DISPASSIONATED DJ

October 31, 2009

எதிர்ப்பே வாழ்வாய்…

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:47 pm

-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும், க‌லாசார‌ ப‌ண்பாட்டுப் பின்புல‌ங்க‌ளையும் வேறுவ‌கைக‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முய‌ற்சிக்க‌ முடியும். அத‌ற்கு ந‌ம் எல்லோருக்கும் விசால‌மாய் சிந்திக்கும் ம‌னோநிலையும், தெரியாத‌தை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌மும், இவ‌ற்றுக்கு அப்பால் முன் முடிவுக‌ள் எதையும் எடுக்காத‌ ச‌கிப்ப்துத்த‌ன்மையும் அவ‌சிய‌மாகின்ற‌ன‌.

Aimee & Jaguar என்கின்ற‌ இத்திரைப்ப‌ட‌ம் இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது நட‌க்கின்ற‌ க‌தை. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள், அமெரிக்காவின‌தும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ளின‌தும் தாக்குத‌ல்க‌ளினால் தோல்வியுற்றுக் கொண்டிருக்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம்; விமான‌க்குண்டுக‌ள் அகோர‌மாக‌ ஜேர்ம‌னிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிக்கின்ற‌ன‌. வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இன்ன‌மும் உள்ள‌தென‌ அதீத‌ ந‌ம்பிக்கை கொள்கின்ற‌ நாஸிப்ப‌டையின‌ர் எல்லைக‌ளில் நின்று ச‌ண்டைபிடித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.

நான்கு குழ‌ந்தைக‌ளின் தாயான‌ லிலிக்கு (Lilly) நாஸிப்ப‌டையில் போரிட்டுக்கொண்டிருக்கின்ற‌ க‌ண‌வ‌னால், அவரின் உடல்சார்ந்த‌ வேட்கையைத் த‌ணிக்க‌ முடியாதிருக்கின்ற‌து. அந்த‌வேளையில் த‌லைம‌றைவாக‌ வாழ்ந்துவ‌ருகின்ற‌ யூத‌ப்பெண்ணான‌ பெலிசியினுட‌ன்(Felice), லிலிக்கு உற‌வு முகிழ்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் காத‌லும் காம‌மும் வ‌ழிய‌ வ‌ழிய‌ வ‌ருகின்ற‌ அநாம‌தேய‌க் க‌டித‌ங்க‌ள் ஒரு ஆணால் அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌தென‌ லிலி நினைக்கின்றார். பின்னாளில் அது பெலிசியினால் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ங்க‌ளென‌க் க‌ண்டுபிடித்து பெலிசியோடு சேர்ந்து வாழ‌த்தொட‌ங்குகின்றார். இவ்வாறிருக்கையில் த‌லைம‌றைவாக‌ இருக்கும் பெலிசியின் ந‌ண்ப‌ரொருவ‌ர் நாஸி உள‌வுத்துறையால் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகின்றார். அதிலிருந்து தொட‌ரும் விசார‌ணைக‌ளில் யூத‌ரான‌ பெலிசியையும் நாஸிக‌ள் தேட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையில் குறுகிய‌ விடுமுறையில் போர்முனையிலிருந்து திரும்பி வ‌ரும் லிலியின் க‌ண‌வ‌ன், லிலி‍-பெலிசியின் உற‌வைக் க‌ண்டுபிடிக்கின்றார். எனினும் நான்கு குழ‌ந்தைக‌ளுட‌ன் இருக்கும் லிலி த‌ன்னுட‌ன் திரும்பிவ‌ருவார் என்று க‌ண‌வ‌ன் ந‌ம்புகின்ற‌போது, லிலி த‌ன‌க்கு விவாக‌ர‌த்துத் த‌ரும்ப‌டி க‌ண‌வ‌னிட‌ம் வேண்டுகின்றார்.

விவாக‌ர‌த்துப் பெற்ற‌ பெற்ற‌ லிலியுட‌ன் பெலிசி சேர்ந்து குடும்ப‌ப் பொறுப்புக்க‌ளை எடுக்கும்போது, ஹிட்ல‌ரைக் கொல்வ‌த‌ற்கென‌ உட்க‌ட்ட‌மைப்புக்குள் நிக‌ழ்ந்த‌ Valkyrieதிட்ட‌ம் நிகழ்ந்து தோல்வியில் முடிகின்ற‌து (இந்தக் கொலைத்திட்ட‌த்தை வைத்து, அண்மையில் Tom Cruise ந‌டித்து சொத‌ப்பிய‌ ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகிற‌து) . அத‌ன்பின் நிக‌ழ்கின்ற‌ ப‌டுமோச‌மான‌ க‌ளையெடுப்பில், தாங்க‌ளும் அக‌ப்ப‌டப்போகின்றோம் என்று அஞ்சி -த‌லைம‌றைவாய் வாழும் -பெலிசியின் ந‌ண்ப‌ர்க‌ள் ஜேர்ம‌னியை விட்டு வெளியேறுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுட‌ன் கூட‌வே வ‌ர‌ வ‌ற்புறுத்தியும் பெலிசி, த‌ன் காத‌லியான‌ லிலியை விட்டு வ‌ர‌மாட்டேனென‌ ம‌றுக்கின்றார்.

இந்த‌ப்பொழுதிலேயே லிலியிட‌ம், பெலிசி தான் த‌லைம‌றைவாய் வாழுமொரு யூத‌ இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ற‌ உண்மையைக் கூறுகின்றார். யூத‌ர்க‌ளைத் தேடி அழிக்கும் நாஸிக‌ளின் ப‌த‌ற்ற‌மான‌ காலக‌ட்ட‌த்தில் பெலிசியை லிலி ஏற்றுக்கொள்வ‌தோடு த‌ன‌து காத‌லியைத் த‌ன‌து பெற்றோர்க‌ளிட‌மும் அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். ஓரின‌ப்பால் துணையாக‌ ம‌ட்டுமின்றி, ஒரு யூத‌ராக‌வும் இருக்கும் பெலிசியை, லிலியின் பெற்றோர் த‌ய‌க்க‌த்துட‌ன் ஏற்றுக்கொள்கின்ற‌ன‌ர்.

இறுதியில் பெலிசியின் கொல்ல‌ப்ப‌ட்ட‌ தோழியிட‌ம் க‌ண்டெடுத்த‌ த‌ட‌ய‌ங்க‌ளை வைத்து பெலிசியை லிலியின் வீட்டில் வைத்து நாஸிக‌ள் கைது செய்கின்றார். சிறையிலிருக்கும் பெலிசியை அவ்வ‌ப்போது லிலி ச‌ந்தித்தாலும் அவ‌ரால‌ பெலிசியை விடுத‌லை செய்ய‌முடியாதிருக்கின்ற‌து பின்ன‌ர் போல‌ந்திலிருந்த‌ ஒரு சித்திர‌வ‌தை முகாமில் எவ்வித‌ச் சாட்சிய‌ங்க‌ளுமின்றி பெலிசி காணாம‌ற்போய்விடுகின்றார்(கொல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார்).

பின்னாளில் த‌ன‌து முதிய‌ வ‌ய‌தில் லிலி த‌ன‌து பால்ய‌கால‌த் தோழியொருவ‌ரை முதியோர் இல்ல‌மொன்றில் ச‌ந்திக்கும்போதே இந்த‌க் க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ள் கிள‌ற‌ப்ப‌டுகின்ற‌ன‌. லிலியின் தோழி, பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்டு காணாம‌ற்போன‌த‌ன் பிற‌கு, எவ்வாறு லிலியின் வாழ்வு க‌ழிந்த‌தென‌ வினாவுகிறார். பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு தான் எந்த‌ப் புதிய‌ உற‌வுக்குள்ளும் போக‌வில்லை என்கின்ற‌ லிலி, பெலிசியோடு இருந்த‌ கால‌ங்க‌ளே உண்மையான‌ காத‌லோடு இருந்த‌ கால‌ங்க‌ளென‌க் கூறி ந‌ன‌விடை தோய்வ‌தோடு ப‌ட‌ம் முடிவ‌டைகிற‌து.

2.
இப்ப‌ட‌ம் போரின் ப‌த‌ற்ற‌ங்க‌ளை ம‌ட்டுமில்லாது போர்க்கால‌ அழிவுக‌ளையும் காட்சிப்ப‌டுத்துகின்ற‌து. ஒரு கால‌த்தில் தேசிய‌த்தின் பேரால் வெறியூட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அழிவுக‌ள் த‌ம் வீட்டு வாச‌ல்க‌ளில் வ‌ந்துகொண்டிருப்ப‌தைத் துய‌ர‌த்துட‌ன் பார்த்த‌ப‌டி இருப்ப‌து ம‌ன‌தில் தைக்கும்ப‌டியாக‌ காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒருகாட்சியில் குழ‌ந்தைக‌ளை மிருக‌க்காட்சிச்சாலைக்குக் கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது அங்கே மிருக‌க்காட்சிசாலையென்றிருப்ப‌து குண்டுத்தாக்குத‌லில் சிதில‌மாகிப்போன‌ ஒரு க‌ட்ட‌ட்ட‌த்தொகுதி ம‌ட்டுமே. குண்டுக‌ள் தொட‌ர்ச்சியாக‌ வீழ்ந்துகொண்டிருக்க‌, ம‌னித‌ர்க‌ள் உட‌ல‌ங்க‌ளைச் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ -வேற்றுக்கிர‌க‌வாசிக‌ள் மாதிரி- தாண்டிய‌ப‌டி ந‌ட‌மாடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். ஆனால் இவ்வாறாக‌ தோல்வியின் விளிம்பில் நாஸிக‌ள் நின்ற‌போதும் த‌ம‌து அதிகார‌த்தைக் கைவிடாது யூத‌ர்க‌ளை அர‌ச‌ இய‌ந்திர‌ம் வேட்டையாடிய‌படியே இருக்கின்ற‌து என்ப‌தும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று எல்லாமே கைந‌ழுவிப்போய்விட்டாலும் ஹிட‌ல‌ரின் தேசிய‌த்தின் மீது க‌டைசிவ‌ரை ந‌ம்பிக்கையிழ‌க்காது போர்முனைக்குப் போய் இற‌க்கின்ற‌ லிலியின் க‌ண‌வ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளும் இருக்க‌த்தான் செய்கின்றார்க‌ள்.

த‌ம‌க்கான‌ ம‌கிழ்ச்சியை ம‌ட்டுமில்லாது த‌ம‌க்கான‌ பாலிய‌ல் விடுத‌லையைத் தேடுகின்ற‌வ‌ர்க‌ளாய் லிலியும் பெலிசியும் இருக்கின்றார்க‌ள். த‌ன‌து ம‌ர‌ண‌ம் வாச‌ல‌டியில் ஒரு நிழ‌லைப்போல‌ ம‌றைந்திருக்கிற‌து என்ப‌தைத் தெளிவாக‌ உண‌ர்கின்ற‌ பெலிசி அந்த‌ நாளைய‌ ம‌கிழ்வையோ அல்ல‌து த‌ன‌து காத‌லையோ கைவிட‌த்த‌யாரில்லாத‌வ‌ராக‌வே இருக்கின்றார். வாழ்வு என்ப‌து என்ன‌ என்கின்ற‌ கேள்வி தோழிக‌ளிடையே வ‌ரும்போது ‘நான் இந்த‌ப்பொழுதைக் கொண்டாடிக்கொண்டிருப்ப‌வ‌ள் நாளையைப் ப‌ற்றி ஒருபோதும் க‌வ‌லைப்ப‌ட்ட‌தில்லை’யென‌ பெலிசி த‌ன்னைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்துகொள்ள‌வும் செய்கின்றார். இர‌ண்டாம் உல‌க‌யுத்த‌த்தின்போது ஜேர்ம‌னியில் கூட‌ த‌லைம‌றைவாக‌ மிக‌ப்பெரும் எண்ணிக்கையான‌ ஓரின‌ப்பால் பெண்க‌ள் இருந்த‌தை இப்ப‌ட‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள் யூத‌ர்க‌ளை ம‌ட்டுமின்றி ஹிப்பிக‌ள், ஓரின‌ப்பாலார் போன்ற‌ ப‌ல்வேறு விளிம்புநிலை ம‌னித‌ர்களை ‘ப‌ரிசுத்த‌ இன‌ப்பெருமை’யில் க‌ண‌க்கில்லாது கொன்றொழித்த‌தை நாம் நினைவில் கொள்ள‌வும் வேண்டும். அதிகார‌ம் ம‌றுத்த‌ வாழ்க்கை முறைக்கு எதிராக‌ த‌ங்க‌ள் வாழ்வு முறையையே ஒரு போராட்டமாக‌ ஆக்கிக்கொண்ட‌ லிலியைப் போன்ற‌ எத்த‌னையோ பேர்க‌ள் கால‌ங்கால‌மாக‌ இருந்துகொண்டேதான் இருக்கின்றார்க‌ள்.

3.
த‌மிழ் சூழ‌ல் சார்ந்து ஓரின‌ப்பால் குறித்து மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளே நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஓரின‌ப்பால் குறித்து த‌மிழில் ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வ‌ந்திருக்கின்றதா என‌ப் பார்க்கும்போது, சும‌தி ரூப‌ன் திரைக்க‌தை எழுதி, ரூப‌ன் இய‌க்கிய‌ You 2 என்ற‌ (30-45 நிமிட‌ங்க‌ள்) ஓட‌க்கூடிய‌ ஒரு குறும்ப‌ட‌மே வ‌ந்திருக்கின்ற‌தென‌த் தோன்றுகின்ற‌து. அந்த‌ப் ப‌ட‌த்தில் ந‌டிப்ப‌த‌ற்கும் ந‌டிகைக‌ள் தேட‌ தான் மிக‌வும் கடின‌ப்ப‌ட்ட‌தாய் சும‌தி எங்கோ ஓரிட‌த்தில் கூறிய‌தும் நினைவினிலுண்டு. ந‌டிகைக‌ள் இல்லாது போன‌போது திரைக்க‌தை எழுதிய‌ சும‌தியே அதிலொரு பாத்திர‌ம் ஏற்க‌வேண்டியும் இருந்திருக்கின்ற‌து. You 2 என்கின்ற‌ இக்குறும்ப‌ட‌த்தின் க‌தை, குழ‌ந்தைக‌ளுள்ள‌ ஒரு பெண் த‌ன‌து க‌ண‌வ‌னின் வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்டு இன்னொரு தோழியின் வீட்டில் வீட்டில் சென்று வாழ‌த்தொட‌ங்குகின்றார். க‌ண‌வ‌னை க‌ண்க‌ண்ட‌ தெய‌வ‌ம் என‌ ந‌ம்புகின்ற‌ -குடும்ப‌ வ‌ன்முறையால் மிக‌ மோச‌மாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌- பெண் க‌ண‌வ‌னிட‌ம் மீண்டும் போக‌ விரும்புகின்ற‌வ‌ராய் தொட‌க்க‌த்தில் இருக்கின்றார்.

இவ்வாறான‌ நீட்சியில் இரு தோழிக‌ளுக்குமிடையில் ஒரின‌ப்பால் உற‌வு முகிழ்கின்ற‌து. ஆனால் அந்த‌ ஓரின‌ப்பால் உற‌வில் கூட‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் இணைக‌ளுக்குக்கிடையில் வ‌ருவ‌தையே ‘நீயும் கூட‌வா’ என்று அந்த‌ வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் நினைப்ப‌தாய் ப‌ட‌ம் முடிக்க‌ப்ப‌ட்டிருக்கும். அற்புத‌மான‌ ஒளிப்ப‌திவாலும், ஆக‌ அல‌ட்ட‌லில்லாது சூட்சும‌மாய் தோழிக‌ளிடையே வ‌ரும் உற‌வைக் காட்டிய‌ இந்த‌ப்ப‌ட‌ம் குறித்து இதுவ‌ரை ஆக்க‌ப்பூர்வ‌மான‌ உரையாட‌ல்க‌ள‌ நிக‌ழ‌வேயில்லையென்ப‌து ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். ஓரின‌ப்பால் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரிந்துண‌ர்வுக‌க‌ளோ இல்லா ந‌ம் ச‌மூக‌த்தில், லெஸ்பிய‌ன் உற‌வுக‌ளிலும் அதிகார‌ம் நுண்ணிய‌த‌ள‌த்தில் செய‌ற்ப‌டுகின்ற‌து என்ப‌தை இப்போது காட்சிப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மா என்று இப்ப‌ட‌த்தை முன்வைத்து சில‌ கேள்விக‌ள் இருப்பினும், எதையும் எந்த‌க் கால‌த்திலும் எடுக்கும் சுத‌ந்திர‌ம் ஒரு ப‌டைப்பாளிக்கு இருக்கிற‌தென்ப‌தையும் ம‌றுக்க‌முடியாது.

4.
Amiee & Jaguar ப‌ட‌ம் நுட்ப‌மான‌ ப‌ல‌ கேள்விக‌ளைப் பார்வையாள‌ரிடையே முன்வைக்கின்ற‌து. குடும்ப‌ம் என்ற‌ அமைப்பைத் தீவிர‌மாக‌ ந‌ம்பும் ஒருவ‌ருக்கு நான்கு பிள்ளைக‌ளுட‌ன் உள்ள‌ லிலியின் பாத்திர‌ம் உவ‌ப்பாக‌ இருக்க‌ப்போவ‌தில்லை. லிலியிடம் ஒருச‌ம‌ய‌த்தில் இர‌ண்டு தெரிவுக‌ள் இருந்திருக்கின்ற‌ன‌.ச‌மூக‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு த‌ன‌க்கு உவ‌ப்பில்லாத‌ வாழ்வை வாழ்வ‌து ஒன்று. த‌ன‌க்குப் பிடித்த‌தொரு வாழ்வை ச‌மூக‌ம் வ‌ரைய‌றுத்த‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளை உடைத்து வாழ்வ‌து என்ப‌து ம‌ற்றொன்று. இங்கே லிலி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ ஒரு தெரிவை எடுக்கின்றார். ஆனால் அவ்வாறு தீர்க்க‌மான‌ முடிவுக‌ள் எடுக்க‌முடியாது ஆயிர‌ங்கால‌ ப‌ண்பாட்டுச் சுமை சும‌க்க‌வேண்டிய‌ அவ‌ல‌ம் ப‌ல‌ பெண்க‌ளுக்கு இருக்கிற‌து. த‌ன‌க்கு நெருக்க‌மாக‌வும், த‌ன‌து உட‌ல் சார்ந்த‌ ம‌ர்ம‌ங்க‌ளின் முடிச்சுக்க‌ளை அவிழ்க்க‌ கூடிய‌வ‌ராக‌வும் இன்னொரு பெண்ணே இருக்க‌முடியுமென‌க் க‌ண்டுபிடிக்கின்றார். தான் ந‌ம்பிய‌ காத‌லுக்காய் லிலி க‌டைசிவ‌ரை உண்மையாக‌வே இருக்கின்றார். த‌ன‌து துணை, த‌ங்க‌ளுக்கு எதிரிக‌ளாக‌ க‌ட்டிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளாயிருந்தாலும், அந்த‌த் த‌டைக‌ளை மீறி பெலிசியை ஒரு யூத‌ரென‌ பின்னாட்க‌ளில் தெரிந்தாலும் முழும‌ன‌துட‌ன் ஒரு துணையாக‌ ஏற்றுக்கொள்ள‌த் த‌ய‌ங்க‌வும் இல்லை.

