்லை’ என்பதை வெ.சாமி சமார்த்தியமாய்த் தவிர்த்துவிட்டார். அது சரி, நீங்களெல்லாம் தமிழகத்து ‘இலக்கிய ஜம்பவான்களின்’ திருவாய்மொழி மலர்ந்து அங்கீகாரம் வரவேண்டும் ஏன் எதிர்பார்க்கிறியள் என்று கூட்டத்திலிருந்து இன்னொருவர் வீசிய கேள்வியில் நிரம்ப உண்மையிருக்கிறதுதானே.

வெ.சாமிநாதன், இன்றைய எழுத்தாளர்களில், யூமாவாசுகி, பெருமாள்முருகன், இமையம் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கியமாய் யூமாவாசுகியின் ‘ரத்த உறவை’ எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சிலாகித்துச் சொன்னார். பெண்ணிய எழுத்துக்கள் பற்றியும் கேள்விகள் எழும்பின. வெ.சாமியிற்கு பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுதுவதில் எல்லாம் உடன்பாடிலை. Rice cooker ஆவி (நல்லவேளை பிரமீளின் ஆவியில்லை) மாதிரி எல்லாம் சீறிபாய்ந்து பின் தானாகவே அனைத்தும் அடங்கிவிடும் என்றார். சரி நீங்கள் பெண்கள் எல்லாம் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆளுக்கொரு கருத்துக்களை சொல்கிறியள், ஜே.பி. சாணக்யா போன்றவர்கள் எழுதும்போது எந்த பேச்சுமூச்சையும் காணவில்லையே என்று கேட்க, அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் அவற்றையெல்லாம் புறத்தள்ளுங்கள் என்றார். ஜெயமோகனின் எழுத்துக்களில் கூட இப்படியான சித்தரிப்புக்கள் எல்லாம் இருக்கிறதே என்று யாரோ கூற, அப்படி என்றால் அவற்றையும் வாசிக்காமல் தூக்கியெறியுங்கள் என்று கொஞ்சம் உரத்தகுரலில் கூறினார். (ஜெயமோகன் கவனிக்க, நீங்கள் வெ.சாமி முன்னட்டையோடு ஒரு சிறப்பிதழே சொல்புதிதில் வெளியிட்டும் அவர் உங்கள் கட்சி இல்லையாம். இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று வெ.சாமி தமிழ்நாட்டை மிதிக்கும்போது சொன்னால், record செய்த tape யாரிடமாவது இருக்கும் வாங்கி அனுப்பிவிடுகிறேன். ஆனால் பதிவுக்கட்டணம் இலவசமல்ல.

இபபடி இந்தக்கூட்டத்திலும், இன்னொரு பிம்பம் உடைந்துபோன அலுப்போடு வீடு வந்துசேர, நான் வாங்கிய புத்தகங்களின் பக்கங்களிலிருந்து வேறொரு உலகம் விரிவுகொள்கிறது. அவை ஒரு இலக்கியக்கூட்டத்தைவிடவும், ஒரு படைப்பாளியை விடவும் என்னுடன் அதிகம் நேசம் கொள்கின்றன.

(http://www.geotamil.com/pathivukal/djtonvenkatsaminathan_june2004.html)

எதிர்வினை!
வெ.சா. பற்றி தமிழனின் குறிப்பு…!

- ஜெயமோகன் -

எதிராளியின் வாதங்களை தங்களுக்கு சாதகமாக திரித்துக் கொள்வதை ஓர் உத்தியாக இடதுசாரிகளில் ஒரு சாரார் கடைப்பிடிப்பதுண்டு. அவ்வுத்தி மூலமே தோற்கடிக்கப்பட்ட மனிதர் வெசா. அதே உத்தி தொடர்வதையே தமிழனின் குறிப்புகள் காட்டுகின்றன. ஒரு பெரிய சிந்தனையாளாராக மலர்ந்திருக்க வேண்டிய வெ சாவை குறுக்கியது எதிரிகளின் இந்த உத்தியே. உதாரணாமாக வெசா ‘உள்வட்ட சித்தாந்தம்’ ஒன்றைக் கொண்டுவந்தார். அதாவது இலக்கியம் என்பது அனைவருக்கும் உரிய ஒன்றல்ல, அது அறிவார்ந்த தெரிவு ரசனை தேடல் கொண்ட சிறு உள்வடத்துக்கு உரியது, அந்த உள்வட்டமே இலக்கியத்தின் சாராம்சத்தை வெளியே கொண்டுசெல்லும் ஆகவே ‘மக்கள் இலக்கியம்’ என்று ஒன்று இருக்க முடியாது என்றார் அவர். இது மாத்யூ ஆர்னால்ட் காலம் முதல் உள்ள ஒரு முக்கியமான தரப்பு. இதில் எந்த வர்க்க சாதிய அடையாளமும் அவரால் தரப்படவில்லை. இதை பிராமணார்களுக்கு மட்டுமே இலக்கியம் தேவை என்று அவர் சொல்வதாக திரித்து பதினைந்துவருடம் இங்கே பிரச்சாரம் நடைபெற்றது. இப்போதும் நடக்கிறது. நான் என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். வெசா மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்ல முயன்று தன் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டார். தமிழனின் குறிப்பே உதாரணம். வெசா என்ன சொல்கிறார்? ஈழத்தமிழர் கூப்பிட்டார்கள் என்பதற்காக தயாரித்துக் கொண்டுவருபவன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்கிறார். தமிழன் எப்படி திரிக்கிறார்? தமிழ்நாட்டு விமரிசகன் ஈழ எழுத்தைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று வெ சா சொல்கிறார் என்ற தொனியில் இங்கேதான் சாதிவெறி போன்ற உள்நோக்கங்கள் உள்ளன. இதுவே தமிழில் உயரிய விவாதம் நிகழாமல் செய்து சிந்தனையை மழுங்கடிக்கிறது.

(http://www.geotamil.com/pathivukal/jeyamoganondj2.html)

September 26, 2006

தமிழியல் மாநாட்டை முன்வைத்து…

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 11:23 am

-அங்கும் இங்குமாய் சில (தனிப்பட்ட) குறிப்புக்கள்-

(1)
சென்ற வெள்ளியிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களாய் ரொரண்டோவில் தமிழியல்: திணையும் தளமும் நிலையும் என்ற தலைப்பில் மாநாடு நடந்தேறியது. மூன்றாம் நாள் பிற்பகல் அமர்வில், ஈழத்து இலக்கியம்: படைப்பின் கவித்துவம், திறனாய்வின் நெறிமுறைகள், வெளியீட்டின் தொழில்நுட்பம் என்ற பிற்பகல் அமர்வில் நா.சுப்பிரமணியன், எம்.கண்ணன், வ.கீதா, தேவகாந்தன் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

பேராசிரியர் நா.சுப்பிரமணியன், ஈழத்து படைப்புக்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை முன்வைத்திருந்தாலும், ஈழத்து/புலம்பெயர் இலக்கியம் உலகத்தரமாய் உயர்ந்து நிற்கின்றது என்று கூறியது மிகவும் வியப்பாயிருந்தது. ஈழத்து இலக்கியம் 80களிலும், 90களிலும் தீவிரமாய் இயங்கிய தளத்திலிருந்து மிகவும் பின் தங்கி சோர்ந்த நிலையில் காணப்படுவதை இன்று தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் எந்தப்படைபாளியும் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகின்றேன். அதிலும் 2000களில் எஸ்.பொ முன்வைத்த கோசமான புலம்பெயர் இலக்கியந்தான் இனி தமிழ் இலக்கியத்துக்கு தலைமையேற்கும் என்ற கூற்று ஒரு நகைச்சுவையாகி நீர்த்துப்போய்விட்ட இன்றைய காலகட்டத்தில் இன்னும் இந்தப் பேராசிரியர் இப்படியான கருத்துக்களை முன்வைப்பது அபத்தமாய்த்தான் இருக்கின்றது. ஈழத்தில் இஸ்லாமியர்களின் படைப்புக்கள் தனித்துவமாய் துலங்குகின்றது என்று பேராசிரியர் வைத்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும், சோலைக்கிளியினதும், என்.ஆத்மாவினதும் கவிதைகள் ஒரு தனி முஸ்லிம் தேசியத்தை வேண்டி நிற்கின்றன என்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. முஸ்லிம்களை ஒரு தனித்தேசியமாக ஏற்றுக்கொள்வதில் என்னைப்பொறுத்தவரையில் மறுப்பு இல்லாதபோதும், சோலைக்கிளியின் அனேகமான தொகுப்புக்களை வாசித்தவளவில் அவரது கவிதைகள் தனித்தேசியத்தை வேண்டிப்பாடும் தொனியை எங்கேயும் காணவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
(ஆனால் அவரது மூன்றாம் மனிதன் நேர்காணலில் அவரது வேறொரு கோணம் வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ளவேண்டும்).

இவற்றுக்கப்பால் என்னை வசீகரித்த உரைகள் எம்.கண்ணனினதும், வ.கீதாவினதும் ஆகும். எம்.கண்ணன் ஆரம்பத்திலேயே, யாழ் விரிவுரையாளர் சனாதனனுக்கு கனடீய தூதகரத்தால் விஸா மறுக்கப்பட்டதற்கு எதிராக எந்தவொரு சின்ன முணுமுணுப்பைக் கூட மூன்று நாள்களாய் நடந்த அரங்கில் எந்த ஒரு அறிவுஜீவியாலோ பிறராலோ வைக்கப்படவில்லை என்பது தனக்கு மிகுந்த விசனத்தைத் தருவதாய் குறிப்பிட்டுத்தான் தனது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழக-ஈழ இலக்கிய உறவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன பற்றி மிக அருமையாக ஒரு உரையை வழங்கியிருந்தார்.

1983 கலவரத்திற்கு முன், அவ்வவ்போது ஈழத்து படைப்பிலக்கியங்கள் தமிழகத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்தபோது அது ஒரு வெளிப்புறமாகவே வாசிக்கப்பட்டு தொடர்ந்து ஒருவித இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்திருக்கின்றது என்றும், இன்னும் 1983ம் ஆண்டின் கலவரத்தின் பின் ஈழத்து அரசியல் விளங்கிக்கொள்ளப்பட்டவளவுக்கு ஈழ இலக்கியம் நேர்மையான முறையில் அணுகப்படவில்லை என்பதை தெளிவாக தனது பேச்சில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். 90களின் பின் புலம்பெயர் சூழலால் வருகின்ற சந்தைப்படுத்தல் முறையினால் தமிழக பதிப்பகங்கள் புலம்பெயர் இலக்கியவாதிகளை அரவணைத்துக்கொள்ள, ஈழத்து/புலம்பெயர் இலக்கியவாதிகளும் அவர்களும் வலையில் விழுந்துகொண்டிருப்பது தனக்கு விசனம் அளிப்பதாய் கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ந்தும் ஈழத்துப்படைப்புக்கள், தமிழகத்தில் ஒரு சமனற்ற முறையில் தொடர்ந்து வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும்படுகின்றது என்பது ஒரு முக்கிய அவதானமாகும். ஈழத்து நிலப்பரப்பை, சூழ்நிலையை ஒரளவுக்காவது புரிந்துகொள்ளாமல், அந்தப்படைப்புக்களை எழுந்தமானமாய் வாசித்து விளங்கிக்கொள்ளமுடியாது என்று கண்ணன் கூறி சு.வில்வரத்தினத்தின் இரண்டு கவிதை வரிகளை உதாரணமாய் கூறினார். ஒரு கவிதையில் முடிகின்ற, ‘எனக்குள் ஆனையிறவு என்ற சொற்றொடரையும், ‘கொக்கட்டிச் சொலை காற்றில் சொல்லியது என்ன?’ என்று தொடங்குகின்றன இன்னொரு கவிதையையும் அதன் பின்னணியை ஒரளவாவது விளங்கிக்கொள்ளாமல் நேர்மையான வாசிப்புச் சாத்தியங்கள் தமிழ்நாட்டில் நடைபெற சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தினார். மேலும் ஆங்கில இலக்கியத்தையோ, பிரெஞ்சு இலக்கியத்தையோ அதன் பின்னணியை கொஞ்சமாவது விளங்கிக்கொண்டு வாசிப்புக்களை செய்கின்ற தமிழக இலக்கியவாதிகள் ஈழத்து படைப்புக்களுக்கு அவ்வாறு செய்வதற்கு அக்கறைகொள்வதில்லை என்று கண்ணன் கூறியது என்னளவில் முக்கியமாயிருந்தது.

கண்ணன் கூறிய இன்னொரு புள்ளிதான் முக்கியமானது. ஒவ்வொரு ஈழ/புலம்பெயர் படைப்பாளிகள் தாங்கள் தமிழகத்தில் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒவ்வொரு படைப்பாளிக்கும் அறம் சார்ந்த விடயம் இருக்கின்றது என்றும் அதிலிருந்து எந்த படைப்பாளியும் இலகுவில் தப்பிவிடமுடியாது என்று கூறி காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களின் அரசியல் பின்னணிகளை மிக விரிவாக எடுத்துரைத்திருந்தார். காலச்சுவடுக்கும் தினமலருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றதெனவும், காலச்சுவடுக்கு விளம்பரங்கள் வழங்கி ஆதரவளிக்கும் சிறிராம் சிட்ஸ், கிருஸ்ணா ஸ்வீட்ஸ் போன்றவை தீவீர ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்றும் இந்தப்பின்னணி தெரிந்துகொண்டு அரசியல் உள்ளுணர்வுடன் இயங்கவேண்டிய புலம்பெயர் படைப்பாளிகள் காலச்சுவடினூடாக தங்கள் படைப்புக்களை கொண்டுவருவது நியாயமாகாது எனவும் கூறியிருந்தார். அதேபோன்று தமிழினி வசந்தகுமாரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றும், தீவிர ஆர்.எஸ்.எஸ்காரான அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார் என்றும், அந்தவளவில் தமிழினியால் தொகுப்பு கொண்டுவந்த அ.முத்துலிங்கமும், காலச்சுவட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சேரனும் கேள்விகளுக்கு அப்பால் தப்பமுடியாது என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

வ.கீதா, ஈழத்துப்படைப்புக்களை மூன்றுவிதமான எல்லைகளுக்குள் பிரித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். முதலாவது பிரிவாய் நனவிடைதோயும் நினைவுகளுக்குள் ஈழத்துப் படைப்புக்கள் இருக்கின்றன எனவும், மற்றொரு வகையாய் தனது தமிழ் அடையாளத்தை ஈழத்துக்குள்ளும் புலம்பெயர் தேசத்திலும் தேடிக்கொண்டிருப்பதாயும், மூன்றாவது பிரிவாய் போராட்டம் குறித்ததுமான படைப்புக்களுமாய் இருக்கின்றன எனவும் வகைப்படுத்தியிருந்தார். ஈழத்து/புலம்பெயர் படைப்புக்களை கண்ணனைப் போல வ.கீதாவும் ஆர்வத்துடன் வாசித்து வருகின்றார்ர் என்பதை அவரது பேச்சினூடாக அறியமுடிந்தது. தமிழ் அடையாளம் என்பது தேவையில்லை என்று 90 களில் பேசத்தொடங்கிய ராஜ் கெளதமன் பிற்காலத்தில் பல்டியடிக்கத் தொடங்கி, புலமைப்பித்தனின் சாதித்திமிரையும், பாரதியின் மறைந்துகிடக்கும் இந்துத்துவம் குறித்தும் கேள்விகள் எதுவும் எழுப்பாது ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படையாக எடுத்துக்கூறியிருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள்/ஈழத்து அரசியல்/இலக்கியம் குறித்து இரண்டு விதமான போக்குகள் (புலிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று ஒருபுறமும், இன்னொரு புறம் புலிகள் தவறே செய்யாதவர்கள் என்றும்) மட்டுமே காணப்படுவதாயும், ஈழத்து அரசியலால் நேரடியாகப் பாதிக்கப்படாத தமிழகத்தவர்கள் ஏன் ஒரு நேர்மையான விமர்சனத்தை முன்வைக்க அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், பாலஸ்தீனிய அறிவுஜீவி எட்வேர்ட் சயீட்டைப் போல ஏன் நம்மால் இருக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் (தமிழகத்துக்கு மட்டுமில்லாது புலம்பெயர் தேசத்தில் உள்ள ஈழத்தமிழரும் இது குறித்து கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம்; அவசியமானதும் கூட). தொடர்ந்து ஈழத்து/புலம்பெயர் விமர்சனங்கள் உணர்ச்சி நிலையில் நின்று கொண்டிருப்பதால் எதையும் சாதித்துவிடப்போவதில்லை எனவும் அதைத் தாண்டி அறிவுபூர்வமான தளத்துக்கு நகரும்போது மட்டுமே உருப்படியான காரியங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளக்கூடியது. மேலும் பாலஸ்தீனியப் படைப்புக்களுக்கு நிகராய் வீரியத்துடன் யுத்த அவதிகளினூடாக வெளிவந்திருக்கும் சாத்தியமுள்ள ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் ஏன் நனவிடைதோய்தல்களுடன் மட்டும் தேங்கிப்போயிருக்கின்றன என்ற கேள்வியை, நமது ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் அனைவரும் தமக்குள் எழுப்புவது அவசியமாகின்றது. எதிரி, துரோகி என்ற வார்த்தைப் பிரயோகங்களைத்தாண்டி ஈழத்து/புலம்பெயர் விமர்சன முறைகள் நேர்மையான நடுநிலையான நோக்கில் நகரவேண்டும் என்று கீதா கூறியபோது என்னாலும் ஒத்துப் போகமுடிந்தது.