இந்த‌க் க‌தை, ஹிட்ல‌ரின் கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ஒரு உண்மைக்க‌தையாகும். கிட்ட‌த்த‌ட்ட‌ 50 ஆண்டுக‌ளின்பின் இந்த‌க்க‌தையை எரிக்கா பிஷ‌ர் என்ப‌வ‌ர் நூலாக‌ எழுத‌, பின்ன‌ர் இப்ப‌ட‌மாக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. உண்மைக‌ள் எப்போதும் அடியாழ‌ங்க‌ளில் உற‌ங்கிக்கொண்டிருக்காது. ஒருநாள் உண்மைக‌ள் வெளியே வ‌ரும்போது அதிகார‌த்திலிருந்து த‌ம‌க்கான‌ வ‌ர‌லாற்றை எழுதிய‌வ‌ர்க‌ளை மீண்டும் புதைகுழிக‌ளிலிருந்து தோண்டியெடுத்து, கேள்விக‌ளின் க‌ணைக‌ளால் நிர்வாண‌மாக்க‌ப்படுவ‌தும் நிக‌ழ்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

க‌றுப்பு ‍வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்: அச‌ல் லிலி ம‌ற்றும் பெலிசி
(நன்றி: கால‌ம்’ , இதழ்-33 )

October 6, 2009

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 3:16 pm

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்…
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

‘எல்லாமும்’ இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்…
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

‘ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை’
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ ‘தொலைவிலொரு குர‌ல்’ காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது ‘போய்விட‌’ விரும்புகின்றேன்

‘எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து’
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் 25ஐ.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
‘இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை’

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

July 9, 2009

*xxxxxxxxx

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:24 pm

-மீள்ப‌திவு

1.
உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் தொடராமல் இருக்கும் என்பற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. அது ஆடையில் அப்பிக்கொண்ட உருக்கப்பட்ட தாரைப்போல அகற்றமுடியாதிருக்கின்றது. உனக்கான தெரிவுகளைத் தெரிவு செய்த நீ அதற்கான விளைவுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று இருத்தலியம் கூறக்கூடும் உனக்கான முற்பிறப்பின் பாவங்களின் ஊழ்வினையை நீ அனுபவிக்கத்தான் வேண்டுமென மதங்கள் வேறொரு திசையில் நின்று விளம்பவும்கூடும். ஆனால் உன் நிலை பரிதாபமானது, எனெனில் நீயிரண்டிலும் இல்லை. இந்த மற்றதுகள் நீ மூர்க்கமாய் நிராகரித்தவை அல்லது உன்னை அவை நிராகரித்தவை. ஆகவே நீ இவற்றைச் சொந்தம் கொண்டாடி ஒரு மூலையில் இருந்துகொண்டு இவை குறித்து எழுதப்பட்ட பிரதிகளைப் புரட்டி புரட்டி சமாதானமாகிவிடமுடியாது.

நீ சாதாரணமானவன், உனக்கான பலங்களை விட பலவீனங்களுடன் இயங்கிக்கொண்டிருப்பவன். இந்த நாளின் இந்தக்கணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்றெண்ணியபடி கழிவிரக்கமுள்ள நேற்றிலும் நிச்சயமற்ற நாளையிலும் பொழுதுகளை விரயமாக்கிகொண்டிருப்பவன். செய்யவேண்டிய காரியங்களையோ எதிர்கொள்ளவேண்டிய சவாலகளையோ தட்டிக் கழித்தபடி எனது இயல்புநிலை குலைகின்றதென முணுமுணுத்தபடி நள்ளிரவு ஆந்தைகளோடு கரியவிருளில் உனது வழிகளைத் தொலைப்பவன். நீ மிகவும் இயலாத சந்தர்ப்பங்களில் உன்னை விமர்சிக்கத் தொடங்குகின்றாய். ஆனால் அந்த வாசிப்புகள உனது தவறுகளைத் திருத்தமுடியாமல் அறிவியலிலோ ஆன்மீகத்திலோ காரணங்களை உனது விளைவுகளுக்கு தேடத் தொடங்கும்போது நீ உன்னையல்ல பிறரைத் தான் விமர்சிகின்றேனெனும் புரிதலையடைந்து மீண்டும் அபத்தங்களின் நுண்ணிய வட்டங்களுக்குள் சிக்கிவிடுகின்றாய். யாருக்கும் உயர்ந்தவனுமல்ல தாழ்ந்தவனுமல்ல என்று கூறத்தொடங்கும்போதே நீ யாருகோ உயர்ந்தவனாகவும் யாருக்கோ தாழ்ந்தவனாகவும் இருக்கத் தொடங்கிவிடுகிறாய். மதம், இனம், சாதி, காலசாரம் போன்றவற்றை மிகவும் மட்டந்தட்டியபடி, ஆனால் அப்படிக்கட்டுக்களோடு இருப்பவர்களால் எப்படி இப்படி நிம்மதியாக வாழமுடிகின்றது என்பதை உள்ளுக்குள் பிரமிக்கவும் செய்கின்றாய்.

உலகமற்ற உலகில் உண்மையற்ற உண்மையில் நீயற்ற நீ சாத்தியம்தானா என்றெல்லாம் யோசித்துப்பார்க்கத் தொடங்குகின்றாய். உண்மையற்ற உண்மை நீயற்ற நீயின் மேலேறி நின்று தொடர்ந்து பேசவிடாது தவிர்க்கச் செய்கிறது. அபத்தஙகளோடு வாழ்வது பல சிக்கலகளுக்கும் புதிர்களுக்கும் அழைத்துச் செல்லும் எனவெண்ணும் நீ உன் காலகளிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதுமிருக்கும் மயிர்களை சிலவேளைகளில் வேதனையோடும், பல சமயங்களில் ஒருவித கிளுகிளுப்பான இன்பத்தோடும் பிடுங்கியெறியத் தொடங்குகின்றாய். அவ்வாறு செய்வதால் உனது அடையாளங்களைத் தொலைத்து உன்னைப் பின் தொடர்ந்து வரும் அபத்தப் பிசாசுகளின் நிழல்களிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றாய். பின் குவிந்துகிடக்கும் மயிர்களை எரியூட்டி உனது பிரதியை அழித்துவிட்டேன் என நீ நடனமாடிக் குதூகலிக்கும்போது எரியூட்டப்பட்டவை தனக்கான பிரதியை எழுதிக்கொள்கிறது. அதில் முழுதும் உன்னைப்பற்றிய விபரங்கள் நிகழ்காலத்தோடும் எதிர்காலத்தோடும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது உன்னை மிகவும் அச்சுறுத்துகிறது. உன் கனவுகளுக்குள் இருக்கும் கள்வனையும், காமுகனையும், போதைக்கு அடிமையாகுபவனையும் அது வெளிப்படுத்திக்கொள்ள நீ நிர்வாணமாக்கப்படுவது அறிந்து அதிர்கிறாய். மேலும் நிர்வாணம் என்பது மிகப்பெரும் விடுதலையென்ற எளிய புரிதல் கூட இல்லாது மிகவும் கோபிக்கத் தொடங்கி, இந்தப்பிரதியிற்கு எதிர்ப்பிரதியை உனது தோலைக் கிழித்து உன்னை நியாயமாக்கும் வகையில் எழுதத்தொடங்குகின்றாய். சிலவேளைகளில் உனது பிரதியிலிருந்து எழும் குரல்கள் இவை பொய்கள் என்று உரத்துக்கொடுக்கும்போது அந்தப்பக்கங்களைக் கிழித்து கிழித்து கரப்பான் பூச்சிகளைப்போல காலில் வைத்து தேய்த்தழிக்கிறாய். இவ்வாறான இரண்டு பிரதிகளுக்கு அப்பால் காலம் தன் மூன்றாவது பிரதியை எழுதுகிறது. அங்கே, ‘நீ உனக்கு நேர்மையாக இருந்தாய்’ என்ற கல்லறை வாசகம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அதைத்தாங்க முடியாத நீ கடற்கரையை நோக்கி ஓடும்போது குளிர்ப்பருவத்தின் முதல் பனி, மயிரும் தோலுமில்லாத உனது உடலில் ஒரு பெரும் வெடிகுண்டைப் போல விழுந்துவெடிக்கின்றது.. காற்று, இரத்தம் பாய்கின்ற நாடிகளில் நுழைந்து குரூரத்தின் இசையை வாசிக்கிறது. அலைகளை, கடல் துப்பித் துப்பியெறிய நீ எழுதிய இரண்டாவது பிரதி கரையத் தொடங்குகின்றது. அது ஒரு படகைப் போல மெல்ல மெல்ல அசைந்து செல்வதைப் பார்க்கையில் உனது இருத்தலை மீள நிர்மாணிப்பதற்கான கடைசித் துருப்பு என விளங்குகின்றபோதும் வெறித்தபடி நீ வாளாவிருக்கிறாய். பின், உனது மற்றவர்கள்/மற்றதுகள் உன்னையின்னும் பின் தொடர்ந்துகொண்டிருக்கும் அச்சத்தில் நீ நண்டுகள் நிறைய நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழியினுள் உன்னைப் புதைத்துக்கொள்கின்றாய். அங்கேயும் குடும்பம், உயர்வு/தாழ்வு, அமைப்புகள், இதுவே சிறந்ததென்கின்ற தத்துவ வியாபாரங்கள் இருப்பதைப் பார்த்து உனது வாழ்வின் அபத்தங்களுக்கு என்றுமே தீர்வில்லையெனத் தெளிவடைகிறாய். ஆனால் அங்கிருந்த நண்டுகளின் இராணி நண்டு உனது மயிர்களும் தோலுமில்லாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை முலைகளைப் போல உறிஞ்சத் தொடங்கும்போது நீ ஆணும்/பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வர நிலையை அடைந்துவிடுகின்றாய். உன் இதயம் உறிஞ்சப்படும் ஒவ்வொரு முறையும் நீ உலகெங்குமுள்ள மனம்பிறழ்ந்தவர்களின் துயர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கின்றாய். துயரங்களுக்கும், பாரிய வன்முறைக்கும் அப்பால் அவர்கள் தமக்கான உலகில் தாங்களாக வாழ்வதைப் பார்த்து அவ்ர்களில் ஒருவனாய் என்றைக்குமாய் இருந்துவிடத் துடிக்கிறாய். எனினும் அதுவாக மாறுதல் அல்ல அதுவாக ஆகுதல் என்பதே உண்மையான உனகான மீட்சி என்று கூறி இதயமுறிஞ்சிய இராணி நண்டு உன்னை குழிக்கு மேலே தூக்கியெறிந்துவிடுகிறது.

பனிவிழுந்து ஈரஞ்சிலிர்த்திருக்கும் மணலில் வந்தொதுங்கிய பாசியொன்று உன்னோடு உரையாடத் தொடங்கும்போது உனக்கு மீண்டும் மயிர்களும் தோலும் வளர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அச்சமடைகிறாய். ஒரு உச்சக்கட்ட புணர்வு தரும் இன்பத்திற்கு நிகரான உற்சாகத்தில் நீ நட்சத்திரமொன்றில் சுருக்குப்போட்டு நிலவு நாற்காலியை உதைத்துதுன் கால்களை விடுவித்து விடுதலையைத் தேடிக்கொள்கின்றாய். உனது இனி உனதல்லாத உடலம் பிரபஞ்சப் பெருவெளியில் அலையத்தொடங்குகிறது நடுநடுங்கியபடி.

2.
தொடர்ந்து துயரம் மழையைப் போல இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும்போது அவன் செய்வதறியாது திகைக்கத் தொடங்குகின்றான். இப்படியெல்லாம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நடக்குமா என்று நினைத்தபடி தொடர்ந்து சிந்திப்பதே ஒரு வன்முறையாக சூனியத்திற்குள் இழுத்துச்செல்வதைப் பார்க்கச் சகிக்கமுடியாது ஒரு நீண்ட துயிலுக்கு சென்றுவிட விரும்புகின்றான். ஒரு பின்னேரப் பொழுதில் factoryயின் பின்வாசலொன்றில் நின்றபடி தனக்கு மிக நெருக்கானவருடன் ப்கிர்வதற்கு காத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அவர் அவனைவிட இந்நிகழ்வுகளால் நிலைகுலைந்திருப்பதைப் பார்த்து தான் பகிரவிரும்பியதைப் பகிராது இருட்டாகிக்கொண்டிருக்கும் வானத்தை வெறித்தபடி வார்த்தைகளை எண்ணியெண்ணி உரையாடத் தொடங்குகின்றான். பின்னர் மனது வெடித்துவிடக்கூடுமென்ற பாரத்துடன் மின்னொளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட மைதானத்தின் விளிம்பில் நின்றபடி தனக்கு பிரியமானவளுக்கு தொலைபேசுகிறான். வார்த்தைகளில்லாது தடுமாறும் அவள இவ்வாறான பொழுதுகளில் அவனுக்கருகில்லாத துயரத்தை தன் பெருமூச்சுகளால் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள. இதுவரையில்லாத கடவுள் நம்பிக்கை நீ துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்காகவேனும் எனக்கு வந்துவிடக்கூடாதோ எனும் நெகிழ்வுதரும் வார்த்தைகளை அலைவரிசையில் கரைக்கிறாள். அந்த இதமான வார்த்தைகளுடன் அவன் தாண்டவக்கூத்திற்கு ஆயத்தாமாகின்றான். ‘சாவதும் ஒரு கலை’ என்று கூறிய சில்வியா பிளாத் கூட முதல்முயற்சியிலேயே நேர்த்தியாக தனது கலையை நிகழ்த்தினாரில்லை.

* முன்ன‌ர் எந்த‌த் த‌லைப்பில் ப‌திவிலிட்டேன் என்ப‌து ம‌ற‌ந்துவிட்ட‌து

May 25, 2009

மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 9:50 am

உயிர்த் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது

உயிர் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது
கூலிக்கு மார‌டிப்போரிட‌மிருந்து அவ‌ர்க‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌
நான் விழித்திருக்கிறேன்

நான் அவ‌ர்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
அங்கு முகில்க‌ளும், ம‌ர‌ங்க‌ளும், கான‌லும், நீரும் இருக்கும்

ந‌ம்ப‌முடியாத‌ நிக‌ழ்விலிருந்து,
ப‌டுகொலைக‌ளின் உப‌ரி மதிப்பிலிருந்து
அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருப்ப‌தையிட்டு
நான் அவ‌ர்க‌ளைப் பாராட்டுகிறேன்

நான் கால‌த்தைத் திருடுகிறேன்
ஆக‌வே அவ‌ர்க‌ள் என்னைக் கால‌த்திலிருந்து இழுத்தெடுக்க‌ முடியும்
நாம் எல்லோரும் உயிர்த்தியாகிக‌ளா?

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
ஒரு சுவ‌ரைத் துணிக்கொடி க‌ட்டுவ‌த‌ற்கு விட்டுவையுங்க‌ள்,
ஒரு இர‌வைப் பாடுவ‌த‌ற்கு விட்டுவையுங்கள்

நீங்க‌ள் விரும்பும் இட‌த்தில் உங்க‌ள் பெய‌ர்க‌ளைத் தொங்க‌விடுவேன்,
ஆக‌வே ச‌ற்றுத் தூங்குங்க‌ள்
புளித் திராட்சையின் ஏணிப்ப‌டியில் தூங்குங்க‌ள்

உங்க‌ள் காவ‌ல‌ரின் குத்துவாளிலிருந்து
நான் உங்க‌ள் க‌ன‌வுக‌ளைப் பாதுகாப்பேன்
தீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கு எதிரான‌ புத்த‌க‌த்தின் ச‌தியிலிருந்து
நான் உங்ளைப் பாதுகாப்பேன்

இன்றிர‌வு தூங்க‌ச் செல்கையில்
பாட‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளின் பாட‌லாய் இருங்க‌ள்

நான் உங்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய‌ தேச‌த்தில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
ஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரையின்மீது வையுங்க‌ள்

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
நீங்க‌ள் எம்மைப்போல் ஒருபோதும் இன‌ந்தெரியாத‌
தூக்குமேடையின்
சுருக்குக் க‌யிறாக‌ இருக்க‌மாட்டீர்க‌ள்.

ம‌னித‌னைப் ப‌ற்றி

அவ‌ன‌து வாயில் துணிக‌ளை அடைத்த‌ன‌ர்
கைக‌ளைப் பிணைத்து
ம‌ர‌ணப் பாறையுட‌ன் இறுக‌க் க‌ட்டின‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு கொலைகார‌ன் என்று

அவ‌ன‌து உண‌வையும் உடைக‌ளையும்
கொடிக‌ளையும் க‌வ‌ர்ந்து சென்ற‌ன‌ர்
ம‌ர‌ண‌ கூட‌த்தினுள் அவ‌னை வீசி எறிந்த‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு திருட‌ன் என்று

அவ‌ன் எல்லாத் துறைமுக‌ங்க‌ளில் இருந்தும்
துர‌த்த‌ப்ப‌ட்டான்
அவ‌ன‌து அன்புக்குரிய‌வ‌ளையும்
அவ‌ர்க‌ள் தூக்கிச் சென்ற‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு அக‌தி என்று

தீப்பொறி க‌ன‌லும் விழிக‌ளும்
இர‌த்த‌ம் ப‌டிந்த‌ க‌ர‌ங்க‌ளும் உடைய‌வ‌னே
இர‌வு குறுகிய‌து
சிறைச்சாலைக‌ள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா
ச‌ங்கிலிக் க‌ணுக்க‌ளும் எஞ்சியிரா
நீரோ இற‌ந்துவிட்டான்
ரோம் இன்னும் இற‌க்க‌வில்லை
அவ‌ள் த‌ன் க‌ண்க‌ளாலேயே இன்றும் போரிடுகிறாள்
காய்ந்து போன‌ ஒரு கோதுமைக் க‌திரின் விதைக‌ள்
கோடிக்க‌ண‌க்கில் ப‌சிய‌ க‌திர்க‌ளால்
ச‌ம‌வெளியை நிர‌ப்ப‌வே செய்யும்.

தாய்நாடு

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு,
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்

இந்த‌ நாடு என‌து.
நீண்ட‌ கால‌த்துக்கு முன்பு ந‌ல்ல‌, கெட்ட‌ ம‌ன‌நிலைக‌ளில்
நான் ஒட்ட‌க‌ங்க‌ளில் பால் க‌ற‌ந்திருக்கின்றேன்

என் தாய்நாடு வீர‌ப்ப‌ழ‌ங்க‌தைக‌ளின் ஒரு பொதிய‌ல்ல‌
அது ஒரு நினைவோ, இள‌ம்பிறைக‌ளின் ஒரு வ‌ய‌லோ அல்ல‌

என‌து தாய்நாடு ஒரு க‌தையோ அல்ல‌து கீத‌மோ அல்ல‌
ஏதோ ம‌ல்லிகைச் செடியின் கிளையில் விழும் வெளிச்ச‌மும் அல்ல‌

என‌து தாய்நாடு, நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌னின் கோப‌ம்
முத்த‌மும் அர‌வ‌ணைப்பும் வேண்டும் ஒரு குழ‌ந்தை.

ஒரு சிறைக்கூட‌த்தில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காற்று
த‌ன் ம‌க‌ன்க‌ளுக்கும் த‌ன் வ‌ய‌லுக்குமாக‌த்
துக்க‌ம் அனுஷ்டிக்கும் ஒரு கிழ‌வ‌ன்

இந்த‌ நாடு என் எலும்புக‌ளைப் போர்த்தியிருக்கும் தோல்
என் இத‌ய‌ம் ஒரு தேனீபோல் அத‌ன் புற்க‌ளுக்கு மேலால் ப‌ற‌க்கிற‌து

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்.