(

(2)
அண்மைக்காலமாய் மற்ற ஊடகங்களில் மட்டுமில்லாது வலைப்பதிவுகளிலும், புலிகளின் தரப்பு துரோகிகள் என்று கூறினால் புலியெதிர்ப்புச் செய்பவர்கள் பாசிஸ்ட் என்று நொய்ந்துபோன வார்த்தைப்போர் செய்துகொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புலியெதிர்ப்பாளர்கள்/ சனநாயகவாதிகள் பற்றிய நம்பிக்கை பொய்த்துபோனது சென்ற ஆண்டு நடந்த சிவராமின் படுகொலையை அடுத்துத்தான். எனக்குத் தெரிந்தநடுநிலை நண்பர்களில் பாதிப்பேர் இந்தப்படுகொலையை அறிந்து, முதலில் கூறியது சிவராம் புலியின் ஆள் ஆகவே அவரைப் போட்டுத்தள்ளியது பெரிய விடயமில்லை (இதேயேதான் புலிகளின் ஆதரவாளர்கள் துரோகிகள் என்று பிலாக்கணம் பாடும்போது இந்த நண்பர்களுக்கு கோபம் வருவது வேறுவிடயம்). மிச்ச நடுநிலைவாதிகள் கூறியது என்னவென்றால், சிவராம் முந்தி புளொட்டில் இருந்தபோது யாரையோ இரண்டு பேரை போட்டுத்தள்ளுவதற்கு உடந்தையாக இருந்தார் ஆகவே இந்தக்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றார்கள். அட நாசமாய்போனவர்களே ஒரு கொலை நடந்தால் முதலில் அனைத்து விமர்சனங்களைத்தாண்டி கண்டனத்தைச் சொல்லி முதலில் மனிதாபிமானத்துடன் இருக்க முயற்சி செய்யுங்களடா என்றுதான் மனதில் கூறிக்கொண்டேன். இவ்வாறான அதே காரணங்களைத்தான் புலிகள் மாற்று இயக்கதவர்களை போட்டுத்தள்ளும்போது புலிகளின் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வெளிச்சாயம் மட்டும் இந்த இரண்டு தரப்புக்கு வித்தியாசமே தவிர உள்ளுக்குள் இரண்டு தரப்புக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பது பொதுவானதமிழ் இரத்தம் போலும்.

இப்படி மேலும் சிலவிசயங்களில், புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாது இந்தசனநாயகவாதிகளும் இருக்கின்றார்கள் என்று புரிந்துபோனதன்பின் ஒருவித சலிப்புத்தான் இவர்கள் மீது என்னளவில் வந்தது. மேலும் சிவராம் துவக்கோடு பாதுகாவலர்கள் சகிதம் பிற்காலத்தில் திரிந்தவரும் அல்ல. பேனா ஒன்றை வைத்து எழுதித்தள்ளியதே அவர் செய்த தவறு. இன்னமும் ராஜினி திரணகமவையும், சபாலிங்கத்தையும் போதும் போதும் என்று கிளிப்பிள்ளையாகும் அளவுக்கு விளாசித்தள்ளும்நடுநிலையாளர்கள் இங்கே மட்டும் ஒளிந்துகொள்வதிலுள்ள அரசியல்/விமர்சனப்புள்ளிகள் சுவாரசியம் வாய்ந்தவைதான் (உடனே இப்படிச்சொன்னதால் மேலே சொன்னவர்களின் கொலைகளை ஒத்துக்கொள்கின்றேன் என்று விமர்சனக்கத்திகளுடன் நண்பர்கள் வராதிருக்க இறைவன் இரட்சிப்பாராக).

தனிமனிதராய் மட்டும் இருந்து, வெளிநாடு வந்து சுமுகமாய் வாழ்வதற்கு வசதி இருந்தும் (அல்லது நமது நடுநிலையாளர்களின் வாதத்தின்படி சொல்வதாயிருந்தால், வன்னியில் புலித்தலைமை பொங்கிப்படைக்க வெட்டி ஏப்பமிட்டு எழுதிக்குவிக்க வசதியிருந்தும்) தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான் என்றால் அவனின் மரணத்தை மரியாதை செய்யவேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாற்கூட கேலிக்குரியதாக்கச் செய்யத்தேவையில்லை. அதே போல ஒரு மார்க்சியவாதி, சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. (அடுத்ததாய் பாஸிஸ்ட் பட்டியலில் சிவசேகரம் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன). சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய/அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனித விழுமியங்களின் அள்வீடுகள்தான் என்ன? இவ்வாறான பொழுதுகளில் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு, இவ்வாறான்அறிவுஜீவிகள், ‘சனநாயகவாதிகள் புலிகளுக்குப் பதிலாக களத்தில் நின்றிருந்தால் எங்கள் மக்கள் நிலைதான் என்னவாயிருக்கும்? ஏதோ தன்ரை பாட்டில் இருக்கும் மனிதரை எல்லாம் பாஸிஸ்ட் என்று ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் நிகராய் எழுதிக்குவித்தால், இவர்களின் கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் இன்று புலம்பெயர் சூழலில் இருந்துகொண்டு ஒற்றைவரியாவது எழுதும் சுதந்திரம்கூட என்னைப்போன்றவர்களுக்கு இல்லாது போயிருக்குமோ என்ற அச்சந்தான் எனக்குள் எழுகின்றது.

மேலும் இன்னொரு புள்ளியையும் குறிப்பிடவேண்டும், (என்னால்) பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் விமர்சனத்தத்துவார்த்த கட்டுரைகளை ஒருபோதும் முழுதாய் ஆர்வத்துடன் வாசிக்கமுடிவதில்லை (எனது பலவீனமாயும் இருக்கலாம்). தங்களைத் தீவிர மார்க்சியவாதிகள் என்று பலர் எழுதும்அரசியல் நடுநிலைக்கட்டுரைகளை விட எனக்கு சோபாசக்தி போன்றவர்களின் படைப்புக்கள் தரும் பாதிப்பும் மாற்றமும் அதிகமானது. உதாரணத்துக்காய், சோபாசக்தியின் தேவதை சொன்ன கதையில் வருகின்ற, விலைமாதராய் இருக்கும் பெண், ஒரு வியட்னாமிய போராளிப்பெண்ணின் மகள் என்று முடியும் இடமும், தேசத்துரோகியில் ரணில் விக்கிரமசிங்கவே வேசம்போட்ட ஒரு கடும் இனத்துவவாதி எனவும், அவரோடு புலிகளின் தலைமை நம்பிக்கை கொள்வதை கேலிசெய்வதுமாயும் முடியும் கதையும், அண்மையில் எழுதப்பட்ட ஒரு கதையில் பசியின் கொடுமையைச் சொல்லி இறுதியில் ஒரு (மாற்று) இயக்கத்தவனாய் இருந்து கடைசிச்சோற்றுக்கவளத்தை வாயில் வைக்கமுடியாமல் சினைப்பரடியில் இறந்துபோகின்றவனின் துயரை கசியவிடுகின்ற கதையும் தருகின்ற பாதிப்புக்களை என்னளவில் (தனிப்பட்டவளவில்) பத்துப்பக்கக் கட்டுரைகள் தருவதில்லை. ஜெயமோகனின் கட்டுரைகளின் அளவைப் பார்த்து அந்த மனுசன் எப்போது இரண்டு மூன்று பக்கங்களுக்குள் கட்டுரை எழுதுவார் என்று யோசிப்பதுண்டு. இப்போது அவர் அதிகம் எழுதாது அமைதியாயிருக்கும் காலத்தை நமது மார்க்சிய நண்பர்கள் குத்தகைக்கு எடுத்து எழுதித்தள்ளுகின்றார்கள் போலும். ஜெயமோகன் தனது கட்டுரைகளில் தன்னை எப்படியாவது ஓரிடத்திலாவது பீடத்தில் கொண்டு போய் அமர்த்திவிடுவதுபோல, இந்த மார்க்சிச நண்பர்களும் உலகத்து எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்க மார்க்சிசம் மட்டுமே ஒரே மாற்று மருந்து என்பதைக் குறிப்பிட ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