நான் அங்கு பிற‌ந்தேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
என‌க்கு நினைவுக‌ள் உள்ள‌ன‌
ம‌னித‌ர்க‌ள் போல‌வே நான் பிற‌ந்தேன்
என‌க்கு ஒரு தாய் இருக்கிறாள்
ப‌ல‌ ஜ‌ன்ன‌ல்க‌ள் உள்ள‌ ஒரு வீடும் உண்டு
ச‌கோத‌ர‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர்
இத‌ய‌ம‌ற்ற‌ ஜ‌ன்ன‌லுட‌ன் ஒரு சிறைக்கூட‌மும் உள்ள‌து
நீர்ப்ப‌ற‌வை எழுப்பிய‌ அலை என‌துதான்
என‌க்கென்று சொந்த‌ப்பார்வை உண்டு
ஒரு மேல‌திக‌ புல் இத‌ழும் உண்டு
உல‌கின் தொலைதூர‌ச் ச‌ந்திர‌ன் என‌துதான்
ப‌ற‌வைக் கூட்ட‌ங்க‌ளும்
அழிவ‌ற்ற‌ ஒலிவ‌ ம‌ர‌மும் என‌துதான்
வாள்க‌ளுக்கு முன்பு நான் இந்த‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்தேன்
அத‌ன் வாழும் உட‌லை ஒரு துய‌ர‌ மேசையாக்கினேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
வான‌ம் த‌ன் தாய்க்காக‌ அழுத‌போது
நான் வான‌த்தை அத‌ன் தாயாக‌ மாற்றினேன்.
திரும்பிவ‌ரும் மேக‌ம் என்னைத் தெரிந்துகொள்வ‌த‌ற்காக‌
நானும் அழுதேன்.
இர‌த்த‌ நீதிம‌ன்ற‌த்துக்குரிய‌ எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்றேன்
அத‌னால் விதியை என்னால் மீற‌முடிந்த‌து
நான் எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்று
பின்ன‌ர் அவ‌ற்றை உடைத்தேன்
ஒரேயொரு சொல்லை உருவாக்க‌: அதுதான் என் தாய்நாடு

ந‌ன்றி: மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் (அடையாள‌ம் ப‌திப்ப‌க‌ம்)

குறிப்பு: ‘இந்நூலில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு ப‌குதியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவோர் மொழிபெய‌ர்ப்பாள‌ருக்கோ வெளியீட்டாள‌ருக்கோ தெரிவிக்க‌ வேண்டுகிறோம்’ என்ற‌ குறிப்பு நூலில் உள்ள‌து. த‌னிப்ப‌ட்டு எம்.ஏ.நுஃமானிட‌ம் இவற்றைப் ப‌திவிடுவ‌த‌ற்காய் அனும‌தி வாங்கியிருந்தேன். எவ‌ராவ‌து இவ‌ற்றை மீள்பிர‌சுர‌ம் செய்வ‌தாயின் த‌ய‌வுசெய்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற‌வும். ந‌ன்றி

April 21, 2009

"எங்க‌ள் குழ‌ந்தை அழுது, எம‌து இட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிடுமோமென‌ நாங்க‌ள் ப‌ய‌ந்தோம்"

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 1:37 pm

Escape from the Tigers leads to safety – in razor-wire encircled ‘transition’ camps

By Andrew Buncombe in Manik Farm, Sri Lanka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்

புலிக‌ளின் நிலைக்கும், இராணுவ‌த்தின் த‌ரிப்பிட‌த்திற்கும் இடையிலிருந்த ‍ஏற‌த்தாழ‌ இர‌ண்டு மைல் நீள‌மான‌ யாரும‌ற்ற‌ (சூனிய‌ப்)பிர‌தேச‌த்தைக் க‌ட‌ப்ப‌த‌ற்கு, பிர‌பாக‌ரின் குடும்ப‌த்தின‌ருக்கு நான்கு நாட்க‌ள் தேவைப்பட்டிருந்த‌ன‌. சில‌ பைக‌ளிலிருந்த உடைமைக‌ளோடு, பிஸ்க‌ட்டைச் சாப்பிட்டும், ஆற்று நீரைக் குடித்தும், இர‌விர‌வாய் விழித்திருந்து (அவ‌ர்க‌ள்) உயிரைக் காப்பாற்ற‌வேண்டியிருந்த‌து பிர‌பாக‌ர‌ரும், அவ‌ர‌து ம‌னைவியும், த‌ம‌து ஐந்து மாத‌க் குழ‌ந்தை அழுது, தாம் ம‌றைந்திருந்த‌ இட‌த்தைப் போராளிப் ப‌டையின‌ருக்குக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று ப‌ய‌ந்து போயிருக்கின்றார்க‌ள்.

இப்போது, அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருக்கின்றார்க‌ள். தை மாத‌த்திலிருந்து, பிர‌பாக‌ரும், ர‌திக‌லாவும், அவ‌ர்க‌ளின் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளும், வ‌ட‌க்கிலுள்ள‌ இராணுவ‌ அக்தி முகாமில் - ச‌ண்டையின் கார‌ண‌மாக‌ வ‌லுக்க‌ட்டாய‌மாய் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்து வ‌ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடு- வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் த‌ங்க‌ள் (சொந்த‌)வீடுக‌ளுக்குப் போவ‌த‌ற்கு முன், இங்கே எவ்வ‌ள‌வு கால‌ம் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌த் த‌ங்கியிருக்க‌ வேண்டுமென‌ ஊகித்த‌றிய‌ முடியாதிருக்கிற‌து. “என‌க்குத் தெரியாது, இது அர‌சாங்க‌த்தைப் பொறுத்த‌தே” என்றார் முப்ப‌து வ‌ய‌தான விஞ்ஞான‌ ஆசிரிய‌ர் ஒருவ‌ர்.

பிர‌பாக‌ரரும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் அதிஸ்ட‌வ‌ச‌மான‌வ‌ர்க‌ள். அர‌சாங்க‌ம் தாம் (அக‌தி) ம‌க்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொண்டிருக்கின்றோமென‌ நிரூபிப்ப‌த‌ற்காய், ஊட‌க‌விய‌லாள‌ருக்ககென‌ காட்சிப்ப‌டுத்த‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ 8500 ம‌க்க‌ளுள்ள‌ ‘நிலைமாறும்’ முகாமைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே இவ‌ர்க‌ள். ம‌ர‌த்தாலும், உலோக‌த்தாலும் ஆன இங்குள்ள‌ வீடுக‌ள் ஒர‌ள‌வு உறுதியான‌வை. சில‌ பாட‌சாலைக‌ள் ம‌ற்றும் ஒரு ம‌ருத்துவ‌ம‌னையோடு இம்முகாம‌ சுத்த‌மாக‌ இருக்கிற‌து.

ஆனால், கொஞ்ச‌ம் (வாக‌ன‌த்தில்) க‌ட‌ந்துபோனால் நிலைமை முற்றிலும் வேறுவித‌மான‌வை; நிழ‌லேயில்லாத‌ இந்த‌ ‘நிலைமாறும்’ முகாங்க‌ளிலுள்ள‌ 17000 ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், தார்ப்ப‌ப்பையால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ குடிசைக‌ளில் சூரிய‌னிலிருந்து த‌ப்ப‌ ஒளிந்துகொள்கின்றார்க‌ள். ம‌க்க‌ள் குடிநீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌சதியின்மை ப‌ற்றி முறையிடுகின்றார்க‌ள். ஒரு பெண், போரில் அவ‌ரின் த‌க‌ப்ப‌ன் கொல்ல‌ப்ப‌ட்டும், க‌ண‌வ‌ன் காய‌ப்ப‌ட்டும் இருக்கும் கிரியா ‘இங்கே (த‌ர‌ப்ப‌டும்) உண‌வு ருசியே இல்லை, போதுமான‌ த‌ண்ணீரும் இல்லை’ என்றார். எல்லா முகாங்க‌ளும் முள்ளுக்க‌ம்பிக‌ளால் சூழப்ப‌ட்டு, ம‌க்க‌ள் வெளியே போக‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தும் இல்லை.

அர‌சாங்க‌ப் ப‌டைக‌ளுக்கும், த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளுக்கும் ஏற்ப‌ட்ட‌ போரினால் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்த‌ ‍உள்ளூரில் இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால்‍ இல‌ங்கை, மிகப் பெரும் பிர‌ச்சினையை எதிர்நோக்கியுள்ள‌து. வ‌ட‌கிழ‌க்கிலுள்ள‌ க‌ரையோர‌ப் பிர‌தேச‌த்தில், இறுதியாய் உள்ள‌ போராளிக‌ளால் சூழ‌ப்ப‌ட்டிருக்கும் 150 000ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் (இராணுவ‌)அக‌தி முகாங்க‌ளுக்குக் கொண்டு செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ 70, 000 ம‌க்க‌ள் இவ்வாறு வ‌ந்திருக்கின்றார்க‌ள். தை 2008ல் போராளிக‌ளை ஒழிப்ப‌த‌ற்கென‌ தொட‌ங்கிய‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்ட‌ -மெனிக் ப‌ண்ணைக்கு பொறுப்பான‌- இராணுவ‌ அதிகாரி, இந்த‌ எண்ணிக்கை விய‌ப்ப‌ளிக்கிற‌து என்கிறார். “நாங்க‌ள் ஒருபோதும் இவ்வ‌ள‌வு பேர் வ‌ருவார்க‌ளென‌ நினைக்க‌வில்லை’ என்றார் லெப்.கேண‌ல் இந்துனில் டீ சில்வா.

அநேக‌மான‌ அக‌திக‌ள், போர் உக்கிர‌ம‌டைய‌ த‌ம‌து வீடுக‌ளிலிருந்து எவ்வாறு வெளிக்கிட்டார்க‌ள் என்ப‌தை பிர‌பாக‌ரின் க‌தையை ஒத்த‌தாக‌வே சொன்னார்க‌ள். சில‌ர், தாங்க‌ள் வெளிக்கிடுவ‌தை புலிக‌ள் த‌டுக்க‌ முய‌ற்சித்தார்க‌ள் என்றும் கூறினார்க‌ள். உத‌வி வ‌ழ‌ங்கும் குழுக்க‌ள், புலிக‌ள் ம‌க்க‌ளைக் கேட‌ங்க‌ளாக‌ பாவிப்ப‌தையும், சில‌ ம‌க்க‌ள் வெளிக்கிட‌ முய‌ற்சித்த‌போது (புலிக‌ளால்) சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள் என்றும் குற்ற‌ஞ் சாட்டியிருக்கின்ற‌ன‌.

திருக்கோண‌ம‌லையைப் பூர்விக‌மாய்க் கொண்ட‌ பிர‌பாக‌ர், இராணுவ‌ம் வ‌ழ‌ங்கிய‌ மொழிபெய‌ர்ப்பாள‌ரும், இராணுவ‌ மேற்பார்வையும் இல்லாது க‌தைத்தார். அவ‌ருடைய‌ இர‌ண்டு அறைக‌ளுள்ள‌ குடிசை எளிமையான‌து. அங்கே ப‌டுக்கை வ‌ச‌திக‌ள் கிடையாது, அக‌திக‌ள் நில‌த்திலேயே தூங்க‌ வேண்டும். ஆனால் ந‌ன்கு காற்றோட்ட‌முள்ள‌ இட‌ம். தென்னோலைக‌ளால் வேய‌ப்ப‌ட்ட‌ கூரை சூரிய‌ ஒளியைத் த‌டுப்ப‌தில் அவ்வ‌ள‌வு ப‌ய‌னுடைய‌தாக‌ இருக்கவில்லை. அவ‌ரும் அவ‌ரைப் போன்ற‌ ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு த‌ண்ணீர் போதுமாய் த‌ர‌ப்ப‌ட்டாலும், த‌ர‌ப்ப‌டும் பிற‌ உண‌வுப் பொருட்க‌ள் மிக‌வும் குறைவென்றார். அவ‌ர‌து ம‌னைவி குடிசையின் முன்னுள்ள‌ நில‌த்தில் பூச்செடிக‌ளை ந‌ட்டிருக்கின்றார்.

இருந்தும் பிர‌பாக‌ருக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் மிக‌வும் பிர‌ச்சினைக்குரிய‌ விட‌ய‌ம் என்ன‌வென்றால், எவ்வ‌ள‌வு கால‌ம் அவ‌ர்க‌ள் இப்ப‌டியே இங்கே இருக்க‌வேண்டியிருக்கும் என்ப‌து. அர‌சாங்க‌ம், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ஊர்க‌ளுக்குத் திரும்பிப் போக‌ முன்ன‌ர், இங்கிருக்கும் அக‌திக‌ள் புலிக‌ள‌ல்ல‌ என்று சோதிக்க‌வேண்டியிருக்கிற‌து என்றும், (இவ‌ர்க‌ளின் சொந்த‌ கிராம‌ங்க‌ளிலுள்ள‌)மிதிவெடிக‌ளை அக‌ற்ற‌ அத‌ற்கான‌ குழுக்க‌ளை முத‌லில் அனுப்ப‌வேண்டியிருக்கிற‌து என‌வும் கூறுகின்ற‌து. இவ‌ர்க‌ள் இங்கே ஒரு வ‌ருட‌த்திற்கு இருக்க‌வேண்டிவ‌ரும் என்ப‌தை அர‌சாங்க‌ம் ஒத்துக்கொள்கின்ற‌து. சில‌ உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் இதை (ஒரு வ‌ருட‌த்தை) விட‌ இன்னும் நீண்ட‌ கால‌மாய் இருக்க‌க்கூடுமென‌ அஞ்சுகின்ற‌ன‌.

” நான் திரும்ப‌வும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் இருக்க‌ விரும்புகின்றேன். நாளையே நான் இங்கிருந்து போய்விட‌ விரும்புகின்றேன்” என்கிறார், ஒருகால‌த்தில் புலிக‌ளின் த‌லைந‌க‌ராய் இருந்த‌ கிளிநொச்சியைச் சேர்ந்த‌ ச‌ந்திர‌ன். “நான் இங்கே ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌வேண்டியிருப்பின், என‌க்கு விச‌ர் பிடித்துவிடும். இங்கே ப‌ல‌ நெருக்க‌டிக‌ள் இருக்கின்ற‌ன‌, முக்கிய‌மாய் நீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌ச‌திக‌ள். அத்தோடு உண‌வும் எங்க‌ளுக்கு ஏற்ற‌ ருசியாய் இருப்ப‌தில்லை. எங்க‌ளது எல்லா உடைமைக‌ளும் போய்விட்ட‌ன‌. எங்க‌ளிட‌ம் வ‌ரும்போது என்ன‌ கொண்டுவந்தோமோ அது ம‌ட்டுமே இருக்கின்ற‌து.”

31 வ‌ய‌தான‌ ந‌ந்த‌பால‌ன் என்ப‌வ‌ரும், இங்கேயிருந்து போவ‌தையே விரும்புகின்றார். “நாங்க‌ள் போக‌லாம் என்று அர‌சாங்க‌ம் சொல்கிற‌தென்றால், நாங்க‌ள் போவோம். நாங்க‌ள் ஒருவ‌ருட‌த்திற்கு த‌ங்க‌ வேண்டியிருக்குமென்றால், இங்கே நிறைய‌ப் பிர‌ச்சினைக‌ள் இருக்கும்’

இங்குள்ள‌ முகாங்க‌ளின் நிர்வாக‌த்தைப் பார்த்துக்கொள்ளும் பினான்ஸி சார்ள்ஸ், இங்கிருக்கும் அக‌திக‌ள் ஆக‌க்கூடிய‌து ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌ வேண்டியிருக்கும் என்கிறார். “நாங்க‌ள் எங்க‌ளால் எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வும் செய்து இவ‌ர்க‌ளை தேர்ச்சியுள்ள‌ குடிம‌க்க‌ளாக்குவோம்” என்கின்ற‌ பினான்ஸி அத‌ற்கான‌ பயிற்சிக‌ளும் இன்ன‌ பிற‌ விட‌ய‌ங்க‌ளும் இம்முகாமில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்.

Thanks: The Independent

April 3, 2009

பிற‌ழ்ந்த‌வ‌னின் வாக்குமூல‌ம்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 10:00 am

நானொரு கொலைகார‌னென்ப‌தை
எவரும் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை.
கொலைக‌ளுக்கான‌ சில‌ வ‌ரைமுறைக‌ளை
கைவ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள்
‘கொலை…’ என்று ஆர‌ம்பித்த‌வுட‌னேயே
ஏற்க‌ன‌வே செய்ய‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ளின்
ப‌ட்டிய‌லுட‌ன் ஒப்பிட‌த் தொட‌ங்குகின்றார்க‌ள்
முக்கிய‌மாய் கொலையைச் செய்த‌வ‌ன்
தான் கொலை செய்த‌தை ஒப்புக்கொள்வ‌தில்லையென‌வும்
இப்ப‌டி கொலையைச் செய்துவிட்டு
வெளியே ந‌ட‌மாடித் திரிவ‌த‌ற்கு
ச‌ட்ட‌த்தில் ஓட்டைக‌ள் இல்லையென‌வும்
தெளிவான‌ வாத‌ங்க‌ளை வைத்து
நான் கொலை செய்ய‌வில்லையென‌ நிரூபிக்கவும் செய்கின்றார்க‌ள்.

ந‌ன்று.
என‌க்கு அண்மைக்கால‌மாய்
எதிர்கால‌ம் ‘க‌ட‌ந்த‌கால‌மாக‌வும்’
க‌ட‌ந்த‌கால‌ம் ‘எதிர்கால‌மாக‌வும்’
பிள‌வுப‌ட்ட‌ ம‌னோநிலையில்
எதிர்கால‌த்தில் நிக‌ழ்த்த‌ப்போகின்ற‌ கொலையை
ஏற்க‌ன‌வே செய்துவிட்டேன் என்கின்ற‌போது
உங்க‌ளுக்கு பிற‌ழ்ந்த‌வ‌னின் குறிப்புக‌ள் நினைவுககு வ‌ர‌லாம்.

நான் ஏழாவ‌து முறையாக‌
காத‌லித்து கைவிட்ட‌வ‌ளோடு
ஏற்க‌ன‌வே ஆறுபெண்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்
க‌ருத்த‌ரித்து வ‌ள‌ர்ந்த‌ காத‌ற் சிசுக‌ளைக் கொன்றேனென‌
அழ‌கிய‌லோடு க‌விதை சொல்ல‌ பிரிய‌முண்டெனினும்
கொலைக‌ள் எப்போதும் குரூர‌மான‌வை
இப்போது கிறுக்கிக்கொண்டிருக்கும் க‌ர‌டுமுர‌டான‌
இந்த‌ ஏதோ ஒன்றைப்போல‌.

கொலை செய்தேன் செய்தேனென‌
என‌தெல்லாப் பிர‌திக‌ளிலும்
எழுதிய‌த‌ன் அலுப்புத் தாங்காது
உண்மைக‌ளை அறிவ‌த‌ற்காய்
விம‌ர்ச‌ன‌க் க‌த்திக‌ளோடு அவச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய்
பிரேத‌ப் ப‌ரிசோத‌னைக்கு வ‌ருகின்றீர்க‌ள்
முத‌லில் இஃதொரு க‌விதை இல்லையெனும் நீங்க‌ள்
இங்கே பாவிக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள்
ஏற்க‌ன‌வே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையால்
க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ எழுத்தும் கூட‌
என்கிறீர்க‌ள்.

நான் க‌விதையை அல்ல‌,
கொலைக்கான‌
என் வாக்குமூல‌த்தைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
மேலும்
ஏற்க‌ன‌வே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளனான
ஒரு மொழியில்
வார்த்தைத் திருட்டுக்களைத்தான்
நாமெல்லோரும் செய்துகொண்டிருக்கின்றோமென‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு அண்மையாக‌ நின்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

பிர‌திக்கு அப்பால‌ல்ல‌
அத‌ற்கு உள்ளேதான் எல்லாம் உள்ள‌தென்று
பூத‌க்க‌ண்ணாடியின் துணையோடு மீண்டும் தோண்டுகின்றீர்க‌ள்
அர்த்த‌ம‌ற்ற‌ சொற்க‌ளென்று வெட்ட‌த்தொட‌ங்கினால்
எஞ்சியிருக்கும் தாளின் முற்றுப்புள்ளியிலும் புதிய‌தொரு அர்த்த‌மிருக்கும்
புன்ன‌கை பூச‌ப்ப‌ட்டவென் சொரூப‌ குண‌த்துக்குள்
நான் செய்த‌ கொலையும் ம‌றைந்திருக்கலாம்

இல்லை, இல்லை
இது உன் ம‌ன‌ப்புதிர்க‌ளால் க‌ட்டிய‌மைத்த‌
ச‌துர‌ங்க‌ப் பெட்டிக‌ளில் எம்மைய‌ழைத்து
முடிவுறாத‌ ஆட்ட‌திற்கான‌ முஸ்தீபுக‌ளென்ற‌ப‌டி
நீ கொலையே செய்ய‌வில்லையென‌ பூத‌க்க‌ண்ணாடியோடும்
க‌த்திரிக்கோலுட‌னும் வெளியேறிவிடுகின்றீர்க‌ள்.
ந‌ண்ப‌ர்க‌ளே உங்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றேன்
த‌ய‌வு செய்து நான் செய்துவிட்ட கொலையைக் க‌ண்டுபிடித்து
கொலைகார‌ன் என்றென்னை அடையாள‌ப்ப‌டுத்துங்கள்.
இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவ‌ரிட‌மும் பிடிப‌டாம‌ல் இருப்ப‌தென்ப‌து
நான் மிக‌வும் க‌டின‌ப்ப‌ட்டு செய்துவிட்ட‌
கொலையை ம‌திப்ப‌ற்ற‌தாக்கி விடுகிற‌து.