அண்மையில் கனடாவில் புலிகளைத்தடைசெய்தபோது பலநடுநிலையாளர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்ததாய் கேள்விப்பட்டிருக்கின்றேன் (’தேனீ தளத்தை வாசித்திருந்தால் நிறையத் தெரிந்திருக்கும். ஆனால் நான்நிதர்சனம் போன்ற தீவிர புலி ஆதரவுத்தளங்களை வாசிக்காததுபோல தேனீப்பக்கமும் போகாமல் என் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றேன்). ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளில் பலர் ஒருவிடயத்தை இலகுவாய் மறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். ஈழத்தில் இருக்கும் வரை நாங்கள் எவரையும் கொலைசெய்யவில்லை தும்புக்கட்டையோடும் விளக்குமாற்றுடன் தான் அங்கே இருக்கும்வரை போராடிக்கொண்டிருந்தோம் என்று கூறுவதை நாங்கள்நம்பினாலும் கனடீய அரசாங்கம் நம்பப்போவதில்லை. அவர்களுக்கு எல்லா இயக்கங்களும் புலிகள்தான்;பயங்கரவாதிகள்தான். ஒருவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று அறிந்தார்கள் என்று எந்தக்கேள்விகளும் இல்லாதுநீ பயங்கரவாதி என்று அனுப்பிவிடுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போலும். நான் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வருகின்றது. ஒரு முன்னாள் இயக்கத்தவரை இங்குள்ள உளவு நிறுவனம் அவர் ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று கண்டுபிடித்து விசாரிக்க, இவர் புலிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றேன் என்னை நாடு கடத்தவேண்டாம் என்று கேட்டிக்கின்றார். கனடீய உளவுநிறுவனமும் இவரிடம் வறுகவேண்டியதை வறுகிவிட்டு பிறகு அனாதரவாய் கைவிட்டுவிட அந்த நபர் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார். இன்று புலி என்று ஒருவரை நாடுகடத்தினால் கூட அவருக்கு ஆதரவாய் குரல் எழுப்ப இங்கே குரல்கள் இருப்பதையும் மற்ற இயக்கத்தவர் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாடு கடத்தினால் எந்தக்குரலும் எழும்பாத அவலச்சூழலில்தான் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதை அறியாது - புலிகளைப் பயங்கரவாதிகளாய் அறிவித்துவிட்டார்கள் -என்று நமதுநடுநிலையான நண்பர்கள் குதூகலிப்பது மிகவும் அவலமானது. புலியைத் தடைசெய்ததை உற்சாகமாய் உரையாடிக்கொண்டும்/எழுதிக்கொண்டும் இருக்கும் நமதுநண்பர்களுக்கு (அடிக்கடி கூறும்) சோபாசக்தியின் மேற்கோளான, நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன். ஆனால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன் என்பதை இன்னொருமுறை நினைவூட்டி இப்படியிருந்த்தல் நியாயந்தானா என்று கேட்கவேண்டுமா என்றும் தெரியவில்லை.

இவ்வாறான் ஒரு அரசியல் நிலைமை புலம்பெயர் சூழலில் இருக்கின்றபோதுதான் எனக்கு .கீதா, எம்.கண்ணன் போன்றவர்களின் நேர்மையான கருத்துக்கள் வசீகரிக்கின்றன. துரோகியோ பாஸிஸ்டோ என்றோ பொத்தாம் படையாக விமர்சிக்காமல் ஒரு பொதுநிலைப்பாட்டில் இருந்து நேர்மையாய் கருத்துக்கள் கூறுகின்ற சூழ்நிலை இன்னும் வராதது புலம்பெயர்சூழலின் சாபக்கேடே என்றுதான் கூறவேண்டும்.

இறுதியாய் கேள்விகளுக்கான நேரத்தில், கண்ணன் கூறிய ஒரு விடயத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எம்.கண்ணன், காலச்சுவடு, தமிழினி மீது வைத்த விமர்சனத்தை மறுத்தும், தமிழினி வசந்தகுமார் சு.வில்வரத்தினத்தைவிடவும் அதிகம் கஷ்டப்பட்டவர் எனவும் குறிப்பிட்டகாலம் செல்வம், சு.ராவும் காலச்சுவடு கண்ணனும் ஈழத்தமிழர் விடயங்களில் அக்கறையுள்ளவர்கள் எனவும், தமிழினி வசந்தகுமார் இராஜீவ் காந்தி கொலையுடன் கஷ்டப்பட்டவர் என்று கூறி கண்ணனின் கருத்தை மறுதலித்திருந்தார்.

அப்போது எம். கண்ணன், இத்தகை தரவுகளோடு காலச்சுவடின் பின்னணியை அடுக்கியபின்னும் காலச்சுவடுக்காய் வக்காலத்து வாங்குவதும், தமிழினி வசந்தகுமார் தனது நண்பர் என்றும் வசந்தகுமாரின் வழக்கு குறித்த உள்விவாகரத்து அரசியலை வெளிப்படையாக தன்னால் வைக்கமுடியும் என்றும், எல்லாவற்றையும் மீறி சு.வில்வரத்தினம் என்ற கவிஞர் புங்குடுதீவில் பிறந்து போரில் நிமிர்த்தம் அலைந்துழந்து திருகோணமலை என்று இன்னொரு மூலையில் வாழ்ந்து ட்சூனாமியால் எல்லாம் பாதித்ததை மறந்து/மறுத்து காலச்சுவடுக்காயும், தமிழினிக்காயும் உங்களைப்போன்றவர்கள் வக்காளத்து வாங்குவது தனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கின்றதென வெளிப்படையாகவே கூறினார். உண்மையில் இவ்வாறான ஒருவித உயர்வழிப்பாட்டு நிலையில்தான் இன்னும் பல ஈழத்தவர்கள் தமிழகத்து பதிப்பாளர்களையும், படைப்பாளிகளையும் அளவுக்குமீறி (அது சுந்தர ராமசாமியாய் இருந்தால் என்ன, .மார்க்ஸாய் இருந்தால் என்ன) ஒருவித பீடத்தில் வைத்து வழிபடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனமானது.

இந்தியா தனது அரசியலை ஈழத்தமிழரில் புகுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கி அதன் துயரத்தை இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும், நீங்களே மீண்டும் பின்னணி அரசியல் தெரியாமல் இலக்கிய விடயங்களிலும் தமிழகப்பதிப்பாளர்களுடன் நெருங்குவது குறித்து அவதானமாயிருக்கவேண்டும் அல்லவா? என்று அரசியலில் மட்டுமின்றி இலக்கிய விடயத்திலும் கவனமாய் இருக்கவேண்டுமென கண்ணன் கூறியதை புலம்பெயர்ந்த/ஈழ நண்பர்கள் கவனத்தில் கொள்வார்களா?

 

சி.புஸ்பராஜா

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 10:57 am

(1)
சி.புஸ்பராஜாவுக்கான இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டம் சென்ற சனிக்கிழமை மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. சாம் (அசை) சிவதாசன், சேரன், ‘காலம்’ செல்வம், கரிகாலன், கற்சுறா போன்றோர் தங்கள் நினைவுகளை/கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். சிவதாசன், ‘ஈழப் போராடத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலின் ஊடாக தனக்கு அறிமுகமான புஸ்பராஜாவைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, ‘காலம்’ செல்வம் எக்ஸில் நண்பர்களால் இறுதிக்காலத்தில் புஸ்பராஜா மாறிவிட்டார் என்று ஏதோ இலக்கிய அரசியல் குறித்து தனது பேச்சினிடையே அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தமிழகத்தில் தினமலரில் கூட சி.புஸ்பராஜாவாவின் மரணச்செய்தி வந்தது எவ்வளவு பெரிய விடயம் என்று செல்வம் சற்று பெருமிதப்பட்டமாதிரி–எனக்கு- தோன்றியது. தினமலர் போன்றவை உண்மையான அக்கறையில் புஸ்பராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது ‘வேறு சில காரணங்களுக்காய்’ முக்கியம் கொடுக்கின்றதா என்று செல்வம் ஆறுதலாய் யோசித்துப் பார்த்தால் அவருக்கு நன்மை பயக்கும். அதேபோல் -நானறிந்தவளவில்- இதுவரை புலம்பெயர்ந்த ஈழத்தவர் என்றவகையில் கலைச்செல்வன், உமாகாந்தன் போன்றவர்கள் காலமானபோது கூட முகப்பில் அவர்களின் படங்களைப் பிரசுரிக்காத திண்ணை இணையதளம் ஏன் புஸ்பராஜாவுக்கு மட்டும் முக்கியம் கொடுத்தது என்று அவதானித்தால் ‘ஆழமான அரசியல் புள்ளிகள்’ சிலருக்கு விளங்கக்கூடும்.

செல்வத்துக்கு, எக்ஸிலின் ‘ஒன்றுமறியாய்ப் பெடியங்களோடு’ புஸ்பராஜா பிற்காலத்தில் சேர்ந்து திரிந்தது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லையென்றாலும், புஸ்பராஜா ஆர்வத்துடன் இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்கு இந்தப் புதிய நண்பர்களின் ஊக்கமே காரணம் என்ற யதார்த்தம் புரிந்ததற்காய் அவரைப் பாராட்டத்தான் வேண்டும். சேரனின் படைப்புக்களையோ இன்னபிற விடயங்களையோ விமர்சிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற ‘பலரில்’ ஒருவராய் செல்வமும் இருப்பதை அவரது உரையினூடு அவதானிக்கமுடிந்தது. சேரனின் படைப்புக்களுக்கான இடம் என்றும் தமிழ் இலக்கியத்தில் உண்டு. அதை எவரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு தவிர்க்கவே முடியாது இருந்த கவிதைகளை இப்போதும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதன் அரசியல் ஏன் என்பதும் (எனக்குப்) புரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டளவில் சேரனின் கவிதைகளை தொகுப்பாய் வாசிக்கின்ற, சேரன் ஈழத்தில் கண்டதை விடவும் அதிகம் போரின் கோரத்தைச் சந்தித்த என்னைப் போன்றவர்களுக்கு சேரனின் அரசியல் கவிதைகள் பெரிதாய் எந்தப் பாதிப்பையும் தந்துவிடவில்லை என்பதே உண்மை (சேரன் 90ம் ஆண்டளவிலேயே கனடாவுக்கு இடம்பெயர்ந்தவர்). தான் பேசுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும் எவரோ ஒருவரின் கவிதைகளை உதாரணம் காட்டுகின்ற ‘காலம் செல்வத்துக்கு, சேரனைத் தாண்டி இரண்டு புதிய தலைமுறைகள் வந்துவிட்டன என்பதைப் பற்றி நினைவுபடுத்தத் தேவையில்லையென நினைக்கின்றேன். மேலும் செல்வத்தைப் போன்றவர்கள் ஏன் ஈழத்தில் அ.யேசுராசா, கருணாகரன் போன்றவர்களோ புலம்பெயர் தேசத்தில் கி.பி.அரவிந்தன், அ.இரவி போன்றவர்களோ புதிய தலைமுறைப் படைப்பாளிகளை உருவாக்க ஆர்வம் காட்டுவதைப்போல சேரன் அக்கறை கொள்ளவில்லை என்பது பற்றியோ, அல்லது சு.ராவின் பாதிப்பிலிருந்து வந்தோம் என்று ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் கூறுகின்றமாதிரி சேரனின் பாதிப்பிலிருந்துதான் நாங்கள் வந்தோம் என்று ஏன் இன்றைய இளைய தலைமுறை ஈழத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ குறிப்பிடவில்லையெனவும் தங்களுக்குள் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடுதலும் சாலவும் சிறந்ததாக இருக்கும்.

கரிகாலன் அந்தக்காலத்துக் கூட்டணிக்காரர் என்பதால், எனக்கு வாழ்க்கையில் பார்க்கக்கிடைக்காத- கூட்டணிக்காரரின் உரையை கேட்கமுடிந்தது. அவர் பேசப்பேச ஒரு காலத்தில் கூட்டணியில் தீவிரமாய் இயங்கிய எனது தந்தையாரும் இப்படித்தான் முந்தி இருந்திருக்க்கூடும் என்ற எண்ணம்தான் நினைவில் ஓடியது. கரிகாலன் பேசிய கருத்துக்கள் எதிலும் என்னால் உடன்படமுடியாவிட்டாலும், இயக்கங்களின் உடகொலைகள், இயக்கத் தலைமைகள் பற்றிய சில குறிப்புக்கள் என்னளவில் புதியவையாக இருந்தன. உரையின் முடிவில் உணர்ச்சிப் பெருக்கில் இந்தியா இல்லாமல் எமக்கு எதுவும் இல்லை என்று முடித்தார் பாருங்கள், அந்த இடந்தான் அற்புதம். எனது தந்தையாரும் இப்படியான நிலைப்பாட்டில் இருப்பவர் என்பதால் எனக்கு இது பெரிதாய் ஆச்சரிமளிக்கவில்லை என்றாலும், ஏதோ இந்திய அரசாங்கம் இந்த பிடி பிடி என்று எல்லாவற்றையும் கொடுப்பதுமாதிரியும் ஈழத்தில் இருப்பவர்கள் ‘உன்ரை ஒண்டும் வேண்டாம்’ என்று முகஞ்சுழித்து பின் பக்கத்தைக் காட்டி கொண்டு போவது மாதிரியும் இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதுதான் எரிச்சலூட்டுகின்ற விடயம்.

சேரன், இயக்கங்களில் இருந்தவர்கள் புஸ்பராஜாவைப் போல தங்கள் சாட்சியங்களை ஆவணப்படுத்தவேண்டும் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆகக்குறைந்தது தாங்கள் சம்பந்தப்பட்ட இயக்கங்களின் கதைகளையாவது கோவிந்தன்,செழியன் மாதிரி எழுதவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கற்சுறா, ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ வெளிவந்த அடுத்தடுத்த கிழமைகளிலேயே அதன் தகவற்திரிப்புகளை விளக்கி இன்னொரு புத்தகம் உமாகாந்தன், அசுரா, தேசதாசன்(?) கோவை மகேசன் (?) போன்றவர்களால் வெளியிடப்பட்டதைக் குறிப்பிட்டார் (நூலின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை). ஏற்கன்வே முன்பு ஒரிடத்தில்குறிப்பிட்டமாதிரி, வரலாறும், உண்மைகளும் அவரவர்க்கு ஏற்ப வேறுபடத்தான் செய்யும் என்று இவ்வாறான நூல்களை வாசிக்கின்ற நாமனைவரும் சாந்தியடையவேண்டியதுதான்.