ப‌ட‌ம்: Galatea of the Spheres by Salvador Dali

March 13, 2009

க‌ன‌வுக‌ளைச் சாம்ப‌ல் வான‌த்தில் தூவிச்சென்ற‌ இருப‌ற‌வைக‌ள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 8:28 am

1.
உன‌க்கான‌ இட‌ம் இதுவ‌ல்ல‌வென‌ உன‌க்கு ந‌ன்கு தெரியும். ப‌ல‌முறை ப‌ல‌வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் அது நிரூபிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து. ஆனாலும் நீ சாம‌ர்த்திய‌மாய் சில‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்கி அவ‌ற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உன‌து சுய‌ம், உன‌து க‌ர்வ‌ம், உன‌து கோப‌ம் எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை நீ ந‌ன்க‌றிவாய். இனி முதுகை இன்னுமாய் வ‌ளைப்ப‌த‌ற்கு முள்ள‌ந்த‌ண்டும், போலியாய்ச் சிரிப்ப‌த‌ற்கு உத‌டுக‌ளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய‌ புதிய‌ முக‌மூடிக‌ளை அணிந்துகொள்வ‌த‌ற்கு நீ த‌யாராக‌ இருக்கிறாய். உன்னுடைய‌ க‌ன‌வுக‌ள் வேறுவித‌மான‌வை என்று நீ செம்ம‌ண் த‌ரைக‌ளில் காற்ச‌ட்டை க‌ழ‌ன்று விழ‌ விழ‌ ஓடிய‌ நாட்க‌ளிலிருந்தே நாம‌னைவ‌ரும் அறிவோம். ஆனால் ஒரு ம‌த்தியான‌ நாளில் உன‌து ம‌ண்ணையும், (அரைக்)காற்ச‌ட்டைக‌ளையும் நீ கைவிட்டு வந்த‌பின், உன‌து க‌ன‌வுக‌ளையும் கைவிட்டு வ‌ந்துவிட்டாயோ என்றுதான் எண்ண‌த்தோன்றுகின்ற‌து. ஆனால் குளிர்கால‌த்தில் பெருங்காற்று வீச‌ உன‌து அறைக்க‌ண்ணாடி ய‌ன்ன‌ல் அல‌றுவ‌துபோல‌, உன‌க்கும் உன‌க்கான‌ க‌ன‌வுக‌ள் அவ்வ‌ப்போது ஞாப‌க‌ங்க‌ளில் வ‌ந்து போகின்ற‌ன‌. நீ த‌னிமையையும், உரையாடும் மெல்லிய‌ குர‌ல்க‌ளையும் விரும்புகின்ற‌வ‌னாய் இருந்திருக்கின்றாய். இப்போது எழும் உன‌து க‌டுமையான‌ குர‌ல்க‌ளில் நீ நீயில்லாத‌வ‌னாகிப் போய்க்கொண்டேயிருக்கின்றாய். உன்னோடு உரையாடும் பிற‌ரோடு அள‌விற‌ந்த‌ அன்போடு உரையாட‌லைத் தொட‌ரும் நீ, ச‌டுதியாய் ஒருபுள்ளியில் ஏதோ சூனிய‌த்தில் த‌னித்த‌லைப‌வ‌னாய் மிக‌ மிக‌ அமைதியாகிப் போகின்றாய். அந்த‌த் திடீர் ம‌வுன‌ம் எதிரே உரையாடிக்கொண்டிருப்ப‌வ‌ரை ம‌ட்டுமல்ல‌ உன்னையும் மிக‌வும் அச்ச‌மூட்ட‌ச் செய்கின்ற‌து. ஆனால் உன்னைப் புரிந்துகொள்ப‌வ‌ர்க‌ளாய் உன்னோடு உரையாடுப‌வ‌ர்க‌ள் இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் மீண்டும் உன்னோடு உரையாட‌ப் பிரிய‌த்தோடு வ‌ருகின்றார்க‌ள். அது உன‌க்குச் ச‌ற்று ஆசுவாச‌மாய் இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் நீ வித‌ந்து ஏற்றிய‌வையெல்லாம் உன்னை விட்டுத் தொலைதூர‌த்தில் போயிருப்ப‌தைப் பார்க்க‌ உன‌க்கு மிக‌வும் விச‌ன‌மாக‌ இருக்கிற‌து. உண்மையில் அவைக‌ள் உன்னைவிட்டு வில‌கிப்போக‌வில்லை; நீதான் அவைக‌ளை விட்டு வெகுதொலைவுக்கு வ‌ந்துவிட்டாய். பெண்க‌ள், இய‌ற்கை, ப‌ய‌ண‌ம், ம‌து அருந்துத‌ல் (குடித்த‌ல் அல்ல‌) என்று உன‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட்டிய‌லை எழுதத் தொட‌ங்கினால் அது முடிவ‌ற்றுப் போய்க்கொண்டிருக்க‌க்கூடும். ஒரு குழ‌ந்தையிட‌ம் அத‌ற்குப் பிடித்த‌மான‌து எவை என்றால் அது த‌ன‌க்குத் தெரிந்த‌ எல்லாவ‌ற்றையும் ‍எவ்வித‌ முன்முடிவுக‌ளின்றி சொல்லிக்கொண்டிருக்குமோ அதுபோல‌ நீயும் இந்த‌ உல‌கை ஒருகால‌த்தில் அத‌ன் அழ‌கிய‌லோடும் குரூர‌த்தோடும் சேர்த்தே நேசித்திருக்கின்றாய். ந‌ல்ல‌தும் கெட்ட‌தும், அழ‌கும் அழ‌கின்மையும், ம‌கிழ்ச்சியும் துக்க‌மும் க‌ல‌ந்தவையே ‘உண்மையான‌வை’ என்றும், அவ்வாறான‌ க‌ல‌வைக‌ளை எதிர்கொள்வ‌தும் அனுபவிப்ப‌தும், க‌ட‌ந்துசெல்ல‌லுமே வாழ்க்கையின் அற்புத‌மென‌ நீ ஒரு கால‌த்தில் சொல்லிக்கொண்டு திரிந்த‌து உன‌க்கு நினைவு இருக்கிற‌தோ தெரியாது என‌க்கு ந‌ன்கு நினைவிலுண்டு. நீ இன்று ஒற்றை இல‌க்கைக் கொண்ட‌வ‌னாய், ஒற்றைத் த‌ன்மைக்குள் எல்லாம் அட‌ங்கிவிடுமென‌ ந‌ம்புப‌வ‌னாய் ம‌ட்டும் க‌ண்ணும் க‌ருத்தாய் இருப்ப‌தைப் பார்க்கும்போது மிக‌வும் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. ஆனால் இதைவிட‌ மிக‌ச் சோக‌மான‌து என்ன‌வென்றால் இவ்வாறு ஒன்றுக்காய் ம‌ட்டுமே ஓடிக்கொண்டிருப்ப‌து உன‌து இய‌ல்பு இல்லை என்ப‌தால் ஒவ்வோரு முய‌ற்சியிலும் நீ தோற்றுக்கொண்டேயிருக்கிறாய். முய‌ற்சிப்ப‌தோ, தோல்விக‌ளைச் ச‌ந்திப்ப‌தோ த‌வ‌று என்று எவ‌ரும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனால் தோல்விக‌ளிலிருந்து எதையாவ‌து க‌ற்றுக்கொள்ளும்போது தான் உன‌து முயற்சிக‌ள் ஆக்க‌பூர்வ‌மான‌தாய் மாறும் என்ப‌தை நீ ஒருகால‌த்தில் அறிந்த‌தை நீ இப்போது ம‌றந்துவிட்டாய். எனெனில் நீ ஒற்றை இல‌க்குடைய‌ ஒற்றைத் த‌ன்மையுடைய‌வ‌னாய் மாறிவிட்டாய். இத‌ற்காய் நீ உன‌து எல்லா இய‌ல்புக‌ளையும் க‌லைத்து நிற்ப‌வ‌னாய்ப் பார்க்கும்போது, என‌க்கு இலைக‌ளை உதிர்ந்த‌ இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ள்தான் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ளுக்கு ப‌ருவ‌ங்க‌ளுக்கேற்ப‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளும் இய‌ல்பு உள்ள‌தால் அவை மீண்டும் வ‌ச‌ந்த‌ கால‌த்தில் த‌ங்க‌ளை இலைக‌ளைத் துளிர்க்க‌ச் செய்து, த‌ம் வாழ்வைக் கொண்டாடுப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. ஆனால் நீ அப்ப‌டியில்லை, இலைதுளிர்கால‌ம், வ‌ச‌ந்த‌கால‌ம், இலையுதிர்கால‌ம், ப‌னிக்கால‌ம் என‌ எல்லாக்கால‌ங்க‌ளிலும் ஒற்றை இல‌ட்சிய‌த்தோடே ஓடிக்கொண்டிருப்ப‌தால், உன்னால் உன‌து தோல்விக‌ளின்போது உன்னை மீண்டும் புத்துயிர்வாக்க‌ முடிவ‌தில்லை.

2.
இன்று ஒரு மாதிரியாக‌ நீ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌தன் மூல‌ம் உன‌து இட‌த்தை நிரூபித்துவிட்டாய். ஒரு விட‌ய‌த்தின் வெற்றியை/தோல்வியை பிற‌ரோ பிற‌தோ தீர்மானிப்ப‌தில்லை. அது ந‌ம‌து ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என‌ நானும் நீயும் பில்லிய‌ட்ஸ் விளையாடிய‌ப‌டி விவாதித்த‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. நாம் ஒரு முயற்சியில் ஈடுப‌ட்டு அதில் நாம் எதிர்பார்த்த‌ விளைவு கிடைக்காவிட்டாலும், எம‌தள‌வில் நாம் முழுதாய் முய‌ற்சித்தோம் என்று வ‌ரும் ந‌ம்பிக்கை, நாம் ஒரு விட‌ய‌த்தில் ‘தோற்றிருந்தாலும்’, ந‌ம்மைப் பொருத்த‌வ‌ரை அது ம‌கிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌ ‘வெற்றியே’ என‌த்தான் புதிதாய் வ‌ரைய‌றையும் செய்திருந்தோம். இன்னும் விரிவாய் விள‌ங்குவ‌த‌ற்காய் நாம் ஒவ்வொரு செம்ஸ்ட‌ரிலும் எழுதும் ப‌ரீட்சையை உதார‌ண‌த்திற்கு எடுத்திருந்தோம். ப‌ரீட்சையில் அதிக‌ புள்ளிக‌ள் என்ப‌தில‌ல்ல‌ ந‌ம‌து வெற்றி, நாம் ஒரு ப‌ரீட்சையை திருப்ப‌தியாய் எம்ம‌ள‌வில் செய்திருக்கின்றோம் என்று வ‌ருகின்ற‌ நிம்ம‌தியே ந‌ம‌க்கான‌ வெற்றியென‌ச் சொல்லிய‌ப‌டி ரீடோ ஆற்ற‌ங்க‌ரையிலும், பொறியிய‌ல் பீட‌மிருந்த‌ மெக்க‌ன்ஸி வ‌ளாக‌த்திலும் க‌ண‌ட‌ க‌ண்ட‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுத்து அவ‌ர்க‌ளைக் ‘கொடுமை’யும்ப‌டுத்தியிருக்கின்றோம். ஆக‌ ந‌மதான‌ வரைய‌றுப்பில் ஒரு பாட‌த்தில் குறைய‌ புள்ளிக‌ள் எடுத்தாலும் (சில‌வேளைக‌ளில் தேர்ச்சிய‌டையாம‌ல் போனால் கூட‌) ந‌ம‌த‌ள‌வில் திருப்ப‌தியாய்ச் செய்திருக்கின்றோம் என்றால் எம‌தான வெற்றியே. இவ்வாறாக‌ வெற்றி X தோல்வியை வ‌ரைய‌றுத்த‌ நாம், நீ ‘ப‌ண‌த்தைச் சேக‌ரிப்ப‌தில் ம‌ட்டுமே ந‌ம‌து எல்லாப் பெருமித‌ங்க‌ளும், ச‌ந்தோச‌ங்க‌ளும் இருக்கிற‌து’ என்கின்ற‌போது கேட்க‌ச் ச‌ங்க‌ட‌மாக‌வே இருக்கிற‌து. இத‌ன் பொருட்டு உன‌து உழைப்பையோ அல்ல‌து பொதுவாக‌ உழைப்பையோ கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ல்ல‌ என‌து நோக்க‌ம‌. மிக‌க்குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்தின் கார‌ண‌மாக‌ ஏழு நாட்க‌ளாக‌ வேலை செய்ப‌வ‌ர்க‌ளையோ, ஒரு நாளில் 12 ம‌ணித்தியால‌த்துக்கு மேலாய் இர‌ண்டு ஷிப்ட்(shift) செய்ப‌வ‌ர்க‌ளையோ நாமெல்லோரும் ம‌திக்க‌வே செய்கின்றோம் என்ப‌தை நீய‌றிவாய். ஆனால் உன‌து வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எட்டு ம‌ணித்தியால‌ வேலையிலேயே உன‌க்குப் போதுமான‌ ப‌ண‌த்தை உழைத்தும் இன்னும் வேண்டுமென‌ நீ அலைய‌த்தொட‌ங்கிய‌போது உன‌க்கும் என‌க்குமிடையில் விரிச‌ல் வ‌ந்திருக்க‌வேண்டும் போலும். நீ உன‌து எட்டு ம‌ணித்தியால‌ வேலைக்குப் பிற‌கும் புதிய‌ புதிய‌ வேலைக‌ளைச் செய்ய‌த்தொட‌ங்கினாய். அவ்வாறான‌ உதிரிவேலைக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டால் உன‌து சிறுவ‌ய‌துக் க‌ன‌வுக‌ளைப் போல‌ அவையும் நீண்டுகொண்டே போக‌க்கூடிய‌தாக‌ இருக்கும். ஒரு ப‌ல்பொருள் அங்காடியில் போய் எல்லாப் பொருட்க‌ளையும் எடுக்க‌முடிவ‌துபோல‌ உன்னிட‌ம் வ‌ரும் வாடிக்கையாள‌ரிட‌ம் நீயே அவ‌ர்க‌ளின் வாழ்க்கைகுத் தேவையான‌ எல்லாவ‌ற்றையும் செய்து த‌ருகின்றேன் என்கின்ற‌போதுதான் ப‌ய‌முறுத்துகின்ற‌து. எல்லாவ‌ற்றையும்… சாம‌ர்த்திய‌ வீட்டிலிருந்து க‌லியாண் வீடுவ‌ரை ப‌க்கேட்ஜாக‌ (package) கொடுப்ப‌தைப் போல‌, நீ அவ‌ர்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொடுப்ப‌வ‌னாக‌ இருக்கின்றாய். நீ ஒருகால‌த்தில் ப‌ண‌த்தை ருசிப்ப‌வ‌னாக‌ இருந்து, இப்போது ப‌ணம் உன்னை உருசிப்ப‌தாய் இருக்கும்போது, அந்த‌ வெறியில் நீ புதிய‌ ம‌னித‌ர்க‌ளை (உன‌து மொழியில் சொல்வ‌த‌னால் வாடிக்கையாள‌ர்க‌ளை)தேடி ஓட‌த்தொட‌ங்குப‌வ‌னாய் ஆகிவிட்டாய். இப்போது உன்னோடு உரையாடும்போது -தொலைபேசியில் வ‌ரும் ஒரு ரெலிமார்க்கெட்டிங் குர‌லுக்கும்- உன்னுடைய‌ குர‌லுக்கும் அவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் தெரியாது -மிக‌ இய‌ந்த‌ர‌த்த‌ன‌மாய்ப்- போய்விட்ட‌து. உன‌து எல்லாப் பேச்சும் ப‌ணத்தை இன்னும் இன்னும் எப்ப‌டி அதிக‌மாய்ச் ச‌ம்பாதிப்ப‌து என்ப‌தாய் இருக்கிற‌து. தொலைபேசி -ரெலி மார்க்கெட்டிங்- குர‌லை ஆக‌ இய‌லாத‌ ப‌ட்ச‌த்தில் ச‌ட்டென்று துண்டித்து அடுத்த‌ வேலையைப் பார்க்க‌ப் போய்விடலாம். ஆனால் என்னால் உன‌க்கு அதைச் செய்ய‌முடியாது; எனெனில் நீ என‌க்கு ஒரு கால‌த்தில் எல்லாவ‌ற்றையும் ப‌கிரும் உண்மையான‌ ந‌ண்ப‌னாக‌ இருந்த‌வ‌ன்.

உன‌க்கான‌ புக‌ழ், நீ விரும்பிய‌ அந்த‌ஸ்து எல்லாம் இப்போது வ‌ந்துவிட்ட‌ன. ஒரு கைய‌ட‌க்க‌மான‌ விசிட்டிங் கார்ட்டில் எவ்வ‌ள‌வுதான் எழுத்தை நுணுக்கி நுணுகி எழுதினாலும் நீ செய்துகொண்டிருக்கும் ப‌ல‌வேறு வேலைக‌ளுக்கான‌ விப‌ர‌ங்க‌ளை எழுதிவிடுத‌ல் க‌டின‌மாய் இருக்கிற‌து. உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்காய் இனி வ‌ருங்கால‌த்தில் விசிட்டிங் கார்டுக‌ள் 11 X14 ப‌க்க‌ சாதார‌ண‌ ப‌க்க‌மாய் மாற‌வும் கூடும். நீ விரும்பிய‌ ஒற்றைக் குறிகோளின் உச்ச‌க்க‌ட்ட‌த்தில் ச‌மூக‌ம் முழுதாய் உன்னை ம‌திப்ப‌த‌ற்கு ஏதோ ஒன்று குறைகிற‌தென்றாய். ஒருநாள் நீ சொன்னாய், ச‌மூக‌த்தில் ம‌திப்புள்ள‌ ம‌னித‌ன் என்றால் அவ‌ன் சுற்ற‌ம் சூழ‌ல் சூழ‌ ஒரு பிர‌மாண‌ட‌த் திரும‌ண‌த்தைச் செய்ப‌வ‌னாக‌ இருந்தாக‌ வேண்டும். நீ உன‌து வாடிக்கையாள‌ருக்கு எல்லாவ‌ற்றையும் ப‌க்கேட்ஜாக‌ கொடுப்ப‌தைப் போல‌ திரும‌ண‌த்தை ஒரு ஆட‌ம்ப‌ர‌ ப‌க்கேட்ஜாக‌ செய்வதில் உன‌க்கு எந்த‌ப் பிர‌ச்சினையுமில்லை. ஆனால் என‌க்கிருக்கும் க‌வலை என்ன‌ என்றால் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், வீடியோ, சட‌ங்கு செய்யும் அய்ய‌ர், வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கான‌ விருந்துண‌வு என‌ எல்லாம் சேர்ந்தே வ‌ரும் ப‌க்கேட்ஜ்க‌ளில் இருப்ப‌துபோல‌, ம‌ண‌ம‌க‌ன் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌னும், ம‌ண‌ம‌க‌ள் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌ளும் சேர்ந்த ஒரு சிற‌ப்புப் ப‌க்கேட்ஜ் வ‌ர‌க்கூடுமோ என்ப‌தே. உன‌து திரும‌ண‌த்தின்போது நீ சீத‌ன‌ம் வாங்க‌வில்லை என்ப‌து சிறு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து ந‌ண்ப‌னின் சில‌ இய‌ல்புக‌ள் இன்னும் மாறாம‌ல் இருக்கிற‌து என்ப‌தில் என்னைவிட‌ வேறு யார் அதிக‌ம் குதூக‌லிக்க‌ முடியும்? எனினும் சில‌ர் நீ உன‌து ம‌ண‌ம‌க‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது பெண் அக்குடும்ப‌த்தில் ஒரெயொரு பிள்ளையாக‌ இருக்க‌வேண்டுமென்ப‌தில் உறுதியாய‌ இருந்த‌தாக‌வும் அத‌ற்கான‌ கார‌ண‌ம் எப்போதோ ஒரு கால‌த்தில் அவ‌ர்க‌ளின் முழுக்குடும்ப‌ச் சொத்தும் உன‌க்கு வ‌ரும் என்கின்ற‌ ம‌றைவான‌ திட்ட‌ம் இருந்த‌தாக‌வும் பேசியிருக்கின்றார்க‌ள். ஆனால் அது குறித்து நான‌திக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. எனெனில் எல்லாவ‌ற்றையும் ஆக‌வும் அல‌சி ஆராய்ந்தால் எவ‌னுமே யோக்கிய‌ன் இல்லையென்ப‌தை நாமெல்லோருமே அறிவோம். ஆக‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் எம்மால‌ இய‌லக்கூடிய‌வ‌ற்றை நாம் ந‌ம்பிய‌வ‌ற்றை கைவிடாதிருப்ப‌து ஒவ்வொரு ம‌னித‌ருக்கு அவ‌சிய‌மான‌து என்ப‌தை உண‌ர்ந்து வைத்திருக்கின்றேன்.