உரைகளின் முடிவில், பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். புஸ்பராஜாவுடன், அவர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்தபோது அதனோடு இயங்கிய நண்பர்களின் பகிர்ந்த கருத்துக்கள் முக்கியமானவை. கடும் விமர்சனம் இருந்தாலும் வரதராஜப்பெருமாளின் குடும்பச்சூழ்நிலையை அறிகின்றபோது ஏழ்மையான குடும்பத்திலிருந்து வளர்ந்து நாட்டின் உயர் பதவியைப்பிடித்த பிரேமதாசாவை, வரதராஜப்பெருமாளுடன் மனம் ஏனோ ஒப்பிட்டுப்பார்க்கச் செய்தது. புஸ்பராஜாவாவின் சகோதரியான புஸ்பராணியும் ஈழ்ப்போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பதை புஸ்பராஜாவின் நூலினூடும், சிலரின் பேச்சுக்களினூடும் அறிய முடிந்தது.. காலமும் சூழலும் இயைந்து கொடுத்து புஸ்பராணியும் தனது போராட்ட கால வாழ்க்கையைப் பதிவு செய்வார் என்றால் அது ஒரு முக்கிய ஆவணமாய் இருக்கக்கூடும். பெண்ணின் பார்வையில் விரியும் சாத்தியமுள்ள அந்தச் சாட்சியம் பல விடயங்களை/பலரின் முகமூடிகளை கிழிக்க உதவவும் கூடும்.

சக்கரவர்த்தி, புஸ்பராஜாவின் நினைவஞ்சலிக்கூட்டத்துக்காய் கொடுக்கப்பட்ட பிரசுரத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுடன் வந்தார். நினைவுக்கூட்டத்தை நடத்தியவர்கள், புஸ்பராஜா கொடுத்த தனது இறுதிச் சாட்சியத்தை நினைவஞ்சலிப் பிரசுரத்தில் பாவித்திருந்தனர். அதில், ‘… எனது நாட்டின் பேரின்வாத அரசியல்வாதிகளிடமும், எனது மண்ணுக்காய்ப் போராடுபவர்களையும், இதர குழுக்களையும் இந்த நேரத்தில் நான் இரு கரங்களையும் கூப்பிக் கேட்பது தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா..’என்று வருகிறது…. தனக்கு எல்லாம் விளங்குகிறது, ஆனால் மண்ணிற்காய் போராடுபவர்கள் யார் என்பதும் இதர குழுக்கள் என்பது யாவர் என்பது குறித்தும் யாரேனும் விளக்கம் தரமுடியுமா என்று சக்கரவர்த்தி சபையைப் பார்த்துக்கேட்டாரே பாருங்கள், ஒரு கேள்வி… பாவம் பிரசுரித்த நண்பர்கள் என்ன செய்வார்கள். புஸ்பராஜா சொன்னதைச் சொன்னமாதிரித்தானே போடமுடியும்…தங்களுக்கேற்றமாதிரி வெட்டிப் போட அவர்கள் என்ன தணிக்கைக் குழுவா வைத்திருக்கின்றார்கள்? புஸ்பராஜாவின் புத்தகம் குறித்தோ அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தோ ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்க எங்கிருந்துதான் இப்படிப்பட்ட ‘புத்திசாலித்தனமான கேள்விகள்’ இந்தப் படைப்பாளிகளுக்கு வருகின்றதோ தெரியவில்லை. ஆனால் பிறர் மீது விமர்சனம் வைக்கின்ற சக்கரவர்த்தி, ‘வைகறை’யில் ‘காலம்’ செல்வத்துக்கு அவர் வைத்த விமர்சனத்துக்கு ‘காலம்’ செல்வம் தன்னிலை விளக்கம் தந்தபிறகும், அது குறித்து மன்னிப்போ வேறெதுவோ பேசாது அந்தவிடயத்தை -மவுனமாய்- சாதுர்யமாய்க் கடந்து போனது ஒரு ‘நடுநிலைவாதி’க்கு வேண்டிய அடிப்படைப்பண்பு என நாம் எடுத்துக்கொள்ளலாமா? என்பதை சக்கரவர்த்திதான் தெளிவுபடுத்தவேண்டும்.
மற்றும்படி சக்கரவர்த்தி கண்ணை மூடிக்கொண்டு -யதார்த்த சூழ்நிலைகளை மறந்து- பால்குடித்தால் கொஞ்சம் செல்லமாய் அதட்டிப்பார்ப்போம் என்பதற்காய், அவர்களின் தோழரான புஸ்பராஜாவே விகடனுக்குக் கொடுத்த பேட்டியிலிருது ஒரு பகுதியை எடுத்துத்தருகின்றேன்.

‘ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களிலிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.’

இந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில் தர்சனும், பா.அ.ஜயகரனும் வைத்த (எனக்கு விதிவிலக்காய்ப்பட்ட) கருத்துக்கள்தான் முக்கியமாய் இருந்தது. தர்சன், எல்லோரும் புஸ்பராஜாவின் ஒரு பக்க்கத்தை மட்டுமே கூறிக்கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் அவர் பதிவு செய்யாத ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் படுகொலைகள் குறித்தோ, அவர்கள் கட்டாயப்படுத்தி சிறார்களைத் தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்ந்த பக்கங்களையோ புஸ்பராஜா சாட்சியப்படுத்தாததை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். முக்கியமாய் புலிகள் சிறார்களைப் படையில் சேர்க்கின்றார்கள் என்று விமர்சனம் செய்கின்ற எவரும் ஏன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி மிகப்பலவந்தமாய் சிறார்களை சேர்த்தது குறித்து கேள்விகளோ ஆவணப்படுத்தல்களோ செய்யவில்லை என்றும், புஸ்பராஜாவின் தீராநதிப்பேட்டியில் இராணுவம் என்றால் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யத்தான் செய்வார்கள் என்று சப்பை கொட்டியதையும் கேள்விக்குட்படுத்தி…இவ்வாறான பலவீனமான பக்கங்களையும் இணைத்துத்தான் புஸ்பராஜா அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது (இதையேதான் நானும் கூற விளைந்ததும் கூட).

ஒரு ஆதிக்க சாதியப் பிரதியாய் இருந்தாலும் -ஒரு நண்பரின் வீட்டில் கண்டு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்து முடித்த- ‘மறைவில் ஜந்து முகங்கள்’ என்ற நாவல்(?) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் செய்த கொலைகளையும்/பாலியல் வன்புணர்ச்சிகளையும் ஓரளவுக்கு ஆவணப்படுத்துகின்றது என்று நம்புகின்றேன்.
பா.அ.ஜயகரன், இந்தியாவை ஒற்றைப்படையாக கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்த கரிகாலனுக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். தமிழக மக்களின் தார்மீக ஆதரவின் வலுவை விளங்கிக்கொண்டாலும் இந்திய அரசாங்கத்தின் இராஜ தந்திர விடயங்களை மறந்து பேசிக்கொண்டிருப்பது ஆபத்தானது என்றார். முக்கியமாய், இந்தியா ஏன் எல்லா இயக்கங்களுக்கும் தமிழகத்தில் பயிற்சி கொடுத்தது என்பதன் பின்னணி உண்மைகளையும், இந்தியாவினதும் றோவினதும் சாதுர்யமான காய் நகர்த்தல்கள் குறித்தும் இயக்கங்களில் இருந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்…அரசியல் சூழலின் யதார்த்தம் புரியாது எல்லாவற்றுக்கும் இந்தியா இந்தியா என்று கட்டியழுவதால் எந்தப் பிரயோசனமும் ஈழத்தமிழருக்கு வந்துவிடப் போவதில்லை என்று ஜயகரன் கூறியது கவனிக்கத்தக்க விடயம். இவ்வாறான ஒத்த கருத்து, முன்னாள் இயக்கங்களிலிருந்த -புலிகளை இன்று கடுமையாக விமர்சிக்கின்ற- தோழர்கள் பலரிடம் கூட இருப்பதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கின்றேன் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
புஸ்பராஜாவும் ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் பங்கு குறித்து ஒரு நூலை அவரது இறுதிக் காலத்தில் எழுத விரும்பியதாக அறிகின்றேன். அவர் நேர்மையாக தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி அது நூலாக வெளிவந்திருப்பின் இன்று புஸ்பராஜாவைத் தலையில் வைத்துப் பாராட்டும் இந்தியா ரூடேயும், தினமலரும், பிற இந்தியத் தேசியவாதிகளும் புஸ்பராஜாவைத் தொடர்ந்து கொண்டாடியிருப்பார்களா என்பதுவும் கேள்விக்குரியது.

கரிகாலன் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு இடைக்கிடை கருத்துக்கள் கூறினாலும், ஒரு கட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களின் கொலையில் றோ தனது கைவரிசையைக் காட்டியது என்பதை(யாவது) ஒப்புக்கொண்டார். மேலும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினரின் கொலைகள் உட்பட பிற இயக்கங்களின் பழைய சகோதர/உடகொலைகள் குறித்து கதைக்ககூடாது என்று கலந்துரையாடலில் ஒரு கருத்து வைக்கப்பட்டதை எந்தளவுக்கு -என்னளவில்-ஏற்றுக்கொள்ளமுடியுமென்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நடந்த கொலைகளைக் கண்டித்தும், கவனிக்காதும் விட்டதன் சாபந்தானே இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை மறுத்துவிடமுடியுமா என்ன? இந்தச் சகோதரக் கொலைகளை செய்வதற்கு ஆரம்பத்தில் தம்பிமார்களை உருவேற்றி அனுப்பிவைத்ததே கூட்டணி அண்ணர்மார்கள் என்றுதானே ‘சாட்சியமும்’ நமக்குச் சொல்கிறது.

இந்திய றோவின் ஈழத்தினுள்ளும் நீளும் கரங்கள் குறித்து அண்மையில் கூட ஒரு (மும்பாயில் நிகழ்ந்த) சம்பவத்தினூடு. அம்பலத்தப்பட்டிருக்கின்றது. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலில் குறிப்பிடப்படுகின்ற ஒருவர், நாங்கள் ஈழத்தில் இருந்தவரை எங்கள் குடும்ப நண்பராக இருந்தவர் (புஸ்பராஜாவுடன் சேர்ந்து அவரும் ஆர்மபத்தில் தீவிரமாய் இயங்கியவர், புலிகளின் தலைமைக்கு ஆரம்ப போராட்டகாலங்களில் மிக நெருக்கமாயிருந்தவர், பிறகு இயக்கங்களின் அழித்தொழிப்பில் வெறுத்துப்போய் முற்றாக இயக்க அரசியலைவிட்டு விலகியிருந்தவர்) . அவர் ஒருமுறை (எனது சகோதரர்களிடம்) கூறிய சமபவந்தான் இப்போதும் நினைவுக்கு வருகின்றது. 83ம் ஆண்டுக் கலவரம் முடிந்தபின் ஒரு நபர் தெல்லிப்பளை-காங்கேசன்துறைப் பகுதியில் பல வருடங்களாய் தான் எங்கேயிருந்து வந்தேன் என்ற அடையாளங்களை மறைத்து வாழ்ந்து வந்திருக்கின்றார். பிறகு 87ம் ஆண்டள்வில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது அந்த நபர் ஒரு இராணுவத்தொகுதியிற்கே தலைமை தாங்கிய அதிகாரியாக இருந்தமையைக் கண்டபோது தனக்கு வியப்பேற்பட்டதாக அந்த குடும்ப நண்பர் கூறியிருக்கின்றார். எப்படியெல்லாம் இந்திய அரசு சாமர்த்தியமாய்-பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என- ஆரம்பத்திலேயே செயற்படத்தொடங்கியிருக்கின்றது என்பதை அறிவது பெரிய கடினமான விடயமுமல்ல. ஆக, இன்னமும் ஏதோ இராஜீவ் காந்தியின் கொலையுடன் தான் இந்திய அரசுகளின் ஈழத்தமிழர் மீதான ‘உண்மையான அனுதாபம்’ அனைத்தும் ஒரேநாளில் மாறிப்போனது என்று பேச ஆரம்பிப்பவர்கள் றோவினது நெடுங்காலத் திட்டங்கள் குறித்தும், பல இயக்கங்களை ஒரே நேரத்தில் வளர்த்துவிட்ட காரணங்கள் ஆரம்பிக்கின்ற புள்ளிகளிருந்தும் விவாதிக்க ஆரம்பிப்பதே சரியாக இருக்கும். அது ஈழப்போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற உண்மையான புள்ளிகளைக் கண்டடைய ஏதேனும் ஒருவிதத்தில் உதவவும்கூடும். அதே சமயம் பெரும்பான்மையான தமிழக மக்களின் தார்மீக ஆதரவை இழக்கதொடங்கிய முக்கியபுள்ளி இராஜீவ் காந்தியின் கொலையுடந்தான் ஆரம்பிக்கின்றது என்பதையும் நாமும் நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.

(2)
இவையெல்லாவற்றையும்விட எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், உமாகாந்தன், கலைச்செல்வன், சி.புஸ்பராஜா போன்றவர்களின் மரணங்கள், இலக்கியக்கூட்டங்களில் சந்திக்கும் நண்பர்களை நாளை பார்க்கமுடியுமா என்ற சந்தேகங்களை எனக்குள் விதைத்தபடியே இருக்கிறது. அண்மையில்கூட எனக்கு மிகப்பிடித்தமான ஒரு படைப்பாளி தன் உடல் நலம் குறித்த அக்கறையில்லாது ஐரோப்பா நாடொன்றில் திரிகின்றார் என்று கேள்விப்பட்டபோது (இந்தியாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்ததாயும் அறிந்தேன்), இந்த விசருகளுக்கு துவக்கை முன்னுக்கு காட்டி உடல் நலத்தில் கவனமாய் இருங்கோடா என்று சொன்னால்தான் காதில் விழுமோ என்றுதான் யோசிக்கத் தோன்றியது. மேலும் ‘காலம்’ செல்வமாய் இருந்தாலென்ன, கற்சுறாவாய் இருந்தாலென்ன, எத்தகை விமர்சனங்கள் அவர்கள் மீது வைத்தாலும் முகங்களைச் சுழித்துத் திரும்பாது தொடர்ந்து உரையாடுவதற்கான வெளிகளைத் தருபவர்கள் என்றளவில் மேலே விமர்சிக்கப்பட்ட அனைத்து நண்பர்கள் மீதும் தனிப்பட்ட மதிப்பு எனக்குண்டு என்பதையும் குறிப்பிடவே விளைகின்றேன்.

(3)
இந்தப் பதிவுக்கு அவசியமற்றதும், என்னள்வில் அவசியமானதுமான ஒரு குறிப்பு!
இந்திய அரசு- இந்திய மக்கள் என்று பிரித்துப் பார்ப்பதை எப்படி விளங்கப்படுத்துவது, தமிழக மக்களின் உண்மையான ஈழத்தமிழர் மீதான அக்கறையை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தபோது சோபாசக்தியின் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதில் தமிழக மக்களைப் பற்றிக் குறிப்பிடும் விசயங்கள் மிகத் தெளிவாக இருப்பதால் அந்தப் பகுதியை நன்றியுடன் இங்கே உபயோகின்றேன்.

‘ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.’

குறிப்பு: மேலே கூட்டத்தில் உரையாடப்படட விடயங்கள் -குறிப்புகள் எதுவும் எடுக்காது- எனது நினைவில் இருந்தே எழுதுகின்றேன். ஏதேனும் குறிப்புகள் தவறெனச் சுட்டிக்காட்ட்படும்போது திருத்திக்கொள்ளவும், மன்னிப்புக்கேட்கவும் ஆயத்தமாகவே இருக்கின்றேன் எனக்கொள்க.

January 30, 2006

இயல் விருது - 2005

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 1:00 pm

ஒரு விருதும், என் விசனமும்

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் (உயிர்மையில் என்று நினைக்கின்றேன்) கனடாவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட சிறந்ததுதான்.

November 2, 2005

113094882857358355

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 8:25 am

கட்டாய விருப்ப ஓய்வு குறித்து ஒரு சத்தியக் (ம் அல்லாத) கடதாசி

சில வாரங்கள் (அல்லது சில மாதங்கள்) வலையில் எழுதுவதை நிறுத்தி நண்பர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற வருடம் கார்த்திகை மாதத்தில் ஏதோ ஒருநாளில்தான் வ்லைப்பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தேன். இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு பதிவுகள் எழுதியிருப்பேன் போலக்கிடக்கிறது (ஆகக்குறைந்தது பத்துப் பதிவுகளாவது உருப்படியானதா என்பது வேறு விடயம் :-) ).