உன‌க்குத் துணையாக‌ வ‌ந்த‌ பெண் அவ்வ‌ள‌வு அருமையான‌வ‌ள் என்ப‌தைவிட‌, நாம் தானே ஒருவ‌ர் ந‌ல்ல‌வ‌ராக‌ அல்ல‌து அல்லாத‌வ‌ராக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்குவ‌தாய் இருக்கின்றோம். ‘தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ரா’ என்ப‌து எவ்வ‌ள‌வு அருமையான‌ வ‌ரிக‌ள். ந‌ம‌தான‌ வாழ்வை நாமே அமைக்கும்போது எல்லா விளைவுக‌ளுக்கும் நாமேதானே பொறுப்பாக‌ முடியும். ஓரிட‌த்தில் நிலையாக‌ இருக்கும் க‌திரையைக் க‌வ‌னிக்காது, நம‌து கால்க‌ள் அடிப‌ட்ட‌வுட‌ன், க‌திரை அடித்துவிட்ட‌தென்று கூறுவ‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மான‌து. ந‌ம‌து கால்க‌ள‌ க‌திரையை அடித்துவிட்ட‌தென்று சொல்வ‌த‌ல்ல‌வா சால‌ச்சிற‌ந்த‌து. இந்த‌த் ‘தேற்ற‌ம்’ குறித்து விரிவாக‌ உரையாடிய‌து, தே(ர்)மோ டைன‌மிக்ஸ் (Thermo Dynamics) எக்சாமிற்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் அம‌ர்ந்த‌ ஒரு நாளில் என்ப‌து என‌க்கு நன‌றாக‌ நினைவிருக்கிற‌து. இப்போது தேர்மோ டைனமிக்ஸில் என்ன‌ ப‌டித்தோம் என்ப‌து ஞாப‌க‌ அடுக்குக‌ளில் இருப்ப‌தைவிட‌ இந்த‌ விதண்டாவாத‌ங்க‌ள் தான் அதிக‌மாய் நினைவில் ஓடிய‌ப‌டியிருக்கிற‌து. நம்மைப் போல‌வே நாம் ப‌டிக்க‌த் தேர்ந்தெடுத்த‌ துறையும் த‌வ‌றான‌து என்று கூறுவ‌தைவிட‌ வேறென்ன‌ சாட்டைச் சொல்லி ந‌ம்மை நாமே ஆறுத‌ற்ப‌டுத்துவ‌து? என‌க்குத் தெரியும் நான் இப்ப‌டிக்கூறுவ‌து உன‌க்குப் பிடிக்காது என்று. ‘வ‌ல்ல‌வ‌னுக்கு புல்லும் ஆயுத‌ம்’ என்றிருக்கும்போது இப்ப‌டிச் சாட்டுக்க‌ள் கூறிக்கொண்டிருப்ப‌து என்ப‌து ஒருவ‌கைத் த‌ப்பித்த‌ல் என்றுதான் நீ அடிக்க‌டி கூறுவாய். உண்மையாயிருக்கலாம். போரிலிருந்து, நேச‌த்திலிருந்து, க‌ற்ப‌திலிருந்து என்று எத்தனை வித‌மான‌ விட‌ய‌ங்க‌ளிலிருந்து த‌ப்பித்து ஓடிக்கொண்டிருக்கும்போது இதுவும் இன்னொரு த‌ப்பித்த‌லாய் இருக்கலாம்தான்.

3.
நீ உழைத்துப் பெறும் ப‌ண‌த்தைப் போல‌வே உன‌து துணையையும் ச‌ட‌ப்பொருளாக‌ நினைத்து நட‌த்திய‌போதுதான் எல்லாச் சிக்க‌ல்க‌ளும் உன‌து திரும‌ண‌ வாழ்வில் வ‌ர‌த்தொட‌ங்கின‌. ப‌ண‌த்தைப் போல‌ பெண்ணையும் நீயுன‌து உட‌மையாக்கிய‌போது உயிருள்ள‌ எந்த‌ ஆத்மாவால்தான் தாங்க‌ முடியும்? உன‌து ப‌ண‌ம் சேக‌ரிக்கும் ஆசையில் ப‌க‌ல்- பின்னேர‌ம் என்று ஓட‌ ஓட‌ உன‌து துணை மிக‌ப்பெரும் த‌னிமையில் விட‌ப்ப‌ட்டிருக்கிறாள். திரும‌ண‌மான‌ பெண்ணை ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, அதுவ‌ரை எல்லாவ‌ற்றையும் க‌வ‌னித்து க‌வ‌னித்துக் கொடுக்கின்ற‌ பெற்றோர் கூட அவ‌ளை வேறொருத்தியாய் பார்க்கும் நிலையை என்ன‌வென்று சொல்வ‌து? ஒருநாள் நீ விட்டுக்கு வ‌ந்த‌போது அவ‌ள் த‌ன‌து மாமியின் ம‌க‌னோடு வீட்டிற்குள் க‌தைத்துக்கொண்டிருந்த‌து உன‌க்குள் ப‌ல ச‌ந்தேக‌ங்க‌ளை விதைக்க‌த் தொட‌ங்கின‌. பிள்ளை இல்லாத‌ப‌டியால்தானே இவ‌ள் இப்ப‌டி ம‌ற்ற‌வ‌ரோடு ப‌ல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என்று விரைவில் உங்க‌ளுக்கான‌ பிள்ளையைப் பெறும் முய‌ற்சியில் ஈடுப‌ட‌த்தொட‌ங்கினாய். பிள்ளை வ‌ந்தால் எல்லாப் பிர‌ச்சினையும் தீருமென்ற‌ கால‌ம் கால‌மாய் சொல்ல‌ப்ப‌ட்ட‌த்தை நீயும் ந‌ம்புவ‌தாயிருந்த‌போது, நாம் க‌விதையொன்றில் விவாதித்த‌ வ‌ளாக‌ கால‌த்து ந‌ண்ப‌னாய் நீ இல்லையோ என‌ என‌க்குத் தோன்றிய‌து. உன‌து துணை மீதான ச‌ந்தேக‌ம், அவ‌ள் த‌ன்னை அழ‌குப‌டுத்துவ‌தில், த‌னியே வெளியே செல்வ‌தில், தொலைபேசுவ‌தில் என‌ எல்லாவ‌ற்றிலும் சந்தேக‌ப்ப‌டத்தொட‌ங்கினாய். அவ‌ள் செய்யும் ஒவ்வொரு விட‌ய‌த்திற்கும் நீ விள‌க்கம் கேட்க‌த்தொட‌ங்கினாய்.

ஒரு நாள் நானும் நீயும் செக‌ண்ட‌ க‌ப்பில் (Second Cup) தேநீர‌ந்திக்கொண்டிருந்த‌போது, ‘இவ‌ள‌வை வெளியே எல்லாத்தையும் மூடிக்கொண்டு உள்ளே எல்லாவ‌ற்றையும் திற‌ந்துகொண்டு திரிகிறாள‌வை’ என்றாய். இதைக்கேட்ட‌ ஆத்திர‌த்தில் ‘ஏன் நாங்க‌ளுந்தானே எவ‌ள் திற‌ந்து காட்ட‌மாட்டாளென்று எங்க‌டைய‌ளை துருத்திக்கொண்டு திரிகிறோம்’ என்று நான் சொன்ன‌போது உன் க‌ண்க‌ளில் தெரிந்து விய‌ப்பா கோப‌மா என்ப‌து குறித்து நான் அக்க‌றை கொள்ள‌வில்லை. உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்குமோ இல்லையோ தெரியாது, ஒரு கால‌த்தில் நாங்க‌ளுந்தானே ஒரு பெட்டையாவ‌து எங்க‌ளோடு க‌தைக்கா மாட்டாளா.., சேர்ந்து கூட‌த்திரிய‌ மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றோம். ஒருமுறை ந‌ல்ல‌ வ‌டிவான‌ பெட்டை short skirtம், white topமுமாய் ப‌ஸ்சில் ஏறிய‌போது, வ‌குப்புக்காய் க‌ம்ப‌ஸில் இற‌ங்காம‌ல் அவ‌ள் எங்கே இற‌ங்குவாளோ அங்கே போய் இற‌ங்குவோம் என்று, அவ‌ளோடு போய் அவ‌ளை அவ‌ள் வீடு வ‌ரை ப‌த்திர‌மாய்க் கொண்டுபோய் விட்ட‌தை ம‌ற‌ந்துவிட்டாயா? அப்ப‌டித் திரும்பி வ‌ருகையில் ஒரு ப‌ல்ல‌க்கு ம‌ட்டும் இல்லை; இருந்திருந்தால் அவ‌ளை இந்த‌ ந‌க‌ர் பூரா நாங்க‌ள் அடிமைக‌ள்போல‌ தூக்கிக்கொண்டு திரிய‌வும் த‌யாராயிருந்திருப்போம் என்று எங்க‌ள‌ நிலையை நாங்க‌ளே ந‌க்க‌ல‌டித்த‌ அந்த‌ப் பின்னேர‌ப்பொழுதை ம‌ற‌ந்து, எப்ப‌டி ‘இவ‌ள‌வை எல்லாவ‌ற்றையும் விரித்துக் காட்டிக்கொண்டு திரிகிறாளாவை’ என்கிறாய்.

4.
செய்கின்ற‌ எல்லாவ‌ற்றுக்கும் விள‌க்க‌ங்க‌ள் கொடுத்துக்கொண்டிருக்க‌ முடியுமா என்ன‌? அவ‌ள் சில‌வேளைக‌ளில் உன‌து கேள்விக‌ளுக்கு எதையும்பேசாது ம‌வுன‌மாகும்போது வார்த்தைக‌ள் த‌டிக்க‌ப் பேசிய‌ உன் வ‌ன்முறை மெல்ல‌ மெல்ல‌ உட‌லில் கைவ‌க்கும‌ள‌வுக்கு மாறிப்போய்விட்ட‌து. 911 ஜ‌ அழைப்ப‌தோ, த‌ன‌து பெற்றோரை அழைத்து த‌ன‌து நிலைமைக‌ளைச் சொல்வ‌தோ அவ‌ளுக்குக் அவ்வ‌ள‌வு ஒன்றும் க‌டின‌மான‌ விட‌ய‌மில்லை. உன் மீதான‌ அன்பின் நிமித்த‌மோ அல்ல‌து பெண் என்றால் பொறுத்துதான் ஆக‌வேண்டும் என்ற‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ப‌டியாலோ அவ‌ள் எதுவும் எதிர்வினை செய்யாத‌தை உன‌க்கு வ‌ச‌தியான‌தாய் ஆக்கிக்கொண்டாய். ஒருநாள் இவ்வாறு நீ ஆம்பிளைத்த‌ன‌த்தைக் காட்டிய‌ ம‌றுநாள் நான் உங்க‌ள் வீட்டுக்கு வ‌ந்திருந்த‌போது அவ‌ளின் வ‌ல‌துப‌க்க‌ வாய் மிக‌வும் வீங்கியிருப்ப‌தை அவ‌தானித்திருதிருக்கின்றேன். ‘என்ன‌ ந‌ட‌ந்த‌து’ என்று கேட்ட‌த‌ற்கு ‘ஒன்றுமில்லை ப‌ல்லு வ‌லி அதான்’ அப்ப‌டியென்றிருக்கிறாள். ஆனால் மூக்கின் மேலே பிளாஸ்ர‌ர் ஒட்ட‌ப்ப‌ட்டிருந்த‌த‌ற்கும் ப‌ல் வ‌லிதானா காரண‌மா என்று கேட்க‌ விரும்பிய‌ வார்த்தைக‌ளை நான் என‌க்குள் விழுங்கிக்கொண்டேன். இப்ப‌டி மூர்க்க‌மாய் வ‌னமுறை செய்ப‌வ‌ர்க‌ள் மூர்க்க‌மாக‌வே அன்பும் செய்து வ‌ன்முறைக்குள்ளாவ‌ர்க‌ளை த‌ங்க‌ளுக்கு ஏற்ற‌வாறு அடக்கி வைத்திருப்பார்க‌ள் என்ப‌து குறித்து தெளிவிருந்தாலும், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் வாய் திற‌ந்து முறைப்பாடு செய்யாதிருக்கும்வ‌ரை பிற‌ரால் எதுவும் உத‌வ‌ முடிவ‌தில்லை என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. அத்தோடு அப்போது உன‌து துணை க‌ர்ப்ப‌மாக‌வுமிருந்தாள். ஆக‌வே நானும் ‘எல்லோரையும்போல‌’ பிளளை பிற‌ந்த‌வுட‌ன் உங்க‌ள் இருவ‌ருக்குமான‌ உற‌வு சுமுக‌மாகிவிடுமென‌ ந‌ம்பியிருந்தேன். பிள்ளை பிற‌ந்து அவ‌னுக்கு ஒரு வ‌யது வ‌ந்த‌வுட‌ன் ஒரு பெரிய‌ பிற‌ந்த‌நாள் விழாவைக் கொண்டாட‌ச் செய்திருந்தாய். சாம‌ர்த்திய‌ வீடுக‌ள் போல‌ பிற‌ந்த‌நாட்க‌ளுக்குப் போவ‌தும் என‌க்குப்பிடிப்ப‌தில்லை என்ப‌தால், நான் மொன்றிய‌லுக்குப் போக‌ இருப்ப‌தால் வ‌ர‌முடியாதிருக்கென‌ ஒரு சாட்டுச் சொன்னேன். நீ என்னோடு நெருங்கிப் ப‌ழ‌கிய‌வ‌ன் என்ப‌தால் உன‌க்கு எது உண்மையென‌ப் புரியுமென‌ என‌க்கு ந‌ன்கு தெரியும். ஆனால் ம‌னித‌ ம‌ன‌து ‍-முக்கிய‌மாய் உன‌து ம‌ன‌து‍- ஏதோ ஒரு கார‌ண‌த்தை, அது பொய்யாக‌ இருந்தாலும் அதைக்கேட்க‌வே விரும்புகிற‌து. வ‌ள்ளுவ‌ரும் சூழ‌லைப் பொறுத்து பொய் சொல்வ‌தையும் ஏற்றுக்கொள்ள‌லாம் என்கிறார். கூட‌க்குடித்து கூழ்ப்பானைக்குள் விழுந்த‌தைவிட‌ அற‌ப்பானைக்குள் விழுந்தெழும்பிய‌து இவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் எப்ப‌டி உத‌வுகிற‌து பார்த்தாயா?

இப்ப‌டி உன‌து துணையை க‌ன்ன‌ம் வீங்கியும், மூக்கும் உடைந்த‌துமான‌ சில‌ வார‌ங்க‌ளின் பின் அவ‌ள் என‌து செல்போனுக்கு அழைத்திருந்தாள். என்னை அழைத்த‌ற்கான‌ விசேட‌ கார‌ண‌ம் எதாவ‌து இருக்கிற‌தா என‌ வினாவிய‌போது எதையோ சொல்வ‌த‌ற்குத் த‌ய‌ங்கிக்கொண்டிருப்ப‌து ம‌றுமுனையின் ம‌வுன‌த்தின் மூல‌ம் விள‌ங்கிய‌து. ‘இப்ப‌டியே சும்மா போனை காதில் வைத்துக்கொண்டிருக்காம‌ல் சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லுங்க‌ள்’ என்று வ‌ற்புறுத்திய‌போதுதான், நீ, அவள் என்னோடு ப‌டுத்தாளா? என்று கேட்டு ச‌ண்டைபிடித்த‌தாய் மெல்லிய‌ குர‌லில் சொன்னாய். ‘உங்க‌ளை இப்ப‌டிக் கேட்டுவிட்டு ந‌ண்ப‌ன் அடித்தானா?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்று எச்சிலை விழுங்கிய‌போது என்ன‌ பிற‌கு ந‌ட‌ந்திருக்குமென்று ஊகித்த‌றிவ‌து அவ்வ‌ள‌வு க‌டின‌மாயிருக்க‌வில்லை. உன்னைப் போன்ற‌ ஆணாக‌வே நானிருப்ப‌தால் துணையாக‌ வ‌ரும் பெண் மீது ச‌ந்தேக‌ம் கொள்வ‌தைப் புரிந்துகொள்ள‌ முடிகிற‌து. எம‌க்கு எம்மோடு இருப்ப‌வை முழுமையாக‌வும், எம‌க்கு ம‌ட்டுமே உரித்தாக‌வும் இருக்க‌வேண்டும் என்று க‌ன‌வுக‌ள் க‌ண்டுகொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் உன‌க்கு வ‌ந்த‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு வ‌ராது/வ‌ர‌ப்போவ‌தில்லை என்றும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனாலும் ப‌டுக்க‌ வேறு பெண்க‌ள் இல்லாது உன‌து துணையோடு ப‌டுக்க‌ தூண்டில் போடுவேன் என்று நீ நினைத்திருக்கிறாய் என்ற‌போதுதான் உன் மீதான‌ என் ம‌திப்பீடுக‌ள் அத‌ல‌பாதாள‌த்தில் போன‌து போல‌த் தோன்றிய‌து. ரொர‌ண்டோவின் ய‌ங் ஸ்ரிட்டில் இருந்த‌ ஸான்சிபாரில் ஸ்ரிப் டான்ஸ் பார்த்துவிட்டு, விடுதியை மூடிய‌நேர‌த்தில், அங்கே ஆடிய‌ பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெவ‌ரி மோட்ட‌லுக்குப் போன‌து ப‌ற்றி உன‌க்கு இன்னொரு முறை நினைவூட்ட‌வா? வேண்டாம், திரும‌ண‌த்தின்பின் அநேக‌ரைப் போல‌ நானும் புனித‌மாக‌ப் போகின்றேன், எந்த‌க்கார‌ண‌த்தை முன்னிட்டும் என் துணையிட‌ம் என‌து க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளைப் பேச‌க்கூடாதென‌ நீ கேட்டுக்கொண்ட‌து இப்போது ஞாப‌க‌த்தில் வ‌ந்து தொலைக்கிற‌து. நான் உன‌து துணையோடு ப‌டுத்தேனா என்று நீ கேட்ட‌தை அவ‌ள் தொலைபேசியில் சொன்ன‌போது, ஏன் அடிக்க‌டி நீ ஸான்சிபாருக்கு திரும‌ண‌த்துக்கு முன்பு போனாய் என்று கேட்கும்ப‌டி அவ‌ளிட‌ம் சொல்ல‌ விரும்பிய‌தை ம‌றுமுனையில் எத‌ற்காக‌வோ அழுத‌ உன‌து ம‌க‌னின் குர‌ல் த‌டுத்து நிறுத்தியிருந்த‌து.

இத‌ன்பிற‌கு ஒருநாள் நாங்க‌ள் த‌ற்செய‌லாய் உன‌து வீட்டுக்க‌ருகிலிருந்த‌ தெருவில் ச‌ந்தித்த‌போது ‘வா பாருக்குச் சென்று ம‌து அருந்துவோம்’ என்று வ‌ற்புறுத்தி நீயென‌து காரில் ஏறிக்கொண்டாய். ம‌துவின் உச்ச‌த்தில், ‘நான் உன் ம‌னுசியோடு ப‌டுத்தேனா என்று கேட்டிருக்கிறாய் நீ ம‌ட்டும் என்ன‌ திற‌மா?’ என்று க‌த்தினேன். எதையும் திருப்ப‌ப்பேசாத‌ உன‌து ம‌வுன‌ம் என‌க்கு மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாயிருந்த‌து. அன்றிர‌வு உன்னை உன‌து வீட்டடியில் இற‌க்கிவிட்டுத் திரும்பிய‌ ப‌த்து நிமிட‌த்தில், ‘நீ பாரில் கேட்ட‌ கேள்விக்கு இப்போது ப‌தில் சொல்லுகிறேன் துணிவிருந்தால் என் வீட்டுக்கு வாடா?’ என்றாய். உன‌து வீட்டுக்குள் வ‌ந்த‌போது ஒரு பிர‌ள‌ய‌ம் ந‌ட‌ந்த‌மாதிரி எல்லாம் குலைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. வ‌ர‌வேற்ப‌றையிலிருந்த‌ தொலைபேசி இர‌ண்டாக‌ உடைக்க‌ப்ப‌ட்டு அது வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்காலியும் காலில்லாது இருந்த‌து. ‘எங்கைய‌டா உன‌து ம‌னுசி?’ என்று கேட்ட‌போது உன்ன‌வ‌ள் குசினிக்குள் மூச்சுப்பேச்சில்லாம‌ல் கிட‌ப்ப‌தைச் சைகையால் காட்டினாய். அவ‌ளுக்கு நெற்றியிலும், பின்ன‌ந்த‌லையிலும் காய‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு இர‌த்த‌ம் க‌சிய‌த்தொட‌ங்கியிருந்த‌து. What the F***.என்று 911ஐ அழைக்க‌த்தொட‌ங்கினேன். அத‌ன்பிற‌கு ச‌ட்ட‌ம் வ‌ரைய‌றுத்த‌ப‌டி எல்லாம் நிக‌ழ்ந்து முடிந்திருந்த‌து. ஆனால் நாம் எவ‌ருமே எதிர்பாராத‌ ஒன்று பிறகு நிக‌ழ்ந்த‌து. உன‌க்குரிய‌ த‌ண்ட‌னை முடிந்து, குறிப்பிட்ட‌ ஊர‌ட‌ங்குட‌ன் நீ வெளியே வ‌ந்த‌ ஒரு ச‌னிக்கிழ‌மை நீ த‌ற்கொலை செய்துகொண்டாய். இத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளைத் தேடிப்போவ‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. எல்லோரும் உன்னைப் போல‌ ஒரு ஒற்றைக் கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்து த‌ங்க‌ளை ச‌ட்ட‌த்தின் தேவ‌ர்களாக் ஆக்கிக்கொண்டன‌ர். ஆனால் உன‌து முடிவுக்குக் கார‌ண‌த்தை ஆராய‌ வேண்டுமெனில் எம்மைப் போர் துர‌த்திய‌ கால‌த்திலிருந்து ஆர‌ம்பித்த‌, எம‌து பிற‌ழ்ந்த‌ ம‌னோநிலைக‌ளை ஆதியோடு அந்த‌மாய் ஆராய‌ வேண்டும்.

ஆனாலும் நாம் வீழ்ச்சியின் நாய‌க‌ர்க‌ளாய் ஆனோம். க‌ட‌ந்த‌கால‌த்தில் நாம் பேசிய‌, வ‌ரைய‌றுத்த‌ எல்லாமே வீழ்ச்சி என்ற‌ புள்ளியில் முடிந்துபோன‌தை என்ன‌வென‌ச் சொல்வ‌து? அப்ப‌டியெனில் நாம் ந‌ம்பிய‌வையெல்லாம் க‌ற்ப‌னையின் விளைநில‌த்திலிருந்தா முளைத்து எழும்பியிருக்கின்ற‌ன‌? நாம் வ‌ளாக‌த்தில் எம‌து துறைக்கு அப்பால் க‌ற்ற‌ அந்திரோபோல‌ஜியும், சோஸியலாஜியும், அர‌சிய‌ல் விஞ்ஞான‌மும் எம‌க்குக் க‌ற்றுத்த‌ந்ததுதான் என்ன‌? உன‌து த‌ற்கொலை என‌து வாழ்வில் இனி நிக‌ழ‌ப்போவ‌து எல்லாம் மிக‌ப்பெரும் வீழ்ச்சியென்றுதான் ம‌றைமுக‌மாக‌க் கூறுகின்ற‌தா? எனெனில் நானும் நீயும் ஒத்த‌ அலைவ‌ரிசையிலே இருந்திருக்கின்றோம். ஒருவ‌ர் நினைத்து உரையாடுவ‌தை இன்னொருவ‌ர் இடைவெளி நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்திருக்கின்றோம். என‌க்கு மிக‌ப்ப‌யமாயிருக்கிற‌து, நாம் ந‌ம்பிய‌வைக‌ள் பிழைத்துப்போய்விடுவ‌தற்குள் கொஞ்ச‌ கால‌மாவ‌து ‘வாழ்ந்துவிட்டுப் போக‌ ஆசைப்ப‌டுகின்றேன். இப்போது நான் உன‌து துணையோடும், ம‌க‌னோடுந்தான் சேர்ந்து இருக்கிறேன். என்னைப் போல‌வோ உன்னைப் போல‌வோ அன்றி, எல்லாவ‌ற்றையும் க‌ட‌ந்துபோய் வாழ்வ‌தில் என்றுமே ந‌ம்பிக்கைகொள்கின்ற‌ ந‌ம‌து துணையைப் போல‌ அவ‌ன் வ‌ள‌ர‌ட்டும். என‌க்குத் தெரியும், ‘பார்த்தாயா நான் நினைத்த‌துபோல‌ அவ‌ள் உன்னோடு ப‌டுத்துவிட்டாள் தானே’ என்று நீ சொல்ல‌ப்போகின்றாய் என்று. ம்…எல்லா ஆண்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரேமாதிரித்தான் சிந்திக்கின்றோம் தானில்லையா?

இங்கே என்னையொரு புனித‌னாய் உருவ‌கித்து எழுதிய‌ பிர‌திக்கு எதிர்மறையான பிரதியை நீ எழுதுவதற்கு உள்ளாய் என்பதும் நானறிவேன். இப்போதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருக்கும் இந்த வீதியில் யாரோ நள்ளிரவில் நடந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காலடித்தடங்களை ம‌ட்டும் விட்டு விட்டு தன்னை மறைத்துக்கொண்டு போவது நீயாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய அச்சமெல்லாம் நானில்லாத ஒரு நாளில் நீயெழுதிய பிரதியை எங்களின் பையனுக்கு வாசிக்க‌க்கொடுத்து -அவ‌ன் சொல்ல‌ப்ப‌டாத‌ இன்னொரு உண்மையை- அறிந்த‌ அச்ச‌த்தில் நானும் உன்னைப் போல‌ த‌ற்கொலை செய்துவிடுவோனோ என்ப‌தாக‌ இருக்கிற‌து.

———–

January 30, 2009

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்…

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 10:08 pm

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்…

நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க…

நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union Station During Afternoon Rush Hour

Friday January 30, 2009

CityNews.ca Staff

It has been an extraordinary day in the downtown core, a spectacle rarely if ever seen in this city. The cause: a day long downtown-wide massive protest by Canadian Sri Lankans, designed to attract attention to what they call acts of genocide in their homeland.

The human chain demonstration stretched from Bloor St. to University Ave. and Yonge St. and snaked all the way to Front.

But it was at that final destination that the crowds truly tried to make their point. As many 5-10,000 people wound up at Union Station, causing such an overwhelming sea of humanity that police were forced to close off the roadway for a time.

Mounted units, traffic cops and even the RIDE spotcheck command post were all called into action while chaos prevailed around the transit hub. The assembled multitude was peaceful, a remarkable achievement for such a large gathering, but it was inside the typical transit hubs where chaos reigned.

Police were able to finally open a small corridor to allow pedestrians and travellers to get through.

A man named George was one of those caught in the gridlock while attending a library convention downtown. He didn’t seem to mind the inconvenience it caused. “I’ll support the protesters, it’s a good cause,” he confirms. “But, you know what? There’s thousands of people that have been affected.”

But while police did their best to clear the way, when commuters finally did get down to Union Station it was hardly clear sailing. It was so crowded in the subway the line waiting to get in stretched all the way back to the area where passengers pay their fares.

And it was almost as bad uptown. Busy Bloor Station was so filled with passengers, the TTC was forced to stop all its trains before they entered the station to ensure safety.

It was a long day for authorities, who were hopping since the protest began earlier in the morning. Drivers were also affected, as the protestors kept to the sidewalk but provided an endless visual distraction for blocks.

It was an amazing sight, all the more so because it stayed so peaceful. “There are probably thousands, tens of thousands of Tamils here all trying to bring some attention to their cause,” confirmed CityNews reporter Francis D’Souza at the height of the madness. “You can see them on the street corners here trying to hand out pamphlets just to let people know what they’re actually talking about.”

He believes they more than achieved their aims. “Their message is ’stop Tamil genocide in Sri Lanka.’ If that’s what they wanted, that’s what they’re getting right now. Because the hundreds of thousands of commuters who use Union Station every day are trying to get through and listening to their message.”

How busy was it at the height of the protest? D’Souza reveals he was forced to get out of the CityNews vehicle and walk to the scene. His cameraman and all his equipment didn’t get through the gridlock until 25 minutes later.

The protestors had promised their massive march would end at 6pm. True to their word, as the dinner hour struck, the crowds slowly began to disperse and left the area, creating yet more headaches for an already swollen public transit system.

Thanks: http://www.citynews.ca/news/news_31530.aspx

December 17, 2008

வாசிப்பு:’பெரிய‌ எழுத்து’

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 2:52 pm

‘பெரிய‌ எழுத்து’ சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து ஆதிக்க‌தைக‌ளின் நீட்சிக‌ளோடு நிகழ்கால‌த்தை ம‌றைமுக‌மாய் உண‌ர்த்தும்வித‌மாய் எழுந்த‌ மாய‌ யதாத்த‌ எழுத்துக்க‌ளைப்போல‌, ஏனின்னும் தீவிர‌மான‌ -யதார்த்த‌ எழுத்தைத்தாண்டிய‌- எழுத்து முறை ஈழ‌த்திலிருந்து எழ‌வில்லையென்ப‌து ந‌ம் எல்லோருக்கும் முனனாள் உள்ள‌ ச‌வால். அண்மைக்கால‌மாய் மாய‌ ய‌தார்த்த‌க் க‌தைக‌ளை இராக‌வ‌ன், திசேரா போன்ற‌வ‌ர்க‌ள் எழுத‌ முய‌ற்சிக்கின்றார்க‌ள். அவ்வாறான‌ நீட்சியில் வ‌ருகின்றவ‌ர்தான் த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன். அவ‌ரே முன்னுரையில் கூறுவ‌தைப்போல‌, ‘எல்லாம் போக‌ க‌தை என‌க்குள் உருவாகிக்கொண்டிருக்கின்ற‌ கால‌த்தில் இத்தொகுப்பு வ‌ந்திருக்கின்ற‌து. நான் க‌ட‌க்க‌ வேண்டிய‌ தூர‌ம் க‌ண்ணுக்கெட்டாத தூர‌த்திலுள்ள‌து’ என்ப‌தை விள‌ங்கிக்கொண்டால், இக்க‌தைக‌ளை ஒரு ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சியென‌வும் அடுத்துவ‌ரும் தொகுப்புக்க‌ளில் சிற‌ந்த‌ க‌தைக‌ளை எழுதலாம் என்று ந‌ம்புவ‌த‌ற்கான‌ புள்ளிக‌ள் இத்தொகுப்பில் தென்ப‌டுகின்ற‌ன‌.

இத்தொகுப்பில் சில‌ க‌தைக‌ளை ஈழ‌த்து நிலைமைக‌ளின் கார‌ண‌மாக‌ சேர்க்க‌வில்லையென‌வும், எழுதிய‌ ஒரு க‌தைக்காய் ஒரு கும்ப‌லின் தாக்குத‌லிலிருந்து ம‌யிரிழையில் த‌ப்பினேன் என்ற‌ குறிப்புக்க‌ளோடே நாம் இத்தொகுப்பில் நுழைவ‌து நேர்மையாக‌விருக்கும். இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் பொதுப்ப‌ரீட்சை எழுத‌முடியாது அக‌தியாய் அலைந்த‌ ம‌ல‌ர்ச்செல‌வ‌னின் க‌தையொன்று இத்தொகுப்பில் இல்லாத‌து உண்மையிலேயே இழ‌ப்புத்தான். இத்தொகுப்பின் முத‌ற்க‌தை ‘ம‌ஞ்ச‌ள் வரி க‌றுப்பு வ‌ரி’ துட்ட‌கைமுனு எல்லாள‌ன் க‌தையை மீள‌வும் வேறொரு கோண‌த்தில் பார்க்கிற‌து. துட்ட‌கைமுனு என்ப‌வ‌ன் ஒரு ‘கிழ‌ட்டுப் புலி’யைப் பிடிக்கின்றான், அது நிக‌ழ்கால‌த்தில் வ‌ழ‌க்கில் இல்லாத‌ மொழியைப் பேசுகிற‌து. புலி பேசும் மொழியை அறிய‌ மொழி அறிஞ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். ‘நீ பிடித்திருக்கும் இது புலிய‌ல்ல‌, ஒரு முதிய‌வ‌ன்’ என்கின்ற‌ன‌ர் அவ‌ர்க‌ள். இல்லை கிழ‌ட்டுப் புலிதானென‌ துட்ட‌கைமுனு குர‌லெழுப்பிக்கொண்டிருக்கின்றான‌. மொழி அறிஞ‌ர்க‌ள் இறுதியில் முன்னொரு கால‌த்தில் பேச‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் மொழியையே இக்கிழ‌வ‌ன் பேசுகின்றான் என்கின்றார்க‌ள். இக்கிழ‌ட்டுப்புலியால் ம‌க்க‌ளுக்கு ஆப‌த்து; சிறைக்குள் அடைக்க‌வேண்டுமென‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுக்கும் துட்ட‌கைமுனுவிட‌ம் அவ்வாறு நிரூபிக்க‌ உரிய‌ சாட்சிய‌ங்க‌ள் இல்லையென‌ நீதிம‌ன்ற‌ம் அக்கிழ‌வ‌னை விடுத‌லை செய்கின்ற‌து. இறுதியில் துட்ட‌கைமுனு அக்கிழ‌வ‌னைக் கூண்டிலிருந்து விடுவித்து வ‌ட‌க்கு நோக்குப் போகும்ப‌டித்துர‌த்தி விடுகின்றான். கிழ‌வ‌ன் ஒரு ப‌தினெட்டு வ‌ய‌து இளைஞ‌னாக‌ மாறியப‌டி வ‌ட‌க்கிற்குப் போவ‌தை துட்ட‌கைமுனு திகைத்த‌ப‌டி பார்த்த‌ப‌டியிருக்கின்றான். இன்ன‌மும் செதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ வ்ந்திருக்க‌லாம் என்றாலும் இத்தொகுப்பிலிருக்கும் முக்கிய‌மான‌ ஒரு க‌தையென‌க்க் குறிப்பிட‌வேண்டும்.

‘பெரிய‌ எழுத்து’ க‌தை, புதுமையை எழுத்தில் விரும்புகின்ற‌ ப‌டைப்பாளிக்கும் ப‌ழ‌மையை இன்ன‌மும் பிடித்துக்கொண்டிருக்க‌ விரும்பும் ப‌டைப்பாளிக‌ளுக்குமிடையிலிருக்கும் முர‌ண்பாடுக‌ளை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கின்ற‌ க‌தை. ம‌ல‌ர்செல்வ‌னுக்கு ஜே.பி.சாண‌க்கியாவின் க‌தைக‌ள் அதிக‌ம் பிடிக்கும் போலும். இக்கதை முழுதும் அவ‌ர‌து ப‌டைப்புக்க‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளே வ‌ருகின்ற‌ன‌. த‌மிழ‌வ‌னின் ‘ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளும்’, கோண‌ங்கியில் ‘பாழி’யும் கூட‌ வ‌ருகின்ற‌ன‌. சாண‌க்கியாவின் மீதோ ந‌வீன‌/பின் ந‌வீன‌ எழுத்து முறைக‌ள் மீதோ ஈர்ப்பிருப்ப‌தில் த‌வ‌றுமில்லை. அதை நாம் இன்னொருவ‌ர் மீது திணித்த‌லை அல்ல‌து நாம் விரும்புவ‌தை பிற‌ரும் விரும்ப‌வேண்டும் என்று எண்ணுவ‌தை ஒரு வாசிப்பு நிலை சார்ந்த‌ வ‌ன்முறையாக‌வே பார்க்க‌வேண்டியிருக்கிற‌து. இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணை வாசிப்ப‌தில் விருப்ப‌ம‌ற்ற‌ அல்ல‌து இர‌ம‌ணிச்ச‌ந்திர‌னை வாசிப்ப‌தோடு திருப்திகொள்கின்ற‌வ‌ராக‌ இருப்ப‌து ப‌டைப்பாளிக்கு அலுப்பூட்டுகின்ற‌து. ஒருநாள் வித்தியாச‌மாய், எழுததாளனின் துணைவியார் வ‌ழ‌க்கமாய் வாசிக்கும் வெகுச‌ன‌ நூலைப்படிக்காது வேறொரு நூலை வாசிப்ப‌தைப் பார்த்து இவ் எழுத்தாள‌ன், சாண‌க்யாவின் ‘ஆண்க‌ளின் ப‌டித்துறை’யை வாசிக்க‌க்கொடுக்கின்றான‌. துணைவியார், ‘பொம்பிளய‌ப் ப‌ற்றி ஜே.பி.சாண‌க்யா என்ன‌ எழுதியிருக்கான்? செருப்ப‌லை அடிப்ப‌ன் அவ‌னை’ என்ப‌தை இதொரு இன்னொரு வாச‌க‌ரின் பார்வையென‌ ஏற்றுக்கொள்ள‌முடியாது போவ‌தில்தான் எம‌க்கு ம‌ல‌ர்ச்செல‌வ‌னோடான‌ முர‌ண்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் ஆண்க‌ளே இதுவ‌ரையும் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ புரித‌ல் வ‌ந்தால் நாம் இக்க‌தையின் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணைவியின் குர‌லை ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டியிருக்கின்ற‌து. இவவிட‌ய‌த்தில் அல்ல‌, வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ போர்னோ போன்ற‌வை கூட‌ இதுவ‌ரைகால‌மும் ஆண்க‌ளுக்காய் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ சில‌ பெண்க‌ள் பெண்க‌ளுக்கான‌ த‌னித்த‌ போர்னோக்க‌ளையை உருவாக்க‌ முய‌ற்சிக்கின்ற‌போது, ஆண் ப‌டைப்பாளிக‌ளால் பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் எழுதிவிட‌முடியும் என்று இன்ன‌மும் ந‌ம்பிக்கொண்டிருக்க‌முடியுமா என்று இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளி யோசித்திருப்பாராயின் ‘செருப்பால‌டிப்ப‌தையும்’ ஒரு உட‌ன‌டி எதிர்வினையாக‌ புரிந்துகொள்ள‌லாம். ஒரு ப‌டைப்பாளிக்கு த‌ன் ப‌டைப்பு குறித்த‌, த‌ன‌து தேர்வுகள் குறித்த‌ க‌ர்வ‌மோ பெருமையோ இருப்ப‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் த‌ன்னைச் சுற்றியிருப்போரும் அப்ப‌டியே இருக்க‌வேண்டும் என்று விரும்புவ‌து அல்ல‌து தான் நினைத்துக்கொண்டிருப்ப‌வை ம‌ட்டுமே மேன்மையான‌து என்று நினைக்கும்போதுதான் நாம் கேள்விக‌ள் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌ன‌. இந்த‌க்க‌தையின் பேசுபொருளைப் போல‌வே இன்னொரு க‌தையான‌ ‘க‌விதை + க‌தை = அப்ப‌றை’யும் பாலிய‌ல் சுத‌ந்திர‌மாய் பேச‌ப்ப‌ட‌ முடியாத‌ அவ‌தியைப் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. ஆனால் க‌தை முழுதும் சுகிர்த‌ராணியின், க‌லாவின், ச‌ண்முக‌ம் சிவ‌லிங்க‌த்தின், ற‌ஷ்மியின் க‌விதைக‌ள் நிர‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப் பேசியிருக்கின்றார்க‌ள் நான் எழுதினால் ம‌ட்டுமா பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென்ற‌ ஒரு ப‌ரிதாப‌க்குர‌லை அக்க‌தை வேண்டி நிற்கின்ற‌து. ஈழ‌த்தில் எஸ்.பொ எத்த‌னையோ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்னே ‘தீ’யிலும் ‘ச‌ட‌ங்கிலும்’ இவ‌ற்றை நிக‌ழ்த்திக்காட்டிவிட்டார் என்ப‌தையும் ம‌ல‌ர்ச்செல‌வ‌னுக்கு நினைவுபடுத்த‌வேண்டியிருக்கிற‌து.