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், புரட்டாதி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன். அன்றைய நாளில் பிரியமான இரண்டு தோழியரின் பிறந்த நாளும் வந்தததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வலைப்பதியவும் செய்யும் அந்த இரு தோழியருக்கும் வாழ்த்து! அத்தோடு இந்த கார்த்திகை மாதத்தில், திருமணப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் அருமைத் தோழர் ஒருவருக்கும் திருமணநாள் வாழ்த்து உரித்தாகட்டும் (I am missing the opportunity to see your wedding ceremony buddy).

இறுதியாய், கனடாவில் இயல் விருது என்று ஒரு விருது படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்பட்டபின் இவரை விட அவருக்கு வழங்கியிருக்கலாம் என்று முணுமுணுப்பதைவிட, இந்த முறை என் சிற்றறிவுகுட்பட்டவகையில் இந்த விருதுக்காய் சிலரைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கார்த்திகேசு சிவத்தம்பி
கி.ராஜநாராயணன்
அம்பை
சோ.தர்மன்
எம்.ஏ. நுஃமான்
ராஜம் கிருஷ்ணன்
வண்ணநிலவன்

நன்றி.

January 18, 2005

சில பிதற்றல்கள், கோபங்கள், விரக்திகள்

Filed under: விவாதம் — டிசே தமிழன் @ 11:35 pm

நேற்று நான் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, ஒருவருடைய வலைப்பதிவில் இவ்வளவு காலமாகவும் இணைக்கப்பட்டிருந்த எனது பக்கத்திற்கான இணைப்பு நீக்கப்பட்டிருந்தது. இது குறித்து எனது முந்தைய பதிவில் பின்குறிப்பில் முதலில் இப்படி எழுதியிருந்தேன்.

பி.கு:ஒருவர் ஏற்கனவே எனது blog addressஐ தனது வலைப்பதிவில் சேர்ந்திருந்தார். இன்று தமிழ்ப்பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த link அகற்றப்பட்டிருந்ததைக் கண்டேன்.என்ன காரணமாய் இருக்கும் என்று யோசித்தபோது இறுதிப்பதிவில் எழுதப்பட்ட, வன்னி, செஞ்சோலை, புலிகள் தான் காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். ம்… புரிந்துகொள்கிறேன்.

என்று பதிவிட்டபின், இப்படி எத்தனைபேரை பார்த்திருக்கின்றேன் என்ற அலுப்பில் அதை நீக்கிவிட்டிருந்தேன். இப்போது நண்பர் ஒருவர் தந்த, சென்ற வருட நடுப்பகுதியில் நடந்த விவாதத்தின் இணைப்புக்களை வாசித்தபோது எனது இணைப்பை நீக்கிய இந்த நபரும் அந்த விவாதத்தில் பங்குபற்றி தனது ‘அறிவுஜீவித்தனமான’ கருத்துக்களை எழுதியிருந்ததைக் கண்டேன். அண்மையில் கூட, நீங்கள்(ஈழத்தமிழர்) நாய்கள்தான் ஆனால் ட்சூனாமியில் அடிபட்டுவிட்டியள் இந்தா பிச்சை என்ற மாதிரி ஒருவர் எழுதியிருந்ததைக் கடுமையாக நிராகரித்திருந்திருந்தேன். வியப்பாயிருந்தது என்ன என்றால், இந்த ஆசாமிதான் கடந்த வருடத்து விவாதத்தில் அப்படிப்போடு என்று மற்றவர்களை உசுப்பேத்தியவர் (எல்லா NRIகளும் புலி/ஈழ ஆதரவில்லை என்று நெத்தியடியாக சொன்னீங்களே என்று முதுகுசொறிதல் வேறு)பெயரிலி ஏற்கனவே ஆழமாய் அடிபட்டிருந்தாலும் திறந்த மனதோடு இந்த நபர்பற்றி எதுவும் கூறவில்லை. எனக்கு இந்த நபரின் எழுத்துக்களை வாசிக்கும்போதே(ஈழ நிலைப்பாடை வைத்து மட்டுமல்ல) இவர் எப்படிப்பட்டவர் என்று ஏற்கனவே ஒரளவிற்கு புரிந்திருந்தது.

அந்த விவாதத்தை வாசித்தபோது, தமிழகத்தமிழர்களில் இப்படியும் சிலர் இருப்பார்களா என்று ஒருகணம் என்னை அதிர்ச்சியுள்ளாக்கியது. ஈழப் பிரச்சினை/புலிகள் என்ற பிரிவைக்கூடப் புரிந்துகொள்ளாது இருப்பின் பரவாயில்லை. ஆனால் சகமனிதனைக்கூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஒற்றைப்படையாக விவாதத்தின் எல்லைகளை மீறிப் பேசியது கோபத்தையும் விரக்தியையும் ஒன்றாய் என்னுள் ஏற்படுத்தியது. புலிகள்/ஈழப்பிரச்சினை பற்றி எத்தனை பேரிடம் நேரிலும், இணையத்திலும் விவாதிக்கிறேன்.அவர்களின் பலர் புலிகளால் பிரியமானவர்களை இழந்தவர்களாய், புலிகளால் தேடப்பட்டு தப்பி வந்தவர்களாய், இன்னும் பல விதங்களில் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவரிடமும் இருந்து இப்படியான வன்மமான சொற்களை, வசையான சொல்லாடல்களைக் கேட்டதில்லை. பெயரிலி, நான், ரோசாவசந்த் என்று இன்ன பிறர் இப்படியான விவாதங்களில் (முக்கியமாய் பதிவுகளில்) பங்குபற்றியிருக்கிறோம். நாங்கள் பலர் எதிரெதிரர்ய் விவாதித்தபோதும் ஒரு அளவிற்கு மேல் தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியதில்லை. சென்ற வருடத்து விவாதத்தில்,பெயரிலி இந்தளவிற்கு கீழிறக்கப்பட்டபோதும் (இதன்பின் தான் இனி விவாதங்களில் பங்குபற்றுவது இல்லை சொல்லியிருந்தார் என்று நினைக்கிறேன்) ஒரு சில தமிழ்நாட்டு நண்பர்களைத் தவிர மற்றவர்கள் கருத்துச் சொல்லாததைப் பார்க்கையில் கவலையாகக் கிடந்தது.
…..
கிட்டத்தட்ட இந்தக் காலகட்டப்பகுதியில் நான் ஈழம், தமிழ்நாட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டு அனுபவங்கள் பற்றி விரிவாக எழுத ஆர்வம் இருக்கிறது. அங்கே நான் சந்தித்த மனிதர்களுக்கும் இங்கு விவாதத்தில் பங்குபற்றி அறிவுஜீவிகளுக்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது என்பதை மட்டும் இங்கே குறித்துக்கொள்ளுகிறேன்.
….
போரே வாழ்வாய், தினமும் செல்லடி, கிபீரடி, இடம்பெயர்வு என்று வாழ்ந்த ஈழத்தமிழர்களின் வார்த்தைகளில் சிலவேளைகளில் கடுமை தெரியலாம். ஒரு இயல்பான வாழ்வு/மனநிலை அமைய இந்த வாழ்க்கைக்காலமே போதாது போன்றதுதான் பல புலம்பெயர்ந்தவர்களின் மனநிலை. எங்கள் கருத்துக்கள்/படைப்புக்கள் தமிழ்நாட்டு தலித்துக்கள் போலத்தான் வெளிப்படும். அதை ஓரளவு புரிந்துகொள்பவர்களால்தான் (பரிதாபம் மற்றும் ச் கொட்டல் அல்ல நான் குறிப்பது) நாங்கள் சொல்லவருவதைப் புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.
….
துப்பாக்கி கூட ஒரு முறைதான் கொல்லும். சில நாட்களுக்கு முன் கூட அப்படியான சம்பவத்தை என் வீட்டுக்கருகில் சந்தித்த துயருடன் நான் சொல்கிறேன். அதைவிட அதிகம் பயப்பிடும்படியாகவும் கொடூரமாகவும் இருப்பது இப்படியான அறிஜீவிகளின் மூளைகளே இந்தக்கணத்தில்.

Powered by WordPress