‘குறி நீள்கின்ற‌ ம‌ர‌ம்’ கிழ‌க்கில் ந‌ட‌க்கும் சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளைப் ப‌ற்றி ம‌றைமுக‌மாய்ப் பேசுகின்ற‌து. ஒர‌ளவு இன‌த்துவேச‌மாய் மாறிவிட‌க்கூடிய‌ க‌தையாக‌ இருந்தாலும், இக்க‌தையின் பேசுபொருள் முக்கிய்மான‌தொன்றே. ‘நரிச்சிங்க‌ங்க‌ள்’ என்ற‌ க‌தை தேர்த‌ல் அர‌சிய‌லில் இற‌ங்கி ம‌க்க‌ளை ஏமாற்றுகின்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை ந‌க்க‌ல‌டித்து எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ‘ம‌ண்’ க‌தை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ட‌ற்க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ண‌ல் அள்ள‌ப்ப‌ட்டு க‌ட‌ல்ரிப்பால் நீரால் விழுங்க‌ப்ப‌ட‌விருக்கும் கிராம‌ங்க‌ளைச் சூழ‌கின்ற‌ அபாய‌ங்க‌ள் குறித்துப் பேசுகின்ற‌து. த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன் ஏற்க‌ன‌வே ஒரு க‌விதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார் என்று ஏற்க‌ன‌வே கேள்விப்ப‌ட்டிருக்கின்றேன். இஃது அவ‌ரின் இர‌ண்டாவ‌து தொகுப்பாய் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தின் இன்றைய‌ அவ‌ல‌ நிலைக்குள்ளிலிருந்து இவ்வாறான‌ ப‌டைப்பூக்க‌ ம‌னோநிலையைத் த‌க்க‌வைப்ப‌தென்ப‌து அவ்வ‌ளவு இல‌குவில்லை. ஈழ‌த்துக்கும் வெளியுல‌கிற்குமான‌ தொட‌ர்புக‌ளில் பெரும் இடைவெளிக‌ள் வ‌ந்துவிட்ட‌த‌ன்பின், இவ்வாறான‌ தொகுப்புக்க‌ள் அங்கிருக்கும் சாதார‌ண‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌னோநிலையில் இருக்கின்றார்க‌ள் எனப‌தை நாங்க‌ள் அறிய‌வாவ‌து உத‌வ‌க்கூடும். அந்த‌வ‌கையில் ஈழ‌த்திலிருந்து வெளியாகும் ப‌டைப்புக்க‌ளை ‘ந‌ம‌து உள்ளொளி க‌ட‌ந்த‌ ஞான‌த்தால்’ ம‌ட்டும் பார்க்காது, முன்னேயிருக்கும் நிலைமைக‌ளை முன்வைத்தும் பார்க்க‌க்கூடிய‌தாய் நம‌து வாசிப்பு முறைக‌ளை மாற்றிக்கொள்வ‌தும் அவ‌சிய‌மாகின்ற‌து.

December 4, 2008

ஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ?

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:59 pm

-சூடாகும் க‌ன‌டா அர‌சிய‌லும், அவ‌ச‌ர‌மவ‌ச‌ர‌மாய் முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றிய‌ ந‌ம் கால‌த்து ச‌ன‌நாய‌க மீட்ப‌ர்க‌ளும்-

சில‌ வார‌ங‌க‌ளுக்கு முன் வானொலி நிக‌ழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த‌போது, ஆங்கில‌ அக‌ராதியில் புதிதாக‌ வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்க‌ள் என்று கூறியிருந்தார்க‌ள். ‘Mah’ என்ற‌ வார்த்தை அலுப்பான‌து (boring) என்ற‌ ஒத்த‌ க‌ருத்தைப் பிர‌திப‌திப்ப‌து என்று விள‌க்கி, விரித்துச் சொல்லும்போது, ‘அண்மையில் ந‌ட‌ந்த‌ க‌ன‌டாத் தேர்த‌ல் மிக‌ அலுப்பான‌து’ என்று -இப்புதிய‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தி- ஒரு உதார‌ண‌த்தைக் கூறியிருந்தார்க‌ள்.

வ‌ழமையாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் எவ்வித‌ ஆர‌வார‌ங்க‌ளுமில்லாது ந‌ட‌ப்ப‌து என்றாலும், இம்முறை குறுகிய‌ கால‌த்தில் தேர்த‌ல் திக‌தி அறிவித்து ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தேர்த‌லுக்கு, அருகிலிருந்த‌ ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் சூழ‌லும் ‘இன்னும் அலுப்பாக்கிய‌த‌ற்கு’ ஒரு முக்கிய‌ கார‌ண‌மென‌லாம். இங்கே முக்கிய‌ க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்த‌போது, அதே நேர‌த்தில் நிக‌ழ்ந்த‌, ஐக்கிய‌ அமெரிக்காவின் உப‌ ஜ‌னாதிப‌திக‌ளுக்கான‌ விவாதத்தைப் பார்த்த‌ க‌னேடிய‌ர்க‌ளே அதிக‌ம் என்று கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. அது ம‌ட்டுமின்றி க‌ன‌டாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா, ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா அதிக‌ம் க‌வ‌னிக்கின்றீர்க‌ள் என்றொரு ப‌த்திரிகை கருத்துக்க‌ணிப்பு நிக‌ழ்த்திய‌போது 70%ற்கும் அதிக‌மான‌ ம‌க்க‌ள் ‘அமெரிக்க‌த் தேர்த‌லையே’ என்று உள்ள‌தை உள்ள‌ப‌டியே சொல்லியுமிருக்கின்றார்க‌ள். இதில் பெரிய‌ விய‌ப்பு ஏதுமில்லை. ஈழ‌த்திலிருந்த‌போது அதிக‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை அறிவ‌தைவிட‌ இந்திய‌ அர‌சிய‌ல் பேசுவ‌தில் சுவார‌சிய‌மாக‌ இருந்திருப்ப‌தைத்தான் அவ‌தானித்திருக்கின்றேன். சிறுவ‌ய‌தில் இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்திலுள்ள‌ அமைச்ச‌ர்க‌ளை விட‌ இந்திய‌ப் பாராளும‌ன்ற‌ அமைச்ச‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை அறிந்து வைத்திருந்த‌து என‌க்கும் நினைவிருக்கின்ற‌து. இன்றும் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இந்திய‌ கிரிக்கெட் அணியை ஆத‌ரிப்பது என்ப‌து இத‌ன் நீட்சியில் வ‌ருகின்ற‌ ஒரு விட‌ய‌ந்தான்.

2.
க‌னடாவில் த‌ற்ச‌ம‌ய‌ம் நான்கு முக்கிய‌ க‌ட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌: லிப‌ர‌ல் (Liberals), கொன்ச‌ர்வேடிவ் (Conservatives) , புதிய‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios). என்ப‌ன‌ அவை. அண்மைக்கால‌மாக‌ கிறீன் க‌ட்சியும் (Green Party) ம‌க்க‌ளிடையே செல்வாக்குப் பெற்று வ‌ருகின்ற‌து. ஆக‌ இவ்வாறாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் அலுப்பாக‌வும்…, த‌ங்க‌ளை எவ‌ரும் க‌வ‌னிக்கின்றார்க‌ள் இல்லை என்று அர‌சிய‌ல்வாதிக‌ள் எண்ணிய‌தாலோ என்ன‌வோ சென்ற‌ வார‌ங்க‌ளிலிருந்து க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் சூடுபிடிக்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து.

2006ற்கு முன், தொட‌ர்ந்து நீண்ட‌ கால‌மாக‌ மித‌வாத‌ லிப‌ர‌ல் க‌ட்சியே க‌ன‌டாவின் ஆட்சி பீட‌த்திலிருந்திருக்கின்ற‌து. இல‌ங்கையில் ஜ‌.தே.க‌விற்கு கொழும்பு மாதிரி, த‌மிழ்நாட்டில் தி.மு.க‌விற்கு சென்னை போல‌, லிப‌ர‌ல் க‌ட்சியின் அசைக்க‌முடியாத‌ ஒரு கோட்டையாக‌ ஒன்ராறியோ மாகாண‌ம் இருந்திருக்கின்ற‌து. க‌ன‌டாவின் 308 பாராளுன‌ற‌ ஆச‌ன‌ங்க‌ளில் 106 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்தில் இருக்கின்றது. 2000 ஆண்டில் லிப‌ர‌ல் க‌ட்சி இர‌ண்டாவ‌து முறையாக‌ ழான் கிறைட்சிய‌னின் த‌லைமையில் பெரும்பான்மை அர‌சு அமைத்த‌போது, வென்ற‌ 172 ஆச‌ன‌ங்க‌ளில், 100 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்திலிருந்து லிப‌ர‌லுக்கு கிடைத்திருந்த‌ன‌. 106 ஆச‌ன‌ங்க‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தின் 100 ஆச‌ன‌ங்க‌ளை லிப‌ர‌லுக்கு ம‌க்க‌ள் அளித்த‌மை இது முத‌ற்த‌ட‌வையுமில்ல‌. அத‌ற்கு முன் நிக‌ழ்ந்த‌ 1997 தேர்த‌லிலும் லிப‌ர‌ல் க‌ட்சி 101 ஆச‌ன‌ங்க‌ளை வென்றிருக்கின்ற‌து. ஆக‌, ஒன்ராறியோ மாகாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை அசைத்துப் பார்க்கும் க‌ட்சியே க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த்தில் எவ்வித‌ப் ப‌ய‌முமின்றி அம‌ர‌லாம் என்ற‌ உண்மை எளிதாக‌ அனைவ‌ருக்கும் புரியும். ஒன்ராறியோ மாகாண‌த்திற்கு அடுத்த‌ அதிக‌ ஆச‌ன‌ங்களைக் கொண்ட‌ (75) கியூ(கு)பெக் மாகாண‌த்தில், லிப‌ர‌ல், வ‌ல‌துசாரியான‌ ‘கொன்ச‌ர்வேடிவ்’ போன்ற‌ க‌ட்சிக‌ள‌ அவ்வ‌ள‌வு எளிதில் கால் ப‌திக்க‌ முடியாது, ‘கியூபெக்’ த‌னி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற‌ க‌ட்சி தொட‌ர்ந்து பெரும்பான்மை ஆச‌ன‌ங்க‌ளை (50 ஆச‌ன‌ங்க‌ளுக்கு அண்மையாக‌ தொட‌ர்ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில்) வென்றுகொண்டுவ‌ருகின்ற‌து. ப்ளொக் கியூபெக்கா க‌ட்சி, கியூபெக‌ மாகாண‌த்தில் ம‌ட்டுமே போட்டியிருக்கின்ற‌ ஒரு க‌ட்சி.

3.
1993ல் இருந்து தொட‌ர்ச்சியாக‌ 2006 வ‌ரை ஆட்சி புரிந்த‌ லிபர‌ல் க‌ட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீட‌த்தில் ஏறுவ‌த‌ற்காய் அதிதீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் தொட‌ர்ந்து முய‌ற்சிக‌ளை மேற்கொண்டே வ‌ந்திருந்த‌ன‌ர். த‌னித்து நின்று வெற்றிபெற‌முடியாது‌ என்ற‌ உண்மை வ‌ல‌துசாரிக‌ளுக்கு உறைத்த‌போது, ப‌ல‌வேறு மாகாண‌ங்க‌ளின் உள்ளூர் வ‌ல‌துசாரிச் சிந்த‌னையுள்ள க‌ட்சிக‌ளையெல்லாம் ஒருங்கிணைத்து த‌ங்க‌ளுக்குள் ஒரு த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்த‌லில் கூட்டாய் வ‌ல‌துசாரிக‌ள் குதித்த‌ன‌ர் (இந்நேர‌ம் பிஜேபி உங்க‌ளுக்கு நினைவுக்கு வ‌ர‌லாம்). இத‌ற்கிடையில் இர‌ண்டாவ‌து முறையாக‌த் தேர்ந்தெடுத்த‌ ழான் கிறைட்சிய‌ன் த‌லைமையிலான‌ லிப‌ர‌ல் க‌ட்சி, நூறு மில்லிய‌னுக்கு மேலான‌ Sponsorship Scandalலில் மாட்டுப்ப‌ட்டு விழி பிதுங்க‌த்தொட‌ங்கிய‌து. 2004ல் லிப‌ர‌ல் க‌ட்சியிற்கு போல் மார்ட்டின் த‌லைமை தாங்கி, உறுதியான‌ வ‌ல‌துசாரிக‌ளின் கொன்ச‌ர்வேடிவிற்கு எதிராய் நின்ற‌போதும், ம‌க்க‌ள் இன்னும் லிப‌ர‌ல் க‌ட்சியைக் கைவிட‌த் த‌யாரில்லை என்ப‌தை நிரூபித்த‌ன‌ர். மொத்த‌ ஆச‌ன‌ங்க‌ளான‌ 306ல், 135 ஆச‌ன‌ங்க‌ளைப்பெற்று லிப‌ர‌ல் க‌ட்சி வெற்றி பெற்ற‌து. இத‌ற்கிடையில் ஊழ‌ல் வ‌ழ‌க்கின் மீதான‌ இர‌ண்டாவ‌து அறிக்கை விசார‌ணைக் குழுவால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு லிப‌ர‌ல் க‌ட்சியின் ஊழ‌ல் பெருச்சாளிக‌ள் கையும் க‌ள‌வுமாய் பிடிப‌ட‌, என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்ச‌ர்வேட்டிவ் ஆகிய‌ க‌ட்சிக‌ள் அர‌சுக்கெதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையைக் கொண்டு வ‌ந்து (172 -134) லிப‌ர‌ல் ஆட்சி க‌லைக்க‌ப்ப‌ட்டு 2006ல் தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. 2006 தேர்த‌லில் லிப‌ர‌லின் கோட்டையான‌ ஒன்ராறியோ மாகாண‌ம் உடைக்க‌ப்ப‌ட்டு, இதுவ‌ரை பெரும்பான்மையாக‌ ஒன்ராறியோவில் ஆச‌ன‌ங்க‌ளை வென்ற‌ லிப‌ர‌லைப் பின் த‌ள்ளி 54 ஆச‌ன‌ங்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சுக்கு ம‌க்க‌ள் கொடுக்க‌, லிப‌ர‌ல் 40 ஆச‌ன‌ங்க‌ளையே வெல்ல‌ முடிந்த‌து. இவ்வாறாக‌ நெடும் ‘வ‌ன‌வாச‌த்திற்கு’ப் பிற‌கு வ‌ல‌துசாரிக‌ளால‌ ஒரு சிறுபான்மை அர‌சைக் க‌ன‌டாவில் 2006ம் ஆண்டில் அமைக்க‌ முடிந்த‌து.

க‌னடாத் தேர்த‌ல் ‍- 2006 (Total Seats: 308)

Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 51
NDP - 29
Independent - 1

2006ல் ‘வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியாய்’ ஆட்சியைப் பிடித்த‌ வ‌ல‌துசாரிக‌ள், குறுகிய‌ கால‌த்திற்குள் -2008ல் -அவ‌ச‌ம‌வ‌ச‌ர‌மாக‌ இன்னொரு தேர்த‌லை அறிவிக்க‌ என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து வெள்ளிடை ம‌லை. முக்கிய‌ எதிர்க்க‌ட்சியான‌ லிப‌ர‌ல் க‌ட்சி அப்போதுதான் ஒரு புதிய‌ த‌லைவ‌ரைத் த‌ங்க‌ளுக்குத் தேர்ந்தெடுத்திருந்த‌ன‌ர். அத்தோடு லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ருக்கான‌ தேர்த‌லில் த‌லைவ‌ர் ப‌தவியை வெல்ல‌க்கூடிய‌வ‌ர்க‌ள் என்று மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்ற‌வ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌ அதிக‌ம் பிர‌பல்ய‌மில்லாத‌ Stéphane Dion க‌ட்சியின் த‌லைவ‌ராக‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார். ஆக‌வே லிப‌ர‌லுக்குள் த‌ன‌து த‌லைமையை Stéphane Dion முத‌லில் உறுதியாய் நிரூபிக்க‌வேண்டிய‌ அவ‌ச‌ர‌மான‌ நிலைமை.

மேலும் லிப‌ர‌ல் க‌ட்சி இன்னும் இர‌ண்டோ மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு தேர்த‌லை எதிர்பார்க்காத‌ நிலைமையில் (no preparations), குறைந்த‌ கால‌ அவ‌காச‌த்திற்குள் தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. Stéphane Dion த‌ன‌து உட்க‌ட்சிப் பூச‌ல்க‌ளையே இன்னும் ச‌மாளிக்க‌முடியாத‌ நிலையில் தேர்த‌லைச் ச‌ந்திக்கின்றார். தேர்த‌ல் திக‌தியை அறிவிக்கின்ற‌போது கொன்ச‌ர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்ட‌மும் கைகொடுக்கின்ற‌து. க‌ச்சா எண்ணெயின் விலை கூடி க‌ன‌டாவின் டொல‌ர் பெறும‌தியும் உல‌க‌ச‌ந்தையில் கிடுகிடுவென்று ஏற‌, எல்லா புற‌ச்சூழ‌ல்க‌ளும் கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சியிற்கு ஒரு வ‌லுவான‌ பெரும்பான்மை கிடைப்ப‌து உறுதியென்று க‌ட்டிய‌ங் கூறுகின்ற‌ன‌. இந்த‌ இட‌த்தில் க‌ன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாள‌ர்க‌ளும் உற்சாக‌மாக‌வே தேர்த‌லை எதிர்கொண்ட‌ன‌ர் என்ப‌தையும் குறித்தாக‌வேண்டியிருக்கின்ற‌து. கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சே புலிக‌ள் இய‌க்க‌த்தைக் க‌ன்டாவில் த‌டைசெய்து ப‌ல்வேறு புலிக‌ளின் செய‌ற்பாடுக‌ளை முட‌க்க‌த்தொட‌ங்கியிருந்த‌து. வ‌ல‌துசாரி அர‌சாங்க‌ம் ஒன்று வ‌ந்தால், க‌னடாவிற்கு வ‌ரும் குடிவ‌ர‌வாள‌ர்க‌ள்/அக‌திக‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌தையோ, ஓரின‌ப்பாலின‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் (invisible) சிறுபான்மையின‌ருக்கு என்ன‌ நிக‌ழும் என்ப‌து குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ன‌டிய‌ இராணுவ‌ம் த‌ங்கி ‘ம‌னிதாபிமான‌ப்ப‌ணி’ செய்ய‌ப்போகின்ற‌தோ என்ற‌ அக்க‌றையெல்லாம் இவ‌ர்க‌ளைப் போன்ற‌வ‌ர்களுக்கு அவ‌சிய‌மில்லாத‌ ஒன்றே. புலியை எதிர்த்தால் ம‌ட்டுமே ந‌ம‌து மூச்சிருக்கும்வ‌ரை செய்வ‌து என்றிருப்போர்க்கு ம‌ற்ற‌ப் பிர‌ச்சினைக‌ள் நினைவுக்கு வ‌ராத‌து அவ‌ர்க‌ள‌து ‘ச‌ன‌நாய‌க‌’நிலைப்பாடு என்க‌. ச‌ரி, அதை இப்போதைக்கு விடுவோம்.

ஆக‌ பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிந‌டை போட்டுக்கொண்டிருந்த‌ கொன்ச‌ர்வேட்டியிற்கு முத‌லில் ஆப்ப‌டித்த‌து, ஜ‌க்கிய‌ அமெரிக்காவின் வ‌ர்த்த‌க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ வீழ்ச்சி. ‘எம‌து வ‌ங்கிக‌ள் எல்லாம் மிக‌வும் வ‌லுவான‌ நிலையிலிருக்கின்ற‌ன‌, க‌வ‌லையேப‌ட‌வேண்டாம்’ என்று நிதிய‌மைச்ச‌ர் தேர்த‌ல் கால‌த்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்ட‌த்த‌ட்ட‌ 75% ற்கு மேலான‌ வ‌ர்த்த‌க‌த்தை ஜ‌க்கிய‌ அமெரிக்காவோடு க‌ன‌டா செய்துகொண்டிருக்கும்போது ம‌க்க‌ள் இதை உறுதியாய் ந‌ம்ப‌த் த‌யாராக‌ இருக்க‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் பொருளாதார‌ வீழ்ச்சியை வைத்து, லிப‌ர‌ல் வென்றுவிடுமோ என்ற‌ நிலை வ‌ந்த‌போது, அந்த‌ அற்புத‌ த‌ருண‌த்தை -எமினெமின் வார்த்தைக‌ளில் சொல்வ‌த‌னால் Seize the momentஐ- லிப‌ர‌ல் க‌ட்சியின் உறுதிய‌ற்ற‌ த‌லைமையால் த‌ம‌க்குரிய‌தாக‌ மாற்ற‌முடிய‌வில்லை. ஒரு க‌ட்சியின் அர‌சிய‌ல் விஞ்ஞாப‌ன‌த்தை விம‌ர்சிக்காது, லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரை நோக்கி மிக‌வும் கீழ்த்த‌ர‌மான‌ தாக்குத‌ல்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி தொலைக்காட்சிக‌ளில் ந‌ட‌த்த‌த்தொட‌ங்கிய‌து, அத்தகைய‌பொழுதில் ‘ நான் ந‌ல்ல‌வ‌ன்; ம‌க்க‌ளுக்கு அதையெல்லாம் விள‌ங்க‌ப்ப‌டுத்த‌த் தேவையில்லை’ என்று அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌த்தில் எதிர்க் காய்க‌ளை ந‌க‌ர்த்தத்தெரியாத‌ லிப‌ர‌ல் க‌ட்சி த‌லைவரை அர‌சிய‌ல் தெரியாத அப்பாவியென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. அத்தோடு சுற்றுச் சூழ‌லில் மிகுந்த‌ அக்க‌றையுடைய‌வ‌ராக‌ Dion இருந்த‌தால், சுற்றுச் சூழ‌லை முன்வைத்து நிறைய‌ வ‌ரிக‌ளை சுற்றுச் சூழ‌ல் பாதுகாப்பிற்காய் அற‌விட‌ப்போகின்றார் என்ற‌ ஒரு ப‌ய‌த்தை ம‌க்க‌ளிடையே மிக‌ நுட்ப‌மாக‌ கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி கொண்டு சென்றுமிருந்த‌து.

ஆக‌, இப்போது ச‌ந்தைப் பொருளாதார‌ வீழ்ச்சியால் கொன்ச‌ர்வேடிக் க‌ட்சியிற்கு பெரும்பான்மை அர‌சு அமைப்ப‌து என்ற‌ நிலையிலிருந்து, ‘நாயைப்பிடி பிச்சை வேண்டாம்’ என்ற‌ நிலையில் த‌ம் வ‌ச‌த்து இருந்த‌ ஆட்சியை மீள‌வும் காப்பாற்ற‌வேண்டிய‌ நிலையில் தேர்த‌ல்‍ 2008 ஒக்ரோப‌ரில் ந‌ட‌க்கின்ற‌து.

தேர்த‌ல் 2008 (Total Seats 308)

Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2

இவ்வாறாக‌ச் சென்ற‌ ஒக்ரோப‌ரில் ஒரு பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளுக்குக் கொடுக்க‌ ம‌க்க‌ள் த‌யாரில்லையென்ற‌ நிலையில், மீண்டும் வ‌ல‌துசாரிக‌ள் இன்னொரு சிறுபான்மை அர‌சை பாராளும‌ன்ற‌த்தில் ‘த‌லை த‌ப்பிய‌து த‌ம்பிரான் புண்ணிய‌ம்’ என்ற‌வ‌ளவில் அமைத்துக்கொண்டார்க‌ள்…

4.
க‌ன‌டாத் தேர்த‌ல் முடிவுக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌ இர‌விலோ அத‌ற்க‌டுத்த‌ நாளிலோ, கூட‌வே துணையாயிருந்த‌ ந‌ண்ப‌ரிட‌ம், ஏன் ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்ச‌ர்வேடிவை விழுத்தி கூட்ட‌ணி அர‌சை அமைக்க‌க்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு ந‌ண்ப‌ரிட‌மும் இது ப‌ற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ கால‌ங்க‌ளிலேயே க‌னடா வ‌ர‌லாறு, அர‌சிய‌ல் பாட‌ங்க‌ள் ப‌க்க‌ம் போன‌தேயில்லை. க‌ன‌டாவின் வ‌ர‌லாறு என்ப‌தே இர‌த்த‌க்க‌றைப‌டிந்த‌ வ‌ர‌லாறு என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆக‌வே க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தில் இவ்வாறான‌ கூட்ட‌ணிய‌ர‌சுக‌ள் அமைப்ப‌ப‌த‌ற்கு எதிரான‌ ஒரு ச‌ட்ட‌ம் கூட‌ இருக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். எனெனில் இர‌ண்டாம் உல‌க‌ம‌காயுத்த‌தின் பின், கொம்யூனிஸ்ட் க‌ட்சியொன்றை க‌ன‌டா த‌டை செய்த‌தாய் எங்கையோ வாசித்த‌து நினைவிலிருக்கின்ற‌து. எதுவும் ந‌ட‌க்க‌லாம் உல‌க‌த்தில்.

ஆக‌ வ‌ல‌துசாரிக‌ள் மீண்டும் ஆட்சிப்பீட‌த்திலேறினார்க‌ள். இந்த‌ வ‌ருட‌த்தில் இல்லாவிட்டாலும் அடுத்த‌ வ‌ருட‌த்தின் பிற்ப‌குதியிலாவ‌து ஒரு Recession க‌ட்டாய‌ம் நிக‌ழும் என்று ந‌ம‌து மேன்மைக்குரிய‌ நிதிய‌மைச்ச‌ர் செப்பினார். விரைவில் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட‌வுள்ள‌ வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில் பெரிய‌ துண்டு விழ‌ப்போகின்ற‌து (ஆக‌வே ம‌க்க‌ளே உங்க‌ளை எப்பாடுப‌ட்ட‌வாது காப்பாற்றுங்க‌ள்) என்றும் அவ‌ர் க‌ட்டிய‌ம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய‌ பில்லிய‌னின் நிதி போகின்ற‌து பிற‌கு எப்ப‌டி ப‌ட்ஜெட்டை balance செய்வ‌தாம்?). அவை எதுவும் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாது, த‌மிழ் ம‌க்க‌ளின் த‌லைவிதியை நிர்ண‌யிப்ப‌த‌ற்காய் சுப்பிர‌ம‌ணிய‌ சுவாமியை, ஆன‌ந்த‌ச‌ங்கரியை இங்கே அழைத்து கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தும் ந‌ம‌து புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ள் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு வ‌ந்ததால் புலிக‌ளுக்கு மேலும் ‘ஆப்பு’க் கிடைக்க‌ப்போகின்ற‌து என்று கொண்டாடினார்க‌ள். எல்லாவித‌மான‌ ச‌ன‌நாய‌க‌மும் இருக்கின்ற‌தென்றால், புலிக‌ளை எதிர்ப்ப‌த‌ற்கு ம‌ட்டுமில்லை புலிக‌ளை ஆத‌ரித்துப் பேசுவ‌த‌ற்கான‌ உரிமைக்கும் குர‌ல் கொடுக்க‌வேண்டும் என்று உண்மையான‌ ச‌ன்நாய‌க‌ விழுமிய‌ங்க‌ள் தெரிந்திருந்தால், த‌மிழ்த் தேசிய‌ கூட்ட‌ணியில் ம‌க்க‌ளால‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பா.உறுப்பின‌ர்க‌ளுக்கு க‌ன்டா விசா கொடுக்க‌ ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌போதெல்லாம் ‘அர‌சிய‌லுக்கு அப்பால்’ ச‌ன‌நாய‌க‌ உரிமையை முன்வைத்து குர‌ல் எழுப்பியிருக்க‌வேண்டும்… ஒரு சிங்க‌ள‌வ‌ரான‌ க‌லாநிதி விக்கிர‌பாகுவிற்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தை எதிர்த்துக் குர‌ல் கொடுத்திருக்க‌வேண்டும், ஆனால் புலி அடையாள‌ம் கொடுத்து… அவ‌ருக்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தைக் கொண்டாடிய‌தோடு ந‌ம‌து புலியெதிர்ப்பு ச‌ன்நாய‌க‌ உரிமைக‌ள் முடிந்துவிட்ட‌ன‌. புலி X புலி எதிர்ப்பு அர‌சிய‌லுக்கு அப்பால் ந‌க‌ர‌முடியாத‌ புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌ம் மிக‌வும் க‌வ‌லைக்குரித்தான‌து. புல‌ம்பெய‌ர்ந்து அர‌சிய‌லை முன்னெடுப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து அப்படிச் சொல்ப‌வ‌ர்க‌ள், எத‌ற்கெத‌ற்கோ அறிக்கை விடுகின்றார்க‌ள்/கையெழுத்துப் போடுகின்றார்க‌ள். இன்று புல‌ம்பெய‌ர்ந்து கொண்டிருக்கும் வ‌ன்னிக்குள்ளிருக்கும் ம‌க்க‌ளுக்காக‌வே, கிழ‌க்கு மாகாண‌த்தில் மாறி மாறி போட்டுத்த‌ள்ள‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச் ச‌ன‌ங்க‌ளுக்காக‌வோ, ம‌லைய‌க‌ப்ப‌குதிகள், கொழும்பின் சுற்றுப்புற‌ங்க‌ளில் நிக‌ழும் க‌ண்மூடித்த‌ன‌மான‌ கைதுக‌ள்/ஆட்க‌ட‌த்த‌ல்க‌ள் ப‌ற்றியோ, இல‌ங்கை அர‌சின் மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ கிள‌ஸ்ர‌ர்(Cluster) குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு எதிராக‌வோ ஒரு அறிக்கை விடுவார்க‌ள் என்றால்..ம்கூம். இப்ப‌டியெல்லாம் செய்தால் ந‌ம‌து ந‌டுநிலைமை குழ‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ர‌லாற்றில் த‌ம் பெய‌ர்க‌ள் பொன்னெழுத்துக்க‌ளில் த‌வ‌றாக‌ப் ப‌திய‌ப்ப‌ட்டு விடுமோ என்ற‌ க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு இருக்கிற‌து போலும். ந‌ம‌து ம‌க்க‌ளுக்காய் எழுந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் அர‌சிய‌ல் எல்லாம் எப்ப‌டி த‌னி ம‌னித‌ர்க‌ளில் போய் ஒடுங்கிக்கொண்ட‌ன‌வோ அதைவிட‌ மிக‌க்கேவ‌ல‌மாய் ந‌ம‌து புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் த‌னிம‌னித‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காய் முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌தைக் காணும்போது மிக‌வும் கேவ‌ல‌மாக‌ இருக்கின்ற‌து. எத்த‌னையோ தேவைய‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளை த‌மிழ்நாட்டிலிருந்து சுவீக‌ரித்துக்கொண்ட‌ நாம், த‌மிழ‌க‌த்துப் ப‌டைப்பாளிக‌ள்/ செய‌ற்பாட்டாள‌ர்க‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலாவ‌து -ச‌ற்றாவ‌து- ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து உருப்ப‌டியாக‌ச் செய்வ‌து ப‌ற்றி க‌ற்றுக்கொள்ள‌லாம்.

நிற்க‌. க‌னடாவின் அர‌சிய‌லைப் ப‌ற்றியெழுத‌ வ‌ந்த‌ இக்க‌ட்டுரை எங்கெங்கோ அலைகின்ற‌து. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்திய‌மில்லை என்கின்ற‌போது நேர் எழுத்துமுறை சாத்திய‌மா என்ன‌? ஆக‌ இறுதியாய் க‌ன‌டா கொன்ச‌ர்வேட்டிவ் அரசு க‌விழ்வ‌த‌ர்கான‌ சூழ்நிலைக‌ள் சென்ற‌ வார‌த்திலிருந்து கனிய‌த்தொட‌ங்கியிருக்கின்ற‌ன‌.

சிறுபான்மை அர‌சாக‌விருக்கும் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு தானொரு பெரும்பான்மையாக‌ அர‌சாக‌ த‌ன்னை நினைத்து த‌ன்னிச்சையாக‌ முடிவுக‌ளை எடுக்க‌த்தொட‌ங்கிய‌போது, இம்முறை லிப‌ர‌ல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சியிற்கு எதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையை வ‌ருகின்ற‌ திங்க‌ட்கிழ‌மை கொண்டுவ‌ருகின்ற‌ன‌. பில்லிய‌ன் க‌ண‌க்கில் ப‌ண‌த்தைச் செல‌வ‌ழித்து இர‌ண்டு வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லை க‌ன‌டிய‌ ம‌க்க‌ள் ச‌ந்திக்க‌ விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தால், லிப‌ர‌லும், என்டிபியும் இணைந்து கூடட‌ணிய‌மைத்து அர‌சைத் த‌ங்க‌ளுக்குத் த‌ரும்ப‌டி கோருகின்றார்க‌ள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் ப‌ங்குபெற்றாம‌ல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவ‌ரை ஆத‌ர‌வு த‌ருகின்றோம் என்றிருக்கின்றார்க‌ள். கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சி க‌விழ்வ‌து உறுதியாகிவிட்ட‌து. வ‌ருகின்ற‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் ச‌ம‌ர்பிக்கின்ற‌ ப‌ட்ஜெட் வ‌ரையாவ‌து பொறுத்திருக்க‌… என்று பிர‌த‌ம‌ர் க‌த‌ற‌த்தொட‌ங்கியுள்ளார்.

இம்முறை யார் க‌னடாவில் ஆட்சியிலிருப்ப‌து என்ப‌தை க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லே தீர்மானிக்க‌வேண்டிய‌வ‌ராய் இருக்கின்றார். லிப‌ர‌ல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்த‌லுக்கு அழைப்பு விடுக்காது, தேர்த‌லில்லாது ஆட்சிய‌மைப்ப‌த‌ற்கு அழைப்பு விடுத்த‌து ஒரு ந‌ல்ல‌தொரு முய‌ற்சியே. ஆக‌ க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லுக்கு மூன்று தெரிவுக‌ள் உள்ள‌ன‌.

முத‌லாவ‌து உட‌னடித் தெரிவாய் த‌ன‌க்குள்ள‌ அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பாராளும‌ன்ற‌த்தை ஒத்திவைத்த‌ல் (ஆக‌க்குறைந்த‌ அடுத்த‌ ப‌ட்ஜெட் ச‌ம‌ர்ப்பிக்கும் வ‌ரையாவ‌து), அதையேதான் கொன்ச‌ர்வேடிவ் அர‌சாங்க‌ம் கேட்கின்ற‌து. அந்த‌ இடைவெளிக்குள் ஏதாவ‌து ச‌ம‌ர‌ச‌த்தை பின்க‌த‌வுவ‌ழியால் செய்ய‌லாம் என்று ஆட்சியிலிருக்கும் வ‌ல‌துசாரிக‌ள் ந‌ம்புகின்ற‌ன‌ர். இர‌ண்டாவ‌து தெரிவு, பாராளும‌ன்ற‌த்தைக் க‌லைத்து இன்னொரு தேர்தலை ந‌ட‌த்துவ‌து. மூன்றாவ‌து தெரிவு, லிப‌ர‌ல்‍-என்டிபி கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ளை ஆட்சிய‌மைக்க‌க் கேட்ப‌து.

ப்ளொக் கியூபெக்கா க‌ட்சியின‌ரை பிரிவினைவாதிக‌ள் என்று மோச‌மாக‌த் திட்டும்…, புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ விதிகளை இறுக்கும்…, ஆப்கானிஸ்தானிலுள்ள‌ க‌னேடிய‌ இராணுவ‌த்தை திருப்பிய‌ழைக்க‌ விரும்பாத‌…, ச‌ம‌ர்பிக்கும் ப‌ட்ஜெட்டில் சுற்றுச்சூழ‌ல் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாத‌, கொன்ச‌ர்வேட்டிவ் க‌விழ்த்து ஒரு கூட்டணி அர‌சு வ‌ருவ‌தே ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை ப‌ய‌க்கும். மேலும் இட‌துசாரித்த‌ன்மையுள்ள‌ என்டியிபியின‌ர் ஆட்சியில் ப‌ங்குபெறும்போது ம‌த்திய‌/கீழ்த்த‌ர‌ ம‌க்க‌ளிற்கும், சிறுபான்மையின‌ருக்கும், புதிய‌ குடிவ‌ர‌வாள‌ருக்கும் ஏதாவ‌து சில‌ ந‌ன்மைக‌ளாவ‌து நிக‌ழும் சாத்திய‌முமுண்டு.

ம் நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்துவிட்டால்…?

குறிப்பு 1 : கியூபெக‌ த‌னிநாடாக‌ பிரிய‌வேண்டும் என்ற‌ ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட‌ க‌ட்சிக‌ள் முக்கிய‌ கோரிக்கையாக‌ வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராகிப் பிர‌த‌ம‌ரான‌திலிருந்து இற்றைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சியிலிருந்து பிர‌த‌ம‌ர் ஆன‌வ‌ர்க‌ள் எல்லோரும் கியூபெக‌ மாநில‌த்திலிருந்தே வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌ன‌திற்குரிய‌து. இன்றைய‌ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரும் கியூபெக‌ மாகாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ரே.

குறிப்பு 2: க‌ட‌ந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளில் என்டிபி க‌ட்சியின‌ர், 19, 29, 37 ஆச‌ன‌ங்க‌ளென‌ வ‌ள‌ர்ச்சிபெற்று வ‌ருவ‌து -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- என‌க்கு உவ‌ப்பான‌ விட‌ய‌ம்.

ந‌ன்றி: விக்கிபீடியா (தேர்த‌லின் க‌ட்சிக‌ள் பெற்ற‌ ஆச‌ன‌ங்க‌ளின் விப‌ர‌ங்க‌ளுக்கு)
ப‌ட‌ம் 1: க‌ன‌டா அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சி விவாத‌த்தின்போது
பட‌ம் 2: க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌ம்

Next Page »

Powered by WordPress